கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 9,489 
 

‘ஆண் ட் ரமீடா காலக்ஸியில் நோரா என்னும் கிரஹத்திலிருந்து பாரி என்கிறவன் இப்போது பூமிக்குப் புறப்பட்டு ஒரேநாளில் வந்து சேர ஆயத்தமாக தன் மாடல் 121 என்னும் ஹைப்பர் ஸ்பேஸ் வ ண் டியை சரி பார்த்துக் கொண் டிருந்தான்…;’

ஏழாவதுமுறையாக தான் படித்துக் கொண்டிருந்த சுஜாதாவின் விஞ்ஞானக்கதையில் ஆழ்ந்துபோனார் அஞ்சனவண்ணன்

“சே என்னமாய் எழுதி இருக்கார்யா?” பிரமிப்பில் வாய் முணுமுணுத்தது. மூடிய கண்ணைத் தொடர்ந்து கையும் புத்தகத்தை தன்னிச்சையாய் மூடியது அப்போதுதான் வாசல்கதவை யாரோ தட்டும் ஒலி கேட்டது.

யாராயிருக்கும் இந்த ராத்திரி நேரத்தில்…’என் இருப்பிடம் ஆப்த நண்பன் பத்ரிக்கும் மகள் நப்பினையின் தோழி கோதைக்கும் தான் தெரியும் அம்மா ஐஸ்வர்யா ஆயிரம் முறை கேட்டுவிட்டாள்” ஏண்டா அஞ்சு எந்தக்காடுடா இது? வீரப்பன் இருந்த ஸ்தலமா? இப்படி ஊர் உலகத்தைவிட்டு அத்வானத்துல பங்களா கட்டி என்னையும் என் பேத்தியயும் சிறையில் போட்ட வைக்கணுமா?’

“கொஞ்சநாள் தான். என் ஆராய்ச்சிக்காக இப்படி ஒதுங்கி வந்துருக்கேன் தனியா ஒரு விண்கலையந்திரம் கண்டுபிடிச்சி வேற கிரகத்துக்கு உன்னையும் நப்பின்னையையும் அழைச்சிட்டு போகப்போறேன் அம்மா?”

“இதுவே வேறுகிரஹம் போலதான் இருக்கு ..ராத்திரில சிங்கம் கர்ஜனை கரடிகத்தல் நரி ஊளை, பயமா இருக்குடாப்பா. உன் ஆராய்ச்சிக்கு எங்களையும் ஏண்டா இப்படி சித்திரவதை பண்றே அஞ்சு?”

அம்மாவின் அழுகையை அலட்சியம் செய்துவருகிறார் அஞ்சனவண்ணன். அவருக்கு பெரும் நம்பிக்கை ஊட்டி வருபவள் ஒரேமகள் நப்பின்னைதான்.” அப்பா உங்க அறிவை நான்புரிஞ்சிருக்கேன். ஊர் உலகம் உங்களை அரைக்கிறுக்கு அஞ்சனவண்ணன் என்று சொல்லலாம் ஆனால் நீங்க சாதிக்கப் போகும் தினம் வெகு தூரத்தில் இல்லை. உங்களோடு வேறுகிரஹம் வர நான் ரெடிப்பா ”

தாயில்லாமகளுக்கு இருக்கும் அக்கறையும் பொறுப்பும் தன் தாய்க்கு இல்லயே என அ.வ பெருமூச்சுவிடுவார்.

ப்ளாஷ்பாக் ரொம்பவேண்டாம். இப்போது வாசலில் யாரென்று அரைகிறுக்குடன் சாரி அஞ்சனவண்னனுடன் நாமும் பார்ப்போம்.

சற்றே தயங்கிக் கதவை திறந்தவர், யாரெனக்கேட்குமுன்பு வந்தவர் குரல் முந்திக்கொண்டது

“இதுதானே பிரபலவிஞ்ஞானி அஞ்சனவண்ணன் அவர்களின் வீடு?”

“ஆ ஆமா ஆமா நாந்தான் அஞ்சன…” முடிப்பதற்குள்

“நல்லது …நான் ஆண் ட் ரமீடா காலக்சி குடும்பத்திலிருக்கும் நோரா என்னும் கிரஹத்திலிருந்து வருகிறேன், என் பெயர் சேரா. என்னுடைய டாக்கியான் இஞ்சின் லேட்டஸ்ட் மாடல் 131 இயந்திரத்தில் ஏறி நீங்கள் என்னோடு உடனே நோராகிரஹதுக்கு வரவேண் டும் இது மேலிடத்துக் கட்டளை”

“நானா?”

“ஆம்மா..நீங்கதான்.”

“எதற்கப்பா நான் அங்கு..?” சந்தேகமாய் கேட்டார்

“உமது மூளை இங்கே ஒருமூலையில் கிடப்பதை எங்கள் தலைவர் விரும்பவில்லை அதை உபயோகிக்க உகந்த இடம் எங்கள்கிரஹம்தான் அங்கே உங்களுக்கு உங்கள் ஆராய்ச்சிக்கு சகல வசதியும் செய்து கொடுக்கப்பட்டு உங்களது கண்டுபிடிப்புகளை அங்கீகாரம் செய்ய தலமை விரும்புகிறது”

“ஆஹா! தன்யனானேன்..எத்தனை நாள் கனவு இது?என் செல்லமகள் நப்பினை தாயில்லாக் குழந்தை ஆயிற்றே அவளை என்ன செய்வது?”

“பீடிங்பாட்டில்ல பால் ஊத்தி வாய்ல வச்சிட்டுவாங்க”

“அவ்வளவு சின்னக்குழந்தை இல்லை 20 வயதுப் பெண்”

“சேரா உனக்கு 30 அவளுக்கு 20..ஹ்ஹாஹ்ஹா!” சீண்டியது சேரா பயணித்து வந்த 131. சிந்தனைத் திறமை சற்றே கொண்ட இயந்திரவண்டி அது.ஆகவே பேசும், சிரிக்கும், கிண்டலும் செய்யும்!

“சரி அவளையும் கூட்டிட்டு புறப்படுங்க சீக்ரம்”

“என் தாய்?” விழித்தபடி அ.வ கேட்டார்

“அவங்களுக்கு என்ன வயசு?”

“சேரா..விஞ்ஞானியோட மண்டையைப் பாத்தா அவருக்கே அரை சதம் சொல்லலாம் போல்ருக்கு ..கண்டிப்பா அம்மாக்கு 70 இருக்கும் நோரா கால்க்ஸியின் தலைவரோட தாத்தாக்கு வேணா செட் அப் பண்ணீடலாம்”

“கீப் கொய்ட்131”

“யார்ட்ட பேசீங்க ? இது வெறும் வண்டி இல்லயோ?” அ.வ சந்தேகமாய்த் தன்னைப் பார்ப்பதை 131 ரசித்தது’

“அது விவரம் நம் பயணத்தின் போது சொல்லப்படும் ..ம்ம் இருபதையும் எழுபதையும் எழுப்பி வண்டியில் ஏற்றுங்கள்” சேரா அவசரப்படுத்தவும் அ.வ.துரிதமானார்.

ஆயிற்று.நோராகிரஹத்துக்கு 2050ஆம் வருடம் ஜனவரி மாதம் இருபதாம் தேதி அஞ்சனவண்ணனின் குடும்பம் காலடி எடுத்துவைத்து இன்றோடு ஆறுமாதமாகிவிட்டது

தனது அரிய மூளையை நோராகிரஹத்தலமை ஏற்று, மதித்து ஆராய்ச்சியில் அவரை ஈடுபடவைத்தமைக்கு அ.வ தலைமைக்கு தெண்டனிட்டு தினமும் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறார்.

131ஐத் தொடர்ந்து இன்னும் வலிமைமிக்க இயந்திரவண்டி தயாரிக்கவேண்டுமாம்,அதைக் கொண்டு வேறு கிரகங்களை அழிக்க வேண்டுமாம்.

scientist”இது என்ன இடம்? இதுக்கு அந்தக்காடே தேவலை போல்ருக்கு? இங்க என்னமனுஷங்க எல்லாம் தலைல 2 கொம்பு வச்சிட்டு அதுல லைட் எரியவிட்டுட்டுப் போறாங்க? உடம்புல எல்லாம் நரம்பைவிட ஒயர் தான் நிறையத் தெரியுது? பசிச்சா ஒயர் சாப்டுவானாம் சேரன் சொன்னான் நேத்திக்கு… என்னவிபரீதம் இது?”

தாய் ஐஸ்வர்யா புலம்பினதை அ.வ லட்சியமே செய்யவில்லை.

நப்பின்னை மிகவும் ஆர்வமாய் அப்பாவின் ஆராய்ச்சிக்குத் துணைபுரிய ஆரம்பித்தாள்.

“அடப்பாவிமகனே , வயசுப்பெண்ணை வானத்துல எங்கயோ கூட்டி வந்து அவளையும் உன் ஆராய்ச்சில ஈடுபடவைக்கிறியே என்கூட அனுப்பினால்..சென்னைல இந்தவருஷம் அழகுப் போட்டில அவளை கலந்துக்க வைக்க திட்டம் போட்டு வச்சிருந்தேன், போய் அங்க நானும் ஒரு லுக் விடுவேன் பழைய ஞாபகமெல்லாம் வரும் எனக்கும்..”

ஐஸ்வர்யா பாட்டி 1999ல் சென்னை நகரத்து தேவதையாய் பல இளைஞர்களை கலக்கியவள். எதிராஜ் கல்லூரிஏஞ்சல் என்று அந்த நாள் இளைஞர்களால் பேசப்பட்டவள்.அவளுக்கு தன் பேத்தியும் இப்படி கால் கிறுக்காயாகிபோனதில் வருத்தமானது

“நீ இப்படி என் பேத்தியோட இறந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் ஆண்டது போதும்டா, அவளோட எதிர்காலத்தையாவது என் கையிலெ கொடுடா ப்ளீஸ்!” மூன்றுவருடம் முன்பே ஐஸ்வரயா தனது பாப் செய்த தலையை சுவற்றில் முட்டாத குறையாய்க் கெஞ்சி மகனிடம் கேட்டுப்பார்த்தாள்.

“தாயே! புத்தம்புது ஆராய்ச்சி புதிய விண்கலங்கள்.. இயந்திரங்கள் இதெல்லாம் எனது எதிர்கால லட்சியங்கள்”

‘இதுக்கு முன்னாடி ஏதோ ஒரு கால மாற்று இயந்திரம் கண்டுபிடிச்சியே அது என்னாச்சு?’

“அது இறந்த காலம் மட்டும் சொல்லியது, அது யாருக்கு வேணும்? மேலும் அது காலவெளியில் பின்னோக்கிப் பயணம் செய்து அந்த1948 ஜனவரி 30க்குப்போய் நின்றதும் கோட்சே கையில் துப்பாக்கியோடு வரவும் காந்தி சுடப்பட்டதும் காட்சியாய் வந்து காட்டியது, எனக்கு துக்கம் தாங்கல”

“நீ ஏதாவது காந்தி பட சிடி போட்டுட்டியோ அ ந்த இயந்திரத்துல?”

‘அம்மா கொஞ்சம் சீரியசாத்தான் திங்க் செய்யேன். காலமெல்லாம் விஞ்ஞானியா வரநினச்சி அந்த நினைவிலேயே உயிரைவிட்ட. எங்கப்பாக்கு இப்படி ஒரு மனைவியா.? சே.. நானும் உன்னை மாத்தப் பல வருஷமா ட்ரை பண்றேன் முடில்லம்மா ..அன்னிக்கு ஒருநாள் நான் கண்டுபிடிச்ச அந்த மன எண்ணங்களைத் துல்லியமா அறியும் ‘எண்ணமோ எண்ணம்!’

இயந்திரத்துல உன்னை உக்காத்திவச்சப்போ தான் உன் சுயரூபம் முழுசும் தெரிந்தது…’

அ.வ இப்படிச் சொன்னதும், ஐஸ்வர்யா .அந்த தினத்தைமூளையில் ரீவைண்ட் செய்து பார்த்தாள்

அஞ்சன வண்ணனின் பிரத்தியேக தாராள அறை.

அறை யில் பிரதானமாய் ஒரு பெரிய டிவி அதன் வாரிசுகள் போல ஏகப்பட்ட குட்டி குட்டி டிவிக்கள்.

சிவப்பு பச்சை என விளக்குகள் கண் சிமிட்ட ஒயர்கள் உருளைகள் இன்னும் புரியாத சமாசாரங்கள் அங்கு நிறையவே இருந்தன.

சைக்கலாஜிகல் ரிசர்ச் என்று சிலநாட்களாகவே தாடிமீசைக்கு நடுவில் ஏதோ பல்மட்டும் பளிச்சென தெரிய ஆராய்ச்சியில் ஆழ்ந்த அ.வ தன் அம்மாவை ஆராய்ச்சிகூடத்திற்கு அழைத்தார்

“என்னடா ஏதும் புதுப்படம் போடபோறியா? உங்கப்பாவைவிட நீ மகா மோசம் ஆராய்ச்சி ஆராய்ச்சின்னு என்னை ஒரு சினிமாக்கு கூட்டிப்போகறதில்லை…இன்னிக்காவது புத்தி வந்ததா?”

“பேசாம நான் இப்பொ சொல்றபடி கேளு. மனோதத்துவத்தைக்கலந்து விஞ்ஞான பூர்வமா நான் ஒரு சாதனம் கண்டுபிடிச்சிருக்கேன்.. இதன் மூலமா ஒருத்தர் மனதின் எண்ணங்களைத் துல்லியமா அறிய முடியும்…இதை உன்னை வைத்துப் பரிட்சைபண்ணிப்பார்க்கப் போறேன்”

“ஹேய் மை டியர் சன்! உனக்குதான் ஒரு மைனர்மாப்பிள்ளைமாதிரி கைகால்களை விறைப்பா வச்சிண்டு கண்ல ரெட் லைட் போட்டுண்டு ஒரு ரோபோப் பயல் இருக்கானெ அவன்கிட்ட உன் சோதனையை நடத்தி பாக்கறதுதானே?”

‘அய்ய்யோ அம்மா ரோபோக்கு நான் எல்லாம் சொல்லிகொடுத்துருக்கேன் ..சொன்னதைச் செய்யுமே தவிர அதுக்குன்னு சொந்த மூளையோ அதனால் உண்டாகும் எண்ணத்தாக்கமோ கிடையாது. நப்பின்னை கோதைவீட்டுக்குப் போயிட்டா அதான் உன்னை அழைச்சேன் உன் விருப்பபடி லேசா சினிமா சீன் வரத்தான்
செய்யும் சரியா?”

“அப்டீன்னா சரி”

“வந்து இதுல உட்கார்”

அவர்காட்டிய அந்த நான்கடி உயர பத்தடி அகல சாதனத்தை எறும்பைப்பார்ப்பதுபோல சர்வ அலட்சியமாய்ப் பார்த்தாள், ஐஸ்வர்யா.

‘இந்தக்கிண்டல் பார்வையெல்லாம் வேண்டாம். ஒரு மகா பெரிய விஞ்ஞானியின் தாய் என்கிற பெருமையே உனக்கு இல்லை அம்மா!திட திரவ எரி பொருள்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு அடாமிக் ·ப்யூஷன் மூலம் பெறப்படும் ஹைட்ரஜன் எரிபொருளை கண்ட அந்தநாள் விஞ்ஞானியைவிடவும்ஒருபடி மேலாய் வேற ஒரு எரிபொருள் கண்டுபிடித்து அதன் ரகசியத்தை இன்னிவரைக்கும் யார்கிட்டயும் சொல்லாமல் நான் மட்டும் சொந்தமா ஒரு விண்கலம் பண்ணப்போறேன். ஐந்துகோடியே நாற்பதுலட்சம் கிலோமீட்டர்களுக்குஅப்பாலிருக்கிற செவ்வாய்கிரகத்திற்கு எனது புதிய விண்கலத்தை செலுத்தி உங்க ரண்டுபேரையும் அழைத்துப் போக ஆசையம்மா. பார்த்துண்டே இரு.பூமி செவ்வாய் என்னும் இரண்டு கோள்களும் நெருங்கிண்டு இருக்கு..ஒரு சாய்வுப்புள்ளியிலேஎன்னவோ விசித்திரம் நடக்கபோகிறது …இன்னும் அஞ்சே வருஷம்தான். 2055க்குள்அது நடக்கத்தான் போகிறது!”

ஐஸ்வர்யா பெரிதாய் கொட்டாவி விட்டாள் பிறகு” எங்கடா ஏதோ சினிமான்னியே?” என்றாள்

‘அ.வ.சிரித்தபடி தனது ‘எண்ணமோ எண்ணம்’ என்னும் புதிய பெயரிட்ட அந்த சாதனத்தை இயக்க ஆரம்பித்தார்.

அதன் வயிற்றில் எதையோ செருகினார்,உடனே திரையில் 16எமெம் கலர்ப் படங்கள் வர ஆரம்பித்தன.

சரிபார்த்துவிட்டு திருப்தியான முகத்துடன் ‘அம்மா இந்த நாற்காலியில் ஏறிஉட்கார். காதுல இந்த இயர்போன் மாதிரி இருக்கிற சமாசாரத்தை மாட்டிக்கோ. அதன் பின்பக்கம் ஒயர் ஏகப்பட்டது பாம்புமாதிரி தொங்கும் பயப்படாதே அதுவழியாத்தான் உன் மன எண்ண ஓட்டங்கள் மூளைக்குபோய்ச் சேர்ந்து இணைப்புசாதனத்தில் பதிவாகும் இதுதான். சைக்காலஜிகல் ரிசர்ச் இன் சைன்டி·பிக் வே”

“போவே..அதெல்லாம் எதுக்கு வே இப்போ ? சரிசரி..அப்படிப்பாக்காதே, நீ சொன்னபடி செய்றேன்.என்னடா நாற்காலி இது? சென்னை சலூன்ல நீ சின்னகுழந்தையா
இருக்கறச்சே உனக்கு முடிவெட்டப்போன இடத்துல இப்டி மூணு மாடிப் படி வச்ச நாற்காலியப் பாத்ருக்கேன்..”

“ஒண்ணும் பேசக்கூடாது இப்போ”

அ.வ கண்ட்ரோலிங் ஸ்விட்ச் போர்டை நெருங்கினார்.

அதன் இரண்டு மூன்று பட்டன்களை உற்சாகமாய்த் தொட்டார்.

திரையில் ரெடி என்று எழுத்து தோன்றியது.

எலெக்ட்ரானிக் புள்ளீகளாய் அவை ஒருக்கணம் மின்னி மறைந்ததும் ,”அம்மா! இப்போ திரையில் ஒரு படக்காட்சி போடுவேன் நிறைய இயற்கை காட்சிகள் வண்ணங்களில் வரும் நீ அதைப் பாரு போதும்” என்றார்.

‘பச்சை நிறமே பச்சை நிறமே!’ என்று’ பாடல் காட்சி ஆரம்பமானது.

மாதவனும் ஷாலினியும் திரையில் வந்ததும் ஐஸ்வர்யா பெருமூச்சு விட்டாள்

‘ஆஹா! அந்த நாளின் என் ஹீரோ மாதவன் தான்! வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன்மடியில் தூங்கினால்போதுமெனக் காத்திருந்தேனே?நீ எனக்கெங்கே கிடைத்தாய்?. எங்கப்பா ஒரு பழைய பஞ்சாங்கத்துக்கு என்னைக் கட்டிவச்சிட்டார். நீயும்யாரையோ லவ் பண்ணி செட்டப் செய்த விவரம் குமுதம்னு ஒரு பத்திரிகை கிசுகிசுல போட்டு இருந்தது.இப்போ நீயும் எங்கயொ தாத்தாவா பேரப் பசங்களோட இருக்கணும் ஹ்ம்ம்..”

இரண்டு நிமிஷங்களில் ஆ·ப் செய்த அ.வ. அம்மாவிடம்,” என்ன நினைத்தாய்?” என்றார் ஆர்வமாய்.

“வேறென்னடாப்பா எனக்கு அந்த நதியும் சிவப்பு மிளகாயும் அந்திவானமும் மஞ்சள் மலர்களும் திவ்யமா இருந்தது பாக்கறச்சே?”

அம்மாவை நம்பிக்கை இல்லாமல் பார்த்துவிட்டு அவர் தனது சாதனத்தை நெருங்க அதன் டாஷ் போர்டில்சிவப்பும் பச்சையுமாய் டாலடித்தன.

எதையோ முடுக்கித்தட்டினார்.

டிடிப்டிப்டிப் என ஓசைகொடுத்தபடி நீளமாய் ஒரு பேப்பர் கௌபீனத்தைத் தள்ளிய அது, ‘இந்தா எடுத்துக்கோ’ என்றது.

உருவி அதை வெளியே எடுத்துப் படித்தார் அ.வ.

‘அதில் கம்ப்யூட்டர் சங்கேதமொழியில் அவர் அம்மா ஐஸ்வர்யா அந்தப்பாட்டின்போது உண்மையாய் நினைத்தது எழுத்தில் பதிவாகி இருந்தது.

‘த்த்தூஊஊ’

வீசி எறிந்தார் அந்த பேப்பரை

“பொய் சொல்லாதேமா,,நீ மாதவனைப்பாத்து ஜொள்ளுவிட்டது அசிங்கமாஇல்ல உனக்கே?”

ஆவேசமாய் வந்த கோபத்தில் சாதனத்தையும் ஓரங்கட்டிவிட்டார்.

இப்போது நீண்ட நாளைக்குப் பிறகு நோரா கிரஹத்திற்கு வந்ததும் மறுபடியும் புதிய கண்டுபிடிப்பு.

‘வெற்றி வெற்றி’ என்று குதித்தார்

“என்ன 141 தயார் செய்துவிட்டிர்களா? அதற்குத்தானே உங்களை தலைவர் இங்கு வரவழைத்து குடும்பத்துக்கே சோறு போட்டுவருகிறார்? அதிலும் உங்கம்மா பிஸிபேளாபாத்தாம் பீஸ்புலாவாம்..ஆர்டர் பண்றாங்கப்பா தினம் ஒண்ணுனு..141க்காக நாங்க பல்லைக் கடிச்சிட்டு பொறுத்துட்டு இருக்கோம்” என்று சேரா வந்து சொன்னான்

‘கொஞ்சம் அவகாசம் தேவை.. அதற்கு முன்பாய் நினைத்தது நினைத்தபடி என்கிற புதிய எனது கண்டுபிடிப்பை உருவாக்கிவிட்டேன். நினைத்த இடத்துக்கு போகலாம் பழைய கால புஷ்பகவிமானம் மாதிரி ஒன்றை கண்டுபிடித்திருக்கிறேன் ..”

“அது எதற்கு இப்போது? ஹ்ம்ம்..எதற்கும் அதை நான் அப்புறமாய்வந்து பார்க்கிறேன் வேற்றுகிரஹத்துபிரஜை என்பதால் என்னை ஏமாற்றிவிட நினைக்கவேண்டாம்..நீங்கள் தாமதப்படுத்தினால் நானே 141 தயராக்கிவிடுவேன் போல?”

சேரா பயமுறுத்துவது போல எச்சரித்ததில் .அ.வ அரண்டுபோனார்

நி.நி, இயந்திரத்தை ஆராய்ச்சிகூடத்து மூலையில் வைத்துவிட்டு 141க்கான வேலையில் அவர் இறங்கிவிட்டார்.

மாதிரிக்கு அவ்வப்போது 131 ஐப்போய் பார்த்துக் கொண்டபோதெல்லாம் அது நமுட்டு சிரிப்பு சிரிக்கும்’எனக்குப் போட்டியா ஹ்ம்ம்?’

களைப்பும் அசதியுமாய் போய் படுக்கையில் விழுந்தவர் ஒருவாரத்திற்கு எழுந்திருக்கவே இல்லை ஒருநாள் அம்மாவின் அலறல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தார்.

‘என்னம்மா? உன் கத்தல்ல சந்திரன்லேந்து யாராவது இங்க வந்துடபோறா? எதுக்கு இப்படி காட்டுகத்தலா கத்தறே?’

‘அடேய் அஞ்சு.என்னடா இப்படி ஒருவாரமாப் பேய்த்தூக்கம் தூங்கறே? ஏந்திரு அஞ்சு..ஏந்திரு..”

‘என்னம்மா…என்ன ஆச்சு என் இப்டி கூச்சல் போட்றே?’

என் பேத்தியக் காணோம்டா..”

வாரிசுருட்டிக் கொண்டு எழுந்தார் அ.வ.

கலவரமான குரலில்,” ஐய்யோ என்னம்மா சொல்றே? உனக்காவது இந்த வயசிலும்ஆசை ஜாஸ்தி அவளுக்கு அப்படி எதுவும் கிடையாதேம்மா?அப்புறம் அவள் எங்க போவாள் இங்கேயெல்லாம் யாரும் வந்து என் பொண்ணைக்கடத்திட முடியாது. பாதுகாப்பான இடம் இது..”

புலம்பியவர் சட்டென ஏதோ நினைத்தார் பிறகு தனது பிரத்தியேக அறைக்கு வேகமாய் நுழைந்தார்.

அங்கே அவரது நினைத்தது நினைத்தபடி என்று பெயரிட்ட அந்த புஷ்பகவிமானத்தைக்காணவில்லை

அப்போது அங்கே வந்த 131,”மரியாதையா முதலில் 141 ரெடி பண்ணி இருக்கலாம்.உங்க நி.நி ல சேரா உங்க பொண்ணைத்தள்ளிட்டு நியூசிலாந்துல டூயட் பாடப் போயிட்டான்..ரெண்டுபேரும் ஆறுமாசமா காதலிக்கறாங்க அது தெரியாம நீங்க இருக்கறதுபாத்து நான் சிரிப்பேன் ஏதும் புரிஞ்சாதானே உங்களுக்கு? ஹெஹே?” என்று எரிகிற நெருப்பில் நெய் ஊற்றிப்போனது.

‘”அம்மா! அந்த அயோக்கியன் சேராகூட என் பொண்ணு ஓடிட்டாம்மா. சேராஆஆஆஆ.. துரோகி ” பல்லைக் கடித்தார்.

ஐஸ்வர்யா அடக்கமுடியாத சிரிப்பினூடே இப்படிச் சொன்னாள்.

“அந்தச் சேப்பு லைட்குச்சிதலையன் சேரனோட சேர்ந்து உன் பொண் ஓடிப்போயிட்டாளா? ஆஹா கொடுத்துவச்சவ என் பேத்தி. இந்த அரைக் கிறுக்கு அப்பனை அவள் நல்லா எடைபோட்டு வச்சிருக்கா, அதான், ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா என்கிற பழைய சினிமா பாட்டுமாதிரி செயல்ல காட்டிட்டா நப்பின்னை”

“அம்மா…அவங்க எங்கபோனாலும் நான்விடமாட்டேன்… இப்போவே நான் 141 தயாரிக்கப்போறேன்.அதுல ஏறீ என் மகளை மீட்பேன் இனி என் எண்ணமெல்லாம். செயலெல்லாம் 141, 141, 141″

‘ஹலோ டாடி என்னாச்சு? தூக்கதுல 141 நம்பரை சொல்லிட்டே இருக்கீங்க.. மணி 12 ஆகுதுப்பா தூங்கவிடுங்க எங்களை ப்ளீஸ்?”

“ஏண்டாப்பா அஞ்சு…சுஜாதாவின் விஞ்ஞானக் கதையை இன்னிக்கும் படிச்சியாக்கும்?”

அஞ்சனவண்னன் மகளின் எரிச்சலான குரலிலும் ஐஸ்வர்யாவின் அமர்த்தலான கிண்டல் சிரிப்பிலும் அப்படியே அடங்கிப்போனார்.

– டிசம்பர் 15, 2005

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *