மன்ற மதுஷாலா பொம்மை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: August 24, 2012
பார்வையிட்டோர்: 9,911 
 

“அறிவின் மூலமாக உங்களுக்கு லாட்டரியில் வாகனம் விழும்”.

பின்பக்கம் திரும்பினால் 39 Kg. வாகனம் லாட்டரியில் கிடைத்தாலும் ஓட்டுவதற்கு அதிர்ஷ்டம் வேண்டும். பஜாஜ் பல்ஸர் மேல் நான் உட்கார்ந்து ஒட்டுவது, சினிமாஸ்கோப் திரையில் தனுஷ் பறந்து பறந்து அடிப்பதை போல் இருக்கும்.

அமெரிக்காவில் இருக்கும் பத்து வயதே ஆன சித்தப்பா மகள் கூட நாற்பது கிலோ. வயதுக்கேற்ற எடை வேண்டும் என்று படித்ததினால் முப்பத்தொன்பது வயதில் முப்பத்தொன்பது கிலோ. ‘நான் இருவர்; நமக்கு ஒருவர்’ என்ற வசனத்தைக் கேட்டு 19.5 கிலோவாக இல்லாமல் இருப்பதுதான் ஆறுதல்.

என்ன செய்தும் எடை ஏற மாட்டேன் என தலைவனைப் பிரிந்த சங்க காலத் தலைவி போல் மெலிந்து வருகிறது. இருபத்தியாறு இன்ச் வைத்து பேண்ட் தைக்க கொடுத்தால், தைத்து முடிப்பதற்குள் இடுப்பு இருபத்தி நான்காக மெலிகிறது.

ஞாயிற்றுக்கிழமை என்று பார்க்காமல் எல்லா நாட்களிலும் ‘ஐஸ்க்ரீம் சண்டே’ சாப்பிட்டுப் பார்க்கிறேன். இரவில் தேன் குடிக்கிறேன். காலையில் மாட்டுப்பால், கோழி முட்டை, ஆட்டுப்பாயா, மீன் வறுவல் சாப்பிடுகிறேன்.

வீட்டின் படுக்கையறையில் இருந்து குளியலறைக்கும், அங்கிருந்து சாப்பாட்டு மேஜைக்கும், எஸ்கலேட்டர் போட்டு இருக்கிறேன். அதிலும் நின்றால் சக்தி வீணாகிப் போய் எடை போடாமல் போய் விடலாம் என்பதால் உட்கார்ந்தே வீட்டின் அனைத்து இடங்களுக்கும் உலாவி வருகிறேன்.

விளம்பரத் துறையில் வேலை பார்ப்பவர்களை விட கணினி வல்லுநர்கள் சீக்கிரமே குண்டாகிறார்கள் என்று சொல்ல தொழிலையும் மாற்றி விட்டேன். உட்கார்ந்த இடத்தில் காபி, வேளா வேளைக்கு பீட்ஸா, சாய்ந்து உட்கார சொகுசு நாற்காலி, குளிரூட்டப்பட்ட அறை, அவ்வப்பொழுது மொறுக்க, உருளையை — விரல் நீளத்துக்கும் கவிதைப் புத்தக தடிமனுக்கும் நறுக்கி தேங்காய் எண்ணெயில் பொறித்தெடுத்த ·ப்ரை, மாலையில் காலோரிகள் சீனாவின் ஜனத்தொகையாகக் கொட்டிக் கிடக்கும் பியர் என்று கவனித்தாலும் இன்னும் முப்பத்தொன்பதிலேயே நிற்கிறேன்.

தெருமுக்கு கருமாரியில் ஆரம்பித்து நியுயார்க் பிள்ளையார் அருள்பாலிக்கும் பெசண்ட் நகர் அறுபடை வீடு முருகன் வரை எல்லாரையும் பொதுப்பணித்துறை காரியம் ஆக கவனிக்கும் பொதுஜனமாக திருப்திப் படுத்தியாச்சு. பட்டினி இருப்பதால் ஐயப்ப விரதமும், மொட்டை அடித்து இரண்டு கிலோவை கழிக்க வைப்பதால் திருப்பதியும், முஷார·ப் கிடைக்காமல் போனதால் என்னைப் போட்டுத் தள்ளும் வாய்ப்பு உள்ளதால் அமர்நாத்தும், இருபது மைலுக்கு நடராஜா சர்வீஸ் விடுவதால் மானசரோவரும் மட்டுமே பாக்கி.

நண்பர் சொல்லித்தான் ராஜசன்னிதானத்தைப் பார்க்க சென்றேன். எல்லா சாமியாரையும் போல் இல்லாமல் கோட் சூட் டையுடன் பளபளக்கும் கருப்பு காலணிகள். பாம்பின் தோல் போல் கண்ணைப் பறிக்கும் மென்மையுடன் கன்னங்கள். புருவத்தின் மத்தியில் இருந்து அளவெடுத்து பிரித்துப் போட்ட சாலையின் வெள்ளைக் கோடு போல் கருஞ்சாந்து. சாலையில் செல்லும் கார்கள் போல் விபூதி துணுக்குகள். சாம்பாரில் போடப்படும் துளிப் பெருங்காயம் போல் கொஞ்சம் சந்தனம். அதன் மேல் உப்பு போல் தேவைக்கேற்ற குங்குமம.

“நான் செத்துப் போயிடுவேனா?” ஆறாவது ப்ளடி மேரி அவனுக்காக மேஜையில் உட்கார்ந்திருந்தது.

“நிச்சயமாக எல்லோரும் ஒருநாள் இறந்துவிடுவோம்.” மாறாதப் புன்னகையுடன் சாமியாருக்கு பியர் ஊற்றி நிரப்பும் ஜமுனா, அவனுக்கும் அதே புன்சிரிப்புடன் இன்றும் சொல்லிக் கொண்டிருப்பாள்.

அதிக மனிதரில்லாமல், ஜமுனா போன்ற சிரத்தையான சிப்பந்தியைக் கொண்ட பார்வையாளர் மன்றம். அங்கு பரிமாறப்படும் உணவில் எனக்கு அவ்வளவாக ஆர்வமில்லை. உள்ளே நுழைந்தவுடன் உயரமான நாற்காலிகள் அணிவகுத்து நிற்கும். ஒன்றுக்கிருப்பதற்கு வசதியாக, ரெஸ்ட்ரூம்களுக்கு மிக அருகே ஓரமாக உட்கார்ந்து கொண்டு, தினமும் ஒருவன், நாம் அனைவரும் இல்லாமல் போவதை உறுதி செய்துகொண்டு இருந்தால், இருப்பை உறுதிப்படுத்தும் உணவின் அவசியம் இல்லாமல் போகிறது.

மன்ற மதுஷாலாவில் இருந்து இரண்டடி நடந்தால் இரயில்வே ஸ்டேஷன். எனக்குரிய ட்ரெயின் வந்துவிட்டதா என்று உள்ளே உட்கார்ந்தபடியே அறிந்துகொள்ள முடியும். வண்டியில் ஏறித் தூங்கிவிட்டால் கடைசி நிறுத்தம் என்னுடைய ஊர். அங்கிருந்து மூன்று நிமிடம் நடந்து இரண்டு மாடி படிக்கட்டு ஏறினால், என் வீடு.

நிம்மதியாக மது உண்ணும் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைப்பதில்லை. இங்கே இருக்கும் முகமூடி மனிதர்கள் கூட மதுவருந்துகிறார்கள். ஆனால், வாய்க்குள் ஓட்டை இருக்கிறது. கண்கள் எப்படி பார்ப்பார்களோ தெரியவில்லை. என்னுடைய மூத்திரம் இங்கேதான் கொட்டியிருக்கிறது. அந்த மணமும், அவர்களின் தூங்க முடியாத நிர்ப்பந்தமும், போதைக்காக குடிப்பதை விட, வாயில் எப்போதும் பெப்பர்மிண்ட் மிட்டாய் வைத்திருக்கும் என் முப்பத்தொன்பது கிலோ நாட்களைக் கொண்டு வந்தது.

எனக்கு எப்போதுமே பால்குடி மாறவில்லை. அம்மாவிடம் எட்டு வயதுவரை பாலுண்டேன். அதன் பிறகு வாயில் பெப்பர்மிண்ட் வைத்துத் திரிந்ததாக அக்கா சொன்னாள். எல்லோரும் ஒரு நாள் இறந்து போவார்கள் என்பதை நான் முதன் முதலில் தெரிந்து கொண்டது, என் அக்காவின் மூலம்தான். குழந்தைப் பேறு காலத்தில் வாந்தி எடுப்பதும், மயக்கம் வருவதும், தலைசுற்றுவதும் நிறைய சினிமாவில் பார்த்திருக்கிறேன். ஆனால், சினிமாவில் எள்ளி நகையாடிய ப்ரெயின் ட்யூமர் என்னுடைய அக்காவிற்கு வந்தபோது, மனிதர்களுக்கு இல்லாத நோய்கள் வரும் என்று புரிந்து கொண்டேன்.

நமக்குத் தெரிந்தவர்கள் நம் கண் முன்னே, மெதுவாக, துளித் துளியாக சிதைவது பார்க்கத் தகாதது. கொடுமைப் படுத்துபவர்களுக்கு நல்ல மனநிலை வேண்டும். அடுத்தவன் அழிவதை, வருந்துவதைப் பார்ப்பதால் கடவுள் போன்ற தீவிரவாதி தொழத்தக்கவன்.

வாரம் ஒரு தடவை கீமோதெரபி, மொட்டையடிக்கப்பட்ட நீண்ட கூந்தல், என்னை விட விநாடிக்கு நூறடி மெதுவாக நடந்து கரிசனப்பட வைக்கும் நடையைப் பெறுவது, பிறர் மகிழாவிட்டாலும் சலிக்க வைக்கிறோமோ என்னும் குற்ற உணர்வு, இவ்வளவு செய்தும் உயிர் வாழ முடியுமா அல்லது வேண்டுமா என்னும் எண்ணம் எல்லாம் மட்டும் நினைவில் நிற்கும். ஒரு வழியாகக் கருணைக் கொலை பாக்கியம் இல்லாமல் அக்கா தவறிப் போனாள்.

அப்பொழுது நான் வாயில் வைத்துக் கொள்ளும் ரப்பரை விட்டு விட்டேன். ஆனால், பெப்பர்மிண்ட் பபுள் கம் தொற்றிக் கொண்டது. சவைப்பது. மீண்டும் சவைப்பது. பல் வலிக்க சவைப்பது தொழில். எதிர்பாலாரைக் கண்டால் புன்னகைப் பூப்பதை விட நுரை பூப்பது என்னால் முடிந்தது. அதன் மூலம், அவர்கள் பால் என்னுடைய ஈர்ப்பு அறிவிப்பை எளிதாகப் பகர முடிந்தது. என்னுடைய மன்ற அழகி ஜமுனாவைப் போல் அவர்கள் புன்னகையும் சிந்தவில்லை. கடைக்கண் பார்வைகள் பயனில்லை. அவை அவர்களுக்காக மட்டுமே. நமக்கு விருப்பத்தை அறிவிக்க அகலவழிப் பார்வைகள் அவசியம்.

மனற மதுஷாலா நாயகி ஜமுனாவிற்கு பின்புறமும் கண்கள் இருக்கிறதோ என்று நான் அவளை திரும்பச் சொல்லிப் பார்த்ததுண்டு. இறப்பை விசாரிக்கும் மனிதனின் நிலையாமையை விளக்கும்போதே, அவள் பார்வை என்னுடைய காலியான கோப்பையை அறிந்து, நிரப்பி, பழைய கோப்பையை சுத்தம் செய்யப் போட்டுவிடும்.

எங்கோ இன்னொருவன் போதையே இல்லாமல், குடிக்கத் தெரியாமல், பேச்சு சுவாரஸ்யத்தில் சிந்திய திரவத்தைத் துடைத்துத் தள்ளும். நடுவே அந்த மூலை மனிதனின் சந்தேகத்தை அதே புன்னகையுடன் நிவர்த்திக்கும். நான் அறிந்தவர்களில் ஒருவரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட நல்ல குணங்கள் இருப்பது அரிது. அவளிடம் நாலைந்து கண்டு கொண்டது அவளின் ஆச்சரியம்.

ஜமுனா என்னைத் தேடுவாளா என்று எனக்குத் தெரியாது. ஆனால், தேடும் அவசியத்தை தொலைக்காட்சியும், தினசரிகளும் கொடுத்து இருக்காது. ஒரு இந்தியக் குடிமகன் கடத்தப் படுவது அன்றாடம் நடக்கும் நிகழ்வா? அதுவும் இந்தியாவிலேயே?

“குழந்தைகளுக்குப் பரிசு பொருள் தருவீர்களா?”

சாமியார் என்னிடம் கேட்டவுடன் அறுபது மைல் வேகத்தில் வரும் காரின் முன் நிற்கும் அணிலாகக் குழம்பினேன்.

குழந்தைகளை அன்றாட வாழ்வில் பார்ப்பேன். பள்ளிக்கு செல்பவர், ஹோட்டலில் துடைப்பவர், ஜெராக்ஸ் எடுப்பவர், செருப்பு கண்காணிப்பவர் என்று பழக்கப்பட்டவர்கள். ஆனால், பரிசுப் பொருள் தரவேண்டிய நிர்ப்பந்தமே ஏற்பட்டதில்லை.

என்னுடைய கணினில் அதிசயமாக முளைக்கும் கிருமிகளைப் போல எப்போதாவது உறவினரைப் பார்க்க செல்வதுண்டு. பூ, பழம், மைசூர்பா, பார்லேஜி வாங்கிச் செல்வதுண்டு.

லியோ டாய்ஸ் காலங்களில் துப்பாக்கி வாங்கிக் கொண்டு போய் நின்று சுடப் பட்டிருக்கிறேன். ‘என்னுடைய பொண்ணு தீவிரவாதி ஆகணும்னு நினைக்கிறாயா?’

சரி… சாதுவாக பார்பி கொடுப்போம், ‘லெஸ்பியனாகி எவளையாவது இழுத்துக்கிட்டு ஓடணும்னு கொடுக்கிறாயா?’ என்றார்கள்.

மூளைப் பிரயோகம் செய்வதற்கு ஏற்ற அறிவாளி விளையாட்டுக்களுடன் சென்றால் ‘பையனால் முடிக்க முடியவில்லையே என்று தாழ்வுணர்ச்சியில் உழல வைக்கப் போகிறாயா?’ என்றும் கிண்டல்கள் மீளவே இல்லை.

வாசலில் நுழையும்போது கூட எதிர்ப்பு கோஷங்கள் நிரம்பியிருந்தது. நான் உள்ளே நுழைவதைத் தடுக்க +

|
—–
|
|

என்று விதவிதமான பெரிய குறிகளுடன் மாதவிடாய் நின்றுபோன வயதான பாட்டியும், மாதவிடாய் வராத வயசுப்பசங்களும் இருந்தார்கள். எல்லோரையும் மீறிதான் என் அம்மாவே என்னை இங்கு சிறையிலிட்டிருக்கிறார்கள்.

கடைசியாக நான் கொடுத்துக் கொள்ளும் விளையாட்டு சாதனங்கள் டாக்டர் செட். கத்தி, கபடா, கண் பார்க்கும் சார்ட், ஸ்டெதஸ்கோப், இருதயத் துடிப்பு அளந்து சொல்லியும் கொடுப்பதுடன் சென்றேன். அவன் இப்போது பிறக்காத என் போன்ற குழந்தைகளை அரை மணிக் கூற்றில் அபார்ஷன் செய்யும் அபார டாக்டராகி பரிசு பெறாத குழந்தைகளை முடித்து வருகிறார்கள்.

– மார்ச் 31 2005

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *