சைக்கிளுக்கு ஒரு ரூபாய் வாடகை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: October 21, 2016
பார்வையிட்டோர்: 14,138 
 

ஆண்டு-1960.

படிப்பறிவு இல்லாத கிராமம். பண்ணையார் முதல்கொண்டு தலையாரி வரை பலதரப்பட்ட மக்கள் வாழுகின்ற ஊர். அந்த ஊரில் எல்லோரும் அறிவாளிகள். ராத்திரி ஊருசனமெல்லாம் தூங்கிட்டாங்க. எல்லாம் அடங்கி இருட்டாய் இருந்தது அந்த ஊர். நடுசாமத்து வாக்குல மூணு மாசமா இழுத்துக்கிட்ட கிடந்த செல்லம்மா பாட்டி செத்துப்போச்சு. முடியாம கிடந்தப்ப மகன், மகள், பேரக்குழந்தைகள் என எல்லாரும் செல்லம்மா பாட்டிக்கு பாலு ஊத்துனாங்க. ஆனா பாட்டி உசிரு ரொம்ப கெட்டி போல. சாவே நெருங்கல. கடைசியா அந்த கிராமத்துக்காரர் ஒருத்தர் செல்லம்மா பாட்டியோட புருஷன் சன்னாசிய, பால ஊத்த சொன்னாரு. சன்னாசி தாத்தாவும் பால பாதிகூட ஊத்துல பாட்டியோட தலை தொங்கிடுச்சி. ஓ ன்னு பெரிய அழுகுரல் வேற. அங்கிருந்த எல்லோரும் ஒரே நேரத்துல தலையை விரிச்சிப்போட்டுகிட்டு கத்த ஆரமிச்சாங்க. வெளிய இருந்த சொந்தகாரங்களும் “ஐயோ! செல்லம்மா கிழவி செத்துப்போச்சா… பாவம்” என்று மூக்கின் மேல் விரல் வைத்து இழவு வீட்டின் வாசலில் கொஞ்ச நேரம் நிற்கிறார்கள். ஒவ்வொருத்தராக தூக்கம் வரவே களைய ஆரமித்தனர். கூட்டம் களைய களைய அழுகையும் சத்தமும் கொஞ்சகொஞ்சமாக குறைய ஆரமித்தமித்தது. வயசான கிழவி பாரு. கொஞ்ச நாளவே உடம்புக்கு முடியாம இழுத்துகிட்டு கிடந்தது. அந்த கிழவிக்கு பீ மூத்திரம் அள்ளுரதுல மருமக ரெண்டு பேத்துக்கும் ஏகப்பட்ட மனகசப்பு வேற.

செல்லம்மா கிழவி செத்தது யாருக்கு நன்மையோ இல்லையோ? அந்த வூட்டு மருமகள்கள் ரெண்டு பேத்துக்கும் ஒரே சந்தோசம். ஏன்னா? இனிமேல் பீ மூத்திரத்தை அள்ள வேண்டாம் பாரு அதான். சாகரதுக்கு முன்னாடி அந்த பாட்டி மருமகளுக தான் செத்ததுக்கு அப்புறம் சண்ட போடக்கூடாதுன்னு, தான்கிட்ட இருந்த அறுபது பவுணயும் சரிபாதியா பிரிச்சி கொடுத்திருச்சி. தான் போட்டுருக்கிற எட்டு பவுண். அப்புறம் சன்னாசி தாத்தா கையில கழுத்துல போட்டுருக்கிற மூணு பவுணு. ஆக மொத்தம் பதினோரு பவுணுதான் இப்ப அவங்ககிட்ட இருக்கு. இதுகூட இல்லன்னா அநாத பொணமா போகனுமேன்னுதான் எடுத்து வச்சிருக்கு அந்த கிழவி.

அந்த செவுத்து ஓரத்துல கழுத்துல போட்டிருந்த துண்ட வாயில வச்சிக்கிட்டு அழுதுகிட்டு இருந்தாரு சன்னாசி தாத்தா. அந்த நேரத்துல தகவல் அறிந்த ஊர் பண்ணையார் வர்ரார். பண்ணையாரை பாத்தவுடனே தேம்பி தேம்பி அழுகிறார் சன்னாசி. பண்ணையாரும் அங்கேயே ஒரு நாற்காலியில் அமர்கிறார். பொழுது விடிந்துவிட்டது. செல்லம்மா கிழவி செத்ததை ஊர் சொந்தகாரங்களுக்கு சொல்லி அனுப்பனும். முடிந்தவரை எல்லா ஊருக்கும் சொல்லி அனுப்பியாகிவிட்டது. கடைசியா செல்லம்மா கிழவிக்கு தங்கச்சி ஒருத்திக்கு மட்டும் தகவல் சொல்லனும். யார அனுப்புறதுன்னு பண்ணையார் யோசித்து கொண்டிருந்தார். அப்பதான் அவருக்கு பச்ச மிளகாய் ஞாபகம் வந்தது.

பேருக்கு ஏத்தமாதிரி காரமாகத்தான் இருப்பான் அவன். அதுகூட அவனுக்கு உண்மையான பேரு இல்ல. மாரிமுத்து என்ற பேருதான் உண்மையான பேரு. அப்பா அம்மா இல்லாதவன். ஒரு காலத்துல கிழவி ஒருத்தி கைக்குழந்தையோட வந்தா. இந்த ஊருலயே தங்கி இவன வளத்துகிட்டு வேலைபாத்தா. இவன் சின்ன வயசா இருக்கும்போது பச்சமிளகாய கடிச்சு கடிச்சு சாப்பிடுவான். கொஞ்சம் கூட காரமே தெரியாது. தண்ணிகூட குடிக்கமாட்டான். அதனால, கூட இருக்குற பசங்க எல்லாம் இவனை பச்சமிளகாய்ன்னு கூப்பிட ஆரமிச்சிட்டாங்க. வளத்த கிழவியும் செத்துப்போச்சு. இவனும் அநாதயாயிட்டான். யாரு எந்த வேல சொன்னாலும் செய்வான். கொடுக்குறத வாங்கிக்குவான். அதுலையே திண்ணுக்குவான். இவனப் பாக்கனுமின்னா ஊர் மொக்குல இருக்குற பிள்ளையார் கோயில்ல பாக்கலாம். ஏன்னா? அங்கதான் அப்பஅப்ப அபிஷேகம் நடந்திட்டு இருக்கும். ஏதாவது சாப்பிட கிடைக்கும் என்ற எண்ணம்தான் அவனுக்கு.

“ஏலே கருப்பா, புள்ளையார் கோயில்ல பச்சமிளகா இருப்பான். நான் வரச்சொன்னதா அவனை வரச்சொல்லு” என்றார் பண்ணையார்.

“சரிங்கய்யா… உடனே சொல்லிடறேன்” என்றான் கருப்பன்.

கொஞ்ச நேரத்துக்கெல்லாம் பச்சமிளகாய் இழவு நடந்த வீட்டிற்கு வந்து விட்டான். பண்ணையாரைக் கண்டவுடன் பயபக்தியோடு அருகில் சென்று நின்று கொண்டான். “ஏண்டா பச்சமிளகா நம்ம செல்லம்மா பாட்டியோட தங்கச்சி ஆரியபாளையத்துல வாக்கப்பட்டுருக்கு. அவுங்க குடும்பத்துக்கு இழவு செய்திய சொல்லிட்டு வந்திரு. இந்தா ரெண்டு ரூபாய். ஒரு ரூபாய்க்கு வாடகைக்கு சைக்கிள் எடுத்துக்கு. இன்னொரு ரூபாய்க்கு சாப்பிட்டுக்கு” என்றார் பண்ணையார்.

“ஐயா, வழி எப்படி போவணும்” என்றான் பச்ச மிளகாய்

“ஏலே கருப்பா, இவகிட்ட ஆரியபாளையத்திற்கு வழிய சொல்ற” என்றார் பண்ணையார்.

பச்சமிளகாய தனியே அழைச்சிட்டு வந்த கருப்பன், “அடேய், நேரா பனியேரிக்கு போய்டு. பனியேரி கரையிலயே போனின்னா மதுரவீரன் கோயில் ஒன்னு வரும். அந்த கோயில்ல இருந்து வடக்கால ஒரு மண்ணு சாலை போகும். அந்த சாலை முடியரப்ப ஒரு தோட்டம் தெரியும். அதான் செல்லம்மா பாட்டியோட தங்கச்சி பாட்டி தோட்டம். அங்கதான் நீ போயி இழவு செய்திய சொல்லனும்” என்றார் கருப்பன்.

“சரிங்கண்ணா அப்படியே செய்திடுரேன்”

“சரி போற வழியில கயறுகாரங்க ஹோட்டல்ல ஏதாவது சாப்பிட்டுட்டு போடா..”

“சரிங்கண்ணா…“

கையில் இருந்த ஒரு ரூபாக்கு கயறுகாரங்க ஹோட்டல்ல முடிந்தவரை நன்றாக சாப்பிட்டாகிவிட்டது. அடுத்த ஒரு ரூபாய்க்கு சைக்கிளை வாடகைக்கு எடுத்துக்கொண்டான். சைக்கிளில் பிரேக், காத்து எல்லாம் சரியாக இருக்கா என்று பாத்துக்கொண்டான் பச்சமிளகாய். பனி ஏரியில் செல்லும் போது ஏரியின் அழகை ரசித்துக்கொண்டேப் போனான். இரண்டொரு இடங்களில் மீனவர்கள் படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். ஏரிகளின் நடுவில் சுற்றியிருக்கின்ற கருவேலமரங்களை பற்றி எண்ணிக்கொண்டே போனான். தண்ணிக்குள்ள யார் வந்து இந்த கருவேலமரங்களை நட்டிருப்பார்கள்? இந்த மரமானது எப்படி இவ்வளவு வேகமாக வளர்கிறது என்று எண்ணிக்கொண்டான்.

மதுரைவீரன் கோயிலை கடக்கும்போது பச்சமிளகாயின் மனசு நடுங்கத்தான் செய்யது. பெரிய பெரிய குதிரைகள், நாய் சிலைகள் என அமர்க்களப்படுத்திருந்தனர். அவன் அதையெல்லாம் புதியதாகப் பார்ப்பவன்போல் பார்த்துக்கொண்டிருந்தான். எப்படியோ இழவு செய்தி சொல்ல வேண்டிய தோட்டத்திற்கு வந்து சேர்ந்தான் பச்சமிளகாய்.

தோட்டத்திற்கு வந்தாச்சு. இழவுச் செய்தியை மட்டும் சொல்லனும்” என்று யாரையோ தேடினான். அங்கு ஒரு பெண்மணி பாத்திரம் தேய்த்துக்கொண்டிருந்தாள். அவள் தங்கச்சிப்பாட்டிக்கு மருமகளாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

“என்னாங்க… செல்லம்மா பாட்டி செத்து போச்சுங்க..” என்றான். அந்த பெண்ணிடமிருந்து எந்தவொரு பதிலும் இல்லை. மீண்டும் சொன்னான். மீண்டும் எந்தவொரு பதிலும் அப்பெண்ணிடம் இல்லை. அப்போது தோட்டத்தில் இருந்து வேர்த்து வியர்த்தபடி வெயிலுக்கு முக்காடிட்டபடி ஒரு கிழவி வந்தாள். “யாருப்பா நீ?” அந்த பொண்ணு வாய் பேசாது. என்னன்னு என்கிட்ட சொல்லு” என்றாள்.

“செல்லம்மா பாட்டி செத்துப்போச்சி..” என்றான்.

முகம் சுருங்கியது. கைக்கால் வெடவெடத்தது. கண்களில் நீர் அப்பியது. அப்படியே சுருண்டு விழுந்தாள் அக்கிழவி. எல்லோரும் ஓடி வந்தார்கள். அழுகை பெரிதானது. சொந்தகாரங்க எல்லாம் ஒன்னு சேந்தாங்க. மாட்ட வண்டியில பூண்டி உடனே கிளம்பினாங்க. பச்சமிளகாயும் அவுங்க வண்டி பின்னாடியே சைக்கிள்ள போனான்.

இரவு மணி 6.00 க்கு வீடு போய்ச்சேர்ந்தான் பச்சமிளகாய். செல்லம்மா பாட்டிக்கு நடக்க வேண்டிய அத்தனைச் சடங்குகளும் நன்றாக நடந்து முடிந்தன. உறவுக்காரங்க எல்லோரும் அவுங்க அவுங்க ஊருக்கு திரும்பி போய்ட்டு இருந்தாங்க. பண்ணையார் அடுத்து நடக்க வேண்டிய காரியங்களைப் பற்றி சன்னாசி தாத்தாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார். பச்சமிளகாய் வாசலில் அசையாமல் நின்று கொண்டிருந்தான்.

“என்னாடா பச்சமிளகாய், எங்கடா போயிருந்த பாட்டிக்கு வாக்கரிசி கூட போடலியே” என்றார் பண்ணையார்.

“ஐயா நீங்கதான இழவுச் செய்தி சொல்ல அனுப்பினிங்க”

“ஆமாண்டா… அனுப்புனேன். அவுங்களே வந்துட்டு காரியத்த முடிச்சிட்டு கிளம்பி போய்ட்டாங்க… நீ என்னாடான்னா இப்பதான வர்ர..”

“ஐயா, நீங்க கொடுத்த ரெண்டு ரூபாய்ல ஒரு ரூபாய்க்கு நல்லா சாப்பிட்டேன். இன்னொரு ஒரு ரூபாய்க்கு சைக்கிளை வாடகைக்கு எடுத்துக்கிட்டு இழவு சொல்ல போனேன்”

“அதுக்கும் நீ தாமதமா வர்ரதுக்கும் என்ன சம்பந்தம் பச்சமிளகா”

“எனக்குதானே சைக்கிளே ஓட்டத்தெரியாது! நான் சைக்கிளை தள்ளிகிட்டே போயிட்டு தள்ளிகிட்டே வந்தேன். அதான் தாமதமா ஆயிடுச்சிங்யா…”

“என்ன! உனக்கு சைக்கிள் ஓட்டத்தெரியாதா”

“ஆமாங்கய்யா”

“போடா புண்ணாக்கு பயலே… உன்கிட்ட வேலை சொன்னது என் தப்புதான். சரி சைக்கிள் ஓட்டத்தெரியாதுல்ல அப்புறம் எதுக்கு சைக்கிள வாடகைக்கு எடுத்துட்டுப் போன”

“பண்ணையார் சொல்லுக்கு மறுவார்த்தை ஏதுங்கய்யா… நீங்கதான சொன்னிங்க ஒரு ரூபாய்க்கு சைக்கிள வாடகைக்கு எடுத்துக்குன்னு அதான்” என்றான் பச்சமிளகாய்.

அவன் திட்டுருறானா இல்ல புகழுறானான்னு தெரியாம முழித்துகொணடிருந்தார் பண்ணையார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *