சென்னை-2020ல் ஒரு நாள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 9,128 
 

“ஊரெல்லாம் ஷோக்கா கீதுபா” என்கிற பாஷையை குப்பத்தில் கூட கேட்கமுடிவதில்லை. அல்ட்ரா மாடர்ன் தமிழுக்கு மாறியிருந்தனர் அனைவரும்.

தன்னைப் போலவே சர்வ சாதரணமாக ஆங்காங்கே அமெரிக்க, ஐரோப்பா, ஆஸ்திரேலியா கண்டம் ரிடர்ன் இந்தியர்கள். கையில் மினரல் வாட்டருடன் உலாவுவதைப் பார்க்கும்போதே தெரிந்தது ச‌ந்தீப்புக்கு.

மனைவியும் பிள்ளைகளும் அவர்கள் அம்மா வீட்டில் திருச்சியில் இருக்க, சென்னை அண்ணா சாலையில் அதுவும் உச்சி வெய்யிலில் கால்கடுக்க நடந்திருந்தான் சந்தீப்.

இருபது வருடங்கள் அயலகத்தில் எல்லாவற்றையும் ஆன்லைனில் பண்ணி அலுத்துப் போனதால், சொந்த ஊரில், நேரில் சென்று ஒவ்வொரு இடமாகப் பார்க்கவும் இன்று எண்ணியிருந்தான். புர‌சைவாக்க‌ம் வீட்டில் இருந்து கிள‌ம்பி, நண்பன் ஸ்ரீராம் அண்ணாசாலையில் சாந்தி தியேட்டர் அருகில் ட்ராப் செய்தான். அங்கு கொஞ்ச நேரம் உலாத்திவிட்டு, மெதுவே நடந்தான். முதலில் விகடன் அலுவலகம். இருபது ஆண்டுகள் முன்னர் எத்தனை முறை சர் சர்ரென்று பைக்கில் இந்த அண்ணா சாலையில் ப‌ய‌ணித்திருப்பான். ஒரு நாள் கூட‌ உள்ளே சென்று பார்க்க‌த் தோன்றிய‌தில்லை. எதிர்பார்ப்பை விட மிக‌ எளிதாக‌வே இருந்த‌து அலுவ‌ல‌க‌ம். இங்கே, இப்ப‌டி, மேலே என‌ ப‌ல‌ர் வ‌ழிகாட்ட‌ ஒவ்வொரு அறையாக‌க் க‌ட‌க்கையில் ‘எங்க‌ ம‌த‌ன் உட்கார்ந்திருப்பாரு ? இது ஆசிரிய‌ர் அறையா இருக்குமோ ? யாராவ‌து எழுத்தாள‌ர்க‌ள் பார்க்க‌ முடியுமோ ?’ என்றெல்லாம் எண்ணி ந‌ட‌ந்த‌வ‌னுக்கு எதிர்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் எல்லோரும் த‌டித்த புத்தகங்களில் கணக்கெழுதும் பெரிய‌வ‌ர்களோ அல்லது கையில் சில‌ தாள்க‌ளுட‌ன் அங்கும் இங்கும் சுழ‌ன்ற‌ ஆபிஸ் பாய்க‌ளோ தான். “என்ன‌ங்க‌ அமெரிக்கா ரிட்ட‌ர்ன் மாதிரி இருக்கீங்க‌. புத்த‌க‌ம் வாங்க‌ இங்க‌ வ‌ந்தேங்க‌றீங்க‌. இப்ப எல்லாமே ஆன்லைன் தான் சார்” என்றார் ஒரு ஊழிய‌ர்.

அத‌ன் பின் ஹிக்கின்பாத்த‌ம்ஸ். பழைய கட்டடத்தை, சில பல வர்ணங்கள் பூசி புதுப்பித்திருந்தார்கள். ‘ஃபிக்ஷன், நான் ஃபிக்ஷன், மிஸ்டரி, ஹாரர்’ என்றெல்லாம் ஆங்காங்கே விளம்பர அட்டைகள் வைத்து ஒழுங்குபடுத்தி பயமுறுத்தியிருந்தார்கள். ‘கிட்ஸ்’ செக்ஷன் சென்று ஏழெட்டு வ‌ய‌துப் பிள்ளைக‌ளுக்கான‌ புத்த‌க‌ங்க‌ள் சில‌வ‌ற்றை அள்ளிக் கொண்டான். “சார், இதெல்லாம் ரெஃப‌ர‌ன்ஸ் ஒன்லி. உங்க‌ளுக்கு வேண்டும் எனில் ஆன்லைனில் ஆர்ட‌ர் ப‌ண்ணுங்க‌ள்” என்றார் ஏர்ஹோஸ்ட‌ஸ் போல‌ இருந்த‌ இளம் காஷிய‌ர்.

அடுத்து ‘எல்.ஐ.சி’யா ‘ஸ்பென்ஸரா’ என யோசித்தான். ‘எல்.ஐ.சி. போனாலும் இதே கதை தான் சொல்வார்களோ ? எதுக்கும் போய் பார்ப்போம், அதன்பின் ஸ்பென்ஸர் சென்று மதிய உணவு முடிக்கலாம்’ என எண்ணினான். முத‌ல் மாடியிலேயே, “அதான் ஆன்லைனில் எல்லா விப‌ர‌ங்க‌ளும் இருக்கே !” என்று அனுப்புவ‌திலேயே குறியாய் இருந்த‌ன‌ர். சில‌ மாடிக‌ள் சென்று, த‌ன்னுடைய‌ இருப‌த்திஐந்தாண்டு பாலிஸி ப‌ற்றி சில விபரங்கள் கேட்க, “ஏம்பா, இத்த‌னை வ‌ருட‌ங்க‌ளில் ஏக‌ப்ப‌ட்ட‌ பாலிஸி வ‌ந்து போச்சே, நீ எந்த‌ப் பாலிஸி ப‌ற்றி சொல்றே ?!” என்றார் த‌டித்த‌ ப்ரேம் க‌ண்ணாடிக்குள், த‌வ‌ழும் கோலிகுண்டு க‌ண்க‌ள் கொண்ட‌ பெரிய‌வ‌ர். பாலிஸி எண்ணைச் சொன்னான். குனிந்து நிமிர்ந்து, மானிட‌ரையும், விசைப்ப‌ல‌கையையும் பார்த்து ஒற்றை விர‌லில் ஏதோ த‌ட்டினார். “தெரிய‌ல‌ த‌ம்பி, நீங்க‌ எதுக்கும் ஆன‌லைனில் செக் ப‌ண்ணுங்க‌, ட‌புள்யூ, ட‌புள்யூ….னு அடிச்சு, என்கொயரி ப‌ட்டன் அழுத்தி, உங்க‌ கேள்விக‌ளைக் கேளுங்க, பதில் சொல்வாங்க‌” என்று, ஏழாவ‌து மாடியிலிருந்து த‌ள்ளிவிடாத‌ குறையாக‌ ச‌ந்தீப்பை அனுப்பி வைத்தார்.

ஸ்பென்ஸ‌ர் க‌ஃபேயில் எதிர்பார்த்து வ‌ந்த‌ வெஜி ப‌ஃப் இல்லை, மினி இட்லி இல்லை, வெரைட்டி ரைஸ் இல்லை. எங்கு நோக்கினும், பீட்ஸா, ப‌ர்கர். ‘இருபது வருடங்களாக சாப்பிட்டு அலுத்துப் போய், திரும்பவும் இவையா ?’ என்று ஒதுக்கி, ம‌ன‌ம் தென்னிந்திய‌ உண‌வுக‌ளிலேயே நாட்டம் கொள்ள‌, ‘முகுந்தன் இட்லி கடை’ ப‌ற்றி ஏற்க‌ன‌வே கேள்விப் ப‌ட்டிருந்தான். அப்போதே நிறைய‌ கிளைக‌ள் தோன்றின‌ சென்னையில்.

ஸ்பென்ஸருக்கு எதிரில் சற்று தள்ளி ‘முகுந்தன்’ என்று தான் பெயர் பலகை பார்த்தான். உள்ளூர கல்யாண சமையல் ஓட்டமெடுத்தது. சில தூரம் நடந்து, ட்ராஃபிக் லைட்டில் க்ராஸ் பண்ண சாகசம் இன்றி, மேலும் நடந்து, அன்டர்க்ரௌண்ட் கடந்து, ஹோட்டலுக்குள் நுழைந்தான். வெளிச்சத்திலும் இருட்டாகவே இருந்தது. வாரயிறுதியில் எப்படியோ, இப்போது கூட்டம் அதிகம் இல்லை. மேசையில் அமர்ந்து காத்திருந்தான். வழக்கம் போல தண்ணீர் டம்ளர் வைத்து, ‘ஆர்டர் என்ன சார் ?’ என்றார் சீருடை சர்வர். இருபது வருடத்திற்கு அப்புறமும் அப்படியே இருக்கே இந்த முறை. நல்ல வேளை இங்கேயும் ஆன்லைன் என்று சொல்லி அனுப்பிவிடவில்லை என வியந்து மகிழ்ந்தான்.

“ரெண்டு இட்லி கொடுங்க முதலில்” என்றவனை, எழுதுவதை நிறுத்திவிட்டு ஏற இறங்கப் பார்த்த சர்வர், “அதெல்லாம் இல்லை சார் என்றார்”

“சரி, தோசையாவது இருக்கா ?” என்றவனுக்கு “இல்லை” என்றே பதிலளித்தார்.

‘ம‌திய‌ நேர‌த்தில் வ‌ந்து இட்லி, தோசை கேட்டு இம்ஸை பண்றானே’ என்ப‌து போல இருந்த‌து ச‌ர்வ‌ரின் பார்வை.

“சரி என்ன தான் இருக்கு ?” என்றான் ச‌ற்று கோப‌மாக‌.

“பீட்ஸா, பர்கர், லசானியா, ஸ்பெகத்தி, பாஸ்டா, பார்மஜானா சிக்கன், சிக்கன் சூப், மஷ்ரூம் சூப், ஸ்வீட் டீ, ஹெர்ப் டீ, கோக், பெப்ஸி, ஸ்ப்ரைட், டாக்ட‌ர் பெப்ப‌ர் …” என்று சர்வரின் பட்டியலில், கிர் என்று தலைசுற்றி கீழே விழாத குறையில் ‘முகுந்தன் பீட்ஸா கடை’ மேசையில் சரிந்தான் சந்தீப்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *