கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 30, 2015
பார்வையிட்டோர்: 29,814 
 

கோவை ரயில்வே ஜங்ஷனுக்கு எதிரில் சாந்தி தியேட்டருக்கு பக்கத்து சந்து தான் கோபாலபுரம். அங்கு இருக்கும் இரண்டு தெருக்கள் முழுவதும் திரைப் பட விநியோகஸ்தர்கள் தான்!

அன்று காலை ஒன்பது மணிக்கு ‘ஆத்தா கிரியேஷன்’ அலுவலகத்தில் ஒரே சத்தம்! மானேஜர் தன் உதவியாளரை திட்டிக் கொண்டிருந்தார்.

“உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? இங்கே ராத்திரி நீ இருந்து என்ன கிழிக்கிறே?…..வால் போஸ்ட் ஒட்டற பசங்களுக்கு என்ன தெரியும்?……நீ சொன்ன கட்டை எடுத்திட்டுப் போய் விடிய விடிய ஒட்டிட்டு வந்திட்டானுக!….”

“ சார்!..நீங்க சொன்ன கட்டைத்தான் ராத்திரி எடுத்திட்டுப் போய் ஒட்டச் சொன்னேன்!”

“ நீ பிரித்துப் பார்த்து கொடுத்திருக்கனும்!… நான் சொன்ன கட்டு அதல்ல!…அவனுக ராத்திரியே ஊர் பூரா ஒட்டி வச்சிட்டானுக! ..நானே காலையில் ஆபிஸுக்கு வரும் பொழுது தான் பார்த்தேன்! நாளைக்குத்தான் இந்த படம் ரிலீஸ் ஆனவுடன் அந்தப் போஸ்டர்களை ஒட்டச் சொல்லியிருந்தேன்!… படம் நாளைக்குத் தான் ரிலீஸ்? இன்னைக்கே வால் போஸ்டர்களை ஒட்டித் தொலைச்சிட்டானுக!.”

“ என்ன போஸ்டர் சார் அது?…”

“ ஆத்தா கிரியேஷனின் அற்புதப் படைப்பு – நோஞ்சான்! மாபெரும் வெற்றி! அரங்கு நிறைந்த காட்சிகள்! என்று நடிகரோட ஸ்டில்! அதன் கீழ் ஒரு பெரிய சினிமா தியேட்டரிலிருந்து, படம் முடிந்து மக்கள் வெள்ளம் வெளிவருவது போன்ற காட்சி! இன்று போல் ‘டச்’ செய்யப் பட்ட படம்! அது பாக்ய ராஜ் நடித்த தாவணிக் கனவுகள் திரையிட்ட அன்று முதல் காட்சி முடிந்து மக்கள் வெளி வரும் பொழுது எடுத்த படம்!..!…”

“சூப்பர் போஸ்ட் தானே சார்!..”

“அறிவு கெட்ட முண்டம்!…. நோஞ்சான் படமே நாளைக்குத்தானே ரிலீஸ் ஆகுது!”

“ ஆமா!…நான் அதை மறந்திட்டேன்!… இப்ப எல்லாம் படம் ரிலீஸ் ஆகிற அன்னைக்கே முதல் காட்சி நடக்கும் பொழுதே வெற்றி நடை போடுகிறது! என்று வால் போஸ்டர்கள் எல்லாம் ஒட்டி, பத்திரிகைகளுக்கு விளம்பரம் தருவது ரொம்ப சகஜமாகிட்டது! நாம ஒரு நாள் முன்னதாகவே செய்திட்டோம்! பராவாயில்லே விடுங்க!…..சார்!

– குங்குமம் 27-7-2015 இதழ்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *