கொள்ளைக்கார அப்புசாமி

1
கதையாசிரியர்: , ,
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 25, 2012
பார்வையிட்டோர்: 13,211 
 

அப்புசாமி ஒவ்வொரு நகையாக அணிந்து கொண்டார். சங்கிலி, தோடு, புல்லாக்கு, ஒட்டியாணம், கடகம், சடை பில்லை – சுருக்கமாகச் சொன்னால் சர்வாலங்கார பூஷிதனாகிக் கண்ணாடியில் தன் அழகைப் பார்த்துப் பார்த்து வியந்தார். டி.வி.யில் செய்திகளைத் தொகுத்துச் சொல்ல அவ்வப்பொழுது முளைக்கும் சில திடீர் அழகிகளை விடத் தான அழகாகவும் லட்சணமாகவும் இருப்பது போன்ற கர்வம்கூட அவருக்கு ஏற்பட்டது.

நிலைக் கண்ணாடிக்கு நெருக்கமாக முகத்தை வைத்துக் கொண்டு மூக்கில் அணிந்து கொண்டிருந்த புல்லாக்கை ஆராய்ச்சி மணி போல அடித்துப் பார்த்துக் கொண்டார். வாய் உல்லாசமாக ஒரு பழைய பாட்டை முணுமுணுத்தது. ‘மூக்குத்திப் பூமேலே காத்து உக்காந்து பேசுதம்மா… ஆஹா உக்காந்து பேசுதம்மா…’ ‘பேரழகி கிழவியோ பாட்ரா என்று சொல்கிறார்களே… அவள் கூட இப்படி இருப்பாளா’ என்று அவசரமான சந்தேகமும் ஏற்பட்டது அவருக்கு.

‘அடியே அப்பு! நீ உலகப் பேரழகிப் போட்டியில்கூடக் கலந்து கொள்ளலாம். ஆனால்… ஆனால்…?’

‘என்னது ஆனால்?’ சீறும் சிங்கமாய்த் திரும்பினார். அவரது மனச்சாட்சிதான் பேசியது.

‘அடே அப்பு! உனக்கு அழகி வேஷம் படா ஷோக்காப் பொருந்திகீது. ஆனால் மடையா, ரசகுண்டு உன்னை நிராகரித்தது உனக்கு ‘நவரச பாவங்கள்’ வராது என்ற காரணத்தாலல்லவா?’

ஹ¥ம். இவன் பெரீய டைரக்டர் விஸ்வநாத்! இவன் நாடகம் பெரீய சலங்கை ஒலி! நான்தான் கெடுத்துடப் போறேனாக்கும்.
 

அப்புசாமி பல்லை நறநறத்தார். நவரச பாவங்களாம். அதென்ன பெரிய வெங்காய பாவங்கள். அந்தப் பாவங்களையும்தான் செய்து பார்த்துவிடுவது.

கண்ணாடிக்கு நெருக்கமாக முகத்தை வைத்துக் கொண்டு ஒரு காதல் பார்வை பார்த்து, ‘நாதா’ என்றார். சிருங்கார ரசம் குபுக்கென்று கொட்டியது. மறு வினாடியே கோப ரசம். ‘அற்பப் பயலே…’ அடுத்த கணம் சோகத்துக்கு மாறினார். வாயை எப்படி வைத்துக் கொண்டால் அழுகையாக இருக்கும் என்பதைக் கண்டுபிடிக்க சிறிது திணறினாலும் உடனே கண்டுபிடித்து விட்டார். கண் கலங்கவில்லை என்ற குறை மட்டும் இருந்தது. கொஞ்சம் எச்சிலைத் தொட்டு தீற்றிக் கொண்டார். ஆகா! என்ன ஒரு சோகம். தன் முகத்தைப் பார்த்து அவருக்கு உள்ளூர அழுகையே வந்துவிடும் போலிருந்தது. சட்டென்று சிரிப்புக்கு மாற்றிக் கொண்டார். கை தேர்ந்த ஸிக்னல்மேன் (எங்கே அப்படி இருக்கிறார்கள்) ரயில்வே லயனைச் சரியாக மாற்றுவது போல் அப்புசாமி சகல வித முக பாவங்களையும் மாற்றி மாற்றிச் செய்து பார்த்தார்.

அடே ரசகுண்டு, அடே, சாம்பார் குண்டு, அடே மோர்க்குழம்பு குண்டு… எனக்காடா வேஷம் பொருந்தாது? நானாடா நடிப்புன்னா கிலோ எவ்வளவென்று கேட்கிறவன். ரசமே துளியும் இல்லாத உனக்கு ரசகுண்டு என்ற பெயரொரு கேடா? இனி நீ சாதா குண்டுதான்.

அப்புசாமி திடீர் அழகி(?)யாக மாறியது ஏன்? நகைகளுக்குள் தன்னை மாட்டிக்கொண்டு சர்வாலங்கார பூஷிதனாக ஸ்திரீபார்ட்டாக மாற வேண்டிய காரணமென்ன? அந்த முன்கதைச் சுருக்கத்தின் விவரமாவது யாது?

சொல்லப் போனால் அது முன்கதைச் சுருக்கமே அல்ல. அப்புசாமியின் உள்ளத்தைச் சுருக்சுருக்கென்று குத்திய முன்கதைச் சுருக்கம் :

அப்புசாமியின் நண்பனும் சீடப்பிள்ளையுமான ரசகுண்டு கொஞ்ச நாளாக ஒரு சரித்திர நாடகம் போட முயன்று கொண்டிருந்தான். யாரோ ஒரு டோப்பா பேர் வழியிடம் சரித்திரக் கதை கேட்டுப் பார்த்தான். அவர் துட்டு கேட்கவில்லை. ஆனாலும் காப்பிச் செலவுக்கு ஐந்து பத்து கேட்டார். அதுவே ரசகுண்டுவுக்குக் கட்டுப்படியாகவில்லை. அதுவுமில்லாமல் தன் நாடகம் நடுவில் பிரபலமாகி வசூல் ஓகோ என்று கொழித்து அந்த  கதாசிரியரும் பங்குக்கு வந்து ஒரு தலை  ராகத் தகராறெல்லாம் வந்துவிடலாம் என்ற பயமும் ஏற்படவே, பங்குக்கு வராத பழைய கால ஆசிரியரின் நாடகமாகப் போடத் தீர்மானித்தான். பாரதியார் மாட்டினார். அவரது நூற்றாண்டு விழா சமயம் அவன் காதில் பாரதியாரைப் பற்றிய சில பல விஷயங்கள் விழுந்தன. அவருடைய ‘பாஞ்சாலி சபதம்’ நாடகம் ரொம்ப உணர்ச்சி மயமானது, நாடகத்துக்கும் பொருத்தமாக இருக்கும் என்று கேள்விப்பட்டான். அதுவுமில்லாமல் துகிலுரிதல் அது இது என்றால் கொஞ்சம் கிளுகிளுப்புக்கும் இடம் உண்டே என்று நினைத்து அப்புசாமியைக் கலந்தாலோசித்தான். அப்புசாமி தனக்கு முக்கிய வேஷம் தந்தால் உதவுவதாகக் கூறினார். ஆனால் அவர் கேட்ட முக்கிய ரோலை ரசகுண்டு கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. பாஞ்சாலி சபதத்தில் தான்தான் பாஞ்சாலியாக இருக்கப் போவதாக அப்புசாமி அறிவித்ததும் ரசகுண்டு பயந்துவிட்டான். ‘தாத்தா, பாஞ்சாலி ரோல் உங்களுக்கு வேண்டாம் தாத்தா,’ என்றான்.

“அப்படியானால் திரெளபதி வேஷம் கொடு” என்றார்.

திரெளபதின்னாலும் பாஞ்சாலின்னாலும் ஒருத்தர்தான் என்று அவருக்கு விளக்கவே அவனுக்கு நேரமாகி விட்டது.

‘தாத்தா, எப்பவுமே வயசுக்குத் தகுந்த வேஷம் போட்டால்தான் பொருத்தம். இப்ப நம்ப என்.டி.ஆரையே எடுத்துக் கொள்ளுங்கள். அவர் பாருங்கள். ஆந்திர முதல்வரானதும் சாமியாராக ஆகிவிட்டார். காவிச் சட்டை அது இது போட்டுக் கொண்டு கம்பீரமாக லட்சணமாக, கெளரவமாக இருக்கிறார். நாலு பேர் அவரைப் பற்றி  பேசறதுக்கும் பெருமையா இருக்கிறது. நீங்களும் ஏதாவது பீஷ்மாச்சாரி, துரோணாச்சாரி, கிருபாச்சாரி, கிருஷ்ணமாச்சாரி; ராகவாச்சாரி, அனந்தாச்சாரின்னு துரியோதனன் சபையிலே உள்ள ஒரு கிழம்கெண்டு வேஷம் போட்டால்தான் நல்லாயிருக்கும்…’ என்று சொல்லிப் பார்த்தான்.

அப்புசாமி மசியவில்லை.

வீட்டிலிருந்த சீதாப்பாட்டிக்குத் தெரியாமல் நிறையப் புடவைகள் நாடகத்துக்காகக் கொண்டு வந்து தந்திருந்தார். துகிலுரிதல் ஸீன் என்றால் கலர் கலராகப் பத்திருபது புடவையாவது வேண்டுமே’ என்று ரசகுண்டு கவலைப்பட்டதும் பெருந்தன்மையாக வீட்டிலிருந்து கொண்டு வந்து தந்து விட்டு. பாட்டி எப்போது விஷயம் தெரிந்து தன் தலையை வாங்குவாளோ என்று அச்சப்பட்டுக் கொண்டிருந்தார். நல்ல ரோல் கிடைக்கப் போகிறது என்பதுதான் ஒரே சமாதானமாயிருந்தது. ஆனால் ரசம் அதைத் தர மாட்டேனென்கிறான். இவரும் விடுவதாக இல்லை அவனும் தருவதாக இல்லை. ரசகுண்டு பலவிதமாக அவருக்குச் சொல்லிப் பார்த்தான். “உங்களுக்கு திரெளபதி பேசற வசனங்களெல்லாம் வராது தாத்தா. ரொம்பச் சூடாகப் பேசணுமாயிருக்கும். வசனத்தை மறந்துடுவீங்க.”

‘பொல்லாத வசனம்’ அப்புசாமி சவால் விட்டார். அவன் சில வசனங்களை அவருக்குச் சொல்லி, அதை மறுநாள் வந்து ஒப்பிக்கச் சொல்லியிருந்தான்.

அப்புசாமி மேற்படி வசனங்களைச் சீதாப்பாட்டி இல்லாத நேரமாக வீட்டில சிரத்தையாக மனப்பாடம் செய்ய முயன்று கொண்டிருந்தார்.

ஆனால் தூக்கத்திலும் அவரிடமிருந்து அந்த வசனங்கள் தெறிக்கவும் அருகிலிருந்த சீதாப்பாட்டி திடுக்கிட்டாள். அவரது மாமூலான சாதாரணப் பேத்தலாக இல்லாமல் ஏதோ விஷயமுள்ள பேத்தலாக இருக்கவும் ஆச்சரியப்பட்டு அவரை விசாரித்தாள்.

‘ஒண்ணுமில்லே சீதே. பாஞ்சாலி சபதம் படித்தேன். ஆகா… பாஞ்சாலி இன்னா மாதிரிக் கில்லாடியா வாதம் பண்றாள்? நீயும்தான் என்கிட்டே ஆயுசுக்கும் வாதம் பண்றே? அவளும் ஒரு பொம்மனாட்டி… நீயும் ஒரு பொம்மனாட்டி… வாதம்னா வீட்டுக்காரனைப் போட்டு ஏழு எட்டாக மடக்கி ஒடிக்கிறது வாதமில்லே. பாயிண்டு இருக்கணும். நான் உனக்கு எதிரா எதுனாப் பாயிண்ட் பேசினா உடனே எனக்குத் துடடு கிடையாதுன்னு ராக்காசித்தனமா அறிக்கை விட்டு என்னைப் பட்டினி போட்டுடறே. இதுவாமே வாதம்? அவள்-எவள்- அந்தப் பாஞ்சாலி-கேட்கிறாள் ஒரு கேள்வி-சொல்றேன் கேளு. ஒருதரம் தான் படிச்சேன். மனசுலே அப்படியே பதிஞ்சு போச்சு. கேட்கிறாமே நம்ம பாஞ்ச்.. அதாமே நம்ம பாஞ்சாலி… அவ கேட்கிறாள். ‘தாயத்திலே விலைப்பட்ட பின் என்ன சாத்திரத்தால் என்னைத் தோற்றிட்டார்!’ அப்புசாமி கம்பீரமாகப் பின்னால் கையைக் கட்டிக்கொண்டு பேராசிரியர் போல உலவினார். பட்டிமன்றப் பேச்சாளர் போல் அலட்சியமாக எதிரியை மெளன இடைவெளி கொடுத்து நோக்கினார்.

‘புரியுதா, நான் சொன்னது. மறுபடி சொல்றேன். ‘தாயத்திலே விலைப்பட்டபின், என்ன சாத்திரத்தால் என்னைத் தோற்றிட்டார்’. அட, அட! என்ன பொட்டிலடிச்சாப்பல வாதம்! அந்தக் காலத்திலே நார்ட்டன் துரையோ கார்ட்டன் துரையோ இப்படித்தான் புட்டுப் புட்டு வைப்பான். காஞ்சீபுரம் குழாய்ப்புட்டு மாதிரி, ‘நீ சூதாட்டத்திலே தோத்துப் புட்டே… உன்னைப் பணயமா வெச்சு நீயே காலியாயிட்டியேடா முண்டம்! நீ எப்போ முதல் பந்தயத்திலே வேறொருத்தருக்கு உன்னையே பணயம் வெச்சுத் தோத்துப் போய் அடிமையாயிட்டியோ அப்பவே உன் கேஸ் டுபாக்கோல் ஆயிடுச்சி. நீ அடிமையின்னா உன்னைச் சேர்ந்ததும் அடிமை… யாருக்கு? உன்னை ஜெயிச்சவனுக்கு! அப்போ இன்னா கண்டிஸன்லே, நீ என்னைப் பெண்டாட்டின்னு உரிமை வெச்சுப் பணயம் வைப்பே? டக்கரான வாதம் இல்லே?’

சீதாப்பாட்டி கொஞ்சம் அசந்து தான் போய்விட்டாள். வாய் பேசாமல் அவள் நின்று விட்டதும் அப்புசாமிக்குத் தான் உண்மையிலேயே பெரிய வாதச் சக்ரவர்த்தி என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. அப்போது முதல் சீதாப்பாட்டி எது சொன்னாலும் பெரியதாகத் தர்க்கம் செய்யத் தொடங்கிவிட்டார். ‘உங்க லஞ்ச்சை முடித்துக் கொண்டு ஊர் சுற்றப் போவது தானே?’ என்றாள் சீதாப்பாட்டி. அப்புசாமி திரும்பினார். நின்றார் கம்பீரமாக.’உனக்கு ஊர் சுற்றப் போவது’ன்னா இன்னாது தெரியுமாமே? ஊர் சுற்றப் போவது… அதாவது… ஊர் உன்னைச் சுற்றிட்டு வர, நீ போறது, அதாவது… ஊர் உன்னைச் சுற்றிட்டு வர, நீ போறது, அதாவது ஊரெல்லாம் உன்னை எப்போ சுற்றும், நீ பெரீயமன்சனா இருந்தால் உன்னைச் சுற்றி ஊர் வரும்… அதைத்தான் ஊர் சுற்றப் போன்னு சொல்றாங்க. புரியுதா?’

சீதாப்பாட்டி மோவாயில் கை வைத்துக் கொண்டவள், ‘உங்கள் இன்டர்ப்ரடேஷன் மார்வல்ஸ்!’ என்று வேறு பாராட்டிவிட்டாள். அப்புசாமியின் கால் மேல்புறமாகவும் தலை கீழ்ப் புறமாகவும் ஆகிவிட்டது. கீரைக் காரியிடம் சீதாப்பாட்டி ‘முளைக்கீரை இருக்கிறதா? எலுமிச்சம்பழம் என்ன விலை?’ என்று கேட்டுக் கொண்டிருந்தாள். குளியலறைக்குப் போய்க் கொண்டிருந்த அப்புசாமி மொலுமொலுவென்று வந்து விட்டார். ‘சீதே, நீ என்னத்தைப் பேசறேன்னு உனக்கே புரியுதா?’

சீதாப்பாட்டி அசந்துவிட்டாள். ‘ஐ டின்ட் டாக் டு யு. கீரைக்காரிக்கிட்டே பேசிட்டிருந்தேன்.’

‘அதைத்தான் சொல்கிறேன். நீ முளைக்கீரை இருக்கிறதான்னு கேட்டே. அதனோடு விலையைக் கேட்காமல் எலுமிச்சம்பழம் என்ன விலைன்னு விசாரிக்கிறே இப்படியா அவளைக் குழப்பி அடிப்பாங்க? முதலில் என் மாதிரித் தெளிவாப் பேச நீ கற்றுக்கணும்.’ அப்புசாமி சடசடவென்று சில நாடக வாதப் பிரதிவாதங்களைச் செய்து காட்டி சீதாப்பாட்டியை மேலும் பிரமிக்க வைத்தார்.

ஆனால் அவருக்குத்தான் பாவம் என்ன துரதிருஷ்டம். ரசகுண்டு அவருக்குக் கடைசி நிமிஷத்தில் திரெளபதி வேஷம் தர மறுத்துவிட்டான். துகில் உரியல் காட்சிக்க அசல் பெண்ணாகவே ஒரு துணை நடிகையைக் கோடம்பாக்கத்திலிருந்து தான் வரவழைத்துப் பரபரப்பான மேடை நாடகமாகச் செய்யப் போவதாகக் கூறிவிட்டான். அப்புசாமி பொறுமினார். ரசகுண்டு சும்மா இருக்கக் கூடாதா வாயை வைத்துக் கொண்டு, ‘வேண்டுமானால் ஒரு சேவகன் வேடம் தர்றேன்.’ என்று சொல்லி அவரை மிக அவமானப் படுத்திவிட்டான். அப்புசாமிக்கு ஆத்திரம் தாங்கவில்லை. லோங்கோவால் ஆகிவிட்டார். அந்த ஆத்திரத்தில் ஒரு பெரிய காரியத்தைச் செய்துவிட்டார். ‘பகையாளி குடியை உறவாடிக் கெடு.’ ‘வேட்பாளர் காலை, கூடவே இருந்து ஓட்டுப் போடாமல் வாரிவிடு’ என்பது போல அப்புசாமி ரசகுண்டுவின் கூடவே இருந்தவர் நாடக தினத்தன்று ரசகுண்டுவின் வீட்டிலிருந்த மேக்கப் சாமான் பையையும். சரித்திர நாடகத்துக்கென்று அவன் வாடகைக்கு வாங்கி வைத்திருந்த எல்லா நகைகள் அடங்கிய பெட்டியையும் தூக்கிக்கொண்டு புறப்பட்டுவிட்டார். பெட்டியுடன் வீட்டுக்கு வந்த சமயம் சீதாப்பாட்டி ஓர் அனாதைச் சிறுவர்கள் இல்லத்தின் ஆண்டு விழாவுக்காகக் கடைசி நிமிடக் கலெக்ஷனுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள், “ரயிலிலிருந்து வருகிறவர் மாதிரி இதென்ன கையிலே காலிலேயெல்லாம் லக்கேஜ். முதலில ஷேவ் செய்து கொள்ளுங்கள்…” என்றாள்.

அப்புசாமி சிரித்தார் தோரணையாக. ‘மறுபடியும் உனக்குப் பேசத் தெரியல்லையேடி கெய வி. லக்கேஜுக்கு யாராவது ஷேவ் செய்யமுடியுமா? ஹ ஹ’ என்றவர் உள்ளே போய்விட்டார். நகைப்பெட்டியைக் கட்டிலின் மீது கடாசினார். டேய் குண்டு ரசம்! எனக்குப் பாத்திரம் தரமாட்டேன்னு சொன்னேயில்லையா? உன் நாடகம் சாயந்தரம் எப்படி நடக்குதோ பார்த்துக்கறேன்.

அவர் விசிறிப்போட்ட பெட்டி சிறிது திறந்து பளபளப்பான சில முத்துமாலைகளும் சங்கிலிகளும் வெளியே வந்தன. அப்புசாமி இரண்டு சங்கிலிகளைக் கழுத்தில் அணிந்து பார்த்தார். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக எல்லா நகையுமே அணிந்து பார்த்து ரசகுண்டு தர மறுத்த திரெளபதியாகவே ஆகிப் பார்த்துவிட்டார்.

பாஞ்சாலி வேடம் தனக்கு எவ்வளவு அழகாகப் பொருந்துகிறது என்று தனக்குத் தானே அழகுப் போட்டி நடத்தி, தானே நீதிபதியாகவும், தானே மேடையில் தோன்றும் அழகியாகவும் இருந்து, காட்டிலே ஏதோ ஒரு கலைமான் தன் கொம்புகளை நீரில் பார்த்து மகிழ்ந்ததாமே அதைப் போல மகிழ்ந்தார். அந்த மகிழ்ச்சியின் உணர்ச்சி வேகத்தில் அவருக்குத் திடீர் யோசனை ஒன்று தோன்றியது.

இந்த அலங்காரத்துடனேயே ரசகுண்டுப் பயல் எதிரில் போய் நின்று அவனை அசத்துவது. ‘அடே! ரசனையற்ற முண்டம்! எனக்காடா வேஷம் பொருந்தாது என்றாய். பாரடா பார்! எட்டுக் கண் விட்டுச் சுட்டெரிக்கும் என் எழிலைப் பாரடா. உன் கோடம்பாக்கம் சிங்காரியைத் தூக்கி ஆடம்பாக்கத்திலே கடாசு.’

அப்புசாமி நளினமாக வெளியேறினார். தெருக்களில் அங்கங்கே கடைகளில் சிறுசிறு கூட்டம். மாலைப் பத்திரிகைகளில் ஏதோ பரபரப்பான செய்தி போலும். ஆனால் அப்புசாமியையக் கவர்ந்தது ஒரு பெட்டிக் கடையிலே வைத்திருந்த கோடி ரூபாய் லாட்டரியின் பட்டை எழுத்து விளம்பரத்துக்கு அருகே இருந்த ஒரு குட்டி விளம்பரம்.

அந்த விளம்பரம் அவர் கண்ணை மட்டுமா பறித்தது. மூக்கையும் சேர்த்துப் பறித்தது. அது ஒரு மூக்கப் பொடி விளம்பரம். விளம்பரமே சுறுசுறுவென்று அவர் மூக்கில் உணர்ச்சி ஜாலங்களை ஏற்படுத்தியது. பழக்கப்பட்டவர் போல் ஸாம்பிள் கேட்டு விரலில் முத்திரை காட்டினார். கடைக்காரர் இரும்புக் கரண்டியில் துளிப் பொடியைக் காட்டினார். அப்புசாமி எடுத்தார். சிறுவன் சீனுவாசனின் மாண்டலின் போல அந்தச் சிமிட்டாப் பொடி துளியூண்டு இருந்து கொண்டு அவர் நாசியில் எத்தனை ஆயிரம் இன்ப வினோதங்களை மீட்டிவிட்டது! ஆகா! பொடியென்றால் அது பொடி.

“யோவ்! பொடி அபாரமய்யா. பெரிய சைஸ் டப்பா ஒண்ணு குடுய்யா!”

கடைக்காரர் அப்புசாமியின் பெண் உருவத்தையும் அவர் கேட்ட பொடிக் குரலையும் கேட்டு அசந்துவிட்டார். அதைவிட அப்புசாமி அந்தப் பொடி டப்பாவிலிருந்து அனாயாசமாகப் பெரிய சிமிட்டலாக எடுத்து மூக்கிலிருந்த புல்லாக்கைக் கழற்றி ஓரமாக வைத்துவிட்டு, ‘சர்ர்ர்ர்சர்ர்ர்ர்ர்ர்’ என்று ஆசைதீர உறிஞ்சித் தள்ளவதைப் பார்த்துப் பிரமித்து விட்டார்.

பேரிளம் பெண்களான சில நாரீமணிகள் நம் பாரதத் திருநாட்டில்-முக்கியமாகத் தமிழகத்தில் நாசி மணிகளாகப் பொடி போடுவது உண்டுதான். ஆனாலும் இவ்வளவு பகிரங்கமாக, ஸ்டீரியோ ஒலியுடன் ஒரு பெண்மணி பொடி உறிஞ்சியதைப் பார்க்க, கேட்க நேரிட்டதில்லை.

அப்புசாமி திருப்தி கலந்த புன்னகை ஒன்றைக் கடைக்காரர் மீது வீசி விட்டு, “வர்ரேன்ய்யா…” என்று கூறிவிட்டு நகர்ந்தார். வழியிலிருந்த கடைகளிலெல்¡ம் இன்னும் கூட்டம்.

அப்புசாமி, பாலத்து ஓரமாகத் ‘தம்’ அடித்துக்கொண்டிருந்த ஒரு பரட்டைத் தலை சைக்கிள் ரிக்ஷாக்காரனிடம் தான் ஒரு பெண்மணி வேடத்தில் இருப்பதை அறவே மறந்தவராக, “இன்னா நைனா, கடைக்குக் கடை கூட்டம். ஏதோ நுழைஞ்ச வரி நுழையாத வரீங்கறாங்களே… அந்த மிஷ்டீக்கா நைனா!” என்றார்.

அவன் சட்டென்று தன் கையிலிருந்த மாலைப் பபத்திரிகையை ஏன் மறைத்துக் கொள்கிறான் என்பது அவருக்குத் தெரியவில்லை.

“சவாரியாம்மா. குந்தும்மா,” என்று உபசரித்தான். அப்புசாமிக்க அப்போதுதான் தான் பெண் உருவத்தில் இருப்பது ஞாபகத்துக்கு வந்தது. ஆகா, வேடம்தான் எத்தனை பொருத்தம். அவரை அசல் பெண்பிள்ளையாகவே நினைத்து சைக்கிள் ரிக்ஷாக்காரன் அம்மா என்கிறான்.

‘அடே, மட ரசம்! இதைவிட உனக்கு என் வேடம் பொருத்தத்துக்கும் நடிப்புத் திறமைக்கும் சர்ட்டிபிகேட் என்னடா வேணும்! இந்த ரிக்ஷாவில் இதோ இப்போதே உன்னிடம் வந்து உன்னை அசத்த வைக்கிறேன் பார்.’

நாணத்துடன் ஒரு நொடி நொடித்துக் கொண்டு சைக்கிள் ரிக்ஷாவில் ஏறி உட்கார்ந்து குரலையும் பெண் குரலாக மாற்றிக்கொண்டு, “விடுப்பா வண்டியை,” என்றார்.

அந்த சைக்கிள் ரிக்ஷாக்காரன் கால்தான் வண்டியை மிதித்ததே தவிர, எண்ணமெல்லாம் சற்று முன் மாலைப் பத்திரிகையில் தான் படித்த கொட்டை எழுத்துச் செய்தியிலேயே இருந்தது.

பிரபல பாங்கியில் நகைக்கொள்ளை!

காஷியர் கண்ணில் மூக்குப் பொடி தூவிய பலே கிழவன் யார்?

பாங்கி வாசலிலிருந்த பால் டிப்போ மல்லிகா கொடுத்த துப்பு!

மர்மக் கிழவனைத் தேடுகிறது போலீஸ்!

அனாதைச் சிறுவர்களில் ‘பாலர் இல்லம்’ ஆண்டு விழாவுக்குத் தலைமை வகித்துக் கொண்டிருந்த சீதாப்பாட்டியின் முகம் ஏதோ தீவிரமான சிந்தனையில் இருந்தது. ஆழ்ந்து பார்த்தாலும்கூட அந்த முகத்தில் இருப்பது கவலையா, கோபமா, சரிச்சலா என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியாது.

உண்மையில் அப்போது சீதாப்பாட்டி கணவர் அப்புசாமியைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருந்தாள். மாலை மூன்று மணிக்கு ரசகுண்டு சீதாப்பாட்டியிடம் மூச்சு இரைக்க வந்து சொன்ன செய்தி அவளை மிகவும் பாதித்திருந்தது. ரசகுண்டுவின் நாடகத்தை நடக்கவொட்டாமல் செய்வதற்காகவே மேக்கப் சாமான்களையும், நகைப் பொட்டியையும் அவர் அபேஸ் பண்ணி வந்துவிட்டதாக அவன் புலம்பி இருந்தால் சீதாப்பாட்டி இப்படி இடிந்து போயிருக்க மாட்டாள்.

ரசகுண்டு கொஞ்சம்கூட மரியாதையில்லாமல், “பாட்டி! நான் தாத்தாவைப் பற்றிப் போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுக்கப் போறேன். என் மேல் வருத்தப்பட்டுக்காதீங்க. இல்லாட்டி மறுபடி நான் எல்லா நகையும் மேக்கப் கடையிலே வாடகைக்கு வாங்கிட்டு வருவதற்கு ஆயிரம் ரூபாயும் தாத்தா மோசடிப் பண்ணினதுக்கு ஆயிரமும் நீங்க தந்தாகணும்.”

“ரசம்! யு கெனாட் ப்ளாக்மெயில் மீ. இது உனக்கும் அவருக்கும் ஏற்பட்ட ஏதோ ரகளை. வேர் டு ஐ கம் இன் த பிக்சர்…” என்று விரட்டிவிட்டாலும் மனம் திரும்பத் திரும்பக் கணவரின் அசட்டுத்தனத்தைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தது. யாரோ வரவேற்றுக் கொண்டிருந்தார்கள். யாரோ கையைத் தட்டிக் கொண்டிருந்தார்கள். மேஜை மீதிருந்த மாலைப் பத்திரிகையின் கொட்டை எழுத்துக்கள் மீது சீதாப்பாட்டியின் கவனம் சென்றது.

பிரபல பாங்கியில் நகைக் கொள்ளை!

காஷியர் கண்ணில் மூக்குப்பொடி தூவிய பலே கிழவன் யார்?

பாங்கி வாசலிலிருந்த பால் டிப்போ மல்லிகா கொடுத்த தப்பு.

மர்மக் கிழவனைத் தேடுகிறது போலீஸ்!

இன்னும் யாரோ பேசிக் கொண்டிருந்தார்கள். வாசலில் ஏதோ சலசப்பு. விடுதித் தொண்டர்கள் யாரோ ஒரு பெண்மணியை மிகவும் உபசாரம் செய்து அழைத்து வந்து முன் வரிசையில் உட்கார வைத்துக் கொண்டிருந்தார்கள்.

சைக்கிள் ரிக்ஷாவில் ஏறிய அப்புசாமியின் நகை அலங்காரத்தையுயம், கரகரத்த தொண்டையையும், சர்ர்ர்ரென்று ஆண்பிள்ளைத்தனமாகப் பொடி உறிஞ்சில லாவகத்தையும் கண்ட சைக்கிள் ரிக்ஷாக்காரனுக்குச் சில பல சந்தேகங்கள் ஏற்படவும் அப்புசாமியை, ‘அம்மா நீங்க யாரு, எங்கிருந்து வந்தீங்க. அது இது என்று அருண்ஷோரி செய்ய ஆரம்பித்ததும் அப்பு¡சமி, ‘இவன் பார்வை சரியில்லை. ஒருகால் கற்பழிக்க முயன்றாலும் முயலலாம்,’ என்று விபரீதமாக எண்ணியவர் பாதி வழியிலேயே காசை அவனுக்குக் கொடுத்துவிட்டு இறங்கி வேகமாக நடந்தார். அவன் துரத்தி வந்து ஏதாவது செய்துவிடப் போகிறான் என்று பயந்தவரை வரவேற்கவே காத்திருப்பதுபோல அனாதை விடுதியின் வருட விழா நடந்து கொண்டிருந்தது.

அப்புசாமியின் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்தது. ஒரு செயற்கை மிடுக்கோடு, பெரிய மனுஷித் தோரணையில் அனாதை விடுதிக்குள் நுழைந்துவிட்டார். வரவேற்பில் இருந்த இரண்டு பெண்கள் அப்புசாமி விழாவுக்காக வந்திருக்கும் ஏதோ பெரிய இடத்துப் பிரமுகி என்று சகல மரியாதை கொடுத்து உள்ளே அழைத்துச் சென்று முதல் வரிசையில் உட்கார வைத்துவிட்டனர்.

மேடையில் சீதாப்பாட்டியைப் பார்த்ததும் அப்புசாமிக்குப் பக்கென்றாகிவிட்டது. வாணலிக்குத் தப்பி அடுப்பில் விழுந்த மாதிரி, சை.ரி.காரனுக்குத் தப்பி கிழவிகிட்டே மாட்டிகிட்டோமே தேவுடா!

Print Friendly, PDF & Email

1 thought on “கொள்ளைக்கார அப்புசாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *