ஒரு நட்சத்திரத்தின் தோல்வி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 9, 2012
பார்வையிட்டோர்: 8,536 
 

1

அவள் ‘ஜோக்’ அடித்த போது எல்லாரும் சிரித்தார்கள். அவன் மட்டும் சிரிக்கவில்லை. ‘செட்’டில் அவள் நடுநாயகமாக அரசி போல் வீற்றிருந்ததையே அவன் பொருட்படுத்தியதாகவோ, இலட்சியம் செய்ததாகவோ கூடத் தெரியவில்லை.

அங்கிருந்த மற்ற எல்லாரும் – புரொட்யூஸர், டைரக்டர் உட்பட – அவள் கவனிக்க வேண்டுமென்று நினைத்த போது கவனித்து, சிரிக்க வேண்டுமென்று நினைத்த போது சிரித்து, பதற வேண்டுமென்று நினைத்த போது உருகி நடந்து கொண்டார்கள்!

‘மூட் அவுட்’ ஆகி அவள் ஒத்துழைக்க மறுத்தால், கிட்டத்தட்ட முக்கால் கோடி ரூபாய் முடங்கியுள்ள படம் மேலும் ரிலீசுக்குத் தாமதமாகி விடும். அவளைப் போல ஒரு சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தன்னைக் கட்டிக் காரியத்தை முடித்துக் கொள்ள வேண்டிய நிலையில் தான் அவர்கள் எல்லாரும் இருந்தார்கள்.

அவள் மனம் வைத்தால், தன்னுடைய ஜோக்குக்குச் சிரிக்காத – தன்னைப் பொருட்படுத்தாத அந்த இளைஞனை வேலையைவிட்டே துரத்திவிட முடியும்… அவன் ரொம்பவும் திமிர் பிடித்தவனாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், ஒரு பெண்ணிடம் – அதுவும் பல பேருடைய கனவுகளில் நிறைந்திருக்கும் ஓர் அழகிய சூப்பர் ஸ்டாரிடம் இப்படி அவன் அலட்சியமாக நடந்து கொள்ள முடியாது, கூடாது.

தன்னைப் பற்றி அதிகம் பொருட்படுத்தாத அந்த இளைஞனைப் பற்றி நடிகை விஜயநளினி அதிகம் பொருட்படுத்திச் சிந்தித்தாள். மனத்தை அலட்டிக் கொண்டாள். அவனைப் பற்றி யாரிடமாவது விசாரிக்க வேண்டும் என்று தோன்றியது அவளுக்கு.

“வாட்டர் ப்ரூஃப் கடிகாரத்திலே தண்ணி நுழையாத மாதிரிச் சில பேரோட மனசிலே ‘ஹ்யூமரே’ நுழையாது. அப்படிப்பட்டவங்களுக்கு ‘ஹ்யூமர் ப்ரூஃப்’னு அடைமொழி குடுத்திட வேண்டியதுதான்…” என்று அவன் காது படவே ஜாடையாக அவள் கிண்டல் செய்த போது கூட, அங்கிருந்த மற்றவர்கள் தான் அதற்காக நகைத்தார்கள்.

அவன் பிடித்து வைத்த பதுமையைப் போல் கருமமே கண்ணாக, அன்றைய ஷூட்டிங்குக்கான ஸ்கிரிப்ட் கத்தையைச் சரிபார்த்து அடுக்கிக் கொண்டிருந்தான். அவ்வளவிற்கும் அவன் அதிக வயதானவன் கூட இல்லை. நல்ல உயரம், எடுப்பான நாசியோடு கூடிய முகம். கருந்திராட்சைக் குலைகளைத் தலையில் கவிழ்த்தாற் போலச் சுருள் சுருளாக முடி.

தன்னை விட இரண்டொரு வயது கூடவா, குறையவா என்பதை விஜயநளினியால் அநுமானிக்க முடியாமல் இருந்தது. அவன் அவளைப் பொறுத்தவரை ஒரு புதிராகவே தோன்றினான்.

‘இந்த வயதிலேயே இத்தனை மண்டைக்கனமா?’ என்று வியப்பாயிருந்தது அவளுக்கு. ஒரு பக்கம் அது கர்வத்தின் விளைவு என்று தோன்றினாலும், மறுபக்கம் ‘செட்டில்’ தன்னிடமோ – மற்றவர்களிடமோ அவன் ஒரு போதும் ஒரு சிறிதும் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டதில்லை என்பதும் நினைவு வந்தது. நல்லவன், ஆனால் ஜம்பக்காரன் போலும்.

பின் ஏன் அவன் தன்னைப் பொருட்படுத்தவில்லை? சாதாரண முகதாட்சண்யத்திற்காகக் கூட அவன் ஏன் சிரிக்க வில்லை? எல்லாருடைய மரியாதைக்கும், பயபக்திக்கும் உரிய நான் சொல்கிற ஓர் நகைச்சுவையைச் சபை நாகரிகம் கருதியாவது அவன் ஏன் ரசித்திருக்கக் கூடாது? ரசிக்கவே முடியாவிட்டாலும் ரசிப்பதாக ஏன் நடித்திருக்கக் கூடாது?

வாழ்க்கை வசதிகளையும், முகதாட்சண்யத்தையும் கருதி எத்தனை பேர் எத்தனை பிடிக்காத விஷயங்களை விரும்புவதாகவும், ரசிப்பதாகவும் நடிக்கிறார்கள்? அவனும் அப்படி ஏன் சமாளித்திருக்கக்கூடாது? ஏன் சமாளிக்கவில்லை?

மிகவும் புகழ்பெற்ற – செல்வாக்கு நிறைந்த தன்னுடைய கோபத்துக்கு ஆளானால், பார்த்துக் கொண்டிருக்கிற வேலையை இழந்து தவிக்க நேரிடுமே என்கிற தற்காப்பு உணர்ச்சியே கூட அவனுக்கு ஏன் இல்லை? அவளை பொறுத்தவரை அந்த அழகிய – முகத்தில் சிரிப்பற்ற – சீரியஸ்ஸான இளைஞன் ஓர் ஆச்சரியமாகிப் போனான். 

2

தனியாக புரொடக்ஷன் மானேஜரிடம் விசாரித்தாள் அவள். அவ்வளவு பெரிய நட்சத்திரம், ஸ்கிரிப்ட் அளிஸ்டெண்டாகச் சேர்ந்திருக்கும் அந்தப் புதிய பையனைப் பற்றி விசாரித்தபோது, புரொடக்ஷன் மானேஜர் பதறிப் போனார்.

“ஏன் கேட்கறீங்க மேடம்! அவன் உங்ககிட்ட ஏதாவது தப்பா நடந்துக்கிட்டானா?”

“நோ… நோ… அப்பிடியெல்லாம் ஒண்ணுமில்லே… ரொம்ப ‘ரிஸர்வ்ட் டைப்’ போல இருக்கு… எப்பவும் மூஞ்சியை ‘உம்’னு வச்சுக்கிட்டு…”

“பெரிய படிப்பாளி… ரொம்ப விஷயம் தெரிஞ்ச பையன்… வேற வேலை கிடைக்காததாலே நம்ப வசனகர்த்தா சாரிட்ட அசிஸ்டெண்டா சேர்ந்திருக்கான். கொஞ்ச நாள் எங்கியோ காலேஜ்லே புரொபஸராக் கூட இருந்தான். பழகத் தெரியாததுனாலே தான் அங்கேயும் தகராறு. சூதுவாது கள்ளங் கபடமில்லாமே – ஒளிவு மறைவு தெரியாம – மனசுலே பட்டதைப் பட்டுன்னு சொல்லிடவறங்க… எப்பிடி மேடம் முன்னுக்கு வரமுடியும்?”

“அவர் பேரு… என்ன?”

அந்தப் பையனை மேடம் ‘அவர்’ போட்டு அழைத்தது புரொடக்ஷன் மேனேஜருக்கு வியப்பை அளித்திருக்க வேண்டும்.

“நீங்க ‘அவன்’ னே சொல்லுங்க மேடம்; உங்க அனுபவத்துக்கும், ஃபீல்டு எக்ஸ்பீரியன்சுக்கும் முன்னாடி… அவன் பேரு அழகியநம்பி. இங்கே எல்லாரும் ‘நம்பீ’ன்னு கூப்பிடுவோம்…”

“ஒண்ணுமில்லே… சும்மாத்தான் விசாரிச்சேன்… அந்த ஆளு ஒரு மாதிரி எப்பவும் ‘மொரோஸா’ இருக்கிறதைப் பார்த்து யாருன்னு விசாரிக்கத் தோணிச்சு…”

“எதாச்சும் தப்புத் தண்டாவா நடந்துக்கிட்டா உடனே சொல்லுங்க… கணக்குத் தீர்த்து வீட்டுக்கு அனுப்பிச்சுடலாம் மேடம்!”

இது நடந்து நாலைந்து தினங்களுக்குப் பின், கோவளத்தில் ஓர் அவுட்டோர் ஷூட்டிங்கில் இடைவேளை ‘லஞ்ச்’ டயத்தின் போதும் முன்பு நடந்தது போலவே ஒரு சம்பவம் நடந்தது. விஜயநளினிக்கு வீட்டிலிருந்து சுடச்சுட மணக்க மணக்கப் பகலுணவு கேரியரில் வந்திருந்தது.

அதில் எல்லா முக்கிய அயிட்டங்களையும் – சிக்கன் ரோஸ்ட் உட்பட ஒரு பிளேட்டில் எடுத்து வைத்து, அவளே அந்த ஸ்கிரிப்ட் அஸிஸ்டெண்ட் நம்பியைக் கூப்பிட்டு, “எடுத்துக்குங்க… ப்ளீஸ்…” என்று புன்முறுவலோடு வேண்டினாள்.

கெஞ்சாத குறையாக இருந்தது அவளுடைய குரல். ஆனால் அவன் தான் கையோடு கொண்டு வந்திருந்த அலுமினியம் டிபன் டப்பாவைக் காண்பித்து, “நோ, தேங்க்ஸ், நான் கொண்டு வந்திருக்கேன்” என்று மறுத்து விட்டான்.

அவள் அப்படித் தனக்கு வந்த சாப்பட்டை, தங்களுக்கு அவள் கையாலேயே பகிர்ந்து கொடுக்க மாட்டாளா என்று தயாரிப்பாளரும் – டைரக்டரும் கூட ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தார்கள். அவனோ மறுத்துவிட்டான்!

“மேடம்! அவனுக்குக் குடுத்து வைக்கலே… இங்கே குடுங்க! நான் காத்துக்கிட்டிருக்கேன்…” என்று டைரக்டர் அந்தப் பிளேட்டைப் பவ்யமாகக் கைநீட்டி வாங்கிக் கொண்டு, அவள் அருகே அமர்ந்து சாப்பிடத் தொடங்கினார். அயிட்டங்களின் ருசியைப் பற்றிப் புகழ்மாலை சூட்டிய வண்ணமே உண்டு முடித்தார்.

அப்படிச் சாப்பிடும்போதும், சாப்பிட்டு முடித்த பின்பும் விஜயநளினி உதிர்த்த ஜோக்குகளுக்காக எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தனர். அந்தச் சிரிப்பு வெள்ளத்தில் அவன் மட்டும் ஒரு தனித் தீவாக அசையாமல் இருந்தான். தனியே பக்கத்தில் ஒரு மரத்தடியில் அமர்ந்து தீவிரமாக ஸ்கிரிப்டுகளை என்னவோ செய்து கொண்டிருந்தான்.

அவன் எங்கே என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதில் தவறாமல் ஒரு கண் வைத்திருந்த விஜயநளினி அந்தப் பக்கம் கையை நீட்டி, வசனகர்த்தாவிடம், “உங்க அஸிஸ்டெண்டுக்குக் காது கேட்குமா இல்லையா?” என்று குத்தலாக வினவினாள். 

3

“காதெல்லாம் நல்லாக் கேட்கும்! அதுலே ஒண்ணும் கோளாறு இல்லே… ஆள்தான் ஒரு மாதிரி. ரிஸர்வ்ட் டைப். கலகலன்னு பழக மாட்டான்… மெத்தப் படிச்ச மேதாவிகள்ளாம் அப்படித்தான் இருப்பாங்க போலிருக்கு!”

என்று வசனகர்த்தா, விஜயநளினிக்குச் சொல்லிய பதில் உட்பட எல்லாமே அவன் காதில் தெளிவாக விழுந்தும் அவன் அவர்களை – அவற்றைப் பொருட்படுத்தியதாகவே காட்டிக் கொள்ளவில்லை.

ஆனால் அவள் மனத்திலோ அவன் தான் இருந்தான். சுற்றி அருகிலமர்ந்து பேசிச் சிரித்துக் கொண்டிருந்த யாரும் அவளைப் பாதிக்கவே இல்லை. பேசாமலும் சிரிக்காமலும் ஒதுங்கியிருந்த அவன் தான் அவளைப் பாதித்து ஏங்க வைத்திருந்தான்…

எரிச்சல் எரிச்சலாக வந்தது அவளுக்கு. புரொடக்ஷன் மானேஜரிடம் சொல்லி ஒரே நிமிஷத்தில் அந்தத் திமிர் பிடித்தவனை வேலையிலிருந்து துரத்திவிட அவளால் முடியும். ஆனால் அதைச் செய்ய அவள் மனம் ஒப்பவில்லை. அந்த அழகிய இளைஞனை அவள் அழிக்க விரும்பவில்லை. ஜெயிக்கவே விரும்பினாள்.

ஒன்றை அழிப்பது வேறு; ஜெயிப்பது வேறு. அவனை ஜெயிப்பதிலுள்ள சந்தோஷம் அழிப்பதில் கிடைக்க முடியாது. ஒரு சிங்கத்தை அதற்குத் தெரியாமல் மறைந்திருந்து சுட்டு வீழ்த்தி அழிப்பதை விட – உயிரோடு பிடித்துக் கூண்டிலடைத்து ஜெயிப்பதும், ‘இதை நான் தான் ஜெயித்தேன்’ – என்று பலரறியப் பெருமிதப்படுவதுமே அதிக மரியாதைக்குரியவை. அவள் அந்த இளஞ்சிங்கத்தை அழிக்க விரும்புவதற்குப் பதில் ஜெயிக்கவே விரும்பினாள்.

சௌந்தரிய தேவதைபோல் தான் ஒருத்தி அங்கு இருப்பதை உடனிருக்கும் அத்தனை பேரும் உணர்ந்து, ஒப்புக் கொண்டு, மதித்துப் பயந்து பதறிக் கொண்டிருக்கும் போது – அவன் ஒருத்தன் மட்டும் அதை உணராமலும், ஏற்காமலும், பயப்படாமலும், பதறாமலும், பணியாமலும் இருந்தது அவளை என்னவோ செய்தது.

அவள் வேறு எதைப் பற்றியும், யாரைப் பற்றியுமே நினைக்காமல் அதைப் பற்றியும் – அவனைப் பற்றியுமே நினைத்துத் தவித்தாள். எவ்வளவோ முயன்றும் அவளால் அவனை மறக்க முடியவில்லை. மறக்க முயன்றாலும் அவன் தான் நினைவுக்கு வந்தான். அவனைத் தவிர வேறெதுவுமே நினைவில் இல்லை.

இரண்டு மூன்று நாட்கள் கழித்து ஓர் இன்டோர் ஷூட்டிங்கிற்காக, மேக்-அப் அனெக்ஸிலிருந்து செட்டுக்குள் நுழையும் குறுகலான இடைகழியில் அவள் அவனை நேருக்கு நேர் சந்தித்தாள். தற்செயலாக நேர்ந்த தவிர்க்க முடியாத அந்தச் சந்திப்பின் போது அவளும் தனியாயிருந்தாள், அவனும் தனியாயிருந்தான்.

அவனை ஜெயித்து மடக்கிப் போட இதுதான் சரியான சமயம் என்று அவளுக்குத் தோன்றியது. கொஞ்சம் துணிந்தே செயல்பட்டாள் அவள். கருந்திராட்சைக் குலைகளாகச் சுருண்டு மின்னிய அவன் தலையில் வலது கரத்தைக் கொடுத்து அளைந்தபடி, “மிஸ்டர் நம்பீ! உங்களுக்கு என் மேல் என்ன கோபம்?” – என்று இதமான கனிவான குரலில் கேட்டாள்.

அவளது அழகிய சண்பகப்பூ விரல்களைத் தன் தலையிலிருந்து விலக்கியபடி, “மிஸ் விஜயநளினி! இதெல்லாம் என்ன…? யாராவது பார்த்தால் தப்பாக நினைக்கப் போகிறார்கள்?” – என்று கடிந்து கொள்கிற குரலில் அவளைக் கேட்டான் அவன்.

“சொன்னால் தான் விடுவேன். சொல்லுங்க… என் மேல் உங்களுக்கு என்ன கோபம்?”

“எனக்கா? உங்க மேலேயா…? இதென்ன பைத்தியக்காரத்தனமான கேள்வி? உங்க மேலே கோபப்பட நான் யார்?”

“பின்னே ஏன் சிரிக்க மாட்டேங்கிறீங்க…?”

“நான் காரணமில்லாமச் சிரிக்கிறதில்லே… மத்தவங்க சிரிக்கிறப்ப ஒப்புக்காகக் கூடச் சேர்ந்து சிரிக்கிற வழக்கமும் எங்கிட்டக் கிடையாது. அதை நீங்க தப்பாப் புரிஞ்சிக்கக் கூடாது…”

“என்னோட ஜோக் அவ்வளவு சுமாராவா இருக்கு?” 

4

“உங்க ஜோக் மத்தவங்களுக்குப் பிரமாதமாகவே இருக்கலாம்…”

“உங்களுக்கு?…”

“எனக்கா…? ஐயாம் நான் ஸோ சீப்…” – என்று சொல்லத் தொடங்கி, வாக்கியத்தை முடிக்காமல் பாதியிலேயே நிறுத்தினான் அவன்.

“மத்தவங்க அத்தனை பேரும் சிரிக்கிறதும் பாராட்டறதும் எனக்குப் பெரிசாப் படலே. நீங்க சிரிக்காததும் பாராட்டாததும் தான் பெரிசா மனசை உறுத்துது…”

“இஸ் இட்…? ஐயாம் ஸோ ஸாரி மிஸ் விஜயநளினி!”

மற்றவர்களைப் போல் அவன் செயற்கையான மரியாதையை அளித்துத் தன்னை ‘மேடம்’ என்று கூப்பிடாமல் பேரைச் சொல்லியே கூப்பிட்டது, அப்போது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.

படப்பிடிப்பிற்காக மேக்-அப் அனெக்ஸிலிருந்து அவள் செட்டுக்குள் நுழைந்தாள். சிறிது நேரத்தில் அவனும் அதே செட்டுக்குள் ஸ்கிரிப்ட் கத்தைகளுடன் வந்தான்.

படப்பிடிப்பு நிற்காமல் தொடர்ந்து பகல் ஒரு மணி வரை நடந்து கொண்டிருந்தது. சோக உணர்ச்சி நிறைந்த சில கட்டங்களை அன்று எடுக்க வேண்டியிருந்தது. விஜயநளினி பிரமாதமாக நடித்தாள். ஷாட் எல்லாம் கச்சிதமாக ஓ.கே. ஆயின.

‘செட்’டில் இருந்தவர்கள் மூக்கில் விரலை வைத்து ஆச்சரியப்படும் வண்ணம் அற்புதமாகத் தன் திறனை வெளிப்படுத்தினாள் சூப்பர் ஸ்டார் விஜயநளினி. ஒன்றரை மணிக்குமேல் பகல் உணவு இடைவேளைக்காக வழக்கம் போல் ஷூட்டிங் நின்றது. எல்லாரும் கும்பல் கும்பலாகச் சாப்பாட்டுக்குப் பிரிந்து போனார்கள்.

விஜயநளினி, டைரக்டர், தயாரிப்பாளர், வசனகர்த்தா அவரது உதவியாளனான நம்பி என்ற அந்த இளைஞன், ஆகியோர் மட்டும் எஞ்சினார்கள். தன்னுடைய டிபன் டப்பாவை எடுத்துக் கொண்டு வெளியே புறப்பட இருந்த நம்பியை அவள் கவனித்து விட்டாள்.

“மிஸ்டர் நம்பீ! எங்கே கிளம்பிட்டீங்க…? சும்மா இங்கேயே உட்கார்ந்து சாப்பிடுங்க…” – என்று அவனுக்காகத் தானே ஒரு மடக்கு நாற்காலியை எடுத்து விரித்துப் போட்டாள்.

ஏற்கனவே நொந்து போயிருக்கும் அவள் மனத்தை மேலும் நோகச் செய்யக்கூடாது என்று கருதியோ என்னவோ, அவன் மறுக்காமல் அந்த நாற்காலியில் அமர்ந்தான்.

எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது தயாரிப்பாளர், “சாப்பாட்டை விட உங்க ஜோக்ஸ்தான் ரொம்ப சுவையா இருக்கும். எங்கே… தொடங்குங்க… பார்க்கலாம்…” என்று ஆரம்பித்தார்.

எல்லாரும் அதை ஒப்புக்கொண்டு வரவேற்பது போல் சிரித்தார்கள். அவள் ஓரக்கண்களால் அவன் பக்கம் பார்த்தாள். அவன் சிரிக்கவில்லை.

வேண்டா வெறுப்பாகத் தட்டுத் தடுமாறி எதையோ சொல்லத் தொடங்கி, “மன்னிச்சுக்குங்க! ஜோக் எதுவும் வரலே…” என்று அவள் ஆற்றாமையோடு முடித்தாள்.

அதற்குப் பதிலாகத் தயாரிப்பாளர் ஏதோ ஜோக் அடித்தார். அதற்கு எல்லாரும் சிரித்தார்கள். அவளுக்குச் சிரிக்க வரவில்லை. அவன் சிரிக்கவில்லை.

“சோக நடிப்பினாலே மேடத்துக்கு இன்னிக்கு ‘மூட்’ அவுட்டாயிடிச்சு!” – என்றார் தயாரிப்பாளர். சொல்லிவிட்டு அவளைக் கேட்காமலே பிற்பகல் ‘ஷெட்யூல்’களையும் ரத்து செய்தார். ‘செட்’டிலிருந்து காருக்குச் சென்ற போது அவள் அந்த இளைஞனின் அருகே சென்று மலர்ந்த முகத்தோடு ஒரு நாளுமில்லாத புதுவழக்கமாகப் “போய் வருகிறேன்!” என்று சொல்லிக் கொண்டாள்.

அவனை அழிக்கவும் முடியாமல், ஜெயிக்கவும் இயலாமல், தானே அவனுக்குத் தோற்றுப் போயிருப்பதை இப்போது அவள் தனக்குத் தானே அந்தரங்கமாக உணர்ந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *