ஆர்வலருக்கு இல்லை அடைக்குந் தாழ்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 9,997 
 

உறக்கத்தின் கைப்பொருள் போல இருள் மெள்ள நழுவியது. உதயம் எழுந்தது. புதுச் சூரியனின் புது ஒளி எங்கும் பரவிய காலை நேரத்தில் கண் விழித்த அழகர்ராஜாவுக்கு, தனது நண்பனின் ஊரில் படுத்திருப்பது நினைவில் தட்டியதும், திருப்தியாக இருந்தது. உண்மையில் தனது ஊரில் படுத்து எழ நேர்கிற காலைகளில்தான் அழகர் திடுக்கிடுவார். ஒரே கூரை முகட்டைப் பார்த் துக்கொண்டு படுத்திருப்பதற்காக மனித உயிர் படைக்கப்படவில்லை என்பது அவரது எண்ணம்.

நண்பன் தங்கதுரை பாலக்காட்டில் இருந்து வருவதைக் கேள்விப்பட்டதும், நேற்று மாலை சீலையம்பட்டியில் பேருந்து ஏறி, தேனி மார்க்கமாக ஆண்டிபட்டி வந்து, ஜம்புலிபுத்தூர் வந்துவிட்டார். பருத்தி மூட்டையைப் பிரித்துக் கொட்டிய தோற்றத்தில் விதவிதமாக வடிவம் காட்டியவாறு அமர்வதாக அந்த ஷேர் ஆட்டோ பயணம் அமைந்திருந்தது. நட்புக்காக நசுங்குவதற்கு அழகர் அஞ்சுவது இல்லை.

இரவு… அழகர், தங்கதுரை, அவனது நண்பன் அருள்முருகன் மூன்று பேரும் பேசிக்கொண்டு இருந்தார்கள். காலையில் வெள்ளென எழுந்துவிடுவது என்கிற ஒப்பந்தத்துடன் அழகர், தங்கதுரையின் வீட்டில் படுத்துவிட்டார். தங்கதுரையோ அருள்முருகனோடு அவனது அறையில் ராத் தங்கப் போனான்.

தூக்கத்தில் இருந்து விழித்த அழகரிடம் தங்கதுரையின் அம்மா பால் இல்லாத காபியை நீட்டினார். குளியல் முடிந்து கைலிக்குப் பதிலாக வெள்ளை வேட்டியைக் கட்டியதுமே, புதிய இடம் பார்க்கப் போவதற்கான பரபரப்பு உடலில் எழவும், ஏறவும் ஆரம்பித்தது.

தங்கதுரையைப் பார்க்கப் புறப்பட்டார். அருள்முருகனின் அறை என்பது ஊர்க்கோடி. ஏதாவது பருவங்களில் மாதம் அறுபதிலிருந்து நூறு ரூபாய் வரை வாடகைக்கு விடுவார்கள். மற்றைய

நாட்களில் அருள்முருகன் தலைமையில் அறை, இளைஞர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். சில எல்லைகளை மீறாமல் இள வட்டங்கள் அறையைப் பயன்படுத்துவதால் அறையை மன்னித்து அருளுகிறார் அருளின் அப்பா. சீட்டாட்டங்களில் ஃபுல்லுக்கு 20 ரூபாய்க்கு மேல் பந்தயம் கட்டுவதில்லை. இரண்டு பயலுகள் சேர்ந்து ஃபுல்லுக்கு மேல் குடிப்பதில்லை. கோழிக்குழம்பு, முட்டைப் புரோட்டா சாப்பிடுகிற நாட்களுக்கு மறுநாள் அறையைக் கூட்டிவிடுகிறார்கள். சமயங்களில் ஊதுபத்திகூட ஏற்றுகிறார்கள். முக்கியமாக பெண் வாடை அடிக்காமல் அந்த அறையில் கன்னிகாத்து வருகிறார்கள். பிறகென்ன… போனால் போகிறது என விட வேண்டியதுதான்!

அழகர், அருள்முருகனின் அறைக்குள் நுழையக் கதவைத் திறந்ததுமே, கப்பென்று காட்டமான ஒரு காற்று கிளம்பி வெளியே போயிற்று. துர் ஆவிகள் வெளியேறட்டும் என்பது மாதிரி மின்விசிறியைப் போட்டுவிட்ட அழகர், எரிந்துகொண்டு இருந்த மின்விளக்கை அணைத்தார். ‘அரை’ பாட்டில் ஒன்று காலியாகி இருந்தது. அதிலிருந்து ஒரு அடி தள்ளி ‘கால்’ பாட்டில் ஒன்று அரை பாகம் காலியான நிலையில் இருந்தது. ராணுவத் தளகர்த்தர் போல ஒலிக்கும் மதகுருவின் பெயர் தாங்கியிருந்தது அந்தக் குடி வகை. பயல்கள் இன்னும் எழாமல் இருப்பதற்கான காரணம் புரிந்துபோயிற்று அழகருக்கு.

தங்கதுரை இடுப்பு வேட்டியையே போர்வை ஆக்கியிருந்தான். புரோட்டா பார்சல் பிரிக்கப்பட்டுஇருந்தது. சாப்பிடுவதற்கான எத் தனம் நடந்திருக்கக்கூடும். குருமா பொட்டலம் பிரிக்கப்படாமல் பலூன் விம்மலுடன் கிடந்தது. இடைப்பட்ட புள்ளியில் தோற்று வெறும் வயிற்றுடன் படுத்திருக்கிறான்கள் பாவிகள்!

பல நாட்களில், தங்கதுரை பாலக்காட்டில் இருந்து புறப்படுவதாகச் சேதி கேட்டதும் அவனுக்கு முன்னமே வந்து ஜம்புலிபுத்தூரில் காத்திருந்து வரவேற்றிருக்கிறார் அழகர். தங்கதுரைக்கு பாலக்காட்டில் வட்டிக்கு விட்டு துட்டுப் பிரிக்கிற வேலை. ஆனால், அவனும் அழகரும் சேர்ந்தால் உன்னதமான, உலகப் பெரிய விஷயங்களைத்தான் உரையாடுவார்கள். மூலிகை ராமர், அகலிகை ராமர், பாலங்கள், பவனிகள், ஆட்சிக் கவிழ்ப்பு, வானொலிச் செய்திகள் எல்லாவற்றின் மீதும் உரையாடுவார்கள். பல விஷயங்களில் ஒரே மாதிரி கருத்து வைத்திருந்தார்கள். கருத்து மாறுபடுகிற நிலையிலும், ‘சரி… அவரவருக்கு அவரவர் கருத்து’ என சுமுகமாக விட்டுக்கொடுத்து உரையாடுவார்கள். அதனால் அவர்களை ஒருவருக்கு ஒருவர் பிடிக்கும்.

நேற்று சீலையம்பட்டியில் அழகர் கிளம்பும்போது தங்கதுரையைப் பார்த்துவிட்டு, இரவே ஊர் திரும்பிவிடுவதான எண்ணத்தில் இருந்தார். மனைவி, ‘‘லேட் பண்ணாம திரும்பிருங்க!’’ என்று சொன்னாலும், பொதுவாக அழகரது மீள் வருகையை அவள் எதிர்பார்ப்பதில்லை.

அழகரைப் பார்த்ததும் அகமிக மகிழ்ந்தான் தங்கதுரை. ‘20-க்கு 20’ கிரிக்கெட் மேட்ச்சுகள் சின்னப்புள்ளத்தனமான பல விளைவுகளை ஏற்படுத்தும் என்கிற தீர்க்கதரிசனத்தை அழகர் உரைத்துக்கொண்டு இருந்தபோது தங்கதுரை, ‘‘நம்ம வரதராஜனுக்குக் கல்யாணம் ஆயிடுச்சு தெரியுமா?’’ என்றான்.

‘‘அப்படியா?!’’ எனத் திகைப்பைக் காட்டினார் அழகர். தங்கதுரையின் நண்பன் வரதராஜனுக்குப் பெண் பார்த் துக் கொடுக்கலாம் என்கிற எண்ணம் மனப்பூர்வமாக அவருக்கு இருந்தது. அவனைச் சந்தித்த இரண்டு மூன்று சந்திப்புகளிலேயே நல்ல பையன் என்கிற முடிவுக்கும் வந்திருந்தார்.

‘‘என்ன திடீர்னு?’’

‘‘கல்யாணம் முடிஞ்சுதான் எனக்கே சொன்னான். மதுரைல சியாமளானு ஒரு பொண்ணு. போன புதன்கிழமை திருப் பரங்குன்றத்துல முடிஞ்சுது. வீட்டுல வந்து சொன்னதும், ஆண்டிபட்டில ரிசப்ஷன் ஏற்பாடு பண்ணியிருக்காங்க.’’

வரதராஜன், ரங்கசமுத்திரத்துக்காரன். மதுரையில் சில ஆயிரம் ரூபாய்கள் சம்பளத்தில் இன்ஷ¨ரன்ஸ் கம்பெனி ஒன்றில் வேலை. ஜெராக்ஸ் எடுத்துக்கொடுப்பதும், ரீ-சார்ஜ் கார்டுகள் விற்பதுமான ஒரு எஸ்.டீ.டி. பூத்தை நிர்வகித்து வந்த சியாமளாவைப் பார்த்ததும் பிடித்துப்போய்விட்டது. இது கொஞ்சம் சுமாராக இருக்கிற எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் நடைபெறக்கூடியதே! ‘‘ஏ.ஆர்.ரஹ்மானை உங்களுக்குப் பிடிக் குமா?’’ என்பது மாதிரி சகஜமாக ஆரம் பித்தது உரையாடல். ஒரு பெண்ணுக்கு ஓர் இசையமைப்பாளரைப் பிடிக்கிறது என்றால், ஓர் இளைஞன் அதை மறுப் பதற்கு ஏதுமில்லை. நாணயத்துக்கு வேண்டுமானால், இரண்டு பக்கங்கள் இருக்கலாம். காதல் ஆர்மோனியத்துக்கு ஒரே பக்கம் மட்டும்! கறுப்பானாலும் வெள்ளையானாலும் ஒரே நிரலில்தான்.

மாப்பிள்ளை விநாயகரில் ஆங்கிலப் படங்கள், பத்துத் தூண் சந்தில் ஜவுளிக் கடைகள், பொற்றாமரைக் குளத்துப் படிகள், தட்டுவடைகள் எனச் சக்திக்கு உடபட்டவரை, கைகோக்காமல் ஊர் சுற்றினர். கைகோத்து நடப்பதை மதுரை அனுமதிப்பதில்லை. குறைந்தபட்சம் விரும்புவதில்லை. மதுரையின் குன்றாப் புகழுடைய மல்லிகைப் பூக்களை வரது அடிக்கடி வாங்கி அவளுக்குச் சூட்டி னான். அவள் கல்லாய்க் கிடந்து பூவாகி ரெண்டாம் முறை ஆளானாள்.

காதலை அவள் வீட்டில் சொல் லிச் சம்மதம் வாங்கினாள். வரதரா ஜனது வீட்டில் வானத்துக்கும் பூமிக் கும் குதிக்க முடியாததால், நிலத்தை அதிர மிதித்தார்கள். அவர்களுக்குக் கோபமான கோபம். ‘உன்னையெல்லாம் படிக்க வெச்சிருக்கக் கூடாது’ எனத் தொடங்கிய வசவுகள், ‘உன்னையெல்லாம் பெத்தே இருக்கக் கூடாது’ என்பதில் வந்து நின்றன.

இந்த ஜோடியின் காதலில் பார்வையாள நண்பனாக தங்க துரைக்கெல்லாம் இடமிருந்தது. காதல் உருப்பெறுகிறது என்பதை அறிந்த பிறகு தங்கதுரை, வரதராஜனின் பெற்றோரைப் போய் பார்த்து வருவதைத் தவிர்த்தான். வரதராஜனும் தன் வீட்டில் அனுமதிக்கான சாத்தியங்கள் கனிந்து வருவதான தகவலையும் கூட தெரிவித்து இருந்தான். இடையில் என்ன நடந் ததோ தெரியவில்லை… திடீரென ஒரு அலைபேசித் தகவலில் திருப்பரங்குன்றத்தில் வைத்துத் தாலி கட்டிவிட்டான்.

திருப்பரங்குன்றத்தில் இருந்து செக்கானம் வந்துவிட்டு, பிறகு அதே சாலையில் ஆண்டிபட்டி வந்து ரங்கசமுத்திரம் வந்ததால் மணமக்கள் மாலையும் கழுத்துமாக வரவில்லை. வெறுங்கழுத்துடன் வந்தார்கள். ஆனால், புது மணத்தின் மஞ்சள் குறிகள் உடையிலும் உடலிலும் இருந்தன. இப்போதும் வரதனின் பெற்றோரால் வானுக்கும் பூமிக்கும் குதிக்க முடியவில்லை. கடைசியில் நான்கே நாட்களில் ஆண்டிபட்டியில் ஒரு வரவேற்பு என ஏற்பாடாயிற்று.

வரதராஜனின் அம்மா மகனோடு முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்ட வர் மருமகளுடன் பேச ஆரம்பித்தார். சூத்திரதாரிகள் சூத்திரதாரிகளை அறிவார்கள்.

தங்கதுரை, ‘‘நாளைக்கு ரிசப்ஷனுக்கு நீங்களும் வர்றீங்களா?’’ என்று கேட்டதும், அழகர் ‘‘அதுக்கென்ன… உன் நண்பர் எனக்கும் நண்பர். டைம் இல்லாததனால நமக்கெல்லாம் கொடுக்காம விட்டிருப்பாரு. அவசியம் போகலாம்’’ என்று மகிழ்ச்சியாகச் சம்மதித்தார்.

‘‘மேரேஜுக்கு முந்தின நைட் எனக்கு 11 மணி வாக்குல போன் பண்ணிருக்கான். நான் எடுக்காம போயிட்டேன். நாளைக்காவது நேரமே போகணும்!’’

‘‘ரிசப்ஷன் டைம் என்ன?’’

‘‘அது மத்தியானம் பன்னண்டுல இருந்து சாயங்காலம் அஞ்சு மணி வரைக்கும் வெச்சிருக்காங்க. ஆனா, நாம முன்னாடியே போயிடணும்ல?’’

‘‘ஆமா, போயிடலாம்! என்ன மண்டபத்துல…?’’

‘‘அது… அவன் குடுத்துட்டுப் போன பத்திரிகை இங்கதான் எங்கேயோ கிடக்குது. காலைல தேடி எடுத்துப் பார்த்துக்கலாம்!’’ கடைசியாக இதைச் சொன்ன தங்கதுரை, அருள் முருகனின் அறைக்குப் போனான்.

காலையில் இந்தக் கோலத்தில் கிடந்த இருவரையும் பார்த்த அழகர், ‘சரி, மெதுவாகத் தெளிந்த பிறகு, கிளம்பி ஆண்டிபட்டி வந்து சேரட்டும். நாம முன்னால் போவோம்’ எனத் தீர்மானித்து தங்கதுரையின் தாயாரிடம்,. ‘‘அம்மா… நான் முன்னாடி போறேன். தங்கம் முழிச்சா பின்னாடி வரச் சொல்லுங்கம்மா!’’ என்று சொல்லிவிட்டு, ஆண்டிபட்டிக்கு ஒரு போக்கு ஆட்டோவைப் பிடித்தார்.

ஆண்டிபட்டி பேருந்து நிலையத்துக்குப் பக்கத்தில் இறங்கியபோது, மணி ஒன்பது. அப்போதுதான் வரவேற்பு வைபவம் நடைபெறுகிற மண்டபத்தின் பெயர் தனக்குத் தெரியவில்லை என்பது நினைவுக்கு வந்தது. தங்கதுரைக்கு தொலைபேசிக் கேட்கும் வாய்ப்பு உண்டென்றாலும், இம்முறை அவன் செல்போனை பாலக்காட்டிலேயே மறந்துவிட்டு வந்திருந்தான்.

தேடிக் கண்டுபிடித்துவிடலாம். ஆண்டிபட்டி என்ன பெரிய லண்டனா?

அதிர்ஷ்டத்தைச் சோதிக்க முடிவெடுத்து, முதலில் ஆர்த்தி திருமண மண்டபத்துக்குப் போனார் அழகர். அங்கே எந்த வைபவம் நடப்பதற்கான அறிகுறிகளும் தெரியவில்லை. அடுத்து அங்கேயே, ‘வேறு மண்டபம் எங்கே இருக்கிறது?’ எனக் கேட்டதற்கு, வாசவி மகாலுக்கு வழி சொன்னார் ஒருவர். அங்கே முகப்பில் மணமக்கள் பெயர்கள் வேறாகக் குறித்திருக்க, அழகருக்குக் கால் நோவு அதிகரிக்கத் தொடங்கியது. கார் அல்லது வேன் ஸ்டாண்ட் பக்கம் வந்து விசாரிப்பது உத்தமம் எனப் போய் விசாரித்தார். கனகச்சிதமான பொறி அங்கே தட்டியது. ஆண்டிபட்டியில் உள்ள மற்ற எல்லா மண்டபங்களின் பெயர்களையும் ஒருவன் ஒப்பித்தான். அத்தனையும் பெயர் சொன்னால் போதும், சாதி எளிதில் விளங்கும் மண்டபங்கள். தனது புத்திசாலித்தனத்தைத் தானே வியந்த அழகர், அடுத்த ஆறாவது நிமிடம் மண்டப முகப்பில் இருந்தார். நேரம் அப்போது காலை 10 மணி.

புத்திசாலித்தனங்கள் முன்கூட்டியே செயல்படுகிறபோது ஏற்படுகிற விபரீ தங்கள் சில உள! அன்றைக்கு அது அழகருக்கு நிகழ்ந்தது. மண்டபத்தில் சமையல்காரர்கள் தவிர, எட்டுப் பத்துப் பேர்களே காணப்பட்டார்கள். பெண்ணும் பையனும் இன்னும் வந்திருக்கவில்லை. ஜம்புலிபுத்தூரி லேயே இன்னும் கொஞ்ச நேரம் இருந்து தங்கதுரையையும் கூட்டி வந்திருக்கலாமோ என அவர் யோசித்தபோதே, வயிற்றில் பசி பானகம் கரைத்தது. பசியை உணர்ந்ததும் ஏற்படும் முக வாட்டத்துடன் அரங்கத்தின் முகப்புக்குள் நுழைந்தார் அழகர்.

வரதராஜனின் அம்மா, ‘பையனுக்கு ரகசியமாகக் கல்யாணம் செய்துவைத்த பாவிகள் கோஷ்டியரில் இவனும் ஒருவனா?’ என்பது மாதிரி பார்த்தார். அவர் சக்தி ரூபமாக முறைத்துக்கொண்டு இருக்க, அப்பா ‘சிவனே’ என நின்றிருந்தார். ‘வர்றவய்ங்க தனித்தனியாக் கூட்டிப்போய் கேள்வி கேட்டு உசுர எடுப்பாய்ங்களே!’ என்பது அவரது கவலையாக இருந்தது. அவரது பங்காளியாகப்பட்ட ஒருவர்தான் அழகரை நோக்கி அம்பெனப் பாய்ந்து வந்தார்.

‘‘தம்பி, எங்கிருந்து வர்றீங்க?’’

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல அழகர் குழம்பிவிட்டார். ஜம்புலிபுத்தூர் என்று சொல்வதா அல்லது சீலையம்பட்டியில் இருந்து வருகிறேன் என்று சொல்வதா என்பதே குழப்பம். இந்த மாதிரி குழப்பம் முற்றுகிறபோதுதான் ஒரு ஆள், ‘கருவறையில் இருந்து வரு கிறேன்’ என்றெல்லாம் பதில் சொல்ல நேர்வது. அழகரின் குழப்பமான அமைதி, பங்காளியைக் கோபம்கொள்ளச் செய்தது. விவேகம் தடுத்தது. திருமண வீட்டில் திண்ணக்கமாகப் பேசி, கடைசியில் திண்டாடிவிடக் கூடாது என்கிற விவரத்தோடு, ‘‘உங்கள யாருன்னு தெரியலியே..!’’ என்றார். அழகர் சுதாரித்து, ‘‘நான் வரதராஜு ஃப்ரெண்டுதானுங்க. சீலையம்பட்டில இருந்து வர்றேன். நைட்டு ஜம்புலிபுத் தூர்ல தங்கதுரை இப்படின்னு விவரஞ் சொன்னாப்டி! அதான் வந்தேன்’’ என்றார்.

மாப்பிள்ளையின் நண்பர் என்றதும், மேலதிகக் கேள்விகள் கேட்காமல் ‘‘வாங்க… உட்காருங்க!’’ என்று நாற்காலிகளைக் காட்டினார். அவர் காட்டிய பரப்புக்கு 60 பேர் அமரலாம். ஆனால், அழகருக்கு ஒரு நாற்காலியே மிக அதிகம் என்று தோன்றியது.

அழகர்ராஜா அமரச் செல்வதற்கு வாகாக ஒரு நாற்காலி வரிசை நிரம்ப ஆரம்பித்தது. காபி தந்து உபசரிக்க வந்த ஒரு பெண் அழகருக்குக் காபி கொடுப்பதைத் தவிர்த்துவிட்டு, அடுத்த ஆளுக்குத் தந்து சென்றாள். ஏதேனும் ஆன்மிக ஆற்றல் இங்கே செயல்படுகிறதா அல்லது பத்திரிகை இல்லாமல் வந்தது தவறா என எண்ணமிட ஆரம்பித்தார். பசி அதிகரிக்க ஆரம்பித்திருந்தது.

நல்லவேளையாக போதை தெளிந்து பாதை தெரிந்து அருள்முருகனும் தங்கதுரையும் வந்து சேர்ந்தனர். அதற்குள் பெண்ணும் பையனும் ஜோடியாக வந்து, அலங்கரிக்கப்பட்ட பரப்புக்குள் நின்று, பரிசுப்பொருட்களைக் குவிக்க ஆரம்பித்தனர். புகைப் பட, சலனப்படக் கலைஞர்களால் தற்காலிக மின்னல்கள் உற்பத்தி செய்யப்பட்டவாறு இருந்தன.

தங்கதுரை வந்து சிறிது நேரம் அழகருடன் உட்கார்ந்திருந்தான். அப்போது தேடி நாடி வந்த சுபாஷ் சங்கரை, அழகர் ராஜாவுக்கு அறிமுகம் செய்துவைத்துவிட்டு, வரதராஜனைப் பார்க்கப் போனான். அப்புறம் பெரும்பாலும் வரதராஜனுடனே நின்று கொண்டிருந்தான். அவனது பெற்றோர்களைச் சந்திக்கத் தயங்குகிற தந்திரமும் அதில் இருந்தது.

அழகரிடம் சுபாஷ் சங்கர் பேச ஆரம்பித்தான். அவன் வரும்போதே தரையடி உயரத்திலிருந்து அரை அடி மேலாகத்தான் நீந்தி வந்தான். மது போதை காரணமல்ல; ஞான இயல்பும் தியான இயல்பும் அவனை அப்படிக் கூட்டிவைத்திருந்தன.

‘‘உங்க பேரே வித்தியாசமா இருக் குது..’’ என்ற அழகரிடம், ‘‘அது வந்துண்ணே… எம் பேரு சுபாஷ் சந்திர போஸ். பத்து வருஷத்துக்கு முன்னா டியே வாழும் கலைல சேர்ந்து பேர இப்படி வெச்சுக்கிட்டேன்.’’

இருவரும் அரை மணி நேரத்துக்கு மேலாகப் பேசிக்கொண்டு இருந்தனர். சுபாஷ், ‘அன்பு செய்தல், அன்பு செய்தல்’ என்றே பேசிக்கொண்டு இருந்தான். அழகர், ‘அணுவின் ஈனுலைகள், அழியும் கானுயிர்கள்’ எனப் பேசிக்கொண்டே இருந்தார். இடையில் சுபாஷ§க்கு அலைபேசி வர, எடுத்துப் பேசி முடித்தவன் கடைசியாக, ‘ஜெய் குரு!’ எனப் போனை கட் செய்தான். எதிர் முனையில் இன்னுமொரு வாழும் கலைஞன் போலிருக்கிறது. அழகரின் மனத்திரையில் சுபாஷின் பெயரோடு இணைந்து ‘ஜெய் ஹிந்த்… ஜெய் குரு’ என ஓடியது.

சுபாஷ், வரதராஜனுடன் போன ஆண்டு வரை வேலை பார்த்தவன். ஏத்தக்கோவில் ஊர்க்காரன். இப்போது கம்பெனி மாறி, காசு ஏறி, கோயமுத்தூருக்குப் போய்விட்டான்.

கையிலிருந்த பொக்கேவை அழகரி டம் காட்டி, ‘‘இதைக் கொடுத்துட்டு வந்துடுவோம் வாங்க!’’ என அழைத் தான் சுபாஷ். அவனது பின்னால் அழகர் சென்றார்.

சுபாஷ் நேராக வரதுவின் அப்பா- அம்மா நிற்கும் இடத்தைத் தேடிச் சென்று, கண்ணாடித்தாளால் மூடப்பட்ட பூவலங்காரத்தை அவர்களிடம் நீட்டினான்.

‘அவனைத்தான் அடிக்கடி பார்க்கிறேனே! உங்களைப் பார்க்கத்தான் இந்த ரிசப்ஷனுக்கே வந்தேன். என்ன இருந்தாலும், வாழ்த்துற மனசுதானே பெரியவங்களுக்கு! உங்களுக்கு என் னோட மரியாதையைத் தெரிவிச்சுக் கறதுக்குத்தான் இந்த எளிய பரிசு!’ என்கிற அர்த்தத்தில் நீளமாகப் பேசியவன், இருவரையும் அருகருகே நிற்கவைத்து அந்த மலர்க்கொத்தை வழங்கினான். அவர்களது வாழ்க்கை வரலாற்றில், வெல்வெட் ரிப்பனால் கட்டப் பட்ட அந்த மலர்க்கொத்து அபூர்வம். முன்னும் பின்னும் இல்லாதது. இருவரது முழங்கால் அளவுக்கு சுபாஷ் முழங்கையைத் தாழ்த்தி பிறகு எழுந்தான். தனது வலது உள்ளங்கையால் மூக்குக்கு வலது பாகத்தும், இடது கையால் இடது பாகத்தும் நாட்டிய லாகவத்துடன் முகத்தைத் துடைத்துக்கொண்டு தேஜஸ்வரூபனாக நின்றான்.

வரதராஜனின் அம்மா, சுபாஷின் தோளைப் பிடித்துக்கொண்டார். அழகரைக் கேள்வி கேட்ட பங்காளி திடீரெனப் பிரத்யட்சமாகி, ‘‘வாங்க வாங்க… ரெண்டு பேரும் சாப்பிடுங்க முதல்ல’’ என சாப்பாட்டு அரங்கம் நோக்கி உள்ளன்போடு உந்தித் தள்ளி னார்.

ஆண்டிபட்டி பேருந்து நிலையத் தில் தங்கதுரையும் அழகரும் நின்றிருந் தனர். அழகரைப் பேருந்து ஏற்றிவிடு வதற்காக தங்கதுரை நின்றிருந்தான்.

‘‘முன்னாடியே கிளம்பி வந்திட்டீங்களே… ஒண்ணும் கஷ்டம்லாம் ஆகலியே?’’ என்றான் தங்கதுரை. அழகர் தலை அசைத்து மறுத்தார்.

‘‘அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க தங்கம்! அடுத்த மாசம் சுபாஷ் சங்கருக்கு கல்யாணம்னு சொன்னாரு. எந்த ஊருல நடந்தாலும் நாம போறம்’’ என்றார்.

– நவம்பர் 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *