அப்புசாமி குட்டிக் கதைகள்

1
கதையாசிரியர்: , ,
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 25, 2012
பார்வையிட்டோர்: 25,959 
 

அப்புசாமி பாத்ரூம் விளக்கை மறந்துபோய் அணைக்காமல் வந்து விட்டார். மனைவி சீதே கோபமாக பாத்ரூம் பல்பை கழற்றிவிட்டாள். மறுதினம் அப்புசாமி தெரு வாசலில் குளிக்கத் தொடங்கினார். காரணம் கேட்டவர்களுக்கு, ”அவளால் சூரியனைக் கழற்றி எறிய முடியாதே” என்றார்.

====================

ஓட்டலுக்குச் சென்ற அப்புசாமி வெயிட்டரைக் கூப்பிட்டு, ஓரொரு பலகாரத்தின் விலையையும் விசாரித்தார். பிறகு மூணு இட்லி, இரண்டு வடை, ஒரு தோசை, ஒரு காப்பி சாப்பிடுவதானால் எவ்வளவு பணம் வேண்டியிருக்கும்?” என்றார்.

வெயிட்டர் சொன்னான் அப்புசாமி எழுந்து கொண்டார். ”நீ பிரயோசனமில்லை. கணக்கில் வீக்கான சப்ளையராக நான் தேடிக் கொண்டிருக்கிறேன்,” என்று வெளியேறினார்.

====================

அப்புசாமி காலையில் ஏழு மணி ஆகியும் எழுந்திருக்கவில்லை. அவர் மனைவி சீதா

”நீங்களே காப்பி போட்டுக் கொள்ளுங்கள்” என்று ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டுப் போய் விட்டாள்.

மனைவி திரும்பி வந்து பார்த்தபோது அப்புசாமி முழுச் சமையலே செய்து வைத்திருந்தார். மேடையில் ஒரு கடிதம் காணப்பட்டது. ‘காப்பிப்பொடி, சர்க்கரை, பால் இல்லாமல் காப்பி போடுவதை விடச் சமையல் செய்வது சுலபமாக இருந்தது.’

====================

அப்புசாமிக்கு அவசரமாகக் கொஞ்சம் பணம் தேவைப்பட்டது. பக்கத்து வீட்டுக்காரரிடம் போய்த் தலையைச் சொறிந்தார் : ”என்ன விஷயம்?” என்றார்.

”சீக்கிரம் கடனாகப் பத்து ரூபாய் கொடுத்து என்னை அனுப்பி விடுங்கள். இல்லாவிட்டால் நிறையப் பொடுகு உங்கள் வீட்டில் பரவிவிடும்,” என்றார் அப்புசாமி.

====================

அப்புசாமி தனக்கு ஏதோ ஒரு லாட்டரியில் கோடி ரூபாய் பரிசு விழுந்ததாக நடுராத்திரியில் கனவு கண்டார். கண்ணை மூடிக்கொண்டே மனைவியை உடனே எழுப்பினார். ”சீதே!

சீதே! சீக்கிரம் என்னை நம்பி நூறு ரூபாய் கொடு! நான் இப்போ கோடீஸ்வரன்… சீக்கிரம். சீக்கிரம்… நான் கண்ணைத் திறப்பதற்கு முன் கொடு,” என்றார்.

====================

ஒரு கல்யாண ரிஸப்ஷனுக்கு அப்புசாமி போயிருந்தார். நேராக விருந்து மண்டபத்துக்குப் போய்விட்டார். இன்னும் அங்கே இலை மட்டும் போட்டிருந்தார்கள். பரிமாறவில்லை.

”கொஞ்சம் டைம் ஆகுமே,” என்றார் சமையல்காரர். அப்புசாமி உடனே ”நான் மாப்பிள்ளையின் தாத்தா! மரியாதை தெரியாதவராயிருக்கீங்களே. உடனே போடுங்கள்” என்றார் வேகமாக.

சமையல்காரர் : ”இது சதாபிஷேகக் கல்யாணம். மாப்பிள்ளைக்கு எண்பது வயசு முடிகிறது. அவருக்கு நீங்கள் தாத்தாவாக இருக்க முடியாதே,” என்றார்.

”சரி, பேரன் என்று வைத்துக் கொண்டுதான் சாப்பாடு பரிமாறுங்களேன்” என்றார் அப்புசாமி.

====================

”சீதே! மறந்துவிடாதே. நாளைக்கு எனக்குப் பிறந்த நாள். கேக் கூட வாங்கியாகிவிட்டது…. என்றார் அப்புசாமி. மனைவி சீதாப்பாட்டி ”என்னைக் கேட்காமல் ஏன் பிறந்த நாள் விழா” என்றாள்.

அப்புசாமி நிதானமாக ”நான் பிறந்ததே உன்னைக் கேட்டுக் கொள்ளாமல்தானே?” என்றார்.

====================

குழாங்கிப்பேர்காரனை அவசரமாகக் கூட்டி வரச் சொன்னாள் மனைவி. சரியாக மூடமுடியாமல் பாத்ரூமில் குழாய் கொட்டிக் கொண்டிருந்தது.

கொஞ்ச நேரம் கழித்து தண்ணீர் வடிவது நின்றுவிட்டது. அப்புசாமி கொட்டக் கொட்ட ஈரமாக நடுங்கிக் கொண்டே வந்தார். ”என்ன ஆச்சு உங்களுக்கு?”

”இரண்டு வேலை ஆச்சு. நான் குளிக்கவும் குளித்தாகிவிட்டது. குழாயையும் மூடியிருக்கேன். பிளம்பர் கிடைக்காததால் ஓவர்ஹெட் பார்க்குக்குள் அப்புசாமி இறங்கிக் குழாயைத் துணி வைத்து அடைத்துவிட்டு அப்படியே நன்றாக முழுகிக் குளித்துவிட்டு வந்து விட்டார்.

====================

விமானத்தில் அப்புசாமி சிற்றுண்டியை முடிக்குமுன் ஏர் ஹோஸ்டஸ் அவரது பிளேட்டை வாங்குவதற்குக் கை நீட்டினாள்.

”அவசரப்படாதே. நானே தேய்த்து வைத்து விடுகிறேன். வீட்டில் அந்த வேலையை செய்து பழக்கப்பட்டவன் நான்” என்றார்.

====================

பயணத்தின்போது எதிர்பாராத நெருக்கடி ஏற்பட்டு, யந்திரம் பழுதாகி சுவாசிக்க முடியாத சூழ்நிலை விமானத்தில் ஏற்பட்டால் சமாளிப்பது எப்படி? அதற்கான முகமூடியை அணிவது எப்படி என்பதை ஏர் ஹோஸ்டஸ் சாடையால் விளக்கிக் கொண்டிருந்தாள். ஏதாவது ஒரு குறிப்பிட்ட மொழியில் பேசினால் அது தெரியாத மற்றவர்களுக்கு புரியாதே என்று சாடையாலேயே அப்புசாமி விளக்குவது வழக்கம்.

அப்புசாமி அவரை ஊமை என்று நினைத்து அருகிலிருந்தவரிடம், ”நான் பத்து ரூபாய் கொடுப்பதாக இருக்கிறேன். நீங்களும் கொடுங்கள். ரயில் பிச்சைக்காரியென்றால் ஐந்து ரூபாய் போதும். விமானப் பிச்சைக்காரியாச்சே!” என்றார்.

====================

ஒரு வீட்டு விசேஷத்துக்கு அப்புசாமி போயிருந்தார். நாலாவது மாடியில் டெரஸில் ஷாமியானா போட்டிருந்தது. அப்புசாமி கேட்டார்.

‘’மொட்டை மாடியிலா சாப்பாடு?’’

‘’ஆமாம். முகூர்த்தம் கீழே. சாப்பாடு மேலே.’’

‘’மாற்றி வைத்துக் கொண்டிருக்கலாம்,’’ என்றார் அப்புசாமி.

====================

மனைவி சீதாப்பாட்டியின் மூக்குக் கண்ணாடியைத் தவறுதலாக அப்புசாமி மாட்டிக் கொண்டு
போய் விட்டார்.

சாயந்தரம் வந்ததும் பாட்டி கண்டித்தாள். ‘’உங்களுக்கு என்ன அவ்வளவு கவனக்குறைவு?’’

‘’திட்டாதே. பாராட்டு. ஒரு நாளாவது என் ஜிப்பாவுக்குப் பதில் உன் ரவிக்கையைப் போட்டுக் கொண்டு நான் போயிருக்கிறேனா?’’ என்றார்.

====================

கிறிஸ்துமஸ் தினம். கிறிஸ்துமஸ் தாத்தா வேஷம் போட்டுக் கொண்டு, தன் சினேகிதர்களுக்குப் பரிசுகள் தந்து தடால் மகிழ்ச்சி ஏற்படுத்தப் போவதாக அப்புசாமி தெரிவித்தார்.

மனைவி சீதாப்பாட்டி அவரது திட்டத்தைப் பாராட்டி பரிசுப் பொருள் வாங்க இருநூறு ரூபாய் தந்தாள். ரூபாயை வாங்கிக் கொண்ட அப்புசாமி, நண்பர்களுடன் ஓட்டலுக்குப் போய் ஜாலியாகச் சாப்பிட்டு விட்டுத் திரும்பினார்.

அது தெரியாத பாட்டி ராத்திரி 12க்கு அப்புசாமியை எழுப்பி ‘’மேக்கப் செய்து கொண்டு கிளம்புங்கள்’’ என்றாள்.

‘‘மேக்கப்காரன் தாடி வாடகை ஐம்பது ரூபாய் கேட்டான். தாடி வளர்க்க ஆரம்பித்து நிஜத் தாடியுடன் அடுத்த வருஷம் போய்க் கொள்கிறேன்’’ என்றார் அப்புசாமி சாமர்த்தியமாக.

====================

அப்புசாமியும் மனைவி சீதாவும் வெளியூருக்குப் புறப்பட்டார்கள். ஒரு வாரம் கழித்துத் திரும்புவதாக இருந்தது. புறப்பட வீட்டைப் பூட்டியதும் அப்புசாமி அவசரமாக மறுபடி திறந்து கொண்டு உள்ளே போய்விட்டு வந்தார். ‘’என்ன மறந்து விட்டீர்கள்?’’ என்றாள் சீதாப்பாட்டி.

‘’நாம் திரும்புவதற்கு ஏழு நாள் ஆகுமே. தினம் தினம் புறப்பட்டு வந்து தேதி கிழிக்க முடியுமா? அதனால் ஏழு நாள் தேதியையும் இன்றே கிழித்துவிட்டு வந்தேன்,’’ என்றார் அப்புசாமி.

====================

அப்புசாமி அலாரம் டைம்பீஸை எடுத்துக்கொண்டு கடியார ரிப்பேர்க்காரனிடம் சென்றார். விடியற்காலை நாலரை மணிக்கு அடிக்கிற மாதிரி வைத்துக் கொடு. கோவிலுக்குப் பொங்கல் வாங்கப் போக வேண்டும்.’’

‘’நீங்களே அலாரம் முள்ளைத் திருப்பிக் கொள்ளலாமே?’’ என்றான் கடியாரக்காரன்.

‘’அது எனக்கும் தெரியும். ஆனால் நான் கேட்டது காலையில் மட்டும் அடிக்கிற மாதிரி செய்து கொடு என்கிறேன். அதே இடத்துக்கு முள் வந்தால் சாயந்தரமும் அடிக்கிறது. நான் கோவிலுக்கு ஓடுகிறேன். ஆனால் சாயந்தரம் கோவில்களில் பொங்கல் தருவதில்லை,’’ என்றார்.

====================

கோவிலில் இருந்த குட்டி யானைக்குப் பிரியமாக அப்புசாமி ஒரு சீப்பு வாழைப்பழம் கொடுக்க விரும்பினார்.

யானையின் துதிக்கையிலும் வைத்து விட்டார். அருகிலிருந்த யானைப் பாகன் ஓடி வந்து ‘வாழைப் பழம் கொடுக்காதீங்க’’ என்று அவர் கையிலிருந்ததைப் பறித்து அவரிடமே தந்துவிட்டான்.

ஆசையுடன் துதிக்கையை நீட்டிய யானைக் குட்டிக்கு ஏமாற்றம். ‘’இந்தா’’ என்று யானைப் பாகனிடம் அப்புசாமி பத்து ரூபாய் நோட்டை நீட்டினார். அவன் ஆவலுடன் கை நீட்டினான். அப்புசாமி தராமல் ஜிப்பாப் பையில் ரூபாயைப் போட்டுக் கொண்டு விட்டார்.’’ யானைக்கும் இப்படித்தான் இருந்திருக்கும்’’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

====================

அப்புசாமி ஏழெட்டு நாட்களாகத் தேதி கிழிக்காததை மனைவி சீதாப்பாட்டி கண்டித்தாள். ‘’அதற்குக் கூடச் சோம்பலா?’’

‘’நீ எத்தனை நாளைக்கு ஒரு தரம் காலண்டரைப் பார்க்கிறாய் என்பதைச் சோதிக்கவே விட்டு வைத்தேன். நீயும் என்னைப் போல சோம்பேறிதான்,’’ என்றார் அப்புசாமி.

====================

பங்களா வாசலில் நின்று கொண்டிருந்த அப்புசாமி,

நாயுடன் வாக்கிங் வந்து கொண்டிருந்தவரிடம், ‘’நீங்கள் நடந்தால் கூடவே வருகிற நாய் நீங்கள் ஓடினாலும் கூட வருமா?’’ என்றார்.

‘’ஓ!’’ என்றார்.

‘’ஒரு கடிதம் கொடுத்து அனுப்பினால் கொண்டு வந்து தருமா?’’

‘’ஓ!’’

‘’பேப்பர் வாங்கி வருமா?’’

‘’தாராளமாகவே! எல்லாம் தெரிந்த நாய் என்னுடையது.’’

‘’ஆனால் என் வீட்டு வாசலில் அசிங்கம் பண்ணக்கூடாது என்பது மட்டும் தெரியவில்லை’’ என்றார் அப்புசாமி.

====================

பண்ருட்டியிலிருந்து வந்த உறவினர் ஒருத்தர் பெரீய பலாப்பழமாகக் கொண்டு வந்து தந்தார் அப்புசாமிக்கு.

‘’வெகு அருமையாக கல்கண்டு மாதிரி இருக்கும்’’ என்றார்.

‘’கல்கண்டே வாங்கி வந்திருக்கலாம். எனக்கு வேலை சுலபமாகும்,’’ என்றார் அப்புசாமி.

இரவு இரண்டு மணிக்குத் தெருவில் திடுமென்று நாய்கள் குலைக்க ஆரம்பித்தன.

தூக்கம் கலைந்த சீதாப்பாட்டி அப்புசாமியை எழுப்பி ‘’தெருவில் போய் எட்டிப் பாருங்கள்’’ என்றாள்.

அப்புசாமி எழுந்து கதவைத் திறந்து கொண்டு தெருவுக்குப் போனார்.

சிறிது நேரத்தில் சத்தம் மிக அதிகமாகியது.

சீதாப்பாட்டி, ‘’என்னாச்சு?’’ என்று கூவினாள்.

‘’நானுமல்லவா குரைத்துக் கொண்டிருக்கிறேன்’’ என்றார் அப்புசாமி.

வேடந்தாங்கலுக்கு அப்புசாமி சென்றிருந்தார். ஆயிரக்கணக்கான பறவைகள் ஏரியில் அமர்ந்திருந்தன. பார்த்து முடித்துப் பஸ்ஸில் ஏறிய நண்பர் அப்புசாமியிடம் ‘’அந்தந்தப் பறவை எப்படியோ அந்தந்த குஞ்சுகிட்டே வந்து இரை கொடுக்குதே ஆச்சரியமாயில்லே?’’ என்று வியந்தார்.

‘’முதல்லே போய் உம்மோடு வந்த பையனைக் கண்டு பிடிச்சுக் கூட்டிகிட்டு வாங்க, அவன் இன்னும் வரலே. பஸ் புறப்படப் போகுது’’ என்று ஞாபகப்படுத்தினார் அப்புசாமி.

வேலைக்காரி கைக் குழந்தையை ஒரு பக்கம் உட்கார வைத்துவிட்டு வேலை செய்து கொண்டிருந்தாள். கையில் இரண்டு பிஸ்கெட்டை வைத்துக் கொண்டு ஙை ஙை என்று அழுதவாறிருந்தது.

அப்புசாமி சமாதானம் செய்தார் ‘’நல்ல புள்ளே. அழாதே கண்ணு.’’

குழந்தை அழுவதை நிறுத்தவில்லை.

இரண்டு நிமிஷம் கழித்துச் சட்டென்று நிறுத்தி விட்டது.

சீதாப்பாட்டி உள்ளிருந்து வந்து, ‘’குழந்தை எப்படி அழுகையை நிறுத்தியது?’’ என்றாள்.

‘’வேறொன்றுமில்லை. அதற்கு நீ தந்திருந்த இரண்டு பிஸ்கட்டுகளையும் வாங்கித் தின்று விட்டேன்!’’ என்றார்.

====================

அப்புசாமி 27’ம் நம்பர் பஸ்ஸில் ஏறுவதற்காக பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார். அருகிலிருந்தவர், ‘’இந்த ஸ்டாப்பில் 27’ம் நம்பர் பஸ் நிற்காது. பாவம் நீங்கள் ரொம்ப நேரமாக நிற்கிறீர்களே?’’ என்றார்.

அப்புசாமி சொன்னார் : ‘’அது எனக்கும் தெரியும். ஆனால் இந்த பஸ் ஸ்டாப்பில்தான் என் ஜிப்பாவை விடக் குறைந்த வெளுப்பான சட்டை அணிந்த ஆசாமி நின்று கொண்டிருக்கிறார்’’ என்றார்.

====================

அப்புசாமி ஒரு பங்களாவுக்குள் போய் விட்டு மறு நிமிடத்தில் வெளியே வந்தார். வாசலிலிருந்த வாட்ச்மேன், ‘’ஏன் சார் உடனே வந்துட்டே, எஜமான் உள்ளேதானே இருக்கிறார். பால்கனியிலே நிற்கிறாரே’’ என்றான்.

அப்புசாமி சொன்னார் : ‘’நான் உன் எஜமானைப் பார்க்கச் செல்லவில்லை. பங்களாவுக்குள் சிலர் நுழைந்தால் நீ ஒரு சல்யூட் அடிக்கிறாய். நான் நுழைந்தால் அப்படி அடிக்கிறாயா. நான் மரியாதைக்குரியவன்தானா என்று செக் செய்து கொள்ளத்தான் நுழைந்தேன். நீ சல்யூட் அடிக்கவில்லை. நீயே மதிக்காதபோது உங்க எஜமான் என்னை மதிக்கவா போகிறார் என்று திரும்புகிறேன்.’’

====================

அப்புசாமி ஆசைப்பட்டு சற்று நீளமான ஜிப்பாவாகத் தைத்துக் கொண்டார். முழங்கால்வரை நீண்டிருந்த ஜிப்பாவைப் பார்த்து மனைவி எரிச்சலுடன், ‘’எதற்கு இத்தனை நீளம்! வேஸ்ட்!’’ என்றாள்.

‘’சரி. இந்த ஜிப்பாவைப் போடும்போது இனிமேல் வேஷ்டி கட்டிக் கொள்ளாமல் விட்டு விடுகிறேன்,’’ என்றார் அப்புசாமி.

====================

பொங்கலுக்கு அப்புசாமி நீளமாக ஒரு கரும்பு வாங்கிக் கொண்டு சென்றார்.

வழியில் பார்த்த நண்பர், ‘’உங்களுக்கோ கடிக்க முடியாது? கரும்பு ஏன் வாங்கிப் போகிறீர்கள்?’’ என்றார்.

‘’என் மனைவியைக் கூட நான் அடிக்க முடியாது. ஆனாலும் வாழ்க்கைக்கு அவள் வேண்டியிருக்கிறதே!’’ என்றார் அப்புசாமி.

====================

அப்புசாமி ஒரு டைரியில் நிறைய டெலிபோன் நம்பர்கள் எழுதி வைத்திருந்தார். சீதாப்பாட்டி திடுக்கிட்டு ‘’இதெல்லாம் என்ன நம்பர்? நமக்கு அறிமுகமான நம்பர் ஒண்ணுகூட இல்லையே?’’ என்றார்.

‘’இதெல்லாம் நான் கூப்பிட்டபோது வந்த ராங் நம்பர்கள்.’’

‘’ஒய் த ஹெல் அதையெல்லாம் எழுதியிருக்கீங்க?’’

‘’தெரிந்தவர்களுடனேயே பேசிக் கொண்டிருப்பது போர் அடிக்கிறது. இந்த மாதிரி ராங் நம்பர்களுடன் அடிக்கடி பேசிப் புது சினேகம் பிடித்துக் கொள்வது சந்தோஷமாயிருக்கிறது,’’
என்றார் அப்புசாமி.

====================

வெளியூலிருந்து வந்த உறவினர் ரசகுல்லா டின் வாங்கி வந்திருந்தார். டின்னை உடனே உடைத்து ரசகுல்லாவைச் சாப்பிட அப்புசாமிக்கு நாக்கு ஊறியது. ஆனால் சீதாப்பாட்டியின் கண்கள் அவரை முறைத்தன. உடனே வந்தவரிடம் அப்புசாமி, “இது மாதிரி டின்களில் அடைத்த சரக்கையெல்லாம் வாங்கவே கூடாது. ஒரு தரம் பார்த்தேன். அவ்வளவும் பூஞ்சக் காளான் பிடித்திருந்தது’’ என்றார்.

வாங்கி வந்தவர், ‘’இது ரொம்ப ஒசத்தியான கம்பெனி’’.

“ஒசத்திக்காரன்தான் மோசடி பண்ணுவான்’’ என்றார்.

வாங்கி வந்தவர் ரோஷத்தோடு “ஒரு ஸ்குரூ டிரைவர் கொடுங்கள். உங்கள் எதிரேயே உடைத்துக் காட்டி விடுகிறேன்’’ என்றார். அப்புசாமி அவர் கேட்ட ஆயுதத்தைத் தந்தார். ‘’பார்த்தீங்களா? புத்தம் புது ரசகுல்லாக்கள்’’ என்றார் வந்தவர்.

அப்புசாமி, “அது சரி. தின்னு பார்த்துட்டுத்தானே எதையும் சொல்ல முடியும்” என்று இரண்டு மூன்று ரசகுல்லாக்களைச் சுவைத்துவிட்டு, ‘’உங்களை யாராலும் ஏமாற்ற முடியாது. அருமையான சரக்கு’’ என்று பாராட்டினார்.

====================

ஒரு தெருவில் பந்தல் போட்டு ஏதோ விழா நடந்து கொண்டிருந்தது. ‘’என்ன விழா?’’ என்று கேட்டார் அப்புசாமி.

ஒரு தலைவரின் பெயரைச் சொல்லி, ‘’அவருக்கு விழா. பிறந்த நாள் விழாவோ, இறந்த நாள் விழாவோ?’’ என்றார் ஆசாமி.

‘’சாக்லேட் கீக்லேட் கொடுத்தாங்களா?’’ என்றார் அப்புசாமி.

‘’ஒண்ணும் தரலே,’’ என்றார் சொன்னவர்.

‘’அப்படியானால் இறந்த நாள் விழாவாகத்தானிருக்கும்’’ என்றார் அப்புசாமி.

====================

பேட்டையிலிருந்த விளையாட்டுக் கழகம் நடத்திய கால்பந்தாட்ட நிகழ்ச்சிக்கு அப்புசாமி தலைமை வகித்தார்.

முதல் பரிசுக் கோப்பையை வெற்றி பெற்ற அணியின் காப்டனுக்குத் தந்தார். அவன் கோப்பையை வாங்கிக் கொண்டு நகர்ந்ததும் அவனைக் கூப்பிட்டார். “தம்பி இப்படி வா…’’ என்றவர் “முதல் பரிசுக் கோப்பையை எப்படி எடுத்துக் கொண்டு போவது என்று உனக்குத் தெரியவில்லையே?’’ என்றார். அவன் திகைத்தான்.

“முதல் பரிசுக் கோப்பையைத் தட்டிக் கொண்டு போக வேண்டும். நீ வெறுமே எடுத்துக் கொண்டு போகிறாயே!’’ என்றார் அப்புசாமி

====================

அப்புசாமிக்குத் தோளில் இரண்டொரு நாட்களாக வலி.

“சீதே! நான் டாக்டரிடம் போகிறேன். நீ எதற்கும் இரண்டே கால் லட்சம் ரூபாய் தயார் செய்துவை…’’ என்றார்.

“வாட் ·பர்?’’ என்றாள் சீதாப்பாட்டி புரியாமல்.

“ஹார்ட் அட்டாக் என்று டாக்டர் சொல்லிவிட்டால் ஆஞ்சியோ, கீஞ்சியோ, சாஞ்சியோ அது இது என்று செலவாகுமே?’’ என்றவர், “டாக்டருக்கு அவ்வளவு தருவதற்குப் பதில் இப்போ எனக்கு ஆயிரம் ரூபாய் கொடு போதும். நான் டாக்டரிடம் போகாமல் இருந்து விடுகிறேன்,’’ என்றார்.

====================

“குடும்பத்தில் வயோதிகர்கள் இருந்து வருவது உதவியா, உபத்திரவா?’’ என்ற பட்டி மன்றத்துக்கு அப்புசாமி தலைமை வகித்தார். இரு தரப்பு வயோதிகர்களும் சுவாரசியமாகவும் தீவிரமாகவும் தங்கள் கட்சிகளை விவரித்தார்கள். சூடான விவாதங்களினால் நேரம் போவதே தெரியவில்லை. எந்தக் கட்சியை ஆதரித்து நடுவர் அப்புசாமி தீர்ப்பு சொல்லப் போகிறார்? அப்புசாமி இவ்வாறு தீர்ப்பளித்தார்.” எட்டு மணிக்கு முடிய வேண்டிய இந்தக் கூட்டம் ஒன்பதரைக்கு முடிந்திருக்கிறது. இனிமேல் இவர்கள் வீட்டுக்குப் போய் எல்லார் தூக்கத்தையும் கெடுத்துக்கொண்டு சாப்பிடப் போகிறார்கள். இதிலிருந்தே வயோதிகர்களால் வீட்டுக்கு உபத்திரவமே தவிர உதவியில்லை என்று தெரிகிறது!”

====================

கொளுத்தும் வெய்யில், அப்புசாமி ஓர் ஓட்டலுக்குச் சென்றார். ஏஸி ஸ்பெஷல் ரூமில் போய் அமர்ந்து கொண்டார். ‘’ஒரே ஒரு மோர், கொண்டு வா போதும்’’ என்றார் வெயிட்டரிடம். அந்த மோரைச் சிறிது சிறிதாக அரை மணி நேரம் ஸ்டிராவினால் ரசித்து ரசித்துக் குடித்துக் கொண்டிருந்தார். ‘’ரொம்ப நேரமாக உறிஞ்சிகிட்டிருக்கீங்க,’’ என்றார் வெயிட்டர் கிண்டலாக. ‘’நான் உறிஞ்சிக் கொண்டிருப்பது மோரையல்ல. ஏஸியை’’ என்றார் அப்புசாமி.

====================

காலம் சென்ற ஒரு பிரபல கவிஞருக்கு மண்டபத்தில் நினைவாஞ்சலி நடந்து கொண்டிருந்தது. அப்புசாமியும்ட சென்றிருந்தார். பல பேச்சாளர்கள் மறைந்த கவிஞரைப் புகழ்ந்து பேசினார்கள். பேசி முடித்ததும் எல்லாரும் எழுந்து இரண்டு நிமிஷம் மெளனமாக நிற்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். எழுந்து நின்ற மறுவினாடி அப்புசாமி கிசு கிசு குரலில் அருகிலிருந்தவரிடம், ‘’நின்னது போதும்னு யாராவது சொல்லுவாங்களா? நாமா உட்கார்ந்துக்கலாமா? இறந்தவரைப் பற்றிய கவலையை விட இந்தக் கவலையே எனக்குப் பெரிசாக இருக்கிறது’’ என்றார்.

====================

புதிதாக வாங்கிய சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டிருந்த அப்புசாமியைச் சீதாப்பாட்டி கண்டித்தாள்.

‘’என்ன எப்பப் பார்த்தாலும் சாய்வு நாற்காலி?’’

‘’எல்லாம் ஒரு சாய்வு மனப்பான்மைதான்!’’ என்றார் அப்புசாமி.

====================

Print Friendly, PDF & Email

1 thought on “அப்புசாமி குட்டிக் கதைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *