தளபதியின் சமரசம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: April 19, 2019
பார்வையிட்டோர்: 16,045 
 

மன்னர் முல்லாவுக்கு ஒரு வீட்டுப் பகுதியை அன்பளிப்பாகக் கொடுத்தார்.

அந்த வீட்டுக்கு மாடி உண்டு. அந்த மாடிப்பகுதியை மன்னர் ஒரு படைத் தளபதிக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார்.

மாடியில் இருக்கும் படைத் தளபதியின் மனைவி அடிக்கடி கல் உரலில் மாவு இடிப்பாள்.

அந்தச் சமயத்தில் கீழ் வீட்டில் இருக்கும் முல்லாவுக்கு பெரிய தொந்தரவாக இருக்கும்.

மாவு இடிக்கும் போது வீடே அதிரும். இடியோசை மாதிரி சப்தமும் கேட்கும்.

முல்லா இரண்டு மூன்று தடவை படைத் தளபதியைச் சந்தித்து கொஞ்சம் மெதுவாக மாவு இடிக்கு மாறு அவர் மனைவிக்குச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார். படைத் தளபதிக்கோ கோபம் வந்து விட்டது.

இது மன்னர் எனக்காக அளித்த வீடு. ஆகவே இது எனக்குச் சொந்தமானது. என் வீட்டில் என் மனைவி எப்படி வேண்டுமானாலும் மாவு இடிப்பாள். அதைக் கேட்பதற்கு நீ யார் ? என்று முல்லாவை அதட்டி அனுப்பி விட்டார்.

மறுநாள் முல்லா கீழே உள்ள தன் வீட்டுப் பகுதியில் கடப்பாறையைக் கொண்டு இடித்துக் கொண்டிருந்தார்.

கீழே என்ன செய்கிறாய் ? என்று படைத் தளபதி மாடியில் இருந்து அதட்டினார்.

கீழ்ப்பக்கம் இருக்கும் என் வீட்டை முற்றிலுமாக இடித்துத் தள்ளிவிட்டுப் புதிதாக கட்டத் தீர்மானித்திருக்கிறேன் என்றார் முல்லா.

அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த படைத் தளபதி என்னைய்யா முட்டாளாக இருக்கிறீரே, கீழ்வீடு முழுவதையும் இடித்தால் மேல் வீடு என்ன ஆகும் என்று யோசித்தீரா ? என்று கோபத்தோடு கேட்டார்.

மேல் வீட்டைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும். எனக்குச் சொந்தமான வீட்டை நான் இடிக்கிறேன். இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்று கூறி விட்டு முல்லா சுவரை இடிக்கத் தொடங்கினார்.

பதறிப்போன படைத்தளபதி முல்லாவிடம் சமரசம் பேச முற்பட்டார்.

நாம் இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளாமல் ஒருவரை யொருவர் அனுசரித்தச் செல்வதுதான் நல்லது. நாம் இருவரும் நண்பர்களாக இருப்போம் என்றார் தளபதி.

நான் எப்போதுமே யாருக்கும் நண்பன்தான்! என்று கூறிவிட்டு முல்லா சிரித்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *