கதையாசிரியர்:
தின/வார இதழ்: பாக்யா
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 24, 2013
பார்வையிட்டோர்: 15,155 
 

” அம்மா… இந்த ஜாதகம் நம்ம ராஜேஷுக்கு பொருத்தமா இருக்கு.. என் நாத்தனாருக்கு தெரிஞ்ச இடம்… ஏம்.பி.ஏ படிச்சிருக்கா.. போட்டோவை பாரு பிடிச்சிருக்கா…” சௌம்யா அம்மாவிடம் தர,

” ம்.. பொண்ணு நல்லா லட்சணமாதான் இருக்கா…! போட்டோ அனுப்பி வைப்போம்.. அவன் என்ன சொல்றான்னு பார்க்கலாம். பகவான்தான் அவனுக்கு புத்தியை கொடுத்து சம்மதிக்க வைக்கனும்.எதாவது ஒரு குறை சொல்லிகிட்டு வேணாம்னு சொல்லிகிட்டே இருக்கான்…”

” என்னோமோப்பா.. இவனுக்கு ஒரு நல்லதை பண்ணிட்டா நாங்க கொஞ்சம் ரிலாக்ஸ் ஆயிடுவோம்.. சொந்தக்காரா எல்லாம் பையன் வெளி நாட்டுல நல்லா சம்பாதிக்கிறான்..

இன்னும் என்ன கொறைச்சல்.. காலா காலத்துல கல்யாணம் பண்ணிட வேண்டியதுதானேன்னு ….கேட்டுக்கிட்டே இருக்கா…” மாப்பிள்ளை கிரிதரிடம் அப்பா சொல்லி கொண்டிருந்த போதே .. போன் ஒலித்தது. …’ ராஜேஷ் தான் பண்ணுவான் ‘ என்று சொல்லிக்கொண்டே எடுத்தார்.

” ஹாய் டாடி ஹவ் ஆர் யு அண்ட் மம்மி.. பை தி பை… இந்த முறை கொஞ்சம் அதிகமா பணம் போட்டிருக்கேன்.. மொத்த கடனையும் கிளியர் பண்ணிடுங்க.. நான் மம்மி கிட்ட அப்புறமா பேசறேன்… வைச்சிடட்டா…

” இரு ராஜேஷ்.. நம்ம சௌமியும் இங்கதான் வந்திருக்கா.. ஏதோ பேசனும்னா…” சௌம்யாவிடம் தந்தார்.

” ராஜி.. எப்படிடா இருக்கே… இத்தனை நாளா ரிஜக்ட் பண்ண மாதிரி இந்த முறை உன்னால நோ சொல்ல முடியாது.. பி காஸ் மை செலக்க்ஷன் டா.. பொண்ணு ரஞ்சனி ஏம்.பி.ஏ படிச்சிருக்கா.. அசல் நம்ம ஊர் சினேகா மாதிரியே இருக்கா…..”

” ஏய் சௌமி .. உன்ன என்ன பொண்ணு பார்க்க சொன்னேனா…? எப்ப பாரு கல்யாணம்..கல்யாணம்னு…”

” வயசான காலத்துல அப்பா, அம்மாவோட விருப்பம் வேற என்னவாயிருக்கும்… உனக்கு ஒரு நல்லவாழ்க்கை அமைச்சு தர்றதுதானே இருக்கும்…?

” சௌம்யா… எப்ப இருந்தாலும் தெரிய போற மேட்டர்தான்.. நானே எப்படி சொல்றதுன்னு இருந்தேன்.. அப்பாகிட்ட நீயே ஒபன் பண்ணி கன்வினியன்ஸ் பண்ணிடு.. எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு மாசமாயிடுச்சி.. என் கூட புராஜக்ட் பண்றா.. பேரு ப்ரூலீ. .”

சௌம்யா பதட்டத்தை காட்டி… ” ஏய்.. ராஜி.. என்னோமோ ப்ரூ காபி குடிச்சேன்ற மாதிரி.. சாதாரணமா இவ்வளவு பெரிய விஷயத்தை சொல்றே…? காமெடி தானே பண்றே…”

” இதுல காமெடி பண்ண என்ன இருக்கு.. அவளுக்கும் நிறைய சம்பளம்.. என் லைப் நல்லாருக்கும்.. அவ சைனாக்காரி…அப்பா கிட்ட சொன்னா சம்மதிக்கமாட்டார்.. நாங்க ரெண்டு பேரும் காதலிச்சி
ரெஜிஸ்ட்டர் மேரேஜ் பண்ணிகிட்டோம்….” …நானே நாளைக்கு போன் பண்றேன்…” பதிலை எதிர்பார்க்காமல் வைத்துவிட்டான்.
சௌம்யா விவரம் சொன்னதும் அம்மா தளர்ந்து கீழே விழ போனவளை…கிரி தாங்கி பிடித்து தண்ணீர் கொடுத்தான். அப்பா அதிர்ச்சியாய் உட்கார்ந்திருந்தார்.

மௌனத்தை கிரிதான் கலைத்தான்…” மாமா.. நாளைக்கு என்னன்னு விசாரிச்சு பார்க்கலாம்…

எதுக்கும் கவலை படாதீங்க.. எப்படியாவது ஸால்வ் பண்ணிடலாம்…”

அம்மா இரவெல்லாம் தூங்காமல் அழுது கொண்டே பேசிக்கொண்டிருந்தாள்… ” ஈ கடிக்காம…எறும்பு கடிக்காம பார்த்து பார்த்து வளர்த்தேனே … இதுக்கா படிக்க வைச்சி அனுப்புனேன்… உன் கல்யாணத்தை எப்படி எல்லாம் பண்ணனும்னு கனவு கண்டுட்டு இருந்தேன்..? விசேஷ நாள்லமருமக வாசல்ல கலர் கோலம் போடற அழகும் … பட்சணம் செய்து பேரப்பசங்களோடு சந்தோஷமா
சாப்பிடற குடுப்பினையும் இதெல்லாம் கனவா போச்சே….”

” ஆமாம்மா இப்ப புலம்பி என்ன…? என்னை மட்டும் பொண்ணுன்னா இப்படி இருக்க கூடாதுன்னுஎல்லாத்துக்கும் ரூல்ஸ் போட்டே.. அவனை இஷ்டத்துக்கும் விட்டுட்டே….”

“ஏய்.. சௌமி … எந்த நேரத்தில் எப்படி பேசனும்னு உனக்கு விவஸ்தை இல்ல… ” கிரி திட்டியதும் அமைதியானாள்.

பெண்கள் கவலையோ.. கோபமோ கொட்டி விடுவார்கள். அப்பா அமைதியாய் ஈஸிசேரில்படுத்திருந்தார்… அவர் மனதுக்குள்ளும் ஓடிக்கொண்டிருந்தது ராஜேஷ் பற்றி… தனியார் கம்பெனியில் கிளார்க்காக சொற்ப வருமானத்தில்.. பிள்ளைகளை வளர்த்து.. சௌம்யாவிற்கு கல்யாணம் செய்தது.. ராஜேஷை இன்ஜினியரிங் படிக்க வைத்தது எல்லாமே கடன் பட்டுதான்.
படிப்பை முடித்தவன் வெளி நாட்டு வேலைக்கு செல்வதாக ராஜேஷ் சொன்னதும் அப்பா ஒத்துக்கொள்ளவில்லை.

“ராஜி.. அம்மாவால உன்னை பார்க்காம வருஷக்கணக்குல இருக்க முடியாது.. உன் திறமையை இங்கியே காட்டு.. உன் அறிவை எங்கோ விற்க நான் சம்மதிக்க மாட்டேன்…”

” டாடி நீங்க ஏன் அப்படி நினைக்கிறிங்க… நம்ம அறிவை எல்லா தேசத்திலும் நிரூபிச்சு காட்டறது நமக்கு பெருமைதானே.. சரி .. நான் என்ன அங்கேயேவா செட்டில் ஆயிட போறேன்… ஜஸ்ட்.. ஒரு
அஞ்சு வருஷம் சம்பாதிச்சிட்டு வந்துடறேன்.. நம்ம கடனை எல்லாம் அடைச்சிட்டு லைப்பை கொஞ்சம்
வசதி படுத்திக்கலாமே….” அம்மாவை கெஞ்சி சம்மதிக்க வைத்தான். அம்மா

தன் வளையலை விற்று வெளி நாடு போகும் செலவிற்கு தந்தாள்.
“அப்பா நாம செட்டில் ஆகிட்ட பிறகு நீங்க வேலைக்கு போக வேண்டாம்.. அம்மா உனக்கு வீட்டு வேலைக்கு எல்லாம் ஆள் வச்சிடுவேன்.. நீ ராணி மாதிரி உட்கார்ந்துகிட்டு அதிகாரம் பண்ணனும் என்ன…” கிளம்புவதற்கு முன் ஒரு பௌர்ணமி வெளிச்சத்தில் அம்மாவின் கையில் உருண்டை சாதம் வாங்கி சாப்பிட்டு கொண்டே சொன்னான். ”

அம்மா உன் கையால வெறுமனே மிளகா கிள்ளி தாளிச்சா கூட நல்லா இருக்கு.. அப்படி ஒரு ராசி …”சின்ன வயதிலேயே ராஜேஷ் சுட்டியா இருப்பான். அப்பா சட்டையை மாட்டிக்கொண்டு கேரியரை
பையில் போட்டதும்.. ஓடிப்போய் செருப்பை எடுத்து தந்து டாட்டா காண்பிப்பான்.அப்பாவின்சுண்டு விரலை பிடித்து கொண்டுதான் எங்கும்.

பக்கத்து வீட்டு மாமா கேட்பார்..” அடேய் தம்பி …
ஒரு சாக்லேட் தாரேன்.. உங்கப்பாவை எனக்கு குடுத்திடறியா…”

” ம்.. ஆசை.. தோசை… எது குடுத்தாலும் எங்கப்பாவை தரமாட்டேன்…” இப்படி பட்டவனா என்னை விட்டு வெகு தூரம் போய்விட்டான்..? லட்சங்கள் லட்சியங்களை புதைப்பதில் என்ன ஆச்சரியம். வளரும் வரை பிள்ளைகளோடு இருப்பது எல்லாம் வளர்ந்த பின் கனா காலங்கள் ஆகிவிடுகிறது .

மறு நாள் அவனே போன் செய்தான், அம்மாதான் முதலில் பேசினாள்…” ராஜி.. நடந்தது எல்லாம் கெட்ட கனவா நினைச்சிகிட்டு அவளை அங்கேயே விட்டுட்டு இங்கேயே வந்துடுடா..பேசிக்கொண்டிருந்தவளை.. ” ஸ்ரீமதி நீ என்ன பேச்சு பேசறே..? எந்த நாடா இருந்தா என்ன ஒரு

பொண்ணு வாழ்க்கையை கெடுக்கிறது நம்ம பண்பாடு இல்ல..”. குடு நான் பேசிக்கறேன்… அப்பா பிடுங்கியதும்,

“அப்பா.. சௌமி சொல்லியிருப்பா.. ஸாரிப்பா நீங்க சொன்னா ஒத்துக்க போறதில்லைனுதான் நானே பண்ணிகிட்டேன்.. ” எனக்கு இந்த ஹைடெக் லைப் பழகிப்போச்சுப்பா.. ப்ரூலியோடு
இங்கயே செட்டில் ஆயிடலாம்தான்னு ரெஜிஸ்டர் பண்ணிட்டேன்… மறுபடியும் அங்க வந்து முட்டு சந்து.. கும்பல் வாழ்க்கை இதெல்லாம் .. நினைச்சு பார்க்கவே முடியலை.. நான் மாசா மாசம் பணம் அனுப்பிடறேன்.. நல்ல வீடா கட்டிட்டு சௌகர்யமா இருங்க.. என் வொய்ப்பை நீங்க பார்க்கனும் இல்லையா… அடுத்த மாசம் அவளை கூட்டிகிட்டு இண்டியா வர்றன்பா…”

ராஜேஷ் வந்ததும் உறவுகளுக்கு சொல்லி ஒரு ரிசப்ஷன் வைக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தார் ராமனுஜம்.

” இந்த அசிங்கத்தை ஊரை கூட்டி வேற சொல்லனுமாக்கும்.. ” அம்மா கேட்டதும்,

” நம்ம பையனுக்கு கல்யாணம் ஆனதை எல்லாருக்கும் தெரிவிக்கனும் இல்லையா,,,?

ராஜேஷ் வருவதற்காக வீட்டை ஓடி ஓடி சுத்தம் செய்து கொண்டிருந்தாள்.. ஸ்ரீமதி. ‘ என்ன இருந்தாலும் வெளி நாட்டுல இருந்து வர்றான் இல்ல… என்றாள். ராஜேஷ் வரும் அன்றே ரிசப்ஷன் ஏற்பாடு ஆயிருந்தது. நீள முகத்துடன் கூந்தலை விரித்து கொண்டு முக்கால் பேண்ட்டுடன் அவன் கையை கோர்த்து கொண்டு வந்த அவளை பார்க்கவே பிடிக்கவில்லை சௌம்யாவிற்கு.

யாரும் எதுவும் விமர்சனம் செய்ய கூடாது என்று அப்பா அடக்கி வைத்திருந்தார்.

அம்மாவின் ஆசைக்காக காஞ்சி பட்டு சேலையை அவளுக்கு சுற்றி மேக்கப் செய்து ரிசப்ஷனில் நிற்கவைத்தார்கள். ராஜேஷ் மட்டும் அவளுக்கு தஸ்.. புஸ் என்று இங்கிலிஷ் பேசி அறிமுகபடுத்திகொண்டிருந்தான்.

ஆண்கள் பட்டாளம் அவளையே அதிசயமாய் பார்த்து கொண்டு.. வெளி நாட்டுக்காரிக்கு கை கொடுத்தால் கூச்சபட மாட்டாள் என்று சாக்காக க்யூவில் நின்று கை தந்து கொண்டிருந்தார்கள்.

” மாமி.. இவ இட்லி, தோசை எல்லாம் திம்பாளா.. வீட்டுக்கு போனா ஸ்ரீமதி என்னத்தை ஆக்கி போடுவா…? சிலர் வம்பு பேசிக்கொண்டிருந்தார்கள்.

நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு வந்தவர்கள் பேருக்கு ஒரு ஜூசை குடித்துவிட்டு,…” டாடி இந்த அட்மாஸ்பியர் இவளுக்கு சரிபடாது.. பைவ் ஸ்டார் ஓட்டல்ல ரூம் போட்டிருக்கேன். “கிளம்பினார்கள்.

லீவு முடிந்து கிளம்பும் போது சொல்லி விட்டு போக வந்தார்கள். இது வரை மௌனம் காத்தஅப்பா,” ராஜி.. இதுல நீ இது வரை அனுப்பின பணம் அப்படியே இருக்கு… ரிசப்ஷன் செலவு என் கடைசி கடனாயிருக்கட்டும்.. நீ எவளையோ இழுத்துண்டு வந்தது கூட பரவாயில்லைடா… ஆனா.. முட்டு சந்து.. கும்பல் வாழ்க்கைன்னு.. கேலியா பேசி உன்னை வளர்த்து விட்ட தாயையும் தாய் நாட்டையும் பழிச்ச பாரு.. இங்க வலிக்குதுடா.. ” நெஞ்சை தொட்டவர்,

“ராஜி .. அன்பும் பாசமும் தாண்டா நம்ம வாழ்க்கை .. பகட்டுதான் வாழ்க்கைன்னு வாழற உன் பணம் எனக்கு வேணாம். நான் உன்னை
வளர்த்ததுக்கு கூலி மாதிரி கொடுக்கிற எதுவும் வேண்டாம். சந்தோஷமா போ ஆனா.. உன் கடமைன்னு சொல்லிகிட்டு கடைசியா கூட வரவேணாம்.

” டாடி .. டோண்ட் செண்டிமேட்.. டைம் வில் சேஞ்சஸ் யு ….ஓ.கே ப்ரூ ஸே பை தெம்…”

அவள் சிரித்த படி கை அசைத்தாள். ஸ்ரீமதி கண்ணீர் விட அங்கே சிரிப்புக்கும் அழுகைக்கும் மொழி தேவைப்படவில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *