கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 7, 2020
பார்வையிட்டோர்: 4,108 
 

ஒருவனுக்கு அதிர்ஷ்டம் இந்தால் அவன் கரியைத் தொட்டாலும் அது மஞ்சள் ஆகிவிடும் என்று சொல்வார்கள். பணம், பொருள் விஷயத்தில் மட்டுமின்றி புகழும் பெருமையும் வந்து சேருவதில் கூட அதிர்ஷ்டம் துணைபுரியக்கூடும் என்பதற்கு புன்னைக்காடு மகிழ்வண்ணம் பிள்ளையின் அனுபவம் சுவாரஸ்யமான உதாரணமாக விளங்குகிறது.

வானைத் தொடுவது போல் நெடிது உயர்ந்து, முடிந்த வரையில் எவ்வளவு நிலப்பரப்பை வளைத்து பிடித்துக் கொள்ள இயலுமோ அவ்வளவுக்கு நீண்டு நெளிந்து கிடக்கும் மலைத் தொடரின் அடிவாரத்தை ஒட்டி அமைந்துள்ள சிற்றுார்களில் ஒன்று புன்னைக் காடு.

மலை அடிவாரத்தின் அருகாமையில் உள்ள ஊர்களுக்கு இயல்பாக ஏற்படக்கூடிய வசதிகளும் வசதிக்குறைவுகளும் புன்னைக்காடு ஊருக்கும் உண்டு.

இரவு நேரங்களில் மலையிலிருந்து கொடிய மிருகங்கள் ஊருக்குள் புகுந்து, தங்களால் ஆன நஷ்டங்களை விளைவித்துச் செல்லும். கோழிகளைத் திருடித்தின்னும் பிராணிகளும் ஆட்டுக்குட்டிகளைத் தூக்கிச் சென்றும் பெரிய ஆடுகளை அடித்துக்கொன்றும் சேதம் விளைவிக்கும் “கடுவா” போன்ற கொடிய மிருகங்களும் அந்த ஊரில் அடிக்கடி வந்து போகும். பெரிய மலைப்பாம்பு அபூர்வ அதிதியாக வருகை புரிந்து விட்டுப் போவதாகவும் ஊர்க்காரர்கள் சொல்வது உண்டு. காட்டுப் பன்றிகள் அவ்வப்போது வந்து, பயிர் களைப்பாழ் பண்ணி, பண்படுத்தியநிலத்தை நாசம் செய்து விட்டுப் போகும். கரடிகளும் எப்போதாவது மலை மீதிருந்து கீழேயிறங்கி ஊருக்குள் புகுந்து, தமது வருகையைப் பதிவு செய்து விட்டுத் திரும்பிச் செல்லும்.

அதனால், “காட்டு மிருகங்களிடம் பயம், என்பதும் அந்த ஊருக்குப் பொதுவான ஒரு குணமாகி விட்டது. இருட்டுக் காலங்களில் இந்த பயம் அதிகமாக இருக்கும். “பட்டப்பகல் போல”நிலா பளிரென அடிக்கிற இரவு நேரங்கிளல் கூட அவ்வூர் வாசிகள் எட்டு மணிக்கு மேலே கதவுகளை திறந்து போட் டிருப்பதில்லை. வெளியே படுத்துறங்க அஞ்சுவார்கள். அவனை கரடி அடித்து விட்டது; இவனை கடுவா கொன்று போட்டது; புலி ஊருக்குள் வந்து அந்த வீட்டுக்குள் நுழைந்து விட்டது என்பன போன்ற பேச்சுக்கள் புன்னைக்காடு ஊரைப்பொறுத்த வரையில் சர்வசாதாரண விஷயங்களாகவே ஒலித்தன.

எனவே, ஊர்க்காரர்கள் வெளியே நடமாடுகிறபோது அரிவாள், வேல்கம்பு, ஈட்டி தடி என்று எதையாவது தூக்கிக் கொண்டே திரிவார்கள். வசதியும் செல்வாக்கும் பெற்றிருந்த சிலர் துப்பாக்கிக்கும் ரிவால்வருக்கும் லைசென்ஸ் வாங்கி அவற்றை வைத்திருந்தார்கள்.

இவர்களில் சிலர் எப்பவாவது வேட்டைக்குப் போகிறோம் என்று கோஷ்டி சேர்த்துக் கொண்டு மலைப் பகுதிகளில் சுற்றி திரிவதும் உண்டு; திரும்பி வரும்போது மலை அணில், முயல், மிளா என்று எதையாவது சுட்டுக் கொன்று பெருமையாகச் சுமந்து வருவார்களே தவிர கரடியை பிடித்தார், புலியை சுட்டு கொன்றார், காட்டுப் பன்றியை தீர்த்துக்கட்டினார் என்ற பெருமையை எவரும் பெற்றதில்லை. பெறமுடிந்ததில்லை.

“ஒரு கடுவா நின்னுது பாருங்க. குறிவச்சேனா? அது எப்படியோ பாய்ந்து ஓடிப் போயிட்டுது!” “ஈத்தம் பழத்தை தின்றுக் கிட்டிருந்த கரடி எங்க கண்ணிலே பட்டது. வசமா அடிக்கிறதுக்கு கொஞ்ளும் பக்கத்திலே போவோம்னு நகர்ந்தோம். அதுக்கு சத்தம் கேட்டிருக்கு. விருட்னு பாய்ஞ்சு கண் சிமிட்டுறது க்குள்ளாறே மறைஞ்சிட்டுது, எப்படிப் போச்சு எங்கே மறைஞ்சுதுன்னே தெரியலே போங்க.

இன்னோரன்ன கதைகள் மலைமேல்போய் திரும்பியவர் களால் சுவையாக ஒலி பரப்பப்படுவது வழக்கமே தவிர, புலியை – கரடியை அல்லது கொடிய பெரிய வனவிலங்கு எதையாவது ஒன்றைக் குறி வைத்துச் சுட்டுக்கொன்று, வெற்றிகரமாக வேட்டையாடக் கூடியவர் என்ற பெருமை புன்னைக்காடுப் பிரமுகர் எவருக்கும் கிடைத்ததில்லை.

அதாவது “போனசித்திரை” வரையில். அதற்குப் பிறகு தான் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

புன்னைக்காடுப் பெரிய வீட்டுப் பிரமுகர்களில் – மச்சுக் கட்டி ஒடுபோட்டு வசதியாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த கல் வீட்டுக்காரர்களில் – ஒருவர் மகிழ்வண்ணம் பிள்ளை. அவர் வீட்டில் அவருடைய அப்பா காலத்துத் துப்பாக்கியும் நவீன ரிவால்வரும் இருந்தன. அவர் வேட்டைக்குப் போய் வருவதும் உண்டு.

“அதிர்ஷ்டம் இருந்தால் பணம் கூரையைப் பிய்த்துக் கொண்டு வந்து கூட விழும் என்று சிலர் சொல்வர். அதேபோல” அவருக்கு கீர்த்திப்பிரதாபம் வந்து சேர வேண்டும் என்கிற அதிர்ஷ்டம் இருந்ததுபோலும். அதனால் அவர் வேட்டை என்று குழு சேர்த்துக் கொண்டு போகாமல் வீட்டோடு இருந்தபோது கூட, வேட்டை அவரைத் தேடிவந்து அருள் புரிந்து விட்டது!

அப்போது இரவு ஏழு அல்லது ஏழரை தான் இருக்கும் ஆனாலும் இருட்டு “கருங்கும்மென்று கவிந்து ராத்திரி ரொம்ப நேரம் ஆகியிருக்கும் என்பது போன்ற ஒரு மயக்கத்தை கொடுத்துக்கொண்டிருந்தது. வானத்தில் ஒரு வெள்ளி கூடத் தென்படவில்லை அன்று பூராவும் மப்பும் மந்தாரமுமாக இருந்து, அந்திவேளையில் மேக மூடாக்கு கனத்து, கவிந்து வந்து இருட்டுக்கு மேலும் அழுத்தம் கொடுத்தது. குளிர்ந்த வாடைக் காற்று நிலவியது. மழை இல்லை. மழை. வரலாமோ என்ற எண்ணத்தை உண்டாக்கும் சூழ்நிலை.

மகிழ்வண்ணம்பிள்ளை தற்செயலாக வெளியே வந்தார். எப்போது இரவில் அவர் வெளியே தலைகாட்டினாலும், கையில் ரிவால்வர் எடுத்து கொள்வது தான் வழக்கம். அன்றும் அது இருந்தது.

என்றுமே புன்னைக்காடு ஏழு மணிக்குள் ஓய்ந்து அடங்கி விடும். தெருக்களில் நடமாட்டம் இராது என்பது மட்டுமல்ல, அந்த ஊரில் வீடுகளில் ஆட்கள் வசிக்கிறார்களா இல்லையா என்று சந்தேகப்படும் அளவுக்கு ஊரே அமைதிப் போர்வையை மூடிக் கொண்டு உறங்கித் தோன்றும்.

அதிலும், தொடர்ந்து எலெக்ட்ரிக் விளக்குகள் எரியாது கெடுத்து விட்ட நாட்களில் மூன்றாவது நாளான அன்று, ஊரில் எங்குமே ஒரு பொட்டு வெளிச்சம் கூட இல்லை.

வாசல் “கேட்” நன்றாகச் சாத்தி கொண்டி போடப்பட்டிருக் கிறதா என்று பார்க்கும் நோக்கத்தோடு மகிழ்வண்ணம்பிள்ளை திண்ணையை விட்டுக் கீழே இறங்கக் கால் எடுத்து வைத்தார். அவரிடம் அப்போது “டார்ச்” இல்லை.

தெருவாசல் கேட்டை ஒட்டிய குத்துச் செடிகளின் அருகே ஏதோ ஒரு பிராணி அசைவதை அவர் கண்கள் புரிந்து கொண்டன “யாரது?” என்று கத்தினார் பிள்ளை. திருட்டுப்பயல் எவனோ தான் என்ற எண்ணமே அவருக்கு முதலில் ஏற்பட்டது. “யாருடா அவன்?” என்று மீண்டும் உரக்கக் கூவினார்.

பதில் இல்லை. ஆனால் ஒரு செடியிலிருந்து மறுசெடிக்கு அது நகர்ந்ததனால் உண்டான சலசலப்பு கேட்டது. ஏதோ பிராணி நடப்பது போலவும் பட்டது. நாயா, பன்றியா அல்லது வேறு எதுவுமா என்று அவருக்குப் புரியவில்லை.

அவருள் எழுந்த ஒரு அச்சம் “எதாக இருந்தாலும் இருக்கட்டுமே சுட்டுவைப்போமே” என்று உந்துதல் கொடுத்தது. தன்னைகாத்துக் கொள்ளும் ஒரு உதைப்பும் சேர்ந்தது. அவர் தயங்கவில்லை சுட்டுவிட்டார்.

அடிபட்ட பிராணி வேதனையோடு உறுமியது. அந்த உறுமல் கோரமாய் ஒலித்தது. ரத்தத்தை உறைய வைக்கும் பயங்கரக் கூச்சலில் மரண வேதனையும் கலந்திருந்தது.

மகிழ்வண்ணம் பிள்ளை வீட்டினுள்ளிலிருந்து அரிக்கன் லாந்தரை எடுத்துக் கொண்டு இரண்டு பேர் வந்தனர். அண்டை அயல் வீட்டுக்காரர்கள் சிலரும் தடிகள் வேல்க்கம்புகள், வெட்டரிவாள்களோடும் வெளிச்சங்களோடும் வந்து சேர்ந்தார்கள்.

குண்டடி பட்டு, ரத்தத்தில் விழுந்து, செத்துக்கிடந்த தடிப்புலி ஒன்றை எல்லோரும் கண்டார்கள்.

“ஏ கடுவா! கடுவா செத்துப் போச்சு” “மகிழ்வண்ணம் அண்ணாச்சி புலியைச் சுட்டுக் கொன்னு போட்டாங்க!”

“ஒரே சூடு. புலி அவுட் சரியானகுறி.”

குறி லேசாகத் தப்பியிருந்தால், அண்ணாச்சி கதி என்னாகி யிருக்கும்? எவ்வளவு பெரிய கடுவா! இதுவந்து மேலே பாய்ஞ்சாலே ஆளு குளோஸ் ஆக வேண்டியது தான். அண்ணாச்சி ரொம்ப தைரியசாலி. தன்னந்தனியா: பெரிய புலியை குறிவச்சுச் சுட்டுவிட்டாகளே!….

இவ்வாறு இன்னும் பலவிதமாகவும் பேச்சுகள் ஆரவாரமாக எழுந்தன. புலியை பத்திரப்படுத்திவிட்டு: நாளை காலையில் பார்க்கலாம் என்று எல்லோரும் போனார்கள்

கதவுகளை நன்றாக சார்த்தி, அடிப்பூட்டு: மேல்பூட்டு: “அடி தண்டா” எல்லாம் போட்டும், உள்ளுற சிறு பயம் அரிக்கவே “லைட்டுகளை அணைக்க வேண்டாம். விடியவிடிய எரியட்டும்” என்று சொன்னார் பிள்ளை. பிறகு தனிமையில் மனைவி மீனாட்சியிடம் அவர் இயல்பாகத் தெரிவித்தார்

“எனக்கு அது புலியின்னே தெரியாது. கறுப்பா என்னமோ அசைஞ்சது. அவ்வளவுதான் தெரியும். அது நாயா, ஆடா, பன்றியாயின்னு கூட புரியலே. எதுவாகவும் இருக்கட்டும்னு தான் சுட்டுவச்சேன். அது இவ்வளவு பெரிய புலியுன்னு தெரிஞ்சிருந்தா நான் தைரியமா நின்னுசுட்டிருப் பேனா என்கிற சந்தேகம் எனக்கு இப்பகூட இருக்கு!”

உலகத்தை அவரைவிட அதிகம் நன்றாக புரிந்து வைத்திருந்த அந்த தர்ம பத்தினி “வாயைமுடிக்கிட்டு இருங்க. இப்படி இனிமே யார்கிட்டேயும் உளறிவைக்காதீங்க. வேணுமினா, புலி எப்படி உறுமிச்சு பாய வந்தது ஒரே குண்டுலே எப்படிச் செத்து விழுந்துதுன்னு அளந்து விடுங்க, கூச்சமோ தயக்கமோ வேண்டாம்”, என்று உபதேசம் புரிந்தாள்

அவள் தந்த தைர்ய இன்ஜெக்ஷ ன் பிள்ளைவாள் உள்ளத்திலும் சரியானபடி வேலை செய்யத் தவறவில்லை!

அம்மையாரின் நோக்கு சரியான நோக்கு தான்!

மறுநாள் நன்றாக விடிவதற்கு முன்னரே, ஊர்நெடுக மகிழ்வண்ணம் பிள்ளை கடுவாயை சுட்டுக் கொன்றவிஷயம் காது – கண்ணு – மூக்கு – கால் – கை எல்லாம் இணைக்கப்பட்டு விரைவில் பரவியது. கடுவாயைப் பார்க்க ஊர்க்கார்கள் – பெரியவர்கள் சின்னவர்கள், ஆண்கள் பெண்கள் – வந்த வண்ணமாக இருந்தார்கள்.

முற்றத்தின் நடுவிலே எடுப்பாக அந்தப் புலி கிடத்தப் பட்டிருந்தது. கூட்டமிட்டுப் பார்த்தவர்கள் ஆளுக்கு ஒன்று சொல்லி புலியை வியந்தார்கள். பக்கத்திலே நின்று பார்த்தது போல, மகிழ்வண்ணம்பிள்ளை எப்படிக் குறிபார்த்தார் – கடுவா என்னமாய் முறைத்து உறுமியது – அவர் எவ்வாறு சுட்டார் – அது எப்படி அலறிக் கொண்டு விழுந்து செத்தது என்று ஒரு சிலர் விளக்கிக் கூறித் தங்கள் “வாய் வண்ணம் காட்டிக் கொண்டிருந்தார்கள்.

அவர் என்ன சொன்னாலும் ஊர் நம்பத் தயாராக இருந்தது. அவர் மேலும் மேலும் சொல்ல மாட்டாரா என்று எதிர் பார்த்தது.

ஏனெனில், அவர் அந்த ஊரில் முதல் முதலாகப் புலியை சுட்டுக் கொன்ற வேட்டை வீரர், குறிதவறாமல் சுடக்கூடிய தீரர் என்பதை புன்னைக்காடு கண்டு கொண்டது.

(“வஞ்சிநாடு” – 1974)

– வல்லிக்கண்ணன் கதைகள், ராஜராஜன் பதிப்பகம், 2000 – நன்றி: http://www.projectmadurai.org/

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *