கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 14, 2020
பார்வையிட்டோர்: 18,702 
 

அத்தியாயம்-3 | அத்தியாயம்-4

நாங்கள் அந்த மலை உச்சியில் இரு நாட்கள் ஓய்வெடுத்து உடம்பைத் தேற்றினோம். ஒரு சிறிய விலங்கு ஒன்றும் கண்டோம். அதனால் இறைச்சியும் கிடைத்தது. எங்கள் தாகத்தைத் தணிக்க மழை நீர்க் குட்டையும் இருந்தது. நாங்கள் அந்தக் குகையில் இருந்து வெளியே வந்த சில மணி நேரங்களிலேயே கதிரவன் எட்டிப் பார்த்தான். அதன் வெம்மையில் சமீபத்திய நிகழ்வுகளினால் ஏற்பட்ட எங்களைப் போர்த்தி இருந்த சோர்வுகளையும் உதறி விட்டோம்.

மூன்றாவது நாள் காலையில் கீழிருக்கும் பள்ளத்தாக்கிற்குச் செல்வதற்கு வழி கிடைக்குமா என்று ஆராய ஆரம்பித்தோம். எங்களுக்கு நேர் கீழே வடக்கில் ஒரு பெரிய குளம் இருந்தது. அதில் பாண்ட்லு பெண்கள் ஆழமில்லாத இடத்தில் அமர்ந்து இருந்தது நன்றாகத் தெரிந்தது. மலை அடிவாரத்திற்கு மிக அருகில் பாண்ட்லு ஆண்கள் கூட்டமாக வடக்கு நோக்கி வேட்டையாடச் சென்று கொண்டிருந்தார்கள். மலை உச்சியில் இருந்து பார்க்கும்போது எல்லாம் தெளிவாகத் தெரிந்தது. உள்நாட்டுக் கடலின் ஒரு கரை மேற்கில் மங்கலாகத் தெரிந்தது. தென்மேற்கில் உள்ள பெரிய தெற்குத் தீவு எங்கள் முன் தெளிவாகத் தெரிந்தது. வட கிழக்கில் அஜோர் நடுக்கத்துடன் கூறிய வியரூவின் உலகமான ஊவோ தெரிந்தது. அது ஏரியின் மறு முனையில் இருந்ததால் மிகத் தெளிவாகத் தெரியவில்லை. அது கிட்டத்தட்ட அறுபது மைல் தொலைவு இருக்கும்.

நாங்கள் இருந்த உயரத்தில் வளி மண்டலம் தெளிவாக இருந்தால் அது தெளிவாகத் தெரிந்திருக்கும். ஆனால் கேஸ்பக்கின் காற்று ஈரப்பதத்துடன் கனமாக இருந்ததால் தொலைவில் இருக்கும் பொருட்கள் மங்கலாகத் தெளிவற்றதாய் இருந்தன. ஊவோவில் இருந்து கிழக்கில்தான் தனது தேசம், அதாவது காலுக்களின் தேசம், இருப்பதாக அஜோரும் தெரிவித்திருந்தாள். அந்த மலைச் சரிவின் தென் எல்லையைச் சுட்டிக்காட்டி அதன் தெற்கில்தான் க்ரோலுக்களின், வில் அம்பு மனிதர்களின், தேசம் இருக்கிறது என்று சொன்னாள். நாங்கள் பாண்ட்லு மற்றும் க்ரோலு மக்களின் நாடுகளைக் கடந்துதான் அவள் இடத்திற்குச் செல்ல முடியும். அதாவது 35 மைல் எதிரி நாடுகளின் நிலத்தைக் கடக்க வேண்டும். அதில் நினைத்தே பார்க்க முடியாத அபாயங்கள் எங்கும் நிறைந்திருக்கின்றன. பெரும்பாலும் நமது சக்திக்கு மீறியவை கூட இருக்கின்றன. எனது விமானம் மட்டும் இருந்திருந்தால் இருபது நிமிடங்களில் அவளது இடத்திற்குச் சென்று விட முடியும்.

இறுதியில் ஒரு வழி கண்டுபிடித்தோம். மலைச் சரிவில் இருந்து இறங்கி அது நேராக ஒரு ஒற்றையடிப் பாதையில் வழுக்கி விட்டது. அந்தப் பாதையில் ஏதோ ஒரு காலத்தில் விலங்குகள் நடமாட்டம் இருந்தது போல் தடயங்கள் இருந்தன. நான் முதலில் அஜோரை இறக்கி விட்டேன். அதன் பின் நானும் சறுகினேன். அப்படிச் சறுக்கியபோது என் தலைமுடி நட்டுக் குத்தலாக விறைப்பாய் நின்றது என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில் அந்த வீழ்ச்சி மிகவும் உயரமாய் இருந்தது. அதுவும் போக அந்த ஒற்றையடிப் பாதையும் மிகவும் குறுகலாக இருந்தது. அதில் இருந்து தவறினால் நேராகக் கீழிருக்கும் பாறையில் மோத வேண்டியதாய் இருக்கும். ஆனால் அங்கு அஜோர் என்னைப் பிடித்துச் சரியாக வழி நடத்தியதால் நான் நிதானமாகச் செல்ல முடிந்தது. அதன் பின் அங்கிருந்து நாங்கள் பள்ளத்தாக்கை நோக்கிச் சென்றோம். அதன் பின்னும் இரண்டு மூன்று மோசமான இடங்கள் இருந்தன. இருந்தாலும் ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் அவ்வளவு கடினமாக இல்லை அந்த மலை இறக்கம். நாங்கள் பாண்ட்லுக்களின் குகையின் மேற் பகுதியை அடைந்து விட்டோம் எந்தவிதத் தொந்தரவும் இல்லாமல். இங்கிருந்து மிகவும் மெதுவாகச் சென்றோம் அவர்களின் கூட்டத்தில் இருந்து யாரும் குறுக்கிடக் கூடாது என்பதற்காக.

பாண்ட்லு குகைகளில் பாதி தூரத்தைக் கடந்து வந்திருப்போம். அப்போது ஒரு மிகப் பெரிய உருவம் எங்கள் முன் வந்து நின்றது அங்கிருந்து சிறிதும் முன்னேற முடியாமல்.

“யார் நீங்கள்” என்று கேட்டான். அவன் என்னை அடையாளம் தெரிந்து கொண்டு விட்டான். எனக்கும் அவன் யார் என்று தெரிந்து விட்டது. அன்று என்னைக் கடத்திச் சென்று குகையில் அடைத்துக் கைகளைக் கட்டி விட்டவர்களில் ஒருவன் இவன். என்னைப் பார்த்த பிறகு அவனது பார்வை அஜோரிடம் சென்றது. அவன் ஒரு நல்ல மனிதனாகத் தெரிந்தான். அவனது கண்கள் தெளிவான தீர்க்கமானதாக இருந்தன. நல்ல நெற்றியும் உடல் வாகும் கொண்டவனாக இருந்தான். ஏறக்குறைய நான் பார்த்ததிலேயே கேஸ்பக்கின் பரிணாமத்தில் மேலோங்கியவனாக இருந்தான், அஜோரைத் தவிர்த்து.

“நீ உண்மையான காலு.” என்று அஜோரைப் பார்த்துச் சொன்னான். “ஆனால் இவன் வினோதமான வார்ப்பாக இருக்கிறான். காலுவின் முகம் இருக்கிறது. ஆனால் அவனது ஆயுதங்களும் உடம்பில் அணிந்திருக்கும் வினோதமான தோல்களும் காலுக்கள் போல் இல்லை. கேஸ்பக் போலும் இல்லை. யார் இவன்?”

“அவன் டாம்” என்று சுருக்கமாக அஜோர் சொன்னாள்.

“அப்படி யாரும் இங்கு இல்லை.” என்று தீர்க்கமாகப் பதில் கூறினான் அவனது ஈட்டியை எங்கள் முன் குத்துவது போல் நீட்டிக் கொண்டு.

“என் பெயர் டாம்” என்று நான் பேச ஆரம்பித்தேன். “நான் கேஸ்பக் நாட்டின் எல்லை தாண்டிய ஒரு தேசத்தில் இருந்து வந்திருக்கிறேன்.” அது அவனைச் சமாதானப் படுத்தும் என்று எண்ணினேன். நானும் எனது குண்டுகளைச் செலவு செய்ய விரும்பவில்லை. மேலும் அந்தச் சத்தத்தில் அவனது கூட்டாளிகளுக்கு எச்சரிக்கை கொடுக்கவும் விரும்பவில்லை. “நான் அமெரிக்காவில் இருந்து வருகிறேன். அதைப் பற்றி நீ கேள்விப் பட்டிருக்க மாட்டாய். எனது நாட்டில் இருந்து வந்து காணாமல் போன வேறு சிலரைத் தேடி நான் இங்கு வந்திருக்கிறேன். உன் மீதோ உனது மக்கள் மீதோ எனக்கு எந்தவித பிரச்சினையும் கிடையாது. நாம் நம் வழியில் அமைதியாகப் போய் விடுவோம்”

“நீ அங்கு போகிறாயா?” என்று வட திசை நோக்கிக் கை காட்டியபடியே கேட்டான்.

“ஆம்” என்று நான் பதில் அளித்தேன்.

அவன் சில நிமிடங்கள் அமைதியாக இருந்தான் ஏதோ யோசனையில் ஆழ்ந்தபடி. இறுதியாகப் பேச ஆரம்பித்தான். “அது என்ன?” என்று கேட்டான். “அப்புறம் அது என்ன?” என்று முதலில் என் சுழல் துப்பாக்கியைக் காட்டினான் பின் எனது கைத் துப்பாக்கியைக் காட்டினான்.

“அவைகள் ஆயுதங்கள்” என்றேன். “தூரத்தில் இருப்பவர்களைத் தாக்கக் கூடிய ஆயுதங்கள்” நான் தூரத்தில் இருந்த குளத்தில் நீராடிக் கொண்டிருந்த பெண்களைச் சுட்டிக்காட்டினேன். “இதை வைத்து” எனது துப்பாக்கியை ஆட்டி “அங்கிருக்கும் எத்தணை பெண்களை வேண்டும் என்றாலும் என்னால் கொல்ல முடியும் இங்கிருந்து அசையாமல்.”

அவன் புரியாமல் விழித்தான். இருந்தாலும் நான் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தேன். “இதை வைத்து” என்று எனது சுழல் துப்பாக்கியை வலது உள்ளங்கையால் பிடித்தபடியே சொன்னேன் — “அங்கே தூரத்தில் இருக்கும் உங்கள் வீரர்களைக் கொல்ல முடியும்” என்று எனது இடது கையை தூரத்தில் வேட்டையாடிக் கொண்டிருக்கும் சிறிய உருவங்களாய் வடக்கில் தெரிந்த அவனது கூட்டாளிகளைச் சுட்டிக் காட்டினேன்.

அவன் அதைக் கேட்டு பலமாய் நகைத்தான். “செய்” என்று ஏளனமாய்க் கத்தினான். “அதன் பின் நீ சொல்லும் வினோதமான கதைகள் அனைத்தையும் நான் நம்புகிறேன்”

“ஆனால் நான் அவர்களில் யாரையும் கொல்ல விரும்பவில்லை.” என்றேன். “நான் ஏன் கொல்ல வேண்டும்”

“ஏன் கூடாது” என்று கேட்டான். “அவர்கள் உன்னைச் சிறை பிடித்தபோது நிச்சயம் உன்னைக் கொன்றிருப்பார்கள். இப்போதும் உன்னைப் பிடித்தால் நிச்சயம் கொன்று போட்டு விடுவார்கள். அதே நேரத்தில் உன்னைச் சாப்பிட்டும் விடுவார்கள். ஆனால் அதே நேரத்தில் நீ ஏன் அதை முயற்சி செய்ய மாட்டேன் என்கிறாய் என்பதும் எனக்குத் தெரியும். ஏனெனில் நீ சொன்னது அனைத்தும் பொய். உனது ஆயுதம் தூரத்தில் இருந்து கொல்லாது. அது ஒரு விந்தையான இரும்புக் கம்பி அவ்வளவுதான். எனக்குத் தெரிந்தவரையில் நீ ஒரு கீழான போலுவாகத்தான் இருக்க முடியும்.”

“நான் உனது ஆட்களையே கொல்ல வேண்டும் என்று நீ ஏன் விரும்புகிறாய்?” என்று கேட்டேன்.

“அவர்கள் இனி மேலும் எனது ஆட்கள் கிடையாது” என்று பெருமிதமாகச் சொன்னான். “நேற்றிரவு, நள்ளிரவில், எனக்கு அழைப்பு வந்தது. இப்படி என் தலைக்கு வந்தது” என்று சொல்லி அவன் தன் இரு கைகளைத் தட்டினான். “அதனால் நான் விழித்தேன். அதற்காக நீண்ட நேரம் காத்திருந்தேன். இன்று நான் ஒரு க்ரோலுவாகி விட்டேன். இன்று நான் காஸ்லூப்பாக் செல்கிறேன். (மனிதர்கள் யாருமில்லாத நாடு.) க்ரோலுவிற்கும் பாண்ட்லுவிற்கும் நடுவில். அங்கே நான் எனது அம்பு வில் மற்றும் கேடயத்தைப் பயன்படுத்துவேன். செம்மான்களை வேட்டையாடுவேன். அதன் தோலில் செய்த மேலாடையைப் போட்டுக் கொள்வேன். அதுதான் எங்கள் சொத்துக்களின் அடையாளம். இதெல்லாம் செய்தபின் எங்கள் க்ரோலு தலைவரிடம் செல்வேன். அவர் நிச்சயம் மறுத்துப் பேச மாட்டார். அதனால்தான் அந்தக் கீழான பாண்ட்லுவை நீ கொல்ல வேண்டும் நீ உயிரோடு இருக்க வேண்டும் என்றால். எனக்கு எந்தவித அவசரமும் இல்லை.”

“ஆனால் நீ ஏன் என்னைக் கொல்ல வேண்டும் என்று நினைக்கிறாய்?” என்று கேட்டேன்.

அவன் குழப்பமடைந்தான். இறுதியில் என்ன சொல்வதென்று தெரியாமல் கைவிட்டுவிட்டான். “தெரியவில்லை” என்று ஒத்துக் கொண்டான். “அதுதான் கேஸ்பக்கின் வழக்கம். நாங்கள் கொல்லவில்லை என்றால் கொல்லப்படுவோம். அதனால் தங்கள் இனத்தாரைத் தவிர வேறு யாரையாவது பார்த்தால் முந்திக் கொண்டு கொன்று விடுவதுதான் வழக்கம். இன்று காலை அனைவரும் வேட்டையாடச் செல்லும் வரை நான் எனது குகையில் ஒளிந்து கொண்டேன். ஏனெனில் நான் க்ரோலு என்று தெரிந்தவுடன் என்னைக் கொன்று விடுவார்கள். அவர்கள் என்னைக் காஸ்லூபாக்கில் பார்த்தாலும் கொன்று விடுவார்கள். க்ரோலுவும் அதே போல்தான். நான் எனது க்ரோலு ஆயுதங்கள் மற்றும் மேலாடை பெறுவதற்குள் என்னைப் பார்த்தால் அவர்களும் என்னைக் கொன்று விடுவார்கள். உன்னால் முடிந்தால் நீயும் கூட என்னைக் கொன்று விடுவாய். அதனால்தான் தூரத்தில் இருந்தும் மற்றவர்களைக் உன் ஆயுதம் கொல்லும் என்று நீ சொல்வது பொய் என்று எனக்குத் தெரியும். அது உண்மையாய் இருந்திருந்தால் நீ எப்போதோ என்னைக் கொன்றிருப்பாய். இங்கே வா! நான் இன்னும் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. இந்தப் பெண் அழகாக இருக்கிறாள். அதனால் இவளை மட்டும் நான் என்னுடன் க்ரோலு நாட்டிற்குக் கூட்டிச் செல்கிறேன்” அப்படிச் சொல்லிக் கொண்டே அவன் தன் ஈட்டியை நீட்டிக் கொண்டு முன்னேறி வந்தான்.

எனது துப்பாக்கி எனது இடுப்பில் தயாராக இருந்தது. அவன் அவ்வளவு அருகில் இருந்ததால் அதை என் தோளுக்கு உயர்த்தக் கூடத் தேவை இல்லை. விசையை அழுத்தினால் மட்டும் போதும். அவனைப் பரலோகத்திற்கு நினைத்த நேரத்தில் அனுப்பி விடலாம். இருந்தாலும் நான் தயங்கி நின்றேன். ஒரு மனித உயிரை எடுப்பது என்பது எனக்கு மிகவும் கடினமாய் இருந்தது. இந்தக் காட்டு மனிதனிடம் எனக்கு எந்தவித முன் விரோதமும் இல்லை. ஒரு காட்டு விலங்கு போலத்தான் இப்போது அவன் என்னிடம் நடந்து கொள்கிறான். இறுதி வரை எப்படியாவது தடுத்து விடலாம் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். அஜோர் எனது தோளிற்கு அருகில் நின்றிருந்தாள். அவள் கத்தி அவளிடம் தயாராக இருந்தது. அவன் தன்னை அவனோடு கூட்டிச் செல்வான் என்ற எண்ணம் அவளது உதடுகளில் ஒரு பரிகாசப் புன்னகையை ஒட்டி வைத்திருந்தது.

நான் அவனைச் சுட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது எங்களுக்குக் கீழே இருந்த பெண்களின் கூச்சல் சத்தம் ஒரு சேரக் கேட்டது. அதனால் அவன் ஒருக் கணம் தயங்கி நின்று கீழே பார்த்தான். அவனைத் தொடர்ந்து அங்கே நடந்த குழப்பத்திற்கு என்ன காரணம் என்று நானும் கண்டேன். அந்தப் பெண்கள் குளத்தில் இருந்து மெதுவாகக் குகைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே ஒரு பிரமாண்டமான குகை சிங்கம் ஒன்று அவர்கள் முன் வந்து நின்றது. அது அவர்களுக்கும் மலைச் சரிவிற்கும் நடுவில் அந்தக் குறுகலான ஒற்றையடிப் பாதையில் நின்றது. அந்தப் பாதைதான் குளத்திற்கு இட்டுச் செல்லும். அதைக் கண்டவுடன் பயங்கரக் கூச்சலுடன் அவர்கள் மீண்டும் குளத்தை நோக்கி ஓடோடிச் சென்று கொண்டிருந்தார்கள்.

“அதனால் எந்தப் பலனும் அவர்களுக்கு ஏற்பட போவதில்லை.” என்று சொன்னான் அவன். அவனது குரலில் கொஞ்சம் உற்சாகம் ததும்பியது. “அவர்களுக்கு எந்தப் பிரயோசனமும் இல்லை. அந்தச் சிங்கம் அவர்கள் மீண்டும் வரும் வரை காத்திருந்து அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேரையும் கவ்விக் கொண்டு சென்று விடும். அங்கே ஒருத்தி இருக்கிறாள்” என்று அடுக்கினான். கொஞ்சம் கவலை தோய்ந்த முகத்தோடு “அவள் என் பின்னால் க்ரோலு தேசத்திற்கு வருவதாக வாக்களித்திருந்தாள். ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் சேர்ந்தே இருந்தோம்.” அவன் தன் ஈட்டியை தன் தலைக்கு மேல் தூக்கி அந்தச் சிங்கத்தை நோக்கி எறிவது போல் சைகை செய்தான். “அவள் சிங்கத்திற்கு மிக அருகில் இருக்கிறாள்.” என்று முணுமுணுத்தான். “அது அவளைக் கொன்று விடும். அவள் எப்போதும் என்னுடன் வரவே முடியாது. நடக்கவே நடக்காது. எந்த ஒரு வீரனும் அவ்வளவு தூரம் எந்தவித ஆயுதத்தையும் எறிய முடியாது”

அவன் பேசிக் கொண்டிருக்கும்போதே நான் அந்த விலங்கைக் குறி பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் பேசி முடிக்கும்போது நான் துப்பாக்கியின் விசையை அழுத்தினேன். நான் குறி பார்த்த இடத்தில் சரியாக அதன் முடியை உரசிக் கொண்டு குண்டு பாய்ந்தது. அதன் தோள் பட்டையின் பின் இருந்த முதுகுத் தண்டை உடைத்து அதன் இதயத்தைக் கிழித்தது. அந்த ஒற்றையடிப் பாதியிலேயே அது இறந்து விழுந்தது. அந்தப் பெண்கள் அனைவரும் சிங்கத்தைப் பார்த்த அதே பயத்தை இப்போது துப்பாக்கிக் குண்டின் மீது வைத்தார்கள். அந்தப் பெரும் சத்தம் சிங்கத்தை வீழ்த்தியதும் ஒருவாறு ஆசுவாசப் படுத்திக் கொண்டார்கள். அதன் இறந்த உடல் நோக்கி மெதுவாக முன்னேறிக் கொண்டிருந்தார்கள்.

சுட்ட மறு கணமே நான் அவனைப் பார்த்தேன். அவன் என்னைத் தாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து விடுபட்டு அதிசயமாக என்னைப் பார்த்தான்.

“உன்னால் அதைச் செய்ய முடிந்திருந்தால் நீ ஏன் என்னை இதுவரை கொல்லாமல் விட்டு வைத்தாய்?” என்று வினவினான்.

“நான் முன்பே சொன்னேன். உன்னிடம் எனக்கு எந்தவித விரோதமும் இல்லை. முன் விரோதம் இல்லாத ஆட்களைக் கொலை செய்வது எனக்குப் பிடிக்காது”

ஆனால் அவனுக்கு அந்தக் கருத்து மண்டையில் ஏறவில்லை. “நீ கேஸ்பக் மனிதன் இல்லை என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன்.” என்று சொன்னான். “ஏனெனில் எந்த ஒரு கேஸ்பக் மனிதனும் இப்படியொரு சந்தர்ப்பத்தை விட்டு விட மாட்டான்.” இவனது இந்தக் கூற்று சற்று மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என்பதைப் பின்னால் கண்டு பிடித்தேன். மேற்குக் கரையில் இருக்கும் மனிதர்களும் கிழக்கில் இருக்கும் க்ரோலுவும் கூட அவன் சொன்னது போல் இவ்வளவு ரத்தம் காணத் துடிக்கும் ஆட்கள் இல்லை. “பின் உனது ஆயுதம்!” என்று அவன் தொடர்ந்தான். “நீ பொய் சொல்கிறாய் என்று நான் நினைத்த போது உண்மைதான் பேசி இருக்கிறாய்” என்று சொல்லிவிட்டுச் சட்டென்று “நாம் நண்பர்களாய் இருப்போம்!” என்றான்.

நான் அஜோரை நோக்கி “இவனை நம்பலாமா?” என்று கேட்டேன்.

“ஆம்” என்று அவளும் பதில் அளித்தாள். “நிச்சயம். அவன் நண்பர்கள் ஆகலாம் என்று கேட்கவில்லையா என்ன?”

அந்த நேரத்தில் எனக்கு கேஸ்பக்கின் ஆதி மனிதர்களுக்கு நம்பிக்கையும் விசுவாசமும் மட்டுமே இரு வலிமையான குணாதிசயங்கள் என்று தெரிந்திருக்கவில்லை. பொய் பித்தலாட்டம் துரோகம் இவைகளில் தேர்ச்சி பெருமளவு அவர்களிடம் அந்தளவு கலாச்சாரம் வளர்ந்திருக்கவில்லை.

“நாம் அனைவரும் சேர்ந்தே வடக்கு நோக்கிச் செல்லலாம்.” என்று தொடர்ந்தான் அந்த வீரன். “நான் உங்களுக்காகச் சண்டை செய்கிறேன். நீங்கள் எனக்காகச் சண்டை இடுங்கள். நான் இறக்கும் வரை உங்களுக்குப் பணி செய்வேன். இறந்து விட்டாள் என்று நான் கைவிட்ட சோ-ஆலை நீ காப்பாற்றி இருக்கிறாய்.” என்று சொல்லிக் கொண்டே தனது ஈட்டியைத் தூர எறிந்தான். தன் இரு கைகளாலும் கண்களைப் பொத்திக் கொண்டான். நான் அஜோரை நோக்கி என்ன இது என்று விசாரிப்பது போல் பார்த்தேன். தன்னால் முடிந்தவரை அவளும் விவரிக்க ஆரம்பித்தாள். இதுதான் கேஸ்பக்கின் நம்பிக்கை உறுதி மொழி என்று சொன்னாள். “இதன் பின் என்றும் அவனைப் பார்த்து நாம் பயப்படத் தேவை இல்லை.” என்று சொல்லி முடித்தாள்.

“நான் என்ன செய்வது” என்று கேட்டேன்.

“அவன் கண்களில் இருந்து அவன் கைகளை எடுத்து அவனிடம் அந்த ஈட்டியைக் கொடு” என்றாள்.

அதே போல் நான் செய்தேன். அவன் மிகவும் மகிழ்ந்தான். அதன் பின் நான் அவனது நட்பை வேண்டாம் என்று சொல்லி இருந்தால் நீ என்ன செய்திருப்பாய் என்று கேட்டேன். நான் கண்டு கொள்ளாமல் சென்றிருந்தால் கண்களில் இருந்து மறைந்ததும் மீண்டும் நாம் பரம எதிரிகளாய் மாறி விடுவோம் என்று இருவரும் சொன்னார்கள். “ஆனால் என்னால் அவனை எளிதில் கொன்றிருக்க முடியும்” என்று சொன்னேன்.

“ஆம்” என்று பதில் அளித்த அவன் “ஆனால் தன் சுய அறிவுள்ள எந்த மனிதனும் தான் நம்பாதவன் முன் குருடனாய் இருக்க மாட்டான்”

அது எனக்கு ஒரு சரியான பாராட்டு. அதில் இருந்து எனது புதிய நண்பனின் விசுவாசத்தை நான் எவ்வளவு தூரம் மதிக்க வேண்டும் என்று கற்றுக் கொண்டேன். அவன் எங்களுடன் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவனுக்கு இந்த உலகம் அத்துப்படி. அதே போல் அவனும் மிகத் தைரியமான போராளி. இவனைப் போல் இன்னும் பலரை நான் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணம் எனக்குள் தோன்றியது.

இப்பொழுது அந்தப் பெண்கள் எல்லாம் மலைச் சரிவை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். தோமர் என்ற அந்த வீரன் அவர்களுக்கு முன் நாம் பள்ளத்தாக்கை நோக்கிச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினான். ஏனெனில் அவர்கள் நம்மைச் சிறைப் பிடிக்க நினைப்பார்கள். நிச்சயம் அஜோரை விடவே மாட்டார்கள். அதனால் அந்தக் குறுகலான பாதையில் நாங்கள் விரைவாகச் செல்ல ஆரம்பித்தோம். அந்தப் பெண்களுக்குச் சற்று முன்னதாகவே நாங்கள் மலையடிவாரத்தை அடைந்தோம். எங்களை நிற்கச் சொல்லி அவர்கள் சொன்னார்கள். இருந்தாலும் நாங்கள் விரைவாக எட்டு வைத்தோம். அவர்களிடம் எந்த பிரச்சினையும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதால். அப்படி ஒன்று நடந்தால் அவர்களில் சிலர் உயிரை இழக்க நேரலாம்.

நாங்கள் ஒரு மைல் தூரம் சென்றிருப்போம். அப்போது தோமர் பேர் சொல்லி யாரோ அழைப்பது கேட்டது. அங்கே ஒரு பெண் வேகமாக எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள். அவள் அருகில் வந்ததும் மிக அழகாகத் தெரிந்தாள். அவளைப் போன்றே நான் கேஸ்பக்கில் பார்த்த அனைத்துப் பெண்களும் மிக இளமையாகவே இருந்தனர்.

“அது சோ-ஆல்” என்று கத்தினான் தோமர். “அவளுக்கென்ன பைத்தியமா இப்படி என்னைத் தொடர்ந்து வருவதற்கு”

சற்று நேரத்தில் அந்தப் பெண் எங்கள் முன் நின்றாள் மூச்சு வாங்கியபடி. அவள் என்னையோ அஜோரையோ சிறிதும் கண்டு கொள்ளவில்லை. தோமரை விழுங்கியபடியே பார்த்தவள் “நான் பிழைத்து விட்டேன், நான் பிழைத்து விட்டேன்” என்று கதறி அழுதாள்.

“சோ-ஆல்” என்று மட்டுமே அவனால் சொல்ல முடிந்தது.

“ம்” என்று தொடர்ந்தாள். “நான் குளத்தை விட்டு நீங்கிய சிறிது நேரத்திலேயே அந்தச் சத்தம் கேட்டது. ஆனால் அதற்குக் காரணம் நீதான் என்பது எனக்குத் தெரியாது. உன் கண்களிலேயே தெரிகிறது. தோமர், தோமர். நாம் இருவரும் சேர்ந்தே செல்வோம்.” என்று சொல்லிக் கொண்டே தன் இரு கைகளையும் வீசி அவனை அணைத்தாள்.

மனதை மிகவும் கவரும் செயல் அது. அதைப் பார்த்தாலே தெரிந்தது அவர்கள் இருவரும் நீண்ட நாட்களாகப் பழகியவர்கள் என்று. மேலும் கேஸ்பக்கின் வினோதமான பரிணாமக் கொள்கையின் படி அந்த நிகழ்வால் இருவரும் விலகப் போகிறோம் என்றும் புரிந்து கொண்டிருப்பார்கள். இப்பொழுதுதான் இதைப்பற்றியெல்லாம் எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக விளங்குகிறது. கேப்ரோனாவின் தடுப்பரண்களான மலைத் தொடர்களுக்கு அப்பால் நடக்கும் இவ்வளவு அருமையானதொரு நடைமுறையைப் பற்றி நான் பத்தில் ஒரு பங்கு கூடத் தெரிந்து கொண்டதில்லை. இப்போதும் கூட தெரிந்து கொண்டேனா என்பதும் சந்தேகம்தான்.

தோமர் சோ-ஆலுக்கு நடந்ததை விவரித்துக் கொண்டிருந்தான். நான்தான் அந்தச் சிங்கத்தை கொன்றதாகவும் அவளது உயிரைக் காப்பாற்றியதாகவும் கூறினான். அஜோர் எனது ஆள் என்றும் தன்னைப் போல் அவளும் இருவருக்கும் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தான்.

முதலில் அஜோரும் சோ-ஆலும் எதிரும் புதிருமான பழகாத பூனைகள் போல் இருந்தனர். ஆனால் விரைவில் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விட்டனர் ஒரு ஆயுத உடன்படிக்கை ஏற்பட்டது போல். அதன் பின் மிக அந்நியோன்யமான தோழிகளாகி விட்டனர். சோ-ஆல் வலிமையான அழகான பெண்ணாய் இருந்தாள். வலிமையிலும் பாய்ச்சலில் ஒரு பெண் புலி போன்ற தோற்றம் இருந்தது. அதே நேரத்தில் இனிமையான பெண்மையும் அவளிடம் குடி கொண்டிருந்தது. அஜோரும் நானும் அவளிடம் மிகுந்த அன்பு காட்டினோம். அவளும் அதே போல் எங்களிடம் அன்பு காட்டினாள். தோமர் கிட்டத்தட்ட ஒரு மனிதனாய் இருந்தான் – காட்டுமிராண்டி என்று வேண்டுமானால் நீங்கள் சொல்லிக் கொள்ளலாம், ஆனால் நிச்சயம் மனிதனில்லை.

தோமர் உடன் பயணித்ததால் பயணம் மிகவும் எளிமையாகவும் பாதுகாப்பாகவும் இருந்தது. அஜோரும் நானும் எங்கள் வழியில் தனியாகச் செல்லவில்லை. அவர்கள் இருவரும் தங்கள் க்ரோலு நாட்டிற்குள் செல்வதற்கு முன் தங்களுக்கு வேண்டிய ஆயுதங்கள் மற்றும் உடைகள் சேகரிப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் நாங்கள் அவர்கள் உடனே இருந்தோம். அதனால் அவர்களிடம் மிகவும் ஒட்டுதலோடு பழகி விட்டோம். அதனால் பிரிய வேண்டிய நேரத்தை எண்ணி மிகவும் வருத்தமடைந்தோம். அவர்கள் தங்கள் கூட்டாளிகளுடன் சேர்ந்த பின் நாங்கள் தனியே பயணத்தைத் தொடர வேண்டுமே என்று எண்ணிக் கலங்கினோம். க்ரோலு இன மக்கள் நிச்சயம் என்னையும் அஜோரையும் நட்பாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தோமர் மிகவும் பயப்பட்டதால் நாங்கள் அவர்களைத் தவிர்க்க வேண்டியதாயிற்று.

அவர்களுடன் நட்பு பாராட்ட முடிந்திருந்தால் எங்களுக்கு மிகவும் சவுகர்யமாய் இருந்திருக்கும். ஏனெனில் அவர்களது நாடு காலுவின் நாட்டிற்கு அருகில்தான் இருந்தது. அவர்களது நட்பினால் அஜோரின் ஆபத்துக்கள் எல்லாம் தொலைந்து விடும் நானும் எனது நெடும் பயணத்தில் பாதியை முடித்திருப்பேன். நான் இதுவரை கடந்து வந்த பாதையைப் பார்க்கும் போது நான் எப்படி மீதிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்து என் நண்பர்களைப் பார்ப்பேனோ தெரியவில்லை. தீவின் மேற்குக் கரையில் இருந்து தெற்கு நோக்கிச் செல்லச் செல்ல ஆபத்துக்கள் அதிகமாகிக் கொண்டே செல்லும் வினோதமான ஊர்வன விலங்குகளின் பூமியை நெருங்கும் வரை. ஆலு மற்றும் ஹோலுக்களின் பயங்கரங்கள் தீவின் தென்கோடியில் அதிகம். அதன் பின் எனது கூட்டாளிகளை நான் கண்டுபிடிக்கவில்லை என்றால் எனக்கு என்னவாகும். எனக்குத் தெரிந்து கேஸ்பக்கில் எந்தவொரு பகுதியிலும் என்னால் சிறிது காலம் கூட வசிக்க முடியாது. என் குண்டுகள் தீர்ந்த மறு நொடி நான் இறந்ததற்குச் சமம்.

காலுக்கள் ஒருவேளை என்னை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அஜோரால் கூட அதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஒரு வேளை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றே வைத்து கொள்வோம், அங்கிருந்து என்னால் மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே சென்று சேர முடியுமா என் நண்பர்களைக் கண்டு பிடிக்க முடியாத பட்சத்தில் காலுக்களின் நாட்டிற்கு திரும்ப முடியுமா. சந்தேகம்தான். இருந்தாலும் நான் அஜோரிடம் இருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன். அவளும் விதியை நம்புகிறவள்தான். கேஸ்பக்கில் தேவைப்படுவது போல் வெளி உலகின் முழு கிறித்துவனுக்கும் தேவைப்படக் கூடிய ஒரு தத்துவம்தான் அது.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *