கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 11, 2020
பார்வையிட்டோர்: 4,891 
 

அத்தியாயம்–2 | அத்தியாயம்–3

நான் எழுந்த போது நன்றாக விடிந்திருந்தது. அஜோர் குத்துக்காலிட்டு மான் கறியை மரக்கரியின் குவியலில் போட்டு வாட்டிக் கொண்டிருந்தாள். நம்பினால் நம்புங்கள், புது நாளின் விடியலைப் பார்த்ததும் எழுந்தவுடன் மான் கறி சமையலின் இனிமையான வாசனை நுகர்ந்ததும் மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. புது நம்பிக்கை பிறந்தது. நேற்றைய இரவு நடந்த கொடூரங்கள் எல்லாம் மறைந்து போயின. மெல்லிய தேகம் கொண்ட அழகான முகம் கொண்ட அந்தப் பெண்ணும் ஒரு காரணமாக இருக்கலாம். அவள் திரும்பி என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள் அவளது நேர்த்தியான பற்களைக் காட்டிக் கன்னங்களில் மகிழ்ச்சியின் அறிகுறியான குழி விழ. இதுவரை பார்த்திராத அருமையான காட்சி. அப்போதுதான் நான் நினைத்துப் பார்த்தேன். அவள் கல்வி பயிலாத ஒரு காட்டுமிராண்டி என்றும் பரிணாமத்தில் என்னை விட மிகவும் கீழிருக்கிறாள் என்றும் எண்ணி வருத்தமடைந்தேன்.

எடுத்தவுடன் என்னை வெளியில் அழைத்துச் சென்றாள். அங்கு இரவு கரடியிடம் இருந்து நாம் எப்படிக் காப்பாற்றப்பட்டோம் என்பதைக் காண்பித்தாள். அங்கே ஒரு பெரிய பட்டாக்கத்திப் பல் புலியின் தோலும் உடலும் நாடா போன்று கிழிக்கப்பட்டிருந்தது. எங்களது குகையில் இருந்து சிறிது தூரத்தில் அதே போல் கிழிக்கப்பட்ட குடல்கள் உருவப்பட்ட பெரிய குகைக்கரடியின் இறந்த உடலும் கிடந்தது. இந்த இருபதாம் நூற்றாண்டில் ஒரு பட்டாக்கத்திப் பல் புலியினால் ஒருவன் உயிர் காப்பாற்றப்படுவது என்பது ஒரு வினோதமான அனுபவம். ஆனாலும் அது நடந்திருக்கிறது. என் கண் முன்னே அதற்குச் சாட்சியங்கள் இருக்கின்றன.

கேஸ்பக்கின் விலங்குகள் அவ்வளவு பெரியவை. அதனால் எந்நேரமும் தின்று கொண்டிருந்தால்தான் அவைகளின் தசைகள் வலுப் பெறும். அதன் பலனாக அவை எந்த விலங்கின் கறியையும் உண்ணும். தன் கண்களில் படும் எவ்வளவு பெரிய விலங்காக இருந்தாலும் தாக்கி விடும். இரண்டாவது கூற்றின்படி, புதைப்படிமவியல் மற்றும் இயற்கை ஆராய்ச்சியாளர்களுக்கும் இதை நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன், என்னவென்றால், குகையில் வாழும் கரடி பட்டாக்கத்திப் பல் புலி சிங்கங்கள் மற்றும் பெரிய மாமிசம் உண்ணும் ஊர்வன விலங்குகள் அனைத்தும் ஒரே நாளில் இரு கொலைகள் செய்யும். காலை ஒன்று இரவு மற்றொன்று. அவை உடனே அதன் அனைத்து மாமிசத்தையும் தின்று விடுகின்றன. அதன் பின் படுத்துச் சில மணி நேரங்கள் உறங்குகின்றன. நல்லவேளையாக அதன் எண்னிக்கை மிகவும் குறைவாக இருக்கின்றன. இல்லையென்றால் கேஸ்பக்கில் எந்தவொரு விலங்கும் உயிரோடு இருக்காது. அதன் அகோரப் பசிதான் அவைகளின் எண்ணிக்கையை மற்ற விலங்குகள் உயிரோடு இருப்பதற்குத் தேவையான அளவு குறைத்து வைத்திருக்கிறது. இனப்பெருக்க காலத்தில் கூட பெரிய ஆண் விலங்குகள் பெரும்பாலும் தன் இணையைக் கடித்துச் சாப்பிட்டு விடுகின்றன. எப்போதாவது ஆணும் பெண்ணும் சேர்ந்து தன் குட்டியை கூடச் சாப்பிட்டு விடுகின்றன. மனித மற்றும் அரை மனித இனங்கள் எப்படி இத்துணைக் காலம் கடந்தும் இவைகளிடம் மாட்டாமல் தப்பித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்பது என் அறிவிற்கு அப்பாற்பட்ட விஷயம்.

காலை உணவு முடிந்ததும் அஜோரும் நானும் வடக்கு நோக்கி எங்கள் பயணத்தைத் தொடர ஆரம்பித்தோம். நாங்கள் சற்றுத் தூரம் கடந்த உடனே எங்களைக் கையில் கம்புகளுடன் வந்த மனிதக் குரங்குகள் தாக்க ஆரம்பித்தன. ஆலுக்களை விட பரிணாமத்தில் ஒரு படி மேலே இருந்தார்கள். அஜோர் அவர்களை போலு, கழி மனிதன், என்று சொன்னாள். கைத் துப்பாக்கியின் ஒரு சூட்டில் ஒருவன் விழுந்தான் மற்றவர்கள் அனைவரும் மறைவிடம் தேடி ஓடி விட்டார்கள். ஆனால் அந்த நாளில் பல தடவை அவர்கள் தொந்தரவு செய்தார்கள். அவர்களின் நாட்டைக் கடந்து ஸ்தோலு, அல்லது கோடரி மனிதன், நாட்டை அடையும் வரை. அவர்கள் முடி கம்மியாகவும் மனிதர்கள் போல நிறைய அம்சங்களும் உள்ளவர்களாக இருந்தார்கள். அவர்கள் எங்களை அழித்து விட அவ்வளவு ஆர்வமாய் இருக்கவில்லை. ஆனாலும் அவர்கள் எங்கள் மேல் மிக ஆர்வமாய் இருந்தார்கள். எங்களைச் சிறிது தூரம் பின் தொடர்ந்தார்கள். மிக நெருங்கி வந்து ஆராய்ச்சி செய்தார்கள். அவர்கள் எங்களை அழைத்தார்கள். அஜோர் அவர்களுக்கு பதில் சொன்னாள். ஆனால் அதில் அவர்கள் திருப்தி அடையவில்லை. அதனால் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மிரட்டத் தொடங்கினார்கள். அதன் பின் எங்களைத் தாக்கவும் தயாராகி விட்டார்கள் என்று நினைக்கிறேன். திடீரென்று ஒரு மான் புதரில் இருந்து எங்கள் முன் வந்து நின்றது. எங்களுக்கும் உணவு தேவைப்பட்டது. கிட்டத்தட்ட மதியம் ஒரு மணி ஆகி விட்டது. எனக்குப் பசிக்க ஆரம்பித்து விட்டது. அதனால் எனது துப்பாக்கியை எடுத்து ஒரே சூட்டில் அதை வீழ்த்தினேன். அதைப் பார்த்தவுடன் அவர்களின் உணர்ச்சியில் மின்சாரம் பாய்ந்தது போல் ஆகி விட்டது. அதனால் அவர்கள் சண்டையிடும் எண்ணத்தைக் கை விட்டு விட்டார்கள். எங்கள் வழியை மறைத்து நின்றவர்கள் ஓடி ஒளிந்து கொண்டார்கள்.

அன்றிரவு நாங்கள் ஸ்தோலு நாட்டில் ஒரு ஓடைக்கு அருகில் தங்கினோம். அங்கே ஒரு சின்ன குகை கிடைத்தது. அது மிகவும் மறைவாய் இருந்தது. அதனால் எந்தவொரு விலங்கும் அடைய முடியாது. மான் கறியை உண்ட பின் அஜோர் பறித்து வந்த சில பழங்களையும் உண்டோம். அதன் பின் அந்தச் சிறு ஓட்டையில் தவழ்ந்து உள்ளே சென்றோம். அதன் வாயிலில் இதற்காகவே நான் எடுத்து வந்த குச்சிகள் மற்றும் கற்களை வைத்து பலமான தடுப்பைக் கட்டினேன். அந்த ஓடையில் நீந்தாமல் எந்தவொரு விலங்கும் வந்து சேர முடியாது. அதனால் தாக்குதலில் இருந்து மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தேன். அந்தக் குகை மிகவும் சிறியது. மேற் கூரை மிகவும் உயரம் குறைந்து இருந்ததால் நிற்கக் கூட இயலவில்லை. தரையும் மிகவும் குறுகலாக இருந்ததால் எப்படியோ இருவரும் ஒட்டிக்கொண்டு இருந்தோம். ஆனால் நாங்கள் இருவரும் மிகவும் சோர்ந்து இருந்ததால் அது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பாதுகாப்பு உணர்ச்சி அவ்வளவு இருந்ததால் அஜோருக்குப் பக்கத்தில் படுத்தவுடன் நான் தூங்கி விட்டேன்.

அதன் பின்னர் மூன்று நாட்கள் எங்கள் முன்னேற்றம் மிக மிக மெதுவாகச் சென்றது. அதில் கிட்டத்தட்ட பத்து மைல்கள் கடந்திருந்தாலே அதிசயம்தான். அந்த நாட்டில் மிக அதிகமான விலங்குகள் நிறைந்திருந்தன. எங்களுக்குத் தொடர்ச்சியாகத் தொல்லை கொடுத்துக்கொண்டிருந்த விலங்குகளிடம் இருந்து தப்பிப் பிழைப்பதற்காகப் பல மணி நேரங்கள் ஒரே இடத்தில் மறைந்திருக்க நேர்ந்தது. ஊர்வன விலங்குகள் இங்கு கம்மியாக இருந்தன. ஆனால் மாமிசம் உண்ணும் விலங்குகள் மிக அதிகமாகக் காணப்பட்டன. தென்பட்ட ஊர்வனவும் மிக பிரமாண்டமாக இருந்தன. அந்த மிகப் பெரிய கடலின் ஓரத்தில் உள்ள நாணல்களை உரசியபடி வந்து நின்ற மிகப் பிரமாண்டமான அந்த உயிரினத்தை என்னால் மறக்கவே முடியாது. அதன் உயரம் 12 அடிக்கும் மேல் இருக்கும். அதன் மிக நீளமான வால் மற்றும் கழுத்தினால் கிட்டத்தட்ட 75 முதல் 100 அடி நீளமாவது இருக்கும். அதன் தலை மட்டும்தான் நினைத்துப் பார்க்க முடியாத அளவு சிறியதாய் இருந்தது. அதன் உடம்பில் எந்தவிதமான கவசங்களும் இல்லை. ஆனால் அதன் மிக பிரமாண்டமான உருவம் அச்சம் கொள்ளும் தோற்றத்தைக் கொடுத்தது. கேஸ்பக்கில் எனக்கு கிடைத்த அனுபவத்தில் இருந்து புரிவது என்னவென்றால் இந்த மாதிரி விலங்குகள் நம்மைப் பார்த்தால்தான் தாக்கும். அதனால் நான் துப்பாக்கியைத் தூக்கிய அதே வேளை ஒரு பெரிய நாணலுக்குப் பின்னால் மறைந்து நின்று கொண்டேன். அதைப் பார்த்து அஜோர் சிரித்தாள். ஒரு குச்சியை எடுத்துக் கொண்டு அதனை நோக்கிக் கத்திக் கொண்டே ஓடினாள். அதன் சிறு தலையை நீண்ட கழுத்துக்கு மிகவும் மேலே தூக்கி முட்டாள்தனமாக யார் கத்துகிறார்கள் என்றபடியே பார்த்தது. இறுதியாக அதன் கண்கள் சிறு உருவமான அஜோரைப் பார்த்தது. அவள் தன் குச்சியை அதன் தலை மீது எறிந்தாள். ஒரு ஆட்டின் கணைப்பைப் போல் சத்தம் இட்டுக் கொண்டு சட்டென்று நீரில் இறங்கி மூழ்கி விட்டது.

கல்லூரியில் படித்த பாடங்களையும் போவனின் புத்தகங்களில் நான் படித்த புதைபடிமவியல் பக்கங்களையும் மெதுவாக நினைவு படுத்திப் பார்க்க ஆரம்பித்தேன். மேல் ஜுராசிக் காலத்திய டிப்ளொடொக்கஸ் என்னும் மிருகம்தான் நான் இப்போது பார்த்தது. ஹேட்சர் மற்றும் ஹாலண்ட் ஆகிய இருவரும் கண்டுபிடித்த படிமங்களில் இருந்து நேரில் பார்த்த உண்மையான உருவம் எப்படி முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது என்று நினைக்கும் போது மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது. டிப்ளொடொக்கஸ் நிலத்தில் வாழும் மிருகம் என்று எனக்குத் தெரியும். ஆனால் அது நிலத்திலும் நீரிலும் வாழும் என்பது இப்போதுதான் தெரிகிறது. அதன் பிறகு நிறைய அது போல் பார்த்தாகி விட்டது. ஒவ்வொரு முறையும் அது கடலுக்குள் ஓடி ஒளிந்து கொண்டது எதாவது தொந்திரவு ஏற்படும்போதெல்லாம். அதன் பிரமாண்டமான வாலைத் தவிர அதற்கு உடம்பில் வேறு பெரிய ஆயுதங்கள் ஏதுமில்லை. அதை வைத்துக் கொண்டு அது குகையில் வாழும் பெரிய கரடியைக் கூட எளிதில் வீழ்த்தி விட முடியும். ஆனால் அது மிகவும் எளிமையான முட்டாள்தனமான மென்மையான விலங்கு. கேஸ்பக்கில் இருக்கும் உயிரினங்களில் இப்படியொரு விளக்கம் வேறெந்த உயிரினத்துக்கும் பொருந்தாது.

குகைகளோ வேறெந்த மறைவிடங்களோ கிடைக்காததால் மூன்று நாட்கள் நாங்கள் மரத்தில் உறங்கினோம். அங்கே பெரிய விலங்குகளின் தாக்குதல்களில் இருந்து தப்பித்து விட்டோம். ஆனால் சிறிய பறக்கும் ஊர்வன விலங்குகளும், பாம்புகளும், சிறுத்தைகளும் நிரந்தரமாகத் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தன. அவைகள் எந்தவிதத்திலும் நிலத்தில் திரியும் பெரிய மிருகங்களுக்குக் குறைவானது இல்லை.

மூன்றாவது நாள் முடியும் வேளையில் நானும் அஜோரும் சரளமாகப் பேசக்கூடிய அளவு வந்து விட்டோம். அது மிகப் பெரிய நிம்மதி கொடுத்தது குறிப்பாக அஜோருக்கு. அதனால் நான் அவளை அனுமதிக்கும் போதெல்லாம் என்னிடம் கேள்வியாய்க் கேட்டுக் கொண்டிருந்தாள். அது எப்போதும் முடியாது அல்லவா. ஏனெனில் நாங்கள் உயிரோடு இருக்க வேண்டும் என்றால் நான் எவ்வளவு வேகமாக கேஸ்பக்கின் நிலப்பரப்பு மற்றும் பழக்கவழக்கங்கள் பற்றிக் கற்றுக் கொள்கிறேன் என்பதில் இருக்கிறது. அதற்கு நானே நிறைய கேள்விகள் கேட்க வேண்டியது இருக்கிறது.

எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாய் இருந்தது அவள் பேச்சைக் கேட்டு அவளுக்கு பதில் சொல்வது. அவளது கேள்விகள் பெரும்பாலும் மிக அப்பாவித் தனமாய் இருந்தன. நான் கேஸ்பக்கின் பிரமாண்ட தடுப்புகள் தாண்டிய உலகைப் பற்றிச் சொல்லும்போதெல்லாம் அவளது கேள்விகளில் அவ்வளவு ஆச்சர்யங்கள் நிரம்பி இருந்தன. ஆனால் ஒரு முறை கூட என்னை அவள் சந்தேகிக்கவில்லை எவ்வளவு அதிசயமானதாக இருந்தாலும். கேஸ்பக்கில் இருக்கும் இந்த உயிரினங்களைத் தாண்டி வேறெதுவும் கற்பனை செய்து கூட பார்த்திராத அவளுக்கு எல்லாமே ஆச்சர்யம்தான் என்பதில் சந்தேகமே இல்லை.

அவளுடைய பல கேள்விகள் கபடமில்லாதவையாக இருந்தன. அதில் அவளது நுண்ணிய அறிவும் புத்திசாலித்தனமும் தென்பட்டது. அவளது வயதுக்கும் அனுபவத்துக்கும் அது மிக அதிகமாகத் தோன்றியது. மொத்தத்தில் எனது காட்டுமிராண்டி எனக்கு நல்ல தோழியாகவும் சுவாரஸ்யமானவளாகவும் தோன்றினாள். எங்களது வழிகள் ஓரிடத்தில் இணைய நேர்ந்ததற்கு அடிக்கடி அந்த அன்பு நிறைந்த விதிக்குத்தான் நன்றி சொல்லிக் கொண்டே இருந்தேன். அவளிடம் இருந்து கேஸ்பக்கை பற்றி நிறையத் தெரிந்து கொண்டேன். போவன் டைலருக்கு மிகவும் ஆச்சர்யம் அளித்த ஒரு விஷயம் மட்டுமே இன்னும் புரியாத புதிராக இருந்தது. உள்நாட்டுக் கடலின் இருபுறமும் நாங்கள் சந்தித்த மனிதக் குரங்குகள், அரை மனிதர்கள் மற்றும் முழு மனிதர்கள் இவைகளுக்குக் குட்டிகளே இல்லாத அந்த விஷயம்தான். அஜோர் எனக்கு விளக்க முயற்சி செய்தாள். அவ்வளவு இயற்கையான விஷயத்திற்கு ஏன் விளக்கம் தேவை என்று அவள் நினைத்திருக்கலாம். காலுக்களுக்குச் சிறிய அளவில்தான் குழந்தைகள் இருந்தன என்று சொன்னாள். தானும் ஒரு காலத்தில் குழந்தையாய் இருந்தவள்தான் என்றும் எல்லோரும் “ஆதியில் இருந்து வந்தவர்கள்” என்று சொன்னாள். அந்த வாக்கியத்தைச் சொல்லும் போது தெற்கை நோக்கிக் கைகளை விரித்தபடிச் சைகை செய்தாள்.

அவள் எனது காதுகளில் வந்து கிசுகிசுத்தபடி பேசினாள். அதே நேரத்தில் பெரும்பாலும் ஆகாயத்தை ஒருவித அச்சத்துடன் பார்த்துக் கொண்டே பேசினாள். “நீண்ட காலம் என் தாய் என்னை வியரூவிடம் இருந்து மறைத்து வைத்தாள் அது காற்றில் இருந்து இரவில் இறங்கி வந்து என்னை ஊவோவிற்கு எடுத்துச் சென்று விடாமல்”. அப்படிச் சொல்லும் போது அவளுள் இருந்த குழந்தை நடுங்கியது. அவளை மேலும் சொல்லும்படி செய்ய முயற்சி செய்தேன். ஆனால் வியரூவைப் பற்றியும் அது வாழுமிடமான ஊவோவைப் பற்றியும் சொல்லும்போது அவளது அச்சம் மிகவும் உண்மையாக இருந்ததால் இறுதியில் அந்த முயற்சியைக் கைவிட்டு விட்டேன். இருந்தாலும் வியரூ பெண் குழந்தைகளை மட்டும்தான் எடுத்துச் செல்வது புரிந்தது. எப்போதாவது “ஆதியில் இருந்து வந்த” பெண் காலுக்களையும் அது எடுத்துச் செல்கிறது. அது மிகவும் புரியாத புதிராகவும் கற்பனைக்கு எட்டாததாகவும் இருந்தது. இருந்தாலும் எனக்கு ஒரு சிந்தனை தோன்றி விட்டது. அந்த வியரூ ஒரு கற்பனைப் பாத்திரமாக இருக்கும் என்று. அவளது இனத்தின் எங்கும் இருக்கும் அனைத்தும் அறியும் கடவுள் மற்றும் சாத்தான்களாக அவை இருக்கக் கூடும். இதில் இருந்து காலுக்களுக்கு ஒரு மத நம்பிக்கை இருந்ததும் தெரிய வந்தது. மேலும் கேள்விகள் கேட்டதில் இருந்து அதை அறிய முடிந்தது. அஜோர் லுவாட்டா பற்றி மிகவும் மரியாதையாகப் பேசினாள். அது ஒரு வெப்பம் மற்றும் உயிருக்கான கடவுள். அந்த வார்த்தையே வேறு இரு வார்த்தைகளில் இருந்து உருவானது. லுவா என்றால் கதிரவன், ஆட்டா என்றால் முட்டை, உயிர், இளைய மற்றும் இனப்பெருக்கம் என்று அர்த்தம். லுவாட்டாவை அவர்கள் பல்வேறு வடிவங்களில் கும்பிடுகிறார்கள் என்றாள். நெருப்பு, கதிரவன், முட்டை, வெப்பம் மற்றும் இனப்பெருக்கம் சார்ந்த பலவிதமான பொருட்களின் வடிவில் அதைக் கும்பிடுகிறார்கள்.

நான் தீ மூட்டும் போதெல்லாம் கவனித்து இருக்கிறேன். அஜோர் தனக்கு முன்னால் இருக்கும் காற்றில் இரு சம பக்க முக்கோணத்தை வரைவாள். அதே போல் முதன் முதலாகக் காலையில் கதிரவனைப் பார்த்த போதும் அதையே செய்வாள். முதலில் அது என்னவென்று எனக்குப் புரியவில்லை. ஆனால் நாங்கள் பேசிக்கொள்ள ஆரம்பித்ததும் அவளது மத சம்பந்தமான மூடப் பழக்கங்களைப் பற்றிச் சொல்லி இருக்கிறாள். ரோமன் கத்தோலிக்க மதத்தினர் சிலுவை வரைவது போல் அவள் முக்கோணம் வரைகிறாள். எப்பொழுதும் முக்கோணத்தின் சிறு பக்கம் மேலே இருப்பது போல் வரைவாள். இதையெல்லாம் விவரித்த பின் அவளது வளையல்கள் மீதிருக்கும் அலங்காரங்கள், கத்தியின் பிடி, அவளது வலது கால் முட்டிக்கு மேலிருக்கும் வளைந்த பட்டி போன்றவற்றைக் காண்பித்தாள். அதில் எல்லாம் கிட்டத்தட்ட அதே முக்கோணங்களின் வடிவமைப்பு இருந்தன. அதன் முக்கியத்துவத்தைப் பற்றி அவள் விவரித்த போது அதன் உண்மையான பொருள் சட்டென்று எனக்குப் புரிந்தது.

நாங்கள் இப்போது பாண்ட்லுக்களின், ஈட்டி மனிதர்களின், நாட்டில் இருக்கிறோம். போவன் தன்னுடைய கதையில் இவர்கள் மேல் பேலியோலிதிக் காலத்தில் வாழ்ந்த க்ரோ-மெக்னன் என்ற மனிதர்கள் போல் இருப்பதாகக் கூறி இருந்தான். அதனால் அவர்களைப் பார்க்க நான் மிகவும் ஆவலாய் இருந்தேன். நானும் ஏமாற்றம் அடையவில்லை. அவர்களைப் பார்த்தேன். நாங்கள் ஸ்தோலுக்கள் நாட்டை விட்டுக் கிளம்பினோம் அதன் பின் காட்டு விலங்குகளின் தடுப்புகளைத் தாண்டி இரு நாட்கள் பயணித்தோம். ஓரிடத்தில் வழக்கத்திற்கு மாறாக வெகு சீக்கிரமாகவே முகாமிட நினைத்தோம். ஏனென்றால் அங்கு கிழக்கும் மேற்குமாக மலைத்தொடர்கள் இருந்தன. அங்கு நிறைய குகைகள் இருக்கும் என்ற காரணத்தால்தான் அங்கு தங்க நினைத்தோம். நாங்கள் இருவரும் மிகக் களைப்பாக இருந்தோம். சிறிய குகைகளைப் பார்த்தவுடன் அதில் தடுப்புகள் எளிதில் அமைக்கலாம் என்று தோன்றியவுடன் அங்கே தங்கி மறு நாள் காலை செல்லலாம் என்று மனதில் தோன்றியது. ஒரு சில நிமிடங்களிலேயே அந்த மலைச் சரிவில் உயரத்தில் எங்களுக்கு ஏற்றாற் போல் இருந்த குகையைக் கண்டு பிடிக்க முடிந்தது. பக்கவாட்டில் நடந்து போகும் விளிம்பில் இருந்த அந்த குகை எங்கள் சமையல் நெருப்பை மூட்டுவதற்கும் ஏதுவாக இருந்தது. அதன் துளை மிகச் சின்னதாக இருந்ததால் படுத்து ஊர்ந்து கொண்டுதான் உள்ளே செல்ல முடிந்தது. ஆனால் உள்ளே மேற் கூரை உயரமாகவும் இடம் விசாலமாகவும் இருந்தன. ஒரு சுள்ளியைப் பற்ற வைத்துச் சுற்று முற்றும் பார்த்தேன். நான் பார்த்தவரை அந்த குகை மலைச் சரிவு வரை நீண்டிருந்தது.

எனது கைத் துப்பாக்கி, சுழல் துப்பாக்கி மற்றும் குண்டுகள் நிறைந்த வார் அனைத்தையும் கழற்றி வைத்து விட்டு அஜோரைக் குகையில் விட்டுவிட்டு நான் கீழே சென்று அடுப்பெரிக்கச் சுள்ளிகள் பொறுக்கச் சென்றேன். குகையை அடைவதற்கு முன் எங்களிடம் கறியும் பழங்களும் இருந்தன. என்னிடம் இருந்த குடுவையில் குடி நீரும் இருந்தது. அதனால் எங்களுக்குத் தேவையானது எரிபொருள் மட்டுமே. முடிந்த அளவு அஜோருக்கு ஒய்வு கொடுத்து விடுவது என் வழக்கம். அதனால் அவளைக் குகையில் விட்டு விட்டு நான் மட்டும் தனியே சென்றேன். அவள் மிகவும் களைப்பாக இருந்தாள். இருந்தாலும் கீழே விழுந்து விடும் வரை என்னுடன் வர அவள் நிச்சயம் விரும்புவாள் என்று எனக்கு நன்றாகத் தெரியும். அவ்வளவு விசுவாசம். அவள் உலகிலேயே மிகச் சிறந்த தோழி. அவள் என் இனமாக இல்லையே என்று நினைக்கும் போது சில நேரம் மகிழ்ச்சியாகவும் சில நேரம் வருத்தமாகவும் இருந்தது. இருந்திருந்தால் நிச்சயம் அவள் மேல் காதல் வயப்பட்டிருப்பேன் எவ்விதச் சந்தேகமும் இல்லாமல். அதனால் நாங்கள் இருவரும் இரு ஆடவர்கள் போல் சுற்றினோம். இருவரும் அடுத்தவர் மேல் மரியாதையோடு வேறு எவ்வித உணர்வுகளும் இல்லாமல்.

மலையடிவாரத்தில் மூங்கில் மரங்கள் குறைவாக இருந்தன. அதனால் நான் இன்னும் சற்று தூரம் செல்ல நேர்ந்தது. கேஸ்பக் போன்ற ஆபத்துக்களும் மரணங்களும் நிறைந்த ஒரு உலகில் நான் செய்த அந்தச் செயல் எவ்வளவு மடத்தனம் நிறைந்தது என்பதைச் சற்று நேரத்தில் உணர்ந்து கொண்டேன். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மடத்தனம் இருக்கவே செய்கிறது. ஆனால் என்னிடம் அன்று அதிகமாகவே இருந்தது. ஏனெனில் எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் அந்தக் காட்டுக்குள் தனியாகச் சென்றேன். நான் அதற்கான விலையைக் கொடுக்க நேர்ந்தது, மக்கள் தங்கள் முட்டாள் தனத்திற்கு எப்போதும் கொடுப்பது போல. விறகுகள் கிடைக்குமா என்று தேடிப் பார்த்துக் கொண்டிருந்த போது நான் தலையைக் குனிந்து தரையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு பெரிய உருவம் என் மேல் விழுந்து அழுத்தியது போல் தோன்றியது. மண்டியிட்டுத் தத்தளித்துக் கொண்டிருந்தபோது அந்த உருவத்தைப் பிடித்து விட்டேன். அவன் ஒரு நிர்வாணமான மனிதன். பாம்புத் தோலால் செய்த கோவணத்தைத் தவிர அவன் எதுவும் அணிந்திருக்கவில்லை. பாம்பின் தலை முழங்கால்கள் வரை தொங்கிக் கொண்டிருந்தது. அவன் ஒரு கல் பதிக்கப்பட்ட ஒரு கம்பு வைத்திருந்தான். கல்லால் ஆன கத்தியும் கோடரியும் கூட வைத்திருந்தான். அவனது கருப்பு முடியில் பலவித நிறங்களில் இறகுகள் இருந்தன. நாங்கள் முன்னும் பின்னும் முட்டிக் கொண்டிருக்கும் போது அவனை மெதுவாக என் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து கொண்டிருந்தேன். ஆனால் அவனது கூட்டாளிகள் சில பேர் ஓடி வந்து என்னைக் கைப்பற்றி விட்டார்கள்.

அவர்கள் பின் புறமாக என் கைகளை நீண்ட விலங்குத் தோல்களால் கட்டி என்னை ஆழமாக நோட்டம் விட்டார்கள். அவர்கள் பெரும்பாலும் வளர்ச்சி அடைந்த மனித இனம் போலவே இருந்தார்கள். அவர்களில் சிலர் ஸ்தோலு மனிதர்கள் போல் நிறைய முடிகளோடு இருந்தார்கள். பெரும்பாலானவர்களுக்குப் பெரிய தலைகள் இருந்தன. அருவருக்கத்தக்க உடல் அமைப்புகள் இல்லை. ஸ்தோலு, போலு, ஆலு மனிதர்கள் போல் ஒரு சிலர் மனிதக் குரங்கு போல் இருந்தனர். அவர்கள் உடனே என்னைக் கொன்று விடுவார்கள் என்று நினைத்தேன். ஆனால் செய்யவில்லை. அதற்குப் பதில் அவர்கள் என்னிடம் விசாரணை செய்தார்கள். அவர்களைப் பார்த்தாலே தெரிந்தது நான் சொன்னதை அவர்கள் நம்பவில்லை என்று. ஏனெனில் நான் சொன்னதைக் கேட்டுச் சிரித்தார்கள், கேலி செய்தார்கள்.

“காலுக்கள் உன்னை விரட்டி விட்டார்கள்.” என்று அவர்கள் கத்தினார்கள். “அங்கே நீ திரும்பிப் போனால் அவர்கள் உன்னைக் கொன்று விடுவார்கள். இங்கே இருந்தாலும் நீ இறந்து விடுவாய். ஏனெனில் நாங்கள் உன்னைக் கொன்று விடுவோம். இருந்தாலும் நாங்கள் நடனமாடக் போகிறோம். நீயும் எங்களுடன் சேர்ந்து ஆடு, உன் இறுதி ஆட்டத்தை.”

அவர்கள் சொன்னது கொஞ்சம் நிம்மதி தருவதாய் இருந்தது. ஏனெனில் என்னை உடனே கொலை செய்யப் போவதில்லை. அதனால் கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டேன். அவர்கள் என்னை மலைச்சரிவின் பக்கம் அழைத்துச் சென்றார்கள். அதை நெருங்கும் போது நான் கவனித்தேன், அஜோரின் ஒளிரும் கண்கள் அந்தக் குகையில் இருந்து எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தன. ஆனால் அவள் என்னைப் பார்த்தது போல் காட்டிக் கொள்ளவில்லை. அவர்கள் மலையடிவாரத்தைச் சுற்றி ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு தேன் கூடு போல் அவ்வளவு குகைகள் நிறைந்து இருந்தன. அங்கே அவர்களின் இன மக்கள் குகைகளிலும் தரையிலும் சேர்த்துக் கிட்டத்தட்ட நூறு பேர் இருப்பார்கள். நிறையக் பெண்கள் இருந்தார்கள். ஆனால் குழந்தைகள் யாரும் இல்லை. இதுவரை நான் பார்த்த கோடரி, ஈட்டி மனிதர்கள், ஆலுக்கள் மற்றும் மனிதக் குரங்குகளைக் காட்டிலும் அந்தக் பெண்களுக்கு மார்பகங்கள் அழகாக இருந்தன. சொல்லப் போனால் கேஸ்பக்கில் இருக்கும் மனிதர்களில் பரிணாமத்தில் கீழே இருக்கும் மனிதர்களில் பெண்களுக்கு இருக்கும் மார்பகங்கள் ரொம்பக் சின்னதுதான். ஆலுக்கள் மற்றும் மனிதக் குரங்குகளிடம் அவைகள் தெரிவதே இல்லை. போலு ஸ்தோலுக்களிடம் கொஞ்சம் வளர்ந்து இருக்கும். அதன் பின்னர் பரிணமித்தவர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ஈட்டி மனிதர்களின் பெண்களிடம் பாதி வளர்ந்த நிலையில் இருந்தது. ஆனால் அவர்கள் ஒரு போதும் பால் கொடுத்ததற்கான அறிகுறிகளே தென்படவில்லை. குழந்தைகளே அங்கு தென்படாதபோது அது ஆச்சர்யமான விஷயமும் இல்லை. சில பாண்ட்லு பெண்கள் மிகவும் அழகாக இருந்தார்கள். அவர்களில் பெண்கள் ஆண்கள் இருபாலரும் குண்டாய் இருந்தாலும் சமச்சீராய் இருந்தனர். அதில் சிலர் ஸ்தோலுக்கள் போல் இருந்தாலும் இன்னும் சிலர் நிச்சயம் அழகாய் இருந்தனர் அவர்களின் உடம்பில் முடி சிறிதும் இல்லாமல். ஆலுக்கள் அனைவரும் தாடியோடு இருந்தனர். போலுக்களில் பெண்களுக்கு அது மறைந்திருந்தது. ஸ்தோலு ஆண்களிடம் தாடி மிகவும் சிறியதாய் இருந்தது. பாண்ட்லுக்களிடம் அதுவும் இல்லை. அவர்களின் பெண்களின் உடம்பில் சிறிது முடிகள் காணப்பட்டன.

அந்த இன மக்கள் என் மேல் மிகுந்த ஈடுபாடு காட்டினார்கள். பெரும்பாலும் எனது உடைதான் அவர்களை ஈர்த்தது. அதைப் போல் அவர்கள் பார்த்ததே கிடையாது. அவர்கள் என்னை இழுத்தார்கள், தள்ளி விட்டார்கள். சிலர் என்னை அடிக்கவும் செய்தார்கள். ஆனால் இன்னும் கொடூரமாக எதுவும் செய்யவில்லை. முடிகள் நிறைந்திருந்தவர்கள் மட்டும்தான் என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டனர். இறுதியில் என்னைச் சிறை பிடித்தவர்கள் ஒரு பெரிய குகைக்கு என்னைக் கூட்டிச் சென்றார்கள். அதன் வாயிலில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. தரையில் ஒரே குப்பை மண்டிக் கிடந்தது. நிறைய விலங்குகளின் எலும்புகள் சிதறிக் கிடந்தன. இறந்த மனித உடல்களின் அழுகிய நாற்றம் மூச்சை அடைத்தது. அங்கே என் கைக் கட்டுகளை அவிழ்த்து விட்டு எனக்குச் சாப்பிடக் கொடுத்தார்கள். பாதி வெந்த நிலையில் இருந்த காட்டு ஆட்டின் கறியை கொஞ்சம் சாப்பிட்டேன். பாம்பு இறைச்சியில் செய்யப்பட்ட குழம்பு ஒன்று சாப்பிட்டேன். அதில் வட்ட வடிவில் நீளாமாய்க் கிடந்த மாமிசங்களைப் பார்க்கும்போது அப்படித்தான் தோன்றியது.

சாப்பிட்டு முடித்த பின் அவர்கள் அந்த குகையில் இருந்த ஒரு கிணற்றை நோக்கி இழுத்துச் சென்றார்கள். அந்த குகையில் இருந்த பல இடுக்குகளில் தீப் பந்தத்தைச் செருகி வைத்திருந்தார்கள். அதன் சுவர்களில் ஓவியங்கள் வரையப் பட்டிருந்தன. அதில் காட்டு ஆடுகள், பட்டாக்கத்தி புலி, செம்மான், குகைக் கரடி, ஹையனோடான் மற்றும் பல கேஸ்பக் விலங்குகள் வண்ண ஓவியங்களாய் இருந்தன. பெரும்பாலும் நான்கு விதமான பழுப்பு நிறத்தில் அவை பாறையில் கிறுக்கப்பட்டிருந்தன. பெரும்பாலும் அந்த மிருகங்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்திருந்ததால் மிக அருகில் சென்று பார்த்தால் ஒழிய அவை என்னென்ன விலங்குகள் என்று கண்டுபிடிக்க முடியாது. இருந்தாலும் அதில் ஓவியரின் கைவண்ணம் மிக அருமையாகவே இருந்தது போவன் இவர்களை க்ரோமெக்னான் மனிதர்களுடன் ஒப்பிட்டுப் பாராட்டி எழுதி இருந்தது போலவே. நியூ மற்றும் லே போர்டல் என்ற இடங்களில் உள்ள குகைகளில் இன்னும் அந்த மறைந்து போன மனிதர்களின் சித்திரங்கள் பாதுகாக்கப்பட்டு இருக்கின்றன. பாண்ட்லுக்களிடம் வில் அம்புகள் இருக்கவில்லை. அது ஒன்று மட்டும்தான் அவர்களின் மேற்கு ஐரோப்பிய வழித்தோன்றல்களிடம் இருந்து வேறுபடுத்திக் காண்பிக்கிறது.

என் நண்பர்கள் யாராவது கேஸ்பக்கில் எனது சாகசங்கள் பற்றிப் படிக்க நேர்ந்தால் நிச்சயம் அவர்கள் சலித்துப் போக மாட்டார்கள். அப்படிச் சலிக்க நேர்ந்தால், ஒன்றே ஒன்றுதான் சொல்வேன். எனக்குப் பின்னாளில் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தினால்தான் எனது நினைவுகளை நான் எழுதி வைத்திருக்கிறேன். அதனால் என் கண்களில் பட்ட எனக்கு பிடித்த விஷயங்களை நான் எழுதி வைக்கிறேன். வேறு யாரும் பொது மனிதர்கள் இதைப் படிக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. எனது நண்பர்கள், வேறு சில ஆராய்ச்சியாளர்கள் இதைப் படிக்க நேரலாம். எனது தத்துவங்களுக்காக அவர்களிடம் நான் மன்னிப்புக் கேட்கப் போவதில்லை. என் தாழ்மையான விளக்கம் என்னவென்றால், அவர்கள் பார்ப்பது ஒரு விளக்க முடியாத எல்லையில்லாத ஒரு விஷயத்தினை விளக்க முற்படும் ஒரு சிறிய மனதின் தடுமாற்றங்களே.

அந்தக் குகையின் ஒரு இடைவெளியில் என்னைக் கடத்தியவர்கள் நிறுத்தினார்கள். எனது கைகள் மீண்டும் கட்டப்பட்டன. இப்பொழுது என் கால்களும் கட்டப்பட்டன. அப்போது என்னிடம் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அப்போது, கேஸ்பக்கின் பல்வேறு இனங்களின் மொழிகளில் இருந்த ஒற்றுமையால் அவர்கள் பேசுவதைப் புரிந்து கொள்ள முடிகிறதே என்று எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது அவர்கள் நான் எங்கிருந்து வருகிறேன் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும் நான் சொல்வதன் உண்மைத்தன்மையை உணர்ந்து கொள்ள முடியவில்லை என்றாலும். இறுதியில் அவர்கள் நாளை நடக்கும் இறுதி நடனத்துக்கு வருவதாகச் சொல்லி விட்டு என்னை அங்கே விட்டு சென்றார்கள். அவர்கள் தீப் பந்தத்தை எடுத்துச் செல்லு முன் நான் கவனித்தேன் அவர்கள் என்னை குகையின் இறுதி மூலை வரை எடுத்துச் செல்ல வில்லை. அங்கிருந்து ஒரு இருண்ட பாதை எனது சிறையைத் தாண்டி பாறைகளின் மையத்துக்கு இட்டுச் சென்றது.

அவ்வளவு பிரமாண்டமான பாதாள அறை ஒன்றைப் பார்த்ததும் ஆச்சர்யப்படுவதைத் தவிர வேறெதுவும் எனக்குத் தோன்றவில்லை. அதில் கிட்டத்தட்ட ஒரு நூறடி தூரம் ஏற்கெனவே பயணித்து வந்திருக்கிறேன். அதில் இருந்து இன்னும் பல பாதைகள் கிளைகளாய்ப் பிரிந்து செல்கின்றன. அந்த மலைப் பாறை முழுவதுமே ஒரு தேன் கூடு போன்று பல குகைகள் கொண்டதாய் இருக்கிறது. அதில் ஒரு சிறு பகுதியை மட்டும் இந்த இன மனிதர்கள் ஆக்கிரமித்துக் கொண்டு விட்டனர். அதனால் அங்கு தொலைவில் இருக்கும் மற்ற குகைகளில் கொடூர விலங்குகள் இருக்கலாம். அவைகள் பாண்ட்லுக்கள் பயன்படுத்தாத வேறு பாதைகளைப் பயன்படுத்தி உள்ளே வந்து வெளியே செல்லலாம் என்பதை நினைக்கும் போதே நடுக்கமாய் இருந்தது.

நான் தேவை இல்லாமல் எப்போதும் பயப்பட்டதே கிடையாது. இருந்தாலும் இப்போதைய சூழ்நிலையை எடுத்துக் கொண்டால் ஒரு உண்மையை ஒத்துக் கொண்டே ஆக வேண்டும். எனது நாடி நரம்புகள் ஆடித்தான் போய் விட்டன. நாளை ஏதோ ஒரு பெயர் தெரியாத வகையில் நான் இறக்கப் போகிறேன் அந்தப் காட்டு மனிதர்களின் கேளிக்கைக்காக. ஆனால் நாளைய தினத்தை விட இன்றுதான் மிகவும் பயங்கரமானதாக இருக்கும் போல் தெரிகிறது. கொடூரமான விலங்குகள் மற்றும் ராட்சத பல்லிகள் சுற்றும் ஒரு நிலத்தில் வாழும் மர்மமான பயங்கரங்கள் செய்யும் மனிதர்கள் நிறைந்த குகையில் கை கால்கள் கட்டுண்டு மையிருட்டில் இருப்பது எவ்வளவு கொடுமை. எந்நேரமும், அது இப்போதும் இருக்கலாம், எதாவது ஒரு சத்தமே எழுப்பாத விலங்கு ஒன்று எனது வாடையைக் கண்டுபிடித்து எதாவது ஒரு குகை வழியில் வந்து என்னைத் தாக்கலாம். எனது கழுத்தைத் தூக்கி அந்த கும்மிருட்டில் எதாவது ஒளிரும் இரு கண்கள் தெரிகிறதா என்று பார்த்தேன். அவைகள் என்னைச் சாப்பிட வந்த மிருகமாக இருக்கலாம். எனது துருப்பிடித்த மூளையின் கற்பனை அவ்வளவு உண்மையானது போல தோன்றியதால் எனது நெற்றியில் இருந்து குளிர்ச்சியான வியர்வை வழிந்தோடியது எனதருகில் ஒரு மிருகம் நின்று கொண்டிருப்பதாய் நினைத்து. மயானம் போன்ற அமைதியில் இருந்த அந்தக் குகையில் வேறெந்தச் சத்தமும் எழவில்லை பல மணி நேரம் கடந்த பின்னும்.

பல யுகங்கள் கடந்தது போல் இருந்த அந்தக் கால இடைவெளியில் எனது கற்பனையில் கடந்த கால நினைவுகள் வந்து போயின. எனது அனைத்து நண்பர்களின் கூட்டம் மற்றும் நாளை சிதைந்து போய் விடக்கூடிய பல நினைவுகள். எனது கூட்டாளிகளை விட்டுப் பிரிய நேர்ந்த எனது முட்டாள்தனத்தை நினைத்து நான் வருத்தம் அடைந்தேன். அவர்கள் இந்நேரம் எவ்வளவு தூரம் முன்னேறி இருப்பார்கள் என்று எண்ணினேன். அவர்கள் இன்னும் அந்த மலைப் பாறைகளைத் தாண்டித்தான் இருப்பார்களா எனது வரவை நோக்கி. இல்லையேல் கேஸ்பக்கில் நுழைய எதாவது வழி கண்டு பிடித்திருப்பார்களா? பின்னதுதான் சரி என்று என் மனதுக்குத் தோன்றியது. ஏனெனில் எனது கூட்டாளிகள் தங்கள் கொள்கைகளில் இருந்து எளிதில் பின் வாங்கும் ஆட்கள் கிடையாது. அவர்கள் ஏற்கெனவே என்னைத் தேட ஆரம்பித்திருப்பார்கள். இருந்தாலும் என்னைப் பற்றி அவர்களுக்கு ஒரு சிறு துப்பு கூடக் கிடைத்திருக்காது. நான் ரொம்ப சீக்கிரமாகவே ஒரு முடிவுக்கு வந்திருந்தேன். கேஸ்பக்கின் அந்த உள் நாட்டுக் கடலின் கரையில் சுற்றுவதற்கு ஒரு சாதாரண மனிதனால் முடியாது. அவ்வளவு ஆபத்துக்கள் இரவிலும் பகலிலும் ஒவ்வொரு நிழலிலும் நிறைந்து இருக்கும்போது சாதாரண மனிதர்கள் வாழ்வதே மிகவும் சிரமம்தான். அன்றில் இருந்தே நான் எனது நம்பிக்கையை இழந்து விட்டேன். இந்த நாட்டின் எல்லையை திரும்பவும் தொடுவேன் என்று சிறிதும் நம்பிக்கை இல்லை. ஒட்டு மொத்தத் தேடுதல் வேட்டையும் வீண் என்பது நன்றாகப் புரிந்து விட்டது. போவனும் அவனது மனைவியும் இத்துணைக் காலங்களாய்ப் பிழைத்திருக்கும் வாய்ப்பும் சிறிதும் இல்லை. ப்ராட்லி மற்றும் அவனுடன் சென்ற மாலுமிகளும் உயிரோடு இருப்பதற்கான வாய்ப்புகளும் இல்லை. என்னுடன் வந்த சிறந்த கூட்டாளிகள் ஒரு வேளை கடலின் வட திசைக்குள் நுழைந்து விட்டால் ஒரு நாள் அவர்கள் எனது விமானத்தின் உடைந்த பாகத்தை தென் திசையில் இருக்கும் அந்தப் பெரிய மரத்தின் மேல் தொங்கிக் கொண்டிருப்பதைக் காண இயலும். அதற்கு வெகு முன்பாகவே எனது எலும்புகள் இந்தக் குகையின் குப்பைக் குவியல்களுக்கே நடுவில் கலந்து விடும்.

எனது கற்பனை மற்றும் உண்மையான எண்ணங்களுக்கு நடுவில் ஒரு நேர்த்தியான தெளிவான கண்களுடைய, வலிமையான நேரான அழகான பெண்ணின் உருவம் வந்து போனது. ஒரு ராணியின் மிடுக்கும் சிறுத்தையின் சீற்றமும் கொண்டவள் அவள். எனது நண்பர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்தான் இருந்தாலும் இந்த வினோதமான காட்டுக்கொடி இவளின் விதியை எண்ணித்தான் நான் மிகவும் கலங்கினேன். இந்த அதி பயங்கர உலகில் ஒரு வழிப்போக்கனின் மேல் இருக்கும் பாசத்தை விட அது ஒன்றும் அதிகமில்லை என்று இவளுக்காக பலமுறை என் மனதை நானே தேற்றி இருக்கிறேன். அவளது எதிர்காலத்தைப் பற்றி மிகவும் கவலைப்பட்டு அரற்றிய நேரத்தில் நான் எனது நிலைமையை மறந்தே போய் விட்டேன். எனது கட்டுக்களை அவிழ்க்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டேன். இங்கே இருந்து தப்பித்தால்தான் அவளை உடனே காப்பாற்ற முடியும். அவ்வாறு நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் கொடூர விலங்குகளைப் பற்றிச் சிறிது மறந்திருந்தேன். அப்பொழுது வேறொரு பாதையில் மலைச்சரிவில் மையத்தில் இருந்து துல்லியமாகக் கேட்ட ஒரு சத்தம் என் நெஞ்சைப் பிசைந்தது. மெதுவாக முன்னேறி என்னை நோக்கி வரும் காலடி ஓசை.

என் வாழ்க்கையில் இது போன்று ஒரு பயங்கரத்தை நான் அனுபவித்ததில்லை. கை கால்கள் கட்டுண்டு இருளில் பாண்ட்லுக்களின் குகையில் கிடக்க எதோ ஒரு விலங்கு என்னைப் புசிப்பதற்காக வரும் நொடியில் தோன்றும் அதி பயங்கரமான திகிலை என்றும் அனுபவித்ததில்லை. உடம்பெங்கும் வியர்வை மிகவும் குளிர்ச்சியாக வழிந்தோடியது. எனது தசைகள் அச்சத்தில் துடித்தன. அவை துடிப்பதை என்னால் துல்லியமாக உணர முடிந்தது. மிகவும் பரிதாபகரமான கோழைத்தனத்தின் அருகில் இதுவரை நான் சென்றதாய் ஞாபகம் இல்லை. இருந்தாலும் சாவதற்கு எனக்கு அச்சம் இல்லை. ஏனெனில் எப்போதோ நான் தொலைந்து விட்டதாக முடிவெடுத்து விட்டேன். கேஸ்பக்கில் ஒரு சில நாட்கள் இருப்பவர்களுக்கு நன்றாகப் புரிந்து விடும் வாழ்க்கையில் ஒன்றுமே இல்லை என்பது. நீரிலும் நிலத்திலும் காற்றிலும் உயிர்கள் நிறைந்து இருந்தாலும் மறு நொடியே வேறோர் உயிர் அவைகளைக் கபளீகரம் செய்து விடும். உயிர் இங்கு மிகவும் மலிவானது பூமியில் இருப்பதைப் போல். சொல்லப் போனால் இந்த அண்டத்தின் மிக மலிவான படைப்பு என்றால் அது உயிராகத்தான் இருக்கும். இல்லை, நான் சாவதற்கு அச்சப்படவில்லை. உண்மையில், நான் சாக வேண்டும் என்றுதான் வேண்டிக் கொள்கிறேன். ஏனெனில் இந்த பயங்கரத்தில் இருந்து கொஞ்ச நேர வாழ்க்கையில் இருந்து விடுதலையாவது கிடைக்கும். அந்தக் கொடூர விலங்கு என்னை அடித்துக் கொன்று புசிக்க வரும் வரை காத்திருப்பதுதான் தாங்க முடியவில்லை.

இப்பொழுது அது எனக்கு மிக அருகில் வந்து விட்டது. அதன் மூச்சுகாற்றைக் கூட என்னால் உணர முடிந்தது. பின் அது என்னைத் தொட்டுத் தடவிச் சட்டென்று தெரியாமல் தொட்டு விட்டது போல் பின்னால் பாய்ந்தது. வெகு நேரம் மயான அமைதியில் உறைந்தது அந்த குகை. பின் அந்த விலங்கின் நடமாட்டத்தை என்னால் உணர முடிந்தது. மீண்டும் என்னைத் தொட்டது. எதோ ஒரு முடியற்ற கை என் முகத்தைத் தடவிச் சென்று என் சட்டையின் கழுத்துப் பட்டையில் நின்றது. அதன் பின் மெதுவாக ஆனால் அடக்கி வைக்கப்பட்ட உணர்ச்சிகளோடு ஒரு குரல் ஒலித்தது. “டாம்!”

நான் கிட்டத்தட்ட மயக்கமடைந்து விட்டேன் என்று நினைக்கிறேன். அதன் எதிர் விளைவு அவ்வளவு ஆற்றல் மிகுந்ததாக இருந்தது. “அஜோர்!” என்று எப்படியோ சொல்லி விட்டேன். “அஜோர். என் அன்பே, இது நீயாக இருக்க முடியுமா”

“டாம்” என்று கதறிக் கொண்டே என் மேல் விழுந்து அணைத்துக் கொண்டாள். அவளுக்கு அழத் தெரியும் என்று அன்றுதான் எனக்கு தெரிந்தது.

அவள் பேசியபடியே எனது கட்டுக்களை அவிழ்த்தாள். பாண்ட்லுக்கள் என்னைப் பிடித்து இழுத்துச் செல்லும் வேளையில் காட்டுக்குள் இருந்து வெளியே வருவதை குகையில் இருந்து பார்த்ததாகச் சொன்னாள். அவர்கள் குகைக்குள் நுழையும் வரை எங்களைப் பின் தொடர்ந்ததாகச் சொன்னாள். அந்தக் குகையானது நாங்கள் இருந்த குகைக்கு அப்படியே எதிர் புறம் இருந்தது. அவர்கள் உறங்கும் வரை எதுவும் செய்ய இயலாது என்பதால் வேகமாக எங்கள் குகைக்குச் சென்று விட்டாள். மிகவும் சிரமப்பட்டு அவள் குகையை அடைந்து விட்டாள். வழியில் ஒரு மலைச் சிங்கம் கிட்டத்தட்ட அவளை வளைத்து விட்டது. அதைக் கேட்டதும் என் உடம்பு நடுங்கியது. எனக்காக எவ்வளவு பெரிய ஆபத்தைச் சந்தித்திருக்கிறாள்.

அவள் நடு இரவு வரை காத்திருக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறாள். அப்போதுதான் பெரும்பாலான விலங்குகள் தங்கள் இரையை வேட்டையாடி முடித்திருக்கும். அதன் பின் நான் சிறை பட்டிருக்கும் குகைக்கு வந்து என்னை விடுவிக்கலாம் என்று நினைத்திருக்கிறாள். எனது சுழல் மற்றும் கைத் துப்பாக்கிகளை அவள் பயன்படுத்த முடியும் என்று சொன்னாள் நான் உபயோகப்படுத்தும் போது கவனித்திருந்ததால், என்று என்னிடம் விவரித்தாள். பாண்ட்லுக்களைப் பயமுறுத்தி என்னை விடுவிக்கலாம் என்று திட்டமிட்டு இருந்தாள். மிகவும் துணிச்சலான பெண்! தன் உயிரையே பணயம் வைத்து என்னைக் காப்பாற்ற வந்திருக்கிறாள். ஆனால் எங்கள் குகைக்கு வந்த சிறிது நேரத்தில் தூரத்தில் கேட்ட சத்தத்தை வைத்து பாண்ட்லுக்கள் வேறு ஏதோ வாயில் வழியாக அதே குகைக்குள் நுழைந்திருக்கலாம் என்று நினைத்தாள். அங்கிருந்து வளைந்து செல்லும் பாதைகள் வழியாக அந்தக் கும்மிருட்டில் எப்படியோ என்னை வந்து கண்டு பிடித்து விட்டாள். அவள் இங்கு வருவதற்கு மிகவும் கவனமாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் பெரும் பள்ளங்கள் நிறைந்தது இந்தக் குகை. உண்மையில் மூன்று முறை அவ்வாறு பள்ளங்களில் விழுவதில் இருந்து தப்பித்து வந்திருக்கிறாள். வேறு வலி இல்லாமல் பயங்கரமான அந்த இடங்களில் தன உயிரைப் பணயம் வைத்துக் கடந்து வந்திருக்கிறாள். அவள் சொல்லச் சொல்ல என் உயிரே நடுங்கியது எனக்காக இவ்வளவு தூரம் பணயம் வைத்து வந்ததால். எனது துப்பாக்கிகளையும் கையோடு தூக்கி வந்தது அவளது ஆபத்துக்களை மேலும் அதிகரிக்கவே செய்திருக்கும். ஏனெனில் அதையெல்லாம் தூக்கிச் சென்று அவளுக்குப் பழக்கம் இருந்திருக்காது.

நான் அவள் முன் மண்டி இட்டு அவளது கையில் முத்தமிட்டிருப்பேன் மரியாதையின் அடையாளமாக. அதைச் சொல்வதிலும் எனக்குக் கூச்சம் இல்லை. ஆம் அவள் என் கட்டுக்களை அவிழ்த்த பின் அவளது சாகசங்களைக் கேட்டபின் அதேதான் செய்தேன். மிகத் துணிச்சலான அஜோர்! கடந்தகால இருண்ட உலகில் இருந்து ஓர் அதிசயமான பெண். அவளை இதுவரை யாரும் முத்தமிட்டிருக்கவில்லை. ஆனால் அதில் இருந்து அன்பின் வெளிப்பாட்டைப் புரிந்து கொண்டிருக்கிறாள். ஏனெனில் அவளும் தன் உதடுகளை வைத்து என் முன்நெற்றியில் முத்தமிட்டாள். எனக்குள் திடீரென்று உத்வேகம் பிறந்து அவளை அப்படியே கட்டியணைத்து முத்த மழை பொழிய வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. ஆனால் அது அவள் தன் உயிரையே துச்சமென செய்த தியாகத்திற்கு இழுக்காகி விடும்.

இல்லை, அஜோர் தன் தாயிடம் இருப்பது போன்ற பாதுகாப்புணர்வோடு என்னிடமும் இருக்க வேண்டும். அவளுக்குத் தாய் இருக்கிறாளா என்பதே இப்போது எனக்குச் சந்தேகமாக இருந்தது. அவள் குழந்தையாய் இருந்த போது தன் தாய் தன்னை மறைத்து வைத்தாள் என்று சொல்லி இருக்கிறாள் ஒரு முறை. அதனால் தாய் என்ற ஒரு உறவு கேஸ்பக்கில் இருக்குமா என்றே சந்தேகம்தான். போலு க்ரோலு இவர்களின் மொழியில் அம்மா என்பதற்கு ஒரு வார்த்தையும் இல்லை. அவர்கள் ஆட்டா, கோர் ஸ்வஜோ போன்ற வார்த்தைகள் பயன்படுத்துகிறார்கள். இனப்பெருக்கம், ஆதியில் இருந்து என்பதுதான் அதன் பொருள். அப்போது தென் திசையில் கை காட்டுகிறார்கள். ஆனால் யாருக்கும் தாய் என்பவர் இல்லை.

அதன் பின் மிகவும் கஷ்டப்பட்டு எங்கள் குகைக்கு வந்து விட்டோம் என்று நினைத்தோம். ஆனால் அது எங்கள் குகை இல்லை. அதன் பின் தான் புரிந்தது மிகவும் சிக்கலான தேன் கூடு போன்ற குகைகளில் நாம் தொலைந்து விட்டோம் என்று. அதன் பின் வந்த வழியே சென்று ஆரம்பித்த இடத்திற்கே செல்லலாம் என்று நினைத்தோம். ஆனால் இன்னும் அதிகமாகக் குழம்பிப் போய்நின்றோம். அஜோர் மிகவும் திகைத்துப் போய் விட்டாள். எங்கள் நிலையை எண்ணிய பயத்தால் அல்ல. கேஸ்பக்கில் எல்லோருக்கும் இருக்கும் பொதுவான ஒரு குணாதிசயமான திசை காட்டியோ உதவியாளரோ இல்லாமல் எங்கும் செல்லக் கூடிய குணம் அன்று தனக்கு உதவவில்லையே என்று திகைத்தாள்.

நாங்கள் இருவரும் கை கோர்த்துக் கொண்டு ஊர்ந்தபடி சென்றோம் குகையில் இருந்து வெளியேற எதாவது வழி கிடைக்குமா என்று பார்த்தபடியே. இருந்தாலும் ஒவ்வொரு அடியும் எதாவது ஒரு பள்ளத்தில் இழுத்து மலையடிவாரத்தில் கொண்டு போய் விட்டு விடலாம் என்ற புரிதலும் மனதின் ஓரத்தில் இருந்தது. இல்லையேல் சுற்றிச் சுற்றிக் களைத்து இறந்தும் போக நேரலாம். அந்த கும்மிருட்டு! கிட்டத்தட்ட தெரிவது போல் இருந்தாலும் மிகவும் மோசமாக இருந்தது. என்னிடம் தீக் குச்சிகள் இருந்தன. மிகவும் கடினமான சூழலில் ஒன்றிரண்டு குச்சிகள் பொருத்தினேன். இருந்தாலும் தேவைப்படும் என்று பத்திரப் படுத்தி வைத்துள்ளேன். அதனால் மெதுவாக ஊர்ந்து கொண்டே சென்றோம். எங்களால் முடிந்த அளவு ஒரே திசையை நோக்கிச் சென்றோம் எதாவது ஒரு வழி நம்மை வெளி உலகிற்கு இட்டுச் செல்லும் என்ற அதீத நம்பிக்கையில். நான் ஒரு முறை தீக்குச்சியைப் பற்ற வைத்தபோது பாறைகளின் சுவற்றைப் பார்த்தேன். அதில் ஓவியங்கள் எதுவுமில்லை. மேலும் மனிதர்கள் இவ்வளவு தூரம் மலைக் குகைகளில் வந்ததற்கான தடயங்களே இல்லை. காட்டு விலங்குகளின் பாதச் சுவடுகளும் கிடைக்கவில்லை.

நாங்கள் எவ்வளவு நேரம் அந்த கும்மிருட்டான பாதைகளில் சுற்றிக் கொண்டிருந்தோம் என்பதைக் கணக்கிடுவது மிகவும் கடினம்.

கிட்டத்தட்ட செங்குத்தான சரிவில் ஏறினோம் எங்களுக்குக் கீழே அடியே காண முடியாத பள்ளம் இருக்கிறது என்ற நினைப்பில். எப்போது அதில் விழுவோம் என்றே தெரியாமல் சென்று கொண்டே இருந்தோம். மேலும் தாகத்தினாலும் பசியினாலும் எப்போதும் விழுந்து இறந்து விடும் ஆபத்தும் இருக்கிறது. இவ்வளவு சிரமங்களுக்கு நடுவிலும் அஜோர் தவிர்த்து வேறு யாராவது உடன் இருந்திருந்தால் இன்னும் நிலைமை மோசமாகி இருக்கும். அவளது தைரியம் குறை சொல்லாமல் ஏற்கும் மனோபாவம் விசுவாசம் யாருக்கு வரும். அவள் நிச்சயம் தளர்ந்து போய் தாகத்திலும் பசியிலும் துவண்டு போய் இருப்பாள். இருந்தாலும் அதையெல்லாம் காட்டிக் கொள்ளாமல் மகிழ்ச்சியோடு பயணித்தாள். அவளுக்கு பயமாய் இருக்கிறதா என்று கேட்டேன். இங்கே வியரூ வந்து கூட்டிச் செல்ல முடியாது என்று பதில் அளித்தாள். அப்படியே பசியில் இறந்தாலும் நான் அருகில் இருப்பதால் கவலை இல்லை என்றாள். அப்படிப்பட்ட இறப்பில் அவளுக்கு நிம்மதியே என்றும் கூறினாள். அப்படி அவள் சொன்னது எனக்கு ஒரு நாய் தனது உரிமையாளனுக்குக் காட்டும் விசுவாசம் போல் இருந்தது. என்னால் சத்தியம் செய்ய முடியும் அதைத் தவிர வேறு எண்ணம் தோன்றவில்லை என்று.

நாங்கள் அந்தக் குகையில் சிறைப்பட்டது ஒரு நாளா இல்லை ஒரு வாரமா என்பது தெரியாது. இப்பொழுதும் கூட எனக்குத் தெரியாது. மிகவும் பசியாகவும் களைப்பாகவும் இருந்தது. நேரம் கடந்து கொண்டே இருந்தது. இரு முறை நாங்கள் உறங்கினோம். அதன் பின் எழுந்தோம் ஒவ்வொரு முறையும் பலவீனமாய். சில இடங்களில் அந்த குகைப் பாதைகள் தொடர்ச்சியாக மேலே சென்ற வண்ணம் இருந்தன. அது எங்கள் இதயத்தை உடைப்பது போல் இருந்தது ஏற்கெனவே நாங்கள் இருந்த நிலையில். இருந்தாலும் அதில் இறுக்கமாகப் பிடித்தபடி சென்றோம். சில நேரம் தடுமாறிக் கீழே விழுந்தோம். எங்கள் உடம்பைத் தூக்குவதற்கே சக்தி இல்லாமல் விழுந்தோம். இறுதியில் எப்படியோ எழுந்து நின்றோம். முதலில் எங்கே சென்றாலும் கைகோர்த்தபடியே சென்றோம் பிரிந்து விடாமல் இருக்க. ஆனால் அஜோர் வெகு வேகமாகத் தன் ஆற்றலை இழந்து விட்டபடியால் அவளை இடுப்பில் அணைத்தபடி சென்றேன். நான் இன்னும் எனது ஆயுதங்களை சுமந்தபடியேதான் இருந்தேன். ஆனால் துப்பாக்கிகள் முதுகில் தொங்கியபடியால் எனது கைகள் சும்மாதான் இருந்தன. நானும் மிகவும் களைத்தபோது அஜோர் ஆயுதங்களைக் கீழே எறிந்து விடச் சொன்னாள். ஆனால் அது இல்லையென்றால் கேஸ்பக்கில் தற்கொலைக்குச் சமம் என்று கூறி விட்டேன். அவைகளுடன் இங்கேயே இறப்பது ஒரு வகையில் உத்தமம். ஒரு வேளை நாம் தப்பித்து வெளியே செல்ல நேர்ந்தால் அது நிச்சயம் உதவும்.

ஒரு சமயம் அஜோரால் நடக்கவே முடியவில்லை. அப்போது நான் அவளைத் தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தேன். அவள் தன்னை இறக்கி விடும்படிக் கெஞ்சினாள். வெளியேறும் வழி கிடைத்தபின் தன்னை வந்து கூட்டிச் செல்லும்படிக் கூறினாள். ஆனால் அவளுக்குத் தெரியும் எனக்குத் தெரியும் என்பதும் அவளுக்குத் தெரியும் அவளை இங்கே விட்டுச் சென்றால் திரும்ப வந்து அவளைக் கண்டுபிடிப்பது என்பது இயலாது என்று. இருந்தாலும் அவள் வற்புறுத்தினாள். ஒன்றிரண்டு அடிகள் கூட எடுத்து வைப்பதற்கு உடம்பில் ஆற்றல் இல்லை என்னிடம். அதன் பின் உட்கார்ந்து ஐந்து பத்து நிமிடங்கள் இளைப்பாறிய பின் தான் மீண்டும் செல்லவே முடியும். ஆனால் எந்த உந்து சக்தி என்னை உந்தித் தள்ளியது என்று சொல்ல முடியவில்லை. என் முயற்சி நிச்சயம் தோற்றுப் போகும் என்று தெரிந்தும் நான் நடக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட நாங்கள் இறந்து விட்டதாகவே எண்ணிக் கொண்டு விட்டேன். இருந்தாலும் நான் இழுத்துக் கொண்டே சென்றேன் ஒரு கட்டத்தில் எழுந்து நிற்க முடியாமல் போகும் வரை. அதன் பின் ஒவ்வொரு இன்ச்சாகத் தவழ்ந்து கொண்டே இருந்தேன் அவளையும் இழுத்துக் கொண்டு. அவளது இனிமையான குரல் பலவீனத்தால் இப்போது கேட்கவே இல்லை. என்னை மட்டும் காப்பாற்றிக் கொள் என்று கெஞ்சிய சத்தமும் இப்போது முனகலாய் வந்தது. அவள் என்னைப் பற்றி மட்டுமே நினைத்தாள். நிச்சயம் அவளை என்னால் அங்கே விட்டுச் செல்ல முடியாது நான் எவ்வளவுதான் அப்படியே நினைத்திருந்தாலும். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நான் அவளை விட்டுச் செல்ல வேண்டுமென்றே நினைக்கவில்லை. அதன் பின் அவளிடம் நான் சொன்னது வெகு எளிமையாக யதார்த்தமாக வந்து விழுந்தது என் உதடுகளில். அதைத் தவிர்த்து வேறெதுவும் இருக்க முடியாது. சாவு இவ்வளவு அருகில் இருக்கும்போது மக்கள் சாகசம் செய்யத் துணிவார்களா. “அப்படி ஒரு நிலையில் நான் வெளியேறுவதையே விரும்பவில்லை, அஜோர்” என்றேன். நாங்கள் ஒரு பாறையில் இளைப்பாறிக் கொண்டிருந்தோம். அஜோர் என் மீது சாய்ந்து இருந்தாள். அவள் தலை என் நெஞ்சில் சாய்ந்திருந்தது. அவளின் அழுத்தத்தை என்னால் உணர முடிந்தது. ஒரு கை பலவீனமாக என் கையைத் தடவிக் கொண்டிருந்தது. அவள் எதுவும் சொல்லவில்லை. வார்த்தைகளும் தேவைப்படவில்லை.

சில நிமிடங்கள் இளைப்பாறி விட்டு நாங்கள் மீண்டும் எங்கள் தேவை இல்லாத பயணத்தைத் தொடர ஆரம்பித்தோம். ஆனால் நான் வெகு வேகமாக பலவீனப்படுவது போல் உணர ஆரம்பித்தேன். அவ்வளவுதான் முடிந்தது என்று நினைத்தேன். “இதற்கு மேல் முடியாது, அஜோர். என்னால் முடிந்த அளவு வந்து விட்டேன். சிறிது நேரம் உறங்கினால் ஒரு வேளை மீண்டும் செல்ல முடியும்.” என்றேன். ஆனால் அது உண்மை இல்லை என்று எனக்குத் தெரியும். முடிவு நெருங்கி விட்டது. “சரி. உறங்கு” என்றாள் அஜோர். “நாம் இருவரும் உறங்குவோம்–இறுதியாய்”

அவள் என்னருகில் நகர்ந்து வந்தாள். அந்தக் கடினமான பாறையில் என் கையைத் தலையணை போல் வைத்து அவளது தலைக்கு அடியில் வைத்தேன். மீதி இருக்கும் சிறிது ஆற்றலைப் பயன்படுத்தி அவள் உதடுகளில் என் உதடுகளைப் பதித்துச் “சென்று வருகிறேன்” என்று முணுமுணுத்தேன். அதன் பின் என் நினைவு மங்கியது. அதன் பின் ஒரு கொடூரமான கனவு கண்டு சட்டென விழித்தேன். அந்த கனவில் நான் முழுகிக் கொண்டிருப்பது போல் கனவு கண்டேன். மங்கிய பகல் வெளிச்சத்தில் குகையில் இருப்பது போலவும் ஒழுகிக் கொண்டிருக்கும் நீர் வழிந்து நானும் அஜோரும் படுத்திருக்கும் இடத்தில் ஒரு சிறு குளம் கட்டி இருப்பது போலவும் தோன்றியது. நான் சட்டென்று விழித்து அஜோரைப் பார்த்தேன் அது என்ன நிலையைக் காட்டும் என்ற அச்சத்தில். ஆனால் அவள் இன்னும் மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள் மெதுவாக. அதன் பின் அந்த ஒளி எங்கிருந்து வந்திருக்கும் என்று ஆராயத் தொடங்கினேன். அது நாங்கள் இருந்த பாதையின் ஒரு வளைவில் இருந்து வந்தது. அதன் கீழே பெரிய செங்குத்தான பள்ளம். இரவில் நாங்கள் இருவரும் இதைத் தவிர்க்கத்தான் பலவீனமாய் இருந்தோமோ என்று சந்தோஷப்பட்டேன். ஒரு வேளை நாங்கள் எங்களுக்கு முன் இருக்கும் எந்தப் பாதையிலும் இன்னும் சற்று தூரம் சென்றிருந்தால் அதுதான் எங்கள் இறுதிப் பயணமாய் இருந்திருக்கும். இப்போதும் கூட நாங்கள் இறந்து போகலாம். ஆனாலும் பகல் வெளிச்சத்தில் இறப்போம். இந்த கொடூரமான கும்மிருட்டை விட இது சற்று மேல்.

நான் எழுந்து பார்த்தேன். உறக்கம் எனக்குச் சற்று ஆற்றல் கொடுத்திருந்தது. அங்கிருந்த நீரைக் குடித்த பின் இன்னும் உற்சாகம் அடைந்தேன். அவள் தோளைத் தட்டி எழுப்பினேன். ஆனால் அவள் கண்களைத் திறக்கவில்லை.நான் சிறிது நீரைக் கைகளில் எடுத்து அவளது உதடுகளில் வழிய விட்டேன். அது அவளது உயிரை க் கொஞ்சம் மீட்டுக் கொடுத்தது. அதனால் கண்களைத் திறந்து என்னைப் பார்த்துப் புன்னகை செய்தாள்.

“என்னாச்சு. நாம் எங்கிருக்கிறோம்.” என்றாள்.

“நாம் இந்தப் பாதையின் முடிவில் இருக்கிறோம்.” என்று பதில் சொன்னேன். “பகல் வெளிச்சம் வெளி உலகில் இருந்து உள்ளே சற்று தூரத்தில் வருகிறது. நாம் பிழைத்து விட்டோம் அஜோர்”

அவள் எழுந்து அமர்ந்து சுற்றும் முற்றும் பார்த்தாள். அதன் பின் பெண்ணுக்கே உரிய உணர்ச்சியில் கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தாள். அது வெறும் உணர்ச்சியின் வெளிப்பாடுதான். ஆனால் அதன் பின் இன்னும் பலவீனப்பட்டுத்தான் போனாள். நான் அவளைக் கைகளில் அணைத்துத் தேற்றினேன் என்னால் முடிந்த அளவு. இறுதியில் என் உதவியுடன் அவள் எழுந்து நின்றாள். என்னைப் போல் அவளும் உறக்கத்தில் இருந்து எழுந்ததால் சிறிது ஆற்றல் கிடைத்திருந்தது. இருவரும் தட்டுத்தடுமாறி வெளிச்சத்தை நோக்கிச் சென்றோம். அந்தப் பாதையின் முதல் திருப்பத்தில் ஒரு ஓட்டை இருந்தது அதன் பின் பளிச்சென்ற ஆகாயம். அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் அங்கு நீர் கசிந்து எங்களுக்கு மிகவும் தேவையான நேரத்தில் உதவியது.

குகை ஈரமாகவும் குளிர்ச்சியாகவும் மாறி விட்டது. ஆனால் வாசலுக்கு அருகில் வரும்போது கேஸ்பக்கின் சூடான காற்று எங்களை வருடியது. அந்த மழை நீரும் கூட குகையின் இருட்டான பகுதியை விட வெது வெதுப்பாய் இருந்தது. இப்போது நீர் கிடைத்தது, வெப்பம் கிடைத்தது. கேஸ்பக் இன்னும் சற்று நேரத்தில் நிச்சயம் இறைச்சியும் பழங்களும் கொடுக்கும். ஆனால் நாங்கள் வெளியில் வந்து பார்த்தபோது இந்த மலை உச்சியில் இருந்தோம். அங்கே விலங்குகள் கிடைப்பது அபூர்வம். இருந்தாலும் அங்கு மரங்கள் இருந்தன. அதில் இருந்து கிடைத்த பழங்களை வைத்து எங்கள் உண்ணா நோன்பை முடித்து வைத்தோம்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *