கல்விக் கோயில்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 10, 2019
பார்வையிட்டோர்: 7,271 
 

அன்றைய தினம் ஞாயிற்றுக் கிழமை. ஊரே ஒன்றாகக் கூடியிருந்தது. வேர்விட்டு, விழுதுவிட்டு நின்ற மரத்தின் நிழலில் ஊர் பெரிய மனிதர்களும், மக்களும் சலசலவெனப் பேசிக் கொண்டிருந்தனர்.

ஊர்த்தலைவர் ஆவுடையப்பர் பேச தொடங்கினார்.

“இங்க பாருங்கப்பா, கொஞ்சம் நேரம் எல்லாரும் அமைதியா இருங்க. நம்ம ஊர தத்தெடுத்து பல நன்மைய செய்யிற அமெரிக்காவைச் சேந்த செல்வந்தர் டக்சன் அய்யா, இந்த முற பெரிய தொகையை அனுப்பியிருக்காரு.

அந்த தொகையை வச்சி ஊருக்கு என்ன நன்மைய செஞ்சிக்கலாமுன்னு எல்லோரும் சேந்து முடிவெடுக்கத்தான் கூடியிருக்கோம். ஆளுக்கொரு வசதியச் சொல்லுங்கப்பா.”

முருகன் எழுந்து “என்னங்கய்யா, நம்ம ஊரு பெருமாள் கோயிலுக்கு வெள்ளையடிச்சு, சீரமைச்சு ரொம்ப வருசம் ஆயிடுச்சு. அதனால கோயில சீரமைக்கலாம் அய்யா.” என்றார்.

அப்போது அந்தோணி குறுக்கிட்டு. “முருகா, நீ சொல்றது எல்லோருக்கும் எப்படிப்பா ஒத்து வரும். எனக்குக்கூடத்தான் தேவாலயத்த சீரமைக்கணும்னு ஆசை.” என்றார்.

அஸ்லாம் “பள்ளிவாசலும் ரொம்ப நாளா சீரமைக்காம இருக்கு” என்றார் தன் பங்குக்கு.

ஊர்தலைவர் ஆவுடையப்பர் இவற்றையெல்லாம் கேட்டு கோபம் அடைந்தார்.

“ஆளாளுக்கு ஒன்னு சொன்னா என்னங்கய்யா அர்த்தம், எல்லாருக்கும் பயன்படுற மாதிரி ஒரு முடிவெடுங்க. இல்லன்னா ஒருநாள் எடுத்துக்கிட்டு யோசனை பண்ணிட்டு சொல்லுங்க” என்றார்.

கூட்டம் கலைந்தது.

அன்பு இதையெல்லாம் கேட்டுக்கொண்டு வீட்டிற்குச் சென்றான். எட்டாம் வகுப்பு படிக்கும் அன்பு புத்திசாலி பையன். ஆற்றைப் பரிசலில் கடந்து, ஐந்து கிலோமீட்டர் நடந்து சென்று பள்ளியில் படித்து வருபவன்.

தன் ஊரில் உள்ள மற்ற பசங்களையும் பத்திரமாக அழைத்துச் செல்பவன். அன்று இரவு அன்பு தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தான்.

எதையோ சிந்தித்துக் கொண்டே இருந்தான்.

கதிரவன் கிழக்கே உதயமாக, கருப்புத் திரையின்மேல் வெள்ளை வண்ணக் கரைசலை ஊற்றியது போல் பொழுது புலர்ந்தது.

தேயிலைப் பொடியை கொதிக்க வைக்கும் வாடை மூக்கைத் தட்டி எழுப்பியது. அன்பு எதையோ சாதித்தது போல் பள்ளிக்குச் சென்றான்.

அன்று மாலை ஆவுடையப்பர் ஊர் மக்களை ஒன்றாக இணைத்து, மீண்டும் அனைவரின் விருப்பத்தையும் கேட்டுக் கொண்டிருந்தார்.

பள்ளிக்குச் சென்ற அன்பு பள்ளிவிட்டதும் நேராக கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்தான். அடைமழை அடித்து பெய்வதுபோல் காரசாரமாக விவாதம் நடந்தது.

இறுதியாக யாருக்கும் பாதகம் இல்லாமல் பெருமாள் கோயில், தேவாலயம், பள்ளிவாசல் மூன்றையும் சீரமைக்கலாம் என ஆவுடையப்பர் முடிவெடுத்தார்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த அன்பு தயங்கி தயங்கி ஆவுடையப்பர் அருகே சென்றான். “என்னப்பா, அன்பு ஏதாவது சொல்லனுமா?” என்றார் ஊர்தலைவர்.

“அய்யா, நான் ஒரு யோசனை சொல்லலாமா?” என்றான் அன்பு.

முருகன் குறுக்கிட்டு “சின்னப்பசங்க சொல்லு சபை ஏறுமா அய்யா?” என்றான்.

“முருகா கொஞ்சம் பேசாம இருப்பா, அன்பு என்னதான் சொல்லுறான்னு கேட்போமே.” என்றார் ஆவுடையப்பர்.

“அய்யா, நான், நம்ம ஊரு பசங்க எல்லாருமே படிக்கிறதுக்காக பரிசலில் ஏறி ஆற்றைக் கடந்து ஐந்து கிலோ மீட்டர் நடந்து போறோம்.

இதுல பல ஆபத்தும் இருக்கு. கால்வலியோட படிக்கிறோம். அதனால டக்சன் அய்யா கொடுத்த தொகைய வச்சி நம்ம ஊரிலேயே ஒரு பள்ளிக்கூடம் கட்டுனா வசதியா இருக்கும் அய்யா.

பெருமாள் கோயிலுக்கு பெருமாள கும்பிடறவங்க மட்டும் போவாங்க.

தேவாலயத்துக்கு இயேசுநாதர கும்புடறவங்க மட்டும் போவாங்க.

பள்ளிவாசலுக்கு அல்லாவ கும்புடறவங்க மட்டும் போவாங்க.

ஆனா பள்ளிக்கூடத்துக்கு மூனு சாமியையும் கும்புடுற பசங்க ஒத்துமையா ஒன்னா போவாங்க. அதனால கல்விக் கோயில் கட்டுவோமய்யா.

அய்யா நான் ஏதாவது தப்பா சொல்லிருந்தா என்ன மன்னிச்சிடுங்க.”

அன்பு பேச்சைக் கேட்டு அனைவரும் தலைகுனிந்தனர்.

“நமக்கு இந்த யோசனை வரலையே” என்றார் முருகன்.

“இது நல்ல யோசனை” என்றார் அஸ்லாம்.

“இதுதான் சரியான முடிவு” என சொல்லி மகிழ்ந்தார் அந்தோணி.

அனைவரும் அன்பின் முடிவினை ஏற்றனர். சுயநலம் தோற்றது. பொதுநலம் வென்றது.

ஆவுடையப்பர் அன்புவை கட்டித் தழுவிக் கொண்டார். அவர் கண்களில் வெள்ளம் வெளியில் துள்ளிக் குதித்தது.

அன்பு காட்டிய கல்விக் கோயில் அடுத்த வருடம் அங்கே உருவானது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *