வெளிச்சம் ஜாக்கிரதை

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 19, 2016
பார்வையிட்டோர்: 31,409 
 

திடுக்கிட்டு எழுந்திருப்பது வழக்கமாகிவிட்டது. டார்ச் விளக்கை, கடிகாரம் பக்கம் திருப்பினேன். மணி இரண்டு.

நான் இந்த வீட்டுக்கு வந்து இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிரச்னை ஏதும் தோன்றவில்லை. அதன் பிறகு ஓர் இரவு கடிகாரத்தைப் பார்த்தேன்… மணி இரண்டு. அடுத்த இரவு எழுந்தேன்… மணி இரண்டு. அடுத்த இரவு, அடுத்த இரவு… என வாரக்கணக்கில், மாதக்கணக்கில் போய்க்கொண்டிருந்தது. எது காரணமாக இருக்கும்? சீக்கிரம் சாப்பிட்டுப் படுத்தேன். அப்போதும், இரண்டு மணி. தாமதமாகச் சாப்பிட்டுத் தூங்கப் போனேன். அப்போதும் இரண்டு மணிக்கு விழிப்பு வந்தது. என் படுக்கையை திசை மாற்றிப் போட்டேன். இரண்டு தலையணைகள் வைத்துப் பார்த்தேன். தலையணையே இல்லாது படுத்துப் பார்த்தேன். அப்போதும் நட்டநடு நிசியில் விழிப்பு வந்தது. சட்டென எனக்குப் புலப்பட்டது. பக்கத்து வீட்டு ஜன்னலில் இருந்து வந்த வெளிச்சம், நான் படுக்கக்கூடிய ஒரே அறையைப் பட்டப் பகலாக்கியபோது எப்படித் தூங்க முடியும்?

மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது. சுமார் 200 ரூபாய் செலவழித்து, டியூப் லைட் இணைப்புகளை எல்லாம் மாற்றி புதிதாக வந்திருந்த பல்புகளை மாட்டியிருந்தேன். வீட்டில் வெளிச்சம் மிகவும் மாறிப்போய்விட்டது. ஆனால், படிக்க முடிந்தது. எனக்குத் திரைச்சீலைகளில் நம்பிக்கை இல்லை. அவை தூசியோடு கொசுக்களுக்கும் வசதியானவை என்பது என் அனுபவம். என் அறை வெளிச்சம் அக்கம்பக்கத்தாரைச் சங்கடப்படுத்தாது. ஆனால், இந்தப் பக்கத்து வீட்டு மனிதன், அவன் வீட்டில் வெளிச்சம் போட்டே என்னைத் தூங்க முடியாமல் செய்துவிடுகிறான்.

நான் என் வீட்டு ஜன்னலை மூடினேன். அதிக மாற்றம் இல்லை. இந்த நாளில் ஜன்னல்களின் கதவுகளில் பெரும்பான்மை கண்ணாடிதான். வெளியே இருப்போருக்கு நாம் இருப்பதை ஓரளவு நிழல் மாதிரிக் காண வைக்கலாம். ஆனால், வெளிச்சத்தை மறைக்க முடியாது. என் அறையில்தான் குறைந்த ஒளியுள்ள விளக்கு. மேலும் இந்தப் பக்கத்து வீட்டுக்காரனுடையதுபோல ஜன்னல் பக்கத்திலேயே பொருத்தப்பட்டது அல்ல.

வெளிச்சம் ஜாக்கிரதைஎனக்கு வெளிச்சத்தைக் கண்டாலே வெறுப்பு ஏற்பட்டது. என்ன வேண்டியிருக்கிறது மின்சார விளக்குக்கு? கண்ணுக்குக் கெடுதல், உடலுக்குக் கெடுதல், உலகம் சூடாகிவிடுகிறது, சர்வநாசம் விளையப்போகிறது; பிரளயம் நேரப்போகிறது.எனக்கே என் சிந்தனை ஓட்டம் பைத்தியக்காரத்தனமாகப் பட்டது. பக்கத்து வீட்டில் ஒருவர் விளக்குப் போட்டுக்கொண்டு ஏதோ வேலை செய்துகொண்டிருக்கிறார், உடனே பிரபஞ்சமே அழிந்துவிடப்போகிறது என நினைப்பதா?

என்னவெல்லாம் சமாதானம் சொல்லிக்கொண்டாலும் அது எனக்குத் தூக்கத்தைத் தரவில்லை. என் கண்களின் அடியில் சதை பை போல தொங்க ஆரம்பித்தன. இது வெளிப்புற அறிகுறி. ஆனால், என் மனதுக்குள் ஏற்பட்டுக்கொண்டிருந்த மாற்றங்களைப் பிறர் அறிய, சில காலம் பிடித்தது. யாராவது ஏதாவது கேட்டால் அது முதல்முறையில் எனக்குப் புரியாது. ‘என்ன?’ என நான் கேட்டு அவர் இரண்டாம் முறை சொல்லவேண்டும். உடனே பதில் தோன்றாது. இது பலருக்கு நான் ஏதோ மறைக்கிறேன், பொய் சொல்கிறேன் எனக்கூடத் தோன்றும். 40 வயதுகூட ஆகவில்லை, காதுகள் மந்தமாகிக்கொண்டிருந்தன. அதோடு பக்கத்துவீட்டு அகால வெளிச்சம் புறஉலகம் பற்றிய என் கவனிப்பையே மாற்றிவிட்டது.

நாம் அக்கம்பக்கத்துக்காரர்கள் பற்றி வீட்டினுள் பேசிக்கொள்ளலாம். ஆனால் வெளி மனிதர் யாரிடமும் விசாரித்தால், அதற்கு நிச்சயம் நோக்கம் கற்பிக்கப்படும். நான் அந்த இடத்துக்குப் புதிது.

ஆனால் என் தயக்கம், கூச்சம் எல்லாவற்றையும் ஒதுக்கிவைத்துவிட்டு எங்கள் குடியிருப்புக் காவலாளியைக் கேட்டேன். இன்று நகரப் பகுதிகளில் ‘வாட்ச்மேன்’ என்ற புதிய வேலைவாய்ப்பு தோன்றியிருக்கிறது. குடியிருப்பவர்களைவிட இவர்கள்தான் அதிகப்படி தலைமயிர் கருக்கும் வண்ணத்தை வாங்குகிறார்கள். ஆனால், வயது என்பது தலை மயிர் ஒன்றை மட்டும் சம்பந்தப்பட்டதா? எங்கள் அடுக்குமாடி வீட்டு வாட்ச்மேனுக்கு 70 வயதுகூட இருக்கும்.

‘நான் கவனிக்கலியே?’ என்றார்.

‘இன்னைக்குக் கவனிச்சுப் பாருங்க. அந்த வீட்டு விளக்கு எப்போது எரியத் தொடங்குதுனு சொன்னாப் போதும்.’

நான் அவரிடம் பேசிய தினம், இரவில் அவர் சரியாகத் தூங்கவில்லை என அடுத்த காலையில் தெரிந்தது.

‘ஒண்ணும் எரியிலீங்களே..!’ என்றார்.

‘நீங்க எந்த ஜன்னலைப் பாத்தீங்க?’

‘நீங்க காமிச்ச ஜன்னலைத்தான்.’

‘நான் எதைக் காமிச்சேன்?’

அவர் ஒரு ஜன்னல் காட்டினார். அது தவறானது.

‘அது இல்லீங்க… ஒண்ணு, ரெண்டு, மூணு அந்த மூணாவது ஜன்னல்.’

‘அது எப்பவும் மூடியிருக்குமே? அங்கே மனுஷாளுங்களே கிடையாது.’

”பின்னே எப்படி விளக்கு எரியும்?’

‘எரியலீங்களே..!’

எனக்கு இதை இப்படித்தான் புரிந்துகொள்ள முடிந்தது. அவர் முன்னிரவில் கண்விழித்துப் பார்த்திருக்கிறார். ஆனால், பார்க்கவேண்டிய நேரத்தில் தூங்கிவிட்டார்.

இன்னும் இரு தினங்களுக்குப் பிறகு அடுத்த வீட்டு வாட்ச்மேனையே கேட்டுவிடலாம் என, அந்த மனிதனைத் தேடிப் போனேன். அந்த வீட்டுக்கு இரு வாட்ச்மேன்கள். பகல் ஆள் காலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை. இரவுக்காரரை நான் பார்க்கவேண்டும் என்றால் அதிகாலை 5-5:30-குள் அந்தச் சந்திப்பை முடித்துவிட வேண்டும்.

நடுநிசிக்குப் பிறகு எனக்குத் தூக்கம் ஏது? காலை 5 மணிக்கே வீட்டு வெளியே வந்து, அந்த வாட்ச்மேனுக்காகக் காத்திருந்தேன். தெருவில் பால் போடுகிறவர்கள்தான் காலை 5 மணிக்குக் கண்களில் படுவார்கள். அப்போது இரண்டு வாட்ச்மேன்கள் சேர்ந்து வந்தார்கள். யார் யார் வீட்டு வாட்ச்மேன் எனத் தெரியாது.

வெளிச்சம் ஜாக்கிரதை2நான் அன்று கேட்கவில்லை. தூங்கி மாதக்கணக்கில் ஆகிறது. இன்னும் ஒருநாள் காத்திருந்தால் என்ன குடிமுழுகிப்போய்விடப்போகிறது?

‘என்ன குடிமுழுகிப்போய்விடப்போகிறது?’ என அந்த ஜன்னல் விளக்கு பற்றிக்கூடத் தோன்றியது. ஆனால், ஓரளவு முயற்சி செய்தாயிற்று. யாருக்குத் தெரியும் விஷயம் இவ்வளவு சங்கடமானது என?

அடுத்த நாள் அடுத்த வீட்டு வாட்ச்மேன் ஒரு பெஞ்சில் தூங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது. அந்த பெஞ்ச் அந்த வீட்டை இரு பாகங்களாகப் பிரிக்கும் வெராண்டாவில் போடப்பட்டிருந்தது. பொதுவாக இந்த மாதிரி வெராண்டாக்கள் இரு பக்கங்களும் பூட்டக்கூடியதாக இருக்கும். அந்த வீட்டில் இல்லை. சற்றுப் பழைய வீடு. கட்டி 30 – 40 வருடங்கள்கூட இருக்கும். இந்தப் பக்கம் நான்கு அந்தப் பக்கம் நான்கு என எட்டு குடியிருப்புகள், அந்த நாளில் சாதாரண சைக்கிள்தான் முக்கிய வாகனம். அதற்கு ஏற்றாற்போல வீடு கட்டப்பட்டிருந்தது. ஒரு மோட்டார் வண்டி நிறுத்தக்கூட இடம் இல்லை.

நான் அந்த வீட்டு வாட்ச்மேன் எழுந்திருக்கும் வரை தெருவில் உலா போவதுபோல அந்த வீட்டு முன்னாலேயே குறுக்கும் நெடுக்குமாகப் போய்க்கொண்டிருந்தேன். எனக்கு அந்த வாட்ச்மேனைப் பார்த்து பொறாமையாகக்கூட இருந்தது. ஒரு காலத்தில் நானும் இப்படி ஆழ்ந்து தூங்கியிருக்கக்கூடும்.

அவர் தூக்கம் கலைந்து தெருவுக்கு வரக் கால் மணியாயிற்று.

”எனக்கு ஒரு தகவல் தெரியணும். நீங்கதான் சொல்ல முடியும்.’

‘பக்கத்து வீட்டுக்காரர்தானே? நேத்தே சாம்சன் சொன்னார். ஏதோ வெளக்கு வெளிச்சம் வருதுனு சொன்னீங்களாம். ஏங்க, வெளக்கு போட்டா வெளிச்சம் வராதா? வெளக்கே வெளிச்சத்துக்குத்தானே?’

இந்த உண்மைக்கு எதிராக யார் என்ன சொல்ல முடியும்? நான் பேசாமல் நின்றேன்.

அந்த மனிதர் அவர் வேலையைக் கவனிக்கப்போனார். நான் அந்த வீட்டு வாசல் வெளியே என்ன செய்வது, யாரிடம் கேட்பது எனப் புரியாமல் நின்றுகொண்டிருந்தேன்.

என்னை இப்படி அலையவைத்த பக்கத்துக்கு வீட்டில் தரைதளத்தில் இருப்பவர் என்னை நோக்கி வந்தார். கடுமையாகவே, ”யார் நீங்க? இங்கே சும்மா சும்மா வாட்ச்மேன்களை விசாரிச்சுண்டு? இது அத்துமீறல், டிரெஸ்பாஸ், தெரியுமா?’

‘உங்க வீட்டு விளக்கு என்னைத் தூங்க விடாமச் செய்யிறது. அது அத்துமீறல் இல்லை, நான் தெருவிலே நின்னு பேசுறது டிரஸ்பாஸ்.’ – நானும் உரக்கக் கத்தினேன்.

‘உங்களுக்கு என்ன வேணும்?’

‘எங்க வீட்டை ஒட்டி இருக்கிற பக்கத்தில் நாலாவது மாடிக்காரரை அவர் வீட்டு ஜன்னலுக்கு ஒரு திரையாவது போடணும். விளக்கு இடத்தையே மாத்தினா ரொம்ப நல்லது. செலவை நான் கொடுத்துருறேன்.’

அவர் விழித்தார்.

‘கொஞ்சம் உள்ளே வாங்க.’

அவரை என் வீட்டுக்குள் அழைத்துப்போனேன். என் அறையில் இருந்து அவர் வீட்டு மாடி ஜன்னலைக் காண்பித்தேன். அவர் என்னைச் சந்தேகமாகப் பார்த்தார்.

‘அந்த ஜன்னலா?’ எனக் கேட்டார்.

‘ஆமாம்.’

‘அங்கே யாருமே இல்லையே? எனக்குத் தெரிஞ்சு ரெண்டு வருஷமா பூட்டியே இருக்கு. இன்னும் பாக்கப்போனா அந்த வீட்டுக்கு எலெக்ட்ரிசிட்டியே கிடையாது. அந்த இடத்துல டூ பெட்ரூம் ஃப்ளாட் ஒண்ணு வருஷக்கணக்காக் காலியாக இருக்கு.’

”பின்னே விளக்கு எரியுது?’

‘நீங்க எதையோ பாத்துட்டுச் சொல்றீங்க. அந்த வீட்டுச் சொந்தக்காரங்கதான் அங்கே இருந்தாங்களாம். என்னமோ தெரியலை, இப்போ யாருமே இல்லை. இரண்டு வருஷமா கூட்டலே, பெருக்கலே… வீடே பாழாயிருக்கும்.’

அவர் போய்விட்டார். எல்லாருமாகச் சேர்ந்து என்னைப் பைத்தியமாக்குகிறார்கள். அந்த ஜன்னலில் விளக்கு எரிகிறது… எரிகிறது… எரிகிறது.

நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். அந்த வீட்டுக்கே போய்ப் பார்த்துவிட வேண்டும்.

அன்று என் வேலையெல்லாம் தப்பும் தவறுமாக இருந்தது. கோப்புகளை எல்லாம் தவறான இடங்களில் வைத்துவிட்டேன். வரும் வாரங்களில் என் அலுவலகத்தில் படாதபாடு படுவார்கள். அதெல்லாமே பலர் கையாளுவதால் யார் தவறான இடத்தில் வைத்தது என எளிதில் கண்டுபிடிக்க முடியாது.

இரவுக்காகக் காத்திருந்தேன். இரவு 1 மணி அளவில் விளக்கு எரிய ஆரம்பித்தது. நான் சுவர் ஏறிக் குதித்து அந்த வீட்டு வெராண்டாவின் பின்புறம் அடைந்தேன். வெரண்டா நடுவில் மாடிப்படி… 54 படிகள். மிகவும் கஷ்டப்பட்டு ஏறி நான்காவது மாடியை அடைந்தேன். மாதக்கணக்கில் என்னை வாட்டிவதைத்த வீட்டை அடைந்துவிட்டேன். ஆள்காட்டி விரலால் மிகவும் மெதுவாகக் கதவைத் தட்டினேன். இரண்டாம் முறை தட்டியபோது கதவு திறந்தது ஒரு பெண். 30 வயதுக்குள் இருக்கும். நான் அயலான் எனத் தெரிய சில நொடிகள் ஆகின.

‘என்ன?’ எனக் கேட்டாள்.

‘நான் அடுத்த வீட்டில் கீழே ஒரு சிங்கிள் பெட்ரூம் வீட்டில் இருக்கிறேன். உங்கள் வீட்டு ஜன்னலில் இருந்து வெளிச்சம் நேரே என் அறையில் விழுகிறது. தூங்க முடியாமல் மிகவும் அவதிப்படுகிறேன். உங்கள் வீட்டு விளக்கை என் செலவில் மாற்றி வைத்துவிடுகிறேன். நீங்கள் அனுமதித்தால்…’

அவள் ஒரு நிமிடம் பேசாமல் இருந்தாள்.

‘அந்த ஒரு ஜன்னல்தான் வீட்டு வெளியே இருந்து தெரியும். அந்த விளக்கு எரியத்தான் செய்யும்.’

‘அதுதான் நான் மாற்றித்தருகிறேன் என்றேனே. அறைக்கு வெளிச்சம் வேண்டும்… அவ்வளவுதானே!’

‘என் கணவர் வந்தால் நான் வீட்டில் அவருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன் எனத் தெரிய அந்த விளக்கு அங்கேதான் இருக்க வேண்டும்.’

‘அவர் பெயர் என்ன?’

‘ராமச்சந்திர ராவ். கமர்ஷியல் டேக்ஸஸ் ஆபீஸர்.’

”அவரோ… நீங்களோ… போன் செய்துகொள்ளலாமே?’

‘எங்களுக்கு போன் கிடையாது. சீதை, ராமனுக்குக் காத்திருக்கவில்லையா? ‘ராமன் வருவானா?’ எனத் தெரியாது. அப்படி இருந்தும் அவள் காத்திருந்தாள். இந்த உலகத்தில் எவ்வளவு சீதைகள் இப்படிக் காத்திருக்கிறார்களோ?’

எனக்கு மயிர்க்கூச்சல் ஏற்பட்டது. காலம் காலமாக எவ்வளவு பெண்கள் கணவன் திரும்பி வருவதற்காக வாசற்படியில் காத்திருந் திருக்கிறார்கள்!

இருட்டாக இருந்தாலும், நான் மாடிப்படியை மூன்று நான்காகத் தாண்டி என் வீடு அடைந்தேன்.

தன்னைத் தூக்கிப்போனவன் யார், எங்கே சிறை வைத்திருக்கிறான் என ராமனுக்குத் தெரிய வழி இல்லை. தெரிந்தாலும் ராமன் வருவான் என என்ன நிச்சயம்? அப்படியும் சீதை காத்திருந்தாள்.

என் அலுவலகம் நவநாகரிகமாக இருக்க, அதற்குப் பக்கத்துக் கட்டடம் முதுமை தோன்ற, பழையதாகத் தெரியும். நான் இதுவரை அதைப் பற்றி யோசித்தது இல்லை. அது ஒரு கமர்ஷியல் வரி அலுவலகம். வாட்ச்மேன்களோடு பழகினால் யாரிடமும் பேசத் தோன்றும். நான் உணவு இடைவேளையில் உள்ளே நுழைந்தேன். அந்தப் பழைய கட்டடத்தை நம்பி எத்தனை ஆத்மாக்கள்? எல்லாம் அவர்களுக்குள் வம்பு பேசிக்கொண்டிருந்தார்கள். என்னை யாரையும் பொருட்படுத்தவில்லை.

நான் உள்ளே சென்று ஒருவர் மேஜை எதிரே நின்றேன்.

‘சார், இது லன்ச் டைம்’ என ஒருவர் சொன்னார்.

‘நான் ஆபீஸ் விஷயமாக வரவில்லை. ஒருவரைப் பற்றி தகவல் தெரிய வேண்டும்.’

‘இந்த ஊர்லே ஏகப்பட்ட ஆபீஸ்.’

‘ஏதோ தெரியுமா பாருங்க. அவர் பெயர் ராமச்சந்திர ராவ்.’

‘ஏம்ப்பா, நம்ம டிபார்ட்மென்ட்ல யார் ராவ்? அவர் தெலுங்கா… ராயரா?’

அந்தப் பெண் பேசியதை வைத்து என்ன சொல்வது? அவள் ராமாயணக் காலத்து சீதையாகக்கூட இருக்கலாம். நான் சொன்னேன் ‘தெலுங்கா இருக்கலாம்.’

‘ஏம்ப்பா, சிந்தாதிரிப்பேட்டையில இருந்த ஒரு சி.டி.ஓ பேர் ராமச்சந்திர ராவ்… இல்ல?’

‘நான் கேட்பவர் ஆபீஸர்.’

‘ஆமாம். சி.டி.ஓ-னா ஆபீஸர்… அவர்தானேப்பா?’ – அந்த மனிதர் தன் சக ஊழியரிடம் கேட்டார்.

‘அந்த சூசைட் கேஸ்தானா? ஏன் சார், அவர் வீடு எங்கே இருக்கு… தெரியுமா?’

நான், என் தெரு பேர் சொன்னேன்.

‘ஆமாம். அதே கேஸ்தான். சார், இந்த ஆபீஸ் போலீஸ் ஆபீஸ் மாதிரி. ஒவ்வொருத்தன் மேலேயும் ஒரு கேஸாவது இருக்கும். என்னவோ அந்த மனுஷன் பொண்டாட்டியோடு விஷம் சாப்பிட்டுச் செத்துப்போயிட்டான்.’

‘அவர் மனைவி இருக்காளே..!?’

‘அவங்க ரெண்டு பேரும் சேர்ந்துதான் செத்துப்போனாங்க. அந்த மனுஷர், தன் குடும்பத்தை எதிர்த்து அநாதைப் பெண் ஒருத்தியைக் கல்யாணம் பண்ணிருக்கார். சாவுக்கு ஒருத்தர்கூட வெளியூரில் இருந்து வரலை. உள்ளூர்ல இருந்து ஒரு கிழவர் மட்டும் வந்தார். போஸ்ட்மார்ட்டம், கிரிமேஷன் எல்லாம் நாங்கதான் ஏற்பாடு பண்ணினோம். வீட்டுக்குக்கூட எடுத்துப்போகலை. ராமச்சந்திர ராவ் நல்ல கறுப்பு; அந்த அம்மா நல்ல சிவப்பு. போஸ்ட்மார்ட்டம்ல ஏதோ கோணிப்பையைத் தைக்கிற மாதிரித் தெச்சுக் கொடுத்தாங்க.’

‘ஆமாம்… போஸ்ட்மார்ட்டம்னா அப்படித்தான்.’

”இது தெரியுது. அவங்க செத்தது உங்களுக்குத் தெரியலியே?’

‘ஆனா, அந்த அம்மா இருக்காங்க.’

அவர்கள் என்னை ஏதோ மாதிரி பார்த்தார்கள். விளக்கு எரிவது பற்றி எனக்கு ஏற்பட்ட அனுபவத்துக்குப் பிறகு இன்னொரு நகைப்புக்கு நான் தயாராக இல்லை.

அன்று இரவு நன்றாகத் தூங்கினேன். விளக்கு எரிந்தது. நான் யார்… ஒரு சீதை, ராமனுக்காகக் காத்திருப்பதைத் தடுக்க?

எதிர்வீட்டு விளக்கு, பக்கத்துவீட்டு விளக்கு தொந்தரவாகப்போவதை வைத்து சத்யஜித் ராய் ஒரு கதை எழுதியிருக்கிறார். கல்கத்தாவில் பெரிய பெரிய மாளிகைகள் இருக்கும். தெருக்கள், சந்து அளவுதான் இருக்கும். ‘சாகிப் பீபி குலாம்’ கதை நிகழும் மகா மாளிகை, ஒரு சந்தில்தான் இருந்தது. சந்தை விரிவாக்கிச் சாலை போட மாளிகையை இடிக்கும்போதுதான் அந்தக் குடும்பம் மருமகளைக் கொன்று புதைத்த மர்மம் தெரியவந்தது.

சத்யஜித் ராய் கதையில், ஓர் இளம் எழுத்தாளனை எதிர்வீட்டு விளக்கு வேலையே செய்யவிடாமல் தடுக்கிறது. அவன் அந்த வீட்டுக்குப் போகிறான். முன் அறையில் யாரும் இல்லை. ‘சார், சார்’ எனக் குரல் கொடுக்கிறான்.

ஒரு மனிதன் மாடியில் இருந்து இறங்கிவந்தான். உயரமாக இருந்தான். மிகவும் தீவிரமான முகம்.

‘என்ன வேண்டும்?’

‘உங்கள் வீட்டு விளக்கு இரவெல்லாம் எரிகிறது என்னால் ஒரு வேலையும் செய்ய முடியவில்லை.’

‘என் வேலை இரவில்தான். விளக்கு எரியத்தான் செய்யும்.’

‘என்ன வேலை?’

‘நான் ஓவியன். நான் முகங்களை நேரே பார்த்து வரைவது…’

‘பகல்தானே விசேஷம்?’

‘நான் படம் வரைபவர்கள் இரவில்தான் வருவார்கள்.’

‘உங்கள் ஓவியங்களைப் பார்க்கலாமா?’

‘வாருங்கள்… அவை பார்ப்பதற்குத்தானே?’

ஓவியன், இளம் எழுத்தாளனை மாடிக்கு அழைத்துச் செல்கிறான். அங்கே கண்ட இடமெல்லாம் ஓவியங்கள் இரைந்து கிடந்தன. ஓர் ஓவியம் அடையாளம் தெரிந்தது.

இரு நாட்கள் முன்பு இறந்த கவிஞர். இளைஞன் கேட்டான், ‘என்னை ஓவியம் வரைவீர்களா?’

ஓவியன் முகத்தில் மிகவும் லேசான புன்னகை. ‘நீங்கள் இன்னும் தயாராகவில்லையே?’

இளஞன் திரும்பிவிடுகிறான். அன்று அவன் தேசிய நூலகத்துக்குப் போகவேண்டியிருக்கிறது. வங்காள எழுத்தாளர்கள் வாழ்க்கை வரலாறு என ஒரு தடி புத்தகத்தை, தூக்க முடியாமல் தூக்கி மேஜை மீது வைத்துப் பார்க்கிறான். அவனுடைய எதிர்வீட்டு ஓவியன் வரைந்த முகங்கள் பல இருந்தன. எல்லாம் வெவ்வேறு ஓவியர்கள் வரைந்தது… அல்லது புகைப்படங்கள்.

திடீரென அவனுக்கு ஒரு விஷயம் புலப்படுகிறது. அந்த ஓவியன் வரையும் எழுத்தாளர்கள் எல்லாரும் இறந்தவர்கள். அவன் இறந்த எழுத்தாளர்களை மட்டுமே வரையும் ஓவியன்!

இந்த உண்மை அறிந்த மகிழ்ச்சியில் தெருவில் பக்கம் பாராது கடக்க முயலுகிறான். ஒரு குதிரை வண்டி மோதி, ஒரு சக்கரம் அவன் மீது ஏறி இறங்குகிறது. அந்த இடத்திலேயே அவன் உயிர் போய்விடுகிறது.

அன்றிரவு அந்த இளம் எழுத்தாளன் ஓவியன் வீட்டுக்குப் போகிறான். அவனிடம், ‘அப் மை தயார் ஹூம்’ என அறிவிக்கிறான்.

நான் ராமச்சந்திர ராவின் மனைவியைச் சந்தித்து ஒரு மாதத்துக்குள் நான்கைந்து பேர் கட்டபாரை, பெரிய பூட்டுடன் ராமச்சந்திர ராவ் வீட்டுக் கதவைத் திறந்து, சுத்தம் செய்கிறார்கள். என்னிடம் சண்டை போட்ட மனிதர் வாயைப் பொத்திக்கொண்டு இருந்துவிட்டார். வாட்ச்மேன் கேட்டிருக்கிறான். வந்தவர்கள் ராமச்சந்திர ராவின் சகோதரன் கிருஷ்ண ராவின் ஆட்கள். கிருஷ்ண ராவும் நல்ல அடர் கறுப்பு. அவன் சகோதரன் விட்டுச்சென்ற வரி நிலுவைத் தொகை, மின்சாரப் பாக்கி எல்லாவற்றையும் கட்டிவிட்டு வீட்டைச் சுத்தம் செய்தான். அந்த ஜன்னல் அறைக்கு வெளிர் நீல வண்ணம் அடித்தான். நிறையக் கொசுக்கள் வரும் என நினைத்துக்கொண்டேன். ஒரு மாத காலத்துக்குள் அங்கு ஒரு குடும்பம் குடியேறியது. மூன்று குழந்தைகள். வீடு கலகலவென மாறியது.

சீதையைக் காணோம். எங்கே போயிருப்பள்? அசோகவனம். அதுதான் அவள் யுகம் யுகமாக ராமனுக்குக் காத்திருக்கக்கூடிய இடம்!

– மே 2015

Print Friendly, PDF & Email

1 thought on “வெளிச்சம் ஜாக்கிரதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *