வினோதினியின் பூந்தொட்டி

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 17, 2014
பார்வையிட்டோர்: 13,422 
 

மிகவும் நிதானமாக பைக்கை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு அதன் தலையில் படிந்திருந்த தூசியை அதற்காகவே முன்புறம் வைக்கப் பட்டிருந்த துணியால் துடைத்து விட்டு வினோதினியைப் பார்த்து உள்ளே போலாமா என்றான் ஹரி. அவளும் சரி என்று தலையை ஆட்டினாள் தான் வைத்திருந்த மல்லிகைப் பூவிற்கு கூட வலிக்காமல்.
” புன்னகை, டாக்டர்.கைலாஷ் ” என்ற பெயர் தாங்கிய போர்டைக் கடந்து இருவரும் உள்ளே சென்றனர்.

அங்கே இருந்த ரிசப்ஷனிஸ்ட்டிம் சென்று ஐ யம் ஹரி. இன்னைக்கு டாக்டரிடம் 11 மணிக்கு அப்பாய்ன்மண்ட் வாங்கியிருக்கேன் என்றவாறு தான் கொண்டு வந்திருந்த அப்பாய்ன்மண்டின் பிரிண்டவுட்டை எடுத்து நீட்டினான். அதை வாங்கி சரிபார்த்துவிட்டு. சரி நீங்க அங்கே சோஃபாவில் உட்காருங்க என்று கூறிவிட்டு போனின் ரிசிவரை எடுத்தாள். பனை ஓலையால் செய்த விசிறி போன்ற அவள் புடவையின் மடிப்பைப் பார்த்துவிட்டு வினோதினி தன்னை ஒரு முறை சரி செய்து கொண்டாள்.

ஹரியும் வினோதினியும் ரிசப்ஷ்னுக்கு எதிராகப் போடப்பட்டிருந்த சோஃபாவில் அமர்ந்தனர். சோஃபாவிற்கு முன்னர் சில நாளிதழ்களும், மாத இதழ்களும் முழங்கால் அளவுள்ள ஒரு கண்ணாடி மேசை மீது அழகாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அதற்கு அருகிலேயே ஒரு சிறு புத்தக அலமாரியும் அதற்கு மேலே ” இவை பார்வைக்கு மட்டுமல்ல ” என்று எழுதப்பட்ட ஒரு சிறிய பெயர்ப் பலகையும் இருந்தன.
ஹரி அங்கிருந்த இந்தியா டுடேயில் மூழ்கினான். வினோதினி தன் கழுத்தில் அணிந்திருந்த செயினை வாயில் வைத்துக் கடித்தவாறே அந்த அறையை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தாள். அவன் அணிந்திருந்த ஜீரோ சட்டை கசங்காதவாறு அவன் கையை தன் விரலால் வருடி, ஹரி அங்க பாரேன் அந்த ஃபளவர் பாட் அழகா இருக்கில. உனக்கு புடிச்ச மாதிரியா ஹண்ட் மேட் தான். நாமளும் இப்படி ஒண்ணு வாங்கி நம்ம பால்கனில வச்சா அழகாக இருக்கும்ல என்றாள் அவன் முகத்தை பார்த்தவாறு. அவனும் அவள் காட்டிய ஃபளவர் பாட்டை முறைப்பது போல் பார்த்து விட்டு கண்டிப்பா வாங்கலாம்மா என்று கூறிவிட்டு மறுபடியும் இந்தியா டுடேயில் மூழ்கினான். அதன் விலை அதிகமிருக்கலாம் அல்லது உடைந்துவிடும் என்றெல்லாம் அவன் அங்கு வைத்து ஆர்க்யூ பண்ண விரும்பவில்லை.

சிறிது நேரத்தில் டாக்டர் உங்களை கூப்பிடுகிறார் என்று ரிசப்ஷனிஸ்ட் வந்து கூறினாள்.

ஹரி அங்கே இருந்த கதவில் தன் நடுவிரலை மடக்கியவாறு இருமுறை தட்டினான். அது ஒருவிதமாக அதிர்ந்தது. உள்ளேயிருந்து ” நீங்க தட்டாமலே உள்ளே வரலாம் ” என்ற குரல் கேட்டது. இருவரும் உள்ளே சென்றனர்.

” ப்ளிஸ் டேக் யுவர் சீட் ”

” தேங்கஸ் டாக்டர் ” என்று இருவரும் ஒருமித்துக் கூறியபடியே டேபிளுக்கு மறுபக்கமிருந்த இரு குஷன் வைத்த சேர்களில் அமர்ந்தனர்.

” யு ஆர் ஹரி அண்ட் வினோதினி ரைட்? ” என்றார் தன் மூக்கு கண்ணாடியை கழட்டி கண்களை துடைத்தவாறே.

” யெஸ் டாக்டர் ”

” சொல்லுங்க ஹரி சாப்டீங்களா. இது ஒண்ணும் ஹாஸ்பிடல் இல்ல. நானும் டாக்டர் இல்ல. என்ன நீங்க கைலாஷ்னே கூப்பிடலாம் ” என்றார் புன்னகை மாறாமலே.

” ஐயோ.. இல்ல டாக்டர். வீட்டிலேயே சாப்பிட்டுதான் வந்தோம்.” என்றான் ஒருவித சங்கோஜத்துடன்.

சிரித்தவாறே .. “ஓ.கே. சொல்லுங்க உங்களுக்கு என்ன பிரச்சனை ? உங்களுக்கு லவ் மேரேஜ் இல்லயா ?”

ஹரி வினோதினியைப் பார்த்துவிட்டு ” ஆமாங்க ” என்றான்.

” டாக்டர் நாங்க ஆறு வருசமா லவ் பண்ணி அதுக்கப்புறம் வீட்டுல போராடி இரண்டு வீட்டுலேயும் சம்மதம் வாங்கி போன வருஷம்தான் கல்யாணம் பண்ணோம். இதோ இந்த மார்ச் வந்தா ஃபர்ஸ்ட் அனிவர்சரி. ”

” ஓ.. குட்.. குட்… சொல்லுங்க ”

” கல்யாணமாகி முதல் இரண்டு மாசம் எந்தப் பிரச்சனையும் இல்ல. நாங்க நினைச்ச மாதிரியே ரொம்ப சந்தோஷமா வாழ்க்கை அமைஞ்சது. இவ உடனே குழந்தை பெத்துக்கணும்னு சொன்னா. நான் ஒரு வருஷம் தள்ளிப் போடலாம்னேன். ரெண்டு பேரும் கலந்து பேசி, அடுத்த வருஷத்துக்குன்னு முடிவு பண்ணிட்டோம். அதில இருந்து எங்க ரெண்டு பேருக்குள்ள எந்த ஒரு விஷயமானாலும் ஆர்க்யுமண்ட் தான். சின்ன சின்ன விஷயங்கள்ல ஆரம்பிச்சு அது இரண்டு பேரயும் எங்கயோ கொண்டு போயி நிறுத்திடுது. லாஸ்ட் வீக் கூட கோபத்துல நான் இவள அடிக்க கை ஓங்க, பால் கனியில இருந்த பூந்தோட்டிய எடுத்து ஒடச்சிட்டா.”

” ஓ.. ஐ..ஸீ… ”

” லவ் பண்ணும் போதும் சின்ன சின்ன சண்டைகள் வரும் தான். ஆனா அதெல்லாம் இப்படி இருந்ததில்ல. அப்போது வினோதினி ஹரியின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். எதுக்கெடுத்தாலும் சண்ட டாக்டர். என்னோட வேலையில அதிக டென்ஷன். டைமுக்குள்ள ப்ராஜக்ட்டை முடிச்சாகாணும். இல்லன்னா மேலதிகாரிகளுக்கு பதில் சொல்லி முடியாது. புரிஞ்சுக்க மாட்டிக்கிறா டாக்டர். எங்க ரெண்டு பேருக்கும் பொதுவான சினேகிதிங்க கூட பேசுனாக் கூட பொஸஸ்ஸிவ்வா ஃபீல் பண்றா டாக்டர் “.

” நாங்க ரெண்டு பேரும் இன்னும் அதே அன்போடதான் இருக்கோம் டாக்டர். ஆனா எங்க இந்த சண்டையால நாங்க பிரிஞ்சுடுவோமோ என்கிற பயம் வந்துடுச்சு. அதான் ரெண்டு பேரும் சேர்ந்து வக்கீல பார்க்குறதுக்கு முன்ன உங்கள பார்க்கலாம்ன்னு வந்தோம் டாக்டர் ” என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தான் ஹரி.

வினோதினியின் கண்கள் ஈரமாயிருந்தன. தூசி விழுந்து துடைப்பது போல் இருவருக்கும் தெரியாமல் லாவகமாகத் துடைத்துக் கொண்டாள்.

” வினோதினி நீங்க கொஞ்சம் வெளியே இருக்கீங்களா நான் ஹரிகிட்ட கொஞ்சம் பேசணும்.”

வினோதினி எழுந்து ஹரியைப் பார்த்தாள். அவன் கண்களால் வெளியே இரு என்பது போல சைகை செய்ய வினோதினி கதவைத் திறந்து வெளியே சென்றாள்.

” மிஸ்டர் ஹரி நான் பேச வேண்டியதே உங்ககிட்ட தான். நான் சொல்றதக் கேக்கிறதுக்கு முன்னாடி நீங்க கல்யாணத்துக்கு அப்புறம் உங்களுக்கு வினோதினியைப் பற்றி வந்த அத்தனை பிம்பத்தையும் அடியோடு அழிச்சுடனும். காலேஜ்ல நீங்க அவங்கள முதன் முதலா பார்த்ததையோ இல்ல ப்ரோப்போஸ் பண்ணதையோ கொஞ்சம் நினைச்சுப் பாருங்க ”

” ம்ம்ம்…சரி டாக்டர். ”

அவனுடன் பேசிக்கொண்டிருக்கும் போதே டாக்டர் கைலாஷ் தன் மொபைலை எடுத்து யாருக்கோ போன் செய்தார். அடுத்து மும்பையில் நடக்கவிருக்கும் சைக்கியாட்ரிஷ்ட் கான்பிரன்ஸ் குறித்தும், அதன் அஜண்டா குறித்தும் பேசத் தொடங்கினார். ஹரி சிறிது நேரம் அவரையே பார்த்துவிட்டு தன் கவனத்தை அங்கிருந்த அறையை நோக்கி திருப்பினான். சுவரில் மாட்டப்பட்டிருந்த மார்டன் ஓவியங்களைப் பார்த்தான். வெறும் வட்டமும் சதுரமுமாகவே தெரிந்தது. அவற்றில் ஒன்றும் அவனுக்குப் புரியவில்லை.

பத்து நிமிடத்திற்கு மேல் ஆகியது. டாக்டர் போனை வைத்த மாதிரி தெரியவில்லை. ஹரி வராத இருமலை வரவைத்து இருமினான். டாக்டர் அருகிலிருந்த தண்ணீர் டம்ளரைக் கண்களால் ஜாடை செய்தவாறே பேச்சை தொடர்ந்தார்.

மேலும் பத்து நிமிடமாகியது. ஹரிக்கு கோபம் வரத் தொடங்கியது. இந்த டாக்டரிடம் போ என்று ஆலோசனை கூறிய தன் நண்பன் அருணை மனத்திற்குள் ஒரு மிதமான கெட்ட வார்த்தையால் திட்டிக் கொண்டான்.
அடுத்து, ஐந்து நிமிடத்திற்கு மேல் ஹரியால் முடியவில்லை. அங்கிருந்து எழ முற்பட்டான். அதைக் கவனித்த டாக்டர் ஒரு நிமிடம் என்றவாறு ஃபோனைத் துண்டித்தார்.

” என்ன ஹரி என்ன ஆச்சு ஒரு மாதிரி இருக்கீங்க.. ”

” ஒண்ணுமில்ல டாக்டர்.. சும்மா தான் ” என்று மழுப்பினான்.

டாக்டர் சிரித்தார். அது அவனுக்கு மேலும் எரிச்சலைக் கிளப்பியது.

” ம்ம்ம்… என்னை எப்படி உங்களுக்கு தெரியும் ? ”

” என் ஃப்ரெண்ட் ஒருத்தர் மூலமா தான் டாக்டர் தெரியும். ”

நீங்க எதுக்கு வந்துருக்கீங்க?

சற்று கடுப்புடன், ” டாக்டர் என்னோட பிரச்சனைக்குத் ஒரு தீர்வு கிடைக்கும்ன்னு தான் வந்தோம் ” என்றான்.

” இதுதான் ஹரி பிரச்சனையே.. ”

ஹரி ஒன்றும் புரியாமல் முழித்தான்..

” டாக்டர்.. ? ”

” ஆமா ஹரி.. ஜஸ்ட் போன வாரம் தெரிஞ்ச எங்கிட்ட உங்க பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும்னு நீங்க நம்பி வந்து, நான் உங்கள இக்னோர் பண்ணும் போதே உங்களுக்கு இவ்ளோ கோபமும் டிப்ரஷனும் வரும் போது உங்களை உயிருக்குயிரா 6 வருஷமா காதலிச்சு கல்யாணம் பண்ணி, தன் பெற்றோர்களையும் சொந்த பந்தங்களையும் நண்பர்களையும் விட்டுட்டு உங்களை மட்டுமே நம்பி வந்த மனைவியை நீங்க வேலை, பணம், நண்பர்கள்னு ஏதேதோ காரணம் சொல்லி தவிர்க்கும் போது அவங்களுக்கும் இதே கோபமும் ஏமாற்றமும் வரத்தானே செய்யும்? இங்க வர்ர முடிவு கூட நீங்க எடுத்ததான் இருக்கும் இல்லயா ?

நீங்க வெளியே பத்து நிமிஷம் உட்காந்திருக்கும் போது உங்க இரண்டு பேரையும் சிசி-டிவில பார்த்துக்கிட்டுத்தான் இருந்தேன். நீங்க உங்கபாட்டுக்கு ஒரு புத்தகத்தைத் திறந்து உட்கார்ந்துட்டீங்க. உங்க மனைவி பட்ட பாடு பார்த்தீங்களா ? அந்த பத்து நிமிஷத்துல அவங்க எத்தனை தடவ உங்க முகத்தை பார்த்தாங்கன்னு தெரியுமா ஹரி உங்களுக்கு.?

அதுக்காக நீங்க உங்க மனைவியை நேசிக்கலன்னு சொல்ல மாட்டேன். உங்க நேசத்தை, காதலை காட்டலன்னு தான் சொல்வேன். ஹரி காதலை சொல்லும் போது நீங்க எடுத்துகிட்ட சிரத்தைய நினைச்சுப் பாருங்க. அதே ஆர்வத்தையும் சிரத்தையையும் கொஞ்சமாவது சேர்ந்து வாழும் போதும் காட்டணுமில்லயா ? அன்பும் காதலும் ஒரு வாசனைத் திரவியம் மாதிரி. பாட்டில்ல விட்டு அப்பப்போ வெளியே வந்தாத்தான் அதுக்கு மதிப்பு. அதே நேரம் அளவுக்கு அதிகமானாலும் சளிச்சுடும். எங்க எப்போ வெளிப்படுத்தனுமோ அங்கங்க வெளிப்படுத்தியாகணும். இல்லைனா நஷ்டம் என்னவோ நம்மளுக்குத்தான். பொண்டாட்டிய சந்தோஷமா வச்சுக்கோங்க சார் பணமும் புகழும் வந்து வாசல்ல நிக்கும். ”

” நான் என்ன சொல்றேன்னு உங்களுக்குப் புரியும்ன்னு நினைக்கிறேன். ”

ஆமாம் என்பது போல ஹரி தலையாட்டினான். அவன் டாக்டரின் கண்களைப் பார்க்காமல் அவரது டேபிளில் வைக்கப்பட்டிருந்த பளிங்கு கல்லினால் ஆன பிள்ளையார் சிலையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

” இதை உங்களுக்கு புரிய வைக்கணும்கிறதுக்காகத் தான் நான் வேண்டுமென்றே ஃபோனில் பேசினேன். அதில் உங்கள ஹர்ட் பண்ணியிருந்தா மன்னிச்சுருங்க ஹரி. ஐ யம் சாரி. ”

” ஐயோ என்ன டாக்டர் சாரியெல்லாம்? ஆக்சுவலா நான் தான் சாரி கேக்கணும். ”

” நீங்க கேட்க வேண்டியது எங்கிட்ட இல்ல உங்க மனைவிகிட்ட ” என்றவாறு டாக்டர் சிரித்தார். இந்த முறை ஹரியும் சிரித்தான்.

ஹரி டாக்டரிடம் விடைபெற்று வெளியே வரும் போது வினோதினி அங்கிருந்த ரிசப்ஷனிஸ்டிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள்.

ஹரி அவளுக்கு அருகில் வந்து ” வினோ போகலாமா ” என்றான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தன் பெயரை அவன் இப்படிச் செல்லமாகக் கூப்பிடுவதைக் கேட்டவுடன் அவளுக்கு கண்கள் பனித்தன.

செய்வதறியாது நின்றவளை ஹரி தன் தோளுடன் அணைத்துக் கொண்டு வெளியே சென்றான்.

* *

அடுத்தவாரம் ஒரு ஞாயிற்றுக்கிழமை ஹரி, பால்கனியில் புதிய பூந்தொட்டிக்கு கீழ், வழக்கம்போல் பேப்பர் படித்துக் கொண்டிருந்தான்.

ஏதோ ஒரு செய்தியைப் படித்துத் திடுக்கிட்டவனாய் சேரில் சற்று நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு மீண்டும் அதைப் படித்தான்.

பின்னர், ” வினோ இங்க உடனே வாயேன் ” என்று கூப்பிட்டான். கிட்டத்தட்ட அலறினான்.

வினோதினியும் பாத்திரம் தேய்த்த கையோடு அப்படியே வந்து அவன் தோளுக்குப் பின்னால் நின்று கொண்டாள்.

அவளை தனக்கு அருகில் உட்காரச் செய்து, அவள் தலையை வருடியவாரே, இதைப்படி என்று நகரச் செய்திகள் பக்கத்தில் வலது பக்க மூலையில் உள்ள ஒரு செய்தியைக் காட்டினான்.

அவள் அவர்கள் இருவருக்கு மட்டுமே கேட்கும் குரலில் படித்தாள் ” பிரபல மன நல மருத்துவர் கைலாஷின் மனைவி தற்கொலை”.

Print Friendly, PDF & Email

1 thought on “வினோதினியின் பூந்தொட்டி

  1. குட் ஸ்டோரி ககோட் சொலுடிஒன் போர் தி ப்ரொப்லெம். உநேக்ஸ்பெச்டேது ending

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *