பார் மகளே பார்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 10, 2014
பார்வையிட்டோர்: 11,813 
 

ரூபி உனக்கு ரெஜிஸ்டர் போஸ்ட் வந்திருக்கு.

அன்பு மிக்க ரூபிக்குட்டிக்கு,அன்புடன் அப்பா எழுதுவது..ஆண்டவரின் பெரிதான கிருபையினால் நாங்கள் அனைவரும் நலம்.நம் வீட்டின் முன் புறமெங்கும் ஊதாவும் மஞ்சளுமாய் ஒற்றையிதழ் செவ்வந்தி மலர்களும்,ஒயின் சிவப்பும்,பொன்னிறமுமான டேலியாக்களும்,செந்தூரமும் செம்மண்ணும் கலந்த வண்ணமான மெர்ரி கோல்ட் பூக்களும் மலர்ந்து உன் நினைவுகளை எங்களுக்கு அளிக்கின்றன.மகளே, அம்மா இந்த ரூபி இருந்திருந்தால் தோட்டத்திலேயே இருந்திருப்பாளே என்கிறாள்.உன் நண்பிகள் ரீனா,ஜூலி,நான்சி,எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்.அறையில் இன்னும் சோப்பங்கப்பா நடனம் நடக்கிறதா?

அன்பு மகளே நேற்று இரவு ஒன்பது மணிக்கு லட்சுமணன் வந்து ,சார் அனுராதா குட்டி போட்ரும் என்றான். நான்,அம்மா,வரதன் மூவரும் கையில் அரிக்கேன் விளக்குடன் நம் நிலத்திற்குச் சென்றோம்.அங்கு ஆஸ்பெட்டாஸ் கொட்டகையில் அனுராதா நிலை கொள்ளாமல் வலியில் தவித்துக் கொண்டிருந்தது.

கொதல்லோ பாதர் பண்ணையில் வாங்கிய ஜெர்சிப்பசு அது.அங்கு பணியாற்றும் எவனோ ஒரு ரசிகன் மாட்டிற்கு அனுராதா என்று ரசித்துப் பெயரிட்டிருக்கிறான்.கருமையும் வெண்மையும் கலந்த அருமையான பசு.அனுராதா என்றால் தலையைத் திருப்பி அழகிய கண்களுடன் பார்க்கும்.அதற்கும் அப்பெயர் பிடித்து விட்டது போல.

லட்சுமணனும் அவன் மனைவி சாமியும் போர்வையை போர்த்திக்கொண்டு குளிரில் குத்த வைத்திருந்தனர்.

வரதன் மாட்டின் வயிற்றைத் தடவி அறையில் கைவிட்டுப்பார்த்து இன்னும் கொஞ்ச நேரத்தில் ஆகிடும் என்றான்.

அனுராதா முன்னும் பின்னும் கால் மாற்றி மாற்றித் தவித்தது.மாடா இருந்தா என்ன மனுஷியா இருந்தா என்ன வலி ஒண்ணுதான அம்மா பெருமூச்சு விடுகிறாள்.நான்கு பிரசவங்களைக் கடந்த பெண்மையின் வலியன்றோ அது.

நிலவு அரைவட்டமாய் தலைக்கு மேலே,குளிரில் மணலில் அமர்ந்திருக்கிறோம்.அன்றுபெத்லகேமில் உதித்த தச்சனின் மகன் வரவிற்காய் காத்திருந்த சீமோனைப் போன்று நம்வீட்டுக் கொட்டிலில் பிறக்கப்போகும் கன்றிற்காய் பார்த்திருக்கிறோம்.

அன்பு மகளே அனுராதா வலியில் கால் இடறிக் கீழே சறுக்கியது.வரதனும் லடசுமணனும் அதை தூக்கி நிறுத்தப் பாடு படுகிறார்கள்.வயசான மாடு எழ முடியல சாமியின் கரிசனம்.

மகளே அந்த மாட்டின் வலி எனக்கு நானறிந்த பெண்களையெல்லாம் நினைவில் கொண்டு வருகிறது.ஆறு குழந்தைகளை மருத்துவ வசதிகள் குறைவான நாட்களில் பெற்ற என் அன்னை ஆரோக்கியம் அம்மாள்,ஒரே மகனைப் பெற்று இழந்த ஜாய்ஸ் அக்கா, எங்கோ நாஞ்சில் நாட்டில் பிறந்து ,இந்த வட ஆற்காடு குறிஞ்சி நிலத்தில் உங்களை எல்லாம் பெற்றெடுத்த என் பிரின்சி, நாளை இவ்வலிகளை தாங்கப்போகும் என் அருமை மகள்களான எஸ்தர் ,ரூபி,ஏஞ்சல் என உங்கள் அனைவரையும் எண்ணுகிறேன்.

பார்த்துக்கொண்டே இருக்கையில் பள பளவென்று கண்ணாடி போன்ற பனிக்குடம் தெரிகிறது.நிலவொளியில் ஒளிர்கின்ற கண்ணாடிப் பையில் கன்றுக்குட்டியின் குளம்புகள் மட்டுமே எனக்கு அடையாளம் தெரிகிறது.அம்மா என்ற அனுராதாவின் அலறலுடன் கன்றுக்குட்டி கீழே விழுகிறது.பிறந்த உயிரை அக்கணமே புதியதாகக் காண்பது ஒரு பேரனுபவமே.

உடல் சிலிர்க்க கன்றுக்குட்டி எழுந்து நிற்கிறது.காளைக்கன்னுக்குட்டி அய்யா வரதன் குதூகலமாய் கூறுகிறான்.அதன் உடல் ஈரம் நிலவொளியில் மினுமினுக்கிறது.செகல் கலர் கன்னு நல்ல ராசி லட்சுமணனின் ஆருடம்.

செவலையும் வெண்மையும் கலந்த அந்த உயிர் இம்மண்ணில் உதித்தது ஒரு மாபெரும் மகிழ்ச்சியை எங்களிடம் நிறைத்தது.

உயிர்களின் ஜனனம் என்பது ஒவ்வொரு நொடியும் ,காலங்காலமாக உலகம் தொடங்கியது முதலே நடந்துகொண்டே இருந்தாலும்,அது நிகழும் கணமெல்லாம் அற்புதமே. பிரபஞ்ச வெளியிலே தன் இருப்பை நிலைநாட்ட சின்னஞ்சிறிய புழு முதல் கானகத்தின் பெரும் களிறு வரையிலும் ,அது மனிதாக இருந்தாலும் ,நாயாக இருந்தாலும் ஒவ்வொரு உயிரும் விரும்புவது இயற்கையின் நியதி.

புனரபி மரணம்
புனரபி ஜனனம்…

நள்ளிரவு பன்னிரண்டைத் தாண்டிவிட்டது.அனுராதா ஒரு வழியாய் கருப்பை கழிவுகளை வெளியேற்றியது.

இன்று நம் வீட்டில் கடம்பப்பால்.வழக்கம்போல ரெபேக்கா பாலை சர்ச்சுக்கு வைக்கனும் என்கிறாள்.அவள் எல்லா முதல் ஈவும் ஆண்டவருக்கு என்பவள்…

அக்கன்றுக்குட்டிக்குப் பீட்டர் என்று பெயரிட்டிருக்கிறோம்.மிரண்டு வாலைச் சுழற்றியவாறு ஓடும்,மான்குட்டி போன்ற கண்கள் கொண்ட பீட்டர் எல்லாருக்கும் உற்சாகத்தை அளிக்கிறது.புதிதாய் உதித்த உயிருக்கு குவளயத்தில் எல்லாமே ஆச்சர்யங்களே.பீட்டரின் துள்ளல் நம் இல்லத்தில் முதன்முதலில் என் மூத்த மகள் எஸ்தர் பிறந்த போது எனக்கிருந்த உவகையை மீண்டும் அளிக்கிறது.

அப்பாவின் கடிதம் இச்சென்னை மாநரிலே எனக்கு குறிஞ்சி நிலத்தைக் காட்டியது.

என்னடி உனக்கு ரெஜிஸ்டர் போஸ்ட் நான்சி கேட்கிறாள்.நான் சிரிக்கிறேன்.

அப்பா டி.எப்.ஓ.ஆபீசிற்கு அனுப்ப வேண்டிய கடிதத்தை சாதாரணத் தபாலிலும்,எனக்கு கன்று போட்ட விவரம் எழுதியதை ரெஜிஸ்டர் தபாலிலும் ஆர்வத்தில் மாற்றி அனுப்பியதைப் பின்னர் அறிந்து கொண்டேன்.அன்று எங்கள் விடுதி முழுவதிலும் அனுராதா கன்று ஈன்ற கதையை என் அன்புத்தந்தையின் வார்த்தைகளில் வாசித்து காண்பித்தேன்.

கிறிஸ்துவின் பிறப்பு மட்டுமா உலகில் மகிழ்ச்சியைத் தரும்? எங்கள் வீட்டு கொட்டிலில் பிறந்த அந்த சின்ன கன்றுக்குட்டி அன்று எங்கள் அனைவருக்கும் கிறிஸ்துமசின் நட்சத்திரமாய் ஒளிர்ந்து சமாதானத்தை அளித்தது.என் சீனியர் ஜெமிம்மா கூறினாள் ரூபி உண்மையிலேயே நீ லக்கி.உங்க அப்பா எத்தனை அற்புதமா கடிதம் எழுதறாங்க.

என் அப்பா அப்படித்தான்.வாழ்வை ரசனையோடு மனிதாபிமானத்தோடு அனுபவிக்க எங்களுக்கு கற்பித்தார்கள்.என் கல்லூரி வாழ்வு முடிந்து பத்தாண்டுகள் ஆனபோதும் எனக்கு அக்கடிதங்களின் ஒரு எழுத்து கூட மறக்கவில்லை.நாங்கள்

ஒவ்வொருவராய் பள்ளி முடிந்து கல்லூரி வாழ்வில் விடுதிகளுக்குச் செல்கையில்

உண்ணவென்று உணவை
வைத்தால் உன் முகத்தை
காட்டுகிறாய்!
உறக்கமென்று படுக்கை
போட்டால்
ஓடிவந்து எழுப்புகிறாய்!
கண்மணியில் ஆடுகிறாய்!
புன்னகையில் வாட்டுகிறாய்
கண்ணிழந்த தந்தை
தனையே
என்ன செய்ய எண்ணுகிறாய!
நீயில்லாத மாளிகையை
பார் மகளே பார்!

என்று உண்மையில் சிவாஜிகணேசனை விட அதிகமாய் பீல் பண்ணி பாடுவார். அப்படித்தான் எங்களை நேசித்தார். நண்பனாய், மந்திரியாய் நல்லாசிரியனுமாய்….எங்களை வழிநடத்தினார்.

பெண் குழந்தையைப் பெற்ற எல்லா தகப்பனும் அப்படித்தான்.

என் தந்தையின் கடிதங்களே என் விடுதி வாழ்க்கையின் கடினங்களைக் கடந்து வர என் துடுப்புகள்.அப்பா எனக்கு எழுதாத விஷயங்கள் உலகில் எதுவுமே இல்லை.

ரூபிம்மா இந்த முறை நம் தோட்டத்தில் இலைகளே தெரியாத அளவு பீர்க்கங்காய்கள் காய்த்து தள்ளிவிட்டன.அம்மாவிடம் அவற்றை விற்றுத் தருவதாகக்கூறி ஒரு மூட்டை காய்களுடன் சென்ற எங்கள் பழைய மாணவன் ஜேம்ஸ் ஒரு மாதமாய் வரவேயில்லை.அம்மா ஏசுகிறாள்.

காலையில் வாக்கிங் செல்வது மிக உற்சாகமாய் இருக்கிறது.வனத்துறை இங்கு புதிதாய சில்வர் ஓக் என்ற மரக்கன்றுகளை நடுகிறார்கள்.கிறிஸ்மஸ் மரம் போன்ற அம்மென்மரங்களின் தேன் வண்ணப் பூக்கள் அழகாகவே உள்ளன.ஆனால் யூகாலிப்டஸ் மரங்கள் போல இவையும் எதாவது தீமை உருவாக்குமா என்ற சந்தேகமும் உள்ளது.தைல மரங்கள் ஐரோப்பியர்களால் அறிமுகப்படுத்தப் பட்டபோது அவை மிகுந்த வரவேற்பைப் பெற்றன.வெள்ளக்காரன் மரம் கூட அழகு என்று போற்றப்பட்டன.ஆனால் அவை மண்ணின் ஈரத்தன்மையை குலைத்து மண்ணரிப்பை உண்டாக்குகின்றன என அறிவதற்குள் எல்லா இடங்களிலும் பரவி விட்டன,கருவேல மரங்களைப் போன்றே.எனவே இந்த சில்வர் ஓக் மரங்களை நம் நிலத்தில் வைக்கலாமா என்பதை யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

மகளே கடந்த விடுமுறையில் நீ வந்தபோது இந்த பப்பாளி மரங்களை அழகுக்காகவும் அதே நேரத்தில் உணவுக்காகவும் வளர்கலாம் அப்பா,என்ன அழகு,என்று ரசித்தாயே அந்த ஒட்டு வகை பப்பாளி பெரிய பெரிய பூசணிக்காய்கள் போன்று காய்த்துள்ளது.ஆனால் பழத்தில் எந்த ருசியுமின்றி சல்லென்று உள்ளது.இயற்கையான தாவரங்களின் இயல்பை மாற்றினால் அவை இப்படித்தான் ஆகும்,பிராய்லர் சிக்கன் போன்று நஞ்சாய்…

அன்பு மகளே கடந்த சில நாட்களில் குட்டி எமிலிக்குக் காய்ச்சல்.மூன்று மாதக்குழந்தை காய்ச்சலில் பாலைக் குடிக்காமல் எஸ்தருக்கு பால் கட்டிவிட்டது.என் மகள் துடித்ததை என்னால் தாங்கவே முடியவில்லை.நெஞ்சு வலிக்குதுப்பா என்று அவள் அலறியது அடுத்த தெரு வரைக் கேட்டது.மல்லிகை மலர்,ஆண்டிபயாட்டிக்ஸ் என்று எத்தனை மருத்துவம் பார்த்தாலும் அவள் வலிகள் என்னை கலங்க வைத்தன.இயற்கை பெண்களுக்கு வைத்துள்ள வலிகளை ஒருநாளும் ஆண்களால் உணரவே முடியாது.

இப்படியான அப்பாவின் கடிதங்கள் எனக்கு காவியங்களாயின.

ஜெயகாந்தனைப் படித்துவிட்டு அப்பாவும் வரதனும் ஆடும் சோப்பங்கப்பா நடனத்தை நான் விடுதியில் எதார்த்தமாய் சொல்ல அங்கு அது உற்சாக வெளிப்பாடாய் ஆகிவிட்டது.

இன்று அப்பாவை அதிகம் நினைக்கிறேன்.காரணம் கிறிஸ்துமஸ்.பனியும் குளிரும் நவம்பர் மாதத்திலேயே கிறிஸ்துமஸை நினைவில் கொண்டுவருகின்றன.

பனிபடர்ந்த ஜவ்வாது மலையில் எங்களின் பால்ய நாட்களின் கிறிஸ்துமஸ விழாக்கள் இன்றைய ஆடம்பரங்களின்றி எளிமையானவை. அங்குள்ள சொற்ப கிறிஸ்தவர்களின் கொண்டாட்டங்கள் பெரும்பாலும் அங்குள்ள விடுதி மாணவிகளுடன் இணைந்ததே.கிறிஸ்துமசிற்காய் பாடல்களும்,நாடகமும் அரையாண்டுத்தேர்வு வருவதால் முன்கூட்டியே நடக்கும்.

சர்ச் வளாகத்தில் நடக்கும் அந்த கிறிஸ்மஸ் நாடகத்தில் நீள முடி இருந்ததால் நான் தான் மேரி. போர்வைகளைச் சுற்றிக்கொண்ட மேய்ப்பர்களும்,அட்டை கிரீடம் தரித்த தீர்க்கதரிசிகளும்,வெள்ளை நிறத் துணி இறக்கைகள் கட்டிய காபிரியேல் தூதனும்,ஆடு மாடு வேடம் பூண்ட சிறுமிகளும் சூழ்ந்திருக்க நீல நிற சிற்றாடையைத் தலையில் போர்த்தி கையில் குழந்தை ஏசு பொம்மையுடன் நடுவில் அமர்ந்திருக்கையில் என் மனம் மகிழ்வில் திளைக்கும்.

தந்தைக்கு தச்சு வேலை
மாதா தாயும் எளியவளே!
வாடைஅடிக்கிறதோ பாலா
குளிரும் பொறுக்கலையோ
நாதனே நீ அழுதால்
இந்த நாடு சிரியாதோ!!!
அந்தக் குளிர் இரவில் பெட்ரமாக்ஸ் ஒளியில் மெல்லிய இசை பிண்ணனியில் அப்பாடலை பாடுகையில் என் மனம் பரவசமாகும்.உண்மையிலேயே ஒரு பாலகனைக் கையில் ஏந்திய மரியாளாய் உணர்வேன்.

அப்பாடலை அப்பாதான் எனக்கு பிராக்டிஸ் பண்ணுவார்.உங்க எல்லாருக்கும் உங்க அப்பன் இதே பாட்ட பாடித்தான தொட்டில் ஆட்டுவான் ஜாய்ஸ் அத்தை கூறுவாள்.

வாழ்வின் யதார்த்தங்கள் நம்மை எப்படி அழைத்துச் செல்லும் என்று அரிதியிட மனித ஆற்றலால் இயலுமா.மனிதன் இந்த மாபெரும் இயற்கைக்கு முன் எத்தனை எளிய உயிர்.பிரபஞ்ச சக்தியின் உருவகத்தை யார் அறியக்கூடும்…

என் தந்தை கூறிய பெண்மையின் வலிகள் கடைசி வரையிலும் கிட்டாதவளாகவே காலம் என்னை வைத்துவிட்டது.திருமணமாகிப் பத்தாண்டுகளும் மாதா மாதம் அனுபவிக்கும் வலிகள் மட்டுமே நானறிந்தவை.அனுராதாவின் பிரசவ வலியும் எஸ்தரின் பாலூட்டிய வேதனைகளும் நான் அறியாதவை. ஒவ்வொரு மாதமும் எரிக்கும் நாப்கினின் செந்தீயின் பிழம்புகளில் அழிகின்றது மடியினில்,தொட்டிலில் மகவினைத் தாலாட்டும் கடைசி வரையில் நான் பாடாத அப்பாடல்…..

– சொல்வனம் இணைய இதழ் 24/11/2014 அன்று வெளிவந்துள்ளது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *