காத்திருத்தல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 5, 2022
பார்வையிட்டோர்: 3,747 
 

நான்…நிற்கவும் முடியாமல், நெளியவும் முடியாமல், இருக்கப் பிடிக்காமல், உட்காரவும் முடியாமல் ஒரு அவஸ்தையான ஆத்திர இம்சையில் அந்தக் கிளினிக்குள் உள்ளுக்கும் புறத்துக்குமாக நடந்தேன்.

மருத்துவரைப் பார்க்கும் அவசியத்தில் என் அம்மா என் முகத்தைப் பார்க்கவேப் பயந்துகொண்டு தலையை வேறு புறம் திருப்பி கூட்டத்தோடு கூட்டமாய் அமர்ந்திருந்தாள்.

அம்மா என்னை இங்கு அழைத்ததும் எனக்குள் ஆத்திரம் பற்றியது.

சீக்கு, சீக்கு!

60 வயது அம்மாவிற்காக மாதத்தில் இரண்டு மூன்று முறையாவது.

நான் அவளின் ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு மருத்துவரிடமாகக் காட்டிக் காட்டிக் கால் கடுத்து மனம் வெறுத்து நின்றது வேதனை.

இன்றைக்கு அலுவலம் விட்டு வீட்டினுள் நுழைந்ததுமே அம்மா நடுங்கிக்கொண்டு என்னருகில் வந்தாள்.

எனக்குத் திக்கென்றது.

“என்னம்மா..?” பயத்துடன் பார்த்தேன்.

“உ…உடம்புக்கு முடியலடா…” திக்கித் திணறினாள்.

“என்ன செய்யுது…?”

“சுரம், தலைவலி, வயித்து வலி. எழுந்தா தலை கிறுகிறுன்னு சுத்துது. விழுந்துடுவேன் போலிருக்கு.” அருகிலுள்ள நாற்காலியைப் பிடித்துக் கொண்டு சொன்னாள்.

“ரத்தம் அழுத்தம் அதிகமா இருக்கு. தலைவலி, சுரத்துக்கு மட்டும் மாத்திரை தர்றேன். போட்டுக்கிட்டு படுத்துக்கோ. சரியாய்ப் போயிடும்..!”

என் வார்த்தைகளை கேட்ட அடுத்த நொடி…

“என்னங்க இது..? அவுங்க முடியாம வந்து நிக்கிறாங்க. நீங்க மாத்திரை தர்றேன். போட்டுக்கிட்டுப் போய் படு. சரியாய்ப் போயிடும்னு சொல்றீங்க..?” – என் மனைவி ஆனந்தவள்ளி கொஞ்சம் ஆத்திரம் சத்தமாகக் கேட்டுக் கொண்டே அடுப்படியிலிருந்து கையைத் துடைத்துக்கொண்டு வெளியே வந்து அருகில் வந்தாள்.

அவள் வக்காலத்து எனக்குள் அடங்கிப் போன ஆத்திரத்தை அதிகப்படுத்தியது.

“உனக்கென்னடித் தெரியும்..? நான் கிளினிக் வாசல்ல போய் இவுங்களுக்காகக் காத்திருக்கிறது..? நோயாளியைவிட காத்திருக்கிறவங்களுக்குத்தான் கஷ்டம் அதிகம். புரியுமா உனக்கு..?!” வெடித்தேன்.

“அதுக்குகாக மனுசாளுக்கு ஒரு நோய் நொடின்னா டாக்டர்கிட்ட போய் காட்டுறதில்லையா..? உங்களை விட்டா அவுங்களைக் கவனிக்க இங்கே யாரிருக்கா..? கஷ்டமோ, நஷ்டமோ நீங்கதான் கவனிக்கனும்..”அவளும் பதிலுக்குக் காய்ந்தாள்.

“இதோ பார்! என் அம்மா விசயம் உனக்குத் தெரியாது. எந்த நோய் வந்தாலென்ன..? எல்லா டாக்டரும் டாக்டருக்குப் படிச்சவன்தானே…..?! கூட்டமில்லா இடமாப் பார்த்துக் காட்டி வருவோம்னு நினைக்க மாட்டாங்க. ஒவ்வொரு நோய்க்கும்…. இவர்தான் கை ராசிக்காரர், நல்லா பார்க்கிறவர்ன்னு கூட்டமா உள்ள இடமாய்ப் பார்த்து காட்டச் சொல்லி திருப்திப்பட்டு வருவாங்க. அங்கே பார்த்து முடிக்க ரெண்டு மூணு மணி நேரமாவும்!”

“நல்ல டாக்டருக்கிட்டேதானே காட்டனும்! அதுக்காக கடமைக்குப் பேருக்காக ஒரு டாக்டர் காட்டறதா..?” அவளும் விடவில்லை.

“வள்ளி ! அவுங்களுக்கு மன சம்பந்தமான கொஞ்சம் பிரச்சனை இருக்குடி. அவுங்க கை காட்டுற ஆளிடம் காட்டினாத்தான் நோய் போகும்ன்னு நம்பிக்கை!”

“அது சரி தானே. நோய் தீர…. மருந்து பாதி, மனம் பாதி என்கிறதுதானே சரி. இது புரிஞ்ச நீங்கதான் பொறுமையா நின்னு காட்டிட்டு வரனும்”

“பொறுமையாம் . பொறுமை ! இதை நினைச்சுத்தான்டி அப்படி நின்னு வெறுத்துப் போறேன். அந்த கூட்டத்துல நீ வந்து நின்னு பாரு. உனக்கு வலி தெரியும். அந்தக் கஷ்டம் புரியும்..!” – கத்தினேன்

“அப்போ…நீங்க சமையலைக் கவனிங்க. நான் கிளம்பறேன்!” அவள் பட்டென்று சொன்னாள்.

நான் சடெக்கென்று திரும்பி அவளைக் கோபமாக முறைத்தேன்.

“அவுங்களுக்கு ரொம்ப முடியல..கிளம்புங்க…” குரல் இறங்கி கிறங்கி கெஞ்சலாகப் பார்த்தாள்.

“இன்னைக்கு முடியாது!” எனக்கு இளகவில்லை.

“ஏன்..?”

“நாளைக்குப் பையன்களுக்குப் பரீட்சை. நான் உட்கார்ந்தால்தான் படிப்பாங்க..”

“அவனுங்க படிப்பை நான் பார்த்துக்கிறேன். நீங்க கிளம்புங்க..”

“ஏய்……” ஆத்திரத்தில் கை ஓங்கினேன்.

உடன்…

“எனக்காக உங்களுக்குள்ள சண்டை வேணாம்ப்பா..!” அம்மா பதறி தடுமாற்றத்துடன் எங்களுக்கு இடையில் வந்தாள்.

ஆனந்தவள்ளி மிரளவில்லை , அடங்கவில்லை.

“இவர் சரி வர மாட்டார். நீங்க புறப்படுங்க அத்தை. நாம ஆட்டோவுல போய் வரலாம்..” என்றாள்.

இதற்கு மேல் எப்படித் தாக்குப் பிடிக்க..?

“சரி. கிளம்பித் தொலை!” ஆத்திரமாகக் கத்திவிட்டு முகம் கை கால் கழுவ கொல்லைக்குச் சென்றேன்.

அம்மா என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்புடன் நின்றாள்.

“போங்க அத்தை ..!” சொல்லி ஆனந்தவள்ளி அடுப்படிக்குள் நுழைந்தாள்.

அம்மா தட்டவும் முடியாமல் இருக்கவும் முடியாமல் அரை மனதாகக் கிளம்பினாள்.

பத்து நிமிடத்தில் நான் ஸ்கூட்டரை உதைக்க…..

பின்னால் அமர்ந்திருந்த அம்மா…

“க….கணேசன் டாக்டருக்கிட்டப் போப்பா..” பயத்துடன் சொன்னாள்.

‘கிழிஞ்சுது!’ – வெறுத்து வண்டியை விட்டேன்.

கணேசன் பேர் பெற்ற மருத்துவர். எப்போதுமே அவரிடம் பத்து இருபது பேர்கள் காத்துக் கிடப்பார்கள்.

இன்றைக்கு எத்தனைப் பேர்களோ..?!

போய் வண்டியை நிறுத்த… இருபதைத் தாண்டி நின்றார்கள்.

அம்மா இறங்கிப் போய் வரிசையில் உட்கார்ந்தாள்.

அருகிலுள்ள மருந்து கடையில் டோக்கன் வாங்கினேன்.

நாற்பது!

“எத்தினி போவுது..?” வாசலில் நின்று நோயாளிகளை அனுப்பும் பெண்மணியிடம் கேட்டேன்.

“இருபத்தி ஆறு ! உங்க டோக்கன் நம்பர் என்ன..?” கேட்டாள்.

சொன்னேன்.

“மணி ஏழு. என் டோக்கன் பத்து மணிக்கு முடியுமா..?” கேட்டேன்.

“முடியலாம். இடையில விடுபட்டவங்க வந்தால்.. பதின்னொன்னு ஆகும் !” சொன்னாள்.

நான் எரிச்சலாய் அவளைப் பார்த்தேன்.

“என்ன சார் செய்யிறது..? விடலைன்னா சண்டை போடுவாங்க…” என்றாள்.

உள்ளுக்குள் கோபம் கொதிக்க அகன்றேன்.

வெங்கடசுப்ரமணியம் ஈ ஓட்டிக்கொண்டிருப்பார். அவரிடம் சென்றால் ஐந்து நிமிடத்தில் வேலை முடிந்து அருகிலுள்ள மெடிக்கலிலும் அவர் எழுதிய மாத்திரைகளை வாங்கிக் கொண்டு மொத்தமாக பதினைந்தே நிமிடங்களில் எல்லாம் முடித்து வீடு போய் சேர்ந்திடலாம். ஆனால்…

அம்மா.. வரமாட்டாள்! – கடுப்புடன் பார்த்தேன்.

மனைவி மேலுள்ள ஆத்திரம் கோபத்தில் காபி கூட குடிக்காமல் வெற்று வயிறாக வந்தது வேறு பிசைந்தது.

“என்ன தம்பி! கடு கடுன்னு நிக்கிறீங்க..?” அருகில் குரல்.

திரும்பினேன்.

தெரிந்த ஆசிரியர்!

“அம்மாவை அழைச்சுக்கிட்டு வந்திருக்கேன். நீங்க…?”

“மனைவிக்குத் தலைவலி, சுரம், வாந்தி… அஞ்சு மணியிலிருந்து உட்கார்ந்திருக்கேன்.” என்றார்.

“டோக்கன் நம்பர்.?” பார்த்தேன்.

“முப்பது ! இன்னும் அரை மணி நேரத்துல முடிச்சி வீடு போய் சேர்வோமா தெரியல..”என்றார்.

“எப்போ வந்தீங்க…?”

“ஆறு மணிக்கே வந்து இந்தக் கதி..? ”

“எவ்வளவு நேரம்…?!..” அவருக்கும் எனக்குமாய் நினைத்துப் பெருமூச்சு விட்டேன்.

“என்ன தம்பி பண்றது..? நோய் வந்தா நல்ல டாக்டர்கிட்ட காட்டி சரி பண்றதுதானே சரி.?”

“இந்த காத்திருத்தல்தான் சார் கடுப்பா இருக்கு.” சலித்தேன்.

புரியாமல் பார்த்தார்.

“நோய் உள்ளவங்களுக்கு இந்த கஷ்டம் தெரியாது. ஏன்னா.. அவுங்க இருந்தே ஆக வேண்டிய கட்டாயம். அவுங்களுக்காக வந்து நிக்கிறவங்க பாடுதான் திண்டாட்டம். ஒவ்வொரு நொடியும் நரகம்.! ”

“இருந்துதான் ஆகனும்!”

திடுக்கிட்டுப் பார்த்தேன்.

“பத்து மாசம் சுமந்தவங்க. நீ அவுங்க வயித்துக்கு கருவறை உள்ளே இருந்தவன். அவுங்களுக்கு நீ உள்ளே இருந்த ஒவ்வொரு நொடி, நிமிடங்கள் சில சமயம் சொர்க்கமாகவும் நரகமாவும் இருக்கும். சொர்க்கமா இருக்கும் நேரத்தை விட அதிக அவஸ்தையாய் இருக்கும் நேரம்தான் அதிகமா இருந்திருக்கும். அதைப் பார்க்கும்போது… இந்த காத்திருத்தல் அவஸ்தை எல்லாம் ரொம்ப ரொம்ப தூசு. தாரமும் ஏறக்குறைய தாய்தான். அவளும் புள்ளை சுமந்து, நம்மை சுமந்து…காத்திருந்தே ஆகனும்!” சொல்லி நகர்ந்தார்.

எனக்குள் பளீர் வெளிச்சம் வந்து ஞானோதயம் பிறந்தது.

அம்மாவைப் பரிவுடன் பார்த்தேன்.

என் பார்வை புரியாத அவள், ‘மன்னிச்சுக்கோப்பா..!’ என்பதைப் போல் தர்மசங்கடமாய்ப் பார்த்தாள்!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *