இனி எல்லாம் இன்பமே

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 5, 2020
பார்வையிட்டோர்: 18,275 
 

தினம் தினம் நடக்கும் வழக்கமான நிகழ்வுதான் அது.

அன்றைக்கும் எனக்கு அது நடந்தது.

இனி எல்லாம் இன்பமே

அந்த நிகழ்வு நடந்தது எனது வீட்டுக்குள்தான் என்றதால்,மெல்ல நகர்ந்து ஒவ்வொரு சுவிட்ச் போர்டாய் சென்று பார்த்தேன்.இன்னேரம் புரிந்திருக்குமே உங்களுக்கு..என் ஃபோனில் சார்ஜ் போடத்தான் இப்படி அலைந்து கொண்டிருக்கிறேன் என்று?

அனைத்து சுவிட்ச் போர்டுகளும் பிஸியாகவே இருந்தது.

குழந்தைப்பேறு இல்லாதவர்கள்,கோவிலிலிருக்கும் ஆலமர விழுதுகளில் கட்டி தொங்கவிடும் பொம்மைத்தொட்டில் நினைவுக்கு வந்தது எனக்கு. ஒவ்வொரு சுவிட்ச் போர்டிலும் ஒவ்வொன்று தொங்கிக்கொண்டிருந்தது.

சுவிட்ச் போர்டு ஒன்றின் ப்ளக்கில், மகனின் ‘ஹெட் செட்’தொங்கிக்கொண்டிருந்தது.

அதைப்பார்த்ததும்,

என் மனைவி என்னிடம் ரெண்டு நாளைக்கு முன்பு சொன்னது என் காதுகளில் அப்போது ஒலித்தது.

“என்னங்க உங்க பையன் எதையுமே காதுல போட்டுக்கமாட்டேங்கிறான்.என்னான்னு கொஞ்சம் கேளுங்க”

மனைவியின் கம்ப்ளைண்டை மகனிடம் விசாரிக்கலாமென்றால்,நான் சொன்னதையும் அவன் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை.

அதற்கு சரியான காரணம்…அவன் 24 மணி நேரமும் காதுகளில் ‘ஹெட் செட்டை’ போட்டபடி ஒரு குரூப்பை சேர்த்துக்கொண்டு ‘பப்ஜி’ விளையாடிக்கொண்டிருப்பதையே முழுநேர தொழிலாய் செய்து கொண்டிருந்தான் என்பதுதான். பார்ட் டைமாய் காலேஜ்க்கு போய் வந்தான் என்பது சொல்லாமலே புரிந்திருக்கும்.

” நீ அவன் காதுல ‘ஹெட் செட்’ இல்லாத நேரமா பார்த்து அவன்கிட்ட சொல்லு.அப்ப அவன் நீ சொல்றத..கட்டாயமா காதில் போட்டுப்பான்.இல்லாட்டி….”

எதோ செம்ம ஐடியா சொல்லி அசத்தப்போறார் ஆத்துக்காரர் என்றெண்ணியபடி,மிகவும் ஆர்வமாய் என்னிடம் கேட்டாள், என் மனைவி.

“இல்லாட்டி?”

“நீ இன்னொரு புது ‘ஹெட் செட்’வாங்கி கொடு …அவன் நிச்சயமா காதுல போட்டுப்பான்”

என்று நான் சொன்னதும்,

“கடுப்பேத்தறார் மை லார்ட் ” எனும் மீம்ஸை நினைவு படுத்துவதாய் மாறிப்போனது அவளின் முகம்.

இன்னொரு சுவிட்ச் போர்டின் ப்ளக்கில் தொங்கிக்கொண்டிருந்ததும் சாட் சாத் என் மகனின் செல்போனும் பின்னே அதோட சார்ஜரும்தான்.

கிச்சனில் இருந்த இன்னொரு ‘சுவிட்ச் போர்ட்’நோக்கி நகர்ந்தேன்.

டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எனும் சத்தத்தோடு ஓடிக்கொண்டிருந்தது…மிக்ஸி. சத்தம் அது நார்மலான மிக்ஸி கொடுக்கும் சத்தமில்லை.அதுக்கும் மேல.

இப்படி அது போடும் சத்தத்தை கண்டும் காணாமலும் இருப்பதே சாலச்சிறந்தது.இல்லாவிடின், புது மிக்ஸி வாங்க வினவப்படும். அதனால்…மிக்ஸியின் சத்தத்தை நான் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை என் மகன் போலவே.சில நேரங்களில் நாம் நம் பிள்ளைகளிடமிருந்தும் பாடம் கற்கிறோம் என்பது ஊர்ஜிதமானது, இந்த விஷயத்தில்.

அருகில் நெருங்கியதும், மனைவி என்னிடம் கேட்டாள்.

” வாங்க வாங்க..!! அப்டியே ரெண்டு நிமிஷம் இந்த சட்னிய அரைச்சிக்கொடுங்க.

அதுக்குள்ள நான் இட்லியை ஊத்தி வச்சிச்சிட்டு வந்துடறேன்”

மாட்டிக்கொண்டேன்.

சுவிட்ச் போர்டும் பிஸி.நானும் பிஸி,கூடவே பசி

அதுதான் ‘சட்னி’ அரைக்கச்சொன்னதும் ‘சட்னு’ ஒத்துக்கொண்டேன்.

அப்பாடா..சட்னி அரைச்சதும்.சுவிட்ச் போர்டின் ப்ளக்கும் ஃபிரியாகிடும்…என ஆசையாய் நினைத்திருந்த எனக்கு, அந்த ஆசை நீடிக்க விடாமல் செய்தாள் என் மனைவி.

” என்னங்க….சட்னி அரைச்சதும்….கொஞ்சம் கஷாயத்துக்கு ரெடி பண்ணி வச்சிருக்கிற தானியங்களை அரைச்சிகொடுத்துடுங்களேன்..ப்ளீஸ்”

ப்ளீஸ் என்ற வார்த்தை ஒரு மந்திரவார்த்தை தெரியுமா உங்களுக்கு?

” ப்ளீஸ்” என்றால்…உருகிப்போவேன் நான்.சட்னியை மட்டும் அரைத்துவிட்டு சொன்னேன்.

“ஒரு நிமிஷம் இருடி. வந்து கஷாய பொருளை அரைச்சிக்கொடுக்கிறேன்”

சொல்லிவிட்டு, ஹாலில் இருந்த இன்னொரு சுவிட்ச் போர்டை நோக்கி சென்றேன்.

அதில்,தனது ஒற்றைக் காலினை சுவிட்ச்சின் ப்ளக்கிலும், தலை கீழ் நோக்கியும் தொங்கிக்கொண்டிருந்தது, அந்த கொசு bat.

என் மனைவி உண்மையில் கிரிக்கெட் ப்ளேயர் ஆகி இருந்தால்….பல சாதனைகளை செய்திருப்பார் என்பது உறுதியாக எனக்கு தெரிய வந்த நிமிடங்கள்…எது தெரியுமா?

அந்த சார்ஜில் தொங்கிக்கொண்டிருக்கும் கொசு பேட்டை லாவகமாக பிடித்து,எங்கள் யாரின் உடலின் மீதாவது வந்து அமர்ந்து ரத்தம் உறிஞ்சிவதற்குள், அடிப்பாள் பாருங்கள் ஒரு அடி!!

கொசு அவுட்.

கிரிக்கெட் மேட்ச்சில் ,களத்திலிருக்கும் பேட்ஸ்மேனுக்கு பாலும் பேட்டும் சரியாய் கனெக்ட் ஆகி சிக்ஸ் ஆகும் தருணம் போலிருக்கும் அவளின் அடியில் கொசு சாகும் தருணம்.

என்ன ஒன்று?!!அப்பப்போ….கொசுவோடு கூட, ஒரு சில ஈக்களும்…..ஈயப்படுவதுண்டு….இறப்புக்கு.

கொசு அடிப்பதையே தொழிலாக வைத்திருக்கும் அவளுக்கு , கொசு பேட் எப்போதும் சார்ஜிலே இருக்க வேண்டும்.

நான் அந்த கொசு பேட்டை எடுத்து விட்டு, என் ஃபோனை சார்ஜில் போட்டது தெரிய வந்துச்சின்னா….என்னை பந்தாக்கிடுவாள்.

எதுக்கு வம்பு என்று அதை டிஸ்டர்ப் செய்யாமல்…மறுபடி கிச்சனில் நுழைந்தேன்.

எனது தொப்பை குறைய ,தினமும் அதிகாலை ,அவள் எனக்கு செய்து கொடுக்கும்… கஷாயத்துக்கான, கருஞ்சீரகக்கூட்டணி பொருள்களை அரைத்துக்கொடுக்க ஆயத்த மானேன்.

சரியாய்….பத்து நிமிஷம்…தூள் தூள் ஆக்கினேன்….மிக்ஸியினுள் இருந்ததை.

( பெரியதாய் நான் சாதித்துவிட்டதாய் கற்பனை ஏதும் செய்யாதீர்கள்.’மிக்ஸியை”ஆன்’ செய்துவிட்டு ,அதன் தலையில் கை வைத்தபடி சிவனேன்னு நிற்க வேண்டியதுதான்.சிறிது நேரத்தில் உள்ளிருந்த பொருள்கள் அனைத்தும் ‘தூள் தூள்’ ஆகிவிடும். பிறகு நாந்தான் அரைச்சேன்.. நாந்தான் அரைச்சேன்னு பந்தா விட்டுக்கலாம். ஆனால் நீங்க அரைச்ச மாவையே அரைக்கறீங்கன்னு ஒரு நாள் கண்டு பிடிக்கப்பட்டு மனைவியிடமே மொக்கை வாங்குவீர்கள் ஜாக்ரதை)

அரைத்ததை எடுத்து மனைவியிடம் கொடுத்தேன்.

நீண்ட நேரமாய் கால் கடுக்க நின்றபடி, பேருந்துக்குள் பயணம் செய்தவனுக்கு ,நிற்கும் தன் அருகிலேயே உட்கார ஒரு சீட் கிடைத்தால் எத்தனை மகிழ்வானோ அவ்வளவு மகிழ்வானேன்…நான்.

அவசர அவசரமாய்…..மிக்ஸியின் ப்ளக்கை வெளி எடுத்து விட்டு என் ஃபோன் சார்ஜரை சொருகி விட்டு,ஹாலில் வந்தமர்ந்தேன்.

அங்கே…. ஓடிக்கொண்டிருந்த டிவியில்…..பழைய பாடல் ஓடும் சேனலை தேடியபடி ரிமோட்டில் சானல் டூ சானல் தாவிக்கொண்டிருந்தார்,என் அப்பா.

கிச்சன் வேலையை முடித்த என் மனைவி அடுத்த வேலைக்கு ஆயத்தமானாள்.

வீட்டைப்பெருக்குகிற வேலை,துணி துவைக்கிற வேலை,சாப்பாடு போடுற வேலை அப்டின்னு நீங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வேலையாய் நினைத்துக்கொண்டிருந்தால்….எல்லாமே தப்பு.

அவளின் அடுத்த வேலை என நான் சொன்னது….கொசு அடிக்கும் வேலை.

கொசு பேட்டை ப்ளக்கிலிருந்து விடுவித்து சுதந்திரம் கொடுத்தாள்.

பேட்டும்….அகோர கொசுப்பசியில் இருப்பதாய் தோணிற்று எனக்கு.

அதற்குள்…..

எனது ஃபோனில் சார்ஜ் போவதற்கு முன்பு, முகநூலில் நான் போட்ட கவிதைக்கு, இதுவரை எத்தனை லைக்குகள் வந்திருக்கும்….எத்தனை பேர் அதை சிலாகித்து கமெண்ட் போட்டிருப்பார்கள்,எத்தனை பேர்….அதை மொக்கை என்று முடி சூட்டி இருப்பார்கள்…என்பதறிய மனம் ஓடிக்கொண்டிருந்தது. உணவில்லாமலும் இருப்பேன்.கையில் போன் இல்லாமல் இருக்க முடியாது என்னால். ஃபோன் உண்ண, என் நேரம் கொடுக்கும் வள்ளலாகிபோய்விட்டேன்.

அரைமணி நேரம்.அப்பா ரசித்த சானலையே வேறு வழி இன்றி பார்த்துக்கொண்டிருந்தேன்.

இடை இடையே, கமலின், விக்ரம் படத்தில் ( கடாரம் கொண்டான் படமா என மொக்கையா யோசிக்காதீர்கள்) எலிக்கோவிலில் வரும் சத்தம் போல கிறீச் கிறீச் என்று வந்தது.

மனைவி, கொசு அடிக்கும் சத்தம்.கொசு பேட்டில் கொசு வந்து மாடிக்கொள்ளும் தருணம் இப்படித்தான் சத்தம் வரும்.

அந்த அரைமணி நேரத்தில் எப்படியும்,40 % சார்ஜ் ஏறி இருக்குமென்ற என் அனுமானத்தை உறுதி செய்ய ,மிக்ஸியின் ப்ளக் பாயிண்ட் நோக்கி சென்றேன்.

அதிர்ச்சியில் உறைந்து போனேன்…

“புரிந்து போயிருக்குமே உங்களுக்கு?”

சரிதான்….நீங்கள் நினைத்தது…

ஃபோனை ப்ளக்கில் சொருகிவிட்டு, சுவிட்சை ‘ஆன்’ செய்ய மறந்து விட்டு வந்துவிட்டேன்.

அப்போது,மனைவியின் கொசு பேட்டிலிருந்து தப்பித்த கொசு ஒன்று, மெல்ல பறந்து வந்து, என் ஃபோனின் மேல் வந்தமர்ந்தது. அக்கொசு, எனை ஏளனமாய் பார்த்துவிட்டு சென்றதாய்…உள்ளுணர்வு….எட்டிப்பார்த்தது எனக்கு. ‘ஷேம் ஷேம் பப்பி ஷேம் ” பாட்டு வேறு தேவை இல்லாமல் வந்து யாரோ பாடி விட்டுச் சென்றார்கள்.

அடச்சே…என என்னையே நினைத்து நொந்தபடி, ஃபோன் சார்ஜரின் சுவிட்ட்சை ஆன் செய்தேன்.

காக்காய் உட்காரும் நேரம், பனம்பழம் விழுந்த கதையாய்,அப்போது திடீர் என்று கரண்ட் கட் ஆனது.

என்னத்த சொல்ல?

என மீண்டும் புலம்பியபடியே, திரும்ப ஹாலில் வந்தமர்ந்தேன்.

கரண்ட் என்னேரமும் திரும்பி வந்து விடலாம் என்கிற நம்பிக்கையில் தொலைக்காட்சி முன்னடியே நகராமல் அப்பா உட்கார்ந்திருந்தார்

மின்சாரம் வந்ததும், என்னை அந்த தொலைக்காட்சியின் வசம் ஒப்படைக்க மனம் விரும்பவில்லை.

ஆனால்…. என்னை ஒன்றில் மூழ்கடிக்கப்போக முடிவு செய்தேன். அதற்கு இதுதான் சரியான தருணம் என்று பட்சி சொன்னது.

மெல்ல அதன் அருகில் சென்றேன்.மனசு லேசாய் பறக்க ஆரம்பித்தது. புத்தக அலமாரியில் அடுக்கி வைத்திருந்த புத்தகங்களில் ஒன்றினை வெளி எடுத்தேன்.

துணிக்கடைகளில் சேலைக்கு ,பிளவுஸ் மேட்ச் பார்ப்பவர் அடுக்கி வைத்திருக்கும் ப்ளவுஸ் பிட்களை இரு விரல் கொண்டு உருவுவதை போல்…எனக்கு அப்போது தோன்றியது.

எனக்கு பிடித்தமான அந்த எழுத்தாளரின் புத்தகத்தின் பக்கங்களை புரட்டினேன்.

உள் சென்று நீந்தினேன்.

ரசித்து ரசித்து மகிழ்ந்தேன். தாகம் எடுக்கையில் ஒரே மூச்சில் குடித்து காலியாகும் தண்ணீர் சொம்பாய் ஆனது அந்தப்புத்தகம்.

மறுநாள்.

அந்த நிகழ்வு…மறுபடி நடந்தேறியது.ஆமாம்.

எனது ஃபோன் சார்ஜ் இழந்து போனது.

அன்றைக்கு செம அதிர்ஷடம் போல எனக்கு.அனைத்து ப்ளக் பாயிண்ட்களும் காலியாகவே இருந்தன.

ஹாலிலிருந்த அந்த ப்ளக்கில் எனது ஃபோனை சொருகிவிட்டு…( மனைவியின் கொசு பேட் வேறு இடத்தில் சார்ஜ் ஆகிக்கொண்டிருந்தது).

புத்தக அலமாரியிலிருந்து இன்னொரு புத்தகத்தை எடுத்து புரட்டினேன்.இன்னும் கொஞ்ச நேரத்தில்…ஆழ்ந்துவிடுவேன், அதில்.

என் மனைவியின் கொசு பேட்டிலிருந்து, எப்படியாவது ஒரு கொசுவாவது தப்பித்து வந்து சார்ஜ் போட்டிருக்கும் என் போனில் அமரத்தான் போகிறது.

அமர்ந்து ,சார்ஜர் சுவிட்சை ஆன் செய்யாமல் வந்து விட்டதை கிண்டல் அடிக்கத்தான் போகிறது.

ஆனால் அந்த கொசுவுக்கு தெரியாது. இந்த முறை ,எனது ஃபோனின் சார்ஜர் ப்ளக் சுவிட்ச்சை வேண்டுமென்றே நான் ஆன் செய்யாமல் வந்திருந்தது.

தண்ணீரில் மூழ்கிப்போயிருந்த அத்திவரதர் வெளி வந்ததைப்போல,ஆன்ராய்டு மோகத்தில் மூழ்கிப்போயிருந்த நானும் வெளி வந்து விட்டேன்.ஆனால் அவரைப்போல நான் மறுபடி மூழ்கப்போகப்போவதில்லை….இந்த ஆன்ராய்டு போதையில்.

சற்றே…திரும்பிப்பார்த்தேன்.

அலமாரியில் அடுக்கப்பட்டிருந்த அத்தனை புத்தகங்களின் முகம் முழுதும் புன்னகைப்பூக்கள்.

– நவம்பர் 2019

Print Friendly, PDF & Email

1 thought on “இனி எல்லாம் இன்பமே

  1. சூப்பர் சார்.. சார்ஜ் ஏற்றும் படியான கதைதான்..ஆனா.. கரண்டியில் கற்றுக் காெ ள்ளா த கிரிக்கெட் டை மனைவிகள் காெ சு பே ட்டில் கற்றுக் காெ ள் வதாய் சாெல்வது பை நாகரிகம் கருதியே..! மண் ஒட்டாத கணவனின் கூற்றுதான்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *