தொடரும் அல்லது ஏற்பது மகிழ்ச்சி

2
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: காதல்  
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 29,296 
 

ஒரு காதல் கதையைக் கேட்கிறீர்களா?

வருண்குமார் என்னும் நான் இன்றைய நவீனங்களுக்குப் பழக்கமானவன். பீட்ஸா. கே.எஃப்.சி.யின் சிக்கன் லாலிபாப். சப்வே. டீஸல் ஜீன்ஸ். அடிடாஸ் ஷூஸ், ஆப்பிள் லாப்டாப். பிளாக்பெர்ரி. எக்ùஸட்ரா. எக்ùஸட்ரா.

வயது இருபத்தாறு. அந்தக் கால மோகன், ராமராஜன்களை நினைவுபடுத்துவேன். ஐந்து அடி ஆறு அங்குலம். மார்பளவு முப்பத்தெட்டு. இடுப்பு குறுகி இருக்கும்.

கல்லூரிக் கல்வியின்போது காதல் கவரவில்லை. படிப்பு முடிந்த பின்பும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஒரே வெறிதான் இருந்தது.

தொடரும் அல்லதுகிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டேன், நேர்மை தவறவில்லை. இன்றைக்குத் தொலைக்காட்சியில் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை விளம்பரம் செய்யும் உலகளாவிய பெயிண்ட் கம்பெனி ஒன்றில் சேல்ஸ் மேனேஜர். தமிழ்நாடு என் கட்டுப்பாட்டில் இருந்தது. இருநூற்றுச் சொச்சம் ஸேல்ஸ்மேன்கள் என் யோசனைகளை நிறைவேற்றத் தயாராக இருக்கிறார்கள்.

விற்பனை சரியக்கூடாது. மாதத்துக்கு ஐந்து சதவீதமாவது வளர்ச்சி காட்ட வேண்டும். எனவே எந்நேரமும் சுற்றிக் கொண்டேயிருக்க வேண்டும். ஒவ்வொரு ஊராக, ஒவ்வொரு கடையாகச் சென்று பெயிண்டைப் பற்றி மக்கள் ஏதாவது குறை சொல்கிறார்களா, என்ன குறை, அது, இது என்று விற்பனையைச் சரிய விடாமல் இருக்க, விற்பனையை மேலும் மேலும் பெருக்க எவ்வளவு வழிகள் உண்டோ அத்தனை வழிகளையும் மேற்கொண்டாக வேண்டும்.

வேலை பிடித்திருந்தது. ஒவ்வொரு சின்ன ஊராக ரயிலிலும், பஸ்ஸிலும், காரிலும், சமயங்களில் சைக்கிளிலும் பிரயாணம் செய்வது பிடித்திருந்தது.

ஒரே ஒரு விஷயம்தான் பிரச்னை. சோறு. சென்னையில் இருந்தால் அம்மா கையால் சோறு. நான் ஆசைப்படுவதையெல்லாம் அம்மா என்னவோ மாய மந்திரமெல்லாம் செய்து பண்ணிப் போடுவாள். நாக்கு ருசிக்குப் பழகி விட்டது.

டூர் என்றால் ஒவ்வொரு நேரத்திற்கு ஒவ்வொரு ஊர். ஒவ்வொரு ஹோட்டல். சில ஊர்களில் கொட்டை முத்து இட்லியும், புண்ணாக்குச் சட்னியும், சில ஊர்களில் சுண்ணாம்பு சாதமும், பருப்பு சாம்பாரும், சில ஊர்களில் எண்ணெய்க் காரல் புரோட்டாவும், குருமாவும். தவிர நேரங்கெட்ட நேரத்தில் சாப்பாடு.

ஒரு தடவை டூருக்குப் போய்த் திரும்பிய பின் அம்மா இன்ஸ்டன்ட் காஃபிப் பவுடர் போட்டுக் காப்பி கலந்து கொடுத்தாள்.

“”என்னம்மா இது?” என்று சிணுங்கினேன்.

“”வீட்ல நீ ஒருத்தன்தான்டா காப்பி குடிக்கறவன். ஆடிக்கொரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவைன்னு வீட்டுக்கு வர்றே. அந்த நேரத்தில பரண்ல இருக்கற பில்டரை எடுத்துத் தேய்ச்சி, பொடியைப் போட்டு, தண்ணி கொதிக்க வச்சி ஊத்தி டிகாக்ஷனை எறக்கறதுக்குள்ள போதும், போதும்னு ஆய்டுதுடா.. இந்தக் காப்பிக்கு என்ன கொறை.. அதான் ஃபில்டர் காப்பியைப் போலவே சுவையானதுன்னு வெளம்பரம் பண்றாங்களே..”

கொஞ்சநாள் ஃபில்டர் காப்பி என்று மனம் கெஞ்சிப் பார்த்தது. அப்புறம் இன்ஸ்டன்ட் காப்பியையே அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டு விட்டது. சின்னச் சின்ன ஊர் டீக்கடைகளில் எல்லாம் ஏது ஃபில்டர் காப்பி?

திடீரென்று ஒருநாள் நெஞ்சுக் கூட்டுக்கு கீழே தொப்புளுக்கு மேலே ஒரு வலி தோன்றியது. அஜீரணக் கோளாறு என்று லெஹர் சோடா குடித்தேன். ஒரு சிகரெட் பற்ற வைத்தேன். சற்று நேரத்திற்கெல்லாம் வலி சரியாகி விட்டது.

நான் சொல்லலை அஜீர்ணம்னு. அதான், வேற ஒண்ணுமில்ல என்றது மனம். மறுபடி உற்சாகமாகி விட்டேன்.

தி.நகரில் வேல் ரியல் எஸ்டேட்ஸ் சொந்தக்காரரான முத்துவேலுடன் ஓர் அப்பாயின்ட்மென்ட். அவரைப் பார்க்கப் போனேன்.

முத்துவேலின் ஆளுயர உருவப் படங்கள் மடிப்புடன் கூடிய பருத்தி வேஷ்டியும், முழுக்கை வெள்ளைச் சட்டையுமாக ரிசப்ஷனில் தொங்கின. ஆனால் ரிசப்ஷன் ஹால் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ரிசப்ஷன் ஹாலை வெட்கப்படச் செய்யும். கிரானைட், இத்தாலியன் மார்பிள், கார்ப்பெட், வெனிஷியன் பிளைண்ட், நீர்வார்க்கும் இத்தாலி தேசத்துப் பளிங்குப் பெண், அங்கங்கே கம்ப்யூட்டர்கள்.

அந்தக் கம்ப்யூட்டர்களில் ஒன்றை மேய்த்துக் கொண்டிருந்த பானுவுடன் எனக்கு அறிமுகம் ஆனது.

முத்துவேலைப் பார்த்துப் பேசியது, அவரிடம் பெயிண்டுக்கான ஆர்டர் வாங்கினதெல்லாம் வாழ்க்கையின் தினப்படி செயல்களுள் ஒன்றாக மாறிவிட… பானுதான் என் கவனம் ஈர்த்து, என் மனதைக் குடைந்து, அதில் ஓர் தங்க அரியாசனத்தைச் செதுக்கி அதில் கம்பீரமாய் அமர்ந்தாள். ஆணின் மன அரியாசனத்தில் பெண் தானே கம்பீரமாய் அமர முடியும்.

பானுவிற்கும் என்னைப் பிடித்து விட்டது. அப்படியொன்றும் பிரபுக்களின் வம்சாவழித்துவமோ, அரிஸ்டோக்ராடிக் ஜீனோ பானுவின் சரித்திரப் பின்னணியில் இல்லை. ஹையர் மிடில் கிளாஸ். கான்வென்டில் இங்கிலீஷும், கம்ப்யூட்டரும் கற்று, வேஷ்டி கட்டின முத்துவேலிடம் கம்ப்யூட்டர் மூலம் கணக்குப் பார்க்கும் வேலையில் சேர்ந்தவள்.

என் பின்னணியை அறிந்து, நான் உழைத்து முன்னேறிய கதையைக் கேட்டு அவளுக்கும் என் மேல் ஈர்ப்பு வந்து விட்டது. காதல் என்றேன். ஆம் என்று ஆமோதித்தாள். ஹர்ரே..

பானுவின் வேலை நேரம் ஒன்பது டூ நாலு. நான்கு மணிக்கு பாத்ரூமில் நுழைந்து தன்னை முற்றிலும் புதியவளாக மாற்றிக் கொண்டு வருவாள். ஸலோஃபன் பேப்பர் சுற்றப்பட்ட ஒற்றை ரோஜா போல் தெரிவாள். அவள் நடந்தால் கூடவே அவளுடைய மணமும் மிதக்கும். அவளைக் கடப்பவர்கள் எல்லாம் ஆக்ஸ் பாடி ஸ்ப்ரே பெண்கள் போலத் திரும்பிப் பார்ப்பார்கள்.

என் அதிர்ஷ்டத்தை எண்ணிப் பூரித்தேன். இப்படி ஒரு தேவதை தன் வாழ்வை என் வசம் ஒப்படைக்கக் கூடும் என்று நான் கனவு கூட கண்டதில்லை.

தலைமுடியை ஷாம்பூ விளம்பர மாடல் போல அப்படியே படர விட்டு வருவாள். எப்போதாவது ரப்பர் பாண்ட் போட்டு வாராது விடுவாள். புருவங்கள் ட்வீஸ் பண்ணுவாள். உதடுகளுக்குச் சாயம் தீட்டுவாள். பல் வரிசை சுத்தம். மூச்சு மணத்தில் எப்போதும், எப்படியோ மின்ட் கலந்திருக்கும்.

ஒரு நாள் சல்வாரைத் துறந்து புடவையில் வந்தாள். புடவை என்றால் பானு கட்டுவது தான் புடவை. அம்மா புடவை கட்டிப் பார்த்திருக்கிறேன். எவ்வளவோ பெண் கஸ்டமர்கள் புடவை கட்டிப் பார்த்திருக்கிறேன். நத்திங் லைக் பானு. புடவை டைட்டாக அவள் உடல் மேல் படர்ந்திருக்கும். வீணைக்குடமாக அமைந்த பின்புறம் எடுப்பாகத் தெரியும்.

வருண்குமார் என்ற பெயரைச் சுருட்டி ஒரு மூலையில் உட்கார வைத்து விட்டு, வருண், வருண் என்று குழைத்துக் குழைத்து செல்ஃபோனில் பேசினாள்.

காதல் வெகு இயல்பாக வளர்ந்து கொண்டிருந்தது. காதலைப் போலவே வயிற்று வலியும் வளரத் தொடங்கி விட்டது.

முதல் முறை சோடா குடித்து, சிகரெட் பிடித்தவுடன் அடங்கிப் போன வயிற்று வலி மறுபடி இரண்டு நாள் கழித்து தலை தூக்கியது. அதே இடத்தில் வலி. அது மூச்சுப் பிடிப்பா இல்லை, நரம்புகளை எல்லாம் யாராவது ஒற்றைக் கையால் சேர்த்துப் பிடித்துச் சுண்டி விடுகிறார்களா புரியவில்லை.

இந்த முறை சோடா, சிகரெட்டுக்குக் கட்டுப்பட்டாலும் நான்கு மணி நேரம் கழித்து மறுபடி வலி. யாரோ சொன்னார்கள் என்று ஒரு கப் காப்பி குடித்தேன். காப்பி குடித்தவுடன் வலி உடனே அடங்கிப் போயிற்று. அப்புறம் கொஞ்ச நாட்களுக்கு காப்பி வைத்தியத்தை மேற்கொண்டேன்.

கொஞ்ச நாட்கள் தான் அது காப்பிக்கு கட்டுப்பட்டது. பின் மறுபடி வலி. ஒவ்வொரு முறையும் அடங்கியிருந்து விட்டு மறுபடி கிளம்பும் போது கண்ணுக்குத் தெரியாமல் கமலின் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருந்தது.

வயிற்றில் எதையாவது வைத்து அழுத்திக் கொண்டால் வலியின் கழுத்தைப் பிடித்து அழுத்திய மாதிரி இருக்கும். சூட்கேûஸ வைத்து அழுத்திக் கொள்வேன். அல்லது கையை வைத்துக் கூடிய மட்டும் பலமாக அழுத்திக் கொள்வேன்.

இரண்டு, மூன்று தடவைகள் டாக்டரிடம் சென்று மருந்து, மாத்திரை எல்லாம் எழுதி வாங்கிச் சாப்பிட்டேன். வயிற்று வலி சரியான இந்திரஜித்தாக இருந்தது. மருந்து, மாத்திரைகளைப் பார்த்து விட்டால் கொஞ்ச நாட்களுக்கு ஒளிந்து கொள்ளும். அப்புறம் திரும்பவும் வந்து ஒட்டிக் கொள்ளும்.

வயிற்று வலி கிட்டத்தட்ட இணைபிரியா நண்பனாகி விட்டது. அது இல்லாத நேரம் எது என்று பிரித்துச் சொல்ல முடியாது. பானுவுடன் சினிமா தியேட்டரில் இருக்கும் போது இருக்கும். பாஸýடன் பெயிண்ட் விற்பனை பேசும் போதும் இருக்கும். வயிற்றில் பிறர் அறியாமல் எதையாவது ஒன்றை வைத்து அழுத்திக் கொண்டேயிருந்து வலியைச் சமாளித்துக் கொண்டிருந்தேன்.

எந்தப் போராக இருந்தாலும் ஒரு முடிவு உண்டு. ஒரு பெரிய ஆர்டர் விஷயமாக பாஸிடம் பேசிக் கொண்டிருந்த போது, திடீரென்று நாற்காலியில் இருந்து அப்படியே மயங்கி விழுந்தேன்.

கண் விழித்தபோது ஆஸ்பத்திரி தெரிந்தது. பாஸ், அம்மா, அப்பா, நர்ஸ், டாக்டர், யூடிகொலான், டெட்டால், ஸிரிஞ்ஜ் எல்லாம் பார்வையில் பதிவானது. பானு இல்லை.

என்னம்மா ஆச்சி என்று திகைத்துக் கேட்டேன்.

அம்மா வாயில் புடவைத் தலைப்பை வைத்து அழுத்திக் கொண்டு அழுதாள்.

“”ஏன்டா, அல்சர் இருக்குன்னு எங்ககிட்ட சொல்லக் கூடாதா? ரொம்ப சீரியஸாப் போய் மயங்கி விழுந்துட்டே. ஸ்கேன் பண்ணிப் பாத்த டாக்டர் உடனே ஆப்ரேஷன் பண்ணனும்னு சொல்லிட்டாரு. ஆப்ரேஷன் ஆய்டிச்சி. நீ கண் முழிக்கிற வரைக்கும் அம்மாவோட உசிரு அவகிட்ட இல்ல” என்று அப்பா மெல்லிய குரலில் கூறினார்.

அப்பாவின் வார்த்தைகளை மீறி எனக்கு ஒரு விஷயம் தெரிந்தது. வயிற்றில் வலி இல்லை. வலி இல்லாதது என்னவோ போல் இருந்தது. அது ஒரு வினோதமான அனுபவம். வலிக்கும் போது அழுத்திக் கொள்வதும், அதோடு மல்லுக்கட்டி போ, போ என்று துரத்தியடிப்பதும், அது மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பதும்…

இனி அந்த உணர்வுகளை எல்லாம் அனுபவிக்க முடியப் போவதில்லை. கொஞ்சம் வருத்தமாகக் கூட இருந்தது.

“”எவ்வளவு நாளாச்சிப்பா?”

“”மூணு நாளாச்சி” என்றார் அப்பா. பானு ஏன் வரவில்லை ஒருவேளை நான் சுயநினைவின்றிக் கிடந்தபோது வந்து பார்த்துப் போய் விட்டாளா?

செல்லில் அவளை அழைத்தேன், ஸ்விட்ச்ட் ஆஃப். நாட் ரீச்சபிள். லாண்ட் லைன் ஒலித்துக்கொண்டே இருந்தது.

தேறி எழுந்து ஆபீஸ் போனேன். தொழிலைத் தொடங்கினேன். பேசினேன். சிரித்தேன். வயிற்று வலி இல்லாதது உறுத்தல்தான். பரவாயில்லை. பழகிவிடும் என்று சமாதானம் சொல்லிக் கொண்டேன்.

ஆனால்.. ஆனால்.. பானு என்ன ஆனாள்?

பிற்பகலில் முத்துவேலின் ஆஃபீஸக்குப் போனேன்.

கம்ப்யூட்டரில் உட்கார்ந்திருந்தாள். முன்னை விட அழகாக இருந்தாள்.

எதிரில் போய் நின்று, “”ஹலோ. என் பெயர் வருண்.. திடீரென்று எனக்கு என்ன ஆயிற்று என்றால்…” என்று ஆரம்பித்தேன். .

“”வருண்.. நாம சாயங்காலம் பேசலாம். வழக்கமான எடத்துல”

“”எனக்கு என்ன ஆச்சின்னா…”

“”ஸாரி வருண். என் நிலைமை அப்படி. உங்களோட போன்ல பேச முடியல. நேர்ல வரச்சொல்லி சொல்ல முடியல. உங்க முகத்தில் முழிக்கவே வெக்கமா இருக்கு”

“”என்ன சொல்ற பானு? இந்த ஒரு வாரமாக என்னுடைய இல்லாமை அவளுக்குத் தெரியவே இல்லையா?”

“”ப்ளீஸ் சாயங்காலம் சொல்றேன்”.

மாலையில் பெசன்ட் நகர் கடற்கரையில் வழக்கமாகச் சந்தித்துக் கொள்ளும் இடத்தில் சந்திப்பு நடந்தது.

பானு அழுதாள். அவளுடைய அத்தை பையன் ஒருவன் திடீரென்று யூ.எஸ்.ஸில் இருந்து வந்து அவளை வாரிச் சுருட்டிக் கொண்டு போகத் தீர்மானித்து விட்டானாம். கம்ப்யூட்டர் இன்ஜினியர். மாதம் முப்பதாயிரம் டாலர். கார், பங்களா, அமெரிக்கா.

அவளுடைய அம்மாவும், அப்பாவும் அவளுடைய சம்மதம் கேட்காமல் கல்யாணத்திற்குச் சம்மதித்து நிச்சயம் பண்ணி, யு.எஸ். அத்தை பையன் அமெரிக்கன் டயமண்ட் பதித்த ஒரு செயினைப் பரிசாக கொடுத்திருந்தான். காட்டினாள்.

எனக்கு அவளுடைய அன்பளிப்பாக யூஸ் அன்ட் த்ரோ ரேஸர்களை கொடுத்தாள். அதன் மேல் úஸல் – இரண்டு டாலர் என்று எழுதியிருந்தது.

நாம் நண்பர்களாக இருப்போம் என்று சொல்லி மணல் தட்டினாள். அந்த மணலாக உதிர்ந்தேன். விலகி நடந்தாள். சேலைக்கட்டு அழகாக இருந்தது. பின்பாகம் சிக்கென இருந்தது. காற்றில் சேலை கலைந்து தொப்புள் குழிவு அதியற்புதமாகத் தெரிந்தது. சந்திப்பு நிகழும் வரைக்கும் பானு என்னுடையவள் என்று கர்வப்பட்டுக் கொண்டிருந்தேன். கர்வம் சர்வமும் நாசம் ஆகி விட்டது.

அப்படியே உறைந்து உட்கார்ந்திருந்தேன். அவள் சாலையை நெருங்கியவுடன் ஒரு ஸ்விஃப்ட் வந்து அவளருகே நின்றது.

டிரைவர் இறங்கிக் கதவைத் திறந்தான். அங்கிருந்தே என்னைப் பார்த்து, “”பை..” என்றாள். கையசைத்தாள். காரில் ஏறினாள். கதவு மூடும் சத்தம். கார் நகர்ந்தது.

நான் தனியாக அமர்ந்து கையசைத்துக் கொண்டே இருந்ததை ஒரு குழந்தை வேடிக்கை போல் பார்த்துக் கொண்டே சென்றது.

சற்று நேரம் கழித்து எழுந்தேன். நடந்தேன் மனம் கடிபட்ட நாயாக குரைத்துக் கொண்டிருந்தது. ஆபரேஷனுக்காக ஏழு நாள் கண் மூடி காதலியை கை நழுவ விட்ட ஒரே காதலன் நானாகத்தான் இருப்பேன் என்று தோன்றியது.

அப்படியே திரும்பி அலைகள் ஆர்ப்பரிக்கும் கடலை நோக்கி நிற்காமல் சென்று கொண்டே இருக்கலாமா என்ற எண்ணம் வலுவாக முளைத்தது.

“”ச்சீ… ” என்று உதறினேன்.

பானுவைப் பார்க்க வந்ததில் இருந்து இந்த நிமிடம் வரை என்னிடம் வயிற்றுவலி இல்லாமல் போனதைப் பற்றி மனம் குறைப்பட்டுக் கொள்ளவில்லைதானே? நல்ல நண்பனைப் பிரித்து விட்டாய் என்று குற்றம் சாட்டிக் கொண்டேயிருந்த மனம் எப்படி அடங்கியது?

திடீரென விடை கிடைத்தது.

ஐந்தாவது படித்துக் கொண்டிருந்த போது எனது ஒரே தங்கை டிப்தீரியா வந்து செத்துப் போனாள். தாங்க முடியவில்லை. எனது உற்ற தோழி, என் சேவகி, என் உடன்

பிறப்பு.

அவளோடு கழித்த ஒவ்வொரு வினாடியும் என்னைத் தாக்க கோயில் குளத்தில் குதித்தேன், காப்பாற்றி விட்டார்கள். அம்மா என்னை மடியில் போட்டுக் கொண்டு விம்மி விம்மி அழுதாள். “”உனக்காகத் தான்டா இந்த உயிரைப் பிடிச்சி வச்சிருக்கேன். நீயும் போய்ட்டேன்னா அப்புறம் நான் மட்டும் இருந்து என்னடா பண்ணப் போறேன்?”

கொஞ்ச நாட்களில் தங்கையின் பிரிவு பழகி விட்டது.

ஃபில்டர் காப்பி போய் இன்ஸ்டன்ட் காப்பி வந்தது. மனது முரண்டு பிடித்து முடங்கி விடவில்லையா

மனம் அப்படித்தான். முதலில் வயிற்று வலி வந்தபோது எதிர்த்தது. அப்புறம் வலியைத் தோழனாக ஏற்றுக் கொண்டு விட்டது. ரயிலில், வழியில் நிற்கும் ஸ்டேஷனில் ஏறுகிறவர்கள் யாராவது ஒருத்தருக்கு நாம் உட்கார்ந்திருக்கும் இருக்கையை பகிர்ந்து கொடுக்க எவ்வளவு கசப்பாய் இருக்கிறது? அப்புறம் ஒருவாறு இடம் கொடுத்து நின்றவன் உட்கார்ந்தவுடன் பழகி விடுகிறான்.

எனக்கு அவன் காப்பி வாங்கித் தருவதும், அவனுக்கு நான் சிகரெட் தருவதும் இயல்பாகிப் போய் ஊர் சேர்ந்து பிரியும் வேளையில் பிரிவு ஒரு துக்கம் ஆகி விடுகிறது. நாளைக்கு அதுவும் மறந்து போகும்.

மனசு எதையும் எதிர்க்கும். அப்புறம் அதுவே ஏற்றுக் கொள்ளும். எந்த நிலையையும் ஜீரணிக்கும். பானுவின் காதலை ஏற்றது. அவளுடன் ஆன நட்பை ரசித்தது. இப்போது பிரிவை எதிர்க்கிறது. நாளைக்கு இதுவும் பழகி விடும். வயிற்று வலியைப் பிரிந்த பின் பழகியது போல. ஏற்றுக் கொண்டு விட்டால் துன்பம் இல்லை.

காதலி மனைவியாக மாறி இறந்து விட்டால் நாமும் செத்து விடுகிறோமா என்ன? ஏற்றுக் கொள்ளவில்லை.

வாழ்க்கையின் முற்றுப்புள்ளி எங்கோ யாருக்கும் தெரியாமல் கண்ணாமூச்சி ஆடியபடி நெருங்கிக் கொண்டுதான் இருக்கிறது. அந்த முற்றுப்புள்ளியை இப்போதே வரவழைத்து என்ன சாதித்து விடப் போகிறோம் ?

விசில் அடித்தபடி வீட்டை நோக்கி நடந்தேன்.

– நவம்பர் 2012

Print Friendly, PDF & Email

2 thoughts on “தொடரும் அல்லது ஏற்பது மகிழ்ச்சி

  1. கதை சுபா பாணியில் அருமையாக இருந்தது பாராட்டுக்கள்

  2. என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்ற வகையில் கதை சுபா பாணியில் அருமையாக இருந்தது பாராட்டுக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *