காத்திருத்தல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 4, 2012
பார்வையிட்டோர்: 8,688 
 

பைக்கில் உங்கள் பின்னே அமர்ந்திருந்த பெண் சட்டென்று உங்கள் கழுத்தில் முத்தமிட்டதுண்டா? அந்த ஈரம் தந்த குறுகுறுப்பில் கவனம் தப்பி அப்புறம் சரி செய்து கொண்டதுண்டா?

எனக்கு அந்த அனுபவம் வாய்த்திருக்கிறது.

அட்டை போல ஒட்டிக்கொண்டிருந்தவள் சட்டென்று விலக்கிக்கொள்ள ஏன் என்று யோசித்ததுண்டா? அவளிடம் கேட்டதுண்டா? போக்குவரத்து நெருக்கடியில் பிரேக் போட்டதுண்டா? அப்புறம் அவள் உங்கள் காதோரத்தில் ‘இதுக்குத்தாண்டா விலகியிருந்தேன்’, என்று சொன்னதுண்டா?

இளமையின் இன்பம் உன்னதமானது. அறியாத பலவற்றை, எதிர்பார்த்த பலவற்றை அளிக்கும் பருவமது. ஆனால், அவள் திடீரென்று உங்களை விட்டுப் போய்விட்டால்? எப்படி உணர்வீர்கள்? சரி மற்றொரு பெண் என்று யோசிப்பீர்களா? மன்னிக்கவும். நான் அந்த சாதியில்லை. எத்தனை கிண்ணத்தில் இட்டாலும் மது அத்தனையும் சுவை ஒன்றாகும் என்று சொன்ன கண்ணதாசனை இரசிப்பவன்.

உடலா இரசிக்கப்படுவது…? இல்லை. மனது. உங்களை நேசிக்கும் மனது. மனம் மட்டும் இல்லையென்றால், அத்தனை பெண்களும், பெண்கள் என்ன பெண்கள், அத்தனை ஆண்களும் உடல்கள்தான். அத்தனை கிண்ணத்திலும் ஒரே சுவைதான். பிணச் சுவைதான்.

வாழைப்பூ தேனை நீங்கள் ருசித்தது உண்டா? அது நீங்கள் கடையில் வாங்கும் தேன்தானா? துவர்ப்பும் இனிப்பும் கலந்த அந்தத் தேன் கடையில் கிடைக்குமா? அந்த சின்னஞ்சிறு தேன் சொட்டு உங்களுக்கே உங்களுக்கானதில்லையா?

மரத்தில் ஏறி, புகை போட்டு, தேனீயிடம் கொட்டுகளை வாங்கி தேனடையை வீழ்த்தி அந்தத் தேனை நீங்கள் ருசித்தது உண்டா? காத்திருக்காமல் நொந்துபோகாமல், கண்ணீர் விடாமல், கொட்டுகள் வாங்காமல் என்ன காதல்?

‘நீ தாண்டா என்னைக் காப்பாய்.. நான் உன் அன்னை’, என்று உங்களிடம் ஓர் பெண் சொன்னது உண்டா? அப்படி ஒரு பெண் என்னிடம் சொன்னாள். சங்க காலக் காதலி போல அல்லாமல் , ‘நாஞ் செத்தப்புறம்தான் நீ சாகனும், என்னால தனியா, ஒன்ன வுட்டுட்டு இருக்க முடியாது’, என்று அவள் சொன்னாள்.

அவள் சொன்னதின் நியாயம் எனக்குப் புரிந்தது. அவள் உயர்சாதிக்காரி. என்னைப் போல, கட்டாந்தரையைப் பிளந்து குட்டை வெட்டி, அப்புறம் அந்த தண்ணீரை இறைத்து கீரைப் பாத்திகளைக் காக்கும் வேலையை அவளின் பாட்டன் கூட பார்த்திருக்க மாட்டான்.

கோடை விடுமுறை சம்பாதிக்க என்று உழைத்துக் கருப்பாகி, கிடைத்ததைக்கொண்டு படித்து கல்லூரியைத் தாண்டும் சாகசத்தை அவள் அப்பன் செய்திருக்க மாட்டான். ஆனால், நான் செய்திருக்கிறேன். என் அப்பன் பெயரே மம்புட்டியான். அவர் மண்வெட்டி பிடித்தார் என்றால், பாத்தி அப்படி நேர் நேராக வரும். மண் பொலபொலவென்று முதல் குழந்தை ஈனும் பெண் போல நெகிழ்ந்துகொள்ளும்.

அப்பனைத் தாண்டி நான் பள்ளி சென்றேன். அவர் மம்புட்டியானாவே நீடிக்க நான் கல்லூரி யூனியன் சேர்மேன் ஆகியிருந்திருக்கிறேன். கல்லூரி மாணவர்கள் சார்பாக பிளாக்ஸ்பாட் நடத்தியிருக்கிறேன். அதனால்தான் அவள் என் மேல் காதல் கொண்டாள். அமைதியாக இருந்துகொண்டே அனைவரையும் மலைக்க வைக்கும் சாமர்த்தியம் அவளுக்குப் பிடித்திருந்திருக்குமோ? அவளின் நிறத்திற்கு எதிரிடையான என் கருப்பு அவளைக் கவர்ந்திருக்குமோ? யானைக் கண் போன்ற சிறிய கண்களால் உறுத்துப் பார்த்து அனைவரையும் பேசாமல் மிரட்டுவது பிடித்திருந்திருக்குமோ? தெரியவில்லை.

அவள் அமர்ந்திருக்க நான் ஓட்டிய பைக் என்னுடையது அல்ல. பக்கிரிசாமி ஜூவல்லர்சின் எதிர்கால உடமையாளன் ரமேசுடையது. அந்த வாகனத்தில் பயணப்பட்டுக் கொண்டிருக்கும்போதுதான் அவள் தன் காதலைச் சொன்னாள்.

அந்தக் காதல் வேகம் எங்கள் கல்லூரியின் பேசும் பொருள் ஆனது. ‘இந்த பாப்பாத்தியும், இந்தக் கருப்பனும் கல்யாணம் செஞ்சுக்குவாங்களா? எப்புடி நடக்கும்..? கருப்பனுக்கு யோகந்தான்… அவள அனுபவிச்சிட்டு வரான்.. அப்புறம் அவப் போயிடுவா.. அமெரிக்கா புருஷனோ என்னவோ.. ஆச்சார வாழ்க்கைய பாப்பார சாதிக்காரங்க விட முடியுமா?’ என்றெல்லாம் பேசிக்கொண்டார்கள் என்பது எனக்குத் தெரியும்.

சிலர், ‘அவளோட சுத்திட்டு இவங் கழட்டி வுட்டுவான்யா.. புத்திக்காரன்.. என்னயிருந்தாலும் எழுதப் படிக்கத் தெரியாமா கம்ப இராமயணப் பாட்ட சொல்றவன் புள்ளயாச்சே’, என்றும் பேசிக்கொள்வதும் எனக்குத் தெரியும். ஆனால், அவர்களுக்கெல்லாம் ஆணைப் பற்றி, பெண்ணைப் பற்றி தெரியாது என்பதுதான் என் முடிவு.

பூவைப்போல அவளை ஏந்தி, தோளில் சாய்த்துக்கொண்டு பிள்ளையைத் தாலாட்டுவது போல பெண்ணைத் தாலாட்டுபவர்களுக்குத்தான் அன்பு என்பதன் பொருள் தெரியும். கால் விரல்களை நீங்கள் சொடுக்கெடுத்து விடும்போது, ‘போதுண்டா, ஒடம்பே நெகிழ்ந்து போச்சு.. போதும்’, என்று சொல்வதைக் கேட்டு ஒய்வுக்குச் செல்லும் ஆணுக்குத்தான் மனைவி என்பதன் பொருள் பெண்ணுடல் என்பதல்ல என்று புரியும்.

கல்லூரி முடிந்து அவள் சென்னை போனாள். பல்கலைக் கழகத்தில் முதுநிலை படிப்பு. எனக்கு படிப்பு அதற்குமேல் சாத்தியமில்லை. நான் வேலை தேடத் துவங்கினேன்.

ஒரு நாள் செல்லில் அவள் குரல் பதறியது,’வேல கெடச்சுடிச்சா?’

‘என்னடி எடுத்தவுடனே வேல கெடச்சுடுச்சா.?’, என்று கேலி செய்தேன்.

‘போடா லூசு… எங்கப்பா மாப்பிள்ளை பாக்க ஆரமபிச்சிட்டாரு’, என்று சொன்னபோது நான் அதிர்ந்துபோனேன்.

‘வேல.. கெடச்சுடிச்சி ஆனா.. இல்ல’. என்றேன்.

‘டேய்.. தத்துவமா பேசி கொழப்பாதடா.. வேல கெடைச்சுதா.. இல்ல ஊரு சுத்துரியா?’

‘வேல கெடச்சுடிச்சுடீ.. ஆனா, ஊரச்சுத்துற சேல்ஸ் மேன் வேல.. வித்தா காசு.. இல்லன்னா பச்சத் தண்ணிய குடிச்சுட்டு படுக்க வேண்டியதுதான்’, என்று சொன்னேன்.

அப்புறம் அவள் முத்தமொன்றை அனுப்பி வைத்தாள். அந்த செல்போன் கிராபிக்சை இன்றும் நான் வைத்திருக்கிறேன்.

சில நாட்கள் கழித்து அவள் செல்லில் அழைத்துச் சொன்னாள், ‘என்னோட பொறந்த நேரம் ஒனக்கு லக்குடா’.

அவள் பரணி நட்சத்திரமாம், அத்துடன் ஏதோ தோஷமாம், அவள் அப்பன் பார்த்த ஜாதகர்கள் எல்லாம் ஓட்டம் பிடிக்கிறார்களாம். அதனால் அவள் ஜாதகம்தான் எனது லக்காம். சொன்னாள்.

‘இல்லடி’, என்றேன் நான். ’நீதான் என்னோட லக்’, என்றேன். அப்புறம் நாங்கள் பேசிக்கொண்டதை, கொஞ்சிக் கொண்டதை இங்கே எழுதுவது நாகரீகமில்லை.

அவள் என்னைக் காட்டுமிராண்டு என்றுதான் தனிமையில் இருக்கும்போது அழைப்பாள். எங்கள் சாதிக்கார்கள் எலிக்கறி தின்போம். இலுப்பை மரத்தில் பழம் தின்ன வரும் வவ்வாலை வேட்டையாடி அதிகாலை 3 மணிக்கு விருந்துண்போம்.

நள்ளிரவில் பேட்டரி லைட் வெளிச்சத்தில் விலாங்கு மீனை சுளுக்கியால் குத்திப் பிடிப்போம். பேட்டரி லைட்டின் வெளிச்சம் அதற்கு நிலா போலத் தெரியுமோ? ஆடாது அசையாது பார்த்துக்கொண்டிருக்கும். ஒரே குத்துதான். நடுத்தலையில் இறக்கிய சுளுக்கியிலிருந்து விலாங்கு தப்பிக்க முடியாது. இரத்தம் சுண்டுவதற்கு முன்பு கறியாக்கிச் சாப்பிட்டுவிடுவோம். இதையெல்லாம் நான் பகிர்ந்துகொள்ள அவள் என்னைக் காட்டுமிராண்டி என்றுதான் அழைப்பாள். நாட்டுமிராண்டிகளை விட காட்டுமிராண்டிகள் நாகரீகமானவர்கள் என்று நான் வாதம் செய்வேன்.

நாங்கள் தனிமையில் இருக்கும்பேதெல்லாம், சற்று சுருக்கி, செல்லமாகக் காட்டான் என்று அழைப்பது அவளுக்கு வழக்கமாகிவிட்டது.

ஒரு நாள் என்னை அவள் அழைத்தாள். சனிக்கிழமை காலையில் சென்னைக்கு வரமுடியுமா என்று கேட்டாள். செப்டம்பர் 19 அன்றுதான் கடைசியாக அவளைப் பார்த்தேன். இன்றோடு, அவளைப் பார்த்து ஏழு மாதங்கள் ஒன்பது நாட்கள் ஆகின்றன. மறுப்பேனா என்ன? ஒப்புக்கொண்டேன்.

கோயம்பேட்டில் நான் இறங்கி அவளைச் செல்லில் அழைத்தபோது ‘வாசலுக்கு வா’, என்றாள். சென்றேன்.

வீகோ வாகனத்துடன் காத்திருந்தாள். அவளின் பின்னமர்ந்து சென்னை வீதியில் பயணம் செய்தது வித்தியாசமான அனுபவம். அவள் வேண்டுமென்றே பின்நோக்கி நகர்ந்து அமர்ந்திருந்தாள். நான் பிடித்துக்கொள்ள அவளின் இடுப்பைத் தவிர வாகனத்தில் வேறு ஏதும் இல்லை,

ஓர் அப்பார்ட்மெண்ட் வளாகத்திற்குள் நுழைந்து நிறுத்தினாள். அவள் ஹாஸ்டலில் இருப்பதாக நான் நினைத்துக்கொண்டிருந்தேன். என்னைக் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு லிப்ட் ஏறி நான்காவது தளத்தின் ஒரு வீட்டிற்குள் நுழைந்தாள். என்னைப் பேசவிடவில்லை. அவளும் பேசவில்லை.

கதவைத் திறந்து உள் நுழைந்தவள் என்னை உள்ளிழுத்து, கதவை மூடி என் உதடுகளில் முத்தமிட்டாள்.

சற்று ஓய்ந்தபோது, ஹாஸ்டலைவிட்டு வெளியேறி, தன் தோழியுடன் வீடு பிடித்ததையும் அவள் தோழி சனி, ஞாயிறு ஊருக்குப் போய்விடுவாள் என்றும் சொன்னாள். அதிர்ச்சியாக இருக்கட்டும் என்று விவரத்தைச் சொல்லாமல் என்னை வரச்சொன்னதாகவும் சொன்னாள்.

அன்றுதான் எங்கள் திருமண வாழ்க்கைத் தொடங்கியது. பந்தல் இன்றி மேடையின்றி, சொந்தங்கள் இன்றி எங்கள் பந்தம் தொடங்கியது. அந்த தேதி எனக்கு நினைவிருக்கிறது. என்னுடைய பாஸ்வேர்டுகள் எல்லாம் அந்த தேதிதான்.

அப்புறம் நான் சென்னையில் வேலை தேடிக்கொண்டேன். அவள் ஆராய்ச்சிப் படிப்பிற்கு பல்கலைக் கழக உதவிச் சம்பளம் பெற்றாள். குழந்தையைத் தள்ளிப் போட்டுக்கொண்டோம், எனக்கு அவளும் அவளுக்கு நானும் குழந்தையாக வாழ்ந்தோம்.

ஒரு நாள் அவள் அப்பா செத்துப்போன தகவல் வந்து ஊருக்குப் புறப்பட்டாள். என்னைத் தவிர்த்துவிட்டாள். ‘எங்க ஆச்சாரங்கள்லாம் ஒனக்குப் புரியாது. நீ அங்க ஒட்டமாட்ட’, என்றாள்.

நான் காத்திருந்தேன். 15 நாட்கள்.. 30 நாட்கள் அப்புறம் இரண்டு மாதம்… அவள் வரவில்லை. அவளின் ஆராய்ச்சிப் படிப்பெல்லம் அந்தரத்தில் தொங்கியது. மாதங்கள் கூட கடந்துவிட்டன.

சமயத்தில் செல்லில் பேசுவாள். சமயங்களில அவள் குரலில் ஈரம் இருக்கும். வேறு சில சமயங்களில், நான் அழைக்கும்போது ‘சொல்லுங்க’ என்பாள். ‘சொல்லுடா’ என்பதுதான் எனக்கான அவள் வார்த்தை.

அதற்கப்புறம் அவள் என்னை அழைப்பது குறைந்து, நான் அழைத்தால் சில சமயம் எடுப்பாள். அவள் பேசுவது, ‘சரி’, ‘அப்புறம்’ ‘சரி’ வைச்சுடறேன்’ என்பதாக இருக்கும். அவள் மீண்டும் பார்ப்பனப்பெண் ஆகிவிட்டாள் என்று எனக்குத் தோன்றும்.

ஒரு நாள், காத்திருந்து வெறுத்துப்போன நான் செல்லில் அழைத்துக் கடித்துவிட்டேன். காட்டானாகிய நான் காட்டெறுமை போல முட்டி மோதிவிட்டேன்.

நீண்ட மௌனத்திற்குப் பிறகு அவள் சொன்னாள், ‘எனக்கு என்னம்மாவ விட்டுட்டு வர முடியாது.. அவங்க சொல்றதுதான் என்னொட வாழ்க்கை. அவங்களுக்கு யாரு இருக்கா?’

அவளுடைய அண்ணன் வெளிநாட்டில் லட்சங்களில் சம்பாதிக்கிறான். வேறு பிள்ளைகள் இல்லை. வயதானத் தாயைப் பார்க்க அவளைத் தவிர யாரும் இல்லை. எனக்குப் புரிந்தது.

அம்மா சொல்றதுதான் என்னோட வாழ்க்கை என்றாளே..? என்ன பொருள் என்று யோசித்தேன். புரிந்தது. அப்புறம் நான் அவளை அழைக்கவில்லை.

மாதங்கள் சென்றிருக்கும்.

இதற்குள் நான் எங்கள் கம்பெனியின் சேல்ஸ் மேனேஜர் ஆகியிருந்தேன். சொந்தமாக பைக் வாங்கியிருந்தேன். தனியாக ஒரு வீடு பிடித்திருந்தேன்.

ஒரு நாள் என்னை அழைத்தாள். எங்கிருக்கிறேன் என்று கேட்டாள். சொன்னேன்.

’நீ எங்கெயிருக்க?’ என்று கேட்டேன்.

மௌனம்.

திடீரென்று கேட்டாள், ‘நல்லாயிருக்கியா?’

எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. எப்படி நான் நன்றாக இருக்க முடியும்? பணமிருக்கிறது. வீடிருக்கிறது. மாலையில் டாஸ்மாக்கிருக்கிறது. ஆனால், எப்படி நன்றாக இருக்க முடியும்?

வீட்டிற்குச் செல்லும்போது, ஏண்டா லேட் என்று கேட்டு மிரட்ட யார் இருக்கிறார்கள்?

பனி சூழ்ந்த டிசம்பரில் சுடுநீர் வைக்க யார் இருக்கிறார்கள்? பைக்கில் இருந்து விழுந்து சிறாய்ப்பான உள்ளங்கையில் முத்தம் கொடுக்க யார் இருக்கிறார்கள்?

எனது மௌனம் நீண்டதால் அவள் கட் செய்துவிட்டாள். நீண்ட நேரம் புகைபிடித்தபடி அமர்ந்திருந்தேன். எனக்குப் புரிந்துவிட்டது. என் பைக்கை எடுத்துக்கொண்டு வெளியேறினேன். கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் சீறிப் பறந்தேன். உண்மையில் பறந்தேன்.

என்னுடைய அலுவலகம் வந்தேன். குகா வாசலில் நின்று கொண்டிருந்தான்.

முன் சக்கரம் எழுந்து நிற்க, பின்சக்கரத்தில் பயணம் செய்து அவனை நெருங்கினேன். அவன் பயந்து விலகினான்.

கிறீச்சென்று பைக் நிற்க முன் சக்கரம் கீழே இறங்கியது.

குகா மிரண்டு போய் என்னை அணுகி ‘என்னாச்சு, இத்தன ஜாலி’, என்று கேட்டான்.

‘அவ போன் பன்னினா.. எனக்குத் தெரிஞ்சுது அவ இன்னும் என்னக் காதலிக்கிறா!’

‘சந்தோஷம்.. எப்ப வருவா? அவ அம்மாவுக்கு என்னாச்சு’ என்றான் குகா ஆர்வத்துடன்.

யோசித்தேன். அவள் என்னவாக இருக்கிறாள்? அவள் அம்மா எப்படியிருக்கிறார்? தெரியாது.

குகாவிடம் தெளிவாகச் சொன்னேன், ‘வருவா.. இல்லன்னா.. ஒரு வேள அவ எப்போதும் வரமாட்டா… ஆன எனக்குத் தெரியும்.. அவ என்னை உண்மையிலேயே காதலிக்கிறா. அதுபோதும்’

குகா என்னைப் பார்த்த பார்வையை என்னால் விவரிக்க முடியாது. அத்தனை உணர்வுகள் அவன் முகத்தில் தெரிந்தன. ‘போடா பைத்தியம்’ என்றவன் என்னை அணைத்துக் கொண்டான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *