கருகிய மொட்டுக்கள்!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்  
கதைப்பதிவு: April 7, 2013
பார்வையிட்டோர்: 21,647 
 

“கண்டு பிடி பாப்பம்!”

“கைக்கை பொத்தி வைச்சுக்கொண்டு கண்டுபிடி எண்டால் எப்பிடி….?”

“முள்ளுப் பற்றைக்குள்ளை கறுப்பியும் சிவப்பியும் நிண்டு சிரிச்சினம். அதுதான் இது!” என்று புதிர்போட்டாள்.
யோசித்தேன்.

விடை தெரியவில்லை.

“தெரியாது… சொல்லடி!” என்று கெஞ்சினேன்.

கதவைத் திறந்து புன்னகையுடன் வரவேற்றவளைப் பார்த்துப் பிரமித்துவிட்டேன். எவ்வளவு மாறிவிட்டாள். கடைசியாக இவளைச் சந்தித்துப் பத்து வருடங்களாவது இருக்கும்.

அன்று நாற்றுமேடையாக இருந்த நிலம் பூவும் பிஞ்சும் காய்களும் கனிகளும் விளைந்த தோட்டமாகியது. பெரிய மனுசியாகிவிட்டாள். கன்னக்கதுப்புகளில் திரண்ட தசைகளில்கூட பெரிய மனிதத்தனம் பளிச்சிட்டது.

“உள்ளுக்கு வாங்கோ!” என்று என்னை வரவேற்றாள்.

“லட்சுமியா? எவ்வளவு மாறிவிட்டாய்?” என்று சொல்லி ஆச்சரியமாக அவளைப் பார்த்தேன்.

“லட்சுமிதான்!” என்று புன்னகை மாறாமல் கரிய முகத்தில் செம்மைபடரக் கூறியவள்,

“ஏன் மறந்துட்டீங்களா?” என்று கேட்டாள்.

“முழங்காலளவு பாவாடையில் தலைமயிரைக் கூட்டி அள்ளிக்கட்டிக்கொண்டு குறுகுறெண்டு ஓடித்திரியும் லட்சுமியை அல்லவா எதிர்பார்த்து வந்தேன். அமைதியாக நின்று என்னை ஆச்சரியப்படுத்துகிறாய்!” என்று பழையதுகளை நினைவில் நிறுத்தினேன்.

“இப்ப வயசாச்செல்லே!” என்று இலேசான சிரிப்புடன் என்னை அன்பாகப் பார்த்தாள்.

அதில் பாசம் தெரிந்தது. பழசை மறக்கவில்லை என்ற பாவனை பொதிந்திருந்தது.

லட்சுமி ஜேர்மனிக்கு வந்து ஒருமாதம்தான் இருக்கும். வரும்போது ஊரில் உள்ள அம்மா எனக்காக ஏதோ கொடுத்துவிட்டிருந்தாளாம். கடிதம் போட்டிருந்தாள். அதுதான் லட்சுமியைத் தேடி வந்தேன். நான் வந்த நேரம் லட்சுமியின் கணவன் வீட்டில் இல்லை. தொழிற்சாலை ஒன்றில் வேலை. வேலைக்குச் சென்றுவிட்டான்.

லட்சுமிதான் தனியாக இருந்தாள்.

“இருங்கோவன்….”

“வீட்டை அழகாய் வைச்சிருக்கிறாய்!”

“யூஸ் குடிக்கிறியளே?”

“தேத்தண்ணிபோடப் பஞ்சியாக்கும்…!”

“இல்லை… குடிப்பியளோ தெரியாது…” என்று தயங்கினாள்.

“ஏன் லட்சுமி…. தேத்தண்ணி குடிப்பன்தானே…. அதுவும் நீ போட்டால்….”

தயக்கத்துடன் தடுமாறியவள் குசினிக்குள் சென்று, வெள்ளிக்கிண்ணம் ஒன்றில் தேனீர் கொணர்ந்து மேசையில் வைக்கப்போனாள்.

“கையிலை குடு லட்சுமி…. நீ இப்பிடிக் குடுத்து எத்தினை வருசமாச்சு!”

“நீங்கள் பழைய ஞாபகத்திலை இருக்கிறியள்….”

“அப்பிடியான நாட்களை இனி எப்ப காணமுடியும் சொல்லு. அந்த இனிமையான அனுபவங்கள் எல்லாம் ஒரு கனவுமாதிரி இருக்கு!”

நான் கூறுவதையே அவதானித்துக் கொண்டிருந்தவள், எனது பார்வையைச் சந்தித்ததும் தலையைத் தாழ்த்தினாள்.

அப்போது லட்சுமிக்குப் பன்னிரண்டு வயது இருக்கலாம். எனக்கும் அவளது வயதுதான். நான் பாடசாலை ஒன்றில் படித்துக் கொண்டிருந்தேன். அவள் கையெழுத்துப் போடுமளவிற்குப் படித்திருந்தாள். தினமும் எனது வீட்டுக்கு வருவாள். முற்றம் கூட்டுவாள். மாட்டுத் தொழுவத்தைச் சுத்தம்செய்வாள். மாடு ஆடுகளுக்கு வயலில் இருந்து புல்லுக் கொண்டுவந்து போடுவாள். நெல் அறுவடை காலங்களில் வயலிலும் வேலை செய்வாள்.

விராந்தையில் உள்ள பலகைக் கட்டிலில் இருந்தவாறு அவளையே நோட்டமிடுவேன். வேலை சொல்லும் அம்மா மீது ஆத்திரமாக வரும். வேலை இல்லாவிட்டால் லட்சுமி வரமாட்டாள் எனும்போது அம்மா செய்வது நியாயம்தான் எனத் தோன்றும்.

உழைப்பின் பலனோ என்னவோ அவளது கைகள் எல்லாம் இரும்புமாதிரிக் கடினமாயிருக்கும். செம்பட்டை அடித்த கூந்தலை வாரிப் பின்னால் வழித்துப் பழைய துணி நாடா ஒன்றினால் முடிச்சுப் போட்டிருப்பாள்.

அம்மா வீட்டில் இல்லாத வேளைகளில் எங்கள்பாடு கொண்டாட்டம்தான்.

“லட்சுமி…”

“என்ன…?”

“கொக்கான் விளையாடுவமே?”

“அம்மா வந்தால் ஏசுவா.”

“போடி…. நீ கல்லுக் குறுணி பொறுக்கியா” என்று அதிகாரத்துடன் விரட்டுவேன்.

சின்னஞ்சிறிய கற்களைக் கையுள் அடக்கி, அந்தரத்தில் எறிந்து புறங்கையால் இலாவகமாக ஏந்துவாள். அவளின் வேகத்துக்கு என்னால் ஈடுகொடுக்க முடியாது. அவளுடன் போட்டிபோட்டு வெல்லமுடியாது. சினம் பொங்கும். ஆத்திரத்துடன் விலகுவேன்.

அவள் சிரிப்புடன் எனக்காக கொக்கானில் கற்களைத் தவறவிடுவாள். எனக்குத் தெரியும். என்றாலும் காட்டிக்கொள்ள மாட்டேன்.

“லட்சுமி…. நான்தான் வெற்றி.”

“வெற்றியைக் காய்ச்சிக் குடிக்கவா முடியும்?”

“போடி…!” என்று அவளின் தலையில் ஓங்கிக் குட்டுவேன்.

“ஆ…” என்று வலியுடன் அலறுவாள்.

அவளை அலறவிட்டு வேடிக்கை பார்ப்பதில் எனக்குள் அலாதி ஆனந்தம்.

“இனிமேல் விளையாட வரமாட்டன்.”

“அதையும் பாப்பம்…!”

“பார்ப்பம்…!” என்று கோபம்காட்டி அம்மா வருவதைக் கண்டவுடன் நார்க் கடகத்தை எடுத்துக்கொண்டு மாட்டுக் கொட்டிலை நோக்கி விரைவாள்.

ஒருநாள்-

கைக்குள் எதையோ மறைத்து வைத்திருந்தாள்.

“என்னடி”

“கண்டுபிடி பாப்பம்!”

“கைக்கை பொத்தி வைச்சுக்கொண்டு கண்டுபிடி எண்டால் எப்பிடி….?”

“முள்ளுப் பற்றைக்குள்ளை கறுப்பியும் சிவப்பியும் நிண்டு சிரிச்சினம். அதுதான் இது!” என்று புதிர்போட்டாள்.

யோசித்தேன்.

விடை தெரியவில்லை.

“தெரியாது… சொல்லடி!” என்று கெஞ்சினேன்.

வெற்றிப் பெருமிதத்துடன் கைகளை அகல விரித்துக் காட்டினாள். கறுப்பும் சிவப்புமாக ஈச்சம் பழங்களும் காய்களும்.

“இதுதான் அது!”

ஈச்சம் காயாக அவள் சிரித்தாள்.

வாங்கிச் சுவைத்தேன். சிவப்புக் காய்கள் கசந்தன. கறுப்புப் பழங்கள் இனித்தன.

லட்சுமியும் கறுப்புத்தான்.

“காய்களைச் சாப்பிடாதை. தொண்டை கட்டிப்போடும். உப்புத் தண்ணியிலை போட்டுவைச்சால் நாளைக்குப் பழுத்துவிடும்.”

நாட்கள் நகர்ந்தன.

லட்சுமியும் நானும் வயல்வரப்புகளில் நடந்தோம். ஓடினோம். துள்ளினோம். குதித்தோம். மிளகாய்த் தோட்டத்தில் அவள் குந்தியிருந்து உழவாரத்தால் அறுகம் புல்லைச் செதுக்கும்போது நான் குறும்புபண்ணினேன்.

“இப்ப வேண்டாம்…. இருளமுந்தி நான் புல்லுச் செதுக்கிக் கடகத்தை நிறைக்கவேணும்….!”

அவள் கடகத்தினுள் போட்ட புல்லை எடுத்து வெளியே விசிறினேன்.

அவளுக்கு ஆத்திரம் வந்துவிட்டது. சிறு மண்ணாங்கட்டி ஒன்றை எடுத்து என்னை நோக்கி வீசினாள். குறி தப்பாமல் எனது நெற்றியில்பட்டுத் தெறித்தது. கோபத்துடன் அவளின் சட்டையைப் பிடித்து இழுத்தேன். “டர்”ரென்று கிழிய என்னைத் தள்ளிவிட்டாள். நான் பின்புறமாக நிலைதடுமாறி விழுந்தேன். தலை வரப்பில் முட்டி வலியெடுத்தது.

அவளை முறைத்தவாறு துலாவின் கீழ் இருந்த முதிரைக் கல்லில்போய் அமர்ந்தேன். அவளைப் பார்க்கவே பிடிக்கவில்லை. சிறிதுநேரம் என்னையே உற்று நோக்கியவள், கண்களில் சிறிது கலக்கம் தோன்ற ஓடிவந்தாள்.

“நோகுதா?”

“போடி!”

“கேக்கிறனெல்லே…?”

“நீ என்னோடை கதையாதை…. நானும் கதைக்க மாட்டன்.”

“அப்பிடிச் சொல்லாதையடா. நான் அழுவன்….”

“அழு…. எனக்கென்ன…?”

“எங்கை…. என்னைப்பார்த்துச் சொல்லு பாப்பம்!”

கிட்டவந்து என்னைத் தன் மார்புடன் சேர்த்தணைத்துப் பிடரியைத் தடவியவாறு கேட்டாள்.

அந்த அணைப்பின் மெல்லிய வெப்பத்தில் என்னை மறந்து ஏதோ ஒரு உணர்வில் அவளை அப்படியே இறுக அணைத்துக் கொண்டபோது, “ச்சீ!” என்று என்னை விலத்தி முகம் சிவந்தாள்.

அதன் பிறகு எங்கள் நெருக்கம் அதிகமாகியது.

தொட்டதுக்கு எல்லாம் அவளைச் சீண்டுவதும் நாண வைப்பதுமாகப் பொழுதுகள் கழிந்தன.

“லட்சுமி…. எனக்கொரு ஆசை!”

“என்ன?”

“ஆருக்கும் சொல்லமாட்டியே?”

“ம்கூம்…!”

“எனக்குக் கொஞ்சம் கள்ளுக் கொண்டு வந்து தருவியா?”

“ம்…. மாட்டன். அம்மாவுக்குத் தெரிஞ்சா அடிப்பா…!”

“அம்மாவுக்குத் தெரிஞ்சால்தானே? பின்வீட்டு வேலிப் பொத்துக்காலை கொண்டுவந்து வை. கோடீக்கை இருந்து குடிக்கிறன்…”

“வேண்டாம்…. நீ கெட்டுப் போவாய்….”

“கொஞ்சம்தானேடி!”

“மாட்டன்….”

“கொண்டராட்டில் இந்தப்பக்கம் வரவிடமாட்டன்…”

“என்ன நீ…?”

“பயப்பிடாதை…. ஆசைக்குத்தானே கேட்கிறன்.”

“கொஞ்சம்தான் கொண்டருவன்…. சோடாப் போத்திலுக்கை..”

“போத்திலோடை எப்பிடிக் குடிக்கிறது?”

“சிரட்டையை எடுத்து வேலி மூரீக்கை சொருகி வை!”

“சரீடி…. என் சாமத்தியம்!”

இவ்வாறே சென்று மறைந்த பொழுதுகளுக்குத்தான் எவ்வளவு அவசரம்?!

திடீரென அவள் வீட்டுக்கு வருவதை நிறுத்திவிட்டாள். சில நாட்களாக எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

பிரமை பிடித்தமாதிரி இருந்தது.

“எங்கே அவள் என்றே மனம்

தேடுதே ஆவலாய் ஓடிவா!”

அவள் பெரிய மனுசியாகிவிட்டாளாம்.

அம்மா யாரிடமோ கூறினாள்.

அதன் பின்னர் அவளைச் சந்திக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை. என்றாலும் அவளுடன் அளவளாவிய சம்பவங்கள் யாவும் பசுமரத்தாணிபோல மனதில் ஆழமாகப் பதிந்திருந்தன.

கடந்த கால நினைவுகள் மனதை அலைக்கழிக்க அவளைப் பார்த்தேன்.

அவளும் அந்த நிலையில்தான் இருந்திருக்க வேண்டும். நெற்றியில் முத்துமுத்தாக வியர்வைத் துளிகள். துடைக்க மறந்தவளாய் நின்றாள்.

“லட்சுமி…!”

கண்கள் கருவண்டுகளாகச் சிறகடிக்க நிமிர்ந்தாள்.

“அப்பிடி ஒரு வாழ்க்கை இனி வருமா லட்சுமி?” என்று ஏக்கத்துடன் கேட்டவாறு அவளது கரங்களைப் பற்றினேன்.

அவளது தேகம் ஒரு கணம் சில்லிட்டு நடுங்கியது.

மறுகணம் தன் கைகளை விடுவித்துக்கொண்டு விலகும்போது, இரு சொட்டு நீர்த்துளிகள் என் காலடியில் விழுந்து தெறித்தன.

வியர்வையா…. கண்ணீரா…?

“லட்சுமி…!”

“அதெல்லாம் ஒரு காலமுங்க…. அப்ப நாங்கள் சின்னப் பிள்ளையள்…. மனசிலை வஞ்சனை கிடையாது…!”

எவ்வளவு அழகாகக் கூறிவிட்டாள். அதில்தான் எத்தனை அர்த்தங்கள் ஆழப் புதைந்துள்ளன?!

மனிதனின் வளர்ச்சியில் வஞ்சகமும் கபடமும் வந்து சேர்கிறதோ இல்லையோ, சமூகம் அப்படித்தான் நினைக்கிறது.

முகிழ்விடும் மொட்டுக்கள் மலர்ந்து மணம்வீசும் முன்பே கருகிப்போனால், அவற்றின் தோற்றம்கூட வெறுமைதானோ?

(பிரசுரம்: பூவரசு)

Print Friendly, PDF & Email

1 thought on “கருகிய மொட்டுக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *