உள் காய்ச்சல்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 22,559 
 

“எலெ… இப்பத்தானெ காலேஜுவிட்டு வந்தெ? அதுக்குள்ள எங்கெ கௌம்பிட்டெ?”

பதில் ஏதும் சொல்லாமல் கண்ணாடி முன் நின்று உதட்டைக் கடித்தபடி தலை சீவிக்கொண்டு இருந்தான் திரவியம்.

”ஒன்ட்டத்தானெ கேக்கென்?”

சிவகாமி மறுபடியும் மகனைப் பார்த்துக் கேட்டாள். அதற்கும் பதில் இல்லை. செருப்பை மாட்டிக்கொண்டு, ”சொக்கத்தானப் பாத்துட்டு வாரென்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான் திரவியம்.

‘சொக்கத்தானாம்லா சொக்கத்தான். அவன் ஒன் வாள்க்கைல சொக்கட்டான் ஆடத்தான் போறான். விடிஞ்சுபோனா அடஞ்சு வார மனுசன் காதுலயும் என் பொலப்பம் விள மாட்டெங்கு. இந்த வீட்ல யாரு என்னை மதிக்கா? எல்லாரும் பைத்தியாரின்னுல்லா நெனைக்கிய… எக்கேடும் கெட்டுப் போங்கொ”- சிவகாமியின் வார்த்தைகள் திரவியத்தின் காதுகளில் தேய்ந்து விழுந்தன. அதற்குள் அவன் செக்கடியைத் தாண்டியிருந்தான்.

உள் காய்ச்சல்1இனி, ராத்திரி சாப்பாட்டுக்குத்தான் திரவியம் வீட்டுக்கு வருவான். அதுவரை அவனை நெல்லையப்பர் கோயிலின் சுவாமி சந்நிதியில் உள்ள சொக்கலிங்கத்தின் வளையல் கடையில் பார்க்கலாம். நெற்றியில் பிறை போன்ற சந்தனக் கீற்றும் செந்தூரமுமாக, ஜவ்வாது மணக்க… கடும் கோடைக் காலத்திலும் குளிர்ச்சியாக இருக்கும் வளையல் கடையில் உட்கார்ந்திருக்கும் சொக்கலிங்கம், திரவியத்துக்குத் தூரத்துச் சொந்தக்காரன். திரவியத்துக்கும் அவனுக்கும் எப்படியும் இருபது வயது வித்தியாசம் இருக்கும். திரவியத்துக்கு வாழ்க்கையின் நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொடுத்தவன்; கொடுப்பவன். தான் இதுவரைக்கும் கேள்வியே பட்டிராத அபூர்வமான புத்தகங்கள் பலவற்றை சொக்கலிங்கம் மூலம் திரவியம் படித்து இருக்கிறான். ‘பெண்களை வசியம் செய்வது எப்படி?’, ‘மங்கையரை மயக்குவதன் ரகசியங்கள்’, ‘பெண்களுக்கே தெரியாமல் பெண்களின் மனதை அறிவோம்’ போன்ற பொது அறிவுக் களஞ்சியப் புதையலே சொக்கலிங்கத்திடம் இருந்தன.

”இந்தப் புஸ்தகத்துல எளுதியிருக்கிறது எல்லாம் நெசந்தானா அத்தான்?”- தொண்டையைக் கனைத்துக்கொண்டு ரகசியமாக திரவியம் பல முறை சொக்கலிங்கத்திடம் கேட்டு இருக்கிறான். அதற்கு எல்லாம் சொக்கலிங்கத்திடம் இருந்து ஒரே பதில்தான் வரும்.

”எல்லாத்தையும் அத்தான் டெஸ்ட் பண்ணியே பாத்திருக்கென்… போதுமா?”

எப்போதும் சிரித்த முகமாகக் காட்டும் தூக்கலான முன் பல்லுடன் மேலும் சிரித்தபடி சொல்லிவிட்டுக் கண்ணடிப்பான் சொக்கலிங்கம். திரவியத்துக்குக் காதெல்லாம் சூடாகும். மேற்கொண்டு கேட்கத் தைரியம் இல்லாமல் அமைதியாகிவிடுவான்.

”காலேஜ் படிக்கெ? இன்னும் நீ தனியாளா இருக்கக் கூடாது மாப்ளெ. ஒனக்கொரு ஏற்பாடு பண்ணியிருக்கென்”- திடீரென்று ஒருநாள் சொன்னான் சொக்கலிங்கம். சொன்ன கையோடு, ஒரு ஞாயிற்றுக் கிழமை காலையில் ”வா, பெருமாள் சந்நிதித் தெரு வரைக்கும் போயிட்டு வருவோம்” என்று தன்னுடைய டி.வி.எஸ்.50-யில் திரவியத்தை அழைத்துக்கொண்டு சென்றான். திரவியத்துக்கு எதற்காக பெருமாள் சந்நிதித் தெருவுக்குச் செல்கிறோம் என்றெல்லாம் தெரியவில்லை. ஆனாலும், சொக்கலிங்கத்திடம் கேட்க முடியாது. ‘அத்தான் எது செஞ்சாலும் ஒன் நன்மக்குத்தான் செய்வென். குறுக்கெ பேசக் கூடாது’ என்று வாயை அடைத்துவிடுவான். பெருமாள் சந்நிதித் தெருவில் உள்ள ஒரு வீட்டுக்கு முன்னால் வண்டியை நிறுத்திவிட்டு, ”வா மாப்ளெ” என்று வீட்டுக்குள்ளே போனான் சொக்கலிங்கம். தயங்கியபடியே பின் தொடர்ந்த திரவியத்தை அந்த வீட்டில் உள்ள ஒரு வயதான பெண்மணி யிடம் அறிமுகப்படுத்திவைத்தான்.

”பெரியம்மை, இது யாரு தெரியுதா? பிரஸ்ல வேல பாக்காள்லா, கணவதி மாமா? அவாள் மகன் தெரவியம்.” அந்த அம்மாளுக்குப் புரிந்த மாதிரியே தெரியவில்லை. ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு, ”காப்பி குடிக்கே ளாடே?” என்றபடி எழுந்து உள்ளே சென்றார். திரவியம் ஒடுங்கி உட்கார்ந்திருந்தான். டி.வி-க்குப் பின்னால் சுவரில் ‘உன்னை அறிந்தால்… நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்’ என்று எழுதி எம்.ஜி.ஆர். படம் ஒட்டப்பட்டு இருந்தது.

”பெரியம்ம, நாங்க வெளிய உக்காந்திருக்கொம்”- உரக்கச் சொல்லிவிட்டு, திரவியத்தைச் சைகை காண்பித்து வெளியே அழைத்தான் சொக்கலிங்கம். வெளியே வந்து நிற்கவும் கோதுமை மாவு வாசனை மூக்கை அடைத்தது. ஒட்டினாற்போல் இருந்த பக்கத்து வீட்டைக் காண்பித்து திரவியத்திடம் ஏதோ சொல்ல வந்தான் சொக்க லிங்கம். அதற்குள் இரண்டு டம்ளர்களில் காப்பி வந்தது. ”லெச்சுமிய எங்கெ? கடைக்குப் போய் இருக்காளா?”- காப்பி டம்ளரை வாங்கியபடியே கேட்டான் சொக்கலிங்கம்.

”சேட்டு வீட்ல இருப்பா. இரி, கூப்பிடுதென்” என்று சொல்லிவிட்டு, பக்கத்து வீட்டைப் பார்த்து ”லெச்சுமி… லெச்சுமி” என்று சத்தம் கொடுத்தார்கள். திரை விலக்கி லெட்சுமியும் செக்கச் செவேல் என இன்னொரு பெண்ணும் வாசலுக்கு வந்தார்கள்.

”என்ன லெச்சுமி, எப்டி இருக்கெ?” என்றான் சொக்கலிங்கம். ”நேத்துத்தானெ பாத்தெ? அதுக்குள்ள எனக்கென்ன கொள்ள? நல்லாத்தான இருக்கென்”- வெடுக் என்று பதில் சொன்னாள் லெட்சுமி.

பெருமாள் சந்நிதித் தெருவில் இருந்து திரும்பும்போது, காந்தி சதுக்கத்தில் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, திரவியத்திடம் சொக்கலிங்கம் கேட்டான், ”அந்தப் பிள்ள எப்டி இருந்துது?”

திரவியத்துக்குப் புரியவில்லை. ”எந்தப் பிள்ள அத்தான்?”

எரிச்சலைக் கட்டுப்படுத்திக்கொண்டுஅமைதி யாக, திரவியத்தின் தோளைப் பிடித்தபடி, ”எங்க பெரியம்ம வீட்டுக்குப் பக்கத்து வீட்டுப் பிள்ள. பாக்கறதுக்கு சோனியா அக்ரிகால் மாரி இருக்கா பாத்தியா?” பதில் சொல்லாமல் எங்கோ பார்த்த படி நின்றான் திரவியம்.

”என்ன மாப்ளெ? சொல்லு… எப்டி இருந்தா?”- தோளைப் பிடித்து சொக்கலிங்கம் உலுக்கவும் திரவியத்துக்கு அந்தப் பெண்ணின் உருவம் மனதில் தோன்றி மறைந்தது. தொண்டை வறண்டது.

”ரொம்ப அளகா இருந்தா அத்தான்.”

சத்தமாகச் சிரித்தான் சொக்கலிங்கம்.

”பொறவு? அத்தான் செலெக்ஷன் சாதாரணமா இருக்குமா? இத்தன நாளா அந்தப் பிள்ள ஜங்க்‌ஷன்ல இருந்திருக்கு. போன மாசந்தான் டவுனுக்கு வந்தாங்களாம். நேத்து நெல்லையப்பர் கோயிலுக்குப் போகும்போது நம்ம கடவாசல்ல வெச்சுப் பாக்கும்போதெ முடிவு பண்ணிட்டெம்லா… அந்தப் பிள்ள ஒனக்குத்தான்னு.”

திரவியத்தின் தொண்டை மேலும் வறண்டது. எச்சில் முழுங்கி, ”அத்தான்” என்றான்.

”மேலு சுடுத மாரி இருக்குமெ?”

”ஆமா… அத்தான்.”

”அப்ப ஒர்க்ஸ்-அவுட் ஆயிட்டு. இதான் உள்காய்ச்சல். வெளியெ தெரியாது. ஆனா, நீ மட்டும் ஃபீலிங் பண்ணலாம். இனிமெ எல்லாம் கரெக்ட்டா நடக்கும் மாப்ளெ”- வண்டியை ஸ்டார்ட் செய்தான் சொக்கலிங்கம்.

அதற்குப் பிறகு எல்லா சனிக்கிழமை மாலைகளிலும் சொக்கலிங்கத்தின் கடையில் அந்த சேட்டுப் பெண்ணுக்காகக் காத்திருந்தான் திரவியம். அவள் பெயர் சொப்னா என்பது தெரியவே, பதினொறு சனிக்கிழமைகள் ஆயின. ஒருநாள்கூட அந்தப் பெண் சொப்னா, திரவியத்தை ஏறிட்டுப் பார்த்தது இல்லை. ஆனாலும், அவள்தான் திரவியத்தின் காதலி என்று சொக்க லிங்கத்தால் அறிவிக்கப்பட்டு இருந்தாள். ஒவ்வொரு முறை அவள் சொக்கலிங்கத்தின் கடையைத் தாண்டிச் செல்லும்போதும் திரவியத் துக்குக் கை, கால்கள் நடுங்க ஆரம்பிக்கும். ஆனால், சொப்னா எந்தச் சலனமும் இல்லாமல் கோயிலுக்குள் நுழைவாள். திரும்பி வரும்போதும் அதே நிலைதான். அடுத்தடுத்த சனிக்கிழமைகளில் சொப்னாவைப் பற்றிய தகவல்களைச் சேகரித்துச் சொன்னான் சொக்கலிங்கம்.

உள் காய்ச்சல்2l”சாரதா காலேஜ்ல பி.காம்., மூணாம் வருஷம் படிக்கா. அப்பா எலெக்ட்ரிக் சாமான் கடை வெச்சிருக்காரு. இந்திக்காரின்னாலும் தமிள் தெரியும். ஆனா, விஜய் மியூஸிக்கல் கடையில போயி இந்திப் படம் கேசட்டா வாங்குதா. இந்த சட்டயக் கௌட்டிப் போட்டு ஆடுவானெ… அவன் பேரென்ன… ஆங், சலாம்கான். அவன் ரசிக. வேறென்ன டீட்டெயில்ஸு வேணும் மாப்ளெ?”

மனம் உடைந்து நம்பிக்கை இழந்தான் திரவியம்.

”நான் பி.ஏ., மொத வருஷம்தானெ படிக்கென்?”

”அட கோட்டிக்காரா? நீதான் ஏளாப்புலயும் ஒம்பதாப்புலயும் ஃபெயிலானெல்லா?”

”ஆறாப்புலயும்தான் அத்தான்.”

”பொறவு என்ன? அப்பம் அவளவிட நீ ஒரு வயசு மூப்புல்லா.”

ஆனாலும், திரவியத்துக்கு எதுவுமே சரியாக இல்லை. ”திரும்பிக்கூடப் பாக்க மாட்டக்காளெ அத்தான்? ஒரு ஆளு நிக்குற உணர்வே இல்லாமல்லா அவ பாட்டுக்கு நம்மளத் தாண்டிப் போறா.”

”மாப்ளெ…” கொஞ்சம் சீரியஸான தொனியில் பேச ஆரம்பித்தான் சொக்கலிங்கம். ”அவ ஒன்னைய க்ராஸ் பண்ணும்போது ஒனக்கு மேலு சுடுதா இல்லயா?”

”அதெல்லாம் சுடத்தான் செய்யுது? அவளுக்கும் சுடணும்லா?”

”நீ கண்டயா? அவளுக்கும் சுடத்தான் செய்யும். நீ தொட்டுப் பாத்தாலும் தெரியாது. உள் காய்ச்சல்லா? எத்தனயோ பிள்ளைள பாக்கெ. எல்லாரப் பாக்கும்போதுமா மேலு சுடுது. அத்தான் சொன்னா சரியா இருக்கும். தைரியமா இரி. ஒங்க அம்மைக்கு சொப்பனா சப்பாத்தியா சுட்டுப் போடத்தான் போறா, பாரேன்.”

அதோடு விடவில்லை. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை திரவியத்தை ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் உள்ள ராஜஸ்தான் ஹோட்டலுக்குக் கூட்டிச் சென்று, சப்பாத்தியாக வாங்கிக் கொடுத்தான்.

”நாளைக்குக் கல்யாணத்துக்குஅப்புறம் அந்தப் பிள்ள இதத்தான் செஞ்சு போடப்போகுது. இப்பவெ பளகிக்கோடே.” மூன்று வேளையும் சோற்றைத் தின்று பழகிய திரவியத் துக்குச் சப்பாத்தி பிடிக்கவே இல்லை. ஒருநாள் ராஜஸ்தான் ஹோட்டலுக்குப் போகும் வழியில், சாலைக்குமாரக் கோயிலுக்கு முன் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, தாங்க முடியாமல் சொக்கலிங்கத் தின் கையைப் பிடித்துக் கெஞ்சி விட்டான்.

”தப்பா நெனைக்காதெ அத்தான். நீ என் நல்லதுக்குத்தான் செய்தெ. இல்லேங்கலெ. ஆனா, எனக்குக் கொஞ்ச நாளா சரியா மோஷன் போக மாட்டெங்கு. சொன்னாப் புரிஞ்சுக்கொ”- உடைந்து அழுதேவிட்டான்.

”இதத்தான் மாப்ளெ கண்ணதாசன் எளுதுனாரு, ‘பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்’னு…”

வயிற்று உபாதையைவிட சொக்கலிங்கத்தின் இந்தப் பொருந்தா உதாரணம் திரவியத்தைக் கொடுமைப்படுத்தியது. கேட்டால், குறுக்கே பேசக் கூடாது என்று சொல்வான் என்பதால், அமைதியாகவே இருந்தான்.

”மாப்ளெ… மஞ்சன வடிவம்மனுக்கு ஒரு சுலோகம் இருக்கு. நான் பசிஃபிக்கா ஒனக்காக அதச் சொல்லி வேண்டியிருக்கென். கூடிய சீக்கிரம் ஒனக்கு நல்லது நடக்கும்… பாரேன்” என்றான்.

”அத்தானுக்குத்தான் நாப்பது வயசாகியும் கல்யாணம் ஆகல. ஒனக்காவது காலாகாலத்துல எல்லாம் நடக்கணும். அதுக்குத்தானெ நான் இப்படி கெடந்து எல்லாம் செய்தென்.” திரவியத்துக்கு அழுகை வந்தது. இத்தனை நல்ல மனம் உள்ளவனைப் புரிந்துகொள்ளாமல் அம்மை ஏசுகிறாளே என்று மனதுக் குள் வருந்தினான்.

”அவன் வயசென்ன? ஒன் வயசென்னல? ஸ்கூலுக்குக்கூடப் போகாத பயகூட, காலேஜு படிக்கிற பயலுக்கு அப்படி என்ன சகவாசங்கென்?”- திரவியத்தின் அம்மா மட்டுமல்ல; சொக்கலிங்கத்தின் அப்பாவுமே அவனைக் கடுமையாக ஏசிவந்தார். ”என் காலத்துக்கப்புறம் நீ இந்த கடயத் தூக்கி நிறுத்துவேன்னு எனக்கு நம்பிக்க இல்லெ. இப்பவெ கடன்காரனுக்குப் பதில் சொல்ல முடியாம நான் கெடந்து தட்டளியுதென். நான் மண்டயப் போட்டுட்டென்னா, நீ சோத்துக்கு சிங்கிதான் அடிக்கணும், தெரிஞ்சுக்கோ.” அந்த மாதிரி சமயங்களில் திரவியம்தான் சொக்கலிங்கத்துக்கு ஆதரவாக இருப்பான்.

”நான் இதுக்கெல்லாம் கலங்கலெ மாப்ளெ. எனக்கு அம்மயும் இல்ல. இவாள் ஒரு ஆளுக்காகத்தான் திருநவெலில கெடக்கென். இவாள் போயிட்டான்னா, டக்குனு போயி மிலிட்டரில சேந்துருவென்.”

”நாப்பது வயசுக்கு மேலல்லாம் மிலிட்டரில ஆள் எடுக்க மாட்டாங்கத்தான்”- வாய் தவறி திரவியம் சொல்லிவிட்டான்.

”அதெல்லாம் எக்ஸ்ப்ரஷன் உண்டு மாப்ளெ”.

திரவியம் மனதுக்குள் சொக்கலிங்கம் அத்தான் சொன்ன எக்ஸ்பிரஷன், எக்ஸெப்ஷனாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.

”ஆனா, அதுக்கு முன்னாடி ஒன் கல்யாணத்தப் பாத்துரணும் மாப்ளெ.”

தனக்காக இல்லை என்றாலும், சொக்கலிங்கம் அத்தானுக்காகவாவது சொப்னாவைக் காதலித்துத் திருமணம் செய்துவிட வேண்டும் என்கிற ஆசை நாளுக்கு நாள் திரவியத்துக்கு அதிகமாகிக்கொண்டே வந்தது. வீட்டில் அம்மா சொல்லி, திரவியத்தின் அப்பாவும் சொக்கலிங்கத்தின் கடைக்குத் திரவியம் போவதற்குத் தடை விதித்தார்.

”ஒளுங்கா மரியாதயா காலேஜ் படிப்ப முடிக்கப் பாரு. எங்க மொதலாளி மேலப்பாளையம் கடைல ஒன்னைய எடுத்துக்கிடுதென்னு சொல்லியிருக்காரு. இனி மேலும் அந்த வளயல் கடக்காரப் பயகூடப் பாத்தேன்னா, ஒன்ன ஒண்ணும் செய்ய மாட்டென். நேரெ அவன் கடைக்குப் போயி ஆடுஆடுனு ஆடிருவென்… பாத்துக்கொ.”

தன்னால் சொக்கலிங்கம் அத்தான் அசிங் கப்படுவதை திரவியம் விரும்பவில்லை. சில நாட்கள் சொக்கலிங்கத்தின் கடைக்குப் போகாமல் தவிர்த்தான். இரண்டு வாரங்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை. காலேஜில் இருந்து கோயில் வாசல் ஸ்டாப்பில் இறங்கி, வீட்டுக்குக்கூடப் போகாமல் நேரே சொக்கலிங்கத்தின் கடைக்குப் போனான். கடை பூட்டியிருந்தது. பக்கத்து காப்பித் தூள் கடையில் கறை படிந்த உள்பனியனோடு உட்கார்ந்திருந்த பாப்பையா அண்ணாச்சி இவனைப் பார்த்து, ‘போயிரு… போயிரு…’ என்று சைகை செய்தார். ஒன்றும் புரியாமல் திரவியம் முழித்தபடி வீடு வந்து சேர்ந்தான். வாசலில் செருப்பைக் கழட்டும்போது அம்மா சொன்னாள்.

”சொக்கத்தான்… சொக்கத்தாம்பியே? ஒங்க சொக்கத்தான் செஞ்ச காரியம் தெரியுமா? பெருமாள் சந்நிதித் தெருவுல யாரோ ஒரு சேட்டுப் பிள்ளய இளுத்துக்கிட்டு ஓடிட்டா னாம். போலீஸு கேஸாயிட்டு. ஒளுங்கா மரியாதயா வீட்டுக்குள்ள கெட”.

திரவியத்துக்கு மேல் சுடுகிற மாதிரி இருந்தது.

– டிசம்பர் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *