அறிவாற்றல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 13, 2023
பார்வையிட்டோர்: 1,634 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வழக்கம் போல் அன்றும் தாத்தா, பேரன் கண்ணனுடனும், பேத்தி செல்வியுடனும் மெக்ரிச்சி நீர்த்தேக்கப் பூங்காவில் மகிழ்ச்சியாய்ப் பொழுது போக்கிக்கொண்டிருந்தார். பிள்ளைகள் இருவரும் குதூகலமாக ஊஞ்சல், ஓடிப் பிடித்தல் முதலிய விளையாட்டுகளில் ஈடுபட்டிருக்க, அவர் ஓர் இருக்கையில் அமர்ந்து, நீர்த்தேக்கத்தையே ஆழ்ந்த சிந்தனை யுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

கண்ணனுக்கு 8 வயது. செல்விக்கு வயது 6. சிறிது நேரம் கழிந்ததும் தங்கள் விளையாட்டில் சுவை குறையவே அவர்கள் இருவரும் ஓடி வந்து, தாத்தாவின் இருக்கையில் வலப்பக்கத்தில் உட்கார்ந்துகொண்டனர். ஆனால், தாத்தாவோ நீர்த்தேக்கத்தில் இலயித்த கண்களைத் திருப்பவில்லை.

பொறுமை இழந்த கண்ணன், “ஏன் தாத்தா எங்களுடன் பேசாமல் தண்ணீரையே பார்த்துக் கொண்டிருக்கிறீங்க? உடல்நலமில்லையா?” என்று கேட்டான்.

தாத்தா கனவினின்றும் விழித்துக் கொண்டார். “ம்..ம்.. இல்லை கண்ணா என் உடம்புக்கு ஒன்றுமில்லை. இந்த நீர்த்தேக்கத்தைப் பார்த்ததும் எனக்குப் பழங்கால சிங்கப்பூர் நினைவுக்கு வந்தது. அப்போது இருந்த சிங்கப்பூருக்கும் இப்போது நவீனமாகியுள்ள சிங்கப்பூருக்கும் உள்ள பெருத்த மாறுதல்களை எண்ணி எண்ணி வியந்து கொண்டி ருந்தேன்!” என்றார்.

“தாத்தா! எப்படி இந்த நீர்த்தேக்கம் உங்களுக்குப் பழங்கால சிங்கப்பூரை நினைவுக்குக் கொண்டு வந்தது?” – கண்ணன்.

“கண்ணா, வரலாறு காணாத மிகப் பழங்காலத்தில் நமது சிங்கப்பூர் குன்றுகளும் மலைகளும் புதர்களும் காடுகளும் நிறைந்து, குளமும் குட்டையும் சேறும் சதுப்பு நிலமுமாகக் காட்சியளித்தது. அன்றைய அந்தக் குளத்திற்கும் இந்த அழகிய நீர்த்தேக்கத்திற்கும் ஒப்பிட்டுப் பார்த்தேன். மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேற்றுமையைக் கண்டேன்!” என்றார் தாத்தா.

“தாத்தா எனக்கு கதை வேணும்; கதை வேணும்” என்று செல்வி சிணுங்கினாள்.

“கதையா வேண்டும்? இப்போது என் சிந்தை நிறைந்திருப்பது பழங்கால சிங்கப்பூர்தான். அதை வைத்தே ஒரு கதை சொல்லட்டுமா?”

“சொல்லுங்க தாத்தா! சொல்லுங்க.” கண்ணனும் செல்வியும் உற்சாக மிகுதியால் ஒரே குரலில் கூவினர்.

“சரி அமைதியாகக் கேளுங்கள்.” தாத்தா கதை சொல்ல ஆரம்பித்தார்:-

பழங்கால நமது சிங்கப்பூரில் தானே தோன்றிய ஒரு குளம். ஓராண்டில் சில திங்கள் மழை பெய்யவில்லை. இதனால் அந்தக் குளம் வற்றி, உலர்ந்து, சேறு நிரம்பியதாக இருந்தது. அதில் ஒரு நாக்குப் பூச்சியார் தன் தோழர்களுடன் வாழ்ந்து வந்தார். பிறகு பெய்த பெருமழையால் குளம் நீர் நிரம்ப,அந்த நாக்குப் பூச்சியார் சேற்றிலிருந்து வெளிவந்து தண்ணீரில் மிதக்கலானார்.

இவர் தோற்றம் அக்குளத்தில் பசியுடன் வாடிச் சோர்ந்து படுத்திருந்த கெண்டை மீன் நங்கைக்கு நல்வரவாயிற்று. கெண்டையாள் தண்ணீரின் மேல் நீந்தி வந்து நாக்குப் பூச்சியாரை ‘லபக்’கென்று விழுங்கிவிட்டு, உற்சாகத்தோடு வாலை ஆட்டிக்கொண்டு, புது வெள்ளத்தில் அங்குமிங்கும் ஓடித் திரிந்தாள்.

இவள் இவ்வாறு துள்ளித் திரிவது அக்குளத்தின் பழைய தாத்தா விரால் மீனருக்கு எரிச்சலூட்டிற்று. சென்ற சில நாட்களாக அவர் முழுப் பட்டினி. கெண்டையாள் அவர் கண்ணுக்குத் தென்படவில்லை. இப்போது அவளே அவரெதிரே அவர் இவளை வெருட்டி, வெருட்டி, முடிவில் தமது பொக்கைவாய் வழியாக அக்கயலாளைத் தம் வயிற்றினுள்ளே செலுத்திவிட்டார்.

கெண்டை மீனார் வயிற்றுக்குள் சென்ற பின்னர் விரால் மீனுக்குக் களைப்பு தோன்றிற்று. எனவே, அவர் சிறகுகளைப் பையப்பைய அடித்துக்கொண்டு தமது வளைக்குச் செல்லலானார். ஆகாரம் பலமாக விழுந்ததால் அவரால் நன்றாக நீந்தக்கூட முடியவில்லை. தமது கண்ணையும் செவ்வனே திறந்து, எதிரே வருவோர் போவோரையும் பார்க்க இயலவில்லை. இதனால் அவர், கோரமான பற்களுடன் ஏதாவது பூச்சி புழுக்கள் தமது வாயில் வந்து விழாதாவென்று வாயை அகலத் திறந்துகொண்டு, ‘தவம்’ செய்துகொண்டிருந்த பாம்பொன்றின் வாய்க்குள் சென்றுவிட்டார். ஏதோ ஓர் உயிருள்ள கனமான பொருள் தமது வாயினுள் சென்றதை உணர்ந்ததும், பாம்பினார் தம் ‘தவம்’ பலித்ததென்று மகிழ்ந்து, வாயை இறுக மூடிக்கொண்டார்.

ஆனால், விரால் மீனின் உயிரைப் போக்கி விழுங்காத குறையை, அவர் வயிறு தாங்க முடியாத அளவுக்கு வலிக்கத் தொடங்கிய பின்னர் தான் உணரலானார். அவருக்குச் சிறிது நேரம் மணலிற் படுத்துப் புரண்டால்தான் வயிற்றுவலி நீங்குமென்பது புரிந்தது. எனவே, அக்குளக்கரைக்குச் சிறிது தொலைவில் இருந்த கட்டாந்தரைக்கு ஊர்ந்து சென்று உடம்பை நெளித்து நெளித்துப் புரளத் தொடங்கினார்.

“ஆகா, கதை மிகவும் நன்றாயிருக்கிறதே. அதன் பிறகு, அந்தப் பாம்பு என்னாயிற்று, தாத்தா?”- கண்ணன்.

“சொல்கிறேன், கேள்” என்று தாத்தா தொடர்ந்தார்

இவ்வாறு பாம்பனார் தமது உடலை வளைத்து வளைத்து நெளிவது வானவெளியில் பறந்து, இரையைத் தேடி பார்வையைக் கீழே செலுத்திக் கொண்டிருந்த பருந்தாரின் கவனத்தைக் கவர்ந்தது. கண்மூடி கண் திறப்பதற்குள் அவர் ‘விர்’ என்று மின்னல் போல் வெகு வேகமாகக் கீழே பறந்து வந்து, பாம்பனாரின் தலையில் தமது கூரிய வலிவான அலகினால் குத்திக் குத்திக் கொன்று, எளிதில் கிடைத்த இரையைக் கால்களில் இடுக்கிக் கொண்டு, வானத்தில் பறந்து சென்றார்.

கனி பொங்கும் குரலுடன் அவர், ‘கீ. கீ.’ என்று கத்திக் கொண்டு, அடர்ந்த காட்டினுள் சென்று, ஓர் ஆலமரக்கிளையில் அமர்ந்து, தமது இரையைக் கூர்மையான அலகுகளால் கிழித்துக் கிழித்து உண்ணலானார். இதனால் பாம்பின் மாமிசத் துண்டுகள் அவ்வால மரத்தனடியில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு வேட்டைக்காரர் மீது விழலாயின.

“அப்போது அந்த வேட்டைக்காரர் அந்தப் பருந்தைச் சுட்டு வீழ்த்திவிட்டார்” என்று கை கொட்டிக் கூவினாள் செல்வி.

– கவிஞர் ந.பழநிவேலுவின் படைப்புக் களஞ்சியம் (தொகுதி 2), முதற் பதிப்பு: பெப்ரவரி 1999, ப.பாலகிருட்டிணன், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *