இரும்பூரான் காதல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: November 5, 2012
பார்வையிட்டோர்: 11,708 
 

”ஹெ… ஹெ… ஹேய்..!” என்று கூவியபடி, காலைத் தரையில் தேய்த்துக்கொண்டே வாத்துகளை ஓட்டிச் செல்கி றான் அந்த வாத்துக்காரன்.

”வாக்… வாக்… வாக்… வாக்…” என்று கூவிக்கொண்டு, உடலை அவலட்சணமாக அசைத்தபடி தத்தக்க பித்தக்க என்று நடக் கின்றன அந்த வாத்துகள்.

தரையில் வரி வரியாகத் திரிசூலம் போட்டதுபோல் பதிந்த அவற்றின் காலடிகளை யும், அவற்றின் நடையழகையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்ற ஒரு பையன், எதிர்ப்பக்கத் திலிருந்து கையில் ஒரு பாத்தி ரத்துடன் வந்த பெண்ணைப் பார்த்துக் ‘கமலா’ என்று ஒரு குரல் கூப்பிட்டுவிட்டு, ”வாத்து கணக்காவே நடக்கறியே கமலா! குள்ள வாத்து!” என்றான்.

”குள்ளா குள்ளா… கோழி முட்டை! குள்ளன் திருடினான் வாத்து முட்டை!” என்று இரைந்து கத்தினாள் கமலா.

வேறு யாராவது பாடினால் சண்டைக்குப் போவான். கமலா விடம் அலாதி அபிமானம் அவனுக்கு. இன்னும் பத்து வயசு கூட இருந்தால், அதைக் காதல் என்று சொல்லிவிடலாம்.

அப்போது அந்த வழியாகக் கடை திறக்கப் போய்க்கொண் டிருந்தார் செட்டியார்.

”நான்கூடப் பெரியவனானா கடைதான் வெப்பேன். வெச்சு, நெறைய பணம் சம்பாதிப்பேன். கல்யாணம்கூடக் கட்டிப் பேன்…” என்றான் பையன்.

”யாரெ..?”

”ஒன்னத்தான்..!”

”அடச்சீ.!”

அவள் ‘அடச்சீ’ என்றது அவ னுக்கு வேடிக்கையாக இருந்தது. கோபத்தோடு அவள் சொல்வ தில்லை. கோபம் வருவதுபோல் பாசாங்கு செய்துகொண்டு சொல்வாள். அப்போது அவள் முகத்தைப் பார்ப்பதில் அவ னுக்கு ஓர் இன்பம். அவளைக் கிண்டல் பண்ண இதுதான் சரியான விஷயம் என்று அவன் தெரிந்துகொண்டிருந் தான். எப்பொழுது அவளுடன் பேச்சுக் கொடுத்தாலும், கடை சியில் சம்பாஷணையைக் கல்யாணத்துக்குத் திருப்பி, தான் அவளையே கல்யாணம் செய்துகொள்ளப் போவதாகக் கூறுவான். அவள் திருப்பித் திருப்பி ஒரே பதில்தான் சொல்லுவாள்.

‘அடச்சீ..!’

மேல் உதட்டில் அரும்பி இருந்த தன் இளம் மீசையை இடது கையினால் வாஞ்சையு டன் தடவிவிட்டுக் கொண் டான் இரும்பூரான். பத்து வரு ஷங்களுக்கு மேலே ஆகிவிட் டது. இளமையின் முறுக்குத் தெறிக்கும் உடல்; இளமையின் படபடப்பு நிறைந்த உள்ளம்;. செங்கல் சூளையில் வேலை செய்கிறான். தினம் ஏதோ சம்பாதிக்கிறான்.

இரும்பூரான் நிற்பது கடைத் தெருவு. அங்கே ஒரு ஏலக்காரன் துணிகளை ஏலம் போடுகிறான். இருட்டில், காடா விளக்கு வெளிச்சத்தில்தான் அவன் துணிகள் விலை போவது வழக்கம். ஏலக்காரனைச் சுற்றி ஒரே கூட்டம். மாதத்தின் முதல் வாரம். மாதக் கூலிக்கு வேலை செய்வோர் கையில் பணம் காசு நடமாடும் தேதி.

”பாருங்கய்யா? பன்னண்டு மொளம் சரிகைச் சேலை! இருவத்தஞ்சு ரூவாச் சேலெ ஒரு ரூவா!”

”ரெண்டு ரூவா…!”

”பன்னண்டு மொழம் பட்டுச்சேலெ கேவலம் ரெண்டு ரூவா..!”

”மூணு ரூவா..!”

”நாலு ரூவா..!”

”அஞ்சு ரூவா..!”

கூட்டத்தில் இடைவெளி வழியாகப் பார்க்கிறான் இரும் பூரான். காடா விளக்கின் மஞ் சள் வெளிச்சத்தில் அந்த ஜெர்மன் ஸில்க் சேலை செக் கச்செவேல் என்று ரத்தச் சிவப்பாகக் கண்ணைப் பறிக் கிறது. உடனே கமலாவை நினைக்கிறான் அவன். கருங் காலி மரத்தில் கடைசல் பிடித் ததுபோல் இருக்கும் அவள் உருவத்துக்கு, சிவப்புப் புடவையை சுற்றிப் பார்க்கின்ற அவன் மனக் கண்கள்!

”ஆறு ரூவா!” என்று குரல் கொடுத்தான் அவன்.

”ஒம்பது ரூவா..!”

பக்கத்தில் கேட்டது கட்டை யான ஒரு தடித்த குரல். ஒரே அடியாக மூன்று ரூபாய் உயர்த்தியவன் யார் என்று பார்த்தால், கட்டை குட்டையான ஒரு தடித்த ஆசாமிதான். பெரிய மீசை வைத்துக்கொண்டு, எப்பொழுதும் குடிகாரனைப் போல் செக்கச்செவேல் என்று சிவந்த கண்களை ஆடு திருடின கள்ளனைப் போல் திரு திரு என்று விழித்துப் பார்ப்பானே கண்ணன் பையன் மகன்!

”யாருக்கு எடுக்கறே பொடவே நாய்க்கரே?”

”இதுலே என்னாப்பேன் ரகசியம்? என் மொறப் பொண் ணுக்கு…”

”பரிசம் போட்டாச்சா?”

”போடல்லே…”

”பின்னே?”

”போடாட்டி என்னாய்யா? மொறப்பொண்ணு மொறப் பொண்ணுதானே?”

”ஒன்னக் கட்டிக்க மாட் டேன்னுட்டான்னா?”

”அதெப்படிச் சொல்லுவா?”

”அட, அவளுக்கு இஸ்டம் இல்லேன்னு வச்சுக்க.”

”நீ ஒண்ணு! அவ இஸ்டத் துக்காக இங்கே யார் காத்துக் கிட்டு இருக்காங்க? நம்ப அப்பா அம்மா கண்ணாளம் கட்டிக்கிட்டாங்களே, ஒத்தரை ஒத்தர் இஸ்டப்பட்டுத்தான் கட்டிக்கிட்டாங்களா?”

”அது அந்தக் காலம்.”

”எந்தக் காலமாத்தான் இருக் கட்டுமே? மொறப் பொண்ணெ மொறப் பையன் கட்ற வயக்கம் தானே இப்பவும் இரும்பூர்ச் சீமையிலே?”

”பத்து ரூவா! பன்னண்டு மொளம் பட்டுச் சேலெ பத்தே ரூவா! கேக்கறவங்க கேக்கலாம். உட்றப் போறேன்.”

”பதினோரு ரூவா!” என்று கத்தினான் இரும்பூரான்.

”நீ யாருக்கு எடுக்கறே சேலேன்னு சொல்லலியே?”

”என்னக் கண்ணாளம் கட்டிக்கிற பொண்ணுக்கு!”

”பதினோரு ரூவா! பதி னோரு ரூவா! கண்டாங்கி பட்டுச் சேலெ பதினோரு ரூவாய்யா! ஒரு தரம்… ரெண்டு தரம்… மூணு தரம்..!”

குடி தண்ணீர் எடுத்து வரு வதற்காக மொடாவை எடுத்துத் தலையில் வைத்துக்கொண்டு குளத்தை நோக்கி நடந்தாள் கமலா. அவள் தெருவோடு போவதைப் பார்க்கும் இரும் பூரான், ”அம்மா… ஏ அம்மாவ்..! நான் கண்ணாலம் கட்டிக்கப் போறேன்..!” என்றான்.

”ஏண்டா நாயனா! பணஞ் சேத்து வச்சிருக்கியா கண்ணாலத்துக்கு? பொண்ணுக்கு என்னா நகை போடறேன்னு கேப்பானேடா கொளத்தூரான். ஒரு ஸெயின் சங்கிலியாவது போட வாணாமா?”

”நான் கொளத்தூரான் பொண்ணக் கட்டினாத்தானே?”

”பின்னே? அவதானேடா உன் மொறப் பொண்ணு?”

”மொறையாவது கொறை யாவது? எனக்கு இஸ்டப்பட்ட வளைத்தான் கட்டுவேன்!”

”நீ இஸ்டப்பட்டவளா? அது யார்டா அந்த சித்ராங்கி?”
”கமலா…”

”எந்தக் கமலா?”

”ஆறுமுக நாயக்கரு மவ.”

”அடப்பாவி! மீசைக்காரன் மொறப் பொண்ணில்லே? நமக்கா குடுப்பாங்க? குடுத்தா லும் இவங்க சும்மா இருப்பாங் களா? அதோட கொளத்தூரான் விரோதம் வேறே, அவம் பொண்ணக் கட்டலேன்னு!”

”போம்மா! எனக்குக் கமலா வைக் கட்ட இஸ்டம்; அவ ளுக்கு என்னக் கட்ட இஸ்டம்! நீ போய்ப் பொண்ணு கேளும்மா!”

குளத்தில் குனிந்தவாறு தண்ணீர் மேல் படிந்திருந்த பாசியை மொடாவினால் துழாவி விலக்கிக் கொண்டிருக் கிறாள் கமலா. முழங்கால் முட்டுத் தண்ணீரில் குனிந்தபடி நிற்கும் அவள் அழகைக் கண்க ளால் பருகியவாறு, சற்று நேரம் நின்றான் இரும்பூரான். பின்பு, கரையில் நின்றபடி ஒரு சிறு கல்லை எடுத்து அவள் முதுகில் போட்டு, மரத்தின் பின்ன்னால் ஒளிந்துகொண்டான்.

அவள் திரும்பிப் பார்த்து, ஒருவரையும் காணாமல், நிதா னமாகத் தண்ணீரை மொண்டு கொண்டு கரை ஏறுகிறாள். மரத்தின் பின்னால் இரும்பூரா னைக் கண்டதும், ”நீதான் கல் லைப் போட்டியா?” என்கி றாள்.

”உ…ஊம்! நான் போடு வேனா? ஆகாசத்துலேருந்து உய்ந்திருக்கும்…”

”ஆ…ங்! உயும் ஆகாசத்தி லேருந்து! ஓங் கன்னத்துலே ரெண்டு உயும் இப்போ!”

”இதப் பார், கமலா! உங்க வீட்டுக்கு வந்து பொண்ணு கேக்கச் சொல்லி அம்மாகிட்ட சொன்னேன். அவ மாட்டேங் குறா. மீசைக்காரன் ஊட்டாருக் கும் பயப்படறா..!”

”ஆமா… அவங்க கடிச்சுத் தின்னுப்புடுவாங்களாமா இவங்கள? உங்க அம்மா வந்து பொண்ணு கேக்கலேன்னா, நீ என்னெக் கட்டிக்க மாட்டே? அவ்வளவுதானே விசயம்? அதெச் சொல்லவா இம்புட்டு தூரம் வந்தே ஆம்புளே?”

”அதில்லே கமலா, இப்ப என்னா செய்யறதுன்னு கேக்க றேன்…”

”ம்… ஊட்டுக்குப் போயி ஒரு பானை பழைய சோத்தைத் திங்கிறது!”

”ஐய..!”

”பின்ன என்னத்தைச் செய் யறதுன்னு கேக்கிறியே? பேசாம இந்த ஊரை உட்டு எங்கியானும் போயிடலாமா?”

”கல்யாணம் கட்டிக்காமயா?”

”கண்ணாளத்துக்கு என்ன? போற எடத்துலே, நடு ஊட் டுலே எனக்கு ஒரு தாலிக்கவுறு போட்டுட்டுப் போ!”

”அப்போ நாலரை மணிக்கி ஒரு வண்டி போகுதே, அதிலே போவமா?”

”ஓ..!”

”அப்போ, அம்மன் கோவி லுக்குப் பின்னாலே வந்து நில்லு. அங்கே யாரும் வர மாட்டாங்க..!”

நாலரை மணி ‘ஷட்டில்’ கூ… என்று கத்திக்கொண்டு புறப்படுகிறது.

இரும்பூரான் ஜன்னலுக்கு வெளியே பார்க்கிறான். தூரத் தில் ஒரு கோவில் கோபுரம் தெரிகிறது. அடுத்தாற்போல் ஒரு குன்று. இருப்புப் பாதை ஓரமாக ஒரு வாய்க்கால். அந்த வாய்க்கால் கரையில், ஒரு வாத்துக்காரன் தன் வாத்துக் கூட்டத்தை வாய்க்காலுக்கு ஓட்டிச் செல்கிறான்.

”வாக்… வாக்… வாக்..!”

இரும்பூரானின் மனக்கண் எதிரே அம்மன் கோவிலும், பின்னால் அதன் மதில் சுவர் ஓரமாக கமலா நிற்கும் காட்சி யும் தோன்றுகின்றன. கண்க ளில் நீர் முட்டுகிறது.

ரயில் நிலையத்துக்கு வரும் போது, அவன் எட்ட நின்று கோவில் பக்கம் பார்த்தான். தான் சொன்னபடியே கமலா ஒரு சிறு துணி மூட்டையுடன் நின்றிருக்கக் கண்டான். ஆனால், அவளைத் தன்னுடன் அழைத்துச் செல்லத்தான் அவனுக்கு மனம் வரவில்லை.

‘கண்ணியமாகக் கல்யாணம் செய்து கொண்டால் அதன் தினுசே வேறு. இப்போது நாலு பேர் நாலு சொல்வார்கள். மறுபடி ஊர்ப்பக்கம் தலை காட்ட முடியாது. அருகிலேயே சேர்க்க மாட்டார்கள். தன்னால் கமலாவுக்கு ஏன் இந்த கதி? முறைக்காரனைக் கட்டிக் கொண்டு அவள் நல்லபடியாக…’ அதற்கு மேல் அவன் சிந்தனை ஓட மறுத்தது.

ஆனால் காலம் ஓடுகிறதே!

இன்றும் ஒரு ‘ஷட்டில்’ வண்டி ‘கூ…’ என்று கூவிக் கொண்டு ரயில் நிலையத்தி லிருந்து புறப்படுகிறது.

பயங்கர மீசையுடனும், சிவந்த கண்களுடனும் ஓர் ஆள் தன் மனைவியுடன் வண்டி ஏறுகிறான். மேலே சட்டையில்லாமல், கருங்காலி மரத்திலே கடைசல் பிடித்த மாதிரி…

குழந்தையுடன் அவள் ஜன் னல் ஓரமாக உட்காருகிறாள். மீசைக்காரன், இடம் கிடைக் காமல் பெஞ்சுகளுக்கிடையே தரையில் உட்காருகிறான். நாட் டுப்புறத்தான்தானே?

நேரம் செல்கிறது. ஒவ்வொரு ஸ்டேஷனாக நின்று போகிறது ரயில் வண்டி. ஒரு ஜங்ஷனில் வண்டி நின்றபோது, பிளாட் பாரத்திலிருந்து பலவிதமான குரல்கள் கேட்கின்றன.

”பொம்மை… பொம்மை..!”

ஒரு மூங்கில் தட்டில் சின் னச் சின்ன பிளாஸ்டிக் பொம்மைகளை வைத்துக் கொண்டு, ஜன்னல் எதிரில் வந்து நிற்கிறான் பொம்மைக்காரன். பல நிறங்களில் யானை, குதிரை, சிங்கம், வாத்து, கோழி பொம்மைகள். அந்த இடத்தை விட்டு நகராமல் நிற்கிறான். ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்திருப்பவள் மடியில் குழந்தையைப் பார்த்துவிட்டான் அல்லவா?

”வாண்டாம் போய்யா!” என்கிறாள் அவள்.

”ஓரணாம்மா!” – கிலுகிலு என்று கிலுகிலுப்பையை ஆட்டுகிறான் பொம்மைக்காரன்.

”வாண்டாம் போய்யான்னா! ஓரணாவாம்..!”

கோபத்தில் உயர்ந்த அவள் குரலைக் கேட்டதும், பொம்மைக் காரன் திடுக்கிட்டு நின்றான்.

பிளாட்பாரத்திலிருந்து பிர காசமான வெளிச்சம் அவள் முகத்தில் விழுந்தபோது கூர்ந்து கவனித்துவிட்டு ”கமலா” என்று முணுமுணுக்கிறான். பின்பு ஒரு பொம்மையை எடுத்து அவள் மடியில் இருந்த குழந்தை கையில் வைக்கிறான்.

”ஏய்யா… வேண்டாம்னா கேக்கமாட்டே? அடச்சீ..!”

வண்டி மறுபடி ”கூ…” என்று கத்திக்கொண்டு கிளம்புகிறது. பொம்மையைத் திரும்பப் பெற்றுக் கொள்ளாமல், காசும் கேட்காமல், திரும்பி வேகமாக பிளாட்பாரத்தில் நடந்து செல் லும் பொம்மைக்காரன் முதுகு கூட்டத்தில் மறைகிறது.

குழந்தை கையில் இருக்கும் பொம்மையை எடுத்துப் பார்க்கிறாள் கமலா.

அது ஒரு வாத்து பொம்மை.

– நவம்பர், 1960

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *