கிரகவாசி வருகை

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: January 15, 2020
பார்வையிட்டோர்: 14,347 
 

பறக்கும் தட்டில் பூமிக்கு பிற கிரக வாசிகள் வந்ததாகப் பல கதைகளைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் எவ்வித தோற்றம் உள்ளவர்கள் எனக் கற்பனையில் சிருஷ்டித்துப் பல இடி (ET) போன்ற படங்கள் எடுத்திருக்கிறார்கள். பிற கிரக வாசிகள் பூமிக்கு வந்ததாக போதிய ஆதாரங்கள் இல்லை. சில சமயம் அப்படியும் நடந்திருக்கலாம் என அறிவியல் கண்கொண்டு இக்கதை எழுதப்பட்டது.

உலகத்திலேயே அதிக உயரமான 29,029 அடிகள் உயரமுள்ள இமையமலையின் சிகரத்தை, பல மனிதர்கள் அடைந்தாலும், 21,578 அடி உயரமுள்ள கைலாச மலையின் சிகரத்தை ஒருவரும் இது வரை அடையாதது ஆச்சரியத்துக்குரியது.

புனித மலையான கைலாசமலையைப் பற்றித் தெரியாத இந்து, பௌத்த, ஜெயின் மதித்தவர்கள் மிகக் குறைவு. இந்து நதி, பிரம புத்திரா, கங்கையின் கிளை நதி கர்னாலி, இந்து நதியின் கிளை நதி சட்லெஜ் ஆகிய நான்கு நதிகள் அம்மலையிலிருந்து உருவாகிறது. இந்துக்கள் தமது இதிகாசங்களில் குறிப்பிட்ட இம்மலை இருப்பது, பெரும்பான்மையினரான இந்துக்கள் வாழும் இந்தியாவில் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. 1959 இல் சீனா ஆக்கிரமித்த நாடான தீபத்தில் இம்மலை இருந்தாலும், பக்தர்கள் போய் வர பல கட்டுப்பாடுகள் உண்டு. இம்மலையில் சீன அரசின் அனுமதி பெற்று இம்மலையை 1980 இல் இத்தாலிய நாட்டு மலையேறி ஒருவர் திட்டமிட்டு சீன அரசின் அனுமதி கிடைத்தாலும்,; பின் அவராகவே சிந்தித்து தன் முயற்சியைக் கைவிட்டார்.

நேபாள தேசத்தின் அருகில் உள்ள நாடு தீபத். நேபாளத்தின் தலைநகரான கட்டமண்டுவில் இருந்து கைலாசமலைக்கு 538 கி. மீ தூரம். சிவபெருமானின் வாசஸ்தலம் என்றும்,; பல ரிஷிகள் நடமாடும் இடம் என்றும் இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இராமாயணத்திலும், மகாபாரதத்திலும் இம்மலைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, எழுதப்பட்டுள்ளது. கைலாசமலை அடிவாரத்தில் இரு ஏரிகள். ஒன்று வட்ட வடிவமான மனசோலரவர் ஏரி. அவ்வேரியில் சிவனும் பார்வதியும் நீராடுவாதாக மக்கள் நம்பிக்கை. அவ்வேரிக்கு அருகே, சந்திரனின் பிறை வடிவத்தில் ராஷ்சத்தால் என்ற எரி உண்டு. இராவணனோடு இவ்வேரியைத் தொடர்புப் படுத்தி இதிகாசக் கதைகள் உண்டு.

கைலாச மலையானது தங்கம், பளிங்கு. கருங்கல் போன்றவற்றை உள்ளடக்கியமலை. உண்மையில்லாமல் இதிகாசக் கதைகள் உருவாகாது. உதாரணத்துக்கு விஸ்வாமித்திர மகா ரிஷி படைத்த திருசங்கு சொர்க்கம் உருவாகிய கதையானது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது. அதன் அடிப்படையில் ஆர்தர் சி கிளார்க் என்ற அறிவியல் கதைகள் எழுதியவர், 1945 செய்மதியைப் பற்றி தன் நாவல் ஒன்றில் குறிப்பிட்டார். அந்நாவல் வெளிவந்து பல ஆண்டுகளுக்குப் பின் 1957இல் ஸ்புட்னிக் 1 என்ற செய்மதியை முதன் முதலில் விண் வெளியில் ரஷ்யா மிதக்கவிட்டதை யாவரும் அறிந்ததே.

இனி கதைக்கு வருவோம். நடக்க இருக்கும் பல கண்டு பிடிப்புகள், சம்பவங்கள் மலைக் குகைகளில் பதிவாகியுள்ளன என்பது மலையெறியான ஜெய்சிங்கின் கருத்து. அவரைப்போலவே திருவண்ணாமலையில் வாழும் கைலாசநாதனும் சிந்தனை உள்ளவர். பல தடவை திருவண்ணாமலையைச் சுற்றி கிரிவலம் வந்தவர். அதே போல் கைலாச மலையை சுமார் 52 கிமீ கிரிவலம் வரவேண்டும் என்பது அவர் ஆசை. கைலாசமலையின் தோற்றம் சிவலிங்கம் போன்றது.

திருவண்ணாமலைக்கு கிரிவலம் தரிசனத்துக்கு வந்த நேப்பாளியான ஜெய்சிங்கோடு; எதிர்பாராத விதமாகத் தொடர்பு கைலாசநாதனுக்குக் கிடைத்தது. கைலாசநாதன் சென்னை பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று, பல ஆராச்சிகளில் ஈடுபட்டவர். எட்மண்ட் ஹில்லரியோடு முதன் முதலாக இமையமலையின் சிகரத்தை அடைந்த நேபாள தேசத்து, மலையெறியான டென்சிங்கின் பரம்பரை வழி வந்தவர் ஜெய்சிங். கைலாச மலையேறி, சிகரத்தைத் தொட்டு, பிரபல்யமாக வேண்டும் என்பது அவரது நோக்கம் மட்டுமல்ல, அவரோடு தொல்லியல் ஆராய்ச்சியாளரான முனைவர் கைலாசநாதனுடன் சேர்ந்து கைலாச மலையினுள் புதைந்துள்ள இரகசியத்தை ஆராய்ச்சி செய்து அறிய வேண்டும் என்பது அவர் நீண்ட காலத் திட்டம்.; ஜெய்சிங் ஒரு மலையேறி மட்டும் அல்ல, புது டெல்கியில் ஜியோலஜி என்ற நிலவியல் துறையில் படித்து, ஆராய்ச்சி செய்து, முனைவரானவர்.

கைலாசமலையின் சுற்றாடலைப் பற்றி அறிந்த நண்பர்களான ஜெய்சிங்கும் , கைலாசநாதனும்; தாங்கள் படித்த துறைகளில் தொடர்ந்து கைலாசமலையில் ஆராய்ச்சி செய்யத் திட்டம் மிட்டார்கள். அதற்குத் தேவையான நிதி உதவியைப் பல இந்தமன்றங்கள் கொடுத்து உதவ முன்வந்தன. கைலாசமலை அருகே வசிக்கும் பலர், அம்மலையின் உச்சியில் இருந்து வானை நோக்கி பிரகாசமான ஒளி சென்றதைக் கண்டதாகச் சொன்னார்கள். முதலில் ஒருவரும் அதை நம்பவில்லை. பின் மலையடிவாரத்தில் வாழ்பவர்கள், குறித்த நாளில் அவர்கள் சொன்னதில் உண்மை உண்டு என்பதை அறிந்தார்கள்.

ரஷ்யர்கள் தங்களின் ஆராய்ச்சி மூலம் கைலாச மலையை மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு பிரமாண்டமான பிரமிடு என குறப்பிட்டுள்ளார்கள். கைலாசத்தில் ஏதோ ஒரு சக்தி மறைந்திருக்கிறது என்ற முடிவுக்கு வந்த இரு நண்பர்களும் தொடர்நது தமது தொல்பொருள், நிலவியல் அறிவை கைலாசமலையில் புதைந்து கிடக்கும் இரகசியங்களைக் கண்டறிய தீபத் நாட்டுக்கு வந்தார்கள்.

சீன அரசின் பலத்த கட்டுப்பாடுகளைக் கடந்து மலையின் அடிவாரத்தை அடைந்தார்கள். முதலில் ஆதி கைலாசம் என்று சொல்லக்கூடிய ஓம் பர்வதம், ஆண்டின் நான்கு மாதங்கள் தவிரப் பிற மாதங்களில் பனியால் முழுவதுமாக மூடப்பட்டுவிடும். ஆகவே இந்த நான்கு மாதங்களுக்குள் அவர்கள் தமது ஆராய்ச்சியை முடித்தாக வேண்டும் எனத் தீர்மானித்தார்கள். மலை ஏறும்; போது, அவர்களுக்கு பொதிகைகளை சுமந்து செல்ல மலையடிவாரத்தில் வாழும் இரு மலை ஏறும் தீபத்தர்கள் அமர்த்தபப்பட்டனர்.

இந்தக் குறிப்பிட்ட நான்கு மாதங்களில் பனிப் பொழிவானது சமஸ்கிருத மொழியில் உள்ள ஓம் என்ற எழுத்துபோல இம்மலை மீது பரவி இருக்கும். எனவே இது ஓம் பர்வதம் (மலை) என்று அழைக்கப்படுகிறது. காட்மாண்டுவிலிருந்து மானசரோவர ஏரி,; ஆயிரம் கி.மீ. தூரம். மனப்பாங்கான பகுதியாக இருப்பதால் இதனைக் கடக்க நான்கு நாட்கள் எடுத்தன.

காட்மாண்டுவிலிருந்து கிளம்பி, முதலில் சென்றடைநதது மானசரோவர் ஏரி. இது இயற்கையாகவே அமைந்த ஏரி இமயமலை உட்பட அருகில் உள்ள பல மலைகளிலிருந்து வரும் நீர், இந்த ஏரியை வந்தடைகிறது. கடும் குளிர் காரணமாக ஏரி நீர் சில்லென்று இருக்கும். பக்தர்கள் இங்கு ஸ்நானம் முடித்துப் பூசைகள் செய்வார்கள். கைலாச மலையில் மட்டுமல்ல இந்த ஏரிக்கரையிலும் சிவ தீர்த்தங்கள் கிடைக்கும். விடியற்காலை சூரிய ஓளியில் கைலாசமலையின் தோற்றம் பொன்னைக் கொட்டி வைத்ததுபோல சிகப்பாக ஜொலிக்கிறது. மலையை சுமார் 20 கிமீ தாரத்துக்குக் கிரிவலம் வந்த பின்னரே மலையில் ஏறத் தொடங்கினார்கள். இம்மலையில் தங்கம் வெள்ளி, பளிங்கு, கிரைனைட் என்ற கருங்கல் போன்ற கனிவளங்கள் உண்டு என்பதை கைலாசநாதன் மலைப் பாறைகளை ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்தார்.

***

கைலாச மலை கிட்டத்தட்டக் கடல் மட்டத்திலிருந்து 21,800 அடிகள் உயரமானது. இம்மலை 29,029 அடிகள் உயரமான உலகிலேயே உயரமான இமயமலையோடு ஒப்பிடும் போது இம்மலையின் உயரம் எழுபத்தைந்து விகிதமே. சுமார் 21,500 அடிகள் இருவரும் ஏறியவுடன் ஒரு குகையைக் கண்டார்கள். ஒருவேளை இக்குகைக்குள் இருந்து சிவனும், ரிஷிகளும் தியானம் செய்தார்களோ? அதனுள் பிரவேசித்து ஆராய்ந்த போது குகையின் சுவர்களில் உள்ள பல ஆயிரம் காலத்துக்கு முந்திய சித்திரங்களும், பதிக்கப்பட்டிருந்த எழுத்துகளும், கைலாசநாதனுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. இந்து நதிப்பல்லதாக்கில், தொல் பொருள் ஆராய்ச்சி அவர் செய்தவராயிற்றே. உடனே இவ் எழுத்துக்கள் சிந்து நதி பல்லத்தாக்கு நாகரீக காலத்துக்கு முற்பட்டதாக, கி.மு 26 ஆம் நூற்றாண்டிலிருந்த சுமேரியன் காலத்து எழுத்துகளை விட, பழமை வாய்ந்தவை என்பதை அறிந்தார். அவை அச்சித்திரங்கள் மூலமும், எழுத்துக்கள் மூலமும்; ஒரு செய்தியைப் பூமி வாழ் மக்களுக்கா சொல்கிறது என்று ஜெய்சிங் நாதனுக்குச் சுட்டிக்காட்டினார்.

“ இருக்கலாம் ஜெய். எனது கணிப்புப் படி இவை வேற்று கிரகவாசிகள் பதித்த தடையங்களாக இருக்கலாம்”

“ அப்போ செவ்வாய்க் கிரக வாசிகள் பதித்த தடையங்கள் என்று சொல்லுகிறீரா நாதன்’?

“ செவ்வாய் கிரகம் பூமிக்கு அருகே உள்ள கிரகமானாலும் அது ஒரு வறண்டக் கிரகம். நாசா என்ற விண்வெளி ஆராய்ச்சி மையம், அக்கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்தாக இதுவரை கண்டு படிக்கவில்லை” என்றார் நாதன்.

“ அப்போது எங்கிருந்து வந்து இம்மலையில் இறங்கியிருப்பார்கள் என ஊகிக்கிறீர் நாதன்”? ஜெயங் கேட்டார்.

“ நல்ல கேள்வி. பூமியில் வாழும் உயிரினங்களை விட அதிக புத்திசாலித்தனமும், தொழில் நுட்பத்துறையில் முன்னேறிய உயிரினமாக இருக்கலாம். அவர்கள் தோற்றத்தில் பூமியில் இருக்கும் மானிடர்களைப் போல் இருந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அலை வடிவத்திலும் இருந்திருக்கலாம். ஓளியின் வேகத்தை விட வேகமாக பயணம் செய்பவர்களாகவும் இருந்திருக்கலாம். அதனால் பல ஆயிரம் ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருந்து பூமிக்கு வந்திருக்கலாம். அவர்கள் சூரியக் குடும்பத்தைச் சார்ந்தவர்களாக இருக்க முடியாது என்பது என் கருத்து ஜெய்”.

“ நீர் என்ன சொல்லவருகிறீர் என்று விளக்கமாக சொல்லமுடியமா நாதன்”?

“ நான் நினைக்கிறேன் பல ஆயிரம் ஒளி வருட தூரத்துக்கு அப்பால் இருக்கும் பால்வெளியிலிருந்து வந்தவர்களாக இருக்கலாம். இவர்களே இந்து மதக் தத்துவத்துக்கு வித்திட்டவர்கள். இந்து மத கடவுள்களை தோற்றுவித்தும் இருக்கலாம். இந்தத் தோற்றத்தினால் கைலாச மலையில் வாசம் செய்யும் சிவனும் தோன்றி இருக்கலாம். ரிஷிகளும், சித்தர்களும்; அவர்கள் உருவாக்கியவர்களே. அதனால் தான் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அதிசயங்களை செய்திருக்கிறார்கள் என்று இந்து ஐதீகங்கள் சொல்கிறது”.

“நாதன் இது ஒரு புதுமையான சிந்தனை. இது எவ்வளவுக்கு உண்மை என்பதை நாம் மேலும் ஆராய்ச்சி செய்து அறியவேண்டும். இதுவே அம்மலையின் உச்சியை அடைய ஒருவரும் முயலாததற்குக் காரணம்”, என்றார் ஜெயசிங்.

“ வாரும் முதலில் கைலாசமலையின் உச்சியைப் போய் அடைவோம். இன்னும் 300 அடிகள் ஏற வேண்டியிருக்கிறது நாம் உச்சியை அடைய. வெறு என்ன அதிசயங்கள் அங்குக் காத்திருக்கிறதோ தெரியாது” கைலாயநாதன் சொன்னார்.

“ இதை கேட்டதும் எனக்கு ஒரு ஐதீகக் கதை ஞாபகத்துக்கு வருகிறது” என்றார் ஜெய்.

“ என்ன கதை ஜெய”?

“ சிவனின் உச்சியையும் அடியையும் காண, பிரம்மாவும் விஷ்ணுவும் முறையே அன்னப்பறவையிலும் வராகத்திலும் புறப்பட்ட கதைதான். யார் பெரிது என்ற ஆணவத்தை அடக்க, சிவன் வைத்த பரிசோதனை. அந்த கதையில் சிவன், முடியும், அடியும் தெரியாத ஜோதி வடிவமாகக் காட்சி கொடுத்தார் என்கிறது, அதனால்….” ஜெய் சொன்னார்.

“ அதனால் என்ன?.”

“ மலை அடிவாரத்தில் வாழும் மக்கள் கண்ட ஜோதி அந்த ஒளியாக இருக்குமோ என்று நான யோசிக்கிறேன் நாதன்.”.

“ சிந்திக்க வேண்டியது தான். இப்புவியில் வாழும் நாம் வேற்று கிரக வாசிகளின் அறிவுக்கு ஈடாக வருவதற்குப் பல ஆயிரம் ஆண்டுகள்; எடுக்கலாம்” என்றார் கைலாசநாதன்.

“ சரி சரி வாரும் சிவனின் உச்சிக்குப்போவோம். கங்கை உருவாகுவதையும்,; சந்திரப் பிறையையும் காணலாம்.” என்றார் சிரித்தபடி ஜெய்சிங்;.

நண்பர்கள் இருவரதும் ஆராய்ச்சிப் பயணம் தொடர்ந்தது.

Print Friendly, PDF & Email

1 thought on “கிரகவாசி வருகை

  1. இவரின் கதைகளை ஆவலுடன் வாசிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன்.பலவித செய்திகளை ….அறியத் தருவார்.இந்தக் கதை,சினாவால் பறிக்கப்பட்ட இந்தியாவின் புனிதப் பூமியை …,”இந்தியாவிடமே திருப்பிக் கொடுத்து விட வேண்டும்”என்ற விருப்பையே ஏற்படுத்துகிறது.இதுவரையில் எனக்கு கைலாசம் இந்தியாவிற்கு வெளியில் இருப்பது தெரியாது.இது காலத்தின் மட்டுமில்லை மக்களின் கட்டளையும் கூட.அடுத்தவர் நிலங்களை பறித்து சொந்தமாக்கும் வழக்கம் உலகில் ஒழிய வேண்டும். கடந்த பெரும் போர்களினால் பறிக்கப் பட்டிருந்தால்,அவற்றை திருப்பி கையளிக்கும் வைபங்கள் இடம் பெற வேண்டும்.இலங்கையில் கூட, அதன் தொடர்ச்சியாகவே, புளிப்பு விட்டதாக சிங்களப் படைகள் நிலங்களை அக்கிரமிக்கும் போக்குகள்…எல்லாம் இன்றும் நம் கண் முன்னால் நடை பெற்றுக் கொண்டு இருக்கின்றன.சீனா மட்டுமில்லை,அமெரிக்காவும் கூட தான் பறித்துக் கொண்ட மெக்சிக்கோவின் மாகாணங்களை திருப்பி கையளிக்கிறதிலே பேச்சு வார்த்தைகளில் இறங்கி நடை போட‌ வேண்டும் என அவாவுகிறேன்.

    கடல்புத்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *