கடவுளும்… கா….ய….த்…..ரி…. யும்…

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்  
கதைப்பதிவு: September 23, 2017
பார்வையிட்டோர்: 128,988 
 

நிலா காய்ந்து கொண்டிருந்தது… கோடையில் இரவுக்காற்று சுகம்…ஊர் எல்லையில் ஓடும் நதியின் சலசலப்பு…. ஒரு வித ரிதத்தில் நிரவலாகக் கேட்டது…அவன் வேர்த்து, விறுவிறுத்து… தலை தெறிக்க ஓடி வந்து கொண்டிருந்தான்…தூக்கி கட்டிய லுங்கியில்… அந்த ஊர் பருத்தி வீரனோ என்று நம்பத் துவங்கும்.. மனத் துகள்கள் மீது ‘நங்… நங்…..’ என்று அவன் பாதங்கள் மிதிக்க ஓடி வந்து கொண்டிருந்தான்…

நதியின் ஓரம் இருந்த புதர் மறையில் உடல் குறுகி நுழைந்து அமர்ந்து கொண்டவன்…”இன்னைக்கு சிக்குனா… பிதுக்கி எடுத்துருவானுங்க…. கடவுளே காப்பாத்து…. மொட்டை போடறேன்…” என்று மேலே பார்த்து வேண்டினான்… முணுமுணுக்கும் பாஷையில்…

எட்டிப்பார்த்து சிரித்த கடவுள்…”மொட்டையா…? நீயா….! ஆமாமா….. ஏமாந்தா…. எனக்கு போடுவ… போடா.. மொட்டத் தலையா…” என்று கூறி தலையை உள்ளே இழுத்துக் கொண்டார்…

போன மாதம்.. ஒரு போட்டியில் மொட்டை போட்ட தன் தலையை ஒரு முறைத் தடவிக் கொண்டான்….

‘படுபாவிக்கடவுளு….. நம்ப மாட்டிக்கறானே…..” மீண்டும் முணங்கிக் கொண்டே ஆலமரத்தின் பின்னால் சலசலக்கும் நதிக்குள் இறங்கி, தண்ணீரை வேக வேகமாக எடுத்து முகத்தில் அறைந்து கொண்டு, மேலேறி மீண்டும் அங்கே இருந்த கட்டடம் ஒன்றில் பதுங்கிக் கொண்டான்….போலிசின் பூட்ஸ் சத்தம்.. காற்றில் கரைந்து காணாமலே போனதை, காதைக் கூராக்கி உறுதி செய்து கொண்டவன் கொஞ்சம் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டான்… பீடி பற்ற வைத்துக் கொண்டான்…

காற்று… வந்து வந்து போய்க் கொண்டிருந்தது… இரவுக் காற்றின் சப்தம்.. அர்த்தமுள்ளது என்பது போல…

அந்தக் கட்டடத்துக்கு அடியில் அமர்ந்திருந்தவன்…. மெல்ல மெல்ல….. தலையை கொக்கை போல தூக்கி தூக்கி… பார்த்தபடியே.. வீசிய காற்றை.. கலைத்துக் கொண்டு எழுந்தவனின் நடுமுதுகு, முட்டிய கட்டடத்தில்….அணை கொடுத்து சாய்ந்து கொண்டு……இரு கைகளையும் பின்னால் விரித்தபடியே அனிச்சையாய் நிரவ…… அந்தக் கட்டடத்தின் மேற்பகுதி…வலு வழுவெனக் குளிர்ந்தது…..

ஏதோ மனதுக்கு தட்டுப் பட சட்டென திரும்பினான்… கண்கள் விரிய.. இதயத் துடிப்பு எகிறியது…. அது கல்லறை என்பதை… புரிந்த கணம்.. கண்கள் சுழல சுழல.. அது கல்லறைத் தோட்டம் என்பது பூதமாக ஒரு புள்ளியில் இருந்து விரிந்தது…. வாய் பொத்தி.. கத்திக் கொண்டே.. சத்தத்தை மௌனமாக்கி…. சற்று பின்னால் தடுமாறி…. நிற்க….காலில் குத்தியது கால் எழும்பொன்று…. உடல் களைத்து… பெரும்பயம்.. சூடிக் கொண்ட….நிறத்தில், நடுங்கிக் கொண்டே…. அங்கும் இங்கும் அலை பாய்ந்த….. ஆழ்மனதுக்குள்.. பேய்கள் அவனை சூழ்ந்தன…நதி அணத்திக் கொண்டு ஓடியது போல கேட்டது..

“சாமி.. காப்பாத்து… தயவு செஞ்சு காப்பாத்து….. பக்கத்தூர் சுடுகாட்டுக்குள்ள ஓடி வந்துட்டேன்… இந்த வாட்டி காப்பாத்தினா…”

இடைமறித்த கடவுள்.. காப்பாத்தினா.. காலத் தருவியா… வழக்கம் போல மசுரத்தான தருவ…..அத வெச்சு.. சவுரி வியாபாரமா பண்ண முடியும்…? போடா.. குடிகாரா… விடிஞ்சப்றம்… என் தல மேல ஒன்னுக்கு அடிக்கறவன்தான்டா நீ…மோகினிகிட்ட மாட்டு…. அப்பதான் புத்தி வரும்..” என்றபடியே கத்தி சிரித்த சாமி மறைந்து கொண்டது….காலத்துக்குள்…

ஆங்….” குடிகாரா… குடிகாரா..”- எதிரொலித்தது….அவனுக்குள்….

கடவுளுக்கு நன்றி சொன்னவன்.. அத்தனை நேரம் பயத்தில் மறந்து விட்டிருந்த சரக்கை அவன் ட்ரவுசருக்குள் இருந்து எடுத்தான்….போத்தல் மூடியைத் திறந்து மட மடவென அடித்தான்.. அடுத்த கணம் போத்தல் பறந்தது…… ஒரு கிர்.. ஒரு சிலிர்ப்பு…… காதில் பர பரக்கும் ஒரு சூடு…கண்கள் மூடித் திறந்தான்…..

“பயம் போயே போச்சு…சுடுகாடு.. நல்ல சுடுகாடு….. நல்லா இருக்கே.. இப்டி தனியா.. சுடுகாட்டுக்குள்ள நைட்ல…..இந்த பேய்க் காத்துல… அமைதியா நிக்கறது, நல்லா இருக்கே….” அவன் தானாக பேசிக் கொண்டான்…. சுற்றும் முற்றும் பார்த்தான்…அந்த இடமே.. சற்று பூத்து விட்ட திராட்சைத் தோட்டம் போல….இருந்தது…..நதி மிதந்து கொண்டே பாடியது போல கேட்டது….தானாக புன்னகைத்துக் கொண்டான்…

தனக்கு பின்னால் நூறு குதிரைப்படை நிற்பது போல.. உணர்ந்தவன்…”இனி எதற்கு நிற்க வேண்டும்….. உட்காரலாமே..”- என்று மூளைக்கு கட்டளையிட அப்படியே நின்றிருந்தவாறே….. பின்னால் கைகளை ஊன்றி ஜங்கென ஏறி அமர்ந்தான்…குளிர்ந்த கல்லறை… ஒரு வித கிளர்ச்சியை அவனுள் ஏற்படுதியது…. கண்கள் தானாகவே நிலவைப் பார்த்தன….. அதுவும்…..”இந்தா பார்த்துக்கோ” என்றபடியே அவனுக்கு நேராக வந்து முட்ட…… இரவு…வெண் துகள்களால் மின்னியது…

கண்கள் சுழன்ற இடமெல்லாம் கல்லறைகள்….. ஆழ்த்த நித்திரையில் இருக்க… மயானம்.. மயான அமைதியில்… ஆழ்ந்திருந்தது… ஒரு வித வாசம்… அங்கே சுழன்று கொண்டேயிருந்தது…..ஏதோ அவன் முன்னால் வருவதும் போவதும் போல அவன் கண்கள் இருட்டை விதைத்தபடியே இருக்க.. சட்டென பீப் போட்டு திட்டினான்……அதன் தொடர்ச்சியாக….”என்ன பேய்.. பொல்லாத ..பேய்..நான் பாக்காத பேய்….”என்று கத்திக் கொண்டே… மெல்ல அவன் அமர்ந்திருக்கும் கல்லறையின் முகப்பு பக்கம் திரும்பினான்…

திக்கென்றது…. ஆனாலும் போதைக்குள் தித்தித்தது…கண்களில் ஒரு வித வெளிச்சம்.. எதிரே இருந்த நிலவில் இருந்து தெறித்து கல்லறை முகப்பில் பிரதிபலித்தது…முகப்பில் பாதிக்கப்பட்டிருந்த புகைப்படத்தில்…. அத்தனை அழகிய தீட்சண்ய முகம்….. அவனையே பார்ப்பது போல… இருந்தது…”ஓ…இது ஒரு பொண்ணு கல்லறை..”-மனம் புகைப்படம் வாசித்தது…அவனுக்குள் ஒரு வித பரிதவிப்பு அவனின் போதையைத் தாண்டியும் மேல் எழும்பியது… கண்களைத் தேய்த்துக் கொண்டு உற்றுப் பார்த்தான்… பார்க்க பார்க்க… பரவசமாகும் முகம்….கீழே எழுதியிருந்த வார்த்தைகளை எழுத்துக் கூட்டிப் படித்தான்…. கா….ய….த்…..ரி… பிறப்பு… 01.01.1990 இறப்பு 15.12.2015.. ஐந்தாவது வரை படித்த படிப்புக்கு உபயோகம் இருப்பதாக பக்கவாட்டு சிந்தனையில் நினைத்துக் கொண்டான்….

“இவ்ளோ அழகா இருக்கா… இவ்ளோ சின்ன வயசுல செத்து போய்ட்டாளே… சரியா இல்லையே… யோவ் கடவுளே… நீ பண்றது ஒன்னும் சரி இல்ல… ஒரு சின்ன புள்ளைய சாக விட்டு வேடிக்கை பாக்கற… நீ எல்லாம் என்ன கடவுள்…. போயா…… யோவ்…..பாவமா இருக்குய்யா….. கேட்டா… வாய் கிழிய பேசுவ….”என்று பேசிக் கொண்டிருக்கையிலேயே…… தலையில் ஓங்கி ஒரு கொட்டு வைத்து விட்டு… ஈஈஈஈஈஈஈஈ….. என பல்லைக் காட்டி மறைந்து போனார் கடவுள்….

கொட்டு பலமாக விழ….’ஸ்…ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்”……. என்றபடியே அனிச்சை செய்யலாய் தலையைத் தேய்த்துக் கொண்டே..சுற்றும் முற்றும் பார்த்தான்… வலி கிண்ணென்று இருக்க…. போதை கொஞ்சம் தெளிவது போல இருந்தது…”மாட்டு….. உன்ன வெச்சுக்கறேன்….” என்று முணங்கிக் கொண்டே… சட்டென உதறிய ஆழ்மனம்…..” அட கல்லற மேல உக்காந்துருக்கோமே” என்று சுயம் கொண்டு பதற….. அதற்குள் காயத்ரியின் புகைப்படம் அவனைப் பார்த்து மெல்ல புன்னைகைப்பது போலவே இருக்க… மப்பு மொத்தமாக மலை ஏறி விட்டது…..

“அய்யய்யோ……. மன்னிச்சிடு தாயே……” என்று கத்திக் கொண்டே….கல்லறையை விட்டு வெளியே குதித்து சுடுகாட்டை விட்டு ஓடத் துவங்கினான்… பக்கவாட்டில் இருந்த சுடுகாட்டு மரங்கள் எல்லாம் வானுயர நின்று ‘உயீ………… ய்……..’ என்று கத்தி ‘போகாதே…. போகாதே….’ என்பது போல தலையாட்டி பார்ப்பதாக நம்பிக் கொண்டே இன்னும் வேகமாய் ஓடத் துவங்கினான்….

*

கதவைத் திறந்த பாட்டி, “எப்பதான் திருந்த போறயோ செங்கல்லு… கைய கழுவிட்டு வந்து சாப்டு…. குடிச்சுட்டு வெறும் வயித்துல படுக்க கூடாது… ஆமா.. இன்னைக்கு எந்தப் பக்கம் கை வைச்ச…..?… ஏட்டு… வந்து தேடிட்டு போனா…..ரு…” பாட்டி அது பாட்டுக்கு புலம்பிக் கொண்டிருக்க.. செங்கல்லு… வயிற்றை நிறைத்துக் கொண்டிருந்தான், வழக்கம் போல…..

வழக்கம் போல எதிர் வீட்டு திண்ணையில் படுக்கையை விரித்துக் கொண்டான் செங்கல்….. இங்கும் எதிரே வந்து “இந்தா…. பார்த்துக்கோ” என்று தன்னைக் காட்டிக் கொண்டு உருண்டது நிலா… அவன் கண்கள் கூசின.. சற்று உற்றுப் பார்த்தவனுக்கு, அது அந்த செத்தவளின் முகத்தை நினைவு படுத்தியது….மெல்லிய தென்றல்.. அந்த வீதியை நிறைத்துக் கொண்டிருந்தது…தலை கிண்ணென்றிருந்தது…

“ஏன் .செத்துருப்பா…….?……யாராவது ரேப் பண்ணி கொன்றுப்பாங்களோ…….இல்ல…பத்தாவது பெயில் ஆகி தூக்குல தொங்கியிருப்பாளோ…..இல்ல போன் பேசிட்டே மினி பஸ்காரன் மோதி செத்துருப்பாளோ……?…… இல்ல… ஒரு பவுன் செய்னுக்கு எவனாது கழுத்த அறுத்திருப்பானோ……!……ஒன்னும் புரியலையே….”- அவன் மனதுக்குள் புதிதாக ஒரு கிணறு தன்னைத் தோண்டத் தொடங்கியிருந்தது….அதிலிருந்து சட்டென அவனின் கவனம் மிக வேகமாய் திசை திரும்பியது…. திருப்பியது, திண்ணையை ஒட்டிய ஜன்னலில் இருந்து….. வந்த…. ‘ம்…ம்ம்………’ என்ற அணத்தல்… மற்றும்… அணைத்தல்….சத்தம்…

எல்லாம் மறந்தவனாக மெல்ல தலை தூக்கி ஜன்னலுக்குள் கண்களை விட்டான்…எப்போதும் போல… மெல்லிய வெளிச்சத்தில்… ஆசைகள் இரண்டு, அவஸ்தைகளாய் நான்கு நிலாக்கள் செய்து கொண்டிருந்தன… கண்களில்.. வழிந்த கற்பை அவன் துடைக்க மறந்து பார்த்துக் கொண்டேயிருந்தான்… இரவு இன்னும் நீண்டு கிடந்தது…

*

விடிந்தது……. அவனுக்கு தெரியவில்லை… .. லுங்கியை இழுத்து தலை வரை போர்த்திக் கொண்டு காலை குறுக்கியபடி படுத்திருந்தான்…

“யாரு….! ரத்னம்மா… பேரனா…? அவன் தூங்குவான்….” என்று சொல்லியபடியே கடந்து சென்றது ஒரு பெருசு…

“செங்கல்லு…. டேய்…. எந்திரிடா…..” பாட்டி தண்ணீர் எடுத்துக் கொண்டு ஒரு நடைக்கு ஒரு கத்து என்று கத்திக் கொண்டிருந்தது…அவன் மெல்ல எழுந்து, சுவரோரம் சாய்ந்து அமர்ந்து பீடி பற்ற வைத்துக் கொண்டான்…எங்கிருந்தோ வந்து மடியில் ஜங் கென்று ஏறி அமர்ந்து கொண்டாள் செத்தவள்…

“என்ன கருமன்டா இது…. எந்திரிச்சொடனே அவ முகந்தான் ஞாபத்துல வருது…” உள் மனம் பேச.. புகை விட்டது.. வாய்…

*

“அழகா இருக்காடா… ஆனா செத்துப் போய்ட்டா… அப்டித்தான மாப்ள…! இதோட.. முப்பது டைம் சொல்லிட்ட… அழகா இருந்தா சாக கூட கூடாதாடா….?”- நண்பன் ‘முட்டைகோஸ்’ பீடி பற்ற வைத்துக் கொண்டே தலையில் அடித்துக் கொண்டான்…..வேலையில் மனம் ஒட்ட வில்லை…மதியத்தோடு சொல்லி விட்டு கிளம்பி விட்டான்…செங்கல்…

வானம் சூரியக் கதிர்களால் நிறைந்து நிறம் மாறிக் கிடந்தது…..பூமி வெக்கையில் உருண்டு கொண்டிருந்தது… அந்த அசலூர் சுடுகாட்டுப் பிரிவுக்கு வந்ததும் சைக்கிள் தானாக நின்றது… அவன் மனதுக்குள் அதே கேள்வி….. திரும்ப திரும்ப….. கல்லறை செய்து கொண்டே இருந்தது…

“கருமம் புடிச்சவனே… போய், அத அவகிட்டயே கேளு…”-கடவுள் கன்னத்தில் ஒன்று விட்டு கத்தினார்…

சட்டென திரும்பி சுடுகாட்டுக்குள் நடக்கத் தொடங்கினான்…கன்னத்தைத் தடவிக் கொண்டே… அவன் கண்கள் அங்கும் இங்கும்… சுழன்றன.. இரவு, தான் எந்தக் கல்லறையில் அவளைப் பார்த்தோம் என்று மனம் வேக வேகமாய் தேடியது… கால்களில் தட்டுப் பட்ட மண்டை ஒட்டு சில்லுகள்.. மதிய வெளிச்சத்தில் …… ஈஈஈஈஈஈ…. என புது முகம் காட்டின…கல்லறை விடும் பெரும் மூச்சு போல… அங்கே சுழன்ற காற்று.. தன் சப்தத்தை சற்று அதிகப் படுத்தியது.. அளவுக்கதிகமாய் வேர்த்தது அவனுக்கு…’காரணத்தோடுதான் அமர்ந்திருக்கிறோம்’ என்று ஒரு கூட்டக் காக்காக்கள் அவனையே பார்ப்பது போல அவன் முகம் திருப்பிக் கொண்டான்…

அந்த உச்சி வேளை, சுடுகாட்டின் நிறத்தை சற்று கலைத்துக் கொண்டிருந்தது…மெல்லத் தடவி சென்ற காற்றில் ஒரு பேய்க்கு உருவம் கொடுத்துப் பார்த்து.. சற்று ஒதுங்கி நின்று மெல்ல திரும்பிப் பார்த்த செங்கல்…..சட்டென முகத்தை முன்னால் திருப்பிக் கொண்டான்..

“உச்சி வேளையில. யாரு கூப்டாலும் சட்டுன்னு திரும்பிடாத.. மோகினிங்க அலையும்” என்று பாட்டி என்றோ கூறியது சரியான நேரத்தில் கை கொடுத்தது.. பின்னால் திரும்ப மறுத்தான்.. மனதுக்குள் ஆயிரம் கண்கள் பின்னோக்கி இருக்க.. அவன் மெல்ல மெல்ல முன்னோக்கி நடந்தான்..ஒவ்வொரு கல்லறையிலும் இருந்து சில ஆத்மாக்கள் அவனை உற்றுப் பார்ப்பதை அவனால் உணரவும் முடிந்த மனநிலையில்தான் மீண்டும் மீண்டும் முன்னேறினான்.. மனது முழுக்க காயத்ரியின் மரண முகம்…..

“ஏன் செத்தா….?”-மூளை புரட்டியது… மனது…

“இங்க தான…..?” என்று பார்த்துக் கொண்டே சென்ற செங்கல் ஒரு கட்டத்தில்..யோசனையற்று … தூக்கி வாரிப் போட்டு நின்றான்… நேற்று தான் அமர்ந்திருந்த கல்லறையில்… இன்று வெண்ணிற ஆடையில்.. கூந்தல், இடுப்பு தாண்டி கல்லறையில் புரள.. அந்தப் பக்கம் பார்த்தது போல.. ஒரு பெண் உருவம்… உட்கார்ந்திருந்தது…. உடல் தானாக நடுங்கத் துவங்கியது…. காற்றின் வேகம்… அது ‘பேயேதான்’ என்று காதுக்குள் புது வித சத்தத்தோடு சீறிப் போனது.. காற்றில் அந்த உருவத்தின் கூந்தல்…… அவனைப் பார்த்து… ‘வா…… வா……’ என்று அழைப்பது போல.. பிளிற.. உடல் வேர்த்து… கால்கள்.. காந்தத்தில் ஒட்டிக் கொண்டது போல……அகல விரிந்த – விரிந்த கண்களோடு…. விக்கித்து நின்றான்…

“இது தேவையா……..?……செங்கல்லு……ஓடிடு…. ஓடிடு…… பேய்யப் பார்த்தா…. சட்டுன்னு நின்னு உன்னை சுத்தி கால் கட்டை விரலால ஒரு வட்டம் போட்டுக்கோ…அது ஒன்னும் பண்ணாது…” என்று பாட்டிக் கூறிய எந்த திட்டமும் வேலைக்கு ஆகவில்லை…பேய் அடித்தது என்பது இது தானோ என்பது போல.. பித்து பிடித்து நின்றான்… அது அந்தப் பக்கம் பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருந்தது…… ஒரு தியானத்தைப் போல… வேகமாய் ஓடி மூளை கொஞ்சம் கை கொடுத்தது…..” அது உன்னை பார்க்கவில்லை.. பேசாமல் ஓடி விடு…”

ஆனாலும்.. மனது கேள்விக்குள் அகப்பட்ட பதிலாய்…தடுமாறியது.. “ஓடிடுவோம்.. ஆனால் கேட்டு விட வேண்டும்……” என்று நம்பிக்கையை கொண்டு……கடவுளைத் துணைக்கழைக்க…….”ம்…….ஹும்…” என்று வாய் பிதுக்கி ஒளிந்து கொண்ட கடவுளை, துப்பி மௌனத்தில் திட்டி விட்டு… எல்லா தைரியத்தையும் ஒன்று சேர்த்தி…. ஒரு குவியலுக்குள் சுழன்ற பூமியை நிறுத்துவது போல…”கா….ய….த்ரிரீ…..'” என்று மெல்ல கூப்பிட்டான்…

ஒரு கனத்த மௌனத்துக்குப் பின் …….”ம்ம்ம்ம்ம்ம்….” என்றபடியே மெல்ல திரும்பியது…நேற்று இரவு புகைப்படத்தில் பார்த்த அதே முகம்….

*

“சரிடா… சரி…. நம்பறேன்….. நீ முதல்ல குடி… பயமெல்லாம் பஞ்சா பறந்துடும்…”- கருங்கல்லு நீட்டிய சரக்கை வாங்கி மடக் மடக்கென குடித்தான் செங்கல்… அவனின் உடல் நடுக்கம் மெல்ல குறைந்தது…. அவன் மனதுக்குள் திரும்ப திரும்ப காயத்ரியின் புகைப்படமும்.. சற்று முன் பார்த்த முகமும்… வந்து கொண்டேயிருந்தன… குப்பென தூக்கி விட்ட போதையில்… சற்று நிதானமடைந்தான்… தலையைக் கோதி விட்டுக் கொண்டான்….. முகத்தை லுங்கியால் துடைத்தான்.. வியர்வை வழிதலாக பிசிபிசுத்தது…

“அப்போ இத்தன நாளா பாட்டி சொன்னது… சரிதான்… மாப்ள…. இனி எவனாது பேய் இல்ல.. பூதம் இல்லன்னு சொல்லட்டும்.. அப்பறம் இருக்கு….. பேய் இருக்குடா.. இந்தா இந்த கண்ணால பார்த்தனே…அப்ப்பபா….. மோகினிடா.. என்ன……. அழகு…. நேத்து சொன்னன்ல… காயத்ரி…..கல்லறைல போட்டோ பதிச்சிருக்காங்கன்னு…….அதே மூஞ்சிடா… அதே புள்ள.. இப்போ கல்லறை மேல உக்கார்ந்துட்டு இருக்கு……இந்த கண்ணால பார்த்தன்டா….. பேய் இருக்கு மாப்ள…..” என்று இரண்டாவது சுற்றுக்கு போனான் செங்கல், பெரு மூச்சு விட்டுக் கொண்டே……

“பேய் தான்.. ஆனா அவ்ளோ அழகா இருக்காடா…… பேர கேட்டேன்… ஆனா…. ஏன் செத்தான்னு கேக்கலையே… அதுக்குள் பயந்து ஓடி வந்துட்டேன் மாப்ள…. பேய் என்ன நினைச்சிருக்கும்…?”-என்று மூன்றாவது சுற்றை முடித்தான் செங்கல்……

‘ஒரு சண்டியர்..இப்டி பயப்படலாம…’…. மூன்றாவது சுற்றிலேயே… தலை கவிழ்ந்தான் கருங்கல்..

“செங்கல்லு….. விடாத…. பேயோ… மனுஷியோ…. பொட்டச்சிய பார்த்து பயந்தா… நாளைக்கு ஊரு என்ன சொல்லும்…… போ.. போய் என்ன ஏதுன்னு விசாரிச்சிட்டு வந்துரு.. நாங்க இருக்கோம்…” என்று குதிரைப் படை வீரர்கள்….. அவனை சுற்றி நிற்க,…..கடவுள் வானத் திரையைக் கிழித்துக் கொண்டு.. நாடகம் பார்ப்பவர் போல் பார்த்துக் கொண்டிருந்தார்……

‘என்ன பார்வை….. வெங்காயம் மாதிரி…ஒன்னு உட்டேன்னு வைய்யு………. ஓடி போய்டு.. துரோகி…… ஒரு உதவி பண்ண முடியல……இப்போ வந்து எட்டிப் பார்த்துகிட்டு…’ என்று முணங்கிக் கொண்டே.. மீண்டும்….. சுடுகாட்டை நோக்கி நடையைப் போட்டான்…”துணிவே துணை…” ஆழ் மனம் வெற்றி நடை போட்டது…

வேகமாய் வேக வேகமாய் ஓடி அந்தக் கல்லறை அருகே சென்றான்.. அங்கே யாரும் இல்லை….. சுற்றும் முற்றும் பார்த்தான்…கல்லறை மீது தூவப்பட்ட ரோஜா இதழ்கள்.. தென்றலோடு புரண்டு கொண்டிருக்க…அங்கே… பூந்தோட்டம் வாசம் முளைத்துக் கிடந்தது…

கல்லறையை உற்றுப் பார்த்தான்…… சரி… ஆனது ஆகட்டும்..என்ற தைரியத்தில்….” காயத்தி…ர்ர்ரி……. ஏமா.. காயத்திரி… அலோ… மோகினி.. காயத்ரி.. கொஞ்சம் வா.. பேசணும்…..” என்றான்.. அவன் கண்கள் காற்றுக்குள் தேடின…மீண்டும் கல்லறையில் ஏறி அமர்ந்து கொண்டான்.. அத்தனை வெயிலிலும் கல்லறை குளிர்ந்தது……..”என்ன பேய் போய்ட்ட… வா……. ஆலோ பேய்… கொஞ்சம் வா…” என்று மீண்டும் மீண்டும்…கூப்பிட்டான்…

“ம்ம்……ம்ம்……….ம்…….” என்று தலை மேட்டுப் பக்கம் இருந்து சத்தம் வர…..கல்லறையில் இருந்து தெறித்து குதித்து நின்றான்…… மீண்டும்.. உடல் சமநிலையை தவற விட்டது. வேக வேகமாய் ட்ரவுசர் பாக்கெட்டில் இருந்து சரக்கை எடுத்து வேக வேகமாய் குடித்தான்… முழுக்க போதையில்.. பயம் பேயானது….சொல்லி வைத்தாற் போல காற்று…..அணத்திக் கொண்டு வந்தது…..

‘வா….. வா……. எல்லா பேய்ங்களும் வாங்க… ஒரு கேள்வி கேக்க போறேன்…காயத்ரி.. முன்னால் வா…” என்று தள்ளாடியபடியே கூவினான்..

“என்ன வேணும்.. யார் நீ……”-அடித்தொண்டையில் அணத்தியது அந்த உருவம்…

கண்களை நன்றாக தேய்த்துக்…..கொண்டே, கல்லறையில் பதிந்திருந்த புகைப்படத்தையும் அதன் பின்னால்…இடுப்பு வரை மறைந்து கல்லறை தலை மேட்டில் முளைத்தது போல நின்ற உருவத்தையும் மாற்றி மாற்றிப் பார்த்தான்..

“ஒரே முகம்…அவளே தான்…”

“என்ன…. வேணும்ம்ம்ம்ம்ம்ம்ம்”………. மீண்டும் கரகரத்தது குரல்…வெயில் இன்னும் வேகமாய் வீசிக் கொண்டிருந்தது…

எந்த வார்த்தையை முதலில் ஆரம்பிக்கலாம் என்று யோசித்ததில் மொழி திக்கியது… விழி விக்கியது…. தட்டுத் தாடுமாறி வாக்கியத்தை செய்து விட்டது.. நா…

“நீ… நி….செத்து போவன தா…ன.. ..பேய்….தா…ன…… எதுக்கு….செத்த… அழகாதான இருக்க… உன்னப் பாக்கவே நல்லா இருக்கு… ஆனா ஏன் செத்த…?” நிறைய பேச வேண்டும் போல இருக்கும் நேரத்தில் வார்த்தைகளற்று….. தடுமாறும் அதே புள்ளியை… போதை செய்தான் செங்கல்..

உருவம் இமைக்காமல் அவனையே பார்த்தது…

“சொல்லுங்.. காயத்…ரி… எதுக் செத்தீங்… எப்டி செதீங்…..?”-என்று கேட்டவன் தொடர்ந்து,… “நீ பேய் தான…?” என்று தன் ஆழ் மூளைக்குள் இருக்கும் பேய் பயத்தை அவ்வப்போது வார்த்தை கொண்டு சமன் படுத்திக் கொண்டான்..

“நான் பேயா…..ன்னு எனக்கு தெரியாது…ஆனா…. செத்தவ… நீ இங்கெல்லாம் வரக் கூடாது போய்டு…”-என்றது உருவம்…

அவன் இமைக்க மறந்து பார்த்துக் கொண்டே இருந்தான்.. பூ உதிர்வது போல சொற்கள் அவள் வாயில் இருந்து விழுந்ததும்… அதை வெற்றிட மொழி வார்த்தை ஆக்கியதும்… காற்றில் காதோடு ஆடும் கம்மலும்….கழுத்தோரமிருக்கும் பூனை முடிகள் சூரிய ஒளியில் மினுங்கிக் கொண்டே பட படப்பதும்… அப்பப்பா…. எவ்ளோ அழகா இருக்கா… ஆனா செத்து போய்ட்டாளே..”- மனதுக்குள் வந்த அத்தனை உணர்வுகளையும் ஒன்றாக்கி…..”ஏன் செத்தன்னு சொல்லு…….?….. அப்போதான் போவேன்…!” என்றான்.. ஒரு குழந்தையின் ஆரஞ்சு மிட்டாய் அழுகையைப் போல..

அது பேசிய பிறகு கொஞ்சம் பயம் விட்டுப் போனது போல தோன்றியது…கல்லறை மேல் ஏறி அமர்ந்து கொண்டான்…அடித்த சரக்கு வேலையைக் காட்டிக் கொண்டிருக்க.. அவனையும் அறியாமல் அவன் தலை அவ்வப்போது கவிழ்ந்து கொண்டேயிருந்தது….. சொருகும் கண்களை அகலமாக்கி பார்த்துக் கொண்டே… அவளை நிமிர்ந்து பார்த்து மெல்ல சிரித்தான்…

“சொல்லு… ஏன் செத்த.. எதுக்கு செத்த…..?”- மீண்டும் தலை கவிழ்ந்தது தானாக…

பார்த்துக் கொண்டே நின்ற சிற்பம் பேசியது போல……”நான் எதுக்கு செத்தேன்னு தெரியனும்.. அவ்ளோ தானே……”-அது… கைகளைக் கட்டிக் கொண்டு ஒரு டீச்சரைப் போல பேசியது….’கண்கள் சிமிட்டா நிலை…. ஜென்….’ கத்திப் போன காற்றுக்கு…

அவன் தலையை மட்டும் ஆட்டிக் கொண்டே இருந்தான்…..

“சரி சொல்றேன்… லவ் பெயிலியர்… காதல் தோல்வி…”என்று சொல்லி, அவனையே பார்த்தது…

“அதுக்கு ஏன் மேஜர் சுந்தர்ராசன் மாதிரி பேசற… “என்று வார்த்தைகளைக் கோர்த்தவன் அவனாகவே சிரித்துக் கொண்டு…..” காதல் தோல்விக்கு எல்லாம் யாராவது சாவாங்களா…. என்ன புள்ளைப்பா நீ…” என்றான்… தலையை நிமிர்த்தி… தெளிவாக பேசிய ஒரு பெரிய மனித தோரணையில்…

*

தலை லேசாக வலித்தது… தண்ணீர் தாகம் வேறு…தொண்டையை… உருளச் செய்தது… மெல்ல கண்களை வலிக்க பிரித்தான்… இருட்ட தொடங்கியிருந்தது நேரம்…

“எங்க இருக்கேன்….?….ஐயோ சுடுகாடு!…..ஐயோ கல்லறை மேல படுத்திருக்கேன்……”- கத்திக் கொண்டே சடசடவென எழுந்தான்…. கண்ணில் கல்லறையில் பதிந்திருந்த புகைப்படம் மட்டுமே தெரிந்தது… அந்த உருவத்தைக் காணவில்லை….சுற்றும் முற்றும் ஒரு முறைப் பார்த்துக் கொண்டான்… ஏனோ காயத்ரி என்று மீண்டும் கூப்பிட தோன்றவில்லை… மாலை அந்த உருவத்தோடு பேசியது கொஞ்சம் கொஞ்சம் நினைவுக்கு வர,,, ஒரு வித வெறுமை பயம் மனதுக்குள் பரவத் தொடங்கியிது… வேக வேகமாய் திரும்பி பார்க்காமல் வீட்டை நோக்கி நடந்தான்….”ஏன் செத்துப் போனா…..? காதல் தோல்வி….! இதுக்கெல்லாமா சாவாங்க…?!… அது என்ன அவ்ளோ பெரிய விஷயமா…..”- மனம் புலம்பத் துவங்கியிருந்தது…..”இப்டி அல்ப ஆயுசுல போய்ட்டாளே…..”- மனம் காரணம் தேடியது…”பாதில சாகறவன் ஆவியா சுத்துவாங்கறது சரிதான் போல..”- மெல்ல திரும்பிப் பார்த்துக் கொண்டான்.. இருட்டு விரட்டியது போல….. இருக்க இன்னும் வேகம் கூட்டினான்… பகலின் மிச்சம் காற்றில் கலந்திருந்தது.. உடம்பு கொதிக்கத் தொடங்கியிருக்க… உள்ளம் குதிக்கத் தொடங்கியிருந்தது….

“எவ்ளோ அமைதியான முகம்…” நினைவுக்கு திரும்ப திரும்ப கொண்டு வந்தான். தேவையில்லாமல் உடம்பு வேர்த்தது…அவன் கயிற்றுக் கட்டிலில் வானம் பார்த்து படுத்துக் கிடந்தான்…

“காதல் தோல்வி.. என்னை ஒருத்தன் காதலிச்சு ஏமாத்திட்டான்.. அதான் தூக்கு போட்டுகிட்டேன்….”- திரும்ப திரும்ப ஒலித்தது காயத்ரியின் தேனிசைக் குரல்..

“காதலிச்சு ஏமாத்திட்டா செத்து போகனுமா…. ஏம் பாட்டி….? என்ன புள்ள அது….?”-பாட்டியின் மடியில்.. படுத்துக் கொண்டே நிலவையும் பாட்டியையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டே கேட்டான் செங்கல்..

தலையைக் கோதியபடியே…” காதலுக்காக சாகறது இல்ல செங்கல்லு.. அது வீராப்புக்கு…. புரிய வைக்கறதுக்கு……. ஆனா… செத்து போறதுல ஒண்ணுமே இல்ல…சேராட்டியும்…நினைச்சுகிட்டே வாழ்றதுலதான் காதல் இருக்கு…” என்றது பாட்டி, வெற்றிடம் வெறித்து……

தூக்கம் வரவில்லை.. புரண்டு படுத்தான்… மனம் அலைந்தது….. ஏதோ ஒரு விடைக்கான கேள்வியைத் துரத்தியது…”காதல்.. நல்லா இருக்கு.. ஆனா ஏன் சாக வைக்குது….” பாட்டியின் பதிலும்..அவனின் மௌனமும்… அந்த இரவை ஒரு வித நிசப்தத்துக்குள் நீட்டித்துக் கொண்டது…

பின்னிரவு… அவனை விடாமல் துரத்த… சரி என்பது போல எழுந்து மீண்டும் கல்லறை நோக்கி நடந்தான்… பயம் இல்லாமல் சுடுகாட்டுக்குள் ஒரு பேயைப் போல அலைந்தான்.. காயத்ரியின் குளிர்ந்த கல்லறை மீது கொதிக்கும் மனதோடு.. உட்கார்ந்து கொண்டான்…..

“வா.. காயத்ரி.. உங்கிட்ட பேசனும் போல இருக்கு.. வா….” என்றான்…. அவன் மனது.. பூஞ்சோலை திறந்து விட்டது போல.. உணர்ந்தது…. சுடுகாட்டு… தீர்க்கம் மெல்லக் கரைவதை உணர முடிந்தது.. முன்னால் விரவி கிடந்த இரவு.. அவனின் செயலைக் கண்டு அதிர்ந்தது…..

கடவுள், “கிறுக்கு பய….. என்ன பண்றானே தெரியாது”… என்று புலம்பிக் கொண்டே..கன்னத்தில் கை வைத்துக் கொண்டு தூங்கி வழிந்தார்..

பனித்துளிகள்… மரத்தின் பூக்கள்…, என்று அதிகாலை குளுமை அவன் மீது போர்த்திக் கிடக்க….. குளிரில் நடுங்கிக் கொண்டே படுத்திருந்தவனை… ‘இங்க என்ன பண்ற’- என்று கேட்டுக் கொண்டே சிரித்தது, காயத்…..ரியேதான்… பேய் சிரிப்பு…. சுடுகாடே அதிர்ந்தது… அருகே ஓடிக் கொண்டிருந்த நீலநதி… கணம் ஒற்றில் நின்று கொப்பளித்து மீண்டும்.. ஓடியது…

சிரிப்பு சத்தம்.. வந்ததும்… சட்டென விழித்தவன்…..” காயத்ரி வந்துட்டியா”-என்று இயல்பாக எழுந்தபடியே லுங்கியை கீழ இறக்கிக் கொண்டு காலை தொங்கப் போட்டுக் கொண்டு அமர்ந்தான்…

“ஏன் இப்டி சிரிக்கற…..” என்றான்.. கழுத்தை மெல்ல திருப்பி….நலம் விசாரிப்பவன் போல…

“ஏன் பயமா இருக்கா….”என்றாள் காயத்ரி…

“பயந்தா நைட்டெல்லாம் உன் கல்லறை மேல படுத்து தூங்க முடியுமா…?….ஆமா.. நைட் என்ன செம தூக்கமா…!…. எவ்ளோ நேரம் எழுப்பினேன்.. ம்ஹும்… அதான் நானும் அப்டியே கண் அசந்துட்டேன்…எப்டியும் காலைல வருவேன்னு நம்பினேன்… வந்துட்ட…”என்றவன்.. அவள் முகத்தை உற்றுப் பார்த்தான்…”பேய் என்பது சரியாதான் இருக்கு.. எப்பவும்..பள பளன்னு இருக்கா.” சுட்டி மனம் குட்டிக் கரணம் போட்டது…

என்ன சொல்வதென்றே தெரியாமல்……”ஆமா… தூக்கம்தான்…என்றவள்…..”ஆமா சரக்கடிக்காமலே பயமெல்லாம் போயிடுச்சா……” என்றாள்.. நக்கலாக..

அப்போதுதான் நினைவுக்கு வந்தது….. நேற்று சரக்கே அடிக்காமல் இங்கு வந்தது…கல்லறை மீது படுத்து உறங்கியது..அவனுக்கே வினோதமாகப் பட்டது…

அவன் யோசனையை கலைத்தபடியே வந்து மோதியது அவள் வார்த்தைகள்..”உனக்கு என்ன வேணும்.. ஏன் இங்கயே சுத்திட்டு இருக்க.. இங்கெல்லாம் வரக் கூடாது…. மோசமான இடம்… போய்டு…. போய்டு..” என்றாள்,தீர்க்கமாக..

“எனக்கு… ஒரு வேளை பேய் புடிச்சுகிச்சோ….என்னவோ..?” என்று அவளைப் பார்த்து… மெல்லிய ஓர சிரிப்பை உதிர்த்தபடியே கூறி விட்டு…… நாக்கை நீட்டி…’ஊலல்லல்லல்லல்லா……என்று சொல்லி ‘சும்மா’ என்றான்…..

‘போடா மொக்கை’ என்பது போல ஒரு பார்வையைப் பார்த்தபடி……” ஆமா…… உன் பேர் என்ன……? என்று கேட்டாள்….

“செங்…கல்லு..” என்று கொஞ்சம் கூட சங்கடமே படாமல் அவன் கூறிய விதம்….. அவளை பாவமாக பார்க்க வைத்தது..

“இப்டி ஒரு பேரா…?!”-அவள் புருவம் தூக்கி.. ஆச்சரியத்தில்… விரிந்தாள்…

“இதுக்கே இப்டினா… எங்க ஊர்ல.. கருங்கல்லு, முட்டைக்கோசு, மண்டையன், லக்கி, செங்கான், கருவாயன், கொனகாலன், கொயாதொப்பு, பிடாரி, மூஞ்சுக்காரன்…. இந்த மாதிரி நிறைய இருக்கு…” என்றான்..ஏதோ தன் ஊர் பெருமையை கூறுபவன் போல…

அவள் நிஜமாகவே சிரித்து விட்டாள்… சற்று முன் அவனை பயப்படுத்த அவள் சிரித்த சிரிப்பு இல்லை… என்பதை அந்த சுடுகாடு உணர்ந்தே இருந்தது…

பரஸ்பரம் நட்பில் இருவருமே சிரிக்கத் தொடங்கினார்கள்……

*

பாட்டி மந்திரித்து கட்டி விட்டது..

செங்கல்லுக்கு பைத்தியம். தனியா பேசறான்…எப்பப்பாரு சுடுகாடே கதின்னு கிடக்கறான்…. பூ வாங்கிட்டு போறான்… அப்புறம் திருட்ட விட்டுடான்யா…பீடி சுத்தமா இல்ல…குடிகூட அப்பப்போதான்… மழுங்க செரைச்சுக்கறான்….ஹிப்பி விட்டுக்கறான்… அட செருப்பு போட்டு நடக்கறான்பா…

ஊரே பேசியது..

“இந்த கூத்த என்னனு பாக்க…..” கண்ணைக் கட்டிக்கொண்டு கடவுள் கதறினார்….

*

வராத தூக்கத்தை எப்பவும் போல எதிர் வீட்டுத் திண்ணையில் விரித்தான்… அதே நிலவு.. ஜன்னலுக்குள் இருந்து அதே முணங்கல் சத்தம்… இளமையின் தீ கொழுந்து விட்டு எரிந்ததை உணர்ந்தான்….மெல்ல எழுந்து தன் வீட்டுக்குள் சென்று படுத்துக் கொண்டான்……

விடியலில்,”என்ன மாமா.. இப்ப என்ன….ருக்குமணி வீட்டுக்காரரு…போன வருஷம் ஆத்தோட போயிட்டாரு… அது அவர் விதி… அதுக்கு இந்த புள்ளைய இந்த சின்ன வயசுல இப்டியே விட்றதா… வேற ஒரு கல்யாணம் பண்ணி வைக்கனும்னு தோணவே இல்லையா…? யோசிங்க மாமா…”

“மீசைக்காரரே… அப்டியே நீங்களும் மஞ்சுளாவ ஒருத்தன் கையில் புடிச்சு குடுங்க.. அதுக்கும் வயசாகுதில்ல..” என்றான்… எதிர் வீட்டுத் திண்ணையில் அவர்களோடு அமர்ந்து கொண்டு……

அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே ஜோடியாக தண்ணீர் குடம் தூக்கிக் கொண்டு வந்த ருக்குமணியும் மஞ்சுளாவும்.. அர்த்தத்தோடு அவனைப் பார்க்க.. அவன்.. திறந்திருந்த சன்னலை மெல்ல அடைத்தபடியே எழுந்து சென்றான்….

மாமாவும்.. மீசைக்காரரும்….”செங்கல்லு… என்னப்பா இவ்ளோ பொறுப்பா மாறிட்டான்” என்று பேசிக் கொண்டே.. “அவன் சொல்றதும் சரிதானப்பா…” என்று தொடர்ந்து பேச…… கடவுள் எட்டிப் பார்த்து….”மெல்ல புன்னகைத்தபடியே அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார்….” எல்லாம் கா….ய….த்…..ரி மந்திரம்” என்று முணங்கவும் செய்தார்….மனதுக்குள் நீல நதி மெல்ல ஓடுவதைப் போல உணர்ந்த செங்கல்…. வெற்றிடமெல்லாம் காயத்ரியை நினைவு கொண்டு வரைந்தான்…இரண்டு மாதங்களாக அவர்களின் நட்பு இறுகிப் போனதில்… அவன் பித்து பிடித்தவன் போலதான் இருந்தான்.. அதைத்தான் அவனும் விரும்பினான்…..

*

“இவ்ளோ நேரமா…. ?”- அவன் கோபித்துக் கொண்டான்..

அவள் நெற்றி சுருக்கி மன்னிப்பு கேட்டாள்…

இருவரும் பேசிக் கொண்டே இருந்தார்கள்….. சிரித்துக் கொண்டார்கள்…

“உன் கூட பேசிட்டு இருந்தா….. அப்டியே மிதக்கற மாதிரி இருக்கு…”

“ஐன்ஸ்டீன் தியரி அது…”

“அப்டினா……….”..

“ம்ம்ம்… சும்மா….”- என்றவள் உதடு சுழித்து சிரிக்க…… சொல்லி வைத்தாற் போல காற்றும்… பூக்களும் அவர்கள் மேல் விழுந்தது…ஒன்றாக கலந்து…

“ஆமா….. செத்தப்றம் எப்டி இருக்கும்…?”

“ம்ம்ம்… அது பெருசா ஒரு மாற்றமும் இருக்காது….இதே உலகத்துலதான எங்க உலகமும் இயங்கிட்டு இருக்கு… சோ… ஒன்னும் பெரிய வித்தியாசம் தெரியாது… நீங்க காசு குடுத்து படம் பாப்பீங்க… நாங்க சும்மாவே பாப்போம்… அவ்ளோதான்…”

“அப்போ உங்க உலகத்துல பணம் இல்லையா…?”

“பணம் இல்ல.. பட்டினி இல்ல…பங்களா இல்ல…. குடிசை இல்ல… முக்கியமா மரணம் இல்ல…. அது இலக்கில்லாத ஒரு பயணம்… மனுஷங்க கூடவே பயணிக்கிறதுல சில நேரம் செத்துட்டோம்ங்றதே மறந்துடும்……எம் பக்கத்துல இன்னும் எத்தன பேர் நம்மள முறைச்சு பாத்துட்டே போறாங்க தெரியுமா… நான் இருக்கவும்… உன்ன ஒன்னும் பண்ணாம போறாங்க…”

“அய்யோ… எங்க……… நான் பாக்கறேன்….” என்று பயப்படுவது போல பாவனை செய்தான்…

சிரிக்க சிரிக்க பேசும் ஒரு மணியில்… சிரிக்காமல் கேட்டு விட்டான்…

“காயத்ரி என்னை கல்யாணம் பண்ணிக்கறயா…?”

அவள் சிரிப்பு….. சட்டென இணுங்கிக் கொண்டு பிரியும் இலை போல.. சப்தமின்றி அசைந்தது…..

அவனை கண்களோடு சேர்த்துப் பார்த்து…”என்ன விளையாடறியா….?”என்றாள்…. திடும்மென ஒரு வித புழுக்கம் அங்கே பொங்கத் துவங்கியது..

“இல்ல காயத்ரி.. நிஜமா தான்…”என்றான்…. அவனும் கண்களை நேருக்கு நேர் பார்த்தான்.. காதலின் வலிமை.. காற்றுக்கும் உண்டு போல.. அவர்களை சுற்றி சுழன்று…. சரி என்றது..

கனத்த மௌனம் அந்த சுடுகாட்டை… நிலை கொள்ளாமல்.. மீளும் கீழும்.. அசைப்பதாக தோன்றியது கடவுளுக்கு…’என்னதான் நடக்கும்’ என்ற அவரின் ஆர்வம் ஒரு சிறுபிள்ளையின் கோழி குண்டு விளையாட்டைப் போல… உருண்டது…

‘போடா கிறுக்கா….”-மௌனம் கலைத்தவள் வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்..

வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தவன் அவளை அழுத்தமாக பார்த்து…..”இல்ல…. எனக்கு நீ வேணும்…”என்றான்…. அது காதலின் ஆழம்…

“ஏற்கனவே இதே காதல் கருமாந்திரம்னுதான் செத்து இப்டி அலையறேன்.. மறுபடியுமா….. அதுமில்லாம என் உலகம் வேற.. உன் உலகம் வேற.. இது முட்டாள்த்தனமா இருக்கு…”-அவள்… கத்திப் பேசினாள்… அவள் முடி பேயாட்டம் ஆடியது… காற்றுக்கு வேலி போல…

அவன் திருடு போனவன் போல……பார்த்துக் கொண்டிருந்தான்…

பக்கத்து கல்லறை ஆவிகள்… கண நேரம் ஸ்தம்பித்து பின் திரும்பிக் கொண்டார்கள்…”அரைக் கிறுக்கன்…” என்ற முணங்கல் கல்லறைகள் முழுக்க அடுத்தடுத்து தொடர்வண்டி போல.. எதிரொலித்தன……

பக்கத்தில் இருந்த மரத்தில் அமர்ந்திருந்த கடவுள்…தலையில் கை வைத்துக் கொண்டு….”பக்கத்துல ஒரு குழி தோண்டிட வேண்டியதுதான்….” என்று முணங்கினார்…

ஆங்கங்கே வட்டமடித்துக் கொண்டிருந்த காக்கைகள்…..”போங்கடா.. நீங்களும் உங்க காதலும்” என்று பயந்து கொண்டே சிறகடித்தன போல…..

“உலர்றேனா…. நானா… நான் உன்னை உண்மையா காதலிக்கறேன் காயத்ரி…… உன்ன பிரிஞ்சு என்னால் வாழ முடியாது… நீ இல்லாதப்போ செத்தற்லான்னு தோணுது…”-அவன் கண்கள் கலங்கினான்…

“………………………………………………..!”

“என்னை நிறைய மாத்திருக்க….. உடம்பு சேரதுக்கு கல்யாணம் வேண்டாம்.. மனசு சேரதுக்குதான் கல்யாணம்… எனக்கு தெரியும்…..நீ ஆத்மா…. நான் மனுஷன்.. ஆனா… மனசால கல்யாணம் பண்ணிக்றதுல என்ன தடங்கல் இருக்கு.. உனக்கு என்ன பிடிக்கும் தான?”-அவன் பாசத்துக்கு ஏங்கிய நாய்க்குட்டியாக பார்த்தான்…

“அயோ.. செங்கல்லு…. பிடிக்குன்டா… ஆனா.. உன் வாழ்க்கை கெட்டுப் போய்டும்… இனி இங்க வராத..இது வாழ்க்கை முடியற இடம்.. இங்க வாழ்கையை தொடங்க நினைக்காத…”-காயத்ரியின் புகை மனம்… தடுமாறியது…”தப்பு பண்ணி விட்டோம்…. இவனோடு பழகியிருக்கவே கூடாது” என்று அவளையே நொந்து கொண்டாள்… “எப்படி புரிய வைப்பது…..”என்று புரியாமல்…. தவித்தாள்…

“நீ தான் என்கூட வர முடியாது….. நான் உன்கூட வரலாம்ல…..”-விபரீத சொற்களை வீசினான்…

“லூசு……லூசு… பைத்தியகாரா…… இனி என் கண்ணு முன்னால வராத… நான் உனக்கு இனி தெரிய மாட்டேன்… போய் பொலப்ப பாரு…. படம் பாத்து கெட்டுப் போயிருக்கடா….மரணம் தீர்வில்லன்னு நான் புரிஞ்சுகிட்டேன்…சொன்னா கேளு… செங்கல்… உனக்கு வேற வாழ்க்கை இருக்கு… இனி இங்க வராத…”-அவள்… தீர்க்கமாக… ஆனால்… தவிப்போடு… கூறி கொண்டே… பின்னால் இருந்த மரத்துக்கு பின்னால் மாயமானாள்..

காற்று பலம் கொண்டு வீசியது…. உலகம் திசை மாறி சுற்றுவது போல அப்படி ஒரு வலியை அவன் மூளைக்குள் உணர்ந்தான்…நிமிர்ந்து பார்த்து அவளைக் காணவில்லை என்பதை உறுதி செய்த உணர்ந்த நொடிக்குள் அவன் ஒரு சூனியமாகி இருந்தான்…..

6 மாதங்களுக்கு பின்
—————————————

நியந்தா… கல்லறைத் தோட்டத்துக்குள் நடந்து போக.. தூரத்தில் தெரிந்த காயத்ரி கல்லறை மீது செங்கல் அமர்ந்திருப்பதை பார்த்து விட்டாள்….”அவன் இன்னமும் காத்துக் கொண்டிருக்கிறானா…” என்று தடுமாறி, யோசித்து… “வேண்டாம்…. அப்றம் போலாம்…” என்று மனதுக்குள் நினைத்தபடியே… மீண்டும் வீட்டை நோக்கித் திரும்ப யத்தனிக்க…. கூட வந்த… விஜி….”ஏன்டி….. திரும்பறோம்” என்று கேட்டாள்…. ஒன்றும் புரியாமல்……

“இல்ல விஜி.. மனசு சரி இல்ல… அப்றமா வரலாம்.. வா…” என்று வீட்டை நோக்கி தலையை குனிந்தபடி செங்கல்லை நினைத்துக் கொண்டே வேகமாக நடந்தாள்…

ஏதோ நினைவு வந்தவள் போல…”நியந்தா ஒன்னு சொல்ல மறந்திட்டேன்…… நீ சென்னைக்கு போன இந்த ஆறு மாசத்துல இங்க ஒரு மேட்டர் நடந்து போச்சுடி.. காயத்ரி கல்லறையில பக்கத்தூர்க்காரன்… ஒருத்தன்… கை நரம்ப பிளேடால அறுத்துகிட்டு சூசைட் பண்ணிக்கிட்டாண்டி.. ஏன் கல்லறையில வந்து செத்துப் போனான்னு இதுவரைக்கும் தெர்ல…இப்போ கல்லறைய பாக்கவும்தான் ஞாபகம் வந்துச்சு…” என்று விஜி சொல்ல சொல்லவே…. திக்…….. என்று தூக்கி வாரிப் போட்டது…

நின்று சுற்றிய பூமியை… கண்கள் கலங்க.. பார்த்தாள்.. “என்னடி சொல்ற… அவன் செத்துப் போயிட்டானா…?!” என்று கேட்டு ஒரு வகை பிரமைக்குள் நுழைவதைப் போல சுற்றும் முற்றும் பார்த்தாள்….. சற்று முன் கல்லறை மீது அவன் அமர்ந்திருந்த காட்சி… தெளிவாக மனக் கண் முன் வந்தது…… அப்டினா… அப்டினா…

“அயோ.. அயோ……அப்டினா… அயோ கடவுளே……. நான் விளையாட்டுக்குதான அப்டி பண்ணினேன்… ஏதோ சும்மா சொல்றான்னுதான நினைச்சேன்…. இனி வராம இருந்தா சரி ஆகிடுவான்னுதான நினைச்சேன்… இப்டி பண்ணுவான்னு தெரியலையே… செத்தே போயிட்டானா……..?”- அவள் முணங்கிக் கொண்டே ஒரு பைத்தியக்காரியைப் போல கத்திக் கொண்டு, திரும்பவும்…கல்லறை நோக்கி ஓடினாள்.. ஒன்றும் புரியாமல் பின்னாலயே கத்திக் கொண்டு விஜியும் ஓடினாள்…..

“அப்டீனா..கல்லறை மேல உக்காந்திட்டிருக்கறது….?-அவள்.. திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டே… தடுமாறி… விழுந்து.. எழுந்து…. புலம்பி… அழுது….அரட்டி… கத்திக் கொண்டே ….ஓடி..ஓடி….. கல்லறையை நெருங்க நெருங்க……செங்கல்லு சிரிக்க சிரிக்க பேசிக் கொண்டிருந்ததது நன்றாக தெரிந்தது……கேட்டது…….

சட்டென்று நின்று உற்றுப் பார்த்தாள்…கண்கள் விரிய அவன் யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறான் என்று பார்த்தவள் கண்களில்…. அவன் பக்கத்தில், சரிந்த கூந்தலோடு நின்று சிரிக்க சிரிக்கப் பேசிக் கொண்டிருந்தது, கண்ணாடியில் தன்னையே பார்த்தது போல தெரிந்த… தன்னோடு இரட்டைப் பிறவியாய் பிறந்து காதல் தோல்விக்காக செத்துப் போன தன் அக்கா…காயத்ரி……

கண்ணீரை துடைத்துக் கொண்டே… அடுத்த வேலையைப் பார்க்க போனார் கடவுள்….வழக்கம் போல.. பேய்க் காற்று சுடுகாட்டை நிறைத்தது…

Print Friendly, PDF & Email

1 thought on “கடவுளும்… கா….ய….த்…..ரி…. யும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *