இது போச்சு… அது வந்தது… டிரம்..டிரம்..டிரம்!

 

நாடோடிக்கதை வரிசை-19: மணிப்பூர்

அந்தப் பெண்ணுக்கு ஒரே மகன்தான். பிறர் வீடுகளில் பாத்திரம் தேய்த்து வாழ்க்கை நடத்தி வந்தாள். ஒருமுறை ஒரு வீட்டில் தானியம் அரைத்துக் கொடுத்தாள். பதிலுக்கு அவளுக்குக் கொஞ்சம் தானியம் கிடைத்தது. அதை விற்பதற்காக சந்தைக்குப் புறப்பட்டாள். ‘‘மகனே, உனக்கு என்ன வேண்டும்?’’ என்று கேட்டாள். ‘‘ஒரு டிரம் வாங்கிட்டு வா’’ என்றான் பையன்.

சந்தையில் தானியங்களை விற்றாள். சமையலுக்குத் தேவையான பொருட்களை வாங்கினாள். காசு பூராவும் தீர்ந்துவிட்டது. வரும்போது வழியில் கிடந்த மரத்துண்டு ஒன்றை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தாள். அதைப் பையனிடம் கொடுத்தாள். அவன் சந்தோஷமாக அதை எடுத்துக்கொண்டு விளையாடப் போனான். வழியில் ஒரு பாட்டி அடுப்பு சரியாக எரியாமல் கஷ்டப் பட்டுக்கொண்டு இருந்தாள். ‘‘பாட்டி, இந்த விறகை எடுத்துக்கொள்’’ என்றான் பையன். பதிலுக்கு பையனுக்கு ஒரு ரொட்டியைக் கொடுத்தாள் பாட்டி.

பானை செய்பவர் வீட்டில் ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது. எட்டிப் பார்த்தான். ‘‘பாப்பா ஏன் அழுவுது?’’ என்று கேட்டான். ‘‘பாப்பா பசியில அழுவுது’’ என்றார் பானைக்காரர். தன் கையில் இருந்த ரொட்டியைக் கொடுத்தான். அதை சாப்பிட்ட குழந்தை அழுகையை நிறுத்தியது. பையனுக்கு ஒரு பானையை எடுத்துக் கொடுத்தார் பானைக்காரர்.

பானையோடு ஆற்றை நோக்கி நடந்தான் பையன். அங்கே சலவைத் தொழிலாளர் ஒருவர், தன் மனைவியைத் திட்டிக்கொண்டு இருந்தார். ‘‘ஏன் அக்காவைத் திட்டுறீங்க?’’ என்றான் பையன்.

‘‘எங்க கிட்ட ஒரு பானைதான் இருந்துச்சு. அதை இவ உடைச்சுட்டா’’ என்றார் சலவை செய்பவர்.

‘‘இதோ என் பானையை வெச்சுக்குங்க’’ என்று கொடுத்தான் பையன். நன்றி சொன்ன அவர், ஒரு அங்கியை எடுத்து அவனுக்குக் கொடுத்தார்.

சிறிது தூரம்தான் நடந்திருப்பான். ஒருவர் குளிரில் நடுங்கிக்கொண்டு நின்றிருந்தார். ‘‘என்ன அண்ணா ஆச்சு?’’ என்று விசாரித்தான் பையன்.

பக்கத்தில் நின்றிருந்த குதிரையைக் காட்டி, ‘‘இதுல வந்துட்டிருந்தேன். ரெண்டு திருடங்க வழி மறிச்சு என்கிட்ட இருந்த எல்லாத் தையும் பிடுங்கிக் கிட்டாங்க. என் சட்டையைக்கூட விட்டு வைக்கலை’’ என்றார் அவர்.

‘‘அச்சச்சோ’’ என்ற பையன் தன்னிடம் இருந்த சட்டையை அவருக்குக் கொடுத்தான். ‘‘ரொம்ப நன்றி தம்பி, இந்தா இந்தக் குதிரையை நீ வெச்சுக்க’’ என்று குதிரையைக் கொடுத்துவிட்டார்.

வாங்கிக்கொண்டவன் அதன் மேல் ஏறிப் போனான். வழியில் ஒரு கோயில் வாசலில் ஒரு கல்யாண கோஷ்டி நின்றுகொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் முகம் சந்தோஷமாக இல்லை.

குதிரையில் இருந்து இறங்கி காரணம் விசாரித்தான் பையன். ‘‘மாப்பிள்ளை ஊர்வலத்துக்குச் சொல்லிவெச்சிருந்த குதிரை இன்னும் வரலை. நல்ல நேரம் போயிட்டிருக்கு. மாப்பிள்ளை நடந்து வரமுடியுமா?’’ என்றார் பெண்ணின் தந்தை.

‘‘இதோ இந்தக் குதிரையை வெச்சு ஊர்வலத்தை நடத்துங்க’’ என்று குதிரையைக் கொடுத்தான்.

‘‘இதுக்கு பதிலா நான் உனக்கு என்னப்பா தர்றது?’’ என்று கேட்டான் மாப்பிள்ளை. ‘‘நீங்க எனக்கு ஏதாவது தரணும்னு நினைச்சா கல்யாணத்துக்கு பேண்ட் கச்சேரி வாசிக்கிறாங்களே, அதிலிருந்து ஒரு டிரம் வாங்கிக்குடுங்க’’ என்றான் பையன்.

மாப்பிள்ளை சொன்னதும் தன் டிரம்மை பையனுக்குக் கொடுத்துவிட்டார் கச்சேரிக்காரர். இதற்கும் சேர்த்தே சன்மானம் கொடுப்பார்கள் என்று அவருக்குத் தெரியும்.

தன் புது டிரம்மை இசைத்துக்கொண்டு வீட்டை நோக்கி நடைபோட்டான் பையன்.

ஒரு மரத்துண்டில் தொடங்கி, தான் ஒரு டிரம் சம்பாதித்த கதையை அம்மாவிடம் சொல்ல ஆரம்பித்தான்.

- வெளியான தேதி: 01 அக்டோபர் 2006 

தொடர்புடைய சிறுகதைகள்
ஒரு விவசாயி தன் குடும்பத்தோடு நகரத்தை நோக்கிப் போய்க்கொண்டு இருந்தார். பயணத்தின் இரண்டாவது நாள் மதியம் அவர்கள் ஒரு பெரிய ஆலமரத்தைப் பார்த்தார்கள். அதன் கீழ் சற்று நேரம் ஓய்வெடுக்க நினைத்தார்கள். சும்மா உட்கார்ந்திருக்கும் நேரத்தில் கயிறு திரிக்கலாமே என்று நினைத்தார் விவசாயி. ...
மேலும் கதையை படிக்க...
ஊரில் அனைவருக்கும் அந்தத் துறவியைப் பிடிக்கும். ஊரின் ஒதுக்குப்புறத்தில் ஒரு சிறிய குடிசையைப் போட்டுக்கொண்டு தன் சிஷ்யனோடு எளிமையாக வாழ்ந்துவந்தார். தன்னைத் தேடி வருபவர்களுக்கு நல்ல கருத்துகளைச் சொல்லி ஆசீர்வதிப்பார். ஒரு நாள் அவர் தியானம் செய்துகொண்டு இருந்தார். அப்போது அவரது மனக்கண்ணுக்கு ...
மேலும் கதையை படிக்க...
குரங்குக் கூட்டம் ஒன்று ஒருநாள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தன. ‘‘உண்ணாவிரதத்தைத் தொடங்குவதற்கு முன்னால், ஒரு காரியம் செய்யவேண்டும். விரதத்தை முடிக்கும்போது சாப்பிடுவதற்கான உணவை முதலிலேயே தயாராக வைத்துக் கொள்வோம்’’ என்றது கிழட்டு தலைமைக் குரங்கு. மற்ற குரங்குகளும் தலையசைத்து அதை ஆமோதித்தன. உணவு ...
மேலும் கதையை படிக்க...
நாடோடிக் கதை வரிசை-24 : பஞ்சாப் ஒரு நரி ஆற்றுப் பக்கம் தண்ணீர் குடிக்கப் போனது. எதிர்க்கரையில் இருந்த ப்ளம் மரங்களில் நிறைய பழங்கள் பழுத்துக் குலுங்கிக்கொண்டு இருந்தன. என்ன செய்வது, அந்த நரிக்கு நீச்சல் தெரியாதே.... ஏக்கத்தோடு பழங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தது ...
மேலும் கதையை படிக்க...
நாடோடிக் கதை வரிசை-21 (தமிழ்நாடு) மரத்தின் மீது அமர்ந்து இனிய குரலெடுத்துப் பாடிக்கொண்டு இருந்தது குயில். அதன் தொண்டையில் இருந்து வெளிப்பட்ட குக்கூ, குக்கூ என்ற இசை, கானகம் எங்கும் பரவியது. அந்த மரத்தின் அருகில் ஒரு குட்டை இருந்தது. அதில் ...
மேலும் கதையை படிக்க...
நாடோடிக்கதை வரிசை-23 ஹரியானா மாநிலம் அந்த விவசாயி தன் தொழிலின் மேல் மிகவும் ஆர்வம் கொண்டவர். எந்த நேரமும் வயல்காடே கதி என்று கிடப்பார். தன் வயல், தோட்டம் ஆகியவற்றின் ஒவ்வொரு அங்குலமும் அவருக்கு அத்துப்படி. விவசாயத்தில் புதிது புதிதாக ஏதாவது செய்துகொண்டே இருப்பார். ...
மேலும் கதையை படிக்க...
ஒரு பண்டிதர் ஒரு வயல் வழியாகப் போய்க் கொண்டிருந்தார். வாய்க்குள் ஏதோ இருப்பதுபோல் தோன்றவே, காறித் துப்பினார். ஒரு சிட்டுக்குருவியின் இறகு வந்து விழுந்தது. அது எப்படி தன் வாய்க்குள் வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை. வீட்டுக்கு வந்து தன் மனைவியிடம் ...
மேலும் கதையை படிக்க...
மீன் விற்கும் பெண் அரண்மனைப் பக்கமாகப் போனாள். ஜன்னலில் இருந்து எட்டிப் பார்த்த ராணி அவளை அழைத்தாள். அப்போது கூடையில் இருந்து ஒரு பெரிய மீன் வெளியே விழுந்து துள்ளியது. ‘‘இது ஆண் மீனா, பெண் மீனா? எனக்கு பெண் மீன்தான் ...
மேலும் கதையை படிக்க...
யாரை கட்டிப்போடுவது?
எடு, என் பங்கை!
பன்றியைக் கொன்று விடு!
குரங்குகளின் உண்ணாவிரதம்!
கட்டிக்கோ!
பாட்டுப் பாடவா…
நாடோடிக்கதை வரிசை-23
பறவைகள் படைப்பவன்!
ஏன் சிரித்தது மீன்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)