Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

உலை

 

திடுக்கிட்டு எழுந்த வில்லியம் ஒளிரும் கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஒன்றாகப் போகிறது. ஏப்ரல் 26-ம் தேதி வந்தாகிவிட்டது. இன்று என் பிறந்த நாள். எழுந்தவுடன் பரிசுகள் கிடைக்குமா… இல்லை, இரவு அப்பா வரும் வரை காத்திருக்க வேண்டுமா எனத் தெரியவில்லை. இதுவே சில வருடங்களுக்கு முன்பாக இருந்தால் அம்மா கேக் செய்வதும், பலூன் ஊதுவதும், பேப்பர் அலங்காரங்கள் செய்வதுமாக ஒரே களேபரமாக இருக்கும். நண்பர்களை எல்லாம் அழைத்து பர்த்டே பார்ட்டி இருக்கும். ‘விளையாட்டில் சேர்த்துக்கொள்ளவில்லையென்றால் பார்ட் டிக்கு கூப்பிட மாட்டேன்’ எனச் சொல்லி வேண்டுமென்பதை சாதித்துக் கொள்ளலாம்.

உலை

பிறந்த நாள் என்றில்லை. வார இறுதியானால் போதும்… சாப்பாடு கட்டி எடுத்துக் கொண்டு பிக்னிக் போவதும், ஏரிகளில் குளிப்பதும், சந்தை களில் வலம் வருவதும் என உல்லாசமாக இருக்கும். இப்போது எல்லாம் அப்படி நடப்பதே இல்லை. எப்போதும் அம்மாவும் அப்பாவும் சண்டை போடுவதிலேயே நேரம் போய்விடுகிறது. அதுவும் அப்பா வேலையில் இருந்து வரும் நேரம் தாமதமாகிக்கொண்டே போகிறது. வரும் போதே அவர் மீது ஒரு வாசனை அடிக்கிறது. அந்த வாசனை எனக்குப் பிடிப்பதே இல்லை. அம்மாவுக்கும் இப்போதெல்லாம் எதற்கு எடுத்தாலும் கோபம் வருகிறது. எதையாவது வாங்கித்தரச் சொன்னால் உடனே அடிதான்.

பிறந்த நாளுக்கு விடியோ கேம் கேட்டது அப்பாவுக்கு ஞாபகத்தில் இருக்குமா என்பது கூடத் தெரியவில்லை. ஜெர்ரி வைத்திருக்கும் கேமை ஒரு முறை விளையாடக் கேட்டதற்கு அவன் தரமாட்டேன் என்றது இன்னமும்ஞாபகத்தில் இருக்கிறது. அடுத்த பிறந்தநாளைக்கு இதைத்தான் வாங்க வேண்டும் என அன்றே முடிவு செய்ததும் மறக்கவில்லை. ஜெர்ரி போல இல்லாமல் என் விடியோ கேமை இல்லாத நண்பர்களுடன் பகிர்ந்துதான் விளையாட வேண்டும். பந்து விளையாடும்பொழுது குறி பார்த்து என்னையே அடிக்கும் குண்டு யூஜீனுக்கு மட்டும் குறைவான நேரம்தான் தரவேண்டும். அடுத்த மாதமே பள்ளிக்கூடம் திறந்து விடும். அம்மா அதற்குப்பின் விளையாட இந்த விடியோ கேமை தரமாட்டாள். ‘படி.. படி..’ எனச் சொல்லி வேறு எதுவுமே செய்ய விடமாட்டாள். ஏப்ரலில் பிறந்ததற்குப் பதிலாக பிப்ரவரி, மார்ச் எனப் பிறந்து இருந்தால் அதிக நாட்கள் விளையாடி இருக்க முடியும். இப்போதும் இருக்கும் நாட்களை வீணாக்கக்கூடாது. கையில் கேம் கிடைத்த பின் வேறு எதையுமே விளையாடக் கூடாது.

மின்சாரத்திற்குப் பஞ்சமில்லாத ஊர் என்பதால் தொடர்ந்து ஓடும் ஏசியின் குளிரில் அப்படியே கண்ணயர்ந்தான் வில்லியம்.

***
மணி ஒன்றாகப் போகிறது. தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந் தாள் மேரி. அருகில் தூங்கும் ஜானை பார்க்கப் பார்க்க அவள் ஆத்திரம் அதிகமாகிக்கொண்டேபோனது. கேவலம் ஒரு சங்கிலி! அதைக் கேட்டதற்கு என்ன பேச்சு பேசிவிட்டான்? போதாததற்கு அடிக்க வேறு செய்தான். எல்லாம் இந்த நாசமாகப் போகும் குடிப்பழக்கத்தால் வந்தது. காதலிக்கும்போது திகட்டத் திகட்ட பேசுவான். கேட்காததை எல்லாம் வாங்கியும் தருவான். இப்போதோ பேச்சு என்பது சுத்தமாக நின்றுபோய்விட்டது.

அவனை நம்பித்தானே வந்திருக்கிறேன்? காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை வேலை இடுப்பொடிகிறது. போதாதகுறைக்கு இப்போது வில்லியமுக்கு வேறு லீவு. அவனை சமாளிப்பதே பெரும்பாடாக இருக்கிறது. கூடமாட உதவி செய்வதுதான் இல்லை… இரண்டு வார்த்தை ஆறுதலாகப் பேசலாம் தானே? எழுந்தவுடன் வெளியில் சென்றுவிட வேண்டியது. இரவு உணவுக்கு வரவேண்டியது. தின்றுவிட்டுப் படுக்க வேண்டியது… இப்படியேதானேவாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது.

தானாகவும் பேசமாட்டான், நானாகப்பேசினாலும் சண்டையில்தான் முடிப்பான். இன்று அப்படிஎன்ன கேட்டேன்?. ‘புதிதாக வந்திருக்கும் நகைக்கடையில் தள்ளுபடி. ஒரு சங்கிலி வாங்கலாமா’ என்று கேட்டேன். எனக்காகவா கேட்டேன்? சேமிப்பே இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறதே… இப்படி இரண்டு நகை வாங்கினால் தங்கத்தில் போட்டு வைத்தது போலவும் இருக்கும். வேண்டுமென்றால் வைக்கவோ, விற்கவோ செய்யலாம். அதைக் கேட்டதற்கு இப்படிக் கையை ஓங்கிவிட்டானே?

இதுவரை விளையாட்டுக்குக் கூட அடித்ததில்லை. இன்று கையை நீட்டிவிட்டான். மீண்டும் மீண்டும் அம்மா சொன்னது தான் நினைவுக்கு வருகிறது…’உன் அழகுக்கும் அறிவுக்கும் எத்தனையோ பேர் வருவார்கள். இவன் தான் உனக்கு வேண்டுமா?’ எனக் கேட்டாளே… ‘இப்படி ஃபாக்டரியில் வேலை பார்ப்பவனுக்குப் பதில் ஆபீசில்வேலை பார்ப்பவனையாவது பார்’ என்றாளே! நாம் தான் தப்பு செய்து விட்டோமோ? இல்லை ரொம்பவும் வளைந்து கொடுப்பதால் இவன் என்னை கிள்ளுக்கீரையாக நினைக்கத் தொடங்கிட்டானோ? இவ்வளவு தூரம்விட்டதே தப்பு. வில்லியமுக் காகத் தான் பார்க்க வேண்டி இருக்கிறது… இல்லை நடக்கிறதே வேறு!

இருக்கட்டும் நாளை எழுந்தவுடன் ‘ரெண்டில்ஒன்று’ பார்த்துவிட வேண்டியதுதான். இவன் சம்பாதிக்கிறான் என்ப தற்காக எல்லாவற்றுக்கும் இவன் சொல்வதையே கேட்கவேண்டுமா என்ன? ‘ஒண்ணு ஒழுங்கா இருக்கிற வழியைப் பாரு, இல்லைன்னா நடக்கிறதே வேற’ என மிரட்ட வேண்டியதுதான். இவன் வேலை பார்க்கும் இடத்தில் இருக்கும் சகவாசம் தான் சரியில்லை. பேசாமல் இந்த வேலையை விட்டுவிட்டு வேறு வேலையைப் பார்க்கச் சொல்லவேண்டியது தான்.

மின்சாரத்துக்குப் பஞ்சமில்லாத ஊர் என்பதால் தொடர்ந்து ஓடும் ஏசியின் குளிரில் அப்படியே கண்ணயர்ந்தாள் மேரி

***
மணி ஒன்றாகப் போகிறது. மேரி புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருக்கிறாள். இன்னும் உறங்கவில்லை. பேசாமல் உறங்குவது போல நடிக்க வேண்டியதுதான். இல்லையென்றால் வீட்டுக்கு வந்ததில் இருந்து நடக்கும் சண்டை இன்னும் தொடரும். இந்த மாதமே சரியில்லை. வில்லியமுக்கு அடுத்த மாதம் தொடங்கி பள்ளிக்கூடம் போக வேண்டும். அவனுக்கு யூனிஃபார்ம் ,ஃபீஸ், நோட்டுப் புத்தகங்கள் என பெரிய செலவு இருக்கிறது.

ஃபாக்டரியில் சம்பளம் அதிகம் செய்து கொடுப்பார்கள் என நினைத்தால், ‘நிலைமை சரி இல்லை’ என அதற்கும் ஆப்படித்துவிட்டார்கள். நினைத்த பொழுதெல்லாம் ஆள் குறைப்பு செய்து கொண்டிருக்கிறார்கள். க்ரெகரியை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். அவனோடவே இவ்வளவு நாளாக கட்டி வந்த சீட்டுப்பணமும் காணாமல் போய்விட்டது. இது மேரிக்கு தெரியாது. தெரிந்தால் பேயாட்டம் ஆடுவாள்.

வேலையைக் காப்பாற்ற காலை எழுந்தவுடன் ஓடி இரவு வரை மாரடித்துவிட்டு வந்தால்… வீட்டுக்கு வந்தவுடனே சங்கிலி வேணுமாம் சங்கிலி… கடுப்பில் கை நீட்டி இருக்கவேண்டாம்தான்! இவ்வளவு பிரச்னைகளும் கொஞ்சமாகக் குடித்திருந்த வோட்காவுமாக சேர்ந்து நிதானமில்லாமல் செய்துவிட்டது.

என்ன இருந்தாலும் நம்மையேநம்பி வந்த பெண்… காதலிக்கும்போது எதையாவது வாங்கித் தந்தால், ‘எதற்கு இதெல்லாம்’ எனக்கேட்பவள் வர வர, ‘இது வேணும்அது வேணும்’ எனச் செய்யும் தொந்தரவு தாங்க முடியாமல் போய்க்கொண்டிருக்கிறது. அடுத்தவர் செய்வதெல்லாம் தானும் செய்ய வேண்டும் என ஏன் தான் மாறிப்போனாளோ தெரியவில்லை. இப்படித்தான் நடக்கும் எனத் தெரிந்திருந்தால் கல்யாணம் செய்து கொள்ளாமலே இருந்திருக்கலாம். வாயைத் திறந்தாலே ஆசிட்டில் முக்கிய வார்த்தைகள்தான். வர வர வீட்டுக்குள் நுழைவதே பிடிக்காமல், வேலையில் இருந்து நேராக பாருக்குச் சென்று கொஞ்ச நேரமாவது இருப்பது வழக்கமாகப் போய்விட்டது.

இது எல்லாம் போதாது என ஃபாக்டரியில் ஒரு பிரச்னை. நேரத்தோடு சரி செய்யவில்லை என்றால் பெரும் ஆபத்துதான். பலமுறை அது குறித்துப் பேசியாகி விட்டது. விஷய ஞானம் இல்லாத சூப்பர்வை சரோ ‘உன் வேலையை மட்டும் பார்’ என்கிறான். நாளையாவது இவனை மீறி மேனேஜரிடம் இதைப்பற்றிப் பேச வேண்டும்.

மின்சாரத்திற்குப் பஞ்சமில்லாத ஊர் என்பதால் தொடர்ந்து ஓடும் ஏசியின் குளிரில் அப்படியே கண்ணயர்ந்தான் ஜான்.

அழகிய ஏப்ரல் நாளை எதிர்பார்த்து அந்த நகரமே உறங்கிக்கொண்டிருக்க அதிகாலை ஒருமணிக்கு அருகில் இருந்த செர்னோபில் அணு நிலையம் வெடித்தது.

- 28-09-2009 

தொடர்புடைய சிறுகதைகள்
தினமும் பழகிய இடம்தான். ஆனால் இரவில் வேறு உரு கொண்டிருந்தது. இலைச் சருகுகள் காலை வேளையில் இவ்வளவு சத்தம் செய்ததில்லை. விளக்குகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக எரிந்து வெளிச்சத்துக்குப் பதில் தூரத்தைக் காட்டி பயமுறுத்திக் கொண்டிருந்தன. பஸ் ஸ்டாப்பில் இறங்கி இவ்வளவு தூரமா ...
மேலும் கதையை படிக்க...
"கொன்னுட்டு ஜெயிலுக்குப் போனாலும் பரவாயில்லைன்னு தோணுது சார். இவனுக்குப்போய் எப்படிக் குறையும் மார்க்கு? மார்க்‌ஷீட் வாங்கனதுமே கிழிக்கப் போயிட்டான் இவன். ரீ வால்யூவேஷன் எல்லாம் பம்மாத்து.இப்ப திருத்தறவன் முதல்ல கரெக்ட் பண்ணவனை விட்டுக்கொடுப்பானா?" தந்தையொருவர் நாலுசீட் தள்ளி சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தார். ...
மேலும் கதையை படிக்க...
அலைகள் எட்டடி உயரத்துக்கு ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன. கேட்பாரற்றுக் கிடந்தது வெள்ளை மணல் கடற்கரை. பௌர்ணமி நிலா மஞ்சள் வெளிச்சம் கொட்டி சூழலை அழகாக்கிக் கொண்டிருந்தது. வித்தியாசமான கட்டடம் ஒன்று தன் பழைய பொலிவையெல்லாம் இழந்து பாழடைந்து கிடந்தது. "ஜே இந்த இடம்தானா?" "ஆம். என்றுதான் ...
மேலும் கதையை படிக்க...
ரயிலின் தடதடப்பு இசையாய் ஒலித்தது. கதவைக் கடக்கையில் சில்லென்ற காற்று வீசி உற்சாகம் கூட்டியது. ஏன் டாய்லெட் நாற்றம் கூட அருவருக்க வைக்கவில்லை. அனாதரவாக விட்டுவிட்டு வந்திருக்கும் லாப்டாப் நினைவும் பயமுறுத்தவில்லை. இவ்வளவு மகிழ்ச்சியாய் எல்லா செல்களிலும் புத்துணர்வோடு எப்போது இருந்தேன் கடைசியாக? ...
மேலும் கதையை படிக்க...
கைவண்ணம்
லாட்ஜிலிருந்து வெளியே வருவதற்கு ஒரு நூறு அடி இருக்குமா? அதற்குள் இவ்வளவு சொட்டச் சொட்ட நனைந்துவிட்டிருக்கிறேன். இரண்டே நொடிக்குள் சமர்த்தாகி, 'நானா... மழையா?பெய்தேனா?' எனக் கேட்டுக்கொண்டிருக்கிறது வானம். "எட்டு மணிக்குத் தானே வருவேன்னு சொன்னீங்க சார்?" - நெல்லையப்பன் பீடியை அவசரமாகத் தரையில் ...
மேலும் கதையை படிக்க...
நாற்பது மாத்திரைகள
தந்தை சொல் மிக்க..
அவன் அவள் கெமிஸ்ட்ரி
ஓர் இரவு
கைவண்ணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)