அடியார்க்கு அடியார்!

 

கலிக்காம நாயனார் திருநட்சத்திரம் : ஜூலை 14

அந்த சேதியைக் கேட்டதும்… அரளி தோய்த்த குறுவாளை நெஞ்சில் பாய்ச்சியதுபோல் துடித்தார் கலிக்காமர்!

யாரோ பரவை நாச்சியாராம்! சுந்தரருக்காக, இவளிடம் தூது சென்றாராம் திருவாரூர் தியாகேசர்! ‘அடியவருக்காக ஆண்டவன் தூது செல்வதா?’ கோபக் கனலால் பற்றியெரிந்தது கலிக்காமரின் உள்ளம்!

அடியார்க்கு அடியார்!‘யார் இந்த பரவைநாச்சியார்? இவருக்கும் சுந்தரருக்கும் என்ன தொடர்பு? இவர்களுக்கு இடையே இறைவன் எதற்காக தூது செல்ல வேண்டும்?’- அடுக்கடுக்கான கேள்விகள், கலிக்காமரின் மனதைக் குடைந்தன. இது குறித்து சக அன்பர்கள் கூறிய விஷயங்கள், கலிக்காமரை திகைக்க வைத்தன.

பரவை… திருவாரூரில் வாழும் குணவதி; பார்வதியாளின் பக்தை. சுந்தரர் மணக்கோலத்தில் இருந்த போது ஆட்கொண்ட ஈசன், மீண்டும் அவரை மணக்கோலத்தில் காண விரும்பினான் போலும். ஆம்! சிவனாரின் அருளால் ஆரூர் கோயிலில் சுந்தரரும் பரவையும் சந்திக்க நேர்ந்தது. பரவையாரின் அழகும் அன்பொழுகும் பார்வையும் அவரை ஈர்க்க… இரண்டுபேருக்கும் திருமணம் நடந்தது.

ஒரு கட்டத்தில், ‘சுந்தரருக்கும் சங்கிலி என்பவளுக்கும் திருமணம்’ எனும் தகவல் வர… கோபம் கொண்டார் பரவையார். எவரையும் சந்திக்க விரும்பாமல் தனிமையில் ஆழ்ந்தார். இதில் வருந்திய சுந்தரர் இறைவனை வேண்ட, பரவையாரின் கோபத்தைத் தணிக்க சுந்தரருக்காக தூது சென்றாராம் தியாகேசர்!

- அன்பர்கள் சொல்லச் சொல்ல கலிக்காமரின் உள்ளம்

தகித்தது! ‘சுந்தரரின் காதலுக்காக பொன்னார் மேனியனின் பொற்பாதங்கள் நோகலாமா?’- வேதனையில் வாடினார். ஊண்- உறக்கமின்றி கழிந்தன அவரது பொழுதுகள்.

நாட்கள் நகர்ந்தன! ஒருநாள்…

மனதில் தாங்கியிருந்த வலியை வயிற்றிலும் உணர்ந்தார் கலிக்காமர். ‘சில நாட்களாக உண்ணாமல் தண்ணீரும் பருகாமல் கிடந்தாரே… அதனால் வந்த விளைவோ’- பதைபதைப்புடன் மருத்துவரை அழைத்து வந்தாள் மனைவி. ஆனால், என்ன மருத்துவம் செய்தும் பயனில்லை. வலி அதிகமானதே தவிர குறைந்தபாடில்லை.

‘இறைவா… இதுவும் உன் திருவிளையாடலா?’ கண்ணீர்

மல்க, பெருமங்கலம் இறைவனைக் கைதொழுதாள் கலிக்காமரின் மனைவி.

ஆம்! இது, ஈசனின் திருவிளையாடலேதான்!

தாம் தோழனாக பாவிக்கும் சுந்தரர் மீதல்லவா கலிக்காமர் கோபம் கொண்டிருக்கிறார். அந்த கோபத்தை தணிக்க வேண்டும். சுந்தரரின் மாண்பை கலிக்காமருக்கு உணர்த்துவதுடன், இவரது பக்தியை உலகறியச் செய்ய வேண்டும் என்று சித்தம் கொண்டார் சிவனார். எனவேதான், கலிக்காமருக்கு சூலை நோயை பரிசளித்தார்!

‘சுந்தரா எழுந்திரு!’

திடுக்கிட்டு விழித்தார் சுந்தரர். அருள் தரிசனம் தந்து நிற்கும் ஈசனை வணங்கினார்.

”அன்பனே… என் நேசத்துக்குரிய அடியவர் கலிக்காமர் சூலை நோயால் துன்புறுகிறார். நீ பெருமங்கலம் சென்று அவரது துன்பத்தை அகற்று!”- அருளி மறைந்தான் ஆடல்வல்லான். ஏற்கெனவே, கலிக்காமர் தம்மீது கடும் கோபத்தில் இருக்கிறார்

என்பதை அறிந்து வருந்திய சுந்தரர், இப்போது, கலிக்காமருக்கு சூலை நோய் என்றதும் கலங்கித் தவித்தார். பணியாளை அழைத்து, தான் பெருமங்கலம் வரும் தகவலை கலிக்காமரிடம் தெரிவிக்கும்படி கூறி அனுப்பினார்.

சுந்தரரின் வருகை, எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதுபோல் இருந்தது கலிக்காமருக்கு! சூலை நோயால் துயருற்றிருந்தவரை, ‘சுந்தரர் வருகிறார்’ எனும் தகவல் பேரிடியெனத் தாக்கியது.

”எந்தை ஈசனை தூதனுப்பிய சுந்தரரின் முகத்தில் விழிப்பதே பாவம்! அவரால் உயிர் பிழைப்பதைவிட சாவதே மேல்!” என்றவர், ஆவேசத்துடன் உடைவாளை உருவி தன் வயிற்றில் பாய்ச்சிக் கொண்டார். ரத்தம் பீறிட தரையில் சரிந்தார். அடியாரின் இன்னுயிர் பிரிந்தது!

கண்ணெதிரிலேயே கணவன் இறந்ததைக் கண்டு கதறினாள் கலிக்காமரின் மனைவி.

இந்தச் சூழலில்… உள்ளே நுழைந்த ஏவலாள் ஒருவன், ”தாயே, சுந்தரர் ஊர் எல்லைக்கு வந்துவிட்டார்.

இன்னும் சற்று நேரத்தில் இங்கிருப்பார்!” என்று தகவல் சொன்னார். சட்டென்று கண்ணீரைத் துடைத்தாள் அந்த குணவதி. கணவனின் உடலை ஓர் அறையில் வைத்து மறைத்தாள். இல்லத்தை சுத்தப்படுத்த உத்தரவிட்டாள்.

ஆம்! ஆரூராரின் வருகையை ஆண்டவனின் வருகையாகவே கருதினாள் கலிக்காமரின் மனைவி. முதன் முதலாக தன் இல்லத்துக்கு வருகை தரும் சுந்தரரிடம் துக்கத்தை மறைப்பது என உறுதி பூண்டாள்.

இதோ… வந்தே விட்டார் சுந்தரர்.

”அம்மைக்கு அடியேனின் வந்தனம். எங்கே என்னுயிர் கலிக்காமர்?”

- சுந்தரரின் இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வது..? தவித்து மருகினாள் கலிக்காமரின் மனைவி.

எனினும் மறுவிநாடியே நிதானித்து சமாளித்தவள், சுந்தரரை ஆசனத்தில் அமரச் சொல்லி அவருக்கு பாத பூஜைகளைச் செய்தாள். மலர்களால் அவரின் திருவடிகளைத் தொழுதாள்.

இந்த விமரிசையான வரவேற்பை எதிர்பார்த்தா சுந்தரர் வந்தார்? அவரது கண்கள் கலிக்காமரைத் தேடின!

ஒரு நிலைக்கு மேல் உண்மையை மறைக்க முடியவில்லை. அங்கிருந்த அன்பர்களின் முகத்தில் அப்பியிருந்த சோகத்தை கவனித்த சுந்தரர், அவர்களிடம் மெள்ள விசாரித்து நடந்ததை அறிந்தார்.

அந்த அறைக்குள் சென்று கலிக்காமரின் உடலைப் பார்த்து கண்ணீர் உகுத்தார். ”சிவம் போற்றும் கலிக்காமர் இல்லையேல் நானும் இல்லை. இறைவனை தூதனுப்பிய குற்றத்துக்கு இனி யாரிடம் மன்னிப்பு வேண்டுவேன்!” என்று கதறியவர், சட்டென்று அருகிலிருந்த கத்தியை கையிலெடுத்தார். தன் உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்டார்.

மறுகணம்… உயிர்த்தெழுந்தார் கலிக்காமர். சுந்தரரின் நிலை கண்டு பதைபதைத்தார். தமக்காக உயிர் துறக்கவும் தயாரான சுந்தரரின் செயலை எண்ணி நெகிழ்ந்து பதறியவர், ஓடிச் சென்று சுந்தரரிடம் இருந்த ஆயுதத்தைப் பறித்தார். ”ஸ்வாமி.. இறையம்சம் கொண்டவர் தாங்கள்! தங்கள் அன்பின் ஆழத்தை அறியாமல், தங்களைப் பழித்து விட்டேன். என் தவறை மன்னியுங்கள்!” என்று வேண்டி

நின்றார். ஆனந்த மிகுதியில், கலிக்காமரை அப்படியே கட்டியணைத்துக் கொண்டார் சுந்தரர்!

கயிலையான் மீது கலிக்காமரும்… அவர் மீது சுந்தரரும் கொண்ட அன்பை… உலகுக்கே பறைசாற்றுவதுபோல் ஓங்கி ஒலித்தது பெருமங்கலத்தின் சிவாலய மணி!

- ஜூலை 2009
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)