வேள்வித் தீ குளிர் காய்வதற்கு அல்ல !

 

விநாயகர் படத்தின் முன்பாக வழக்கம்போல் மாவட்ட ஆட்சியர் விக்னேஷ் என்பவர் நின்று, வணங்கி விட்டு, தன இருக்கையில் அமர்ந்து கொண்டு அலுவலகக் கோப்புகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். “ அய்யா! வணக்கம். என் பெயர் தூங்கத் தேவர். என தன்னை அறிமுகப்படுத்தி விட்டு, “என்னை அய்யா நேரில் பார்த்து பேசணுமுன்னு சொன்னேங்கலாம்” என்ற தூங்கத் தேவரின் பணிவான குரல் கேட்டு மாவட்ட ஆட்சியர் நிமிர்ந்து அவரைப் பார்த்தார்.

தும்பைப்பூ போன்று வெண்மையான வேஷ்டி, இடுப்பில் கட்டிய வெண்மையான சிறு துண்டு, கவிஞர் ரவீந்தரநாத் தாகூரை நினைவுபடுத்துவதைப் போல், அடர்ந்த தாடி மீசை, ஒளி பொருந்திய கண்கள், எழுபத்தைந்து வயதைக் காட்டும் நெற்றிச் சுருக்கங்களுடன் அவர் காணப்பட்டார். தூங்கத்தேவரை மாவட்ட ஆட்சியர் பார்த்துக்கொண்டே, அவரைப் பற்றி நேற்று காலையில் தான் அலுவலகத்தில் நடத்திய மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கீழராஜகுலராமன் கிராம மக்கள் கூறியவற்றை நினைவு கூர்ந்தார்.

தூங்கத் தேவர் என்பவர் கீழராஜகுலராமன் என்ற கிராமத்தில் வசித்து வந்தார். அவர் நமது நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டு சிறை சென்றவர்களில் அவரும் ஒருவர். வயதானாலும் உழைத்து வாழ வேண்டும் எனக் கொள்கையில் இருப்பவர். அவர் தனக்குச் சொந்தமான கூரை வீட்டில்தான் குடியிருந்து வந்தார். அவர் முன்னோர்கள் வழியில் வந்த குறைந்த அளவில் உள்ள நிலத்தில்தான் பாடுபட்டு, அதன்மூலம் வரும் வருமானத்தில்தான் வாழ்ந்து வருவதோடு , அவர் சேமித்து வைக்கும் பணத்தில் தன்னால் முடிந்த அளவு ஏழைகுழ்ந்தைகளுக்கு படிப்பதற்கும் உதவி செய்து வந்தார்.

எப்படியும் வாழலாம் என்றில்லாமல், இப்படித்தான் வாழவேண்டும் என்ற உயர்ந்த கொள்கையில் வாழ்ந்து வந்துகொண்டிருந்தார்..

அவர் தனது மானசீக குருவாக சுவாமி விவேகானந்தரை ஏற்றுக் கொண்டு, அவரது வழியில் நடந்து செல்பவர்.சுவாமி விவேகானந்தரின் கனிவுமிக்க அமுதமொழிகளான.ஏழைகளிடம், பலவீனர்களிடம், நோயாளிகளிடம் இறைவனை காண்பவனே அவரை உண்மையில் வழிபடுகிறான்., என்பதை தம் உள்ளத்தில் பதிந்து வைத்துகொண்டு அதன்படி செயல்பட்டும் வந்தார்.

அவருடைய பெயர்தான் தூங்கத்தேவர். தூங்காத தேவர் என்பவர் போல், அவர் தினமும் காலை ஆறு மணிக்கே அக்கிராமத்தில் ஏதோ ஒரு தெருவில் துப்பரவு செய்து கொண்டிருப்பார். அவர் துப்பரவை செய்வதைப் பார்த்து, அக்கிராமத்தில் உள்ள சிலபேர் ஆரம்பத்தில் “ ஏய் பெருசு உனக்கு வேலை வெட்டி இல்லே, தெருவை தோட்டிபோல் பெருக்கிகிட்டு இருக்கே” என ஏளனமாக பேசுவதைக் கேட்டு , அவர்களுக்கெல்லாம் ஒரு புன்னகைதான் அவரது பதிலாக இருக்கும். இருந்தாலும் அவரது துப்பரவுப் பணி தினமும் தொடரும். நாளடைவில் அவரை ஏளனமாகப் பார்த்தவர்கள், பேசியவர்கள் எல்லாம் , அவர்களே தானாக முன்வந்து , அவருடன் சேர்ந்து கொண்டு தெருவை அவரைப் போல் சுத்தம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்..

தூங்கத் தேவர் செயல்களை உற்று நோக்கினால்

சுவாமி விவேகானந்தர் கூறியதைப்போலதான் இருக்கும். அதாவது ‘ஒவ்வொரு பணியும் மூன்று நிலைகளைக் கடந்துதான் ஆகவேண்டும். அதாவது ஏளனம் – எதிர்ப்பு- ஏற்றுக்கொள்ளல்’ என்ற நிலைபாடுதான் அவரிடம் இருந்தது.

ஒருமுறை அக்கிராமத்தில் வாருகால் வசதியில்லாமல், தெருவின் நடுவே கழிவுநீர் ஓடி தெருவே சுகதாரக் கேடாக இருப்பதைக்கண்டு ,தூங்கத் தேவர் பொறுக்கமுடியாமல், அக்கிராமத்தில் உள்ள நாட்டாமை என்று சொல்லிக்கொள்ளும்,

பண்ணையாரிடம் சென்று , தெருவில் வாருகால் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யும்படி அன்புடன் கூறினார். அந்தப் பண்ணையார் அவர் கூறியதையெல்லாம் செவிமடுத்ததாக தெரியவில்லை. பொறுத்தது போதும் என்று ஒரு நாள் தன்னுடன் துப்பரவுப் பணியில் ஈடுபட்டவர்களுடன் மண்வெட்டி, கடப்பாரையுடன் தெருவில் வாருகால் தோண்டுவதற்கு ஆரம்பித்து விட்டார். அதைப் பார்த்துக்கொண்டு இருந்த அத்தெருமக்களும் ஆளுக்கொரு கடப்பாரையுடன் வாருகால் தோண்டுவதற்கு வந்து விட்டார்கள். இதைப் பொறுக்கமாட்டாமல் அக்கிராம பண்ணையார் தூங்கத் தேவரை பலவிதமாக திட்டிப் பார்த்தார். அதற்கும் தூங்கத் தேவர் வழக்கம்போல் அவருடைய புன்னகைதான் பதிலாக இருந்தது. தூங்கத்தேவரின் அன்பான கோரிக்கை, பொறுமை அவருடைய அணுகுமுறை எல்லாம் பண்ணையாரின் மனதை மாற்றியது. முடிவில் பண்ணையார் அவருடன் சேர்ந்து வாருகால் அமைப்பதற்கு வேண்டிய உதவிகளை செய்தார்.

தூங்கத் தேவர் தனது குடிசையின் ஒரு பகுதியில் ஒரு மினி நூலகம் வைத்து, அதில் பாரதியார் கவிதைகள், விவேகானந்தர் வீர முரசு, ராமகிருஷ்ணர் அமுதமொழிகள் போன்ற பயனுள்ள ஆன்மீக நூல்களையும் வைத்திருந்தார். ஆலமரதடியின்கீழ் ஆடு புலி ஆட்டம், தாயக்கட்டம், சீட்டுக்கட்டு போன்ற வெட்டியாக விளையாடிய அக்கிராம மக்களை, பயனுள்ள வகையில் நூலகத்தை பயன்படுத்தும்படி செய்தார். வீட்டில் உள்ள பெண்களிடம் யாராவது உங்கள் அப்பா எங்கே, மாமா, தாத்தா, எங்கே என்று கேட்டால் தூங்கத் தேவர் வீட்டில் சென்று பாருங்கள் என்று நம்பிக்கையுடன் பேசும்படி அக்கிராம மக்களை மாற்றிருந்தது. தூங்கத் தேவரின் பொறுமையுடன் கூடிய அவரது விடாமுயற்சி,சகிப்புத்தன்மை இனிமையான பேச்சு அணுகுமுறைகள்தான் காரணம்.

மாவட்ட ஆட்சியரின் டபேதார் “ அய்யா, சிவகாசி கோட்டாட்சியர் வந்திருக்கிறார் “ என குரல் கொடுத்தவுடன்தான், மாவட்ட ஆட்சியர் தூங்கத்தேவரின் நினைவலைகளிலிருந்து மீண்டு வந்தார். “ சரி அவரை வரச் சொல்” என்று கூறிவிட்டு, எதிரே நிற்கும் தூங்கத்தேவரைப் பார்த்து “ பெரியவரே ! திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுவாக மக்கள் தங்கள் குறைகளை கூறித்தான் மனுக் கொடுப்பார்கள். ஆனால் போன வாரம் கீழராஜகுலராமன் கிராம மக்கள் வித்தியாசமான மனு ஒன்று என்னிடம் கொடுத்திருந்தார்கள். அதில்…. என்று மாவட்ட ஆட்சியர் கூறிக்கொண்டு இருக்கும்போது,… சிவகாசி கோட்டாட்சியர் ஆட்சியர் அறையில் நுழைந்தவுடன், அவரை இருக்கையில் அமரும்படி சைகையில் கூறிவிட்டு, தூங்கத் தேவரை நோக்கி “ பெரியவரே உங்களுக்கு அரசு வழங்கும் சுதந்திர போராட்ட தியாகிகள் பென்சன் உங்களுக்கு கிடைக்கும்படி கிராம மக்களே மனுக்கொடுத்து இருக்கிறார்கள். நீங்கள் ஏன் தியாகிகள் பென்சன் வேண்டாம் என்று கூறுகிறீர்கள். ? நீங்கள் உண்மையான சுதந்திர போராட்ட தியாகி . மேலும் கிராம மக்களுக்கும் வேண்டிய நல்ல செயல்கள் எல்லாம் ஆர்வமுடன் செய்கிறீர்கள். சுதந்திர போராட்ட தியாகிகள் பென்சன் கோரி மனுக் கொடுக்க உங்களுக்கு என்ன சிரமம். …? “ எனக் கேட்டார் மாவட்ட ஆட்சியர்.

தூங்கத் தேவர் மாவட்ட ஆட்சியரை நோக்கி “ அய்யா நான் சுதந்திர போராட்டத்தில் கலந்துகிட்டது, நானே விரும்பி கலந்துகிட்டது. எனக்கு அதிலே ஒரு ஆத்ம திருப்தி இருந்தது . இதற்கு ஏன் சர்க்கார் பென்சன் கொடுக்கணும்னு கேக்கறேன் “ என்றார்.

அந்தப் பாமரன் என்ன்மோ நன்கு சிந்தித்து அறிவுபூர்மாக் பேசுவது போல்தான் மாவட்ட ஆட்சியருக்கு தோன்றியது. ‘நான் சுதந்திர போராட்டத்தில் கலந்துகிட்டது, நானே விரும்பி கலந்துகிட்டது. எனக்கு அதிலே ஒரு ஆத்ம திருப்தி இருந்தது . இதற்கு ஏன் சர்க்கார் பென்சன் கொடுக்கணும்னு கேக்கறேன்’ என்று தூங்கத்தேவர் பேசியதை கேட்டு மாவட்ட ஆட்சியரேயே சிந்திக்க வைத்தது.

சிவகாசி கோட்டாட்சியர் குறுக்கிட்டு “.பெரியவரே ! அரசாங்கம் உங்களைப் போன்ற தியாகிகளுக்கு கொடுக்கும் சுதந்திர போராட்ட தியாகிகள் பென்சன் வாங்கித் தர வேண்டும் என்று கிராம மக்களும், மாவட்ட ஆட்சியரும் விரும்புகிறார்கள். நீங்கள் ஒரு மனு மட்டும் கொடுங்கள் . உங்களுக்கு சுதந்திர போராட்ட தியாகிகள் பென்சன் கிடைக்க நாங்கள் ஏற்பாடு செய்து தருகிறோம்” என விளக்கினார்.

“ அய்யா நான் சுதந்திர போராட்டத்தில் விரும்பி கலந்து கிட்டது சர்க்கார் ஏன் எனக்கு பென்சன் தர வேண்டும். நான் நாட்டிற்காக் பாடுபட்டது எனது கடமையாய் நெனைக்கிறேன்.

கடமைக்கு பென்சனா உதவியா ? அய்யா நீங்க சொன்னதுபோல் பென்சன் வாங்கினால், நான் சுதந்திரத்துக்கு பாடுபட்டது அர்த்தமேயில்லை “ என தான் கூறியதையே மீண்டும் மீண்டும் கூறி, தன்னை உண்மையான தியாகி என்பதைக் காட்டினார். .

சிவகாசி கோட்டாட்சியர் ஏதோ கூற முற்படும்போது, தூங்கத்தேவர் இடைமறித்து “ அய்யா, எனக்கு உழைக்க உடலில் தெம்பு இருக்கு. உதவி செய்ய என் கிராம மக்கள் இருக்காங்க. நான் சுதந்திர போராட்டத்தில் கலந்து எனக்கு பென்சனா ? நெனைக்கவே சிரிப்புதான் வருது. அய்யா தியாகத்துக்கு விலை பென்சனா? வேண்டாம் அய்யா, பென்சன் கொடுத்து எங்களைப் போன்றவங்கள கொட்சப்படுத்தாதீங்க. மன்னிக்கவும். என் மீது அன்பு கொண்டு கூப்பிட்டு பேசியதற்கு நன்றிங்க “ என்று இருகரம் கூப்பி வணங்கிச் சென்றார்.

சிவகாசி கோட்டாட்சியர் , மாவட்ட ஆட்சியரை நோக்கி “ சார் . இந்தக் காலத்திலும் இப்படிப்பட்ட உயர்ந்த உள்ளம் படைத்தவர்கள் இருக்கிறார்களே, அரசாங்கம் வழங்கும் சுதந்திர போராட்ட தியாகிகள் பென்சன் வேண்டவே வேண்டாம் என்று கூறும் வித்தியாசமான மனிதரை இப்போதுதான் நான் பார்க்கிறேன். பகவத்கீதையில் கிருஷ்ணபரமாத்மா கூறியதுபோல் கடமைச் செய், பலனை எதிர்பாராதே என்பதுதான் எனக்கு நினைவுக்கு வருகிறது இந்த வித்தியாசமான மனிதரை பார்க்கும்போது. மேலும் சிவகாசி கோட்டாட்சியர் ஏதோ கூற முற்படும்போது…

மாவட்ட ஆட்சியர் குறுக்கிட்டு “ இந்த வித்தியாசமான மனிதர் நம்மிடம் பேசியது நடந்துகிட்ட முறையெல்லாம் ‘ வேள்வித் தீ குளிர் காய்வதற்கு அல்ல’ என்பதை நமக்கெல்லாம் உணர்த்தி விட்டு சென்றிருக்கிறார். நான் உணர்ந்து கொண்டேன். நீங்கள்……என ஏதோ மாவட்ட ஆட்சியர் பேச முற்படும்போது, அவர் மேசையில் உள்ள தொலைபேசி மாவட்ட் ஆட்சியர் கூறியதை ஆமோதிப்பதுபோல் டிரிங் டிரிங் என ஒலித்தது. 

தொடர்புடைய சிறுகதைகள்
பள்ளிக்கரணை ஆயில்மில் பேருந்து நிறுத்தத்தில் தி.நகர் பேருந்து வந்து நின்றது. அந்தப் பேருந்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தாலும், அவசரமாகச் செல்ல வேண்டியவர்கள் முண்டியடித்துக்கொண்டு ஏறினார்கள். வாசுவும் அதில் முண்டியடித்து ஏறி, பேருந்துக்குள்ளும் நுழைந்து விட்டான். அவன் இரண்டு நோட்டுப் புத்தகங்களையும் ...
மேலும் கதையை படிக்க...
விநாயகர் படத்தருகில் இருந்த சுவர்க்கடிகாரம் ஒன்பது அடித்து ஓய்ந்தது. வீடு அமைதியாக இருந்தது. ஹாலில், எப்போதும் கலகலப்பாகப் பேசித் திரியும் பாரதி, அன்று வீட்டின் அறையில் உள்ளே அமைதியாக உட்கார்ந்து இருந்தாள். அவளுடைய பெரியப்பாவுக்கும் பெரியம்மாவுக்கும் அவள் அமைதியாக இருப்பதைப் பார்த்து ...
மேலும் கதையை படிக்க...
காளியம்மாள் காலை ஐந்து மணிக்கு எழுந்திருந்து அவசர அவசரமாகக் குளித்து விட்டு, ஒட்டுப் போட்ட பாவாடை தாவணியை எடுத்து உடுத்திக் கொண்டாள். பானையில் கிடந்த பழைய சோற்றை அவக்கு அவக்கென்று அள்ளி விழுங்கி விட்டு, மீதம் இருந்த சோற்றை தூக்குச் சட்டியில் ...
மேலும் கதையை படிக்க...
விநாயகர் படத்தருகில் இருந்த சுவர்க்கடிகாரம் இரவு பத்தடித்து ஓய்ந்த பின்னும் சத்தியமூர்த்தி ‘வெற்றியடைய வேண்டுமா? பிரம்மச்சரிய விரதத்தில்.....’ என்ற புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி, நித்யா இருவரும் தனித்தனியாக இரண்டே அறைகள் கொண்ட அந்த சிறிய வீட்டில் இருந்த கட்டில்களில் தனித்தனியாக ...
மேலும் கதையை படிக்க...
சமீப காலத்தில் பூரணி என்ற எழுத்தாளருடைய சிறுகதைகள் , கவிதைகள் கண்ணியமிக்க வார ,மாத இதழ்களில் பிரசுரமாயின. அந்த பெண் எழுத்தாளர் பூரணி விளம்பரத்தையெல்லாம் விரும்புவதில்லை. அவர் தன்னுடைய ஆத்ம திருப்திக்ககதான் எழுதுவதாக தன்னுடைய நெருங்கிய நண்பர்களிடமெல்லாம் கூறுவார். அவருடைய படைப்புகளில் ...
மேலும் கதையை படிக்க...
பெண் புத்தி முன் புத்தி!
சுகமான சுமைகள்!
மருதாணி
ஆத்மாவின் தாளங்கள்!
வாசகன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Sirukathaigal

FREE
VIEW