ராதா : எண் 7, இருபத்து நான்காவது மாடி

 

ஆசுவாசமாய் நிரம்பிக் கொண்டிருக்கும் மேகங்களைப் பார்க்கும்போது அதன் அழகை ரசிக்கும் மனோபக்குவம் பலருக்கு வருவதில்லைதான். அது அழைத்துவர இருக்கிற மழையைச் சமாளிக்க, முடிந்தவரை முடக்கிவிட, அது முடியாமல் போக வரும் கோபத்தை யார் மேலாவது அல்லது எதன் மேலாவது காட்டுவது, சொல்லப்போனால் எல்லாருடைய வழக்கம்தானே. அதில் அதிகம் பாதிக்கப்படுவது என்னவோ விவரங்கெட்டுக் கிழிந்த மழையாடைகளும் உடைந்த குடைகளும்தான்.

அதிகப்பட்ச மக்களின் கவனம் சங்கமிக்கும் இடங்களையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் யாருடைய மனமும் லயிக்காதச் சமாதிகளையே எப்போதும் விரும்பித் தொலைவது அவளது குணமாகிவிட்டது. அந்த நீர்க்காய்ச்சி வானவிருச்சங்கள் அவளது பட்டியலில் தப்பிப் பிழைத்துவிடுமா என்ன?

இன்னும் வந்துசேராமல் இருக்கும் அவனை அவள் எதிர்பார்த்துக் காத்திருப்ப‌து இவளுக்குப் பொழுதுபோகாத வேளை. அந்த வெற்று நிமிடங்களைப் பூர்த்திசெய்யத் தவறிய ஆஸ்ட்ரோவும் டீ.எச்.ஆர் ராகாவும் ஒதுங்கிக்கொள்ள முகில்களின் அழகிய நடனம் கொஞ்சம் அழகு பொழியும் பொழுதுபோக்குதான் அவ‌ளுக்கு.ரம்பையும் ஊர்வசியும் முகில்களை மறைவிடங்களாகப் பாவித்து அதன் நிழலின் தயவில் நாட்டியப் போர் நடத்திக்கொண்டிருந்தது யார் கண்ணிலும் சிக்காமல் இருந்திருந்திருக்கலாம்; ஆனால், ராதாவின் கண்களில் மண்ணைத் தூவிவிடமுடியுமா?

கால்மணி நேரம், அறைமணி நேரம் என அவளது பொறுமையை நிமிடங்கள் கொஞ்சங்கொஞ்சமாகக் களவாடிப் போய்க்கொண்டிருப்பதை அவள் கடைசி பத்து நிமிடத்தில்தான் உணர்ந்தாள். எவ்வளவு நேரம்தான் முகில்திரைக்குப் பின்னால் ஒளிந்து ஒளிந்து நடனமாடும் ரம்பையையும் ஊர்வசியையும் இடிமுழக்கம் மாதிரி கரவோசையையும் சலைக்காமல் பார்த்துக்கொண்டிருப்பது? “இதோ வந்துவிடுகிறேன்” என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு இன்னும் தலையைக் காட்டாமல் அரசியல் செய்துகொண்டிருக்கிறான் கண்ணன்.

இதோடு மூன்றாவது தடவையாக போனை எடுத்துவிட்டாள். பச்சை பட்டனை அழுத்தினாலேயே போதும்; ஆகக் கடைசியாக டயல் செய்த பத்து எண்களைக் காட்டிவிடும். மீண்டும் கண்ணனுக்கு அழுத்தினாள் அந்த நெஞ்சழுத்தக்காரனுக்கு அழுத்தம் கொடுக்க.

ரிங் போய்க்கொண்டிருந்தது.

இன்றைய பொழுது இப்படியே முழுகிவிடுமா? அச்சம் ஏமாற்றத்தை ராதாவின் மனக்களத்தில் பாய்ச்சி மைனாரிட்டி விளைவை ஏற்படுத்தியிருந்தது. “என்ன டார்லிங்?” இந்தக் கொஞ்சலுக்கு மட்டும் குறைச்சல் இல்லை அவனுக்கு. ஆனால், வாக்கைக் காப்பாற்றும் வக்குதான் இல்லை. ராதா தைரியமாகக் கோபித்துக் கொண்டாள். உண்ணாவிரதப் போராட்டம் மாதிரி மௌன போராட்டம் சிந்தினாள், அவன் சிந்திப்பான் என்ற நம்பிக்கையில். கண்ணன்தான் மீண்டும் பேசினான். “கோவிச்சுக்காத டியர். நா என்னா செய்யிறது நீயே சொல்லு? பாதி தூரம் வந்துட்டேன்; திடுதிப்புனு மழ புடிச்சிக்கிச்சி. வீட்டுல இருந்து வெளியாவும்போதே தெரிஞ்சிருந்தா காடியக் கொண்டாந்துருப்பேன். ட்ராபிக் ஜேமுக்கு பயிந்துகிட்டுதான் மோட்டரக் கொண்டுவந்தேன். பாத்தா மழ வெச்சி வாங்குது! உனக்கே நல்லா தெரியுந்தானே எனக்கு மழைல நனஞ்சா ஒடம்புக்கு ஒத்துக்காதுன்னு…. ஹனி, பேசுடா”

ராதா சிவன் மாதிரி. வரம் கொடுப்பதற்கு முன்னால் சோதனைகள் கொஞ்சம் கடுமையாகத்தான் கொடுப்பாள் கண்ணன் விஷயத்தைப் பொருத்தமட்டில். கண்ணனுக்கு அதிலும் ஒரு ‘கிக்’ இருப்பதை அவள் அறிந்திருந்தாள். யார் யாரிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று சின்ன வயசில் அம்மா சொல்லித்தந்த பாடத்தை என்றைக்குமே மறந்ததில்லை அவள். போனை பொத்தென்று வைத்ததில் இந்நேரம் என் வேதனையை அவன் உணர்ந்திருப்பான் என்ற நம்பிக்கையில் மீண்டும் சன்னலுக்கு வெளியே எட்டிப்பார்த்தாள். சலிப்படைந்துபோன ராதாவைத் தாஜா செய்ய ரம்பையும் ஊர்வசியும் மும்முறம் காட்டிக்கொண்டிருந்தனர்.

இந்த ஃப்ளாட் வீடு ராதாவுக்கு ரொம்ப பிடித்திருந்தது. இருபத்தி நான்காவது மாடியிலிருந்து சன்னல் வழியே எட்டிப்பார்க்கும்போது அண்டத்தோடு லயித்துப்போகிற ஒரு மன நகர்வு இருப்பது உண்மைதான். இறைவனும் இறந்துபோன அம்மாவும் இருக்கிற இடத்தையும் அந்த ஃப்ளாட்டின் இருபத்தி நான்காவது மாடி ஏழாம் எண் இணைக்கிற முடிச்சாக விளங்குகிறது அந்தச் சன்னல் விளிம்பு. இரவுகளில் நட்சத்திரங்களை எண்ணி விளையாடுவதும் பகல்களின் இறைவன் போல் மேலே நின்றுகொண்டு தரையில், பாபம் செய்து மறுபிறவியெடுத்தும் திருந்தாமல் திரிகிற மனித மூட்டைகளின் நடவடிக்கைகளை கண்காணித்துக்கொண்டும் இருப்பது தனிமைப் பொழுதுகளில் அவளது பொழுதுபோக்குகள். அப்போதெல்லாம் ம‌னித‌ வாழ்வுக்கு பெரிய‌ அர்த்த‌ம் இல்லாத‌தாக‌ அவ‌ளுக்குத் தோன்றும். அந்த‌ எண்ண‌ம் ம‌ட்டும்தான் இன்ன‌மும் அவ‌ள் வாழ்வை ந‌க‌ர்த்த‌ உந்திக்கொண்டே இருக்கிற‌து.

போன் கூப்பிட்டதும் அவளது பிரக்ஞை முகில்களின் பிடியிலிருந்து தப்பித்துக்கொண்டுவிட்டது. எடுத்தாள்; மனசு கேட்காமல் மணியடித்துக் கூப்பிட்டவன் கண்ணன்தான். இந்த முறை கோபத்தைக் கொஞ்சம் தணித்துக்கொள்ளலாம் என்று தீர்மானித்திருந்தாள்.

“ஹலோ ராதா, கோவிச்சுக்காத லா… தோ மழ நிக்குற மாதிரி இருக்கு. இன்னும் பத்தி பதினஞ்சி நிமுசத்துல நின்னுரும். பீ.ஜே.லருந்து புக்கிட் பிந்தாங் வர எனக்கு பதினஞ்சி நிமுசம்தான் ஆவும். அறமணி நேரத்துல டாங்னு அங்க வந்து நிப்பேன் பாரேன்,” மீண்டும் வாக்குறுதி. ராதா மௌனம் கலைத்தாள். “சரி சரி… செய்யிறத செஞ்சிருங்க; அப்பறமா வந்து மன்னிப்பு கேளுங்க! வர்ரதே வாரத்துல ஞாயித்துக் கெழம லீவுல மட்டுந்தான். அதுலயும் இவ்ளோ கோளாரு! கொஞ்சம் வெள்ளனையே கெளம்பிருக்களாம்ல? என்னயும் வெட்டியா காக்க வெச்சிட்டீங்க,” கோபத்தைச் சொல்லில் மட்டும் காட்டி கொஞ்சலை தொனியில் காட்டும் திறமை எல்லாருக்கும் வருவதில்லை.

காலிங் பெல் ஓசையைக் கேட்டதும் தெரிந்துவிட்ட‌து கண்ணன் கண்ணாபின்னாவென அந்தக் காலிங் பெல்லை துன்புறுத்துகிறான் என்று. ஓடி வந்து கதவைத் திறந்துவிட்டு அவன் முகத்தைப் பார்க்காமலேயே மீண்டும் போய் சோஃபாவில் வாஞ்சையாகச் சாய்ந்துகொண்டாள். “உனக்காக மழையென்று கூட பார்க்காமல் ஓடி வந்தேன் பார்” என்று காட்டுவதற்கு மாதிரி மழைத்துளிகளைக் மேலே தெளித்துக்கொண்டு வந்தவனுக்கு அவள் கண்டுகொள்ளாமல் போனது அவனது முயற்சிக்குச் சின்ன நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டது போன்று இருந்தது.

அவளுக்கு விளக்கம் சொல்லித் தாஜா செய்யவேண்டிய அவசியம் கண்ணனுக்கு இல்லைதான். ஆனாலும், அந்த வாரத்து ஞாயிற்றுக்கிழமை நூறு சதம் மார்க்கு வாங்க இதெல்லாம் தேவைப்பட்டது.

சப்பாத்தை கழற்றிவிட்டு குளியல் அறைக்குச் சென்று தலையைத் துவட்டிக்கொண்டான். மீண்டும் ஹாலுக்கு வரும்போது போனில் யாருடனோ உரையாடிக்கொண்டிருந்தாள் ராதா. ஆகக் கடைசியாக “நாளைக்கு வாங்களேன்” என்று சொன்னது மட்டும்தான் விளங்கியது. அதற்குமுன் என்ன பேசினாள்; யாருடன் பேசினாள் என்பதெல்லாம் தெரியாத சூட்சுமம்தான்.

அதையெல்லாம் துப்புத்துலக்க அவனுக்கு நேரமில்லை. மூன்று பேர் அமரும்படி நீளமாகச் செய்துவைத்திருந்த சோஃபாவில் டயானா இளவரசியை நினைவுக்குக் கொண்டுவரும் கண்கள், பாதி மூடிய மாதிரியும் மீதி திறந்த மாதிரியும் இருக்க மிதமாகச் சார்ந்து படுத்திருந்த அவளை அப்படியே அள்ளிக்கொள்ளவேண்டும் என்று மட்டும்தான் தோன்றிற்று.

வரும்போதெல்லாம் ஒரு வீடியோ படத்தை எடுத்து வருவதும் அதை ராதாவோடு கட்டிலில் சாய்ந்துகொண்டு ஆவலோடு பார்ப்பதும் கண்ணனது விருப்பங்களில் ஒன்று. இந்த முறையும் ஏதோ ‘கசமுசா’ படத்தைத்தான் கொண்டு வந்திருந்தான் என்பது போகப்போகத்தான் அவளுக்குத் ‘தெரிந்தது’. படம் முடிந்ததோ இல்லையோ, கண்ணன் வந்த வேலை திருப்திகரமாக முடிந்தது. அவள் மீண்டும் கசங்கிப்போனாள்.

அச‌தியில் ப‌டுத்திருந்த‌வ‌ளுக்கு மீண்டும் காலிங் பெல் ஓசையைக் கேட்ட‌தும் அது க‌ன‌வோ என்று ஒரு த‌ர‌ம் தோன்றி பின்ன‌ர் பயந்து பதறியடித்து சிந்தி சிதறிக்கிடந்த உடை(மை)களைப் பொறுக்கியெடுத்து போர்வையால் உடலைச் சுற்றிக்கொண்டு படுக்கை அறையை விட்டு வெளியே வந்தாள். இருப‌த்து நான்காவ‌து மாடியிலிருந்து மீண்டும் ஒருத‌ர‌ம் கீழே ம‌னித‌ ந‌க‌ர்ச்சியைப் பார்த்தாள்.

க‌ண்ண‌ன் விட்டுச்சென்ற‌ இருநூறு வெள்ளியை மேசையிலிருந்து எடுத்துக்கொண்டு சுற்றியிருந்த போர்வையோடே போய்க் கதவைத் திறந்தாள். சுப்பிரமணியன் நின்றுகொண்டிருந்தான்.

- டிசம்பர் 2009 

தொடர்புடைய சிறுகதைகள்
“இன்னைக்கு நான் ரெண்டுல ஒன்னு கேக்குறதே சரி!” கடுப்பின் உச்சத்தில் இருந்த எனக்கு, கற்று வைத்திருந்த யோகப் பயிற்சியும் வேலை செய்யவில்லை; ப்ளட் ப்ரஷர் மாத்திரையும் வேலை செய்யவில்லை. பொட்டில் நரப்புப் பொட்டலங்களில் சுண்டக் காய்ச்சின ரத்தம் அழுத்ததைக் கொடுக்க அதைத் ...
மேலும் கதையை படிக்க...
23 வயது முதல் 28 வயது வரை அங்கயற்கன்னிதான் குடும்பத்தில் மூத்தப் பெண். வயது இருபத்து மூன்றாகிவிட்டது. இருபத்தைந்து வயதில்தான் அவளுக்குத் திருமணம் செய்து வைப்பதென பழனிவேலும் மண்டோதரியும் திட்டமிட்டிருந்தார்கள். அங்கயற்கன்னிக்கு அடுத்து வரிசையில் நிற்பவள் பூங்குழலி. ஆனால் அவளுக்கு இப்போதுதான் பத்தொன்பது. ...
மேலும் கதையை படிக்க...
ஆசுவாசமாய் நிறம்பி கொண்டிருக்கும் மேகங்களைப் பார்க்கும்போது அதன் அழகை ரசிக்கும் மனோபக்குவம் பலருக்கு வருவதில்லைதான். அது அழைத்துவர இருக்கிற மழையைச் சமாளிக்க, முடிந்தவரை முடக்கிவிட, அது முடியாமல் போக வரும் கோபத்தை யார் மேலாவது அல்லது எதன் மேலாவது காட்டுவது, சொல்லப்போனால் ...
மேலும் கதையை படிக்க...
[என்றாவது ஒரு நாள் தமிழீழம் மலர்ந்தே தீரும் என்று நம்புகிறவர்களுக்கும் தமிழீழப் போராளிகளுக்கும் இப்படைப்பு சமர்ப்பணம்] ஆரவமர பத்து மணிக்கு எழிஞ்சே பழக்கமா போயிடிச்சிப்போ. என்னாவோ கெட்ட பழக்கம்! கண்ண முழிச்சதும் சொவருல ஒட்டிவச்சிருக்குற அந்தப் படத்தப் பாத்துப்புட்டாதான் நமக்கு நாளே ஓடும். ...
மேலும் கதையை படிக்க...
1 அலை அலையாய் திரளாவிட்டாலும் ஏதோ தெரிந்தவர்கள் தூரத்து உறவினர்கள் வருகை வரை எட்டியிருந்தது அன்றைய கூட்டம். தமிழ்ப்பிரியன் எழுத்துக்கும் அசைக்க முடியாத வாசகர் கூட்டம் உண்டென சிறு சிறு குழுக்கள் நிரூபித்துக்கொண்டிருந்தனர். நல்ல வேலை, இந்த ஞாயிற்றுக்கிழமை அவர்களுக்கு வேலையேதும் இல்லை. தமிழ்ப்பிரியனின் ...
மேலும் கதையை படிக்க...
அதோ, அவள் போகிறாள். போகட்டும்..... இனி நானிருந்த இடத்தை நிம்மதிக்கு விட்டுக் கொடுக்கிறேன். நிம்மதியே! எனக்கு பதில் நீ அவளோடு இரு. அவள் வாழ்க்கையில் இனி நான் குறுக்கிட மாட்டேன். கண்களைத் தாண்டிச் செல்லும் பிரியாவை போ என்று புத்தி சொன்னாலும், போகாதே ...
மேலும் கதையை படிக்க...
1 திருமணமாகி மூன்றாண்டுகள் ஒய்யாரமாய் ஓடிவிட்டன. என் மருமகள் செண்பகத்தின் வயிற்றில்தான் இன்னும் எந்த மாறுதலும் இல்லை. திருமணத்திற்கு முன்பு இருந்த அதே தட்டை வடிவில்தான் இருக்கிறது. அது கொஞ்சம் உப்பினால்தான் என்னவாம்? பேரனையோ பேத்தியையோ பார்க்க எனக்கு மட்டும் ஆசை இருக்காதா? ...
மேலும் கதையை படிக்க...
ஊட்டச்சத்து தின்னுத் தின்னு நாளுக்கு நாள் வெரசா வளருது பார் கட்டடம். மாசத்துக்கு ஒரு கட்டடமாச்சும் முளைச்சுருதுடா சாமி இந்த கோலாலம்பூருல. பய மவனுங்களுக்கு மட்டும் பணம் காய்க்கிற மரம் எப்பிடிதான் கெடைக்குதோ? போன வாரம் வரைக்கும் அந்த பிரிக்பீல்ட்ஸ் ட்ராபிக்காண்ட ...
மேலும் கதையை படிக்க...
“முடியவே முடியாது” என்று கறாராகச் சொல்லிவிட்டேன். விடவே விடமாட்டோம் என்று கெஞ்சிக்கொண்டிருந்தார்கள். இந்தப் பிள்ளைகளைப் பார்த்தாலும் பரிதாபமாகத்தான் இருக்கிறது. போனால் போகிறது என்று அவர்கள் போக்குக்கு ஒத்துப்போகலாம் என்றுதான் தோன்றிற்று என்பது என்னவோ உண்மைதான். ஆனாலும் எனக்கென்று ஒரு ‘இது’ இருக்கிறது அல்லவா? ...
மேலும் கதையை படிக்க...
அறிவியல் பாடத்தில் அன்றுதான் போதித்தார்கள் அது எதனால் என்று. ஒரு எக்ஸ் ஒரு ஓய் குரோமோசோம் ஆணின் மரபணுவாகவும் இரு எக்ஸ் குரோமோசோம்கள் பெண்ணுக்குரிய மரபணுவாகவும் இருக்கும். ஆனால் ஆணுக்கு ஒரு ஒய் குரோமோசோமோடு இரு எக்ஸ் குரோமோசோம் அமைந்து விட்டால் ...
மேலும் கதையை படிக்க...
உடைந்த மூக்கில் இன்னொரு அரசியல்
அங்கையற்கன்னியின் திருமணமும் ஐந்தாண்டு திட்டங்களும்
நேற்றைக்கு ராதா
தமிழீழம் 2030
எழுத்தாளர் கதை
அவள் போகட்டும்
யார் அந்த சண்முகம்?
கோல பெர்ணம் எஸ்டேட்டிலிருந்து கோலாலம்பூர் மாநகர் வரை
நான் பாடிய பாட்டு
ஆண்மகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)