மழை

 

மழை அப்போது தான் பெய்யத் தொடங்கியது. ஏ.ஆர்.ரகுமான் இசை போல மென்மையாக ஆரம்பித்து அட்டகாசமாய் அதிரத் தொடங்கியது. எனக்கு எப்போதுமே மழையை ரசிக்க மட்டுமே பிடிக்கும், நனையப் பிடிப்பதில்லை. மழைக்கு முந்திய குளிர்ந்த தென்றலும், மழை பெய்யும் பொழுது எழும் மண்வாசமும், மழை பெய்து முடித்த பின் மரங்கள் கொண்டாடும் பசுமையும் பிடிக்காதவர்கள் யாரும் இருப்பார்களா என்ன?.

வீட்டின் ஜன்னலுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அம்மா போட்டுத் தரும் காப்பியைக் குடித்துக் கொண்டே மழையை வேடிக்கை பார்ப்பது எனக்கு மிகப் பிடித்த பொழுது போக்கு. ஒவ்வொரு முறையும் மழை என் அம்மாவின் காப்பியின் சுவையைக் கொஞ்சம் கூட்டிப் போயிருக்கிறது. மழை பெய்யும் பொழுதெல்லாம் மின்சாரம் தடை படுவதென்பது எங்கள் ஊரின் எழுதப்படாத விதி. சிற்சில இடங்களில் மட்டுமே விதிமுறைகள் மீறப்படுவது விரும்பப் படுவதில்லை. அன்றைக்கும் மழை எங்கள் வீட்டிற்குள் டி.வி.யின் இரைச்சலற்ற, மெழுகுவர்த்தியினால் மெருகூட்டப்பட்ட இரவினை பரிசாக தந்து சென்றது.

அடுத்த பிறவியில் நம்பிக்கையில்லாத போதும் அறியப்படாத நிகழ்வுகளில் நிலவும் ஒரு ஈர்ப்பு எப்போதுமே குறைந்ததில்லை. அதனால் அடுத்தொரு பிறவி வாய்க்குமானால் மழையாகப் பிறக்கும் வரமே வேண்டிக்கொண்டேன் அதிகம் பழக்கமில்லாத இறைவனிடம். மழை மட்டுமே அனைவராலும் விரும்பப் படுகின்ற விருந்தாளி. அழைக்காமலே வரும் நண்பன்.(மழை ஆண்பாலா ? பெண்பாலா ?). தீண்டாமை தீண்டப்படாத சமூக சேவகன். எதிர்ப்பார்ப்புகளின்றி உதவும் துணைவன். இப்படி எண்ணற்ற கற்பனைகளுடன் உறங்கியும் போனேன்.

மழைக்கு மறு நாள், மழையை நானும் என்னை மழையும் மறந்து போயிருந்தோம். சிறு வயதில் பள்ளிக்கூடம் பெற்றிருந்த இடத்தை இப்போது அலுவலகம் கைப்பற்றிக் கொண்டது. பிடிப்பதேயில்லை போவதற்கு. மிச்சம் வைத்துச் சென்ற நேற்றைய வேலைகள் என் அவசரத்தை அவசியப்படுத்தின. அம்மா பண்ணி வைத்த இட்லிகள் நாலை உள்ளே தள்ளிவிட்டு அவசரமாய்ச் சென்று ஆட்டோ பிடித்தேன். நான் தாமதமாகச் செல்லும் நாட்களிலெல்லாம் எனது மானேஜர் சீக்கிரம் வந்து தொலைவார். வேண்டிக்கொண்டேன்.

சற்று வேகமாகச் செல்லுமாறு ஆட்டோ ஓட்டுனரை கேட்டுக்கொண்டேன். சொன்னதைக் கேட்கும் ஆட்டோ ஓட்டுனர் வாய்க்கப் பெற்றேன். பைக்கில் செல்லும் போது ஆட்டோக்காரனையும், ஆட்டோவில் செல்லும் போது பைக்காரனையும் தூற்றும் ஒரு சராசரி இந்தியன் நான் என்பதை மீண்டும் ஒரு முறை நிருபித்துக் கொண்டேன். மூன்றே வினாடித் தாமதத்தினால் அறுபது வினாடிகள் சிக்னலில் சிக்கிக் கொண்டோம். அப்போது தான் அவரைப் பார்த்தேன் நடை பாதையின் ஓரத்தில் தன் இரு கைகளையும் மார்போடு அனைத்து பிடித்துக் கொண்டவாறு படுத்திருந்தார். வயது எழுபதிருக்கலாம். சுருளான பரட்டை முடி. கத்தி பட்டு வருடங்களாயிருக்கும் தாடி.என்பு தோல் போர்த்திய உடம்பு. கண்டிப்பாக உண்டு பல நாள் ஆகியிருக்க வேண்டும். பசி என்னும் கொடிய வியாதியால் பாதிக்க பட்டவர் போல் தெரிந்த்தது. இருப்பதே தெரியாதவாறு இருந்த வயிற்றில் இருக்கிக் கட்டப்பட்டிருந்தது வேட்டி. இல்லை இல்லை துண்டு. அதுவும் நனைந்து போயிருந்தது. அவரது உடல் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது. அவர் எதையோ முனுமுனுத்துக் கொண்டிருந்தார். எனக்கு சுருக்கென்றிருந்தது. இத்தனையும் பார்த்துவிட்டு அந்தப் பக்கம் திரும்பிக் கொண்டேன். அறுபது வினாடிகள் கடந்து போய் ஆட்டோ புறப்பட்டிருந்தது.

அன்று ஏனோ மதியம் சாப்பிடவில்லை. வயிறு சரியில்லை என்று நண்பர்களிடம் காரணம் கூறினேன். மனது பாரமாக இருந்தது. அலுவலகத்திலிருந்து சீக்கிரம் கிளம்பிவிட்டேன். அந்த சிக்னலில் காலையில் பார்த்த பெரியவரைத் தேடினேன். காணவில்லை. அதன் பிறகு எப்போதுமே அவரைப் பார்க்கவில்லை.

இப்போதெல்லாம் நான் மழையை ரசிப்பதில்லை.

- செப்டம்பர் 29, 2010 

தொடர்புடைய சிறுகதைகள்
கடிதம் - 1: அன்பின் ஷிவ், நலம். நலமறிய அவா என்றெல்லாம் தொடங்குவது அவ்வளவு சிறப்பாக இருக்காது. அதிகாலையில் உன்னுடன் அவ்வளவு நேரம் பேசிவிட்டு இப்போது கடித இலக்கணம் கருதி 'நலமா' என்று ஆரம்பித்தால் அது நகைப்புக்குரியதாகத் தான் இருக்கும். உன்னைப் போலவோ உனக்குப் ...
மேலும் கதையை படிக்க...
தெருவின் இருபுறமும் ட்யூப் லைட் வெளிச்சத்தில், உரல்களில் பெண்கள் மாவிடித்துக் கொண்டிருந்தனர். சில வீடுகளில் ஆண்கள் வெளியே பாயை விரித்து சீட்டு விளையாடுவதற்கு தயார் செய்து கொண்டிருந்தனர். ஒலிப்பெருக்கியில் குமரிப் பெண்ணின் உள்ளத்தில் குடியிருக்க அப்ளிக்கேஷன் போட்டுக் கொண்டிருந்தார் டி.எம்.எஸ். வேப்ப ...
மேலும் கதையை படிக்க...
மூன்றாவது முறையாக விஷ்ணுவின் மொபைல் ஒலிக்கத் தொடங்கிய போது அவனால் எடுக்காமல் தவிர்க்க இயலவில்லை. அதுவும் அழைத்தது ஸ்ருதியாக இருக்கும் போது. " ஹே... சொல்லுமா.. " " .................. " " இல்ல இல்லடா.. கொஞ்சம் ஒரு சின்ன வேலையா இருந்தேன். அதான்.. அத ...
மேலும் கதையை படிக்க...
என் சின்ன வயதில் சட்டையில்லாத அப்பா எப்படியோ இருப்பார் அவருடைய தளர்ந்த இந்த வயதில் சட்டை போட்டால் அப்பா எப்படியோ இருக்கிறார் அப்படியே இல்லாமல் இருப்பதுதான் அவருடைய சாயல் போல - கல்யாண்ஜி நகரத்தின் ஆகச்சிறந்த மருத்துவமனையின் "ஆன்காலஜி" பிரிவின் வரவேற்பறையில் அமர்ந்திருக்கிறேன். என்னுடைய ...
மேலும் கதையை படிக்க...
மிகவும் நிதானமாக பைக்கை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு அதன் தலையில் படிந்திருந்த தூசியை அதற்காகவே முன்புறம் வைக்கப் பட்டிருந்த துணியால் துடைத்து விட்டு வினோதினியைப் பார்த்து உள்ளே போலாமா என்றான் ஹரி. அவளும் சரி என்று தலையை ஆட்டினாள் தான் வைத்திருந்த மல்லிகைப் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு காதல், மூன்று கடிதங்கள்
மறதி
உதயசூரியன்
அப்பா
வினோதினியின் பூந்தொட்டி

மழை மீது ஒரு கருத்து

  1. kariakalrajan says:

    நீங்கள் சொல்வது முற்றிலும் புரியவில்லை, இடையில் திசை மாறி விட்டதாக நான் உணர்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)