ஜ்வாலை

 

தட்டில் கொய்து வைத்திருந்த பிச்சி மொக்குகள் கட்டவிழ்ந்து சுற்றுப்புறத்தையே சுகந்தமாக்கின. கதிரவன் காய்ந்து காய்ந்து களைத்துப் போனவனாய் மேல்திசையில் மயங்கி வீழ்ந்தான். இருளோனின் அரசாட்சி ஆரம்பமாகியது. பத்து ஜாமம் வரை யக்ஞவல்கியர் வரவில்லை.

கார்த்தியாயினி சுத்தமான பாரிஜாதமலர். நிலை குலைந்து போயிருந்தது. யக்ஞவல்கியர் ஏன் இன்னும் வரவில்லை? வரவேமாட்டாரோ? மாசு மறுவற்ற மனதில் மாதிரிக்கொன்றாய்ச் சந்தேக ஊர்வலம். வழியைப் பார்த்துப் பூத்துப் போன விழிகளின் இமைக் கதவுகள் கீழே இறங்க மறுத்தன.

வழக்கத்துக்கு மாறாக இன்று அவர் அங்கேயே தங்கி விட்டாரோ? ரிஷிபத்தினி உள்ளம் தடாகத்தின் தாமரை போலக் கூம்பியது. மைத்ரேயி ஒன்றும் மயக்குக்காரி இல்லை என்றாலும் கணவர் என்று வரும்போது முனிவரின் பத்தினியாலும் பெண் பெண் தானே?
கற்பனைப் பறவை முடிந்தவரை சிறகடித்துக் களைத்துத் தன் வீட்டுக்குத் தானே தாளிட்டுக் கொண்டது. யக்ஞல்கியர் மைத்ரேயியுடன் பர்ண சாலையில்தான் இரவு தங்கியிருந்தார் என்ற செய்தி மற்ற சீடர்களின் மூலம் கார்த்தியாயினி செவிகளில் செந்தணலாய் நுழைந்தது. சோகம் மறைந்து கோபம் பீறிட்டு இதயத்தை உலுக்கியது.

மைத்ரேயி வாக்கு மீறியிருப்பாளோ? இரவு முழுதும் விழிகள் துஞ்சவில்லை. வஞ்சித்து விட்டாளோ மைத்ரேயி? குழப்ப மேகம் நிலவு முகத்தையே இருட்டாக்கியது.

காலை இளம்போது; யக்ஞவல்கியர் கதவைத் தட்டினார். அவசரமாக எழுந்தவள் ஒருகணம் நிதானித்தாள். கதவைத் திறக்கவும் தடுமாறினாள். அடுப்பைப் பற்ற வைக்கவும் முடியாமல் தீக்குச்சிகள் தடுமாறின. பால் கூடக் காரணமில்லாமல் பொங்கியது. கையிலிருந்த பாத்திரங்கள் கீழே விழுந்து கார்த்தியாயினின் சஞ்சலத்தைத் துல்லியமாகப் புலப்படுத்தின.

யக்ஞவல்கியர் ஏதும் அறியாதவர் போல் அரைக் கண்ணை மூடியிருந்தார். உதடுகளில் இளநகை.

“பெண்ணே ஏன் சஞ்சலம்?”

“ஒன்றுமில்லை சுவாமி!” – பேதை தத்தளித்தால் தரைமீனாக,
“மைத்ரேயி இன்று இங்கு வருவாள்”

முற்றும் அறிந்தவரின் மனம் இவள் சந்தேகத்தையும், கண்டு கொண்டதோ? திடுக்கிட்டாள்.

“மைத்ரேயி வாக்குத் தவறமாட்டாள், ஏனெனில் அவள் ஒரு தவயோகி,”

“புரிகிறது”

யக்ஞவல்கியரின் ஞானமும், புகழும் நாடு முழுவதும் பரவியிருந்த சமயம் -

மாலை மயங்கும் வேளையில் கொத்துமலர்த் தோட்டம் ஒன்றைப் போல் அழகு மிளிர நடந்து வந்தாள் மைத்ரேயி.

தாயே! எனக்கு உன் கணவரை திருமணம் செய்துவை என்று அந்தத் தேன் மலர் கேட்டதும் திகைத்தாள். பேதை இல்லை என்று சொல்லத் தெரியாதவளாயிற்றே கார்த்தியாயினி இல்லை என்று சொல்லிவிட்டாள் இவளுக்கே இல்லை என்று ஆகிவிடுமோ?

“அன்னையே, நான் உன் கணவரை மணக்க விரும்புவது அவரின் ஞானத்தைப் பெறவேயன்றித் தேக இச்சைக்காக அல்ல. ஒரு பருவம் அடைந்த பெண் ஆணிடம் பாடம் கற்பதை இந்த உலகம் ஏற்காது. அதற்காக இந்தத் திருமணம் ஒரு கவசம், அவ்வளவே! என்னை நீ நம்பலாம்”

நம்பினாள் கார்த்தியாயினி. இன்று கணவரும் நம்பச் சொல்கிறார். முடியவில்லையே!

நிலாக்காலம், தட்டப்பட்ட யக்ஞவல்கியரின் குடில் கதவுகள் உத்தரவிற்காகத் தயங்கி நின்றன.

மைத்ரேயி வந்தாள். மலர்த்தோட்டமாக அன்று; அறிவுக் கூடமாக, வேதபாடம் ஆரம்பமாகியது. உள்ளே கார்த்தியாயினியின் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது. நாழிகை ஓடிப் பகலும் மறைந்தது. பாடமோ எஞ்சியிருந்தது.

“மைத்ரேயி, இன்று இரவு இங்கு தங்கிச் செல்லலாம்” ஞானப் பேரொளி ஆணையிட, வேதவித்து அதை ஏற்றுக் கொண்டாள்.
நடுஜாமம், மைத்ரேயி தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தவத்தில் ஆழ்ந்திருந்தாள்.

காய்ந்த நிலவு யக்ஞவல்கியருக்குக் காய்ச்சலை ஏற்படுத்தியது. தனது உணர்வுகளை அடக்க முடியாமல் கார்த்தியாயினியை அணைக்க முயல… “போதும், மைத்ரேயி இருக்கிறாள்” கார்த்தியாயினியின் குரலில் கனல் தெறித்தது.

சிரித்தார் யக்ஞவல்கியர்.

“அவளைப் பற்றிக் கவலை வேண்டாம். தவத்தில், மூழ்கினால் அவள் ஜடமாகி விடுவாள். பயப்படாதே!”

“என்ன சொல்கிறீர்கள்!?”

“நீ நினைப்பதுபோல் மைத்ரேயிக்கு உலகியல் பற்று கிடையாது. காமம், குரோதம் போன்ற உணர்வுகள் கிடையா, அவள் ஒரு தவயோகி, வேண்டுமானால் அவளை எழுப்பிப் பார்”

எழுப்பி, எழுப்பி கார்த்தியாயினிதான் துவண்டு போனாளேயன்றி மைத்ரேயியின் மைவிழி மலரவேயில்லை. நாடகமாக இருக்குமோ? குழம்பினாள் கார்த்தியாயினி.

பெரிதாகச் சிரித்த யக்ஞவல்கியர் “தண்ணீரைத் தலையில் ஊற்று “ என்றார்.

கார்த்தியாயினி ஒரு குடம் நீரை மைத்ரேயியின் தலையில் ஊற்ற, அமைதியாகக் கண் விழித்த மைத்ரேயி “சுவாமி, மன்னிக்க வேண்டும். தவத்தில் ஆழ்ந்துவிட்டேன், என்ன வேண்டும்?”

கார்த்தியாயினிக்கு வியப்பாக இருந்தது. எதிர்பாராத விதத்தில் ஒருத்தி பதறமாட்டாளோ? என்ன ஒரு அமைதி? கணவர் சொன்னது நிஜம் தான்! இவள் சாதாரணப் பெண்ணல்ல!

சிந்தனையில் சில கணங்கள் சிதறின.

தெய்வீக ஒளி பொருந்திய மைத்ரேயியைப் பார்க்கவே கூசிப் போன கார்த்தியாயினி ஒரு பரிசுத்தமான கற்பூர ஜ்வாலையின் முன் தன்னுடைய பேதமை அழிந்த போவதை உணர்ந்தவளாய் மைத்ரேயியின் கால்களில் விழுந்து “மைத்ரேயி என்னை மன்னித்துவிடு” என்றாள்.

காரணம் புரியாமல் மைத்ரேயி விழித்துக் கொண்டிருந்தாள்.
ஒரு அழுக்குமனம் சுத்தமான திருப்தியில் சிரித்துக் கொண்டிருந்தார் யக்ஞவல்கியர்.

- மன்னை இராசகோபால சுவாமி கலைக் கல்லூரி ஆண்டு மலர் (87 – 88) 

தொடர்புடைய சிறுகதைகள்
வினிதா தலைச்சன் பிரசவத்திற்காக அம்மா வீட்டிற்கு வந்திருக்கிறாள். முன்பைவிடக்கொஞ்சம் கறுத்து, கன்னத்தில் சதை வைத்துப் பூசினாற் போன்று இருந்தாள். பார்வதிக்கு அவள் ஒரே பெண். அதனால் பார்த்து பார்த்துச் செய்தாள். குங்குமப்பூ போட்ட பால், தினமும் ஒரு கீரை, பத்து மணிக்கு ஆரஞ்சு ...
மேலும் கதையை படிக்க...
“எனக்கு அப்பவே தெரியும். நான் எத்தனை படிச்சு, படிச்சு சொன்னேன். கேட்டியா? ரொம்ப மேதாவியா உன்னை நினைச்சு செஞ்சே, இப்ப என்ன ஆச்சு? அத்தனையும் போச்சு” – அப்பா. “பணம், பணமுன்னு பறந்தியே, இருக்கிற வேலை போதாதா? ஏன் அகலக்கால் வைக்கணும்” – ...
மேலும் கதையை படிக்க...
“நாணா, உனக்கு விஷயம் தெரியுமா? நம்ம லலிதா மேடம் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாம்” ரங்கசாமி சொன்னதும் அதிர்ச்சியால் கையில் உள்ள பேப்பர் கீழே விழ “வாட் நான்சென்ஸ், உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு இப்படியொரு புரளியைக் கிளப்பி விட?” கோபமுற்றான் நாணா என்ற நாராயணசாமி. “ஆமாண்டா, நாணா, ...
மேலும் கதையை படிக்க...
சங்கர ஹாலில் நடக்கப்போகும் கவியரங்கத்திற்கு செல்ல புறப்பட்டுக்கொண்டிருந்தான் கவிப்ரியன். சலவைக்குப் போட்டிருந்த கதர் ஜிப்பாவையும், கதர் வேஷ்டியையும் உடுத்திக்கொண்டான். ஒன்றிரண்டு பல்லுப்போன சீப்பால் தலையை வாரிக்கொண்டு, ஸ்டாண்டில் மாட்டியிருந்த அவனது ஒரே சொத்தான அந்த ஜோல்னா பையை எடுத்து மாட்டிக்கொண்டு, தேய்ந்துபோன செருப்பைக் காலில் ...
மேலும் கதையை படிக்க...
"ஏய் ,பவுனு ....மண்ணெண்ணெய் வாங்க கொடுத்த காசை கோயில் உண்டியல்ல போட்டியா?" ஆக்ரோசமாகக் கத்தினான். அவள் மச்சான் முருகேசன். "என்னய்யா பேசுறே? போன மாசம் உடம்பு முடியாம வீட்ல உழுந்து கிடந்தியே ...அப்பா நீ நல்லாயிரணும்னு வேண்டிகிட்ட நேர்த்திக்கடன். அதை தீர்த்தது தப்புங்கிரியா?" "நேர்த்திகடனை ...
மேலும் கதையை படிக்க...
நேற்று வேறு இன்று வேறு
உன் பங்கு…என் பங்கு…
அணையா விளக்கு
கவிதைச் சிதறல்
கடலுக்கு போன மச்சான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)