காணவில்லை!

 

கடம்பன், “கோயிலுக்குத் தங்கைகள் இருவரையும் கூட்டிச் செல்கிறேன்” என்று தன் தாய் வள்ளியிடம் கூறினான்.

“சரி பத்திரமாக கூட்டிட்டு போ சின்ன பிள்ளைகள் கவனமா இரு, நீ வர எவ்வளவு நேரமாகும்” என்றாள் வள்ளி.

“அம்மா போக ஒரு மணி நேரம், வர ஒரு மணி நேரம், கோயிலுக்குள்ள ஒரு மணி நேர ஆக மூனு மூன்றரை மணி நேரமாகும்” என்றான்.

“ம்ம் கோயில் கூட்டத்தில் பிள்ளைகளை தவற விட்டுடாதே, கையிலேயே பிடிச்சிக்கோ, இரவு பத்து மணிக்குள் வந்திடு” என்றாள்.

“ஏன்மா இப்படி பயப்படுறே, நான் பத்திரமா கூட்டிட்டு போய்ட்டு வந்திடறேன்மா” என்று சொல்லிவிட்டு தன் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு சென்றான்.

கோயிலுக்குச் சென்றதும் தங்கைகளை உள்ளே அழைத்துச் சென்று சாமியை வணங்கிவிட்டு, பக்கத்தில் இருந்த கடைகளில் அவர்களுக்கு சாப்பிட திண்பண்டங்களும் வாங்கி கொடுத்து, கோயில் பிரகாரத்தில் சிறிது நேரம் விளையாட வைத்து வீட்டிற்கு அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

“வெகு நேரமாயிற்றே இன்னும் வரலியே” என்று வள்ளி வாசலுக்கு வந்து பார்த்தாள் வருகிறார்களா என்று, வரவில்லை என்றதும், உள்ளே சென்று கடிகாரத்தை பார்த்தாள் இரவு மணி பத்தானது, இன்னும் அரை மணி நேரம் கழித்து பார்க்கலாம் என்று வீட்டு வேலைகளை பார்க்கத் தொடங்கினாள்.

அரைமணி நேரம் கழித்து சாலைக்கு வந்தாள் மோட்டார் சைக்கிள் வருகிறதா என்று, ஆனால் வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை, “என்ன இன்னும் காணுமே இன்னேரம் வந்திருக்கனுமே” என்று தானாக புலம்பிக் கொண்டிருந்தாள்.

வள்ளி வீட்டுக்கும் வாசலுக்கும் நடப்பதை பார்த்து பக்கத்து வீட்டு துர்கா வந்தாள், “என்ன வள்ளி வீட்டுக்கும் தெருவுக்கும் நடந்துகிட்டு இருக்கியே, யாரை எதிர் பார்த்துகிட்டு இருக்கே” என்றாள்.

“துர்கா என் மவன் பிள்ளைகள் இரண்டையும் கூட்டிக் கொண்டு கோயிலுக்குச் சென்றான், இன்னும் வரவில்லை நேரமாயிட்டே இருக்கு அதான் பயமாயிருக்கு”

“அட என்ன வள்ளி கோயிலுக்குதானே போயிருக்கான் இதுக்கு எதுக்கு பயப்படுறே வந்திருவாங்க”

“அதில்லை துர்கா நேரமாகுதுல்ல, பகல் நேரம் என்றால் பரவாயில்லை, இரவு நேரமாயிற்றே அதான் பயமாயிருக்கு”

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே மோட்டார் சைக்கிள் வரும் சத்தம் கேட்டது. கடம்பன் மட்டுமே வந்தான் பிள்ளைகள் இருவரையும் காணவில்லை. அவனும் முழு போதையில் இருந்தான், வண்டியை நிறுத்தக் கூட முடியாமல் கீழே போட்டான் அவனும் கூடவே சேர்ந்து விழுந்தான்.

வள்ளி வேகமாக ஓடிச் சென்று அவனை தூக்கி, “பிள்ளைகள் இருவரையும் எங்கே” என்றாள்.

“அவள்ங்க வரமாத்தேனு சொல்லித்தாலுங்க, கொழுப்பெத்தவளுங்க, நானும் போங்கதினு விட்டுட்டு வந்துத்தேன்” என்றான்.

“ஏன் வரமாட்டேனு சொன்னாங்க, நீ எங்கே விட்டுவிட்டு வந்தாய்” என்றாள் வள்ளி அழுது கொண்டே கேட்டாள்”.

“ஏய்! என்னையே கேள்வி கேட்குதே, போய் அவளுங்கித்த கேளு” என்று சொல்லிவிட்டு அப்படியே கீழே சரிந்தான். என்ன கேட்டும் அவன் எழவும் இல்லை, அவன் வாயிலிருந்து எந்த பதிலும் வரவில்லை.
வள்ளி ஓவென்று ஒப்பாரி வைக்கத் தொடங்கிவிட்டாள், “நான் என்ன செய்ய, எங்கே போய் தேடுவேன், அய்யோ என் பிள்ளைகளுக்கு என்ன ஆச்சோ தெரியலியே, எங்க தவிக்குதோ தெரியலியே” என்று கத்தி அழத் தொடங்கினாள்.

துர்கா உடனே சுதாரித்துக் கொண்டு, அருகில் இருந்தவர்களை எல்லாம் கூப்பிட்டு விடயத்தை கூற, பிள்ளைகளை தேட ஆளுக்கொரு பக்கம் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினர்.

வீட்டு பொம்பளைகள் எல்லாம் கடம்பனை எழுப்பி விபரத்தைக் கேட்க போராடினர். ஆனால் அவன் அசையக் கூட இல்லை, அவன் தலையில் தண்ணியை கொட்டினர், மோர் குடிக்க வைத்தாள் போதை தெளியும் என்று அதை குடிக்க வைத்தனர், இவர்கள் போராடியதுதான் மிச்சம், அவன் போதை மிகவும் உறுதியாகவே இருந்தது.

“அவன்தான் குடிகாரன் என்று தெரியும்தானே, அப்புறம் அவன் கூட பிள்ளைகளை ஏன் அனுப்பினே?” என்று ஒருவர் கேட்க.

“கோயிலுக்கு போறானே குடிக்க மாட்டான் என்று அனுப்பினேன், இந்த பாவிபய இப்படி பண்ணிட்டானே” என்று மீண்டும் ஒப்பாரி வைத்தாள்.

“ஆமா, கோயிலுக்கு போகும் போதுதான் குடிக்க மாட்டான், வரும்போது குடிப்பான் என்று தெரியாதாக்கும்” என்று கூட்டத்தில் இன்னொருவர் சொல்ல, ஒவ்வொருத்தராக பேசிக் கொண்டு அவனை எழுப்ப முயற்சித்தனர். நேரம்தான் வீணானது அவன் எழும்புகிற மாதிரியும் தெரியல, பதில் சொல்ற மாதிரியும் தெரியல.

தேடிப் போனவர்கள் ஒவ்வொருவராக வர பிள்ளைகள் மட்டும் வரவில்லை, மணியும் பன்னிரெண்டை தாண்டியது. கோயில், வரும் வழி, கடைகள் என்று எல்லா இடமும் தேடியும், பிள்ளைகள் எங்கேயும் கிடைக்கவில்லை என்றே பதில் வந்தது. வேறு வழியில்லை காவல் நிலையம் போய் புகார் கொடுக்க வேண்டியதுதான் என்று கூறிவிட்டு, வள்ளியை அழைத்துக் கொண்டு வெளியில் வந்தனர்.

வீட்டு வாசலில் கார் ஒன்று வந்து நின்றது, அதிலிருந்து கணவன் மனைவி என இருவர் இறங்கினர், அவர்களைத் தொடர்ந்து பிள்ளைகள் இருவரும் வந்தனர். பிள்ளைகளை பார்த்ததும் வள்ளி அவர்களை கட்டிப் பிடித்து ஓவென்று அழுதாள், அவர்களை கூட்டி வந்தவர்கள் ஒன்றும் பேசவில்லை அழுது முடிக்கட்டுமென்றும் காத்திருந்தனர்.

“ஐயா, நீங்க யாரு இவங்களை எங்க பார்த்தீங்க, பிள்ளைகளுக்கு அடிபட்டிருக்கு கட்டு எல்லாம் போட்டிருக்கு, என்ன ஆச்சு” ஏன்று கேட்டாள் துர்கா.

“நாங்கள் இவர்களை சாலையில்தான் பார்த்தோம் அழுதுக் கொண்டிருந்தார்கள், சின்னை பிள்ளைகளா இருக்காங்களே என்று காரை நிறுத்தி இவர்களிடம் விசாரித்தோம், அண்ணனோடு கோயிலுக்கு வந்ததாகவும், வரும் வழியில் அண்ணன் மோட்டார் சைக்கிளை சாலையின் ஓரத்தில் கொட்டியிருந்த ஜல்லியின் மேல் ஏற்றியதால், மூவரும் கீழே விழுந்ததில், இவர்களுக்கு அடிப்பட்டதாகவும் சொன்னார்கள்.”
“அண்ணனை எங்கே என்று கேட்டோம்”, “அவர் குடித்திருந்ததால் தான் எங்களை கீழே போட்டார், அதனால் நாங்கள் பயந்து வண்டியில் ஏற மாட்டோம் என்று சொல்லிட்டோம், அதனால் அண்ணன் எங்களை விட்டுவிட்டு போய்விட்டார்” என்று சொன்னார்கள்.

“அடி ரொம்ப இருந்ததால், நாங்கள் இவர்களை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று, சிகிச்சை கொடுத்து அழைத்துவர தாமதமாகிவிட்டது, பிள்ளைகளுக்கு உங்களுடைய தொலைபேசி எண் எதுவும் தெரியவில்லை, அதனால் உங்களுக்கு தெரிவிக்கவும் முடியவில்லை” என்றார்.

வள்ளியிடம், “அம்மா! நீங்கள் அவர்களை கோயிலுக்கு அனுப்பியது தவறில்லை, ஆனால் இந்த மாதிரி ஆட்களை நம்பி அனுப்பாதீர்கள், இவர்கள் திருந்துவார்கள் என்று நாம் நம்புவதைவிட, இவர்களிடம் கவனமாக இருப்பதுதான் நாம் செய்ய வேண்டியது. இவர்கள் திருந்துவது என்பது நாம் சொல்லி அல்ல, அவர்களாகதான் திருந்த வேண்டும், தான் செய்வது தவறு என்று அவர்கள் உணரும் வரை, இந்த மாதிரி ஆட்கள் திருந்த மாட்டார்கள்.”

“பெண்களுக்கு ஆபத்து என்பது எந்த நேரத்தில், எந்தவிதத்தில் வரும் என்று தெரியாது, அதனால் நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இந்த பிள்ளைகள் சிக்கக் கூடாதவர்களிடம் சிக்கியிருந்தால் என்னவாகியிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.” என்றார்.

வள்ளி, அருகில் இருந்தவர்கள் எல்லாம் அவர் பேசியதை கேட்டு, ‘நீங்கள் சொல்வது சரிதானுங்க, இந்த மாதிரி ஆட்கள் திருந்துவார்கள் என்று எதிர்பார்ப்பதைவிட, நாம் எச்சரிக்கை மணியோடு இருப்பதே மேல்” என்றனர்.

வள்ளி அவருக்கும், அவர் மனைவிக்கும் இருகை கூப்பி நன்றி சொல்லி, பிள்ளைகளையும் அவர்களுக்கு நன்றி சொல்லச் சொல்லி, அவர்களை அனுப்பி வைத்தாள். 

தொடர்புடைய சிறுகதைகள்
நரேன் கைபேசியில் பேசிக் கொண்டிருந்தான், அவன் மனைவி மாலதி அருகில் வந்து, “என்னங்க” என்றாள். நரேன் சைகையிலே அமைதியாக இருக்கும்படி கூறினான். அவன் சொல்வதை புரிந்து கொண்ட மாலதி அமைதியாக நின்று அவன் பேசுவதையே கவனித்துக் கொண்டிருந்தாள். நரேன் பேசி முடித்ததும், “மாலதி அப்பாதான் ...
மேலும் கதையை படிக்க...
துளசி குழந்தைகள் காப்பகம் என்ற பெயர் பலகை இனிதே வரவேற்றது, இன்பராஜ் மற்றும் வசந்தாவை, பெயர் பலகையை பார்த்ததும் இருவருக்கும் மனது கனமானது போலிருந்தது. காவலாளி கதவைத் திறந்ததும் இன்பராஜ் காரை உள்ளே செலுத்தினான். காரிலிருந்து இறங்கி இருவரும் குழந்தைகள் காப்பகத்தின் அலுவலகத்திற்கு ...
மேலும் கதையை படிக்க...
நாகராஜன் வழக்கம் போல் செல்லும் ஆசிரமத்துக்கு, காலையில் வருபவர் அன்று மதியம் வந்திருந்தார். மாதம் தவறாமல் ஆசிரமத்திற்கு வந்து கொடுக்கும் பணம் பத்தாயிரத்தையும், ஆசிரம நிர்வாகியிடம் கொடுத்தார். அவர் கொடுத்துவிட்டு, எப்போதும் ஆசிரமத்திலுள்ள குழந்தைகளிடமும், முதியோர்களிடம் உரையாடி விட்டுதான் செல்வார். அன்றும் ...
மேலும் கதையை படிக்க...
வர்ஷா நிறம் கருப்புதான் என்றாலும் அழகுச் சிலைதான். அது அவளுக்கே தெரியாது ஏனெனில் சிறு வயதிலிருந்தே அவளின் நிறத்தைக் கொண்டு அவளுக்குள்ளேயே நாம் அழகில்லை என்ற ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிக் கொண்டாள். அதனால் கல்லூரியில் சேர்ந்து ஒரு மாதங்கள் ஆகியும் ...
மேலும் கதையை படிக்க...
கடல் அலைகள் ஆர்ப்பரித்து ஓடி வந்து அனிஷ் கால்களை தழுவிச் செல்ல, அதை ரசிக்காமல் அவன் சிந்தனை வேறு எங்கோ சுழன்றுக் கொண்டிருந்தது. கடற்கரையில் நடக்கும் எதுவும் அவன் காதுகளில் கேட்கவில்லை. அவன் நண்பன் அழைப்பது மட்டும் அவன் காதில் கேட்டுவிடுமா ...
மேலும் கதையை படிக்க...
வார்த்தைகளின் வலி
தண்டனை
உதவி
அழகு
சினமிகுந்தால் அறம் கெடும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)