Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கல்லூரிச்சாலை

 

“வர்ற ஒண்ணாம் தேதிலேர்ந்து ஹெல்மெட் போடுறதை கட்டாயமாக்கி யிருக்கறதால இனிமே நம்ம முகத்தை பிகருங்களோ… பிகருங்க முகத்தை நாமளோ பார்க்க முடியாது. என்னடா பண்றது?”என்று நாட்டின் மிக முக்கிய பிரச்சனையைப் பற்றி கவலைப்பட்டான் அந்த கல்லூரி மாணவன்.

“சென்னை மாதிரி பெரிய நகரங்கள்ல வெயில் பட்டு தோல் கருத்துடக்கூடாதுன்னு உடம்புல எந்த பாகமும் வெளில தெரியாத மாதிரி பொண்ணுங்க கவர் பண்ணிட்டு போறது மாதிரி நம்ம ஊர்லயும் ஒரு சில டிக்கட்டுங்க இப்படி கிளம்பியிருக்குதுங்கடா… நாலஞ்சு நாளா ஒரு பொண்ணு ஹெல்மட், கிளவுஸ் அப்படின்னு ஃபுல் கவரேஜோட ராயல் என்பீல்டு பைக்ல ரைடு வருது. அது மூடிகிட்டு இருக்குறதோட பின்னால உட்கார வெச்சிருக்குற பொண்ணையும் முழுசா மூடி அழைச்சிட்டு வருது. என்ன கொடுமை சரவணன் இது…” என்றான் மற்றொருவன்.

இப்படி பேசிக்கொண்டிருந்த நாளைய இந்தியாவினர் நின்ற இடம், அந்த சிறு நகரத்தில் பிரபல பெண்கள் கல்லூரியும் பள்ளியும் அமைந்திருந்த வீதியின் பெட்டிக்கடை வாசல்.

“தம்பிங்களா… சவுண்டை குறைங்கப்பா… முதலுக்கே மோசமாயிடப் போகுது.” என்று கடைக்காரர் இவர்களிடம் கெஞ்சிக்கொண்டிருந்தார்.

“டேய்… அதோ, தெரு முனையில வர்றது அந்த புல்லட்காரிங்கதான்னு நினைக்கிறேன்…” என்று ஒருவன் டூவீலரில் அமர்ந்திருந்தவனிடம் பரபரப் புடன் சொன்னான்.

Kalloori Salai“அவளுங்களை இப்ப என்ன பண்றேன்னு பார்…” என்றவாறு வண்டியை செல்ஃப் ஸ்டார்ட் செய்த அவன் சாகசம் நிகழ்த்துவதாக நினைத்துக் கொண்டு முன்வீலை தூக்கி மீண்டும் தரையில் குதிக்க வைத்து சாலையைக் கடந்து சீறியவாறு மறுபுறம் சென்றான்.

இந்த ஓரிரு வினாடிகளுக்குள் புல்லட் அவர்கள் அருகே வருவதற்கும் இவன் சாலையின் மறுபுறம் சீறிக்கொண்டு செல்வதற்கும் சரியாக இருந்ததால், புல்லட் நிலைதடுமாறி அருகில் கட்டிடப்பணிக்காக சாலையில் கொட்டப்பட்டிருந்த ஆற்றுமணலில் போய் சொருகிக் கொண்டது. அதில் இருந்த இரண்டு பெண்களும் ஆளுக்கு ஒரு பக்கமாக உருண்டு விழுந்தனர்.

இவர்களை கீழே விழ வைத்த அவன், இதைப் பார்த்ததும் அதிர்ந்துபோய் வண்டியை விரட்ட நினைத்து எதையோ செய்யப்போக அது ஆஃப் ஆகி நின்றுவிட்டது. மீண்டும் அவன் ஸ்டார்ட் செய்ய முயற்சிப்பதற்குள் புல்லட்டில் இருந்து கீழே விழுந்த பெண்களில் ஒருத்தி தாவிச் சென்று அவன் சட்டையை கொத்தாக பிடித்துக்கொண்டாள். இப்போது பெட்டிக்கடை வாசலில் நின்ற மற்ற இளைஞர்கள் எஸ்கேப்.

இப்போது சாலையில் கூட்டம் கூடிவிட்டது. பெண்ணிடம் சிக்கிய இளைஞன்,”சாரி மேடம்… தெரியாம நடந்துடுச்சு… விட்டுடுங்க…” என்று கெஞ்சியவாறே தன்னை விடுவித்துக்கொள்ள முயற்சித்தான். ஆனால் அவள் விடுவதாயில்லை. ஒரு கையால் அவனைப் பிடித்துக் கொண்டே ஹெல்மெட்டை கழற்றினாள்.

இவ்வளவு அழகான பெண்ணை பார்த்து ரசிக்க முடியாம இப்படியொரு வில்லங்கத்தில் மாட்டிக்கொண்டுவிட்டோமே என்ற அவஸ்தை அவன் முகத்தில் தெரிந்தது.

“கவிதா… நூறுக்கு போன் போட்டு இங்க உடனே போலீசை கூப்பிடு…” என்று தன்னுடன் வந்தவளுக்கு உத்தரவு பிறப்பித்தவளின் குரலில் உறுதி தெரிந்தது.

கூட்டத்தினர் அவர்களுக்குள் ஏதேதோ பேசிக் கொண்டு ஒதுங்கி நின்றார்களே தவிர யாரும் இவர்களிடம் நெருங்கி வரவில்லை.

சிக்கியவனை பிடித்து இழுத்து வந்து ஆற்று மணலில் உட்கார வைத்து, அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.

பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு போலீசார் வந்தனர். வந்த ஐந்து போலீசாரில் இரண்டு பேர் கூட்டத்தை கலைப்பதில் கவனம் செலுத்த, மற்றவர்கள் அந்த பெண்ணிடம் வந்தனர்.

“என்னம்மா பிரச்சனை…” என்று அலட்சியமாக ஒரு கேள்வியை கேட்டார் உதவி ஆய்வாளர்.

“சார்… என் பேர் ஜான்சிராணி…” என்று கம்பீரத்துடன் அந்த பெண் தன் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக்கொள்ள ஆரம்பித்தவுடன், உதவி ஆய்வாளரிடம் தென்பட்ட அலட்சியம் காணாமல் போனது.

ஜான்சிராணி சொன்னதை கேட்டுக்கொண்ட பிறகு “காயம் எதுவும் இருக்காம்மா?” என்றார்.

“இல்ல சார்… மணல்லதான் விழுந்தோம்…”

“அதுக்குத்தான் இந்த ஆர்ப்பாட்டமா?” என்று உதவி ஆய்வாளர் கேட்டதும், ஜான்சிராணியின் பார்வையில் பொறி பறந்தது. அதைக் கண்டதும் அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, “சரிம்மா… நீங்க ரெண்டுபேரும் ஸ்டேஷனுக்கு வந்து புகார் கொடுங்க.” என்று சொன்னதுடன், அந்த இளைஞனின் மோட்டார் சைக்கிளை காவலர் ஒருவரை எடுத்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷன் வர சொல்லிவிட்டு அவனை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு சென்றனர்.

காவல் நிலையம்.

“புகார் கொடுக்குறதுல உறுதியா இருக்கீங்களாம்மா… ஹெல்மெட் போட்டிருந்ததோட மணல்லதான் விழுந்திருக்கீங்க. அடிதான் எதுவும் படலியே… மன்னிச்சு விட்டுடலாம்ல… பாவம் இவன் படிக்கிற பையன். அது மட்டுமில்லாம, நான் வேணும்னு செய்யல… ஜஸ்ட் ரோட்டை கிராஸ் பண்ணி நான் வண்டியை மூவ் பண்ணும்போது சின்ன ஆக்சிடெண்ட் அப்படின்னு கேசை ஒண்ணுமில்லாம பண்ணிடுவாங்க.” என்று இழுத்தார் ஆய்வாளர்.

“ஏன் சார்… எங்களுக்கு ரத்தக்காயம் எதுவும் இல்லைன்னா புகார் எடுத்துக்க மாட்டீங்களா…

நான் நாலஞ்சு நாளாத்தான் இந்தப் பக்கம் போய் வந்துகிட்டு இருக்கேன். இவனும் இவன் நண்பர்களும் பண்ணு சேட்டையை கவனிச்சுகிட்டுதான் இருக்கேன்.

பெண்கள் கல்லூரி, பள்ளி இருக்குற ஒரு வீதியில இப்படி ஈவ்டீசிங் பண்றதை கவனிச்சு தடுக்காம இருந்த உங்க டிபார்ட்மெண்ட்டுக்கும் நோட்டீஸ் அனுப்பினா என்னன்னு தோணுது.

இப்ப நாங்க மணல்ல விழுந்ததால ரத்தக்காயம் இல்லாம தப்பிச்சுட்டோம். இல்லைன்னா, ஈவ்டீசிங் காரணமா பலியான பெண்கள் பட்டியல்ல எங்க பேரும் சேர்ந்திருக்கும். மீடியாவுக்கு ஒரு நாள் செய்தி கிடைச்சிருக்கும். அவ்வளவுதான்.

நானே கோடீஸ்வரன் வீட்டுப் பொண்ணா இருக்குறதால என்னை உட்கார வெச்சு பேசிகிட்டு இருக்கீங்க.

இதுவே ஏழைப் பெண் ஒருத்தி பாதிக்கப்பட்டிருந்தா அவளுக்கு ஸ்டேஷன்ல கிடைக்கிற மரியாதையே வேறயாத்தானே இருந்திருக்கும்.” என்று ஜான்சிராணி கேட்டதும் அந்த ஆய்வாளருக்கு வார்த்தைகள் எதுவும் கிடைக்காமல் தடுமாறினார்.

“ஆனாலும் நீங்க சொன்ன விஷயத்தையும் ஒரு செகண்ட் யோசிச்சேன். என்னோட உயிருக்கோ, உடமைக்கோ பாதிப்பு ஏற்படாத நிலையில அவன் பண்ணின தப்புக்காக கடுமையா தண்டிச்சா அவன் திருந்துறதுக்கும் வாய்ப்பு இல்லை.

ஏன்னா, சிறைக்குப் போறவங்க திருந்தி வெளியில வர்றது மாதிரி தெரியலை. பிரிட்ஜ்ல வச்ச பொருள் மாதிரி ஃப்ரெஷ்ஷா அதே மனநிலையோடதான் தண்டிக்கப்பட்டவன் வெளியில வர்றான்னு ஒரு சினிமா வசனம்தான் நினைவுக்கு வருது.

அதனால, இவன் நண்பர்களையும் எல்லாரோட குடும்பத்தினரையும் வரவழைங்க. அவங்க முன்னிலையில இவனும் இவன் நண்பர்களும் மன்னிப்பு கேட்கட்டும். நான் புகார் எதுவும் கொடுக்கலை.” என்றாள் அவள்.

***

எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்த ஜான்சிராணி, ஹாலில் அமர்ந்து, அன்றைய நாளிதழை புரட்டினாள்.

இதற்குள் விபரம் தெரிந்த அவள் தந்தை, “ஏம்மா… என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, அவன் மேல ஒரு கம்ப்ளைண்ட் கொடுக்க நீ ஸ்டேஷக்கு போக அவசியம் இல்லாம, இன்ஸ்பெக்டரையே வீடு தேடி வரவெச்சிருப்பேன். உனக்கு ஏம்மா இந்த வீண் அலைச்சல்…” என்றார்.

“அப்பா… அந்த பையன் செய்த தப்புக்கு அவன் காரணமே இல்லை… அவன் பெற்றோர்களும், இந்த சமுதாயமும்தான்.

சக மனுசனை எப்படி மதிக்கணும், ஒரு பெண்ணை எப்படி பார்க்கணும், அடுத்தவங்களுக்கு இடைஞ்சல் இல்லாம எப்படி வாழணும்… இப்படி எதையுமே நம்ம நாட்டு பள்ளிக்கூடத்துலயோ, கல்லூரிகள்லயோ சொல்லிக்கொடுக்குறதுல்ல… இந்த விசயங்களை எல்லாம் நானே பாடத்திட்டம் தாண்டின வாசிப்பு பழக்கம் இருந்ததாலதான் தெரிஞ்சுக்க முடிஞ்சது.

தப்பு செஞ்சதும் தண்டனை கொடுக்குறதும் முக்கியம்தான். அதுக்கும் முன்னால தப்பு செய்யறதுக்கு காரணமான விஷயங்களை புரிய வெச்சு அதை மனசுல இருந்து ஒதுக்க நம்ம சமுதாயத்துல என்ன ஏற்பாடு இருக்குன்னு எனக்கு புரியலை.” என்ற ஜான்சிராணி, அந்த நாளிதழின் கடைசி பக்கத்தில் அரைப்பக்க வண்ண விளம்பரமாக வெளிவந்திருந்த அவர்கள் கல்லூரியின் விளம்பரத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தாள்.

அதை தந்தையிடம் காட்டி, “என்னப்பா இது…?” என்றவள் முகத்திலும் கேள்விக்குறி.

“ஓ… நீ படிப்பை முடிச்சுட்டு வந்து ஒரு வாரம்தான் ஆகுது. நம்ம பிசினஸ் சம்மந்தப்பட்ட விசயம் எதுவும் முழுசா உனக்கு தெரியாதுல்ல… இதுவரை கோஎஜுகேசனா இருந்த நம்ம ஆர்ட்ஸ் காலேஜை இந்த வருசத்துல இருந்து மகளிர் கல்லூரியா மாத்திட்டேன்.” என்றார்.

“ஏன்?”

“உனக்கே தெரியும்மா… நமக்கு ஏகப்பட்ட பிசினஸ், எல்லாத்தையும் கவனிச்சாகணும். இந்த ஆர்ட்ஸ் காலேஜுல நல்ல வருமானம்தான். இல்லைன்னு சொல்லலை. ஆனா பசங்களால ஏகப்பட்ட தொந்தரவு. அடிக்கடி பஞ்சாயத்து. எதாவது நடவடிக்கை எடுத்தா, வார்டு செயலாளர்கிட்ட இருந்து வட்டம், மாவட்டம்னு எல்லா வகை அரசியல்வாதிகிட்ட இருந்தும் இம்சை.

அது தவிர, இப்போ உன்னைய ஈவ்டீசிங் பண்ணினானே ஒரு பையன், இந்த மாதிரி பிரச்சனை அடிக்கடி வருது. இதுல காதல், கல்யாணம் வேற… அதான் பார்த்தேன். மகளிர் கல்லூரியா மாத்திட்டா எந்த பிரச்சனையும் இல்லாம வருமானம் பார்க்கலாம். அதான் செஞ்சேன்.” என்று அலட்சியமாக பதில் சொன்னார்.

“என்னப்பா… நீங்களும் இப்படி இருக்கீங்க… இப்ப நானே தப்பு பண்ணினா, அதை திருத்த வழி பார்க்காம எக்கேடும் கெட்டுப்போன்னு வீட்டை விட்டு விரட்டிடுவீங்களா?”என்ற ஜான்சிராணியின் கேள்வியில் அவர் தந்தை அதிர்ந்ததை அவரின் முகமே காட்டிக்கொடுத்தது.

“நம்ம ஊர் தமிழ்நாட்டுலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்துல இருக்குன்னு நீங்கதானே அடிக்கடி சொல்லுவீங்க. ஆனா இந்த மாதிரி பின்தங்கிய ஊர் மக்கள்கிட்ட வியாபாரம் செஞ்சுதான் நீங்க இவ்வளவு பெரிய பணக்காரரா இருக்கீங்க.

இந்த ஊர் பின்தங்கிய மக்களுக்காக, அரசுக் கல்லூரி ஒண்ணு கூட இல்லாத நிலையில, ஓரளவு நியாயமான கட்டணத்துல நீங்க கலைக்கல்லூரி நடத்துனதை நினைச்சு நான் பெருமைப்பட்ட காலம் உண்டு.

பள்ளி, கல்லூரிகள்ல பாடம் படிச்ச பையனே வீண் வம்பு செய்யுறது, ஊர் சுத்துறது, பெண்கள் மேல வன்முறை பிரயோகம்னு தப்பான வழிகள்ல போறான்.

அந்த மாதிரி பசங்களை நல்ல வழிக்கு கொண்டு வர நம்ம கல்லூரியில பாடத்திட்டம் தவிர வேற என்ன மாற்றம் கொண்டு வரலாம்… நம்ம கல்லூரி மாணவன் படிச்சவனா வெளியில போறதைக் காட்டிலும் பண்புள்ளவனா வெளியேற என்ன செய்யலாம்னு யோசிக்கிறதை விட்டுட்டு நமக்கு தொல்லை ஒழிஞ்சா சரின்னு இந்த ஊர் பசங்களை திக்குத்தெரியாத காட்டுல தொலைச்சிட்டு வர்ற மாதிரி கோஎஜுகேஷன் காலேஜை மகளிர் கல்லூரியா மாத்திட்டீங்களேப்பா…

தொழில்முறை குற்றவாளிகளா இல்லாம, எதிர்பாராம தப்பு செஞ்சவங்க திருந்த எந்த வாய்ப்பும் கொடுக்காம அவங்களை கொடூர மனம் படைச்ச குற்றவாளிகளாவேத்தான் சிறைச்சாலைகள் வெளியே அனுப்புதுன்னு ஒரு வாசகம் படிச்சேன். அதுக்கும் இதுக்கும் எந்த வித்தியாசமும் தெரியலைப்பா.” என்று ஆவேசப்பட்டாள் ஜான்சிராணி.

“நீ ஏதோ ஒரு முடிவோட பேசுற… என்கிட்ட சொல்லு. முடியும்னா அதை செஞ்சிடுறேன்.” என்றார் அவர்.

“முடியும்னா இல்லை… கண்டிப்பா செய்யணும். ரொம்ப சிம்பிள். மறுபடி கோஎஜுகேசனா மாத்துங்க. மனுசனுக்கு அவசியம் இருக்க வேண்டிய ஒழுக்கத்தை பத்தி கதை, கவிதை, கட்டுரை, களப்பணி போன்ற விசயங்கள்ல போட்டி வையுங்க. இங்க படிக்கிற பசங்க பொருளாதார நிலையில பின்தங்கிய நிலையில இருக்குறதால வெற்றியாளர்களுக்கு ரொக்கப்பரிசு தர்றது நல்லாயிருக்கும்.

அது மட்டுமில்லாம, எல்லா மாணவ, மாணவிகளின் பெற்றோரும் மாசம் ஒருநாள் கட்டாயம் நம்ம கல்லூரிக்கு வந்து ஆசிரியர்கள்கிட்ட தங்கள் பிள்ளைகளின் நிலை குறித்து பேசிட்டு போகணும். வேலை நேரத்துல இங்க வர்றது அவங்க வருமானத்தை பாதிக்கும்னா, மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை ஆறு மணியில இருந்து எட்டு அல்லது ஒன்பது மணி வரை இந்த சந்திப்பை வெச்சுக்கலாம்னு அறிவிப்போம். ஆசிரியர்கள் முகம் சுளிப்பாங்கன்னு நினைச்சா, ஒரு நாள் சம்பளம் கூடுதலா கொடுத்துடலாம்.

இது மாதிரி என்னென்ன விசயம் செஞ்சா சமுதாயத்துக்கு நன்மையோ, அதை எல்லாம் செய்வோம். நிச்சயம் இதுக்கு நல்ல பலன் கிடைக்கும்.” என்றாள் ஜான்சிராணி.

அவள் சொன்ன அனைத்து விஷயங்களும் மனிதன் மனம் வைத்தால் சாத்தியமான ஒன்றுதான் என்ற உண்மையை புரியவைத்தது.

“ஜான்சி… புது வழி காட்டியிருக்க… ஒவ்வொண்ணா நிச்சயம் செய்வோம்.” என்று சொல்லி புன்னகைத்தார் அவள் தந்தை. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)