Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

உலகம் உருண்டை

 

இந்தியாவின் பரபரப்பான நகரங்களில் ஒன்றான சென்னை, அலுவலக அவசரத்தில்
சுறுசுறுப்பாய் இயங்கும் மக்களை கவனித்துக் கொண்டிருந்தது. மணி ஒன்பதாக இன்னும்
பத்து நிமிடங்களே இருந்ததால் ரகு அவசர அவசரமாய் இட்லிகளை வாயில் திணித்தான்.
அவனது மனைவி மல்லிகா, ‘காலைல சீக்கிரமா எழுந்தா இந்தப் பிரச்சினை
கிடையாதுல்லே..?’ என்று செல்லமாய் கோபிக்காமல், நிஜமாகவே கோபப்பட்டாள்.
‘நாளைலேந்து எழுந்துக்குறேன்…நீ நைட் 9:30 மணி சீரியலைப் பார்க்கறதை நிறுத்திட்டு,
பெட்டுக்கு வந்துடு!’ என்று நக்கலடித்தான். கையை அலம்பிவிட்டு, எல்லாம் இருக்கிறதா
என்று ஒரு தடவை ‘செக்’ செய்து விட்டு… ‘பைக்’கை ஸ்டார்ட் செய்தான். மல்லிகா
வாசல் வரை வந்து வழியனுப்பினாள். பைக்கில் செல்வது ஒரு சுகம் தான் என்று
நினைத்தபடி, ஆக்சிலரேட்டரை முறுக்கினான். ‘இன்னும் ஒரு பதினைந்து நிமிடம்…இந்த
சாலையைக் கடந்து விட்டால் போதும்!’ என்று மனதுள் பேசிக்கொண்டே ஓட்டிக்
கொண்டிருந்தான். அப்போது………

எதிரே வந்த ‘ட்ரக்’ படுவேகமாய் வந்து ஜான் மேல் மோதியது. ‘பைக்’கில் உல்லாசமாய்
வந்து கொண்டிருந்த அவனுக்கு, இப்படி நியூஜெர்சி பிரதான சாலையில் தூக்கி
எறியப்படுவோம் என்று தெரியாது. தெரிந்திருந்தால்…காரிலேயே கிளம்பி வந்திருப்பான்.
இரவு நேரமாதலால், அந்த சாலையில் அவ்வளவாய் ஆள்நடமாட்டமில்லை. மயங்கும்
நிலையிலும் ‘ட்ரக்’ நிற்காமல் சென்று கொண்டே இருந்ததை மட்டும் ஜானால்
கவனிக்க முடிந்தது. ‘ஓ ஜீஸஸ்’ என்று அவனது உதடு முணுமுணுத்தது.

சாலையோரத்தில் யாரோ ஒருவர் முணுமுணுத்தபடி கிடப்பதைப் பார்த்தவுடன்,
‘சினியாங்கோ’வுக்கு வியர்த்து விட்டது. ‘சீனாவில் மக்கள் இரக்கமற்றவர்களாகிக்
கொண்டே வருகிறார்களே’ என்று மனசுக்குள் வருத்தப்பட்டு, ‘மோதியவனின்
மனசாட்சி உறுத்தாதா?’ என்று மனசுக்குள் பேசியபடி, மெதுவாய் மூச்சிருக்கிறதா
என்று பார்த்தார். ‘அப்பாடா..உயிரோடு தான் இருக்கிறார்!’ என்று நிம்மதிப்
பெருமூச்சு விட்டபடி, உடனே தனது பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்தார்.

‘ஹலோ…இங்கே ஒருத்தர் மோட்டார் பைக்குல அடிபட்டு கிடக்கறாரு, உடனே
வந்தீங்கன்னா அவரை காப்பாத்திடலாம்!’ என்று டேவிட் பதற்றமாய் சொன்னார்.
மறுமுனையில் இருந்த ஆஸ்பிட்டல் பணியாளர், ‘எந்த இடம்னு சொன்னீங்கன்னா
ஆம்புலன்ஸை உடனடியா அனுப்பறோம்!’ என்று கூறினார். ’11th ஸ்ட்ரீட்…நீயுஹேவன்.
ஜெர்மன் கிராசரீஸ் பக்கத்துல இருக்குற தெரு!’ என்று பதிலளித்தார். ‘உடனே..
நாங்க அங்கே வர்றோம்!’ என்று கூறி முடித்தவுடன், தொலை பேசி தொடர்பு
அறுந்தது. இப்போது தான் ‘டேவிட்’க்கு மூச்சே வந்தது.

ஆம்புலன்ஸ் வந்தவுடன், இஸ்மாயில் பரபரப்பானார். ‘இதோ இங்கே தான்.. வாங்க.
நான் என்னோட சட்டையை கிழிச்சு, ரத்தம் வர்ற இடத்துல கட்டி இருக்கேன்!’ என்று
சொன்னபடி, குவைத்தின் வீதிகளில் கேட்பாரற்று கிடந்த அவனை காண்பித்தார். அந்த
ஆஸ்பிடல் பணியாளர், ‘உங்களை மாதிரி நல்லவங்க இருக்கறதால தான், நாடு நல்லா
இருக்கு. அல்லா உங்களை நல்லபடியா வைச்சிருப்பார்!’ என்று பாராட்டி விட்டு,
ஆம்புலன்சின் சிகப்பு விளக்குகளை சுழல விட்டார்.

ஆஸ்பிடலில் எல்லோரும் பரபரப்பாய் இருந்தார்கள். நர்சுகள் அங்குமிங்கும் ஓடியபடி,
ஏதேதோ புரியாத விஷயங்களை டென்ஷனாய் கேட்டுக் கொண்டார்கள். டாக்டர்கள்
பச்சை உடைக்கு மாறியபடி, வேகம் வேகமாக ICU என்று எழுதப்பட்ட அறைக்குள்
செல்வது மட்டும் தெரிந்தது. நிமிடங்கள், நாழிகையாகி ரொம்ப நேரமாகிவிட்டது.
டாக்டர் வெளியே வந்து, “இங்கே மல்லிகாங்கறது யாரு?” என்றவுடன், கலங்கிய
கண்களுடன் இருந்த மல்லிகா சட்டென எழுந்து “நான் தான் டாக்டர்!” என்றாள்.
“உங்க கணவர் பிழைச்சுக்கிட்டார்..கவலைப் பட வேண்டாம்!” என்றார். “ரொம்ப
தாங்க்ஸ் டாக்டர்!” என்றாள் மல்லிகா. “உலகத்தோட ஒவ்வொரு மூலையிலயும்
விபத்துகள் நடந்துக்கிட்டு தான் இருக்கு. ஆனா, அடிபட்டு கிடக்குறவங்களை
காப்பாத்தணும்னு நினைக்குறவங்க இருக்கறதால தான், எங்க வேலை சுலபமாகுது.
அதுனால நன்றி சொல்ல வேண்டியது எனக்கில்லை…உங்க கணவர் அடிபட்டுக்
கிடந்தப்போ, தன்னோட சட்டையை கிழிச்சு கட்டுப் போட்டு, எங்களுக்கும் தகவல்
தெரிவிச்ச அந்த முகம் தெரியாத பெரியவருக்கு தான்!” என்று சாந்தமாய் சொன்னார்.

- அருண் 

தொடர்புடைய சிறுகதைகள்
பெரிய மகன் அதைச் சொன்னபோது நம்ப முடியாமல்தான் பார்த்தாள் சுந்தரம்மாள். "டே நைனா... இந்த வெளாட்டுப்புத்தி என்னிக்கித்தாண்டா உன்ன உட்டுப் போவுங்?" என்று சிரித்தாள். "அய்யே... இப்ப உங்கூட வெளாடிகினு கீர்துதாங் எனுக்கு வேலயா? மெய்யாலுமே உனுக்கு ரத்தத்துல சக்கர, உப்பு கீதாம்" என்றான் ...
மேலும் கதையை படிக்க...
முதலில் க்ரிம்ஸன், கிளிப் பச்சை, அவையே நீலமாகி இருண்டு கறுத்தது. வர்ணங்கள் எப்போதுமே இவனைப் பரவசப்படுத்தியிருக்கின்றன. இந்த மாதிரிக் கண் மூடிக் கொள்ளும் போதெல்லாம் அவை திரண்டு ஒன்றன் பின் ஒன்றாய் பாய்ந்து வரும். இதற்காகவே, ஒரு விளையாட்டு மாதிரி, கண்களைத் ...
மேலும் கதையை படிக்க...
இரயில்வே கேட் காலப்போக்கில் எங்கள் ஊருக்கு பெரிய சாபக்கேடாக மாறிவிட்டது. இதனால் ஏற்பட்ட தொல்லைகள் சொல்லிமாளாது. மனிதர்களும், கால்நடைகளும் ரயிலில் மோதி சாவதை அது தடுத்தது என்பது உண்மைதான். இன்னும் சொல்லப்போனால், ஆளில்லாத லெவல்கிராஸிங்கை மாற்றி, ரயில்விபத்தை தடுக்க இங்கே கேட் ...
மேலும் கதையை படிக்க...
திடுதிப்பென்று ஒரு எதிர்பாராத நேரத்தில் மழை துவங்கியதும் இவன் அரண்டுதான் போகிறான்.'இதென்ன கொடுமை' என்று வேதனை மண்டிற்று. மழை சுகம்தான்.வாடிய பயிருக்கும்,வறண்ட பூமிக்கும் மழை சுகம்.ஆனால் வெயில் நம்பி பிழைப்பவனுக்கு...இந்த மழை சுகமல்ல...சோகம்.இவன் ஒதுங்க மறந்து யோசிக்கிறான். இந்த மழையிலும் குடை பிடித்த ஜனங்கள் ...
மேலும் கதையை படிக்க...
கழுத்துல பெரிய டால் பதித்த தங்க செயின், நான்கு விரல்களிலும் மோதிரங்கள் மின்னிக் கொண்டிருக்க …”தட்டுல தட்சிணை போடுங்கோ” ”தட்டுல தட்சிணை போடுங்கோ” என்று கேட்டால் எப்படி இருக்கும். பலரும் முகம் சுளித்தனர். …. ”ஏன்டி பங்கஜம். குருக்கள் நல்ல வசதியாத்தானே இருக்கார். ...
மேலும் கதையை படிக்க...
கரக ரெட்டியார்
தவிர்க்க முடியாத விபத்துகளும் அடையாளம் இல்லாத ரணங்களும்
இரயில்வே கேட்
என் நினைவாகச் செய்யுங்கள்
தட்சிணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)