அவனும் ஆசையும்…

 

மலையும் உருகுகின்ற வெயில், வெயிலின் கொடூரப்பிடியில் பலரும் சிக்கித் தவித்தனர். அதைத் தணிப்பதற்காக சாலையோர இளநீர் கடையில் சிலர் ஈக்களாக மொய்த்துக் கொண்டிருந்தனர். தண்ணீரின் வறட்சியால் தலையே சுத்துவது போலிருந்தது ராஜமாணிக்கத்திற்கு.

”எப்படியாவது நம்ம தலைவர சந்திச்சு ஆட்டோகிராப் வாங்கிறனும். அவர் நடிக்கிற படத்துல ஒரு சான்சு கேட்டுறனும். சென்னையிலேயே தங்கிறனும். கிராமத்துக்கு போகும்போது பெரிய ஆளா போனாதான் நம்ம பசங்க மதிப்பாங்க. அப்படியே ஏதாவது ஒரு டைரக்டரையும் பார்த்து நாம எழுதி வச்சுருக்க கதைய காட்டனும். நடிக்க முடியாட்டியும் உதவி இயக்குநரா ஆயிடனும் ” கால் வலிக்க நடந்து கொண்டே கற்பனையில் மிதந்தான்.

வெயில் சுட்டெரித்தாலும் அவனுக்கு சுகமாகவே இருந்தது. குற்றால அருவியிலிருந்து நீர் ஊற்றுவது போல நெற்றியிலிருந்து வியர்வைத் துளிகள் அவனது உடலை நனைத்துக் கொண்டிருந்தது. அப்போதெல்லாம் நினைவுக்கு வருவது ” உறுப்பு அறுந்து போனாலும் உள்ளம் கலங்கேன்… செறுப்பு அறுந்ததற்கா சிந்தை கலங்குவான்… கொதிக்கும் தார் எனக்கு குளிர் நீர்…” என்ற பட்டுக்கோட்டையின் கவிதை வரிகளே…

வழியில் தென்படுபவர்களிடம் விசாரித்து தலைவர் இருக்கும் ஏரியாவுக்கு நடைபோட்டான்.

” தலைவர பாத்தவுடனேயே … அவரு காலுல விழுந்துடனும். உடன விசயத்த சொல்லிடனும்…,”

” ஊர்ல பசங்ககிட்ட ரொம்பவும் வீராப்பா சொல்லிப்புட்டு வந்தோம். சினிமாவுல நடிக்கப் போறதா… சொல்லிட்டு வெறுமென திரும்பி போனா அவமானம். தலைவர சந்திச்சு பாத்துட்டம்னா எல்லாம் சரியாய்டும். ” தலைவரின் வீட்டருகே சென்றான். பக்கத்தில் இருக்கும் டீக்கடையில் விசாரித்தான்.

” அட… நீ வேற . அவரு வூட்ட காலி பண்ணி ஒன்றமாசமாகுது… பட்டிக்காட்டு ஆளு மாறி இருக்கே… இந்த வீதியிலேயே போயி பீச்சாங் கைப் பக்கமா திரிம்பினேனு வையி ஒரு பொட்டிக்கட. அங்கேருந்து நேரா வடக்கஸல போயிட்டே இருந்தா சோத்தாங்கைப் பக்கமா ஒரு புளிய மரம். அதுல இருந்து நேராப் பாத்தாலே அவருவூடு தெரியும் … பாத்துப் போ எவனாவது இதுக்குறதையும் பிடுங்கிடப் போறானுவ….”

நடக்க ஆரம்பித்தான்…நடக்க நடக்க களைப்புதான் வந்ததே தவிர தலைவர் வீடு வந்ததாக இல்லை. பசி அவனை பாதி மயக்கத்துக்கு கொண்டு போனது. கொதிக்கும் தாரில் நடந்ததால் இடது கால் செருப்பு அறுந்து ஒட்டிய தாரில் எடுப்பதற்குள் தலையே சுத்திவிட்டது. அறுந்துபோன செருப்பையும் மற்ற ஒரு செருப்பையும் தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் நடை போட்டான்.

கால்கள் சோர்ந்து இருந்தன. டீக்கடைக்குச் சென்று ஒரு சிங்கிள் டீ வாங்கி பாதி குடிக்கும்போது என்ன பசியோ …. பெரிய ஈ ஒன்று டீ குவளையில் விழுந்துவிட்டது. பாதி டீயை கீழே ஊற்றிவிட்டு காசையும் கொடுத்துவிட்டு தலைவர் வீட்டை ஏக்கத்துடன் பார்த்து அருகே சென்றான்.

வீட்டுக் காவல்காரனோ…” இன்னா பாக்குறே… அய்யா வூட்ல இல்ல. வெளிய ஏதோ பங்ஜனுக்கு போயிரிக்காங்க. வர ராண்டு நாளாவும். எடத்த் காலி பண்ணு…” என்றான்.

சளித்த முகத்துடன் திரும்பினான். டைரக்டர பாத்துட்டாவது போவோம். வழியில் வந்த ஒருவரிடம் வழி கேட்டான்.

” இன்னாப்பா எம் மொவதவதுல இழிச்சவானு ஒட்டிருக்கா. எவனுட்டாவது கேட்டுக்க…” வழிப்போக்கன் கோபமானான்.

” நல்ல பசி. அடுத்த நடை போட முடியவில்லை. அங்கிருந்த புளிய மரத்துலேயே உட்கார்ந்தான். சட்டைப்பையை தடவியபோது இருபது ரூபாய் முழுத்தாள் இருந்தது. வேறு காசும் இல்லை. இந்தக் காசுக்கு என்ன வாங்குறது.” அப்போது ” அண்ணே… ரொம்ப பசியா இருக்குது. ஏதாவது இருந்தா கொடுங்க.” அழுக்கு படிந்த மேனியுடன் ஆறுவயது சிறுமி. அதைப் பார்த்ததுமே இவனுக்கு கண்கள் கலங்கிவிட்டன.அந்த இருபதினாயிரம் ரூபாயை அவளிடம் கொடுத்துவிட்டு மீண்டும் நடந்தான்.

”அண்ணாச்சி… இந்த வீடுதானே டைரக்டரோட வீடு”

”அட இது இல்லப்பா… இதே மாதிரி அடுத்த வீதில ஒரு வீடு இருக்கு. வீட்டு முன்னாடி ரெண்டு வாழமரம் இருக்கு அதான்” என்றார் ஒரு பாதசாரி.

” டைரக்டரை எப்புடியும் பாத்துடலாம்” அணிந்திருக்கும் சட்டை பனியனுக்குள் இருக்கும் கதையை எடுக்க கையை விட்டான்‌. அவன் சட்டையில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. ” புளிய மரத்துலதான் விட்டிருக்கனும். ” வேர்த்து விறுவிறுக்க ஓடி வந்தான். பசுமாடு ஒன்று நான்கைந்து காகிதத்தை ஒரே நேரத்தில் தின்றுகொண்டு இருந்தது.

” எப்படி விழுந்திருக்கும் …..” ரொம்ப வேர்க்கவும் சட்டையை கழட்டி புளிய மரத்தடியில் வைத்தபோது, கதை எழுதி வைத்திருந்த பிளாஸ்டிக் பையை அங்கே மறந்து வைத்துவிட்டு வந்தது நினைவுக்கு வர, புளிய மரத்தடியில் பிரம்ம அழுதான். ஆறுதல் சொல்வதற்கு கூட நாதியில்லை. தலைவரையும் சந்திக்க முடியவில்லை. டைரக்கடரையும் பார்க்க முடியாது. ஊருக்கு திரும்பி போறதுக்கும் பணம் கிடையாது.வந்த பாதையை திரும்பி பார்த்து ஏளனமாய் சிரித்தான்.

வந்த இடத்தில் தண்ணீராவது குடிப்போம் என்று அடி குழாயை அடித்து அடித்து பார்த்தான். கை வலிதான் வந்தது. சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை அவனுக்கு அப்போதுதான் புரிந்தது. சினிமா வேலை தேடி வந்தவனுக்கு அவன் வந்த தூரமே சினிமாவானது.

கண்கள் சிவந்தது….. நடை தளர்ந்தது. கண்ணில் தென்பட்ட ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்தான். சாப்பிட அல்ல… வேலை கேட்டு… 

தொடர்புடைய சிறுகதைகள்
காலை நாலரை மணிக்கு தொழுகையில் ஈடுபட்டுவிட்டு தேர்வுக்கு படித்துக் கொண்டு இருந்தான். பிஸ்மில்லா பானு கூப்பிடுவது கூட கேட்கவில்லை. படிப்பதிலேயே ஆர்வமாக இருந்தான் அக்கிம். நோய்வாய்ப்பட்டு நார்க்கட்டிலில் படுத்த படுக்கையாகவே இருந்தாள் பிஸ்மில்லா பானு. இருமல்,சளி பலத்த சத்தத்துடன் காரித்து ஒரு மண் ...
மேலும் கதையை படிக்க...
பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்தப் பேருந்து நிலைத்தில் பதினாறாம் எண் பேருந்து வந்து நிற்பதற்குள் கூட்டம் வெள்ளமென திரண்டு ஏறினர். இறங்க வேண்டியவர்கள் இறங்குவதற்குள் ஏறுபவர்கள் இருக்கையில் இடம்பிடிக்க தன் கைகளில் இருந்தவற்றை சன்னல் வழியே இருக்கை நோக்கி வீசினர். ஒருவழியாக ...
மேலும் கதையை படிக்க...
''மனுசனுக்கு வேதனையப் பாரு.. யாருக்கும் தொல்லையா இல்ல. வம்பு தும்புக்கு போகாத ஆளு, அவனுக்கா இப்படி....?" ''தான் உண்டுனு ஏதாவது எழுதிக்கிட்டுதான் இருப்பான். வழியக்க பேசாட்டியும் மத்தவங்க பேச்சுக்கு மரியாதக் கொடுப்பான்...'' ''பாவம்யா... பொண்ணுக்கு கல்யாணத்த முடிச்சுட்டு பையனுக்கும் அடுத்த முகூர்த்தத்துலேயே முடிச்சர்றதா எங்கிட்டயே ...
மேலும் கதையை படிக்க...
வயிற்று வலியும் மயக்கமும் வர வீட்டு வாசலிலே விழுந்துவிட்டேன். "அய்யய்யோ....! தொளசி விழுந்துட்டானே....." என் தாய் ஆரியமாலா அழுது ஓடி வர அனைவரும் வந்துவிட்டனர். பாதி கெரக்கத்தில் இருந்த என்னை தூக்கி முகத்தில் தண்ணீர் தெளித்தார்கள். ஓரளவு மயக்கம் தெளிந்தேன். வயிற்று ...
மேலும் கதையை படிக்க...
கருவேலாங்காட்டு ஒத்தயடிப் பாதையில் பசுவும் கன்றுக்குட்டியும் போவது போல தன் ஐந்துவயது குழந்தை மீனாவைக் கூட்டிக்கொண்டு முனுமுனுத்துக் கொண்டே பேருந்து நிறுத்தத்துக்கு வந்தாள் செல்லம்மாள். "எவ்வளவு தான் இருந்தாலும் பொறந்த மண்ணுக்கு வந்த மகள் எல்லாம் சந்தோசமா திரும்புவாங்கனு பேரு, ...
மேலும் கதையை படிக்க...
உச்சிப் பொழுதில் அவள்
பெருசுகள்….
ரெண்டாவது ரகம்
வெளிச்சம்
மாற்றம்

அவனும் ஆசையும்… மீது ஒரு கருத்து

 1. Masila says:

  அருமை…அருமை சகோ
  வாழ்த்துகள்
  எழுத்து நடை சூப்பர்
  பல இடங்களில் எனக்கு கண்ணீரை வரவழைக்கிறது சிறப்பு…
  நம்பிக்கையே வாழ்க்கை
  முயற்சி தளராது இருந்தால் இலட்சியத்தை கண்டிப்பாக அடையலாம் என்பதை உணர்த்துவதாக உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)