ராங் நம்பர்!

 

இத்தனை காலமும் மனசுக்குள்ளிருந்து ஒரு பார்வை. ஒரு திருப்தி எல்லாமே திடுதிப்பென்று அசைவது போலிருந்தது வினிதாவுக்கு.

உண்மையில் தன் கணவர் தனக்குத் துரோகம் செய்கிறாரா? அதுவும் தன் தோழியுடன்…?

இந்த அதிர்ச்சிமிக்க ஒரு விஷயத்தை அவளால் நம்ப முடியவில்லை. அவளால் நம்ப முடியவில்லை என்பதைவிட நம்ப விரும்பவில்லை என்று சொல்வதுதான் உண்மை.

கணவர் வசந்த் ஒரு உல்லாசபிரியர் என்பது அவளுக்குத் தெரியும். பெண்களிடம் சகஜமாக பழகுபவர் என்பதும் அவளுக்குத் தெரியாமலில்லை. ஆனால் அந்த பழக்கம் மனைவிக்கே துரோகம் செய்யும் அளவுக்கு செல்லக்கூடியது என்று அவளால் நினைக்கமுடியவில்லை.

அப்படி நினைத்துப் பார்க்கவே அவளுக்கு ஒரே திகிலாக இருந்தது. எனவே அந்த நினைவுக்கு தன்னை கொண்டு போகமல் கட்டுப்படுத்தி போராடிக் கொண்டிருந்தாள்.

பின் ஏன் அவர் மஞ்சு வீட்டுக்கு போயிருந்தார்?

மஞ்சு பேரிலும் சந்தேகம் வரவில்லை வினிதாவுக்கு. மஞ்சு அப்படிப்பட்ட பெண்ணே அல்ல. தனக்கு ஆயிரம் புத்திசொல்பவள் அவள் அப்படி நடப்பாளா?
குழப்பத்துக்கும் தானே வருவித்துக் கொள்ளும் பிடிவாதமான தைரியத்துக்கும் இடையே நெளிந்து கொண்டிருந்தாள்.

வாசலில் ஹøரோ ஹோண்டா வந்து நிற்கும் சத்தம் கேட்டது.
அவரா?

ஜன்னல் வழியே பார்த்தாள். வசந்த்தான்.

மனசுக்குள் ஒரு வேதனை! இத்தனை நேரமும் இன்னொரு பெண்ணிடம் தனியே இருந்து விட்டு வரும் கணவரை சந்திக்கப் போகிறோம் என்ற குறுகுறுப்பு.
வசந்த் வழக்கம் போல் சீட்டியடித்துக் கொண்டே உற்சாகமாக வந்தான்.
எந்த மாற்றமும் தெரியவில்லையே. புதிதாக தவறு செய்திருந்தால்… முகம் காட்டிக் கொடுத்துவிடும். ஆனால் அவர் நிச்சலனமாக இருக்கிறாரே! அவளுக்குள் ஒரு மயக்கம்.

“என்ன டார்லிங். எங்கேயாவது வெளியில் புறப்பட்டுகிட்டு இருக்கியா. புது டிரஸ் போட்டிருக்கே?”

வழக்கத்தைவிட வசந். உற்சாகமாக இருப்பதுபோல் தோன்றியது அவளுக்கு.

“வெளியிலிருந்துதான் வர்றேன்” என்றவளுக்கு ‘மஞ்சு வீட்டுக்குத்தான் வந்திருந்தேன்’ என்று சொல்ல வாய் வந்தது. ஆனால் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

“உங்களுக்கு ஆபீசிலே ரொம்ப லேட்டாயிட்டோ?” ஆழம் பார்த்தாள்.

“நோ… நோ… ஆபீசை விட்டு கிளம்பிட்டேன்”.

“யாரையாவது பார்க்க போயிருந்தீங்களா?”

“யாரையாவது இல்ல, உன் பிரண்ட் மஞ்சு வீட்டுக்குப் போயிருந்தேன்.” பளிச்சென்று சொன்னான்.

அந்த வினாடியே வினிதாவுக்கு தன்னைச் சுற்றியிருந்த சந்தேக மேகங்கள் கலைந்து மறைந்து போனது.

இவரையா சந்தேகப்பட்டோம். சே! தன்னையே நொந்து கொண்டாள்.
வினிதாவுக்கு வசந்த்தின் சாமர்த்தியங்களில் அவ்வளவு பரிச்சயம் கிடையாது.
எப்போதும் எதையும் மறைப்பவன்தான் மாட்டிக் கொள்வான். தவறைக்கூட பகிரங்கமாகச் செய்தால், ரொம்ப வெளிப்படையானவன், தப்பு தண்டா இருக்காது என்று யாருடைய கவனமும் தீவிரமாக இருக்காது. இது வசந்த்தின் சாமர்த்தியங்களில் ஒன்று.

“தினமும் மஞ்சு வீட்டுக்கு போக வேண்டியிருக்கு. ஆபிஸ் கணக்கில் சில சந்தேகங்கள் எனக்கு. அவளும் நானும் அமர்ந்துஅதை சரி பார்க்கிறோம். இது மானேஜருடைய கட்டளை. என்ன செய்வது மீற முடியலே, அதான் லேட்டு’ சொல்லிக் கொண்டே மேலே மாடிக்கு போனான்.

பிரச்னையே வராமல் இருப்பதை விட இப்படி ஏதாவது வந்து அது சுவடு இல்லாமல் தீரும்போது ஏற்படுகிற சுகமே அலாதி.

அடுக்களையில் சென்று காபி கலந்து கொண்டு வந்தவளுக்கு ஏதோ ஞாபகம் இன்று அம்மாவிடம் வருவதாக சொல்லியிருந்தாள். அதைப் பற்றி அம்மாவிடம் பேசி அவசியமானால் இன்று வரவில்லை என்று சொல்லலாம்.
போனை எடுத்தாள்.

அச்சமயம் போனில் ஏதோ பெண் குரல் கேட்டது. வசந்த்திடம் பேசிக்கொண்டிருந்தாள் அவள்.

“என்ன மஞ்சு…?”

“இன்றிரவு பத்து மணிக்கு உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன்”.

“ஏய்… இன்னிக்கு முடியாது போலிருக்கே…”

“ஏன் வசந்த்?”

“என் மனைவிக்கு சந்தேகம் வந்திருக்குன்னு நினைக்கிறேன். கேள்வியெல்லாம் கேட்கிறாள்.”

“எனக்கு அதெல்லாம் தெரியாது. உங்க சாமர்த்தியத்தால உங்க மனைவியை சமாளிக்க முடியும்னு எனக்கு தெரியும். கண்டிப்பா பத்து மணிக்கு வர்றீங்க. நான் காத்துகிட்டு இருப்பேன்”.

“ஓ,கே…ட்ரை பண்றேன்…”

“தாங்க் யூ டார்லிங்” என்று முத்தம் கொடுத்தாள் மஞ்சு.

தன் முகத்தில் யாரோ காறி உமிழ்ந்தது போல் உணர்ந்தாள் வினிதா.

கனத்த கால்களுடனும், கையில் காபியுடனும் மாடிப்படி ஏறினாள். வசந்த் இப்போது வழக்கம் போலில்லை. ஏதோ பரபரப்புக்குள்ளானவன் போல்…

“டெலிபோன் மணி அடிச்சுதே… நான் பாத் ரூமில் இருந்தேன். பேசினது யாரு?” என்று மெதுவாக கேட்டாள் வினிதா.

“கேட்டேன், யாரோ ராங் நம்பர்” என்று புளுகினான் வசந்த் படபடப்புடன்.

கலைந்த மேகங்கள் திடீரென்று ஒன்று கூடி அவள் தலையையே கவிழ்த்துக் கொண்டதுபோல் இருண்டு போய் நின்றாள் வினிதா. ‘ராங் நம்பர் தன் கணவர் மட்டுமல்ல, தோழியும்தான்’ என்று இடிந்து போனாள்.

- வாரமலர், பிப்ரவரி 1, 2004. 

தொடர்புடைய சிறுகதைகள்
'யெய்யா....அன்பு என்னாப்பு இப்படியாயிட்டு ...புழச்சு வந்தியே "என்று கதறிய கதறலில் உறவினர் கூட்டமே கலங்கி போய்விட்டது . "அப்பத்தா ,சும்மா புலம்பாதே ,,பாவம் அன்பு அவனே மனசொடிஞ்சு வந்திருக்கான் ..அவனை இன்னும் கஷ்டப்படுத்தணுமா .ஆறுதலா பேசுவியா ,புலம்பிகிட்டு "அதட்டினான் அன்புவின் நண்பன் அசோக் கிராமத்து ...
மேலும் கதையை படிக்க...
எரிச்சலோடு ஸ்கூட்டரை கிளப்பி வெளியேறினான் கவுசிக். போகும் வழியெல்லாம் புலம்பிக் கொண்டுதான் போனான். ச்சே என்ன பெண் இவள், வாழ்க்கையைப்பற்றி எதுவுமே தெரியாமல் இருக்கிறாளே, அவளைச்சொல்லி குற்றமில்லை, கஷ்டம் என்றால் என்னவென்று தெரியாத பெரிய இடத்துப்பெண்ணை திருமணம் செய்தது நம் தவறு. திருமணம் ...
மேலும் கதையை படிக்க...
'வெள்ளிக்கிழமை பெண் பார்க்க வரலாமா ன்னு பெண் வீட்டுக்கு போன் பண்ணி கேளுங்க "ஜயா கணவனிடம் சொல்லும்போது மாதவன் உள்ளே வந்தான் . மாதவா ,வெள்ளிக்கிழமை லீவு போட்டுட்டு போகலாமாடா "என்றதும் "போலாம்பா' என்று உற்சாக குரல் உடனே வந்தது ராமசாமி போன்போட எதிர் ...
மேலும் கதையை படிக்க...
தொபீர்! தொபீர்! நடக்காமல் படுத்துவிட்ட மாட்டை ஆத்திரத்தோடு அடித்தான் வேலய்யன். போடா சக்கை என்றது மாடு. எழுந்திருக்கவில்லை. சத்தம் கேட்டு வீட்டுக்குள்ளிருந்து ஓடிவந்த குமாரசாமி தெருக்காட்சியைப் பார்த்துத் துடித்துப்போனார். அவருக்கு இளகிய மனம். அதுவும் பிராணிகளிடத்தில் தனிக்கருணை. இளவயதில் தன் வீட்டிலேயே நாய், மாடு எல்லாம் வைத்திருந்தார். ...
மேலும் கதையை படிக்க...
"நீங்கள் தேடி வந்த வீடு இது இல்லை" என்று சொல்ல நினைத்தவள், சுதாரித்துக்கொண்டு "வாருங்கள், வணக்கம்" என்றாள் வனிதா. வந்தவர் அவளின் அண்ணன் மாதவன். வசதியாக இருப்பவர். பெட்டிக்கடைக்காரனை காதலித்த குற்றத்திற்காக தங்கையென்ற உறவையும் மறந்து. "இந்த வீட்டில் உனக்கு இடமில்லை ,வெளியில் ...
மேலும் கதையை படிக்க...
நண்பன்
திருப்தி
ரொம்ப தேங்க்ஸ்
ஜீவகாருண்யம்
வேரிலும் காய்க்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)