புதிய பிரவேசங்கள்

 
அன்று…இலங்கைப் பட்டினத்தில் அக்கினிப் பிரவேசம் அரங்கேறும் நாள் ! அன்றைய நிகழ்வுக்குத் தானும் ஒரு மௌன சாட்சியாய் இருக்கப் போவதை நினைந்ததாலோ என்னவோ..,கீழ்த்திசைக் கடலிலிருந்து முகம் காட்டத் தொடங்கியிருந்த ஆதவனின் செவ்வொளியிலும் கூடச் சில கருமையின் கீறல்கள் !
கடற்கரை ஓரமாய்க் கைகட்டி, விழிகளைத் தொலை தூரத்திலும், நெஞ்சினை அயோத்தியிலும் பதித்தபடிநின்றிருக்கும் இராமனின் முகம்,வழக்கமான அருளின்றி,இறுக்கம் கண்டிருக்கிறது. பகைவனுக்கும் அருள் சுரக்கும் அந்தப்பண்பாளனின் உள்ளம்,தன் பத்தினியைச் சொல் ஈட்டிகளால் வதைப்பதற்கு வார்த்தை தேடி,உள் மறுகி உலைந்து கொண்டிருக்கிறது.
‘இதை நான் செய்துதான் ஆக வேண்டுமா..? ஆம்..வேறு வழியில்லை ! மக்கள் நலனுக்காக…,சீதையின் நலனுக்காகவும் கூட! அரச நீதிகள் காருண்யம் பார்ப்பதில்லை!’
‘’ஐயனே ! தேவியை இட்டுவர யாரை அனுப்புவது’’
-கேள்வி பிறந்தாகி விட்டது.இனியும் தாமதிப்பதில் பொருளில்லை.
சூத்திரக் காய்கள் விதிப்படி நகர்த்தப்பட்டாக வேண்டும் என்பது நியதி! அங்கே இரக்கத்துக்கு இடமில்லை.
‘’விபீஷணனே சென்று வரட்டும்!’’
-ஆணை பிறக்கிறது.
‘’அண்ணல் கண்டபிறகுதான் என் தவக் கோலத்தைக் கலைப்பதென்ற சங்கல்பத்தோடு இருக்கிறேன்.தயவு செய்து அதை மாற்ற முயலாதே திரிசடை..’’
‘’நான் மாற்றவில்லை தாயே! தங்கள் நாயகனே அவ்வாறு கூறி அனுப்பியிருக்கிறார்.அதற்காகவே தங்களை ஒப்பனை செய்யத் தேவ கன்னியர்களை அழைத்து வந்திருக்கிறார் என் தந்தை. வான்மழை வந்த பிறகும் பயிர்கள் வாடி வதங்க வேண்டியதுதானா தேவி?’’
‘’என் தலைவரின் விருப்பம் அதுவானால் அதை மீற எனக்கு மனமில்லை திரிசடை!’’
வானரக் குலங்கள் அணிவகுத்து நிற்க, இறந்தது போக எஞ்சி நிற்கும் இலங்கை இராக்கதர்கள் , வியப்பால் விழிகளை விரித்திருக்க…,மேகத்தைக் கிழித்துவரும் மின்னலென அந்தக் கூட்டத்தின் நடுவே மென்னடை பயின்று வருகிறாள் சீதை. பல நாள் இடைவெளியில் இராமனும்,சீதையும் ஒருவருக்கொருவர் சந்திக்கப் போகும் அந்த முகூர்த்த நேரத்தில்..,இருவரையும் ஒருசேரத் தரிசிக்கவென்றே பல திசைகளிலிருந்தும் வந்து குவிந்திருக்கும் மக்களும்,முனிவரும் ,விண்ணின் தேவ புருஷர்களும் அன்னையை ஆரவாரத்தோடு எதிர்கொள்கிறார்கள்.
தலை கவிழ்ந்து தடம்பார்த்து நடந்துவரும் தன் துணைவியின் மலர்ப்பாதங்கள், இராமனின் கண்களில் முதலில் படுகின்றன. அதனால்,தன்னையும் அறியாமல் தன்னுள் விளைந்துவிடும் மனச் சிலிர்ப்பைச் சிரமத்தோடு போக்கிக் கொள்ள முயல்கிறான் அவன்.
‘இந்த இப் பிறவியில்,இது நம் இரண்டாவது சந்திப்பு! மிதிலையின் காட்சி,நம்மைக் கூட்டி வைத்தது…இதுவோ..மீளாத துன்பக் குழியில் நம் இருவரையுமே ஆழ்த்திவிடப் போகிறது. இது, உன் மீட்சி என்று இதோ இங்குள்ள எல்லோருமே கெக்கலி கொட்டிக் கொண்டிருக்கிறார்களே..அது, உண்மைதானா? வரங்களே சாபங்களாகிவிடப் போகும் இந்தப் பாவ நிலைக்குப் பரிகாரம்தான் ஏது?
புகை படிந்த ஓவியமாய்த் தூசு படிந்த சிற்பமாய் மாற்றான் மனையிலே சிறையிருந்த சீதை,இப்போது துலக்கித் துடைத்த குத்துவிளக்காய்ச் சுடர் விட்டுக் கொண்டிருக்கிறாள்.துணைவனின் அருகே வந்ததும் மெள்ளத் தலை நிமிர்த்தி இதழ்க்கடையில் அவள் அரும்ப விடும் புன்னகை,அவனிடத்தில் ஆயிரம் செய்திகளை அஞ்சல் செய்கிறது.
‘மணநாளை விடவும் எனக்கு மகிழ்வூட்டும் நாள் இன்று !
சிவ தனுசு முறியும்,சேர்வோமென்ற நம்பிக்கை,மிதிலையில் இருந்தது. இலங்கையோ..அறத்தின் வெற்றியிலேயே ஐயப்பாட்டை ஏற்படுத்தி என்னைக் கூட ஒரு கணம் மனம் தளரச் செய்து விட்டது.இதுதான் என் தவம் பலிக்கும் நேரம்! என் தலைவனின் கரங்களால் மீட்சி வரம் கிடைக்கப் போகும் அற்புதமான கணம்!’’
சீதையின் பொருள் பொதிந்த புன்னகையை..,அந்தரங்க மன ஓட்டத்தைத் தனக்கு மட்டுமே அறிவித்துக் காட்டுகிற அவளது நயனமொழியை விளங்கிக் கொண்ட அண்ணலின் பூமனம்,குற்றக் கம்பளிகளின் குறுகுறுப்பால் நெளிகிறது.
‘அரக்கனாலேயும் கூட அழிக்கப்பட முடியாத உன் மானத்தைச் சிதைப்பதற்கு உன் உயிர்க் காவலனே ஆயத்தமாய் இதோ காத்திருக்கிறேனடி பேதைப் பெண்ணே…! உன் அனுமதியின்றி உன்னைத் தொடுவதற்குக் கூட அந்த இராவணன் பயந்தான். நானோ..,ஊரே கூடியிருக்க,என் மனைவியின் முந்தானையைச் சரேலெனக் கிழிக்கும் மாபாதகத்தைச் செய்யப் போகிறேன்!இங்கே உண்மையில் இராவணன் யார்?’
பளிங்கு போல் தெளிந்த மனதுடன் அவள், அவன் பாதங்களைப் பற்றக் குனிகிறாள்.
‘’வைதேகி..விலகி நில்! என்னைத் தீண்டாதே!’’
-தனக்குத்தானே அந்நியமாகவும்,அபசுரமாகவும் ஒலிக்கும் இராமனின் வார்த்தைகள் அந்தக் கூட்டத்தாரிடமிருந்து அமானுஷ்யமானதொரு மௌனத்தை எதிரொலியாய்க் கொணருகின்றன.
திடுக்கிட்டுத் தலை நிமிர்த்தும் சீதை,அதிர்ந்து போனவளாய்ச் சுற்றுமுற்றும் பார்க்கிறாள்.
யாருடைய குரல் இது?
இந்தக் கோர வார்த்தைகளின் ஜனிப்பு எந்த உள்ளத்திலிருந்து நேர்ந்திருக்கிறது?
இராவண வதம் இன்னும் நிகழ்ந்தாகவில்லையா என்ன?
அந்த அசுர மாயை..இன்னும் கூடவா எஞ்சியிருக்கிறது?
இது..என் கணவன்தானா..அல்லது மாயா ஜனகனைச் சிருஷ்டித்த அரக்கன், தன் சூழ்ச்சியால் கொண்டு வந்து நிறுத்தியிருக்கும் மாயாராமனோ இவன்…?
‘’ஜானகி ! எந்த முகத்தோடு ..எந்த மீட்சியை நாடி என்னைக்காணப் புறப்பட்டு வந்திருக்கிறாய்?அதற்கான அருகதையை நீ இழந்து விட்டது,இன்னுமா உனக்கு விளங்கவில்லை?’’
-இல்லை..! இது மாயையில்லை!இது வேஷமில்லை! தன்னைச் சூழ்ந்திருக்கும் மக்கள் கூட்டமும்,சுட்டெரித்துக் கொண்டிருக்கும் கணவனின் பேச்சும் பொய்யில்லை! இதுதான் நிஜம்!சுடுகிற நிஜம்! சீதைக்கு இவ்வுண்மை அர்த்தமாகத் தொடங்கியபோது இன்னும் கடுமையோடு இராமனின் சொற்கள் தொடர்கின்றன…

’’அயலான் ஊரில்…,அவன் அமைத்துக் கொடுத்த உல்லாசச் சோலையில் தன்னை மறந்து , தன் நிலையை மறந்து களித்திருந்தவளுக்குக் கணவனுடன் வாழ என்ன தகுதி இருக்கிறது? நீ இங்கே நடத்தியிருக்கிற வாழ்க்கைக்கு இப்போது நீ புனைந்துள்ள கோலமே சாட்சியம் கூறிக் கொண்டிருக்கிறதே?’’

சாட்டையால் சொடுக்கப்பட்டது போலச் சீதையின் உணர்வுகள் சிலிர்த்தெழுந்து விழித்துக் கொள்ள, இராமனின் சூழ்ச்சி அவளுக்குப் புரிய ஆரம்பிக்கிறது.
காதலின் கனிவோடு கணவனை இதுவரை ஏறிட்டு நோக்கியபடி இருந்த அவள் பார்வையில்,இப்போது ஒரு தீவிரம் படியத் தொடங்குகிறது.

’கோலம் மாற்றப் பிறந்த ஆணையும் கூட இந்த விந்தையான அத்தியாயத்தின் வினோதமான ஒரு பக்கம்தானா?
எனது கற்பு மட்டுமா?
அந்தச் சொல்லின் செல்வன்…வாயுபுத்திரன் அனுமன்..
அவன் – தன் கண்களால் என் தவக் கோலத்தைக் கண்டு
வார்த்தை வார்த்தையாய் விண்டுரைத்தானே..,
அவனது வாய்மையுமல்லவா இங்கே சந்தேக ஆகுதிக்கு இரையாகிக் கொண்டிருக்கிறது?’

புதிர் முற்றும் புரியாதவளாய்ச் சீதை மலைக்கிறாள்.

‘’கடல் கடந்து வந்து நான் போர் செய்தது, உன்னைச் சிறை எடுப்பதற்காகத்தான் என்ற எண்ணம் உன் இதயத்தின் மூலையில் எங்காவது ஒட்டிக் கொண்டிருக்குமானால்…இந்த வினாடியோடு நீ அதை அழித்து விடலாம் சீதை!
அயலான் ஊரில் மனைவியை விட்டு வைத்தால் அது எனக்குப் பழி தரும் என்பதாலேயே இந்த முயற்சியை மேற்கொண்டேன்.என் கடமை முடிந்தது. இனி,உனக்கு மீட்சி..உன் சாவில் மட்டுமே கிடைக்கும்! உனக்குப் பாவ மன்னிப்புத் தந்து உன்னைப் பரிசுத்தமாக்கப் போவது,அந்த மரணம் ஒன்றுதான்! நீயாகவே அதைத் தேடிக் கொண்டிருந்தால் அது உனக்குப் பெருமை தரும் ! அதை விட்டுவிட்டுப் பழியோடு என்னைத் தேடி வந்ததால்,பெண்மைக்கே மாறாத ஒரு களங்கத்தை ஏற்படுத்தி விட்டாய் நீ ! உன் கணவன் என்ற தார்மீகப் பொறுப்பு இன்னும் என்னிடம் ஒட்டிக் கொண்டிருப்பதால்,நீ செய்ய மறந்ததை இப்பொழுது நான் உனக்கு நினைவூட்டுகிறேன்.
லட்சுமணா ! சிதை ஆயத்தமாகட்டும்..!’’

கருணைப் பசையின்றி உதிரும் இவ் வார்த்தைகள் …,
உயிரின் ஈரத்தில் தோயாமல் வறட்சியோடு வெளிப்படும் இந்தச் சொற்கூட்டல்கள்..,
இவை..தன் தலைவனுக்குச் சொந்தமானது எப்போது?
உயிரின் ஒவ்வொரு அணுவையும் வார்த்தை அக்கினிகளால் பொசுக்கித் தீய்த்தபின் இன்னொரு அக்கினிப் பிரவேசம் அவசியம்தானா?

திகைத்துப் போய் விழிக்கிற சீதையின் கண்கள்…ஒரு கணம்..,
ஒரு வினாடிக்கும் குறைவான ஒரே ஒரு கணம் ….இராமனின் விழிப்புலனோடு நேரடியாக மோதிக் கலக்கின்றன.
அந்தச் சங்கமத்தில்…’என்னைப் புரிந்து கொள்ளேன்’ என்பது போல இறைஞ்சும் இராமனின் பார்வையில்…, அரங்கேறிக் கொண்டிருக்கும் அந்த நாடகத்தின் சூட்சுமம், சீதைக்கு ஒரு நொடியில் புரிந்து விடுகிறது.
இனிமேல் தான் செய்ய வேண்டியது இன்னதென்பதும் அவளுக்கு விளங்கிவிட…,
அவள் இப்போது தெளிவாக..,திடமாக நிற்கிறாள்.

அதுவரை மீட்சிக்காகக் காத்திருந்தவர்கள் இப்போது சீதையின் சிதையேற்றத்துக்காகக் காத்திருக்கத் தொடங்குகிறார்கள்.
மன்னனின் வார்த்தைக்கு மறுசொல் கூறாத பணிவு, இறைவனின் ஆணையை எதிர்த்து இயங்க முடியாத பக்தி, அவர்களை ஊமையாக்குகிறது.
இராமனின் எண்ணத்துக்குக் கருவியாக இருந்தே பழகிப் போன இலக்குவன்
தீ மூட்ட.., அது, அனைவரின் அடிவயிற்றிலும் வந்து பற்றிக் கொள்கிறது.

கரம் கூப்பிக் கண்களை மூடியபடி,மும்முறை அக்கினி தேவனை வலம் வருகிறாள் சீதை.
மண்ணில் உடல் தோயத் தீக் கடவுளை வணங்கித் தொழுதபின் அங்கிருந்து நகர்ந்து வந்து இராமனின் பாதங்களில் ஒரு முறை வீழ்ந்து எழுகிறாள்.

‘’தங்கள் ஆணையை இம் முறை என்னால் நிறைவேற்ற முடியவில்லை சுவாமி! என்னைத் தாங்கள் மன்னித்து அருள வேண்டும் !’’

மெள்ள எழுந்த சீதையின் குரல், அந்தப் பிரதேசத்தின் நாடியையே அதிர்வுக்கு ஆளாக்கி உலுக்கிப் போடுகிறது.எதிர்பாராமல் நேர்ந்த இந்தத் திருப்பத்தின் விளைவு இன்னதென அனுமானிக்க முடியாமல், இராமனும் கூட அதிசயப்பட்டுப் போகிறான்.

‘’என் கணவனாக இருந்து நீங்கள் வழங்கிய தீர்ப்பல்ல இது என்பதை நான் புரிந்து கொண்டு விட்டேன்.அயோத்தியின் மன்னர் குலத் தோன்றலாக,நீங்கள் எனக்கு வழங்கியிருக்கும் தண்டனை இது ! அரசக் குடியினர் சுமந்தே தீர வேண்டிய முட்கிரீடங்களில் இதுவும் ஒன்று என்றே நீங்கள் நினைக்கிறீர்கள். தண்டனை இல்லாமல் என்னை ஏற்றுக் கொண்டு விட்டால் நாளை தவறான செயல்களை நியாயப்படுத்த விரும்பும் மக்களும் கூட உங்களை உதாரணம் காட்டி விடுவார்களோ என்று நீங்கள் அஞ்சுவது எனக்கு நன்றாகவே புரிகிறது…ஆனால், நானும் கூட அதே போன்ற அச்சத்தினாலேதான் தங்கள் ஆணக்கு உடன்பட மறுக்கிறேன்..’’
-இராமனின் புருவங்கள் வியப்பால் உயர அவள் தொடர்கிறாள்.

‘’நாம் இருவரும் மனித உருவத்தில் இந்த மண்ணுக்கு வந்திருக்கலாம் என்றாலும் கடவுளின் அவதாரம் என்று சொல்லப்படுகிற பலம் நம்மிடத்திலே இருக்கிறது.
என்னைச் சுட வரும் அக்கினியையும் கூடத் தீய்த்துவிடும் தெய்வீக ஆற்றல் என்னிடம் இருப்பது தங்களுக்கும் தெரியும்!அதனாலேயே என்னைத் தீக் குளிக்குமாறு ஆணை இடுகிறீர்கள் !
ஆனால்…இனி வரும் காலத்தில்.., தங்களின் இந்த ஒரு செயலை மட்டுமே முன்னோடியாக எடுத்துக் கொள்ளும் மண்ணுலக மனிதர்கள் ….
தவறே செய்யாத ஒரு பெண் மீது களங்கம் சுமத்திக் கழுவிலேற்றத் துடிக்கும்போது ..,
மனைவி மீது சிறியதொரு சந்தேகம் எழுந்தாலும் அதைக் காரணமாக்கி அவளை ஆட்டிப் படைக்க ஆசை கொள்ளும்போது ..
அங்கேயும் தங்கள் பெயர் தவறாகப் பயன்பட்டு விடக் கூடிய அபாயம் இருக்கிறதே…?
அப்போது..பாவப்பட்ட அந்த மானுடச் சீதைகளின் நிலை..?

என் நிலையில் …இந்தத் தீக் குளிப்புக்கு ஒரு நொடியில் நான் உடன்பட்டு விட முடியும்.
ஆனால்…அக்கினிப் பிரவேசம் செய்து என் பெருமையைப் பறை சாற்றிக் கொள்வதை விட அதைச் செய்யாமலிருப்பதன் மூலம், எதிர்காலத்தில் என் பெயரால் எரியூட்டப்படும் என் சகோதரிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்றே ஆசைப்படுகிறேன் நான்!
தங்களின் செயல்,தவறான ஒரு முன்னுதாரணமாகி வரலாற்றின் பக்கங்களைக் கறைப்படுத்திவிடக் கூடாதே என்ற ஆதங்கத்தினாலேயே தயங்கி நிற்கிறேன் நான் !’’

மனமும் உடலும் களைத்துப் போய்ப் பேச்சை நிறுத்திய அந்தப் பெண்குல திலகத்தை ஆதரவோடு நெருங்கி,அவளது குழல் கற்றையை வாஞ்சையோடு நீவி விடுகிறான் இராமன்.அவளது உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவன் எடுத்துவிட்ட முடிவைப் புரிந்து கொண்ட பூரிப்பில் அங்கே கூடியுள்ளோரின் நெஞ்சங்கள் அமைதியால் நிறைகின்றன.

(கம்பராமாயண யுத்த காண்டத்தின் மீட்சிப் படலப் பாடல்களை முழுவதும் உள்வாங்கிக் கொண்டு, அதன் அடிப்படையில்
சிறிது புனைவையும் இணைத்து, மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட கதை இது.
’கலைமகள்’மாத இதழில் நவ. 1988 ஆம் ஆண்டில் முதலில் வெளிவந்த இச் சிறுகதை,மதுரை மீனாட்சி புத்தக நிலையத்தார் தொகுத்து வெளியிட்டிருக்கும் ‘கதை அரங்கம்’ – 4 ஆம் தொகுதியிலும் இடம் பெற்றிருக்கிறது.
பி.கு;
சிறுகதைப் பிதாமகரான புதுமைப்பித்தனின் ‘சாப விமோசனம்’ சிறுகதையே இப் படைப்பை எழுத என்னைத் தூண்டியது.
‘சாப விமோசனம்’ வெளிவந்த அதே கலைமகள் இதழில் இக் கதையும் வெளிவந்தது, நான் பெற்ற பெரும் பேறு) 

தொடர்புடைய சிறுகதைகள்
உயிர்த்தெழல்..
ஒரு முன் குறிப்பு; கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு முன் சென்னையிலுள்ள ஒரு மகளிர் கல்லூரியில் [பெயர் சுட்ட விரும்பவில்லை] ஒரு அனைத்துக் கல்லூரிக்கலை விழா நடந்து கொண்டிருந்தபோது மின் இணைப்பைத் துண்டித்து விட்டுப் பல மாணவியரைக் கூட்டம் கூட்டமாகப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கின ...
மேலும் கதையை படிக்க...
'டெமாக்கிளிஸ்'சின் வாளைப்போலத்தலைக்கு மேல் பயமுறுத்திக்கொண்டு சுமையாகக்கனத்துக்கொண்டிருந்த நேரத்தின்பளு,இங்கே சற்று லகுவாய்க் கரைவது போல் தோன்றியது.பளபளப்பான பாலிஷ் செய்யப்பட பளிங்குக்கல் தரையில் வழுக்கி விரையும் மனிதர்கள்....,வித விதமான அவர்களின் நடை,உடை பாவனைகள்...,முக அமைப்புக்கள்,அந்த ஆறு மாடிக்கட்டிடத்தில் அமைந்திருந்த பலதரப்பட்ட அலுவலகங்களின் உயர் அதிகாரிகள் ...
மேலும் கதையை படிக்க...
ஊர்மிளை
இருள் பிரியாத புலர் காலைப்பொழுதில் கிளம்புவதற்கான ஆயத்தங்களுடன் அரண்மனை முகப்பில் அந்தத் தேர் நின்றுகொண்டிருந்தது. சீதையின் வரவை எதிர்நோக்கியபடி சாரதிக்கு அருகே இறுகிய முகத்தோடு இலட்சுமணன். ""அவர் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்ததால் கொஞ்ச நேரம் காத்திருந்தேன்! இன்னும் உறக்கம் கலைந்தபாடில்லை...நேற்றுப் பகல் முழுவதும் ...
மேலும் கதையை படிக்க...
மானிடவர்க்கென்று பேச்சுப்படில்
(ஆண்டாள் குறித்த மரபு ரீதியான கதையின் மீட்டுருவாக்கம் இம்முயற்சி) ’’மின்னார் தடமதில் சூழ் வில்லிபுத்தூர்’’க் கோயிலின் கண்டாமணி அங்கே உச்சிக்கால வழிபாடு நடந்தேறுவதற்கு அறிகுறியாக நாத வெள்ளமாகப் பல முறை முழங்கி ஓய்கிறது. அதன் ஒலி முழக்கம் ஓய்ந்த பின்னரும் கூடப் பெரியாழ்வாரின் ...
மேலும் கதையை படிக்க...
அந்த அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் மீரட்டை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அம்மா பதட்டத்தோடு கத்தினாள். ''ஐயையோ....! அந்த உண்டியலை எடுத்துக்க மறந்து போச்சே...? '' ஒரு கணம், மொத்தக் குடும்பமும் திடுக்கிட்டுப் போய்விட.... என் மனதின் ஆழத்தில் மட்டும் கபடமான ஒரு திருப்தி! எல்லோருமாக ஹரித்துவார் போக ...
மேலும் கதையை படிக்க...
உயிர்த்தெழல்..
நேரமில்லை
ஊர்மிளை
மானிடவர்க்கென்று பேச்சுப்படில்
காசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)