Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

பிள்ளையே பாரமாக!

 

அம்மியில் தேங்காய், மிளகாய், திட்டமாக புளி வைத்து, கஞ்சிக்கு தொட்டுக் கொள்ள துவையல் அரைத்துக் கொண்டிருந்தாள் அஞ்சலை. கண்களில் கண்ணீர், அவளை அறியாமல் வழிந்தபடி இருந்தது. இரவு, சொக்கன் சொன்னது மனதில் வந்து போனது…
“அஞ்சலை… நாலையும் யோசித்துத் தான், நான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன். ரெட்டை புள்ளைங்க; அதுவும், பொட்டை புள்ளைங்க… கரையேத்த முடியுமா, யோசிச்சுப் பாரு. பிறந்து இரண்டு வருடத்துக்குள்ளேயே படாதபாடு பட்டிருக்கோம். போலியோ வந்து சூம்பிப் போன காலை வச்சுக்கிட்டு, என்னால பார வண்டி இழுக்க முடியல. கூலி வேலை பார்த்து, பொழுதை ஓட்ட வேண்டியதாயிருக்கு.
பிள்ளையே பாரமாக!“உனக்கும், உன் கூட பிறந்த இருமல், ஒரு வேலையும் நிலையாக செய்ய முடியாம படுத்துது. குழந்தைகளை பார்த்துக்கவே நேரம் சரியா இருக்கு. பிளாட்பாரத்தில் பிறந்து, வளர்ந்து, குடும்பம் நடத்தற நமக்கு, ஆதரவு யார் இருக்கா சொல்லு?’
கண்களை இறுக்கி, வந்த இருமலை கட்டுப்படுத்தி, அவனைப் பார்த்தாள்.
“அதுக்காக, புள்ளைகளை பழனி மலையிலே அனாதைகளாக விட்டுட்டு வந்திரலாம்ன்னு சொல்றியா?’
“அனாதையாக இல்லை அஞ்சலை… எங்களுக்கு பிள்ளைகளை கொடுத்தே, ஆனா, அதுகளை நல்லபடியா வளர்க்கிற சக்தி எங்ககிட்டே இல்லை. தயவு செய்து நீயே அந்த குழந்தைகளுக்கு தாய், தந்தையாக இருந்து, அதுகளுக்கு ஒரு நல்ல வழி காண்பின்னு, அந்த பழனி முருகன்கிட்டே ஒப்படைச்சுடுவோம்.
“மனசை கல்லாக்கிட்டு இதை நாம் செய்யத்தான் வேணும். தயவு செய்து மறுப்பு சொல்லாதே… பட்டினி போட்டு புள்ளைகளை சாகடிக்கிறதை விட, இது எவ்வளவோ மேல். சாயங்காலம் வரும் போது, வேலன் கிட்டே பணம் கடன் வாங்கிட்டு வர்றேன்; நாளைக்கு நாம் பழனிக்கு போறோம்…’ என்று சொல்லி, அவள் பதிலுக்கு காத்திராமல், இருட்டில் வெளியே போனான்.
கஞ்சியை கரைத்து கொடுத்து, இரண்டு குழந்தைகளையும் தூங்க வைத்தவள், மனம் சோர்ந்து கண்ணீர் விட்டு, குழந்தைகளை அணைத்தபடி படுத்துக் கொண்டாள்.
ஆளுக்கொரு குழந்தையை தூக்கிக் கொண்டு, பழனி மலை ஏறினர்.
“”அம்மா… அங்க பாரு குரங்கு!”
மழலை குரலில் சொன்னபடி, பிஞ்சுக் கரங்களால், தன் கழுத்தை திருப்பி பார்க்கும்படி சொல்லும் மகளை முத்தமிட்டாள் அஞ்சலை.
“கண்ணே… உன்னை நிரந்தரமாக பிரிய போகிறேன். அழகாக இரண்டு குழந்தைகளை கொடுத்த நீ, அந்த பிள்ளைகளை வச்சு பராமரிக்கிற கொடுப்பினையை கொடுக்காம போயிட்டீயே… பெத்த பிள்ளைக்கு கஞ்சி ஊத்த முடியாத அபலையாக நிக்கிறேனே…’
பெற்ற மனது பதற… அந்த முருகனின் முன் கண்ணீர் மல்க நின்றாள்.
வெளி மண்டப பிரகாரத்தில், சொக்கன் வாங்கி வந்த இட்லியை, இரண்டு குழந்தைகளுக்கும் ஊட்டியவள், கொண்டு வந்த ஜமுக்காளத்தை விரித்து, குழந்தைகளை தூங்க வைத்தாள்.
“”அஞ்சலை… குழந்தைங்க ரெண்டும் அயர்ந்து தூங்குதுங்க. இதுதான் சரியான நேரம்… கிளம்பு போகலாம்.”
பொங்கி வரும் கண்ணீரை, புடவை தலைப்பால் துடைத்துக் கொண்டவள், மறு பேச்சில்லாமல் எழுந்து கொண்டாள்.
தூங்கும் குழந்தைகளை திரும்பி, திரும்பி பார்த்தபடி நடந்தாள்.
“”கவலைப்படாதே அஞ்சலை… பழனி முருகன், நிச்சயம் நம் பிள்ளைகளுக்கு நல்வழி காட்டுவான். வா… மலை இறங்குவோம்.”
“”எனக்கு மனசு கேட்கலை… கொஞ்ச நேரம் இங்கேயே இருப்போம். நம் குழந்தைகள் முழிச்சு அழுதா, யாரு அதுங்களுக்கு பாதுகாப்பு? கூட்டத்தோடு கூட்டமாக இருந்து பார்த்துட்டு போவோம்யா…”
“”புரியாம பேசாத அஞ்சலை… புள்ளைங்க பரிதவிக்கிறதை பார்த்துட்டு, நம்மால பேசாம இருக்க முடியுமா? வேண்டாம், புறப்படு… அந்த பழனி முருகன் பார்த்துப்பான்… வா போகலாம்.”
“”இல்லய்யா… என்னால வர முடியாது; இருந்து பார்த்துட்டு வர்றேன். தயவு செய்து என்னை தடுக்காதே.”
“”பாவம்ங்க… யாரோ, இரண்டு குழந்தைகளையும் பிரகாரத்தில் அனாதையா போட்டுட்டு போயிட்டாங்க. புள்ளைங்க அழறதை பார்த்தா பாவமா இருக்கு. எப்படித்தான் மனசு வந்ததோ…”
கூட்டத்தில் ஒருவர் சொல்ல, “”கோவில் நிர்வாகத்தில் போய் சொல்லுங்க… அழுதழுது தொண்டை வறண்டு, மயக்கம் வந்துட போகுது.”
அழும் குழந்தைகளுக்கு அருகில் போக எல்லாரும் யோசித்தனர். ஆளுக்கொன்றாக சொல்ல, கூட்டத்தோடு கூட்டமாக நின்று கவனித்துக் கொண்டிருந்த அஞ்சலையின் கண்களில் கண்ணீர் பெருகியது.
கூட்டத்தை விலக்கி, ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி, குழந்தைகளை நோக்கி வந்தாள்.
“”கண்ணுங்களா அழாதீங்க…” இரண்டு பேரையும் மார்போடு சேர்த்து அரவணைத்து, ஆசுவாசப்படுத்தினாள். பெற்ற தாயை காணாமல் பரிதவித்து நின்ற குழந்தைகள், அவள் மீது சாய்ந்து, ஆறுதல் தேடின.
“”ஏம்மா… நீ தான் இதுங்களோட தாயா? ஏம்மா இப்படி போட்டுட்டு போனே…”
“”நான் இதுங்களை பெத்தவ கிடையாது; இருந்தாலும், இனி, இந்த குழந்தைகளுக்கு தாயாக இருந்து, வளர்க்க போறேன்.”
“”யாரு முனியம்மாவா… வெத்தலை பாக்கு கடை வச்சு, வயித்துக்கும், வாய்க்கும் போதாம, கஷ்ட ஜீவனம் நடத்திட்டிருக்கே… உன்னால தனி மனுஷியா, இந்த இரண்டு குழந்தைகளையும் வளர்க்க முடியுமா? பெத்தவளுக்கு இல்லாத அக்கறை உனக்கு எதுக்கு?”
அவளுக்கு தெரிந்த பெண்மணி சொன்னாள்.
“”நிச்சயம் வளர்க்க முடியும்; அந்த பழனி முருகன் துணையிருப்பான். பெத்தவ தான், பாரம் பொறுக்க முடியாம போட்டுட்டு போயிட்டா… மனசிருந்தா மார்க்கம் இருக்கு. இந்த மாதிரி குழந்தைங்க தங்களுக்கு பிறக்காதான்னு தவம் இருக்கிறவங்க மத்தியில, பெத்த பிள்ளைகளை பாரமா நினைக்கலாமா? இது, கடவுள் கொடுத்த வரம். தேனும், பாலும் கொடுத்து வளர்க்கும் தகுதி இல்லாட்டியும், கூழோ, கஞ்சியோ வயிறார கொடுத்து, என்னால வளர்க்க முடியும்.”
குழந்தைகளை தூக்கிக் கொண்டு நடந்தவளை, ஓடிச்சென்று வழிமறித்து, குழந்தைகளை வாங்கிக் கொண்டாள் அஞ்சலை.
“”இது என் குழந்தைங்க… மனசு சரியில்லாமல், புள்ளைகளை போட்டுட்டு போயிட்டேன்,” அழுதபடியே இரண்டு குழந்தைகளையும் முத்தமிட, அம்மாவை பார்த்த மகிழ்ச்சியில், அவளை கட்டிக் கொண்டன.
ஆளுக்கொன்றாக பேசியபடி கூட்டம் கலைய, வளைந்த காலை இழுத்து, இழுத்து நடந்தபடி அவளிடம் வந்தான் சொக்கன்.
“”இதுக்கு தான் அப்பவே சொன்னேன். கடைசி நேரத்தில் புகுந்து காரியத்தை கெடுத்துட்ட புள்ள… புள்ளைகளுக்கு நல்ல தாய் கிடைச்சா… அதை தடுத்துட்டே. இந்த புள்ளைகளை உன்னால கரையேத்த முடியுமா?”
கோபமாக கேட்கும் கணவனை, கண்களில் கனல் தெறிக்க பார்த்தாள்…
“”இங்க பாருய்யா… பெத்த எனக்கு, என் பிள்ளைகளை எப்படி கரையேத்தறதுன்னு தெரியும். மூணாம் மனுஷிக்கு இருக்கிற தெளிவும், அக்கறையும், பாசமும், பெத்த நமக்கு இல்லாம போயிடுச்சு. நாலு இடம் அலைஞ்சு திரிஞ்சாவது, என் புள்ளைகளுக்கு நான் கஞ்சி ஊத்துவேன். உன்னால எனக்கு துணையாக இருந்து, இந்த புள்ளைகளை வளர்க்க முடியும்னா, என் பின்னால வா… இல்லாட்டி, இந்த புள்ளைகளை தொலைச்சு, தலை முழுக நினைச்ச மாதிரி, என்னையும் தலைமுழுகிட்டு போயிட்டே இரு…”
சொன்னவள், அவன் பதிலையோ, தன்னை பின் தொடர்கிறானா என்று கூட எதிர்பார்க்காமல், குழந்தைகளை மார்புற தழுவி, விறுவிறுவென்று மலை இறங்கத் தொடங்கினாள்.

- ராஜ் பாலா (ஏப்ரல் 2011) 

தொடர்புடைய சிறுகதைகள்
பிறவிப்பகை நட்பாக முடியாது !
ஒரு ஊருக்கு வெளியே அரசமரம் ஒன்று இருந்தது. அதை இருப்பிடமாகக் கொண்டு, கீரிப்பிள்ளை, எலி, பூனை, ஆந்தை ஆகிய நான்கும் வசித்து வந்தன. கீரியும், எலியும், மரத்தின் வேரின் கீழ் உள்ள வளைக்குள் தனித்தனியாக வசித்தன. பூனை, மரத்தின் அடியில் உள்ள பெரிய ...
மேலும் கதையை படிக்க...
மெல்லியதாய் கொழுந்து விட்டு எரிந்துக்கொண்டிருக்கும் அக்கினிக்கு எதிரே நானும் கோமளாவும் மணமக்களாய் அமர்ந்திருந்திருக்கிறோம். கழுத்தை அழுத்தும் மலர் மாலையுடன் பொன்னும் பூவும் அழகு சேர்க்க சிவப்பு சரிகை ஒளிரும் பொன்நிற சேலையில் கோமளா இளஞ்சிவப்புப் பூவாய் நாணத்தில்…! இன்னும் சற்று நேரத்தில் மஞ்சள் ...
மேலும் கதையை படிக்க...
வேகமாக நடந்து செல்லும் இந்த முதியவரின் வயது 80. இன்று இவர் வாழ்க்கையின் இறுதி நாள், அதற்கான மேலிட உத்தரவு என் கையில் உள்ளது. அதற்கு டிக்கெட் என்பர் இவ்வுலகில். டிக்கெட்டில் ஜனவரி 21 1964 என தேதி குறிப்பிட்டுள்ளது. அந்த ...
மேலும் கதையை படிக்க...
பொம்மைகளும் கிளர்ந்தெழும்!
சவரத்தை முடித்துவிட்டு சுப்பு போய்விட்டான். அவனோடு அந்த வாடையும் போய்விட்டது. வாடை என்றால் வேற என்னவோ என்று நினைக்க வேண்டும். நல்...ல ஒரு மனுச வாடைதான். பருவ வயசில் உடம்பிலிருந்து ஆணிலும் பெண்ணிலும் அப்படி ஒரு வாடை இருக்கும்.ஆயி தன்னுடைய தோள்களை ...
மேலும் கதையை படிக்க...
அலுவலகம் வந்ததில் இருந்து ஒரு வேளையும் ஓடவில்லை. கீர்த்தனா செய்த காரியத்திற்கு அவளுக்கு ஒரு அறை கொடுத்து இருக்க வேண்டும். ஆனால் மனைவியாக இருந்தாலும் கைநீட்டக்கூடாது என கொள்கை வைத்திருப்பதால் அதைச்செய்யவில்லை.. நான் கல்லூரிக்காலங்கள் எட்டும் வரை என் அம்மாவை கைநீட்டி ...
மேலும் கதையை படிக்க...
பிறவிப்பகை நட்பாக முடியாது !
பெண் என்ற ‘புதிரும்’ ‘குறிப்பும்’
முதியவரின் இறுதி நேரம்
பொம்மைகளும் கிளர்ந்தெழும்!
கீர்த்தனாவை அறைஞ்சிருக்கனும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)