தொலையாத செல்வமும்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 24, 2022
பார்வையிட்டோர்: 4,908 
 

“ஏங்க..பிள்ளை ஒழுங்கா போய் சேந்திருப்பானா..? போயி ஒரு வாரம் இருக்குமா..?கண்ணுக்குள்ளே இருக்காங்க..”

“ஏன்..கண்ணுக்குள்ளேயே பொத்தி வச்சிக்கிடறதுதானே..!! தொறந்து ஏன் வெளியே விட்ட?

வாயில விரல வச்சா கடிக்கத் தெரியாது பாரு…நல்லா பெத்து வச்சிருக்க…!!

“ஏன்.. உங்களுக்குத் தெரியாம பெத்துகிட்டு வந்திட்ட மாதிரியில்ல பேசுதீங்க…!!”

“ஏண்டி.. அக்கம் பக்கம் யாரு இருக்காங்கன்னு பாத்து பேசமாட்ட.?”

“அதேதான் நானும் கேக்குதேன்…!!”

“அம்மா..!! அண்ணன் வேலைக்கு போயி ஒரு வாரங்கூட ஆவல . மறுபடியும் சண்ட போட ஆரம்பிச்சிட்டீங்களா…?

“ஆமா…உங்க அண்ணன் சிங்கப்பூருக்கில்ல வேலைக்கு போயிருக்கான்…உங்க ஆத்தாவுக்கு ரொம்பத்தான் நோவுது…!!”

“ஏம்மா.. அண்ணன் எந்த ஊருக்கு வேலைக்கு போயிருக்கு…?”

“இங்க..பட்டணத்துக்குத்தான்..அதுக்கே உங்கம்மாவுக்கு நாலு நாளு தூக்கமில்ல…நல்லா கொஞ்சி கொஞ்சி குட்டிச்சுவராயில்ல ஆக்கி வச்சிருக்கா…!”

“பாவம்பா….அண்ணன திட்டாத…”

“ஏம்புள்ள…. காவேரி…!!உன்னோட படிக்கிற பிள்ளைங்களுக்கு கூடப்பொறந்தவுங்க இருக்காகல்ல.! அவுக யாரும் வெளிய வேலக்கி போறதில்ல..?

அது சரி…..உங்கண்ணனுக்கு என்ன வயசிருக்கும் சொல்லு பாப்பம்…!!”

“இருபது இருபத்தஞ்சு….?”

“ஏன்.? பதினஞ்சுன்னு சொல்ல வேண்டியதுதானே…!

இந்த அப்புசி வந்தா இரண்டு கழுத வயசாகுது..”

“ம்ம்ம்.. ஒரு கழுதைக்கு எத்தினி வயசுப்பா…?”

“ஏய்.. ராசாப்பயலே..!என்ன விளையாடுதியா?உங்க அண்ணனுக்கு நுப்பது வயசாச்சு தெரியுமில்ல..!

“அப்போ ஒரு கழுதைக்கு பதினஞ்சு வயசு..!! அப்போ நானு கழுதையா..?

“ஹைய்யா…அக்கா கழுத…. அக்கா கழுத..!

“போடா..உன் வேலயப்பாத்துட்டு.”

“எம்பிள்ளைய கரிச்சுக் கொட்டாட்டி உங்களுக்கெல்லாம் ஒறக்கம் வருமா..?

பாவம்..அவன அந்த கெரகம் பிடிச்சில்ல ஆட்டுது..எதத் தொட்டாலும் வெளங்காமப் பண்ணிப்போடுதே..!

“வெங்காயம்..! உம்பிள்ள பெருமைய நீதான் மெச்சிக்கணும்..

படிப்பு ஏறலன்னு எத்தினி பேரு காலுல கைல விழுந்து வேலைக்கு சேத்துவிட்டேன்..

நாம வீட்டுக்கு திரும்ப முன்னே வெளியே விட்ட பூனைக் குட்டி வீட்டுக்கு திரும்பி வர மாதிரி ஒரு நாளைக்கு ஒழுங்கா ஒரு வேலைல நெலச்சு நின்னிருப்பானா உன்னோட உத்தமபுத்திரன்…!”

ராமசாமி கூறுவதும் உண்மைதான்..

மூத்த பையன் தலையெடுக்க வில்லையென்றால் எத்தனை நாள் ஒரு தகப்பனால் அந்த சுமையைத் தாங்கிக் கொண்டிருக்க முடியும்..?

ராமசாமி தலை கனத்துக் கொண்டிருந்தது..எப்போது பாரத்தை இறக்கி வைக்கப்போகிறோம் என்று ஒவ்வொரு வினாடியும் உடலும் மனமும் ஏங்கிக் கொண்டிருந்தது..!

வாயிலிருந்து வரும் வார்த்தைகளும் அதற்கு ஏற்றால் போலத்தானே இருக்கும்…!

***

“ஏங்க.. உங்களுக்கு செல்வத்த நெசமாலுமே பிடிக்கலியா…?அவம் பேச்ச எடுத்தாலே எரிஞ்சு விழுகிறீகளே…!!”

“சொர்ணம்…உனக்கு பாசம் கண்ண மறைக்குது….உனக்குன்னிட்டு இல்ல.. ஒரு தாயும் தம் மகன் கொலகாரனாயிருந்தா கூட விட்டு கொடுக்க மாட்டா..பத்து மாசம் பிள்ளயப்பத்தி எங்களவிட அதிகம் தெரிஞ்சவங்க நீங்க..! எனக்கு அவன பிடிக்காதுன்னு மட்டும் எண்ணிராத…! அவன் செல்வத்தோட சீரும் சிறப்புமா வரணும்னு தானே செல்வம் , செல்வம்னு வாய் நிறைய கூப்பிடுதேன்..

மூத்த பிள்ளை ஒழுங்கா இல்லையினா மொத்த குடும்பமுமே நாசம்…எனக்கு இப்போ உத்தியோகமில்ல.வருமானமில்ல..இன்னும் அவனுக்கு கீழ இரண்டு பிள்ளைங்க…நீயும் வெவரமானவதானே..!!

சொல்லு..!! எனக்கொண்ணு ஆயிடுச்சுன்னா உங்க கெதி…? நீ இதெல்லாம் ரோசன செய்ய மாட்ட..! பிள்ளய நானு ஒரு சொல் சொன்னா மட்டும் ரோசம் பொத்துகிட்டு வந்துடும்….!

எல்லா அப்பனுக்கும் எங்கதிதான்..வேல செய்யணும்…..சம்பாதிக்கணும்..பணத்த குடுத்துப்போட்டு வாய மூடிக்கணும்…ஒரு சொல்லு சொல்ல உரிமையில்லை..நாங்க உழைக்கிறதே வெட்டியோன்னு தோணிப்போச்சு..! அதெப்படி… புருசன் சிரமப்பட்டு வேல செய்யுறத பாத்து நோவாத மனசு பிள்ளை ஒரு நாளு குனிஞ்சு நிமுந்தாலே உசிரு போவுற மாதிரி நோவுது….! ”

ராமசாமி இவ்வளவு ஆதங்கப்பட்டு சொர்ணம் பார்த்ததில்லை..

வாய் பேச முடியாத ஊமையாகிப்போனாள்..

ஒவ்வொரு வார்த்தையும் பீஷ்மரின் உடலில் தைத்த அம்புகளாய் உடலில் சொருகிக் கொண்டது..!

புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டு தூணில் சாய்ந்து செல்வத்தைச் பற்றிய சிந்தனையில் மூழ்கினாள்…

***

வாசல் கேட்டை யாரோ பலமாக தட்டும் சத்தம்..

“யாரு? இப்படி போட்டு கேட்ட ஒடைக்கிறது..?

சொர்ணம் வாசலுக்கு விரைந்தாள்.கூடவே ஒட்டிக்கொண்டு காவேரி…வாசலில் ஒரு வேன் நின்றுகொண்டிருந்தது..

“ஏம்மா..ராமசாமிங்கிறது…?இந்த வூடு தானே..?”

“அதெல்லாம் சரியாத்தான் இருக்கு..கேட்ட போட்டு இந்த இடி இடிக்கிறியே..!! போன வருசம் தான் ரிப்பேர் செஞ்சது..”

“ஏம்மா..! உங்கேட்ட ஒடைக்கணும்னு எனக்கு என்ன நேத்திக்கடனா..? வாசல்ல காலிங் பெல்ல பத்து வாட்டி அமுக்கினேன்..கை உள்ளாற போயிரும்போல இருந்திச்சு..அத்த சரிபண்ணு மொத…!”

“ஆமா..இவரு பண்ணிட்டாலும்..”

முணுமுணுத்து கொண்டு வெளியே எட்டிப் பார்த்தாள்..

“உம்..என்ன..? பாத்துகிட்டு நிக்கிறீங்க..? எறக்குங்க..!! சாக்கிரத…!”

என்னத்தை இறக்கணும்..?

“அம்மா…! என்னதும்மா…?

“நான் என்னத்த கண்டேன்..?”

ஒரு பெரிய அட்டைப் பெட்டி வெளியே வந்தது… அவ்வளவு ஒன்றும் கனமில்லை போலிருந்தது..

இரண்டு பேர் சேர்ந்து தூக்கி வீட்டு வாசலுக்கு வந்ததும், “நவுரு…நவுரு…!! வழியடைச்சுகிட்டு நின்னா எப்படி..?”

“இருப்பா..இரு..மொதல்ல இது என்ன ? நீங்க யாரு…?

அவர்கள் அதைக் காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை.

“பாத்து!! பத்திரம்!! அந்த ஓரத்தில எறக்கிடுங்க..!

“ஏம்பா..நானு ஒத்தி கத்திகிட்டு இருக்கேன்.உம்பாட்டுல உள்ளபுகுந்த..ஏதோ சாமான எறக்கி வைக்கிற..இந்த நேரம்பாத்து எங்கிட்டு தொலஞ்சாரோ இந்த மனுசன்…!!”

“அம்மா…!! இருங்க இருங்க..!! யாரு வீட்டு பொருளோ இல்ல.. ஒரு மினிட்டு..!

“இந்த பேப்பர பாருங்க..இதில பேரு , அட்ரஸூ எல்லாம் எழுதி இருக்கு..சரியான்னு பாருங்க..!”

காவேரி வெடுக்கென்று அந்த காகிதத்தைப் பிடுங்கிக் கொண்டாள்…!

இந்த ஆர்ப்பாட்டத்தில் யாரும் பெட்டியை கவனித்ததாய் தெரியவில்லை..

ராசாதான் ஓடிப்போய் பெட்டியருகில் நின்றான்..

“அம்மா…டி.வி. படம் போட்டிருக்கு..
அக்கா..!! சீக்கிரம் வா…!! ஹய்யா..டி.வி..டி.வி…!

“அம்மா இதில ஒரு கையெழுத்து போடுங்க….!! பாப்பா..இந்தா.. ஒரு கவரு…!! அப்பா கிட்ட குடு…!

நானு வரேம்மா…”
காசு ஒன்றும் எதிர்பார்க்கவில்லை.. அடுத்த வினாடியே வேன் கிளம்பும் சத்தம்..!!

ராசாப்பயல் அந்த பெட்டியை கிரிவலம் வருவது போல சுற்றி வந்துகொண்டிருந்தான்..

“காவேரி.. அந்தக் கடுதாச பிரிச்சு படி கண்ணு..உங்கப்பா எப்போ வருவாருன்னு சொல்லமுடியாது..!

இது என்ன கூத்து…? ஒண்ணும் வெளங்கலியே.!! இஷிணி வேலையாட்டமில்ல தெரியுது…!

மண்ட காயுது…யாரு என்ன எழுதியிருக்காங்கன்னு படிச்சு காட்டு பிள்ள!”

“பொறும்மா..!! படிச்சுட்டுத்தான் மறுவேல…!!”

“அம்மா..!! செல்வண்ணந்தான் எழுதியிருக்கு..!!”

“நம்ப செல்வாவா…! சீக்கிரம் படி..!!”

“அம்மா..குறுக்க குறுக்க பேசாத..படிக்க விடு…!”

‘ என்னுடைய நண்பன் மூலம் இந்த பெட்டியைக் கொடுத்தனுப்பியிருக்கிறேன்.
நான் வந்தபின் திறக்கலாம்.
கூடிய சீக்கிரமே உங்களையெல்லாம் பார்க்க வருவேன்…
அன்புடன்…
செல்வா.’

“அம்மா.. அண்ணனப் பாரேன்.ஒரு விவரமும் இல்ல..இது என்ன லெட்டர்…?”

“காவேரி…ஏதோ அவசர வேலயா இருந்திருப்பான்..

போயி ஒரு மாசம் கூட ஆவல..
பாவம்..ராசாப்பயல் கேட்டுகிட்டே இருக்குதேன்னு நெனவு வச்சிகிட்டு டி.வி.பெட்டிய வாங்கி அனுப்பிச்சிருக்கே பிள்ள!

பிள்ளையின்னா இது இல்ல பிள்ளை.! பாவம் எப்படி இருக்குதோ…?

வேளா வேளைக்கு சாப்பிடுதோ…கொள்ளுதோ…

நாலு காசு பாத்துப்புட்டா அவன மாதிரி மத்தவங்களால செய்ய முடியுமா…?

இம்புட்டு நாளு வேல பாத்து உங்கப்பா செய்யாதத ஒரே மாசத்தில எம்புள்ள சாதிச்சுபுட்டான் பாரு….!

“அம்மா..நிறுத்து அண்ணன் புராணத்த..விட்டா ஓவரா போறியே..!!

அப்பாவ ஏன் வம்புக்கு இழுக்குற..உம்புள்ள பெருமைய உன்னோட வச்சுக்க…!!”

ராசாப்பயலுக்கு பொறுமையே இல்லை..

“எனக்கு இப்பவே டீ.வி. பாக்கணும்.தெறங்கம்மா பெட்டிய.!!

அவன் வாயை அடக்குவது பெரும்பாடாயிருந்தது….

***

ராமாசாமி அன்றைக்குப் பார்த்து நேரம் கழித்தே வந்தார்..

“என்ன எல்லாரும் வாசல்ல நின்னுகிட்டு… வரவேற்பு பலமா இல்ல இருக்குது…!”

“அப்பா..! அப்பா.! டி.வி..!! டி.வி..!”

“ஏலேய்..வீட்டுக்குள்ள காலு வைக்க முந்தி அது என்னடா டி.வி..?

டி.வி.யெல்லாம் இன்னும் ஒரு வருசத்துக்கு மூச்…!

இங்க வீட்டு செலவு சமாளிக்கிறதே ‘ உன்னப் பிடி..என்னப்பிடி..!!யின்னு இல்ல இருக்கு…!!”

“ஆமாண்டா..உங்கப்பாரு அப்பிடியே வாங்கி தந்துட்டாலும்..!!”

“அம்மா..வாய மூடு..”

காவேரிக்கு பொறுக்கவில்லை..

“அப்பா.. டிவி வாங்க வேணாம்பா..வந்து பாரு..!! டிவி பெட்டி..இப்பவே பாக்கணும்..!”

ராமசாமிக்கு எரிச்சலாய் வந்தது.. வெயிலில் சுற்றிய களைப்பு வேறு..

ராசா விடவில்லை.. அவர் வேட்டியைப் பிடித்து தரதரவென்று இழுத்துக் கொண்டு போனான்.

“பாருங்கப்பா.. டி.வி.. படம் போடுப்பா….?

இதென்ன கூத்து….?

அறையின் ஒரு மூலையில் கம்பீரமாக ஆக்ரமித்திருந்தது ஒரு டிவி பெட்டி..

அட்டையில் கொட்டையாய், ஸோனி டி.வி..42 இஞ்ச்…’ என்று நாலாபுறமும் கொட்டி முழங்கியது..

ராமசாமிக்கு இப்போது கொஞ்சம் கோவம் வந்தது..

தன்னைக் கேட்காமல் ஆர்டர் குடுத்திருப்பாளோ சொர்ணம்..?

ச்ச்சேச்சே…! அந்த அளவுக்கு தைரியமெல்லாம் கிடையாது…!!”

ராமசாமிக்கு சொர்ணத்திடம் கேட்க பயமாயிருந்தது.. ஏதாவது ஏடாகூடமாய் பதில் வரும்..

இப்போது இருக்கும் மனநிலையில் அவளுடன் சண்டை போட திராணியில்லை..

“அம்மா.. காவேரி.. இந்தப் பெட்டி.?”

“அண்ணன் அனுப்பிப்பிச்சிருக்குப்பா…?”

“யாரு…? செல்வமா…?”

“ஏன்…எத்தினி அண்ணன் இருக்காப்ல…? எல்லாம் உங்க உதவாக்கர பிள்ள செல்வந்தான்…!”

உலை கொதிக்க ஆரம்பித்து விட்டது.. அதன் வாயை மூடலாம்.. ஆனால் சொர்ணத்தின் வாயை…?

“அப்பா.. போயி கைகால் கழுவிட்டு வாங்க..காப்பி குடிச்சிட்டே பேசலாம்……

அம்மா..மொத. அப்பாவுக்கு காப்பித்தண்ணி வச்சுக் கொண்டா..!!

‘பாவம்..இந்த பெண்ணுக்காவது கொஞ்சம் கரிசனம் ஒட்டிக் கொண்டிருக்கிறதே….!

சரி..வில்லங்கமாய் ஒன்றும் நடந்திருக்காது என்று எண்ணிக் கொண்டு கொல்லைப் பக்கம் போனார்..

“உம்… சொல்லுங்க யாராச்சும்..!”

காவேரி நடந்ததை புட்டு புட்டு வைத்தாள்….

கூடவே ரெட்டை நாயனம் போல ஆத்தாக்காரி சவுண்டு எஃபெக்ட் குடுத்த வண்ணம் இருந்தாள்..

ராமசாமிக்கு நம்பிக்கை வரவில்லை..

ஆனாலும் ஒரு பக்கம் செல்வத்தை நினைத்து பாவமாயிருந்தது..

எதற்காக ஒரு மாதத்துக்குள் டி.வி வாங்கி அனுப்ப வேண்டும்..? ரோசமாயிருக்குமோ..? அதற்குள் டிவிக்கு என்ன அவசரம்..?

“காவேரி..அந்த கடுதாசியக் காட்டு..!”

‘ம்ம்ம்….’

மனதுக்குள் முனகினார்..

இவன யாரு இப்ப இங்க வரச்சொன்னது..? போகவர ரயிலுக்கு தண்டச் செலவு..!”

“ஏங்க.. பையன் வரான்னு சந்தோசப்படுவியளா.அத விட்டுப் போட்டு..! பிள்ளைப் பாசமே இல்லாத மனுசன இப்பத்தான் பாக்குறேன்..”

ராமசாமி அடுத்த யுத்தத்துக்கு தயாரில்லை…

“அப்பா.. எந்திரிச்சு வந்து டிி.வி .பெட்டிய பாருப்பா…!!

நல்ல பெரிய டிவியாத்தான் இருக்கும்போல..

“சோனிதான் பெஸ்ட்…! அண்ணன் எப்ப வருதோ…?”

“அக்கா!! கலர் டிி.வி.. நாம பிரிச்சா ஒண்ணும் வையாது..பிரிக்கா…!”

“என் ராசாக்கண்ணு ஒரு வாரம் பொறுத்துக்கய்யா..வெவரமெல்லாம் அவனுக்குத்தான் தெரியும்..

டேய்.. அக்கம் பக்கத்தில் போயி சொல்லிப் போடாத..பொல்லாத கண்ணு…!!”

ராமசாமி எழுந்திருந்தார்…

டி.வி.யைத்தான் போய்ப் பார்க்கப்போகிறார் என்று நினைத்த மனைவி குழந்தைகளை ஏறெடுத்தும் பார்க்காமல் அவரது அறையில் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டார்…

“ஆனாலும் உங்கப்பனுக்கு இம்புட்டு வீராப்பு ஆகாது…!!”

சொர்ணம் சமையலறைக்குள் முணுமுணுத்து கொண்டே நுழைந்தாள்….

***

வெயில் காலத்தில் ராமசாமி வெளித் திண்ணையில் தான் படுப்பார். காவேரி அவருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு போவாள்..

ஆபூர்வமாய் சொர்ணம் வந்து உட்காருவாள்..அநேகமாய் ஒரு பஞ்சாயத்துடன் தான் வருவாள்..வந்துவிட்டு போனதும் ஏன்தான் வந்தாளோ என்று தோன்றிவிடும்..

பெரும்பாலும் ஒரு இயலாமை அல்லது குற்ற உணர்ச்சியை அவருள் ஏற்றிவிட்டுத்தான் போவாள்..

அன்று தூக்கம் கோவிந்தா…!

இன்றைக்கும் உறக்கம் வரவில்லை..! அது சொர்ணத்தாலல்ல..!

“அப்பா.. ஏன் சங்கட்டப்படுறீங்க..? அம்மா பேசின பேச்சுக்கா.? அம்மா சொலறத எல்லாம் ஒரு கணக்கா எடுத்துக்காதீங்க அப்பா.! நிசமாலுமே உங்களுக்கு சந்தோசமா இல்லியா…? சொல்லுங்க..!! மனசில இருக்குறத சொல்லுங்கப்பா…! பூட்டி பூட்டி வைக்க வைக்க பாரந்தான் கூடும்…!”

காவேரி அவரது தாயைப் போல..!

மனதின் ஆழத்தில் தைத்த முள்ளையும் நோவாமல் எடுக்கும் கலை தெரிந்தவள்…!!

ஆத்தாக்காரி ஏற்றிவைத்த பாரத்தை பத்தே நிமிடத்தில் இறக்கி வைத்து விடுவாள்.

“கண்ணு..நீ கேக்குறதே மனசுக்கு ஆறுதலா இருக்கு..அம்மாவ விடு..!! அது வார்த்தை பழகிப் போச்சு… கூர் மழுங்கின கத்தி மாதிரி..! ஆனா, இந்தப் பய செல்வம்…! ஒண்ணுமே புரிஞ்சிக்கிட முடியல…! பாம்புன்னு ஒதுக்க முடியல…பழுதுன்னு மிதிக்க முடியல…! இப்ப எதுக்கு டிவியும் கிவியும்..? ஒரு வெவரமில்ல… மொட்ட தாத்தா குட்டையில விழுந்த கணக்கா ஒரு கடுதாசி…மனசு அல்லாடுது பிள்ளை..!”

“அப்பா…நல்லதையே நெனப்போமே… ரொம்ப யோசிக்காம படுத்து தூங்குங்க ப்பா…!!?”

காவேரி பேசின பேச்சில் மனசு கொஞ்சம் லேசாகி உறங்கினவருக்கு ஒரு மணிநேரத்தில் முழிப்பு தட்டியது..!!

புரண்டு புரண்டு படுத்ததுதான் மிச்சம்..

நிச்சயமாக அவன் டிவி வாங்கி அனுப்பும் அளவுக்கு ஒரு மாதத்துக்குள் கையில் பணம் இருக்காது…!

எங்கேயாவது கை வைத்திருப்பானோ…?

இவனை நம்பி பட்டணத்துக்கு அனுப்பி இருக்கக் கூடாதோ…?

போலீஸ் கீலீஸ் பிடித்தால்…?

நா வறண்டு போனது..!!

சமையலறையில் போய் ஒரு சொம்பு தண்ணீரை மொண்டு குடித்து விட்டு வரும்போதுதான் அந்த யோசனை தோன்றியது..

எல்லோரும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள்..

ஜீரோ வாட்ஸ் பல்பை போட்டார்..
பெட்டியருகே நின்று அதைத் தடவிப் பார்த்தர்..!

மெதுவாக ஆட்டிப் பார்த்தார்..
உள்ளே ஏதோ கடகடவென்று ஆடினமாதிரி கேட்டது..

டிவி எங்காவது உடைந்து போயிருக்குமோ..?

டிவி உள்ளே இருக்குமா…?

மேலே ஒட்டியிருந்த டேப்பை கவனமாகப் பிரித்தார்..

பாதி திறந்ததும் கையிலிருந்த டாரச்சை வைத்து உள்ளே உத்துப் பார்த்தவர் அதிர்ச்சியோ ஆச்சரியமோ படவில்லை..!!

எப்படி ஏற்படும்..??எதிர்பார்த்ததுதானே!!

சாதாரணமாக டி.வி. பேக் பண்ணி வரும் தெர்மகோலுக்கு பதில் செல்வம் கொண்டுபோன போர்வை..அவர்கள் வீட்டு போர்வை. நீலத்தில் கட்டம் போட்ட போர்வை..

அடியில் லேசாக கையை நுழைத்து துழாவ அவன் வீட்டிலிருந்து கொண்டு சென்ற பொருட்கள் ஒவ்வோன்றையும் கைவிரல்கள் அடையாளம் கண்டு கொண்டது..

“துத்தெறி..! டிவியாமில்ல…!! இவன் திருந்தவே மாட்டான்.. பாவம்.!! ராசாப்பயல் ! ஏமாத்திபுட்டயே பாவி…! வீட்ட காலி பண்ணி சாமன அனுப்பிப்பினவனுக்கு உண்மையச் சொல்ல வாயி வரலியாக்கும்…! அடுத்த வாரம் தொர நேரில வந்து சொல்லுவாராம்…! அதுவரைக்கும் நாம் பொறுமையா இருக்கணுமாம்..!”

ஒரு புறம் ஆத்திரம்.. மறுபுறம் வேதனை!

பெட்டியை அப்படியே பழையபடி மூடிவிட்டு ஒரு நிமிடம் பிரமை பிடித்தது மாதிரி நின்று கொண்டிருந்தார்..

லைட்டை அணைத்தார்… திண்ணையில் போய் படுத்த நாழிகையில் உறங்கிப் போனார்..

***

“ஏங்க!! உங்களுக்கு புத்தி பெசகி போச்சா…? பையன் செஞ்சதுக்கு சவால் விடுறீகளா..?

அப்படியிருந்தாலும் இந்த மாதிரி ஒரு கூறுகெட்ட காரியத்தை எந்த அப்பனுமே செய்யமாட்டாங்களே.!

பையன் மேல போட்டியிருக்குன்னே வச்சுக்கிடுவோம்…

அதுக்குன்னு இம்புட்டு செலவழிச்சு…!! ஒண்ணும் புரியலடா சாமி…!”

சொர்ணம் தலையில் கைவைத்து புலம்புவதை நிறுத்தவில்லை…

“அப்பா..! என்ன ஆச்சு உங்களுக்கு.? எனக்கு நெசமாலுமே பயம்மா இருக்கு…சொல்லுப்பா….!”

காவேரி உண்மையான ஆதங்கத்துடன் கேட்டாள்..

“ஹய்யா.. ரெண்டு டி.வி.! ரெண்டு சினிமா பாக்கலாம்…”

ராசுவுக்கு கொண்டாட்டமான கொண்டாட்டம்…

ஆம்..இப்போது அறையில் இன்னொரு டி.வி.பெட்டி..திறக்கப்படாமல்…!! முதல் நாள்தான் வந்து இறங்கியது…!

“அப்பா..இதையாவது தெறப்பா…”

“இதையும் செல்வம் வர வரைக்கும் யாரும் தெறக்கக் கூடாது….ஆமா..! சொல்லிப் போட்டேன்…”

துண்டை உதறி தோளில் போட்டவர்தான்..

இரண்டு நாளும் யாரோடும் பேசவில்லை.. யார் முகத்தையும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை..

இரண்டு நாட்கள் ஆமையாய், ஊமையாய் நகர்ந்தது…

***

“ஐய்யா…! அண்ணன் வந்திரிச்சு..டி.வி.பாக்கலாம்…!”

ராசாப்பயல் குதிப்பதை நிறுத்தவில்லை!
செல்வம் காலைக் கட்டிக் கொண்டான்….

“என்னப் பெத்த ராசா…!! என்னப்பா ஒரு மாசத்தில துரும்பா எளச்சு, கருத்துப்போயி..!! சோறு திங்கிறியா இல்லையா…? இதுல டி.வி. பெட்டி வேற…!!”

செல்வம் பிரமை பிடித்தது போல நின்றான்…

வெறுங்கையுடன் தான் வந்திருந்தான்..

இந்த ஆர்ப்பாட்டம் எல்லாம் கேட்காதது போல ராமசாமி அறையை விட்டு வெளியே வரவேயில்லை..

அறையை நோட்டமிட்டவன் அப்படியே பேயறைந்தது போல முழித்தான்…

“இங்க எப்படி ரெண்டு பெட்டிங்க..ஒண்ணு தானே அனுப்பி விட்டேன்…!”

“நானு சொல்லுதேன்…!”

ராமசாமி வெளியே வந்தார்…

***

“வாப்பா..அருமை மவனே…!! நீ ஒரு பெட்டிதான் அனுப்பிச்சே..!! அது குட்டி போட்டிச்சு….! நீ சொன்ன பெறகு நாங்க ஏன் அத தெறக்கப் போறோம்…? போயி நீயே தொற ராசா…?”

“வந்த பிள்ளைய ஏன் ஏதுன்னு வெவரம் கேக்காம இப்படி பேசுவாரா ஒரு மனுசன்..!!”

சொர்ணம் உள்ளுக்குள் குமைந்தாள்..!!

“அப்பா..என்ன மன்னிச்சிடுங்க..! எனக்கு அந்த வேலையில ஒரு வாரம் கூட ஒட்டல..நாலுபக்கமும் வேல தேடித்தான் பாத்தேன்..கையில இருந்த காசும் கரஞ்சு போச்சு…! வேற வழி தெரியலப்பா…!”

தடாரென்று காலில் விழுந்த பிள்ளையை தூக்கி நிறுத்தினார்..

“செல்வா…!! எனக்கு ஒரு விசயத்தில உம்மேல கோவமில்ல! ஏன் சொல்லு…! வேலையை விட்டாலும் வீட்டுக்கு திரும்பி வரலாம்னு நீ நெனக்கிற அளவுக்கு என்ன நம்புற பாரு..! அந்த தெகிரியத்த நானு உனக்கு குடுத்திருக்கேன்னு நெனைக்கும்போது மனசு மொத்தமும் செத்துப் போவல…! ஒரு மூலையில உசிரு ஒட்டிக்கிட்டுத்தான் இருக்கு..!?

உன்னிய நான் சரியா புரிஞ்சுக்கிடலையோன்னு இப்பம் தோணுது..படிப்பு ஏறலன்னு தெரிஞ்சதுமே உங்கிட்ட நானு நெறைய பேசியிருக்கணும்..! என்ன பிரச்சனையின்னு கேட்டிருக்கணும்…! எனக்கு அவமானம்..எனக்கு சங்கடம்னு என்னிடம் பத்தியே நெனச்சிட்டிருந்தேனே தவிர, உனக்கு ஏதோ சிரமமிருக்கும்னு எண்ணிக்கூட பாக்கலியே…!

உன்ன உதவாக்கரன்னு முத்திர குத்தி உன்னால முடியாத காரியத்த செய்யச் சொல்லி உனக்கும் எனக்கும் நடுவுல ஒரு தடுப்பு..ஒரு விரிசல்….! இப்படியே போச்சுதுன்னா அது பெரிய பள்ளமாயிப்போயிருமோன்னு தோணிப்போச்சு…! ரெண்டு நாளாக இதே நெனப்புத்தான்.

செல்வா..!! நீ எங்களுக்கு வேணும்..! நாம நெறைய பேசணும்…!

“ராசாப்பயலே.! ஓடிவா..! நீயே தெறந்து பாரு…! எந்த பெட்டியில் டி.வி. இருக்குதுன்னு கண்டுபிடி!

சொர்ணம்…நானு ஒண்ணும் உம்பிள்ளைக்கு போட்டியா இத வாங்கல… பாவம்.. பெரியவங்க பஞ்சாயத்தில சின்னப்பயல தெரிஞ்சோ தெரியாமலோ , ஏமாத்திபுட்டானேங்கிற கோவத்தில வாங்கிபுட்டேன்…!!”

“ஐய்யா…! டி.வி.. டி.வி..”

ராசா குரல் எட்டு ஊருக்கு எதிரொலித்தது..

காவேரி அப்பாவை அப்படியே கட்டிக் கொண்டாள்..!

“ஏலே..செல்வா..அந்த பெட்டியில என்னதான் இருக்கு…?”

இன்னமும் சொர்ணத்துக்கு ஒன்றும் விளங்கவில்லை..

காவேரிக்கும் ஒரு சந்தேகம்… அப்பாவுக்கு இதெல்லாம் முன்கூட்டியே எப்படி தெரியும்…?

“தெறந்துதான் பாரேன்…!! புதையல் கிதையல் இருந்தாலும் இருக்கும்…!”

ரொம்ப நாளைக்கப்புறம் ராமசாமி வாய்விட்டு சிரித்தார்…!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *