வேண்டாம் விளையாடாதே…

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 13, 2014
பார்வையிட்டோர்: 11,876 
 

கடைவீதியில் கூட்டமேயில்லை . பின்னால் வந்து கொண்டிருந்தவன் செயல் திலகாவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியது . திரும்பிப் பார்த்தாள் . அவன் பத்தடி தள்ளி ஒன்றுமே தெரியாதவன் போல வந்து கொண்டிருந்தான் .

ஐந்தாறு அடிதான் நடந்திருப்பாள் . மீண்டும் சில்மிஷத்தை ஆரம்பித்துவிட்டான் . திலகாவிற்கு கோபம் வந்தது . திரும்பிப் பார்த்து முறைத்தாள் . அவன் ஜவுளிக் கடை பொம்மையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் .

திலகா மீண்டும் நடையைத் தொடர்ந்தாள் . சிறிது தூரம் செல்வதற்குள் மீண்டும் குறும்பை ஆரம்பித்துவிட்டான் . திலகாவின் கோபம் அதிகமானது . கையில் இருந்த கூடை கனத்தது . அதை அப்படியே அவன் தலையில் கவிழ்த்துவிட வேண்டும் போல் எரிச்சல் உண்டாக்கியது .

கண்களில் கோபம் தெறிக்க முறைத்தாள் . அவன் எதுவுமே அறியாத அப்பாவியாக இடது கைமுட்டிகளில் வலது கை விரல்களால் தாளம் போட்டுக் கொண்டிருந்தான் .

கணவரில்லாமல் கடை வீதிக்கு வந்தது தவறு என்று நினைத்துக் கொண்டாள் . அவரோடு வந்திருந்தால் இந்த தொல்லைகள் இராது .

“ வேண்டாம் …! விளையாடாதே ! செருப்பு பிஞ்சிடும் . “ குரலில் கோபத்தோடு எச்சரித்தாள் .

அவள் குரலின் கடுமையில் அவன் பயந்திருக்க வேண்டும் . அதன்பின் சிறிது நேரம் எந்த தொந்தரவும் இல்லை . ஆனால் சற்று நேரத்தில் மீண்டும் ஆரம்பித்துவிட்டான் .

“ சர்க்க் … “

திலகா கூடையை கீழே வைத்து விட்டு திரும்பி சட்டென்று அவனைப் பிடித்தாள் .

“ சொன்னேன்ல . பின்னாடியே வந்து என் செருப்பை மிதிக்காதேன்னு . இப்ப பாரு . பிஞ்சிடுச்சு . “

“ அப்புறம் என்னம்மா , எத்தனை தடவை சொல்லிட்டேன் . கேட்காம இந்த கிழிஞ்ச செருப்பை விடாம எல்லா இடத்துக்கும் அதையே போட்டுக்கிட்டு போயிட்டிருக்கே . இது பிஞ்சாத்தான் வேற வாங்குவேன்னுதான் இப்படிச் செஞ்சேன் . “

சிரித்தபடியே சொல்லிவிட்டு அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த செருப்புக் கடைக்குள் நுழைந்தான் அவளது எட்டு வயது மகன் வினோத் .

– அக் 28 – நவ 03 , 1994 தேதியிட்ட பாக்யா வார இதழில் வெளியான எனது சிறுகதை .

Print Friendly, PDF & Email

2 thoughts on “வேண்டாம் விளையாடாதே…

  1. அருமையான எதிர்பாராத ஷாக் …..
    மக்களின் மனம் எப்படியெல்லாம் நினைக்க வைக்கிறது !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *