Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

பின் புத்தி

 

“நியூஸ் பேப்பர் கொஞ்சம் கொடுக்கறிங்களா பார்த்துட்டு தறேன்” என்று யாராவது கேட்டால் எனக்கு ‘ஆபிசுவரி மாமா நினைவுக்கு வருவதும், தொடர்ந்து என்மீதே எனக்கு சுய பச்சாதாபமும் ஏற்படுவதையும் தவிற்க்கமுடிவதில்லை.

முதன் முதலில் அவர் அவ்வாறு வாங்கிச் சென்றதும் அதன் பிறகு நடந்த சில சுவையான சம்பவங்களும் இன்றும் பசுமையாக நினைவில் இருக்கிறது.

தினசரி செய்தித்தாள்கள் பார்ப்பவர் பல ரகம். அதில் இவர் ஒரு தனி ரகம்.

நான் அந்த பகுதியில் குடியேறிய முதல் நாள்,

வழக்கமாக நான் பேப்பரை படித்துவிட்டு என் மனைவி ஜானகியிடம் தருவது வழக்கம். அவள் குறுக்கெழுத்து, ஸ்போர்ட்ஸ் காலம் என்று பார்த்து திருப்தி அடையும் ரகம்.

அன்றும் நான் படித்துவிட்டு ஜானகி பேப்பரை எடுத்துக்கொள்ள காத்திருந்தேன். அந்த நேரத்தில், அங்கு வந்த ஆபிசுவரிமாமா “தம்பி நியூஸ் பேப்பர் கொஞ்சம் தற முடியுமா” என்றார்..

ஒரு எழுத்தாளனான நான் பொதுவாக இது போன்ற பேப்பர், புத்தகங்களை இரவல் வாங்குவதை ஆதரிப்பவனல்ல. இருப்பினும், என் மனைவி அருகில் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருக்க அவரிடம் பேப்பரை கொடுத்தேன். காரணம் அந்த பகுதியில் அவர் ஒருவர்தான் வட்டிக்கு பணம் தருபவர்! எப்போதாவது அவர் தயவு தேவைப்படுமோ என்ற எண்ணம்!!

“நானே கொஞ்ச நேரத்தில கொடுத்துடறேன் தம்பி” என்று கொண்டு சென்றவர், நிஜமாகவே சிறிது நேரத்தில் திரும்ப கொடுத்தார்.

உடனே ஜானகி “ஆச்சரியமா இருக்குங்க? ” என்றாள் வியந்தபடி

“என்ன ஆச்சரியம்?” என்றேன் புரியாமல்.

“எடுத்துட்டு போய் பத்து நிமிஷம் கூட இருக்காது, பாத்தா அவ்வளவு ஸ்பீடா படிக்கிறவர் மாதிரியும் தெரியலை அதான்” என்றாள் மிகுந்த வியப்புடன்.

“சேச்சே உனக்கு எல்லாத்திலேயும் சந்தேகம், பின் புத்தி, பேப்பர் தான் குடுத்துட்டாருல்ல, எடுத்துட்டு போ” என்றேன் சலிப்புடன். அவர் தொடர்ந்து இரண்டு முன்று நாட்கள் செய்தித்தாளை அதே போல் கொண்டு வந்து கொடுக்க எனக்கே சந்தேகம் தொற்றிக்கொண்டது.

பின்பு, அவர் ஒவ்வொரு முறை பேப்பரை திரும்பத் தரும்போதும், ஜானகி என்னை சைடு வாக்கில் பார்த்து நக்கலாக சிறித்தது மேலும் எரிச்கலூட்டியது. அடுத்த நாள் அவரை பார்க்கும்போது, ஜானகியையும் அருகில் வைத்துக்கொண்டு கேட்டேதீருவது என்று தீர்மானம் செய்துகொண்டேன்.

மறுமுறை அவர் வழக்கம் போல் பேப்பர் வாங்க வந்தபோது அவரிடம் “அங்கிள் இந்த பேப்பரில நீங்க விரும்பி படிக்கிற பகுதி எது?” என்று கேட்டேன் சற்று தயக்கத்துடன். ஜானகியும் அருகில்தான் நின்றுகொண்டிருந்தாள்.

அவர் மெல்லிய சங்கோஜத்துடன் “அது வேர ஒண்ணுமில்லை தம்பி, நம்மகிட்ட கடன் வாங்கினவங்க யாராவது தவறிட்டாங்களான்னு பார்க்கத்தான், ஒரு தடவை இப்படித்தான் ஒருத்தர் வீட்டுக்குபோய் ரொம்ப தர்மசங்கடமா போயிருச்சு,” என்று விளக்கமளித்தார்.

அதன் பிறகு அவர் ஒவ்வொரு முறை பேப்பர் வாங்கிச் செல்லும் சிறிது நேரத்திற்கு நான் ஜானகியை நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்த்து வந்தேன்.

இதற்குப் பிறகு எப்போதாவது எங்களுக்குள் கடன் வாங்குவது பற்றி பேச்சு வரும்போது ஜானகி உங்க ‘ஆபிசுவரி மாமா’கிட்டேயே கேளுங்களேன் என்று நக்கலாக குறிப்பிடுவாள்.

நாங்கள் அங்கே குடியிருந்த வீட்டை மாற்றிக்கொண்டு வேரொரு பகுதிக்கு சென்ற சிறிது நாட்களில் அவர் ஒரு முறை என்னை பார்க்க வந்திருந்தார்.

“என்ன சார் பேப்பர் வேணுமா என்ன?” என்றேன் முகத்தை முடிந்த அளவுக்கு சீரியசாக வைத்துக்கொண்டு.

“அதெல்லாமில்லை தம்பி, இங்க பக்கத்தில ஒருத்தரை பார்க்க வந்தேன் நீங்களும் இங்க இருக்குறதா கேள்விப்பட்டேன், அதான் அப்படியே பார்த்துட்டு போகலாம்னு” என்றார்.

“அப்படியா ரொம்ப சந்தோஷம், அப்புறம் பிசினஸெல்லாம் எப்படி போய்ட்டிருக்கு?” என்றேன் சம்பிரதாயமாக.

“முன்னேமாதிரி இல்லை தம்பி, ரொம்ப ‘டல்லு’ என்றவர் அருகில் மேசையிலிருந்த எனது புத்தகத்தைக் காட்டி “தம்பி இது நீங்க எழுதினதுங்களா? நல்லா கனமா இருக்கே” என்று மிகுந்த கவனத்துடன் எனது புத்தகத்தை பிரித்துப் பார்த்தார்.

“ஆமா சார் என்னோட நாவல்கள், சிறுகதைகள்னு மொத்ததையும் ஒண்ணா தொகுத்து ஒரே புத்தகமா போட்டுட்டேன்.” என்றேன், மிகுந்த சந்தோஷத்துடன். யாராவது இது பற்றி பேசமாட்டார்களா என்று ஏங்கிய காலம்!.

“நல்ல விஷயம் தம்பி, பாராட்டுக்கள், இப்ப இதுமாதிரில்லாம் எழுதறதுக்கு யாரு இருக்கா” என்று அங்கலாய்த்தார்.

எழுதுவதைக்கூட பாராட்ட இந்த உலகத்திலொரு ஜீவன் இருக்கிறது என்பதை நினைக்கும்போது மனதுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

நக்கலாக ஜானகியை பார்த்தபடி “படிச்சு பாக்கறிங்களா? எடுத்துக்கோங்க” என்றேன் மிகுந்த மரியாதையுடன்

“ரொம்ப தேங்க்ஸ் தம்பி” என்று பெருமிதத்துடன் அவர் வாங்கிச்சென்றபோது, ஜானகியின் முகத்தில் மீண்டும் ‘அட!’ என்ற வியப்பு.

இது நடந்து சில நாட்களுக்குப் பிறகு, மீண்டும் ஒரு நாள் நடு ரோட்டில் ஏதேச்சையாக அவரை சந்தித்தேன். மிகுந்த வருத்தத்துடன் காணப்பட்டார். விசாரித்தபோது, பண நெருக்கடியில் இருப்பதாக சொன்னார்.

பேச்சு வாக்கில் “சொல்ல மறந்துட்டேன் தம்பி உங்க புஸ்தகம் மத்த புஸ்தகம் மாதிரி இல்லை ரொம்ப யூஸ் ஃபுல்லான புஸ்தகம்” என்று சிலாகித்தார். அப்போதும் அருகிலிருந்த ஜானகியின் முகத்தில் ‘இவரா!’ என்ற ஆச்சரியம்.

நானும் அவருக்கு ஆறுதலாக ஏதாவது கூறவேண்டுமே என நினைத்து, “கவலைப்படாதீங்க சார், எல்லாமே மாறும், உங்களுக்கு ஏதாவது உதவி வேணும்னா கூட தயங்காம கேளுங்க?” என்றேன்

அவர் மிகுந்த தயக்கத்துடன், “நீங்க தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னா கேக்கறேன்” என்றார் பீடிகையுடன்.

ஜானகி என்ன நினைப்பாளோ என்று நினைத்துக்கொண்டே., “சேச்சே, உங்களைப்போய், பரவாயில்லை தைரியமா கேளுங்க” என்றேன்

“உங்களுக்கு ஒரு சிரமமும் இல்லேன்னா, ஒரு ஐம்பதாயிரம் கைமாத்தா கொடுத்தீங்கன்னா, ஒரு வாரம் பத்து நாள்ல திருப்பி கொடுத்துடறேன்” என்றார் சங்கடத்துடன்.

அருகிலிருந்த ஜானகிக்கு இதில் சிறிது கூட சம்மதமில்லை என்பதை அவள் பார்வையிலேயே உணர்ந்துகொண்டேன். அதை பொருட்படுத்தாமல் “இதுக்குப் போய் ஏன் இவ்வளவு தயங்கறீங்க? பணம் தானே இன்னைக்கு வரும் நாளைக்கு போகும், அதுவா முக்கியம்.. நானே சாயங்காலம், கொண்டு வந்து தர்றேன்” என்றேன்.

“இல்லை தம்பி அது நல்லா இருக்காது, நானே வந்து வாங்கிக்கறேன் அதான் முறை” என்றவர்” டாணென்று சரியாக மாலை ஐந்து மணிக்கு வீட்டு வாசலில் நின்றிருந்தார்.

“வாங்க சார்” என்று அவரை வரவேற்று, இரண்டாயிரம் ரூபாய் தாள்கள் இருபத்தைந்தை எண்ணி அவரிடம் கொடுத்தேன். மிகுந்த மரியாதையுடன் பெற்றுக்கொண்டவர், “என்ன இது வரைக்கும் நான் யார்கிட்டேயும் கடன் வாங்கனதே இல்லை, அதன் சங்கடமா இருக்கு ,ரொம்ப தாங்க்ஸ் தம்பி, உங்களை மறக்கவே மாட்டேன், உங்களுக்கும் ரொம்ப தாங்க்ஸ்மா, தம்பிக்கு ரொம்ப தங்கமான மனசு” என்று நெளிந்தபடியே வீட்டைவிட்டு வெளியேறினார்.

இது நடந்து ஏறக்குறைய ஒரு மாதம் சென்றிருக்கும், அவரிடமிருந்து எந்த பதிலுமில்லை. ஜானகியின் பார்வையின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகறித்தது. அடுத்த நாள் நேரே சென்று பார்த்துவிடுவது என முடிவெடுத்து உறங்கச் சென்றேன்.

அடுத்த நாள் விடியற்காலை ஜானகி “ஏங்க எந்திரிங்க, ஆபிச்சுவரி மாமா போட்டோ பேப்பரில் வந்திருக்கு” என்று என்னை எழுப்பினாள்.

“அட நிஜமாவா எங்க? எந்த பக்கத்தில?” என்றேன் நான் தூக்கம் கலந்த ஆச்சரியத்தில்.

“ஆபிச்சுவரி காலத்தில்” என்றாள் அவள் வழக்கமான நக்கலுடன்.

அப்பொது நான் “யாரு நம்ம வடக்கப்பட்டு ராமசாமியா” என்பாரே கவுண்டமணி அந்த நிலையிலிருந்தேன்!.

“என்ன இருந்தாலும் நீண்ட நாள் பழக்கம். அதிலும் என் எழுத்தை வாசித்தவர், சிலாகித்தவர்!. கண்டிப்பாக துக்கம் விசாரிக்கவாவது போகவேண்டும்” என்று ஜானகியிடம் சொல்லிவிட்டு, சற்றே வருத்தம் தோய்ந்த முகத்துடன் அவர் வீட்டுக்கு சென்றிருந்தேன்.

அங்கே சுவரில் சுவரில் மாட்டப்பட்டிருந்த அவர் போட்டோவைப் பார்க்க பாவமாக இருந்தது. அவர் மகன் குடும்ப வக்கீலுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தான். அவனிடம், சென்று ஆதரவாக நாலு வார்த்தைகள் சொல்லிவிட்டு, சிறிது நேரத்தில் புறப்படலாம் என்று ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டேன்.

அப்போது அந்த வக்கீல் ஏதோவொரு டாகுமென்டை அவர் மகனிடம் காண்பித்து பேசிக்கொண்டிருந்தது ஏதேச்சையாக காதில் விழுந்தது.

“தம்பி இது உங்க அப்பா கையெழுத்துதானான்னு பாருங்க”. என்றார்.

“இல்லைங்க அப்பா கைநாட்டுதான் வைப்பார்” என்றான் அவன்.

எனக்கு தலை லேசாக சுற்றுவதுபோல் இருந்தது.

வெறுப்புடன் அவர் இருந்த அறையைச் சுற்றி நோட்டமிட்டேன். அவர் வழக்கமாக படுக்கும் கட்டிலுக்கு அருகேயிருந்த டேபிள்ஃபேனுக்கும், ஸ்டூலுக்கும் இடையே ‘அண்ட’ கொடுக்கப்படிருந்தது என் புத்தகம்.

நல்ல வேளை ஜானகியை அழைத்து வரவில்லை என நினைத்துக்கொண்டேன். 

தொடர்புடைய சிறுகதைகள்
பத்தாம் வகுப்பிற்கு இன்று கடைசி தேர்வு, விடைத்தாள்களைச் சேகரித்து, சரிபார்த்து அடுக்கி, அலுவலகத்தில்ஒப்படைத்துவிட்டு ரயில் நிலையத்தை அடைந்த போது மணி மூன்று. நாளையிலிருந்து விடுமுறை. ஆசிரியர் தொழிலில்இது கொஞ்சம் ஆறுதலான விஷயம். தனியார் பள்ளிகளில் மாணவர்களின் நூறு சதவிகித தேர்ச்சி என்பது குறைந்தபட்ச ...
மேலும் கதையை படிக்க...
கி.பி. 2030 வியாஸின் இன்பமான பொழுதுகள், தன் ஏழு வயது மகள் சுஹாவிடம் மாலை நேரங்களில் விளையாடுவதுதான். ஒரு சிவில் எஞ்சினியரான வியாஸ் தன் அலுவலக டென்ஷன் முழுவதும் மறந்து அவளுடன் விளையடுவதும், கேள்விகளுக்கு பதில் சொல்வதிலும், கிண்டல் செய்வதும், பார்ப்பவர்களை ...
மேலும் கதையை படிக்க...
கதிர் என்னுடைய நெருங்கிய நண்பன். க்லோஸ் ஃப்ரெண்ட் திக் ஃப்ரெண்ட் எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். கல்லூரி முதலாம் ஆண்டு வரை என்னுடன் படித்தவன். சென்னையில் இருந்த அந்த புகழ்பெற்ற பள்ளியில்தான் நாங்கள் படித்தோம். கதிருக்கு சினிமா ஆர்வம் அதிகம். பை நிறைய ...
மேலும் கதையை படிக்க...
இப்போது இருக்கும் ஐபிஎல் / ட்வென்டி ட்வென்டிக்கெல்லாம் முன்னோடி (மாட்ச் ஃபிக்சிங் உட்பட) எண்பதுகளில் காஞ்சீபுரத்தில் நடந்த கிரிக்கெட் லீக் போட்டிகள் தான் சுருக்கமாக கே சி எல் மே மாதம் பள்ளி, கல்லூரி விடுமுறை நாட்களில் மூன்று முதல் நான்கு வாரங்கள் ...
மேலும் கதையை படிக்க...
“அனு, அனு கிளம்பு சீக்கிறம், ராக்கி தூங்கும்போதே கிளம்பிடணும், அவ முழுச்சிகிட்டா இன்னைக்கி ஸ்விம்மிங் க்லாஸ் போறதே சிரமமாயிடும்.” என்று ஸ்கூல்லிருந்து வந்ததும் வராததுமாக அவரசரப்படுத்தினாள் ரேகா. அவள் கவலையெல்லாம் அடுத்தவள் ராக்கி மூன்று வயதாகியும் வாய் திறந்து பேசாதது தான். மருத்துவரை ...
மேலும் கதையை படிக்க...
மதிப்பீடுகள்
காலக்கோடு
இன்னிசை பாடிவரும்…..
பீமாஸ்கப்
விளையும் பயிர்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)