Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

தோசைக்கல்

 

ஜெயராமன் ரொம்ப சமர்த்து. படிப்பில் புலி. ஸ்ரீரங்கத்தில் பிறந்து வளர்ந்து சாஸ்தா கல்லூரியில் கம்ப்யூட்டர் இஞ்சினியரிங் சிறப்பாக தேர்ச்சி பெற்று, பெங்களூரில் இருக்கும் அந்தப் பிரபல அமெரிக்கன் சாப்ட்வேர் கம்பெனியில் சேர்ந்து முதல் மாத சம்பளம் வாங்கிய வரைதான் அவனால் சமர்த்தாக இருக்க முடிந்தது.

பெங்களூர் வந்ததும்தான் அவன் மிகவும் மாறிப்போனான். தனிமை தந்த சுதந்திரம், அதிகமாக சம்பாதிக்கும் திமிர், அழகிய பெண்களின் அருகாமை என்று எல்லாமே அவனுடன் ஒட்டிக் கொண்டது.

எம்.ஜி.ரோட், பிரிகேட் ரோட் பப்கள், அதில் கிடைக்கும் ட்ராட் பீரின் மெல்லிய கசப்பு அவனை அடித்துப் போட்டது. தினமும் பிக்சர் பிக்சராக இளம் பெண்கள் சூழ ஆற அமர்ந்து ட்ராட் பீர் உறிஞ்சினான். நிறைய சிகரெட் பிடித்தான். கவர்ச்சியாக சிரித்தான். சரளமாக ஆங்கிலம் பேசினான்.

அதுவும் இந்த சாப்ட்வேர் பெண்களின் துணிச்சல் அவனை பிரமிக்க வைத்தது. அவனுடைய டீமில் ஏகப்பட்ட பெண்கள். பெண்களைத் தொடுவதும், உரசுவதும், சிஸ்டமில் கூகுள் செக்ஸ் படங்கள் சேர்ந்து பார்ப்பதும் அந்த கம்பெனியில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட விஷயம்தான் என்பதால் உற்சாகத்தில் திளைத்தான்.

மாதம் ஒருமுறை, பில்டிங் டெரசில், அந்த கம்பெனியின் அமெரிக்க டைரக்டர் காப்பி டாக் (coffee talk) கொடுத்து முடித்தவுடன், பீர் பாஷ் (beer bash) அரங்கேறும். ட்ராட் பீர் குடித்துக்கொண்டே ஆண்களும் பெண்களும் உல்லாசமாக கதைப்பார்கள். அதில் அதிகமாக நான்-வெஜ் ஜோக்ஸ் போட்டி போட்டுக்கொண்டு இடம் பெறும். இருட்டியவுடன் டெரசிலேயே ஸ்மூச்சிங் ஆரம்பித்துவிடும். கொஞ்சிக்கொண்டு, உரசிக் கொள்வார்கள்.

அது தவிர, அடிக்கடி பெங்களூருக்கு வெளியே ஆப்சைட் (off site) போவார்கள். அப்போது இவர்களின் அட்டகாசம் தாங்காது. கம்பெனியிலிருந்து பஸ் கிளம்பும்போதே ஜோடி போட்டுக்கொண்டு அமர்ந்து விடுவார்கள். முதல் அரைநாள் ப்ராஜெக்ட் பற்றியும், பிசினஸ் பற்றியும் சீரியஸாக அலசுவார்கள். அடுத்த அரைநாள் கூத்தடிப்பார்கள். ஒரே கும்மாளம்தான்.

பலர் அடுத்த பாலினத்துடன் நெருங்கிப் பழகினாலும், அது காதலா அல்லது இன்பாச்சுவேஷனா, இல்லை அரிப்பா என ஒன்றும் யாருக்கும் புரியாது. உடம்பு ஒன்றே குறி என்று அலைவார்கள். வாரக் கடைசியில் நந்தி ஹில்ஸ் அல்லது மைசூர் சென்று தங்குவார்கள். திட்டமிட்டபடி இருவரில் யாரேனும் ஒருவர் வராது போனால், அதற்கு சரியான காரணம் சொன்னாலும், அதை நம்பாமல் சாட்சியம் கேட்பார்கள். அப்படித்தான் ஒருத்தி ‘எனக்கு ச்சம்ஸ் வந்துவிட்டது…என்னால் இப்ப வரமுடியாது, அடுத்த வாரக் கடைசியில் வச்சுக்கலாம்’ என்று குறுஞ்செய்தியில் சொன்னபோது அவன் கடுப்பாகி உன்னை ‘எப்படி நம்புவது?’ என பதில் குறுஞ்செய்தி அனுப்ப, அவள் வாட்ஸ் ஆப்பில் ச்சம்சை செல்பி எடுத்து அனுப்பி, ‘இதுதான் சாட்சி’ என்றாள். இந்த மாதிரி அலங்கோலங்கள் நிறைய.

இதையெல்லாம் கம்பெனி மானேஜ்மென்ட் மற்றும் ஹெச்.ஆர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும். ஆனால் எவளாவது ஒருத்தி, ஒருவன் மீது எழுத்து மூலமாக புகார் கொடுத்துவிட்டால், உடனே என்கொயரி, செக்சுவல் ஹராஸ்மென்ட் கமிட்டி அது இது என்று பம்மாத்து காட்டுவார்கள். இருவரில் எவர் மோசமான பர்பார்மென்ஸ் என்று தோன்றுகிறதோ அவர்களை கழட்டிவிட்டு அடுத்த வேலை பார்ப்பார்கள்.

ஆனால் இத்தனைக்கும் நடுவில் நம் ஜெயராமனுக்கு புவனா மீது அதீத காதல் ஏற்பட்டது நிஜம். இருவரும் ஒரே டீம் என்பதால் நகமும் சதையுமாக ஒன்றாக அலைந்து கொண்டிருந்தார்கள். அடிக்கடி மனதாலும், கண்களாலும் உருகினார்கள்.

ஆனால் ஜெயராமன் லெளகீகமான ஐயர் பையன். புவனா யாதவ வகுப்பு. இந்தக் காதலை எப்படி வீட்டில் சொல்வது என புரியாமல் இருவரும் குழம்பினார்கள்.

அப்போதுதான் ஜெயராமன் அதிரடியாக என்ன வந்தாலும் சரி, புவனாவுடன் வாழ்ந்து பார்த்துவிடுவது என்கிற முடிவில், இந்திராநகரில் ஒரு வீடு எடுத்து ‘லிவ்இன் ரிலேஷன்ஷிப்’ வைத்துக் கொண்டார்கள். இரண்டு பெட்ரூமுடன் வீடு அழகாக இருந்தது.

கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

அப்பதான் அந்த சனிக்கிழமை, ஜெயராமனின் அப்பாவின் அம்மா கோமுப் பாட்டி திடீரென்று வாளாடியிலிருந்து அவன் வீட்டிற்கு வந்து விட்டாள். அப்போது காலை ஒன்பது மணி. டைனிங் டேபிளில் அமர்ந்துகொண்டு ஜெயராமனும் புவனாவும் தோசை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஜெயராமன் அதிர்ந்து போய், “என்ன பாட்டி திடீர்னு? அதுவும் பெங்களூருக்கு?” என்றான்.

“இல்லடா நாளைக்கு என்னோட அத்திம்பேருக்கு பத்து…பாவம் எண்பத்து ஐந்து வயசு. திடீர்னு போயிட்டார். அல்சூர்ல வீடு. உன் ஆத்திலிருந்து அல்சூர் கிட்டக்கன்னு உன் அப்பன்தான் சொல்லி அட்ரஸ் கொடுத்தான்.”

என்று வாய் சொன்னாலும், பாட்டியின் கண்கள் புவனாவை மேய்ந்தன.

“யார் இந்தப் பொண்ணு?”

“இவ பேரு புவனா. என்கூட வேலை செய்யறா. இந்த வீட்ல வாடகையை நாங்க பங்கு போட்டுக்கிறோம். ஆளுக்கு ஒரு பெட்ரூம் தனியா இருக்கு.”

பாட்டி நம்பாமல் சந்தேகத்தோடு புவனாவை ஏற இறங்க பார்க்க, “நீ சந்தேகப் படுகிற மாதிரி ஒண்ணும் இல்ல பாட்டி, வீட்டை மட்டும்தான் ஷேர் பண்ணுகிறோம்…..அவ தனி பெட்ரூம், நான் தனி பெட்ரூம்.” என்றான்.

பாட்டி மறுநாள் இரவு வாளாடி சென்று விட்டாள்.

புதன்கிழமை காலையில் புவனா, “ஜெய், உங்க பாட்டி வந்துட்டு போனப்புறம், சமையல் ரூமிலிருந்த நான்ஸ்டிக் தோசைக்கல்லை காணோம். ஒருவேளை உன் பாட்டி எடுத்துப் போயிருப்பாளோ?” என்றாள்.

“அப்படியா, தெரியலையே… பாட்டியின் வாளாடி விட்டுல போன் இல்ல, பாட்டிகிட்ட மொபைலும் கிடையாது. நான் எதுக்கும் லெட்டர் போட்டுக் கேட்கிறேன்.”

உடனே பாட்டிக்கு கடிதம் எழுதினான்.

அன்புள்ள பாட்டிக்கு,

நலம்தானே? என் விட்ல இருந்த நான்ஸ்டிக் தோசைக்கல்லை காணவில்லை. நீங்க எடுத்தீங்கன்னு சொல்லலை, எடுக்கலைன்னும் சொல்லலை. ஆனா என் வீட்டிலிருந்த தோசைக்கல் நீங்க வந்துட்டு போனதுக்கு அப்புறம் காணவில்லை என்பது மட்டும் உண்மை. அது பற்றி ஏதாவது தெரியுமா?

இரண்டு நாட்களில் பாட்டியிடமிருந்து கடிதம் வந்தது.

அன்புள்ள சீமந்த பேரனுக்கு,

உன் கூட வசிக்கிற பொண்ணோடு நீ தப்பா இருக்கிறேன்னு சொல்லலை. அப்படி இல்லைன்னும் என்னால சொல்ல முடியலை. ஆனா ஒண்ணு மட்டும் நிஜம். அவ அவளோட பெட்ல படுத்து தூங்கியிருந்தா பெட்ஷீட் அடியில் நான் வைத்த தோசைக்கல் அவள் முதுகை உறுத்தியிருக்கும்.

சரி சரி, நான் உங்கப்பாகிட்ட சொல்லி சீக்கிரம் உங்க கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றேன். நான் இறப்பதற்குள் என் பிள்ளை வைத்துப் பேரனின் கல்யாணம் பார்க்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு நிறைய.

பின்குறிப்பு: அவள் மரியாதை தெரிந்த, உனக்கு ஏற்ற சமர்த்துப் பெண்தான். அன்புள்ள பாட்டி.

அன்று இரவே அப்பாவிடமிருந்து மொபைல் போன் வந்தது.

“டேய் ஜெயராமா, பாட்டி எல்லாத்தையும் சொன்னா. நீ அவசரப்பட்டு ரிஜிஸ்டர் மாரேஜ் அது இதுன்னு பண்ணிக்காத. அவ எந்த ஜாதி, மதம் என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. ஊரறிய உன் கல்யாணம் தடபுடலா நடக்கணும். இது உன்னோட கல்யாணம் உன்னோட வாழ்க்கை. உன் சந்தோஷம்தான் எனக்கும், அம்மாவுக்கும் ரொம்ப முக்கியம். என்ன புரிஞ்சுதா?” என்றார். 

தொடர்புடைய சிறுகதைகள்
திம்மராஜபுரம். மாலை நான்கு மணி. மழை வரும்போல் வானம் இருட்டிக்கொண்டு வந்தது. வயலில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த சிதம்பரநாதன், தூறல் ஆரம்பிக்கும் முன் வீடு திரும்ப எண்ணி வேகமாக நடந்தார். விறுவிறுவென வேகமாக நடந்து அவர் குடியிருக்கும் நெடிய தெருவில் பிரவேசித்துவிட்டார். தெரு முனையில் இருந்தே சிதம்பரநாதன் ...
மேலும் கதையை படிக்க...
சத்குரு தேஜஸ்வி மஹராஜ் பற்றி நான் நிறைய படித்திருக்கிறேன், கேள்விப் பட்டிருக்கிறேன். அவர் தர்க்க ரீதியாக பலவிஷயங்களைப் பற்றிப் பேசி நமக்கு புரியவைப்பாராம். நம்மிடம் பேசும்போது, ஒன்று நாம் அவரது கருத்துக்களைப் புரிந்துகொண்டு ஒத்துப்போக வேண்டும், அல்லது ...
மேலும் கதையை படிக்க...
இந்தியாவிலேயே விரல் விட்டு எண்ணக்கூடிய சில கணினி விற்பன்னர்களில் டாக்டர் ஹர்ஷவர்த்தனும் ஒருவர். அவரைப் பற்றித் தெரியாதவர்கள் கணினி உலகில் இருக்க முடியாது. உலகின் மற்ற பிரபல கணினி நிறுவனங்கள் அவரை தன் பால் இழுக்க முயன்றாலும், டாக்டர் ஹர்ஷவர்த்தன் மிகப் ...
மேலும் கதையை படிக்க...
பெங்களூரில் இருந்து ஊட்டி போகும் வழியில், மாண்டியாவைத் தாண்டியதும், வலதுபுறம் இருந்த அந்த சிறிய பஸ்ஸ்டாண்டில் தனது காரை நிறுத்தச்சொல்லி இறங்கினார் சதாசிவம். இதே இடத்தில்தான் அந்த அரூபன் அறிமுகமானான். அவனால் தன் மனைவி சரஸ்வதி இறந்துபோனதை எண்ணி அங்கேயே சிறிதுநேரம் ...
மேலும் கதையை படிக்க...
நடிகை மோனாலிசா அந்தப் பிரபல நகைக் கடையின் நங்கநல்லூர் கிளையை மாலை திறந்து வைக்கப் போவதாக, அன்றைய தினசரியில் ஒரு பக்க விளம்பரம் வந்திருந்தது. விளம்பரத்தைப் படித்த குணசேகர் , எப்படியாவது அன்று மோனாலிசாவிடம் ஆட்டோகிராப் வாங்கிவிட வேண்டுமென்று முடிவெடுத்தான். குணசேகரிடம் ஒரு ...
மேலும் கதையை படிக்க...
தூறல்கள்
தேஜஸ்வி
மேகக் கணிமை
ஆவியும் சதாசிவமும்
ஆட்டோகிராப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)