சொந்தக்குரல்

 

கதை ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்

அம்மா தனக்குத்தானே பேசிக் கொண்டிருக்கிறாள்

என்னுடன் பேசுவதாக நினைத்துக் கொண்டு தனியே பேசிக் கொண்டிருப்பது கேட்டது.

இல்லாத எதைஎதையோ பற்றிக் கொண்டு தான் முதுமையில் வாழவேண்டியிருக்கும் போலிருக்கிறது, இருட்டில் தடுமாறி விழுந்து அடிபட்டுவிட்ட அம்மாவை மூன்று நாட்களாக மருத்துவமனையில் அனுமதித்திருந்தோம்.. இரவில் அம்மாவோடு நான் துணைக்கு இருந்தேன். அம்மாவிற்கு வயது எழுபத்திமூன்றைக் கடந்துவிட்டிருக்கிறது.

சமீபமாக அம்மா மின்சார விளக்குகளைப் போட்டுக் கொள்ளாமல் இருட்டிலே நடக்கப் பழகியிருந்தாள். எவ்வளவோ முறை அப்படிச் செய்யாதே என்று நான் திட்டிய போதும். இருட்டு பழகிப்போச்சுடா சோமா. இருட்டை என்ன இன்னைக்கு நேத்தா பாக்குகிறேன். இருட்டு பழக ஆரம்பிச்சி எழுபது வருசம் போயிருச்சி. இன்னும் என்ன பயம் என்பாள்

இல்லைம்மா. பயத்திற்காக சொல்லவில்லை. நீ கிழே விழுந்து வைத்துவிட்டால் என்ன செய்வது என்று கேட்பேன்.

விழுந்தா, போய்ச் சேர வேண்டியது தான். என் மனசில இருக்கிற ப்ரகாசம் எல்லாம் அணைச்சி போய் பல வருசமாகிருச்சிடா. இப்போ நான் வெறும் உடம்பு தான் என்றபடியே இருட்டிற்குள் நடந்து போய்க் கொண்டிருப்பாள்.

அப்படி தான் விழுந்து அடிபட்டுக் கொண்டாள்

 கடந்த சில வருசங்களாகவே அம்மா இப்படிதானிருக்கிறாள். சில நேரங்களில்  வீட்டில் உள்ளவர்கள் பெயர்களே கூட மறந்து போய்விடுகிறது. டேய் இவனே. அல்லது இங்கே வாயேன் என்று தான் கூப்பிடுகிறாள்.  முதுமை அடையும் போது உடலின் எடை குறைந்து மெலிந்து போய்விட வேண்டும் இல்லாவிட்டால் யாரால் தூக்கி கொண்டுபோய் டாய்லெட்டில் உட்கார வைக்க முடியும் என்று அவளாகவே சொல்லிக் கொள்கிறாள். அதற்காக சாப்பாட்டை க் குறைத்துக் கொள்வதுடன் தன்னை வருத்திக் கொள்ளவும் ஆரம்பித்திருந்தாள்

இளவயதில் அம்மா நல்ல பருமனாக இருந்தாள். அதற்கு அவள் சொல்லும் காரணம் ,அப்பா,

அவர் எப்படிக் காரணம் என்று கேட்டால் நினைவுகளைக் கொட்டத் துவங்கிவிடுவாள்.

அவருக்கு வீட்ல சமைச்ச எதுவும் மிச்சம் ஆகிறக்கூடாது. வேற என்ன செய்றதுனு சமைச்ச  மிச்சத்தை எல்லாம் நானே கொட்டிகிட்டேன். அப்போ உடம்பு பெருத்துப்போகாமல் என்ன செய்யும். அத்தோட மாசத்துக்கு ஒருநாள் கோவிலுக்கும் தெரிஞ்சவங்க வீட்டுக்கும் போறதை தவிர வீட்டை விட்டு வெளியே போனதே கிடையாது. ஒரு தேங்காய்ச் சில்லு வாங்கிட்டு வர்றேன்னு சொன்னாக் கூட உங்கப்பா தான் போயிட்டு வருவார். கல்யாணமாகி எனக்கும் ஏழு பிள்ளைகள் பிறந்து அதுல ரெண்டு செத்தும் போச்சி. அத்தனை வருசத்துக்கு பிறகும் உங்கப்பாவுக்கு என்னைத் தனியா அனுப்புறதுன்னா பயம்.

கோடையில சிவசு மாமா வீட்டுக்குப் போயிட்டு வர்றதுக்கு ரயில் ஏத்திவிட வரும் போது ஸ்டேஷன்ல வச்சி ஒண்ணுக்கு பத்து தரம் அட்வைஸ் பண்ணுவார்.

அது பத்தாதுனு ரயில்க்குள்ளேயே ஏறி இவளைப் பத்திரமாக கொண்டு போய் விட்ருங்கன்னு பக்கத்து மனுசங்க கிட்டே வேற சொல்லிவிடுவார்.

ரொம்ப அவமானமா இருக்கும்.

அதே நேரம் நம்ம மேல இருக்கிற அக்கறையில் தான் இப்படி எல்லாம் செய்றாருனு சமாதானம் பண்ணிகிடுவேன். அப்போ உனக்கு வயது நாலோ அஞ்சோ இருக்கும். ஞாபகமிருக்குமோ என்னமோ. 

அக்கறை காட்டுறதுக்காக நாம செய்ற காரியங்கள் அடுத்தவரை எவ்வளவு இம்சை பண்றதுனு  நாம புரிஞ்சிகிடுறதேயில்லை.  அதுக்கு உங்க அப்பா ஒரு ஆள் போதும். 

செத்துப் போன மனிதரைப் பற்றி இப்போ பேசி என்ன ஆகப்போறது.

ஆனாலும் மனுசன் செத்து போயிட்டாலும் அவன் படுத்தின பாடு. பண்ணின அக்ரமம் எல்லாம் கூடவே செத்து போயிடுறதில்ல. அது யார் மனசிலயாவது அழியாம இருந்துகிட்டே தான் இருக்கு.

இப்போ கூட கனவுல உங்கப்பா முகம் வந்துச்சின்னா திடுக்கிட்டு முழிச்சிகிடுறேன். 

உங்கப்பா வாழ்நாள் முழுவதும் யாரையாவது திட்டிகிட்டே இருந்தார். 

அவருக்குப் பிள்ளைகள் எல்லாமே ரெண்டாம் பட்சம் தான்.

அப்படியொரு மனசு.

ஒண்ணுக்குப் பத்துத் தடவை கேட்டா தான் எதுவும் கிடைக்கும்.

சோமா, உங்களை நினைச்சி நான் நிறைய நாட்கள் அழுதிருக்கேன்டா.

ஏன்டா சோமா, நீ, உன் தம்பி,  எல்லாம் எங்களுக்குப் பிள்ளையா வந்து பிறக்கணும்.

எப்பவாது யோசிச்சி பாத்திருக்கியா.

என் பிள்ளைகளை பற்றி நான் நிறைய யோசிச்சி பாத்திருக்கேன்.

இதுகள் எல்லாம் ஏன் என் வயிற்றுல வந்து ஜனிச்சிருக்கு. நான் என்ன கொடுப்பினை பண்ணினே அதுக்கு. சில நேரம் பாத்தா நீங்க எல்லாம் யாரோ எவரோங்கிற மாதிரியும் இருக்கு. குறத்தி பின்னாடி பிள்ளைகள் வேடிக்கை பாக்க கூடவே வருவாங்களே அப்படி தான் உங்களையும் தோணுது, நான் தான் அந்தக் குறத்தி.

சோமா, எனக்கு நீங்கள் எல்லாம் சின்ன வயசா இருந்த போது  ஒரு பயம் இருந்துகிட்டே இருந்துச்சி. அது என்னன்னா, யாராவது தொலைஞ்சி போயிடுவீங்களோனு.

எதுக்கு அப்படிப் பயந்தேனு தெரியலை.

ஆனா உள்ளுக்குள்ளே அந்தப் பயம் உலை கொதிக்கிற மாதிரி கொதிச்சிகிட்டே இருந்துச்சி.

தெருவில் பிள்ளைகள் விளையாடிக்கிட்டு இருக்கிறப்போ கூட அடிக்கடி வந்து இருக்காங்களானு எட்டிப் பாத்துகிடுவேன்.

ஸ்கூல் விட்டு லேட்டா வந்தா மனசு தாங்காது.  திடீர்னு மதிய நேரம் யாராவது வந்து கதவைத் தட்டினா அய்ய்ய்யோ பிள்ளை காணாமப் போயிருச்சினு தான் பயப்படுவேன். பதறி எழுந்து வந்து கதவைத் திறந்து பார்ப்பேன்.

உங்கப்பாவுக்கு அந்தப் பயமே கிடையாது.

அது எப்படிறா, பொண்டாட்டிக்கு இருக்கிற பயத்தில ஒண்ணு கூட புருஷனுக்கு இருக்கிறதில்லை.

உன் தங்கச்சி லட்சுமி இருக்காளே. அவ என்னை கிறுக்கா ஆக்கி வச்சா. ஒரு நாள், ஒரு பொழுது வீட்ல அடங்கிக் கிடக்க மாட்டா. இத்தனை ஆம்பளைப் பசங்க வீட்ல ஒடுங்கி இருந்தப்போ அவளுக்கு கால் ஒரு இடத்தில நிக்காது.

ஒட்டம். ஒட்டம். அடுத்த வீடு. அடுத்த வீதி. சத்திரம் சாவடி லைப்ரரினு ஒடிக்கிட்டே இருப்பா.  எங்கேயோ தொலைஞ்சி போகப்போறாளோ.னு பயமா இருக்கும்.  ஆனா அப்படி எதுவும் நடக்கலை.

ஒழுங்கா படிச்சி கல்யாணம் ஆகி புருஷனோட ஜாம்ஷெட்பூருக்குப் போயி வாழ்ந்து நாற்பத்தியெட்டு வயசில எனக்கு முன்னாடியே செத்தும் போயிட்டா.

அவசரம். எதுலபாரு அவசரம். ஆனா அவளும் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பா. அம்மா கிட்டே அதை எல்லாம் சொன்னதில்லை.

பிள்ளைகள் நிறைய விசயத்தை பெத்தவங்ககிட்டே சொல்றதேயில்லை. பாவம் அம்மா இதை நினைச்சி வருத்தப்படுவானு நினைச்சிருப்பா.

ஆனா சொல்லாம இருக்கிறது தான்டா ரொம்ப வலிக்குது. ஒரு நாள் அவள் என் கனவுல வந்து எதுவும் சொல்லாம அழுதா. அழுகைன்னா அவ்வளவு அழுகை. எனக்கு ஆறுதல் சொல்லக்கூட தோணலை. அழுதுமுடிச்சி கையைத் துடைச்சிகிட்டு அம்மா உனக்கு புரிஞ்சிருச்சானு கேட்குறா.

உடம்பு சிலிர்த்து போச்சி. கை கால் நடுக்கம் வந்து தூக்கத்தில இருந்து எழுந்து உட்கார்ந்துகிட்டேன். மனது துவண்டு போச்சுடா.  அவளைக் கனவுல ஏன் பார்த்தேன்.

என்னாலே ரெண்டு நாளுக்கு ஒரு வாய் சோறு சாப்பிட முடியலை. செத்துப் போயிட்டாளே இனிமே அவளுக்கு நான் என்ன உதவி பண்ண முடியும். ஆனாலும் செத்து போனபின்னாடியும் நினைப்போட வலி ஆறாதது தானா.  அதை நினைச்சி தூக்கம் வராம பலநாள் அழுதிருக்கேன்,

சோமா, உனக்கும் அழுகணும்னு ஆசையா இருந்தா இப்பவே அழுதுரு.

என்னாலே  உன்னைத் தேற்ற முடியாது. ஆனா உன் கஷ்டத்தை என்னால புரிஞ்சிகிட முடியும். ஏன்னா நீ என் பிள்ளை. பெத்தவங்களுக்குப் பிள்ளைங்க கஷ்டம் அவங்க சொல்லி தான் தெரியுறதுன்னா அதை விட கேவலம், அவமானம் வேற எதுவுமில்லை.

நீ உன் தங்கச்சி, உங்க தம்பி எல்லாம் என் உடம்புல கொஞ்சம் பிஞ்சி எடுத்துட்டு பிறந்தவங்க தானே. எனக்குக் கை கால் வலிக்குன்னா யாராவது வந்தா சொல்றாங்க. நானா தெரிஞ்சிகிடுறது இல்லை.. அப்படி தான் உங்க கஷ்டம் வலியும்.

நானாத் தெரிஞ்சிகிடுறேன். எனக்கு உங்க யாரு மேலயும் கோபம் இல்லைடா. ஆனா நிறைய வருத்தம் இருக்கு. ஆதங்கம் இருக்கு. அது என் சுபாவம். எனக்கு நடந்ததை நான் யார்கிட்டேயும் சொல்லாம புத்து மாதிரி எனக்குள்ளேயே வளர்த்துகிட்டேன். புத்து வளர்ந்து என்னையை மூடிகிடுச்சி. அதுக்கு வேற யாரும் பொறுப்பில்லை.

சோமா. எனக்கு ஒரேயொரு ஆசைடா. நான் ஒரு கதை எழுதணும். சொன்னா  உனக்கு ஆச்சரியமா இருக்கும். நான் ஒரு கதை எழுதி அது கலைமகள்ல 1952வது வருசம் வெளியாகி இருக்குடா. கதைக்கு தலைப்பு பிராப்தம். அதுக்குப் படம் போட்டது யார் தெரியுமா. ஒவியர் சங்கர். என்ன அருமையா வரைஞ்சிருப்பார் தெரியுமா. எதுக்கு அந்தக் கதையை எழுதுனேன்னு தெரியலை. ஆனா அப்போ தான் கல்யாணம் ஆகி உங்க அண்ணன் பிறந்து இருந்தான். உங்க அப்பா வத்தலகுண்டில தாசில்தார் ஆபீஸ்ல வேலையா இருந்தார்.

நாங்க குடியிருந்த வீட்டுக்கு பக்கத்தில் ஒரு லைப்ரரி. பகல்ல உங்க அப்பாவுக்கு தெரியாம அங்கே போயி காண்டேகர் எழுதுன புத்தகங்களை எடுத்துட்டு வந்து படிக்க ஆரம்பிச்சேன். என்னைப் பத்தியே எழுதியிருக்கிற மாதிரி இருந்துச்சி. அப்போ தான் மனசில ஒரு கதை தோணுச்சி. அதை காண்டேகர் கதை மாதிரியே பார்த்துப் பார்த்து எழுதினேன். கதையை எழுதி முடிச்சதுக்கு அப்புறம் என்ன பண்றதுன்னு தெரியலை.

அந்த லைப்ரரியன் கிட்டே கேட்டேன். அவர்தான் கலைமகளுக்கு அனுப்பி வைக்கச் சொல்லி முகவரி கொடுத்தார். அனுப்பி வச்சிட்டு மறந்துட்டேன். நாலு மாதம் கழிச்சி அது வெளியாகி இருந்துச்சி.  அச்சில என் கதையைப் பார்த்த சந்தோஷம் தாங்க முடியலை. உங்க அப்பா மதியச்சாப்பாட்டுக்கு வந்தப்போ அவர் கிட்டே பத்திரிக்கையை நீட்டினேன். நீ எழுதுனதானு கேட்டார். தலையாட்டினேன். சாப்பிட்டு முடிச்சிட்டு ஊஞ்சல் உட்கார்ந்து படிச்சார். பரிட்சை பேப்பர் திருத்திற வாத்தியார் முன்னாடி நிக்கிற பொண்ணு மாதிரி கையைக் கட்டிகிட்டு நின்னுகிட்டு இருந்தேன்.

உங்க அப்பா படிச்சி முடிச்சிட்டு ஒரு பெருமூச்சு விட்டார். பிறகு எழுந்து சமையற்கட்டுக்குள்ளே போனார் ஒரு தீக்குச்சியை எடுத்து அந்த கதையை கிழிச்சி அதுக்கு தீவச்சார். வேற ஒண்ணுமே பேசலை. அப்படியே போய் மாடில அவர் ரூம்ல போய் தூங்கப் போயிட்டார். எரிந்து கிடந்த காகிதத்தைப் பாத்துகிட்டே இருந்தேன். அழுகை முட்டிகிட்டு வருது. அவமானமா இருந்துச்சி, சாயங்காலம் அவர் வெளியே கிளம்பும் போது காபி கொண்டுவந்து வச்சிட்டு கதை பிடிக்கலையானு கேட்டேன்.

அவர் யாரைக் கேட்டுடி நீ கதை எழுதுனேனு கேட்டார்.

மனசுல தோணுச்சி எழுதுனேன்னு சொன்னேன்.

உனக்கு ஏதுடி பேனா. காகிதம், யாரு கொடுத்ததுனு கத்தினார்  

வீட்ல இருக்கிறதே உங்க பழைய பேனா. வெள்ளைக் காகிதம் நயினார் கடைல போயி வாங்கினேனு சொன்னேன்.

பகல்ல தனியா கடைக்கு வேற போயிட்டு வர ஆரம்பிச்சிருக்கியா, வேற என்ன திருட்டுதனம் பண்ணினே சொல்லு என்றபடியே உனக்கு இந்த கலைமகள்க்கு அனுப்பணும்னு ஐடியா  யார் சொன்னது என்று கேட்டார். நான் ஒளிக்காமல் எல்லாவற்றையும் அவரிடம் சொல்லிவிட்டேன்.

உங்கப்பா பல்லைக்கடித்துக் கொண்டு இப்பவே உங்க அப்பாவை வரச்சொல்லி தந்தி குடுக்குறேன்னு சொல்லி வெளியே கிளம்பி போயிட்டார். சொன்னது போலவே எங்க அப்பாவை தந்தி குடுத்து வரச் சொன்னார்.  எங்க அப்பா கோவில் கணக்குப்பிள்ளை, இயலாத மனுசன், அவரு மாப்பிள்ளை கோபமா இருக்காருனு தெரிஞ்சதும் என்ன செஞ்சார் தெரியுமா.

சாஷ்டாங்கமா உங்க அப்பா கால்ல விழுந்து கெட்டியாப் பிடிச்சிகிட்டு என் பொண்ணு செஞ்ச தப்பை மன்னிருச்சி ஏத்துக்கோங்கன்னு அழுதார்.

உங்க அப்பாவுக்கு அது போதலை. என்னாலே உங்க மக செஞ்ச தப்பை மன்னிக்க முடியாது. அவளை உங்க வீட்டுக்கு கூட்டுட்டு போயிருங்கன்னு சொல்லி என் புடவை பெட்டி எல்லாம் தூக்கி வெளியே வீசி எறிஞ்சார்.

அய்யோ அப்படி சொல்லாதீங்கனு எங்க அப்பா கோபத்தில் என்னை நாலு அறை அறைஞ்சி மாப்ளே கிட்டே மன்னிப்பு கேளுடி. இனிமே கதை எழுதுனே உன்கையை ஒடிச்சி மொண்டி ஆக்கிடுவேன்னு சொன்னாரு.

நானும் உங்க அப்பா கிட்டே மன்னிப்பு கேட்டு சத்தியம் பண்ணிக்குடுத்தேன, உங்க அப்பா என்னை ஏத்துகிட்டார். ஆனா எப்பவாவது கோபம் வந்தா நீ திமிர் பிடிச்சிப்போயி கதை எழுதுறவ ஆச்சே. இதையும் எழுதுடி என்று சொல்லிக்காட்டுவார். 

அதுல இருந்து வாரப் பத்திரிக்கை படிக்கிறதை எல்லாம் விட்டுட்டேன்.

ஆனா உங்க அப்பாவுக்கு தெரியாம மனசுக்குள்ளயே ஒரு கதையை எழுதிகிட்டு வர ஆரம்பிச்சேன். அந்த கதைக்கு தலைப்பு எல்லாம் கூட வச்சிருக்கேன். தலைப்பு என்ன தெரியுமா. பரமபதம்.  அதுல வர்ற பொண்ணு பேரு சரஸ்வதி. அது என்னோட கூட படிச்ச  ஒரு பொண்ணோட பேரு. அவளை ஸ்கூல்ல படிச்சதுக்கு அப்புறம் திரும்ப பார்க்கவேயில்லை.  ஆனா அவ முகம் மறக்கவே முடியலை. அதனாலே அந்தப் பெயரை வச்சிகிட்டேன்.

சும்மா இருக்கிற நேரம் எல்லாம் அந்தக் கதையை மனசுக்குள்ளே கொஞ்சம் கொஞ்சமா எழுதிகிட்டே இருப்பேன். எங்கே மனசில இருக்கிற கதையை உங்கப்பா கண்டுபிடிச்சிருவாரோனு கூட பயமா இருக்கும். ஆனா அவர் கடைசி வரைக்கும் கண்டுபிடிக்கவேயில்லை.

உங்க அப்பா எனக்கு நிறைய நகை வாங்கி குடுத்து இருக்கார். என் பேர்ல ஒரு வீடு வாங்கி குடுத்தார். வருசத்துக்கு ஒரு பட்டுபுடவை.. இஷ்டப்பட்ட கோவில்குளம் எல்லாம் கூட்டிட்டு போய் வந்திருக்கார். ஆனா அவருக்கு நான் ஒரு துணையாள். அவர் அதிகாரத்துக்கு கட்டுபடுற நல்ல வேலையாள். அவ்வளவு தான்.

நீ சென்னைக்கு போயிட்டே உன் தம்பிகள் அவனவன் பாட்டை பாத்து ஆளுக்கு ஒரு திக்கு போயாச்சி, வீட்ல நானும் உங்க அப்பாவும் ரெண்டே ஆளு, பிள்ளைகள் இல்லாம வீட்ல தனியா இருக்கிறது கொடுமைடா, கிறுக்கச்சி மாதிரி நீங்க விளையாண்ட் சுவரை தொட்டு பாக்குறதும் படுத்த படுக்கையை தடவி பாக்குறதுமா இருப்பேன்,

ஏன்டி வீட்லயே இருக்கே,, வெளியே  எங்காவது கோவில் குளம்னு போயிட்டு வர்றதுன்னா போயிட்டு வானு உங்க அப்பா சொல்லிகிட்டே இருந்தார். வயசானதுக்கு அப்புறம் அவரு தப்பை உணர்ந்துகிட்டாருனு நினைக்கிறேன். 

எனக்குத் தான் வெளியே போகப் பிடிக்கலை.

செக்குமாட்டை அவுத்துவிட்டா அது எங்கே போகும். உங்க அப்பா இறந்து போனபின்னாலும்  என் கூடவே அவர் இருக்கிற மாதிரியே தான் இருக்கு.  என்  ரெண்டாவது கதையை எழுதி வெளியிடுறதுக்கு துணிச்சலே வரலை.

இனிமே நான் கதை எழுதி என்ன செய்யப்போறேன். ஆனாலும் மனசு கேட்க மாட்டேங்குது. உங்கப்பாவுக்கு நான் எழுத மாட்டேனு சத்தியம் பண்ணி குடுத்திருக்கேன். அதை அவர் இல்லேங்கிறதுக்காக என்னாலே மீற முடியாது. அதனாலே சோமா உன்கிட்டே அந்தக் கதையை சொல்றேன்.

நீ எழுதி கலைமகளுக்கே அனுப்பி வச்சிரு. ஆனா உன் பேரு போட்டுக்கோ. ஏன்னா ஆம்பளைப்பசங்க கதை எழுதினா உங்கப்பா ஒண்ணும் சொல்ல மாட்டார்.  அந்தக் கதை  என் மனசில இருந்து ரொம்ப ரணப்படுத்துடா. ஒரு வேளை அதை சொல்லாமலே நான் செத்து போயிட்டா ஒரு கதை அநியாயமா என்னோடவே புதைஞ்சிபோயிரும்டா. அந்தப் பாவத்தை என்னாலே தாங்க முடியாது.

சோமா,  அந்தக் கதையை உன்கிட்டே சொல்லட்டும்மா. கவனமா கேட்டுகிடுறயா. நான் சொல்றதுல எதையும் மாத்திராதே.

பேருக்கு தான் அது கதை. ஆனா நடந்தது எல்லாம் நிஜம்.

கதைன்னாலே அப்படித் தானே.  கிட்டே வா. உங்கப்பா பக்கத்தில் இருந்து கேட்டுகிட்டு இருக்கப்போறார். என்றபடியே அம்மா தனக்கு தானே முணுமுணுத்துக் கொண்டிருந்தார்

 மருத்துவமனையில் ஒடும் மின்விசிறியின் சப்தம் மட்டும் சீரற்று கேட்டுக் கொண்டிருந்தது, அம்மா மௌனமாகிவிட்டிருந்தார்

அம்மாவினை எழுப்பி என்னம்மா கதை கிதைனு ஏதோ சொல்லிகிட்டு இருந்தியே என்னது அது என்று கேட்டேன்

கலக்கத்துடன கண்விழித்தபடியே தெரியலைடா மறந்துபோச்சி. ஞாபகம் வந்தா சொல்றேன் என்றாள்,

பிறகு அந்தக் கதையை அம்மா நினைவு கொள்ளவேயில்லை தான் இறக்கும்வரை   

•••
பெமினா ஆங்கில இதழின் முதல் இதழில் வெளியான சிறுகதை.

 

தொடர்புடைய சிறுகதைகள்
கதை ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன். ஆனங்குளத்தில் உள்ள ராமவர்மா வைத்தியசாலைக்கு சிகிட்சைக்காக கொண்டு வரப்பட்ட போது பி. விஜயலட்சுமி முப்பத்தியாறு கிலோ எடையுள்ளவளாக இருந்தாள். அவளுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் முடிந்திருந்தன. சிகிட்சை அளிக்கப்பட்ட காலம் நாற்பது வாரம். அந்த நாட்களில் அவளோடு ...
மேலும் கதையை படிக்க...
ஒவ்வொரு முறை அதைக் கழட்டி வாங்கும்போதும் அவனுக்குத் துக்கமாகவே இருந்தது. பெரும்பாலும் அவன் கேட்பது கூட இவ்லை. அவளே வளையல்களைக் கழட்டிக் கொடுத்து விடுவாள். முன்பாவது சமையல் அறையில் போய் கழட்டி எடுத்து வருவாள். இப்போது அதுவுமில்லை. முகத்துக்கு எதிராகவே கைகளை ...
மேலும் கதையை படிக்க...
பேருந்தின் படிக்கட்டில் நின்றிருந்த அந்த பையனைப் பார்க்க விடுமுறைக்கு வந்திருந்த பள்ளிமாணவனைப் போலிருந்தான், ஒடிசலான தோற்றம், வெளிறிய ஜீன்சும், ஆரஞ்சுவண்ண டீசர்டும் அணிந்திருந்தான், அவனது கழுத்தில் கேமிரா தொங்கிக் கொண்டிருந்தது, முதுகில் கேமிராவின் உபகரணங்கள் அடங்கிய பையை தொங்கவிட்டிருந்தான், அன்று பேருந்தில் நிறைய ...
மேலும் கதையை படிக்க...
காலையிலேயே மழை துவங்கி இருந்தது. கான்ஸ்டபிள் நிர்மலாதேவி, கைதியைக் கூட்டிக்கொண்டு கோர்ட்டுக்குப் போவதற்காக ஆட்டோவில் போய்க்கொண்டு இருந்தாள். கைதியைக் கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லும் நாட்களில் நிர்மலா பதற்றமாகிவிடுவாள். பெரும்பாலும் சாப்பிடுவதுகூடக் கிடையாது. கைதி தப்பி ஓடிவிட்டால், தனக்கு தண்டனை கிடைப்பதோடு, பெருத்த ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன் என்னை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். ஆனால் என் பெயரை மறந்து போயிருப்பீர்கள். அல்லது கேட்டிருக்கவே மாட்டீர்கள். காரணம் நான் பெயரோடு பெரும்பாலும் அறிமுகமாகிக் கொள்வதேயில்லை. என் அடையாளமாக இருப்பது கரப்பான்பூச்சிமருந்து விற்பவன். அதுவும் ஜெர்மனியின் புகழ்பெற்ற பூச்சிக் கொல்லி நிறுவனமான ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன் தனது அலுவலகத்திலிருந்து ருக்மணி வெளியே வந்தாள். மணி ஆறு இருபது ஆகியிருந்தது. சாலையில் செல்லும் வாகனங்களின் மீது வெயில் பட்டு தெறித்துக் கொண்டிருந்தது. கோடைகாலம் என்பதால் மாலையிலும் வெயில் அடங்கவில்லை.  மின்சார ரயிலைப்பிடிப்பதற்காக செல்லும் வழியில் கடைக்கு போய் ...
மேலும் கதையை படிக்க...
பிறகு அவனுக்கு இருபத்தி எட்டு வயதானது. அப்போது அவன் தன்னையே கௌதம புத்தராகவும் தனது எட்டாவது வயதில் வேம்பு படர்ந்த இம்பீரியல் தியேட்டரில் தான் பார்த்த கடற் கன்னி படத்தில் வரும் மீன் உடல் கொண்ட பெண்ணைத் தேடு பவனாகவும் துண்டிக்கப்படாத ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன் சுப்பையாவிற்கு திருமணமாகிய நாட்களில் தான் இந்த பழக்கம் உருவானது. அப்போது சாலைத் தெருவில் குடியிருந்தார். ரெட்டை யானை முகப்பு போட்ட வீடு. வீட்டில் அவர்களையும் சேர்த்து இருபத்தியொரு பேர் இருந்தார்கள். இரண்டு அண்ணன், அண்ணி, ஆச்சி, சித்தி ...
மேலும் கதையை படிக்க...
ஒவ்வொரு இரவும் அந்த மனிதன் வீடு திரும்ப நடக்கும் போது அவனது முன்னால் சின்னஞ்சிறிய மெழுகுவர்த்தி ஒன்று தனியே எரிந்து கொண்டு போனது. உண்மையில் நான் சரியாகச் சொல்கிறேனா எனச் சந்தேகமாக உள்ளது, அந்த மனிதன் மெழுகுவர்த்தியை கையில் பிடித்திருக்கவில்லை, உடன் யாரும் வரவுமில்லை, ...
மேலும் கதையை படிக்க...
கொஞ்சம் அதிகம் இனிப்பு
அருள்செல்வத்தின் போன் நம்பரை ஸ்டீபன் அனுப்பியிருந்தான்.கன்னையா அதைத் தனது செல்போனில் பதிவுபண்ணி வைத்துக்கொண்டான். காலையில் மீன் மார்க்கெட் அருகில் ஸ்டீபனைப் பார்த்தபோது, அருள்செல்வத்தைப் பற்றி அவன்தான் சொன்னான்.பூந்தண்டலத்தில் மூன்றரை வருடங்களாக விற்க முடியாமல் கிடந்த நிலம். எப்படியாவது ஒரு பார்ட்டியைப் பிடித்து ...
மேலும் கதையை படிக்க...
பி.விஜயலெட்சுமியின் சிகிட்சை குறிப்புகள்
இரண்டு வளையல்கள்
எதிர் கோணம்
இரண்டு குமிழ்கள்
தரமணியில் கரப்பான்பூச்சிகள்
அப்பா புகைக்கிறார்
புத்தரின் கார்ட்டூன் மொழி
இல்மொழி
என்ன சொல்கிறாய் சுடரே
கொஞ்சம் அதிகம் இனிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)