சிருங்கார வீணை!

0
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 9,161 
 

அதிகாலையிலேயே விழிப்புத் தட்டிவிட்டது. அக்கா சென்ற ரயில் இந்நேரம் தாம்பரத்தைத் தாண்டியிருக்கும். வீடெங்கும் படர்ந்திருந்த வெறுமை மனத்தையும் ஆக்கிரமித்திருந்தது. எனக்கோ எங்கள் வீட்டுக்கோ வெறுமையைச் சூடிக்கொள்ளுதல் ஒன்றும் புதிதில்லை. ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் அக்கா வந்து சென்றதற்குப் பிந்தைய சில தினங்களுக்கு இந்த வெறுமை நீடித்திருக்கும். அக்கா ஊருக்குக் கிளம்பிப் போன பிறகு நிரம்பி இருக்கின்ற இந்த வெறுமையைப் பற்றிக் கூட ஒருமுறை அவளிடம் சொன்னேன்.

சிருங்கார வீணை!

“ஒன்றும் அற்று, வெறுமையாக இருத்தல் எவ்வளவு பெரிய விஷயம். எவர் ஒருவரிடத்தில் தன்னைப் பற்றி ஒன்றுமே இல்லை என்கிற நினைப்பு இருக்கிறதோ அவரிடமே அன்பு ஆறு போல ஓடுகிறது. ஒன்றும் அற்ற நிலையில் வெறுமையில் இருப்பவர்கள் அன்புமயமாகவே இருக்கிறார்கள். வெறுமையாய் இருத்தல் அன்பு நிலையின் ஊற்று. முடிவில்லாத பிரபஞ்சத் தன்மையின் ஊற்று…’

இப்படிச் சலனமற்றவளாக, ஒன்றும் அற்றவளாக அக்காவால் மட்டுமே பேச முடியும். அக்கா விடுமுறைக்கு வந்து செல்கிற கோடை தினங்கள்தான் எத்தனை ரம்மியமானவை. வாசமானவை. இந்தத் தடவை அக்கா அதிகமான நாட்கள் இருக்கவில்லை. தொடக்கப்பள்ளி ஆசிரியைப் பணி, அது சார்ந்த தேர்தல் பணி என்கிற நெருக்கடிச் சூழ்நிலைக்கிடையில், பதினொரு நாட்கள் மட்டுமே இருந்து விட்டுச் சென்றாள். இந்த இடைப்பட்ட நாட்கிளல் எங்களது இரவுகள் உறக்கம் துரத்தாமலேயே புலர்ந்து விட்டிருந்தன. காலை ஆறரையளவில் அவள் வீட்டுக்குள் நுழையும்போது, தவலையைத் தோளில் சுமந்தவாறு தெருமுனையிலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன்.

“ஏல… இந்த பெரிய தவலையிலா தண்ணி புடிக்குற. கிறுக்குப் புடிச்சுக்கிடப் போகுதுடா. சில்வர் குடத்துல புடிச்சா ஒங்க ரெண்டு பேருக்குப் போதாதாடா…’ அக்காவினுடைய பேச்சில் எப்போதுமே அன்போடு, அக்கறையும், கரிசனமும் கலந்திருக்கும். இவை எல்லாவற்றையும் தாண்டி தாயினுடைய அரவணைப்பு இருக்கும். அதுதான் அவளது இயல்பும் கூட. அக்காவை அதிகம் பிடித்துப் போனதற்கு அவளுடைய அந்த இயல்பும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

அக்கவைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் அம்மா இறந்தபோன நாள்தான் ஞாபகத்துக்கு வரும். ஓர் அமாவாசை நள்ளிரவொன்றில்தான் அம்மா இறந்து போனாள்.
பக்கத்து வீட்டுப் பெண்கள் வந்து பார்த்து, பிறகு இரண்டு தெரு தள்ளியிருந்த ஜானகி பாட்டியும் வந்து பார்த்து, அதற்கடுத்த ஜெயச்சந்திரன் டாக்டரை அழைத்து வந்து பார்த்த பிறகு அம்மாவின் மரணம் உறுதி செய்யப்பட்டது. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த என்னை, “ஏய்யா… எழுந்திருச்சு அம்மாவைப் பாருய்யா…’ என்று சந்திரா சித்தியும், என் கடைசி அக்காவும் எழுப்பினார்கள். மரநாற்காலியில் உட்கார்ந்த நிலையில் அம்மாவின் நாடி, கிழிக்கப்பட்ட வேட்டி துணியால் கட்டப்பட்டிருந்தது. என்ன நடந்தது என எனக்கொன்றும் புரியவில்லை. சுற்றியிருந்தவர்கள் அழுது கொண்டிருந்தார்கள். தாசாலுக்கு வந்தேன்.

அப்பா தனியாக உட்கார்ந்தவாறு சத்தமில்லாமல் அழுதுகொண்டிருந்தார். அழுத நிலையில் அப்பாவைப் பார்த்தது அதுதான் முதல் முறை. அப்போது அக்கா முனைஞ்சிப்பட்டியில் டீச்சர் டிரெயினிங் படித்துக் கொண்டிருந்தாள்.
எதிர்த்த வீட்டு தாசில்தார் மாமாதான் முனைஞ்சிப்பட்டி போய் அக்காவை அழைத்து வந்தார். அம்மாவுக்கு உடல்நிலை மோசமாக இருப்பதாக மட்டும் சொல்லி அக்காவை அழைத்து வந்திருக்கிறார். தெருமுனைக்கு வந்தவுடன் வீட்டுக்கு முன்கூடியிருக்கின்ற கூட்டத்தைப் பார்த்து விட்டுப் பதறிப்போய், கொண்டு வந்த கைப்பெட்டியைத் தெருவிலேயே போட்டு விட்டு அழுதவாறே வீட்டுக்கு ஓடி வந்தாள். அவள் வந்ததையறிந்து பாட்டியும், சித்தியும் ஓடிவந்து அவளைக் கட்டிக் கொண்டார்கள். வீட்டினுள் சென்று அம்மாவின் மடியில் அழுது புரண்டவள் தெருவுக்கு வந்து திண்ணையில் அமர்ந்திருந்த ரெங்கராஜ மாமாவிடம் நாக்கு குழறிய நிலையில் கேட்டாள்.

“மாமா…. நீங்களாவது எங்கம்மாவைக் காப்பாத்தியிருக்கக் கூடாதா…’

அக்காவின் ரசனைகளும், பிடித்தங்களும் வித்தியாசமானவை. அக்காலத்தில் அவள் வயதொத்த பெண் பிள்ளைகளெல்லாம் ரோஜாக்களையும், கனகாம்பரங்களையும் பதியம் போட, அக்காவோ பப்பாளி வளர்க்கப் பிரியப்பட்டாள். புறவாசல் தோட்டத்தில் அவள் வளர்த்த பப்பாளிச் செடி வீணாய்ப் போனதில் அவளுக்கு வருத்தம். பிறகு கல்யாணி ஆச்சியிடம் இருந்து பப்பாளி கன்றொன்றை வாங்கி வந்து வளர்த்தாள். அப்பப்பாளி பூக்கத் தொடங்கிய காலத்தில் அவற்றை ரசிப்பதிலேயே அதிக நேரம் எடுத்துக் கொண்டாள்.
ஒருநாள் உறைமோர் வாங்க வந்த பக்கத்து வீட்டுச் சுந்தரியிடம், “உலகத்துல எந்தப் பூவாவது இந்த மாதிரி பூக்குதாடி…’ என்றாள். சுந்தரி பதில் ஒன்றும் சொல்லவில்லை. வளவு வீட்டு ஈஸ்வரியிடம் போய் சொல்லியிருக்கிறாள்.

“பப்பாளி பூத்ததைப் பெரிசா பேசிக்கிறா. எங்க வீட்டு முத்தத்துல பறிக்கறதுக்கு ஆள் இல்லாம் கொய்யாக் காய்ச்சுக் கெடக்கு தெரியுமா’ சுந்தரி சென்ற சில நேரம் கழித்து, ஈஸ்வரி வந்து அக்காவிடம் இதைச் சொன்னாள்.

“அவ கிடக்கா… விடுக்கா. அவ விட்டுல வாரத்துக்கு ஒரு நாள் சாம்பார் வைக்கறதை, “ஷாம்பார்’ன்னு பெருமையா பீத்திக்கிறவ அவ…’ என்றாள். இதே சுந்தரிதான் அக்கா திருமணம் முடிந்து மறுவீட்டுக்கு வந்திருந்தபோது, அக்காவின் திருமண நாளன்று விவிதபாரதியில் “பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி’ பாடலை ஒலிபரப்பானது, ஏதோ அக்காவுக்கென்றே ஒலிபரப்பியதைப் போன்று தான் உணர்ந்து கொண்டதாக அத்தானிடம் பெருமை பொங்கச் சொன்னாள். அக்கா அவளுக்குப் பதிலொன்றும் சொல்லாமல் சிரித்துக் கொண்டிருந்தாள். சிரிப்பென்றால் முகம் மாறாத சிரிப்பு.

“உன்னால மட்டும் எப்படிக்கா இப்படி சத்தமில்லாம, முகம் மாறாம சிரிக்க முடிகிறது?’ என்றேன்.

“மஞ்சளா பூத்தாதான் ஆவாரம்பூ அழகு’ என்றாள்.
சமைக்கின்றபோது பாடிக் கொண்டே சமைப்பதைப் போன்று, பப்பாளி மரத்தையும், பூக்களையும் தடவிப் பார்க்கும்போது கூடப் பாடிக் கொண்டேதான் அக்கா ரசித்தாள்.

அக்காவின் உலகம் பாடல்களால் ஆனது. தாராபுரம் சுந்தரராஜன் பாடிய “உனக்காகவா நான் உனக்காகவா’ பாடலை அவள் அடிக்கடி முணுமுணுப்பதுண்டு. “அப்படி என்னதான் இருக்குது இந்தப் பாட்டுல’ என்று யாராவது கேட்டு விட்டால், “என்னதான் இல்லை இதுல’ என்பாள். பப்பாளிக்குத் தண்ணீர் ஊற்றித் திரும்புகையில் மட்டும், எருக்குழியின் இடது மூலையில் படர்ந்திருந்த எருக்கம்பூ மொட்டுக்களை அவிழ்த்து விடுவாள். மொட்டு வெடிக்கின்ற சத்தம் அவள் முணுமுணுக்கின்ற பாடல்களின் சத்தமாகத் தோன்றும். மொட்டிதழின் பால் பிசுபிசுப்பு கையில் அப்பிக் கொள்ள, அவற்றை முகர்ந்து பார்த்துக் கொள்வாள்.

அக்காவுக்கு பாடல்களையும், எருக்கம் பூவின் பால் வாசனைகயையும் பிடித்திருந்ததைப் போன்று பச்சை நிறத்தையும் அதிகம் பிடித்திருந்தது. அவள் அணிகிற உடைகள் அனைத்திலும் ஏதாவதொரு இடத்தில் அல்லது முனையில் பச்சை ஒட்டிக் கொண்டிருக்கும். பச்சை என்றால் கிளிப் பச்சை அல்ல. மரகதப்பச்சை அல்ல, பனங்குருத்துப் பச்சை.
அலைபேசி அழைத்தது. அக்காதான் பேசினாள். ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்து விட்டதாகச் சொன்னாள். மர அலமாரியில்தான் வாங்கித் தந்த சட்டையின் அடியில் பணம் வைத்திருப்பதாகவும் அதை ஞாபகமாக எடுத்து வைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தினாள். அக்கா எப்போதுமே இப்படித்தான். எங்கே நேரில் பணம் கொடுத்தால் பெற்றுக் கொள்வதற்குத் தயக்கம் காட்டுவேனோ என்று இப்படி ஏதாவதொன்றைச் செய்து விட்டுச் சொல்வாள்.

குளித்து விட்டு அக்கா வாங்கி தந்த சட்டையை அணியலாம் என்கிற எண்ணத்தில் அலமாரியிலிருந்து சட்டையை உருவி எடுக்க மேல் தட்டிலிருந்து கீழே விழுந்தது அக்காவின் பழைய டைரி. முதல் வாசல் நடையிலமர்ந்து புரட்ட ஆரம்பித்தேன். கோடையின் காலை வேளைகளில் வீசுகின்ற குளிர்ந்த காற்று, ஈரம் உலராத குளிர்ந்த உடம்பை புல்லரிக்கச் செய்தது. அக்கா இந்நேரம் இருந்திருந்தால் கோடை குறித்தும் கோடைக்காற்று குறித்தும் ஏதாவது சொல்லியிருப்பாள். எனது எண்ணங்களின் அலைவரிசை இவளையும் சென்று அடைந்திருக்க வேண்டும். அப்போதுதான் எழுந்து வந்தவள் என்னைக் கடந்து செல்கையில் “காந்தி அக்கா வந்துட்டு போனதிலிருந்து வீடு வீடாவே இல்ல. என்னவோ போல இருக்கு…’ என்றாள்.

டைரியின் முதல் பக்கத்தில் மணிமுத்தாறு அணையில் நானும் அக்காவும் பள்ளிச் சீருடையில் எடுத்துக் கொண்ட பால்ய காலப் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்தது. டைரியின் மொத்தமுள்ள பக்கங்களில் பத்து பதினொரு பக்கங்கள் மட்டுமே எழுதப்பட்டது தவிர, மற்ற பக்கங்கள் அனைத்தும் வெற்றுத்தாள்களாகவே இருந்தன. ஒரு பக்கத்தில் “அன்பைப் பொழிந்து… ஆசையைத் துறந்து… இன்னலைத் தொலைத்து… ‘ என உயிரெழுத்து பன்னிரண்டை முதன்மையாக வைத்து கவிதையொன்று எழுதப்பட்டிருந்தது. ராணி அண்ணா கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான கவிதைப் போட்டியில் அக்கவிதை தமக்கு முதல் பரிசைப் பெற்றுத் தந்ததாகவும் பின்பு அதே கவிதை கல்லூரி ஆண்டு மலரில் “உயிர் எழுத்தின் உயிர்ப் பொருள்’ என்கிற தலைப்பில் பிரசுரமானதாகவும் கவிதைக்குக் கீழே குறிக்கப்பட்டிருந்தது.

இன்னொரு பக்கத்தில் அப்பாவைப் பற்றி ஒரு கவிதை “அப்பா என்பது வேறொன்றுமில்லை… இன்னொரு அம்மா…’ மற்றொரு பக்கத்தில் கண்ணதாசனைப் பற்றி ஒரு நெடுங்கவிதை. அவர் எழுதிய புத்தகங்களின் தலைப்பைக் கொண்டே அவரது புகழ் பாடியது அக்கவிதை. அநேகமாக அவரது நினைவு நாளொன்றில் அக்கவிதையை அக்கா எழுதியிருக்க வேண்டும். மற்றொமொரு பக்கத்தில் எழுதப்பட்டிருந்தது கவிதை அல்ல; பாட்டு.

ராகம்: மதுவந்தி : தாளம் : ஆதி என்கிற அடையாளக் குறியிட்டு, “பொதிகை மலையின் உச்சியிலே… குற்றால அருவிக் கரையினிலே…’ என்கிற பல்லவியில் தொடங்கி, அனுபல்லவி, சரணம் என நீண்டிருந்தது அப்பாட்டு.

டைரியின் கடைசிப் பக்கத்துக்கு முந்தைய ஒன்பதாவது பக்கத்தில் “வாழ்க்கை எனும் வீணையில் காதல் ஒரு தெய்வீக ராகம்… கல்யாணம் ஒரு ஆனந்த ராகம்….’ என எழுதப்பட்டிருந்த குறுங்க விதைக்குக் கீழே பக்கத்தின் குறுக்காக வண்ணப் பேனாவால் சற்றே பெரிதாக, அழுத்தமாக திருமண நாள் என்று குறிக்கப்பட்டிருந்தது.

டைரியைப் படித்து மடித்து மூடிய போது, திருமணக் கோலத்தில் அக்கா நின்றது ஞாபகத்துக்கு வந்தது. பட்டாசாலை நடுச்சுவரில் மாட்டப்பட்டிருந்த கல்யாண ஃபோட்டோவைப் பார்த்தேன். அரக்கு கலர் பொட்டு பளிச்சிட சிரித்துக் கொண்டிருந்தாள். சிரிப்பென்றால் அதே முகம் மாறாத முத்திரைச் சிரிப்பு. அர்ப்பணிக்கப்பட்ட, வழங்கப் பட்டிருக்கின்ற வாழ்வில், அக்காவின் சில கனவுகள் பரிசீலிக்கப்பட்டிருக்கலாம். பல கேட்கப்படாமலேயே நிராகரிக்கப்பட்டிருக்கலாம்.

அடுத்தமுறை அக்காவைப் பார்க்கும் போது அவளிடம் டைரியைக் கொடுத்து விட்டு நினைவாகக் கேட்க வேண்டும். “வாழ்க்கை வீணையில் ஆனந்த ராகத்தை மீட்டிக் கொண்டிருக்கிறாளா…’ என்று.

– வே. முத்துக்குமார் (மே 2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *