கோமியம் பிடித்த கதை

 

என் அம்மா மிகவும் ஆச்சாரம் பார்ப்பவர். பூஜைகள் முறைப்படி நடக்க வேண்டும் என்பார். ஒரு முறை எங்கள் வீட்டில் புண்ணியாவசனம் பண்ண வேண்டியிருந்தது. காலை 5 மணிக்கு என்னை எழுப்பி விட்டார்கள். கோமியம் வேண்டுமாம்.

கோமியம் என்றால் என்ன என்று கேட்கிறீர்களா? எளிமையான வார்த்தைகளில் சொன்னால், அது பசு மாட்டு மூத்திரம். நெய். பால், தயிர், இலை, தேங்காய், அரிசி. காய்கறி, சமித்து (உங்களை பாராட்டுவதாக நினைத்துக்கொள்ள வேண்டாம். காய்ந்த சுள்ளிக் குச்சிகளுக்கு பெயர், சமித்து) எல்லாம் நேற்றே வாங்கி கொடுத்துவிட்டேன். நம்ம வேலை முடிந்தது என்று போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கினால், எழுப்பி, கோமியம் வேண்டுமாம்.

மார்கழி மாதம். நல்ல குளிர். எதில் வாங்குவது? எங்காவது விற்குமா என்ன? கையில் ஒரு பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தார்கள். ”வீட்டுக்குப் பின்னாடி ரோட்டில், முதலியார் வீட்டில், பசு மாடு பால் கறக்கற நேரம்தான். சீக்கிரம் போய் கேளு கொடுப்பாங்க”.

“அங்க இல்லன்னா?”

”ஏண்டா! பசு மாடா கிடையாது மயிலாப்பூர்ல? பத்து கேள்வி கேக்குற!! போடா. சீக்கிரம் போய், கொஞ்சம் புடிச்சுகிட்டு வா”

முகம் கழுவிட்டு, தலையை கையால் கோதி விட்டுக்கொண்டு, ’வேட்டியே பரவாயில்லை. இருட்டாய் தானே இருக்கிறது’ என்று மடித்துக் கட்டிக் கொண்டு கிளம்பினேன்.

முதலியார் வீட்டைக் கண்டுபிடிப்பது அப்படி ஒன்றும் சிரமமாக இல்லை. இரண்டு வீடுகளுக்கு நடுவில் ஒரு ஒற்றையடி சந்து. சந்து முழுவதும் சேறும் சகதியுமாக இருந்தது. சந்து வாசலில் தயங்கி நின்றேன். யாரையும் காணோம். உள்ளே போய், வீட்டு வாசலில், “ அம்மா அம்மா” என்று கூப்பிட்டேன். வந்தார்கள்.

“கோமியம் வேண்டும்”

“பால் எல்லாம் கறந்தாச்சே அப்பா. இப்ப வர்றியே. முன்னாடியே வந்திருக்கபடாது!”

”இல்லைங்க. நான் கேட்கிறது மாட்டு…”

“தெரியுதுப்பா. அதான் சொல்றேன். முன்னாடியே வந்திருக்கப்படாது? மாடு, பால் கறக்கறப்பவே போயிடும்ப்பா. இப்ப வேணா கொஞ்சம் நின்னு பாரு”

மாட்டையே பரிதாபமாக பார்த்தேன். அது எப்போது ’போவது’, நான் எப்போது பிடிப்பது! அந்த அம்மா உள்ளே போய்விட்டார்கள். மாடு ’போவதற்காக’ நான் காத்திருக்க வேண்டிய நிலைமை. லேசாக வெளிச்சம் வேறு வந்துவிட்டது. வேட்டியுடன் பல்விளக்காது, காலையில், கையில் பாட்டிலுடன் காத்துக்கொண்டிருக்கும் கொடுமை.

அந்த அம்மாள் திரும்பி வந்தார்கள். என்னை பார்த்தால் பரிதாபமாக இருந்திருக்கவேண்டும். ”கொஞ்சம் இருப்பா. இதோ வர்றேன்”. கையில் சொம்புடன் வந்தார்கள். உள்ளே, முக்கால் சொம்புக்கு ’அது’. ’அப்பாடா! நம்ம வேலை எளிதாக முடிந்து. உள்ளே ஸ்டாக் வைத்திருப்பார்கள் போல. அவசரம் என்றால்தான் எடுப்பார்கள்’ என நினைத்தபடி, நன்றியோடு கையை நீட்டினேன்.

“அட! இருப்பா. பறக்கிறியே! தண்ணீரை ஊற்றினால் சில சமயம் போவும்ப்பா”.

என்னைத் தள்ளி நிற்கச் சொல்லிவிட்டு, பளிச்சென்று மாட்டு வால் ஆரம்பிக்கிற இடத்தில் தண்ணீரை ஊற்றினார்கள். மாடு, அலறியடித்துக்கொண்டு தடாலென அந்த சின்ன சந்தில் எழுந்ததில், என் சட்டை வேட்டி எல்லாம் சாணி. ஆனால், கோமியம் மட்டும் போகவில்லை. இன்னொரு சொம்பு தண்ணீருக்கு பசு கொஞ்சம் வேகமாக வாலைத் தூக்கி இப்படியும் அப்படியும் அசைதுவிட்டு, ’இவன் யாரடா கடங்காரன்! காலங்கார்த்தால வேறு வேலைவெட்டி இல்லாம, இங்க வந்து தண்ணீர் ஊற்றிக்கொண்டு!!’ என்பதுபோல என்னை விரோதமாகப் பார்த்தது. அந்த அம்மாள் முகத்திலும் ஏமாற்றம்.

அடுத்த சொம்பு தண்ணீரை என் கையில் இருந்த பாட்டிலை வாங்கி ஊற்றினார்கள். ’சரி, கோமியம் என்று தண்ணீரையே கொண்டு போய் கொடுக்க சொல்லப்போகிறார்கள். கூடாது. அது பாவம். பூஜைக்கு கோமியம்தான் வேண்டும்’ என்று யோசித்துக் கொண்டே பாட்டிலை வாங்கினேன்.

“நம்ம ரோட்டிலேயே நான்கைந்து வீடு தள்ளி ரெட்டியார் வீட்டில், அப்புறம் கோபாலன் வீட்ல எல்லாம் மாடு நிற்கும். போய் தண்ணியை ஊத்தி பாரு” என்று சொல்லிவிட்டு அந்த அம்மாள் போய்விட்டார்கள். தோல்வி முகத்துடன், சந்தை விட்டு வெளியேறி, மாடு எங்கேயாவது நிற்கிறதா என்று பார்த்துக்கொண்டே வந்தேன்.

ஒரு சைக்கிள் கடை பக்கம் இரண்டு மாடுகள் லைட் கம்பத்தில் கட்டப்பட்டிருந்தன. கொஞ்சம் தள்ளி நின்று பார்த்தேன். யாரையும் காணோம். சரி தண்ணீரை ஊற்றிப் பார்ப்போம் என்று, தண்ணீரை ஊற்றினேன். மாடு அதிர்ச்சியோடு லேசாக நகர்ந்து விட்டது. முக்கால்வாசி தண்ணீர் கீழே போய்விட்டது. மாடு நகர்ந்த பக்கம் நானும் போய், மீதமிருந்த தண்ணீரையும் ஊற்றினேன். மாடு குழப்பத்துடன் வாலத் தூக்கியதுடன் சரி. அது, கோமியம் போகிற மாதிரி தெரியவில்லை. தண்ணிர் தீர்ந்துவிட்டது.

வெயில் வந்துவிட்டது. சைக்கிள் கடையில் போய் பாட்டிலை காண்பித்து தண்ணீர் கேட்டேன். சந்தேகமாக பார்த்துக்கொண்டே அரை பாட்டில் தண்ணீர் கொடுத்தார். மாட்டின் அருகில் போய் மீண்டும் நின்றபோது, நாலைந்து சிறுவர்கள் உடன் வந்து நின்று கொண்டார்கள். நான் மாட்டிடம் ஏதோ வித்தை செய்யப்போவதாக நினைத்திருக்க வேண்டும். என்ன செய்ய! அதற்காக கோமியம் பிடிக்காமல் போக முடியுமா என்ன? இந்த முறை வெகு ஜாக்கிரதையாக தண்ணீரை சரியாக வால் பக்கம் மேலே ஊற்றிவிட்டு ஆவலுடன் பாட்டிலை பிடித்தேன். கோமியம் வந்தது.

தேவர்கள் பாற்கடலை கடைந்து அமுதம் பெற்றபோது, ஓ.என்.ஜி.சி ஆராய்ச்சியாளர்கள் பெட்ரோல் தேடி தோண்டி, அது கிடைக்கும் போது வரும் ஆனந்தம் எப்படியிருக்கும் என்பது எனக்கு தெரிந்தது. பாட்டிலை சரியாக பிடிப்பதற்குள் மாடு நகர்ந்து விட்டது. நானா விடுவேன்? நானும் நகர்ந்து நகர்ந்து, பிடித்தேன். மிரண்டு போன மாடு, என்னை, என் கண்ணில், அதன் மெல்லிய இரும்பு கம்பிகள் போன்ற, நாற்றமடிக்கும் வாலால் ஒரு தட்டு தட்டியது.

என்னை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்தை பொருட்படுத்தாது வெளிவந்தேன். நடந்தேன் பெருமிதத்தோடு; கையில் பாட்டிலோடு; பாட்டிலில் கோமியத்தோடு.

வீட்டில் ஏக அமர்க்களம். வீடு மொத்தமும் கழுவி, கோலம் போட்டிருந்தது. எல்லோரும் குளித்து விட்டு, சுறுசுறுப்பாக ஆளுக்கு ஒரு வேலை செய்துகொண்டிருந்தார்கள்.

“சீக்கிரம் வாடா. எவ்வளவு நேரம் கொஞ்சம் கோமியம் கொண்டு வர! அதை அப்படியே டேபிள் மேல் வைத்து விட்டு, சீக்கிரம் குளித்துவிட்டு வா” என்று என் சிரமம் தெரியாமல் சாதாரணமாக சொன்னார்கள் அம்மா. வீட்டிற்கு என் தங்கை குழந்தைகளும் வந்திருந்தார்கள். ஒன்றுக்கு நாலு வயது. ஒன்றுக்கு ஆறு. ஒரே அட்டகாசம். எல்லோரையும் கடந்துகுளிக்கச் சென்றேன்.

மாட்டு வாசனை போக குளித்துவிட்டு, துண்டுடன் ஹாலுக்கு வந்தேன். எல்லோரும் ஆளுக்கு ஒரு வேலை செய்து கொண்டிருந்தார்கள். மாவிலையை கட்டுவது, சந்தானம் கரைப்பது என்று தங்கை குழந்தைகளும் ஆச்சரியப்படும்படியாக உதவி செய்து கொண்டிருந்தார்கள். குழந்தை ஸ்ரீவள்ளி ஏதோ ஒரு பாட்டிலை கழுவிக் கொண்டிருந்தாள். என்னம்மா ? என்ன பாட்டிலைக் கழுவுகிறாய்? என்று கேட்டேன்.

”என்னமோ தெரியல. மேஜை மேல ஒரு பாட்டில்ல மஞ்சளா அழுக்குத் தண்ணி இருந்துச்சு. அதை கீழ ஊத்திட்டு, பாட்டிலை சுத்தமா கழுவினேன் மாமா” என்றாள்.

- 03-12-1991ல் எழுதியது 

தொடர்புடைய சிறுகதைகள்
மயிலாப்பூர் செல்லும் பஸ்ஸில் ஏறினேன். கடைசி சீட்டில் இடமிருக்க. அமர்ந்தேன். உடன் மழை சடசடவென பெய்ய ஆரம்பித்தது. மழை சத்தத்தையும் மீறி எனக்கு அருகில் அமர்ந்திருந்தவர்கள் பேசும் சத்தம் கேட்க, இடப்புறம் திரும்பி பார்த்தேன். இரண்டு இளைஞர்கள். எனக்கு அடுத்து ஒருவன். அவனுக்கு ...
மேலும் கதையை படிக்க...
வௌ்ளிக்கிழமை அமாவாசை தெரியுமில்ல மறக்காம தர்ப்பணம் பண்ணிடுங்க மனைவி சொன்னதும் திக் என்றிருந்தது. வியாழன், வௌ்ளி இரண்டு நாட்களும் மதுரையில் வேலை. தயாரிப்பாளர் நிறுவனம் நடத்தும் பயிற்சி. ரெசிடென்ஷியல் புரோகிராம் என்பதால் தங்கப்போவது அவர்களே ஏற்பாடு செய்திருக்கும் ஹோட்டலில். கோயில் எங்கிருக்கோ, குளம் ...
மேலும் கதையை படிக்க...
புரபசர் செந்தில்நாதன் வகுப்பை முடித்துவிட்டு காரில் ஏறியபோது, செல் போனில் ’டிங்’ என்று ஒரு சத்தம். ’வாட்ஸ் அப்’பில் செய்தி. போனை எடுத்து பாஸ்வேர்ட் டை கோலம் போடுவதுபோல எண்களின் மீது சுட்டுவிரலால இழுத்துவிட்டு, திறந்து, போனின் மேல் பகுதியை புத்தகத் ...
மேலும் கதையை படிக்க...
”என்னங்க… இன்னும் எவ்வளவு தூரம்?..” 35 அடி உயர ஆஞ்சநேயர் கோயிலை தாண்டினோம். கையில் அட்ரஸ் இருந்தது. ”இந்த வீடுதான் நினைக்கிறேன். நம்ம கல்யாணத்துக்கு முந்தி ஒருவாட்டி வந்திருக்கேன்” அதே வீடுதான். வாசலில் எஸ். ராமச்சந்திரன் என்று பெரிதாய் போர்டு இருந்தது. என் காலேஜ் ...
மேலும் கதையை படிக்க...
கம்பி கேட்டை ஒரு கையால் திறக்க முயன்றான். மறுகையில் மொப்பெட் வண்டி. இயலாது போக, பின்பு மொபட்டை நிறுத்தி ஸ்டாண்ட் போட்டுவிட்டு வந்து, கேட்டைத் திறந்தான். உள்ளே, இரண்டாம் நம்பர் பிளாட் அம்மா வாசலில் நிற்பது தெரிந்தது. ‘கஷ்ட காலம். மொபெட்டை உள்ளே ...
மேலும் கதையை படிக்க...
விழிப்பு வந்த பொழுது மணி சரியாகத் தெரியவில்லை. படுக்கை அறையின் கண்ணாடி ஜன்னல்களின் திரைச்சீலையினை மனைவி நன்றாக இழுத்து மூடியிந்ததும் ஒரு காரணம். ஓ..! இன்று ஞாயிற்றுக் கிழமையல்லவா, அதுதான். லீவு நாள் என்றால் அவள் அப்படித்தான் செய்வாள். அப்பொழுது , ...
மேலும் கதையை படிக்க...
கணேசன் அவனுடைய அப்பாவுக்கு நீல நிற இன்லாண்டு லெட்டரில் கடிதம் எழுதிக் கொண்டிருந்தான். மற்ற விவரங்களை எழுதிவிட்டு, ”எனக்கும் எனது மேலதிகாரிக்கும் இரண்டு நாள்களாக ஒரு விவாதம். அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள விருப்பம். அது ...
மேலும் கதையை படிக்க...
வசந்தியின் உள்ளம் அப்பாவுக்கு நன்றி சொல்லியது. ’எவ்வளவு சிரமப்பட்டு என்னை இவ்வளவு பெரிய இடத்தில் கட்டிக் கொடுத்திருக்கிறார். என்ன மாதிரி கணவன்! அழகு, கம்பீரம், படிப்பு, வசதி!! இவர்கள் குடும்பம்தான் எப்படிப்பட்டது. மகாலட்சுமி மாதிரி ஒரு மாமியார். முகத்தில் என்ன ஒரு ...
மேலும் கதையை படிக்க...
கொரோனா தொற்றுக்கு அஞ்சி சொந்த ஊர் வந்து இருபது நாட்களாகிவிட்டது. சொந்த ஊர், சொந்த வீடு. நகராட்சி விடும் தண்ணீர் காலை 6 மணி முதல் 7 மணி வரை தொட்டியில் வந்து விழும். மோட்டார் போட்டு ஏற்றி விட்டால் போதும். கண்ணாடி ...
மேலும் கதையை படிக்க...
ஜன சந்தடியற்ற அந்த நெடுஞ்சாலையில் வேகமாக ஸ்கூட்டரில் போவது பரசுராமனுக்கு சுலபமாக இருந்தது. மாலதிக்கும் அந்த சுத்தமான காற்று சுகமாக இருந்திருக்க வேண்டும். பரசுராமன் ஏதோ சொல்ல, காற்றின் வேகத்தில் அவள் காதில் எதுவும் விழவில்லை. அவனை இன்னும் நெருங்கி, ”என்னங்க” என ...
மேலும் கதையை படிக்க...
மழை நாளில் மூன்று பேர்
ஒரு அமாவாசை நாள்!
சாமிநாதன்
முன்னேறி தெய்வம்
இனம்
சாது மிரண்டால் (அ) குணங்கள்
நெஞ்சமெல்லாம் நீ
ஒப்பீடு
கறார்
மாமியின் அட்வைஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)