நெறிமுறைப் பிறழ்வா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 26, 2022
பார்வையிட்டோர்: 5,104 
 

அன்று ஒரு நாள், நானும் என் மகளுமாய் ஒரு றெஸ்ரோரண்டுக்குச் சென்றிருந்த போது, எதிர்ப்பட்ட குளிரிலிருந்து எனக்குப் பாதுகாப்புத் தருவதற்காக, தனக்கென ஆசைப்பட்டு வாங்கிய அந்த ஸ்கார்ஃபை அவள் எனக்குத் தந்திருந்தாள். பின்னர் சாப்பிடும்போது என் முன்னால் இருந்து என் மேல் அந்த ஸ்கார்ஃபை ரசித்தவள், ”யூ லுக் குட் வித் தற் ஸ்கார்ஃப். யு கீப் இற்” என்று அதை எனக்கு அன்பளிப்பாகத் தந்திருந்தாள்.

தொடரும் நினைவுகளை இடைமறித்தது, அந்தக் கவுன்சிலரின் குரல்.

அமைதியான அந்த அறையில் இருந்த சிறிய வட்டமான மேசையைச் சூழப் போடப்பட்டிருந்த கதிரைஒன்றில் அமர்ந்த நான்,அங்கிருந்த அனைவருக்கும் என்னை ஒரு மொழிபெயர்ப்பாளரென உத்தியோகரீதியில் அறிமுகப்படுத்திக் கொள்கிறேன்.

“இங்கே வந்ததன் நோக்கம் என்னவென்று உங்களுக்கு விளங்கியதா ?” மிகவும் இளமையும் அழகும் கொண்ட அந்தப் பெண் டொக்டர், வேறுவேறு திசைகளைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த அந்த இளம் தம்பதியினரைப் பார்த்துக் கேட்கிறார்.

“என்ரை இரத்தப் பரிசோதனையிலை ஏதோ பிழை இருக்குதாம். அது பற்றின விளக்கம் அறியிறதுக்கு நான் இங்கை வரவேணும் எண்டு எங்கடை ஃபமிலி டொக்டர் சொன்னவர்.” அந்தப் பெண் தயங்கித் தயங்கிச் சொல்கிறாள். கண்களில் சோகம் நிழலாடியது. ஆடைகள் கூட நேர்த்தியாய் இருக்கவில்லை.

“ஆமாம், என்னுடைய பெயர் டொக்டர் ஜேம்ஸ், ஜெனரிக்ஸ் கவுன்சிலர். நான், இப்போது உங்களுடைய நிலைமையை விளங்கப்படுத்தப் போகிறேன். பின்னர் அதற்கேற்றபடி என்ன செய்வது என்று முடிவெடுப்பது உங்களைப் பொறுத்தது… சரியா?”

ஏதும் சொல்லாமல் சும்மா தலையைமட்டும் மேலும் கீழும் ஆட்டுகின்றனர், இருவரும்.

“சில விடயங்கள் வழமைக்கு மாறாக இருக்கின்றது என உங்களுடைய இரத்தப் பரிசோதனை சொல்கின்றது. பொதுவாக AFP, estriol, hCG என்று மூன்று பொருள்களின் அளவை நாங்கள் பார்ப்போம். சாதாரணமாக முதல் இரண்டும் ஒன்றை விடக் கூடவாகவும் மூன்றாவது ஒன்றை விடக் குறைவாகவும் இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் நிச்சயமாச் சொல்ல முடியாவிட்டாலும் கூட ‘டவுண் சின்றோம்’ என்ற ஒழுங்கீனம் குழந்தைக்கு இருக்கலாம் என்று நாங்கள் எதிர்வு கூறலாம். உங்களுடைய இரத்தத்தில் முதல் இரண்டும் அதிகம் பிரச்சனையில்லாமல் இருந்தாலும் கூட, மூன்றாவது, குறிப்பிடத்தக்க விதத்தில் மிகவும் குறைவாக இருப்பதுதான் எங்களுடைய அக்கறைக்கு காரணமாக உள்ளது.” குரலில் எந்தவித பிசிறும் இல்லாமல் சொல்கிறார், டொக்டர்.

அந்தப் பெண்ணின் கண்களில் இருந்து பொலபொலவென்று கண்ணீர் வழிந்தோடியது. மேசையில் இருந்த ரிஷூப் பெட்டியை அவளிடம் நீட்டியடொக்டர், “ஆ யூ ஓகே?” என்ற போது- “அழுது என்ன செய்யிறது, எது நல்லதோ அதைத் தானே செய்ய வேணும்.” என்று பதில் சொன்னான் அவளது கணவன், ஒரு கையால் தன் குட்டையான தலைமயிரை மேல் நோக்கி ஒதுக்கியபடி.

“இரத்தப் பரிசோதனை ‘டவுண் சின்றோம்’ என்ற ஒழுங்கீனம் இல்லை என்பதை மட்டும் தான் உறுதியாகச் சொல்லும். எனவே ‘டவுண் சின்றோம்’ இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை உறுதியாகச் சொல்வதற்கு ‘அம்னியோசென்ரிசிஸ்’ என்று ஒரு ரெஸ்ற் செய்யவேண்டும். அது பற்றிக் கதைக்கத்தான் உங்களுடைய டொக்டர் உங்களை இங்கே அனுப்பியிருக்கிறார்.”

“இது எங்கடை முதல் பிள்ளை. இவவுக்கு இப்ப ஆக முப்பது வயசு தானே ஆகுது. இங்கை ஆக்கள் நாப்பது வயசுக்குப் பிறகும் பிள்ளைப் பெறுகினம். எப்படி… இது இவவுக்கு வந்தது? அப்ப இனியும் பிள்ளைப் பெறுகிறது பிரச்சனையாய்ப் போயிடுமோ?” குழப்பத்துடன் கேட்ட அவன் தனது கையில் இருந்த ஐஃபோனையும் அடிக்கடி பார்த்துக் கொண்டான்.

“இது எவருக்கும், எந்த வயதிலும் வரலாம், ஆனால் வயது கூடக்கூட வருவதற்கான சாத்தியங்கள் அதிகரிக்கின்றன. உதாரணத்துக்கு முப்பது வயதில் ஆயிரத்துக்கு ஒன்றாக இருக்கும் சாத்தியக்கூறு, நாற்பது வயதானதும் நூறுக்கு ஒன்றாகி விடுகிறது… நான் சொல்வது உங்களுக்கு விளங்குகிறதா?”

அவன் தலையை மேலும் கீழும் ஆட்டினான். அவள் அதே கண்ணீர் நிறைந்த கண்களுடன் மூக்கைச் சீறிக்கொண்டிருந்தாள்.

“எங்களுடைய உடல் பல கலங்களால் ஆக்கப்பட்டது. ஒவ்வொரு கலத்திலும் இருபத்தி மூன்று சோடி நிறமூர்த்தங்கள் உள்ளன. அந்த ஒவ்வொரு நிறமூர்த்தத்திலும் பல பரம்பரை அலகுகள் இருக்கின்றன. அவை தான் எங்களுடைய உடம்பு சீராக இயங்குவதற்கு காரணமாக உள்ளன. இதில் உள்ள இருபத்தி ஒராவது சோடி நிறமூர்த்தங்களில் நிகழும் சில பிறழ்வுகளால், அது சோடியாக இன்றி மூன்று நிறமூர்த்தங்களைக் கொண்ட ஒரு புது அமைப்பாக மாறிவிடுவதால் தான் ‘டவுண் சின்றோம்’ எண்ட ஒழுங்கீனம் ஏற்படுகிறது. இந்த ஒழுங்கீனம் இருக்கின்ற ஆட்களில் பல வகையான உடல், உளக் குறைபாடுகள் இருக்கும்.”

நோயாளிகளுக்கு விளங்கப்படுத்தவெனத் தயாரிக்கப்பட்ட இலகுவான படங்கள் போட்ட சிறிய பிரசுரம் ஒன்றைக் காட்டி அவர்களுக்கு மேலும் அதை விளங்கப்படுத்தின பின், “இது பற்றி வேறு ஏதாவது கேள்விகள் இருக்கின்றதா?” என்கிறார் டொக்டர்.

பன்னிரண்டாம் வகுப்பில் நான் ஆசையாக, ஆர்வமாகப் படித்த ஜெனரிக்ஸ் என் மனதில் மீள ஒருமுறை ஓடி மறைந்தது.

இல்லை என அவள் தலையை ஆட்டினாலும் அவளின் கண்கள், அவளுக்குள் ஆயிரம் கேள்விகள் துளைத்தெடுக்கின்றன என்ற பிரமையை என்னில் ஏற்படுத்தின.

“வயித்துக்குள்ளாலை கருப்பையிலை ஒரு ஊசியைக் குத்தி, அங்குள்ள அமினியன் திரவத்தின் ஒரு சிறிய அளவை எடுத்து அதைப் பரிசோதிப்பதுதான், ‘அம்னியோசென்ரிசிஸ்’ எனப்படும். அந்தத் திரவத்தில் குழந்தையின் சில கலங்களும் இருப்பதால் அதனைப் பயன்படுத்தி குழந்தையின் நிறமூர்த்தங்களை நாங்கள் பரிசோதனை செய்ய முடியும். இந்தச் சோதனை மிகவும் பாதுகாப்பானது, பக்கவிளைவுகள் குறைந்தது, வலி அற்றது. சிலமணி நேரம் தான் ஹொஸ்பிற்ரலில் நிற்கவேண்டும். பிறகு வீட்டில் போய் ஓய்வாய் இருந்தால் சரி. இதனால் கருச்சேதம் நடக்கிற சாத்தியம் மிகமிகக் குறைவு… அது நூறில் ஒன்று என்று கூடச் சொல்ல முடியாது…. இது பற்றி வேறு ஏதாவது அறிய வேண்டுமா?”

“எப்ப செய்யவேணும்?” என்றாள் அவள்.

“செய்யப் போவதாக இன்றைக்கு நீங்கள் முடிவு எடுத்தால், நாளை மறு நாள், வியாழக்கிழமை அதைச் செய்யலாம். கர்ப்பம் பத்தொன்பது கிழமையாவதற்கு முதல் அதைச் செய்யவேண்டும். எவ்வளவு விரைவாகச் செய்ய முடியுமோஅவ்வளவு விரைவாகச் செய்வது நல்லது. முதலில் அதற்கு ஒத்துக்கொண்டு ஒரு படிவத்தில் நீங்கள் கையொப்பமிட வேண்டும். அப்படி வியாழக்கிழமை அதைச் செய்தால் நான் வெள்ளிக்கிழமை உங்களைத் தொலைபேசியில் அழைத்து அதன் முடிவைச் சொல்வேன். குழந்தையில் ‘டவுண் சின்றோம்’ இல்லை என்று உறுதிசெய்யப்பட்டால் பிரச்சனையில்லை. இருக்கிறது என்றால் கர்ப்பத்தைத் தொடரப் போகிறீர்களா அல்லது நிறுத்தப் போகிறீர்களா என்று நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அதிலிருந்து பிறகு நாம் தொடரலாம்… முடிவு பற்றி உங்களுடன் நான் கதைப்பதற்கு எந்தத் தொலைபேசி இலக்கத்துக்கு அழைக்கலாம்?”

”என்ரை செல்ஃபோனுக்கு அழைக்கலாம்’ என்றான் அவன். அவளோ மௌனமாக மேலும் மேலும் அழுதுகொண்டிருந்தாள்.

”இன்னொரு முக்கியமான விடயமும் நான் சொல்ல வேண்டும். இரத்தப் பரிசோதனையில் சில அசாதாரண அவதானிப்பு இருந்ததால் ‘அம்னியோசென்ரிசிஸ்’ மூலம் ‘டவுண் சின்றோம்’ இல்லை என்று முடிவுசெய்யப்பட்டாலும் கூட ‘அல்ற்றாசவுண்ட்’செய்வது நல்லது. அது குழந்தையின் கழுத்துப் பகுதியின் பின் பக்கத்தில் ஏதாவது திரவம் சேகரிக்கப்பட்டிருக்கிறதா என்பதைக் காட்டும். அப்படிச் சேகரிக்கப்பட்டிராவிட்டால் குழந்தைக்கு எந்த இதயக் கோளாறுகளும் இல்லை என்பதை நாம் உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும்…..சரியா?”

சரி, என்று மீண்டும் தலையாட்டினார்கள், அவர்கள் இருவரும்.

“வேறு ஏதும் கேள்விகள் இல்லையென்றால், இந்தப் படிவத்தில் கையொப்பமிடுங்கள். அதன் பின் நீங்கள் போகலாம்.”

ஆங்கிலத்தைத் தமிழிலும் தமிழைஆங்கிலத்திலுமாகமொழிபெயர்த்து, அனைத்தையும் சொன்ன பின் நானும் அந்தத் தம்பதியினரும் ஒன்றாக நடந்து கார்நிறுத்துமிடத்துக்குப் போகின்றோம். என் கார் அருகே போனதும் என் கால்கள் என்னையறியாமலே நிற்கின்றன.

அவர்களைத் திரும்பிப் பார்க்கிறேன்.

“சொன்னது எல்லாம்… உங்களுக்கு விளங்கினது தானே?”

கேட்கும் போது மனதில் ஒரு அவசரமும் படபடப்பும். இதயம் வேறு வேகமாக அடித்துக் கொள்கிறது.

என்னுடையமொழிபெயர்ப்பாளர் கடமை, எப்போது அந்தக் கவுன்சிலிங் அறையை விட்டு வெளியேறினேனோஅப்போதே முடிந்திருக்க வேண்டும். அதன் பின் அவர்களுக்கு நான் சொல்பவை எல்லாம் எனது தொழில் நெறிமுறைக்கு மாறானது என்ற மனஉறுத்தலுடன் ஆரம்பிக்கிறேன்.

“எனக்கும் ‘அம்னியோசென்ரிசிஸ்’ ரெஸ்ற் நடந்தது. பெரிசா ஒண்டும் பயப்பிடத் தேவையில்லை. சாதாரணமா ஊசிபோடுறது போலத்தானிருக்கும். பிள்ளை இல்லாமல் இருக்கலாம், ஆனால் பிள்ளை குறைபாடுள்ள பிள்ளையாக இருக்கக் கூடாது.”

”ஓம் …ஓம், பிள்ளை ஆரோக்கியமாக இருக்கவேணும்” சொன்ன அவனை, ஒரு வகையான விரக்திப் பார்வையுடன் பார்க்கிறாள், அவள்.

”டவுண் சின்றோம்’ இல்லை எண்டு சொன்னாலும் கூட, பிறக்கிற பிள்ளை, குறைபாடு உள்ள பிள்ளையாக இருக்கச் சந்தர்ப்பம் இருக்குது எண்டது உங்களுக்கு வடிவா விளங்கினது தானே? தவறவிடமால் ஒருக்கா’அல்றாசவுண்ட்’ ரெஸ்ற்ரையும் செய்து போடுங்கோ. என்ன…?”

“ஓம்…ஓம்.” அவசரமாகச் சொல்கிறான் அவன்.

“எங்களுக்கு பிள்ளை வேணும் எண்டு எங்கடை ஆசைக்காய், நல்லா வாழமுடியாத இன்னொரு உயிரை இந்த உலகத்திலை கொண்டு வந்து, அது தினமும் அல்லல்பட வைக்கிறது… பெரிய பாவம். சரி… நான் வாறன்” என்று சொல்லிவிட்டு காரில் ஏறிக் கொள்கிறேன்.

என் கண்கள் குளமாகின்றன.

வெறுமனவே வார்த்தைகளால் தான் சொல்ல முடிந்தது. இதயத்தால் கதைக்க முடியவில்லையே அந்த நேரத்தில் போதுமான வசதியில்லாததால் முழுமையான ரெஸ்ற்ஸ் செய்யமுடியாமல் ஒரு பிள்ளைக்கு உயிர் கொடுத்து இப்ப அவள் தினமும் படும் கஷ்டதைப் பார்த்து நான் இரத்தக் கண்ணீர் வடிக்கிறேன், நானும் அவளும் படும் அந்த அவஸ்தை உங்களுக்கும் வேண்டாம் என்று அவர்களுடன் மனம் விட்டுக் கதைக்க முடியவில்லையே என்றதில் மனம் கனத்தது. 19 கிழமையானலும் அது உயிர் தானே என வருந்தாமல் நிலமையை நன்கு புரிந்து கொள் என்று அந்தப் பெண்ணை மானசீகமாக வேண்டின படி எப்படி வீட்டு வந்தேன் என்றே தெரியாமல் வீட்டுக் கதவைத் திறந்த போது ”மம் ஸ் ஹோம்.” என ஆசையாக ஓடி வந்து என்னைக் கட்டிக் கொள்கிறாள் என் மகள்.

அப்போது தான் என் ஸ்கார்ஃப் பற்றிய நினைவு வந்தது.

“ஓ…. மை கோட், எங்கை என்ரை ஸ்கார்ஃப்?…என்ரை பிள்ளை ஆசையாய்த் தந்த அந்த ஸ்கார்ஃபை நான் துலைச்சுப் போட்டன்!”

நன்றி : கூர் 2012, தூறல் July 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *